• Thu. Sep 21st, 2023

ஆசிரியர்

  • Home
  • ஆசிரியர்

கௌதம சித்தார்த்தன்

இந்தியாவின் தமிழ்நாட்டில் வசித்து வரும் இவர், தமிழின் நவீன இலக்கியத்தில் புகழ்பெற்ற நவீன சிறுகதை எழுத்தாளர். மட்டுமல்லாது, சர்வதேச மொழிகளில் செயல்படும் எழுத்தாளர். கவிஞர், கதைஞர், விமர்சகர், மற்றும் பத்திரிகையாளர்.

உன்னதம், தமிழி, என்ற தலைப்பில் 2 சிறுபத்திரிகைகள் மற்றும் Alephi என்கிற ஆங்கில இதழ் ஆகியவற்றை அச்சு இதழ்களாக நடத்தி வருகிறார். மேலும், ஆங்கிலத்திலும் தமிழிலும் இணைய இதழ்கள் நடத்துகிறார். சமீபத்தில் நவீன இலக்கியத்திற்கான செயல்பாடாக ‘ஆலா – AalaA’ என்ற செல்பேசி செயலி ஒன்றை நடத்தி வருகிறார்.

சமீபத்தில், சர்வதேச அளவில் ’டி ஹேஷ்’ என்கிற ஒரு புதிய குறியியல் கோட்பாட்டை உருவாக்கி அதற்கான ஒரு குறியீட்டை உருவாக்கம் செய்துள்ளார்.

தனது படைப்புகளுக்காக மணல் வீடு, கதா, கரிசல் கட்டளை, இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இவரது படைப்புகள், தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் மொழியில் இவர் எழுதிய படைப்புகள் இதுவரை 18 நூல்களாக வெளிவந்துள்ளன.

இந்திய பிராந்திய மொழிகளான இந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய 3 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன.

மேலும், சர்வதேச மொழிகளான ஆங்கிலம், ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், ரோமானியன், சீனம், போர்த்துகீஸ், கிரேக்கம், ஹீப்ரு, உக்ரேனியன், போலந்து, செர்பியன், அரபி, பெலாரஸ், பல்கேரியன், அல்பேனியன், உஸ்பெக், கிர்கிஸ், ஹங்கேரியன், சிங்களம், ஷோனா.. ஆகிய 23 மொழிகளில் மொழியாக்கம் பெற்று வெளிவந்துள்ளன.

சர்வதேச மொழிகளில் இதுவரை 10 நூல்கள் வெளிவந்துள்ளன, மேலும், ரஷ்யன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன்.. ஆகிய 4 மொழிகளில் பத்தி எழுத்துகளாக (Column writings) வெளிவருகின்றன.

இவரது எழுத்துக்களின் ஆங்கில மொழியாக்கத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர், கவிஞர் மஹாரதி.

***

பெயர்: பி.கிருஷ்ணசாமி
புனைப்பெயர்: கௌதம சித்தார்த்தன்

பிறந்த தேதி: 17.09.1962
நாடு : இந்தியா (தமிழ்நாடு)

மனைவி : இல்லத்தரசி
குழந்தைகள்: மகன் மற்றும் மருமகள் – குழந்தை மருத்துவர்கள்
பேத்தி: அமரந்தா, பேரன்: அபராஜிதா.

வாழ்வின் திருப்புமுனை நிகழ்வுகள்:

2014 ஆகஸ்ட்

2012 ஆம் வருடத்தில் உலகப் புகழ்பெற்ற சர்வதேச தொலைக்காட்சி மீடியாவான டிஸ்கவரி சேனல் மிக மிக நுட்பமான போர் வெறியைத் தூண்டும் நுண்ணரசியலுடன் (மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ ஒரு போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முற்போக்கு பார்வை என்ற விதத்தில்) ஒரு நிகழ்ச்சியை ஒளி பரப்பிக்கொண்டிருந்தது.

சர்வதேச அளவில் நடக்கும் ஆயுத வியாபாரங்களுக்குத் துணை போகின்ற Future Weapons என்னும் அந்த நிகழ்ச்சியில் நுட்பமாக மறைந்திருக்கும் ஆயுத வியாபாரத்தையும், ஏகாதிபத்திய அரசுகளின் வியாபார போர்த்தந்திரங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தி ‘ஆயுத வியாபாரத்தின் அரசியல்’ என்று ஒரு கட்டுரை எழுதினார். அதை ஆங்கிலத்தில் புகழ்பெற்ற Truth out என்னும் இதழ் வெளியிட்டது. அதன்பிறகு இந்தக் கட்டுரை 100 க்கும் மேற்பட்ட சர்வதேச ஆங்கில இணைய இதழ்களில் Share செய்யப்பட்டு உலகம் முழுக்க வைரலாகப் பரவியது. பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் பெற்று வெளிவந்தது. தமிழிலும் 50 க்கும் மேற்பட்ட இணைய இதழ்களில் வெளிவந்தது.

சம்பந்தப்பட்ட டிஸ்கவரி சேனல் இது சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட links – ஐ dissable செய்து வைக்குமளவிற்கு புகழ் அடைந்தது கட்டுரை. அந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட, யுனைடெட் ஸ்டேட் நேவியில் Zeal ஆகப் பணி புரிந்த மேக் மெக்கோவிஸ், இவரது முகநூலுக்கு நட்பழைப்பு அனுப்பினார். (சமீபத்தில் இறந்துவிட்டார். அன்னாரது ஆன்மா சாந்தி அடைவதாக) இப்படி, உலகளாவிய முற்போக்குச் சிந்தனையாளர்களும், ஊடகவியலாளர்கள், போர் எதிர்ப்பாளர்கள், அமைதிப் போராளிகள், மனித உரிமையாளர்கள், கலை இலக்கியவாதிகள் என உலகம் முழுக்க கொண்டாடினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, 6 வருடங்கள் கழித்து, 2020 பிப்ரவரியில் ChristenUnie & Bunschoten என்கிற நெதர்லாந்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் Henk Lok என்னும் அரசியல் பிரமுகர் அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, இவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

2016 செப்டம்பர்
Alephi என்னும் தலைப்பில் ஆங்கில மொழியில் ஒரு சர்வதேச கலை இலக்கிய இணைய இதழ் துவக்கினார்.

2016, நவம்பர்
Alephi ReadsApp என்ற செல்பேசி செயலியை உருவாக்கி வெளியிட்டார்.

இந்த செயலியை ரஷ்யாவின் Chuvash மொழி எழுத்தாளர் வலேரி பெட்ரோவ்ஸ்கி ரஷ்யாவில் வெளியிட்டார். ஜிம்பாப்வே எழுத்தாளரான நடாபா ஜமேலா ஸிபான்டா அவரது நாட்டிலும், மற்றும் பிற சர்வதேச நண்பர்களும் வெளியிட்டு அறிமுகப்படுத்தினர்.

2017 ஜனவரி
இதைத் தொடர்ந்து இணைய தளத்தில் வெளிவந்து கொண்டிருந்த, Alephi (அலெஃபி) ஆங்கில இதழை, அச்சு இதழாக வெளியிட்டார்.

2017 – 2018 அக்டோபர்
‘காலப்பயண அரசியல்’ கட்டுரை நூலின் ஆங்கில மொழியாக்கம் – Political travails of time travel வெளிவந்தது.

அதன் தொடர்ச்சியாக, ஸ்பானிஷ், இத்தாலி, போர்த்துகீஸ், சீனம், ரோமானியன் மொழிகளில், அதன் மொழியாக்கங்கள் வெளிவந்தன.

காலப் புதிர்வழி என்னும் கவிதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் (Timebyrinth) மொழியாக்கம் செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, ஜெர்மன், பல்கேரியன், ரோமானியன் மொழிகளில் மொழியாக்கம் செய்து நூல்களாக வெளிவந்தன.

2018 நவம்பர்
முதன் முதலாக, இத்தாலி மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘காலப்பயண அரசியல்’ கட்டுரை நூலுக்கு இத்தாலிய மொழியில் விமர்சனம் வந்தது. அதன் தொடர்ச்சியாக, 5 இத்தாலிய மொழி விமர்சனங்களும், 1 போர்த்துகீஸ் மொழி விமர்சனமும் வெளிவந்தது.

2019 ஜனவரி
முதன் முதலாக, இத்தாலி மொழியில் அவரது நேர்காணல் வெளி வந்தது. மிக விரிவாக 3 பகுதிகளாக வெளிவந்தது.

2019 ஜனவரி
முதன் முதலாக ஸ்பானிஷ் மொழியில் பல்வேறு இணைய இதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தன

2019 ஜனவரி
முதன் முதலாக, இத்தாலிய இணைய இதழில், மொழியாக்கம் மூலமாக, பத்தி (Column) எழுத ஆரம்பித்தார்.

தலைப்பு: வெண்ணிற வெறுமையிலிருந்து பன்னிறச் சிறகடிப்புக்கு… (viaggi dal linguaggio tamil allarena internazionale)

2019 மார்ச்
ஸ்பானிஷ் இணைய இதழில், மொழியாக்கம் மூலமாக, பத்தி (Column) எழுத ஆரம்பித்தார்.

தலைப்பு: அயிரையிலிருந்து ஆக்ஸோலோடிலுக்கு… (De pez Locha a Axolotl)

2019 மே
பிரெஞ்சு இணைய இதழில், மொழியாக்கம் மூலமாக, பத்தி (Column) எழுத ஆரம்பித்தார்.

தலைப்பு: வெயிலை நோக்கி ஒரு அடி !(Un pas vers le soleil)

நவம்பர் 2019
ரஷ்யன் இணைய இதழில், மொழியாக்கம் மூலமாக, பத்தி (Column) எழுத ஆரம்பித்தார்.

தலைப்பு: டான் நதியின் மேலே பறக்கிறது ஆலா! (Полет Лебедя над рекой Дон.)

2020 நவம்பர்
ரஷ்ய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் அடைந்துள்ள பெலாரஸில் 2020 ஆகஸ்டிலிருந்து பெரும் கலவரங்கள், மக்கள் போராட்டங்கள் வெடித்தன. நாட்டின் மோசமான மனித உரிமைகள் மற்றும் 1994 முதல் பெலாரஸ் நாட்டின் முதல் ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ வின் சர்வாதிகார பாணி காரணமாக பெலாரஸை சில மேற்கத்திய ஊடகவியலாளர்கள் ‘ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரம்’ என்று விமர்சித்து வருகின்றனர். இந்தப் பின்னணியில், ஆகஸ்ட் 9 அன்று, பெலாரஸின் நீண்ட கால ஜனாதிபதியாக இருந்து வரும் அவரே மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பெலாரஸியர்கள், மின்ஸ்கின் வீதிகளில் இறங்கி, இந்த வாக்களிப்பு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த எதிர்ப்பில் ஈடுபட்ட பெரும்பாலான மக்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் போலிஸ் தடியடிகள் நிகழ்ந்தன. இதையொட்டி ஆகஸ்ட் 13 அன்று, பெலாரஸிய கவிஞர் டிமிட்ரி ஸ்ட்ரோட்சேவ் முகநூலில் ஒரு கவிதையை வெளியிட்டார். அடுத்த 12 மணி நேரத்தில், அவரை கைது செய்து 13 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கியது பெலாரஸ் அரசு! உலகில் உள்ள அனைத்து முற்போக்கு எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் கண்டனக் குரல் எழுப்பினார்கள்.

இதில் கௌதம சித்தார்த்தனும் தனது கவிதையை தமிழாக்கம் செய்து பேஸ் புக்கில் வெளியிட்டு கண்டனத்தை பதிவு செய்தார். அந்தக் கவிதை வெளியிட்ட ஒரு வாரத்தில், 22 மொழிகளில் மொழியாக்கம் பெற்றது.

2021 டிசம்பர்
உலகளவில், வளர்ச்சியடைந்து வரும், இணையத் தகவல், தொழில்நுட்பப் புரட்சியும், மனித வாழ்வில் இன்றியமையாத அம்சமாகிப்போன சமூக ஊடகங்களின் பிரம்மாண்டமான வளர்ச்சியும் இவரை சமீபகாலமாக முழுக்க ஈர்த்துக் கொண்டதன் விளைவாக, முழுக்க சமூக ஊடகங்களிலும், இணைய தொழில்நுட்பங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் விளைவாக, டி ஹேஷ் என்னும் ஒரு புதிய குறிச்சொல்லுக்கான ஐடியா அவருக்குள் தோன்றியது. அதற்கு முன்னர் செயல்பாட்டுக்கு கொண்டிருந்த ஹேஷ்டேக் கிலிருந்து பல்வேறு பரிமாணங்களில் அதைக் கட்டமைப்பு செய்து உருவாக்கினார். தனது வாழ்நாளில் இந்தத் தருணங்கள் மிக மிக முக்கியமானவை என்றும், தன் மனித வாழ்க்கைக்கான அர்த்தத்தை ஏற்படுத்திய அற்புதமான வெளிப்பாடு என்றும் கூறுகிறார்.

அவர் எழுதிய படைப்புகள்:

(சிறுகதைகள்)
1. மூன்றாவது சிருஷ்டி
2. பச்சைப் பறவை
3. பொம்மக்கா
4. நீல ஊமத்தம்பூ

(குறுநாவல்)
5. வேனிற்காலவீடு பற்றிய குறிப்புகள்
6. ஒளிச் சிற்பம்
7. இப்பொழுது என்ன நேரம், மிஸ்டர் குதிரை?

(கவிதைகள்)
8. காலப் புதிர்வழி

(பின்நவீனத்துவ இலக்கியக் கட்டுரைகள்)
9. யாராக இருந்து எழுதுவது?
10. காலப்பயண அரசியல்

(சினிமா கட்டுரைகள்)
11. தமிழ் சினிமாவின் மயக்கம்
12. உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்

(திரைக்கதை)
13. ஆலா

(சர்வதேச அரசியல் கட்டுரைகள்)
14. ஆயுத வியாபாரத்தின் அரசியல்
15. கருத்து சுதந்திரத்தின் அரசியல்

(அரசியல் கட்டுரைகள்)
16.சாதி அரசியல் அதிகாரம்
17. சங்ககால சாதி அரசியல்

(புதிய குறியீட்டு கட்டுரைகள்)
18. டி ஹேஷ் – பயனாளர் கையேடு

காலப் பயண அரசியல் மொழியாக்கங்கள்
1. Political travails of time travel (ஆங்கிலம்)
2. Las tribulaciones políticas del viaje en el tiempo (ஸ்பானிஷ்)
3. I travagli politici del viaggio nel tempo (இத்தாலியன்)
4. 时间旅行的文学迷思 (சீனம்)
5. Tribulações Políticas da Viagem no Tempo (போர்த்துகீஸ்)
6. Problemele politice ale călătoriei în timp (ரோமானியன்)

காலப் புதிர்வழி மொழியாக்கங்கள்
1. Timebyrinth (ஆங்கிலம்)
2. Времеринт (பல்கேரியன்)
3. Zeitbyrinth (ஜெர்மன்)
4. Timpdedal (ரோமானியன்)

You cannot copy content of this page