“எல்லாமும் மாறுகிறது.
உங்களால் ஒரு புதிய தொடக்கத்தைச் செய்ய முடியும்
உங்களது இறுதி மூச்சைக் கொண்டு”
தமிழில்: சமயவேல்
***
ஏழ்மையான பெர்டோல்ட் ப்ரெக்ட் பற்றி…
1
நான், பெர்டோல்ட் ப்ரெக்ட், கருங் காடுகளில் இருந்து வந்தவன்.
எனது அம்மாவின்வயிற்றுக்குள் கிடந்த போதே
அவள் என்னை நகரங்களுக்குக் கொண்டு வந்தாள். காடுகளின் குளிர்மை
எனது இறப்பு நாள் வரைக்கும் என்னுடன் இருக்கும்.
2
அஸ்பால்ட் நகரில் நான் வீட்டில் இருக்கிறேன். மிகத் தொடக்கத்தில் இருந்தே
ஒவ்வொரு கடைசிப் புனிதச் சடங்குடனும் வழங்கப்பட்டிருந்தது:
செய்தித்தாள்களுடன் புகையிலை, அத்துடன் ப்ராண்டி,
இறுதியாக அவநம்பிக்கை, சோம்பல் மற்றும் திருப்தியடைதல்.
3
மக்களுக்கு நான் நட்பானவன் மற்றும் பணிவுள்ளவன். நான் ஒரு
கனமான தொப்பியை அணிந்திருக்கிறேன் அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்
நான் சொல்கிறேன்: அவர்கள்முற்றிலும் வினோதமான விலங்குகள்
மேலும் நான் சொல்வேன்: அது ஒரு விஷயமா? நானும் கூட அப்படித்தானே.
4
மதியத்திற்கு முன்பு எனது காலியான ஆடும் நாற்காலிகளின் மேல்
ஓரிரு பெண்களை உட்கார வைப்பேன்,தொல்லைதராக்கண்கொண்டு
அவர்களை அசையாமல் பார்ப்பேன் மேலும் அவர்களிடம் கூறுகிறேன்
இங்கே உங்களுடன் இருப்பது நீங்கள் நம்பிக்கை வைக்க முடியாத ஒருவன்.
5
மாலைப் பொழுதை நோக்கி என்னைச் சுற்றிலும் நான் ஆண்களைக் கூடச்செய்தேன்
பிறகு நாங்கள் ஒருவரையொருவர் “கனவான்களே” என அழைத்துக் கொண்டோம்
தங்களது பாதங்களை எனது மேஜை மேல் வைத்து ஓய்வெடுத்தார்கள்
மேலும் கூறினர்: நமக்கு எல்லாம் சரியாகிவிடும். எப்பொழுது என்று நான் கேட்கவில்லை.
6
விடியற்காலைக்கு முன்பு சாம்பல் வெளிச்சத்தில் பைன் மரங்கள் சிறுநீர் கழித்தன
மேலும் அவற்றின் பூச்சிகள், பறவைகள் தங்களது கீசுகீசு கிரீச்சிடல்களை எழுப்பின
அந்த நேரத்தில் நான் நகரத்தில் எனது தம்ளரைக் காலி செய்தேன், பிறகு
சுருட்டுத் துண்டை வெளியே எறிந்தேன், கவலையோடு தூங்கச் சென்றேன்
7
அழிக்க முடியாதவை எனக் கருதப்பட்ட வீடுகளில்
நாம் உட்கார்ந்துவிட்டோம், ஒரு சுலபமான தலைமுறை
(இவ்வாறாக நாம் மன்ஹாட்டன் தீவில் அந்த உயரமான பெட்டிகளைக் கட்டுகிறோம்
மேலும் அட்லாண்டிக் வடிதலை உல்லாசமூட்டும் அந்த மெல்லிய ஏரியல்கள்)
8
அந்த நகரங்கள் அப்படியே இருக்க அவற்றின் ஊடாக என்ன கடந்து சென்றது,
காற்று !
உண்பவருக்கு மகிழ்ச்சி உண்டாக்குகிறது வீடு: அவன் அதை சுத்தம் செய்கிறான்.
நாங்கள் அறிவோம் நாங்கள் வாடகைக்கு இருப்பவர்கள் மட்டுமே, தற்காலிக ஆட்கள்;
எங்களுக்குப் பிறகும் அங்கு வருவார்கள்: பேசத் தகுதியானது ஒன்றுமில்லை.
9
வரவிருக்கும் நில நடுக்கங்களில், நான் மிக அதிகம் நம்புகிறேன்
எனது சுருட்டைபற்ற வைத்திருப்பேன், அகங்காரத்துடனோ அல்லது இல்லாமலோ
நான், பெர்டோல்ட் ப்ரெக்ட், கருங்காடுகளில் இருந்து நெடுங்காலம் முன்பே
ஆஷ்பால்ட் நகரங்களுக்கு என் அம்மாவின் உட்புறம் வைத்துக் கொண்டு வரப்பட்டவன்.
௦௦௦
நான்காவது சங்கீதம்
1
என்னிடமிருந்து மக்கள் இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
எல்லாப் பொறுமைகளையும் நான் ஆடி விட்டேன், எல்லா மதுவுடனும் சச்சரவிட்டேன்
எல்லாப் புத்தகங்களையும் அடுப்புக்குள் திணித்துவிட்டேன்
எல்லாப் பெண்களையும் காதலித்து விட்டேன் அவர்கள் முதலைகள் போல் நாறும் வரை.
உண்மையில் நான் ஒரு மாபெரும் துறவி, எனது காது மிக அழுகிவிட்டது அது
விரைவில் கீழே விழுந்துவிடும்.
ஆகவே ஏன் இங்கு அமைதியே இல்லை? பிறகு ஏன் மக்கள்,
ஏதாவது போடப்படுவதற்காகக் காத்திருக்கும் குப்பைக் கூடைகளைப் போல
முற்றத்தில் நிற்கிறார்கள்?
நான் இதைத் தெளிவு படுத்திவிட்டேன் இனிமேலும் என்னிடமிருந்து
பாடலின் பாடலை எதிர்பார்ப்பதில் பயன் இல்லை.
வாங்குபவர்கள் மேல் நான் காவல்துறையை ஏவியுள்ளேன்
நீங்கள் தேடுவது யாராகவும் இருக்கலாம், ஆனால் அது நான் இல்லை.
2
நான் எனது எல்லா சகோதர்களை விடவும் நடைமுறை தெரிந்தவன் மேலும்
இது எல்லாமே எனது தலைக்குள் ஆரம்பிக்கிறது !
எனது சகோதரர்கள் கொடூரமானவர்கள், நான் அதிகக் கொடூரமானவன்
இரவுகளில் அழுபவன் நான் தான்!
3
சட்டத்தின் பட்டியல்கள் உடைபடும் போது, அவ்வாறே ஆகிறது எல்லாத் தர்ம அதர்மங்களும்.
ஒருவரது சகோதரியுடன் தூங்குதல் கூட இனிமேல் விளையாட்டில்லை
கொலை என்பது பலருக்கும் மிக அதிகத் தொந்தரவாகிவிடும்
கவிதை எழுதுதல் மிக மிக சாதாரணம்.
எல்லாமே மிக நிச்சயமற்றது என்பதால்
பலரும் உண்மை சொல்வதையே விரும்புகிறார்கள்
ஆபத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள்
குளிர்காலத்துக்காக அரசவை அணங்குகள் தசையில் ஊறுகாய் போடுகிறார்கள்
மேலும் பேய் அதன் மிகச்சிறந்த மக்களை இனிமேல் தூக்கிச் செல்லாது.
௦௦௦
அலபமா பாடல்
அடுத்த விஸ்கி பாருக்கான வழியைஎனக்குக் காட்டுங்கள்
ஓ, ஏனென்று கேட்காதீர், ஓ, ஏனென்று கேட்காதீர்
எனக்கு அடுத்த விஸ்கி பாருக்கான வழியைக் காட்டுங்கள்
ஓ, ஏனென்று கேட்காதீர், ஓ, ஏனென்று கேட்காதீர்
அடுத்த விஸ்கி பாரை நாம் கண்டுபிடிக்க முடியாவிட்டால்
நான் உன்னிடம் சொல்கிறேன் நாம் இறந்தாக வேண்டும்
நான் உன்னிடம் சொல்கிறேன் நாம் இறந்தாக வேண்டும்
நான் உன்னிடம் சொல்கிறேன்
நான் உன்னிடம் சொல்கிறேன்
நான் உன்னிடம் சொல்கிறேன் நாம் இறந்தாக வேண்டும்
ஓ, அலபாமாவின் நிலவே
இப்பொழுது நாம் விடைபெற வேண்டும்
நமது முதிய அருமையான அம்மாவை இழந்துவிட்டோம்
கட்டாயம் விஸ்கி வேண்டும்
ஓ, ஏனென்று நீ அறிவாய்.
அடுத்த அழகிய பெண்ணுக்கான வழியை எனக்குக் காட்டுங்கள்
ஓ, ஏனென்று கேட்காதீர், ஓ, ஏனென்று கேட்காதீர்
அடுத்த அழகிய பெண்ணுக்கான வழியை எனக்குக் காட்டுங்கள்
ஓ, ஏனென்று கேட்காதீர், ஓ, ஏனென்று கேட்காதீர்
அடுத்த அழகிய பெண்ணை நாம் கண்டுபிடிக்க முடியாவிட்டால்
நான் உன்னிடம் சொல்கிறேன் நாம் இறந்தாக வேண்டும்
நான் உன்னிடம் சொல்கிறேன் நாம் இறந்தாக வேண்டும்
நான் உன்னிடம் சொல்கிறேன்
நான் உன்னிடம் சொல்கிறேன்
நான் உன்னிடம் சொல்கிறேன் நாம் இறந்தாக வேண்டும்
ஓ, அலபாமாவின் நிலவே
இப்பொழுது நாம் விடைபெற வேண்டும்
நமது முதிய அருமையான அம்மாவை இழந்துவிட்டோம்
கட்டாயம் ஒரு பெண் வேண்டும்
ஓ, ஏனென்று நீ அறிவாய்.
அடுத்து கொஞ்சம் டாலருக்கான வழியை எனக்குக் காட்டுங்கள்
ஓ, ஏனென்று கேட்காதீர், ஓ, ஏனென்று கேட்காதீர்
அடுத்த கொஞ்சம் டாலருக்கான வழியைக் காட்டுங்கள்
ஓ, ஏனென்று கேட்காதீர், ஓ, ஏனென்று கேட்காதீர்
அடுத்த கொஞ்சம் டாலரை நாம் கண்டுபிடிக்க முடியாவிட்டால்
நான் உன்னிடம் சொல்கிறேன் நாம் இறந்தாக வேண்டும்
நான் உன்னிடம் சொல்கிறேன் நாம் இறந்தாக வேண்டும்
நான் உன்னிடம் சொல்கிறேன்
நான் உன்னிடம் சொல்கிறேன்
நான் உன்னிடம் சொல்கிறேன் நாம் இறந்தாக வேண்டும்
ஓ, அலபாமாவின் நிலவே
இப்பொழுது நாம் விடைபெற வேண்டும்
நமது முதிய அருமையான அம்மாவை இழந்துவிட்டோம்
கட்டாயம் விஸ்கி வேண்டும்
ஓ, ஏனென்று நீ அறிவாய்.
இப்போது போல உன்னை நான் ஒரு போதும் நேசித்ததில்லை
உன்னிடமிருந்து வெளியேறி நடந்த அந்த மாலைப்பொழுதில் நேசித்ததை விட
ஒருபோதும் நான் உன்னை மிக அதிகம் நேசித்ததில்லை, என் தங்கையே.
காடு என்னை விழுங்கிக் கொண்டது, நீலக் காடு, என் தங்கையே
நீலக் காடும் அதற்கு மேல் மேற்கில் வெளிரிய விண்மீன்களும்.
நான் சிரிக்கவில்லை, ஒரு சிறிய இணுக்கு கூட, என் தங்கையே
நான் விளையாட்டாகஇருண்ட விதியை நோக்கி நடந்த போது–
எனக்குப் பின்னால் உள்ள முகங்கள்
நீலக் காட்டின் மாலைப் பொழுதில் மெல்ல வெளுத்த போது.
அந்த ஓரிரவில் எல்லாமே பேரழகு, என் தங்கையே
ஒருபோதும் முன்பும் இல்லை பின்பும் இல்லை–
அதை நான் ஒத்துக் கொள்கிறேன்; பெரிய பறவைகள் தவிர ஒன்றுமில்லாமல் நான்
விடப்பட்டேன்
மேலும் அவற்றின் பசியின் கூக்குரல் இருண்ட மாலை வானில்.
௦௦௦
கவிதைக்குக் கெட்ட நேரம்
ஆமாம், நான் அறிவேன்; மகிழ்ச்சியான மனிதர் மட்டுமே
விரும்பப்படுகிறார். அவரது குரலைக்
கேட்பது நல்லது. அவரது முகம் அழகியது.
முற்றத்தில் நிற்கும் முடமாகிய மரம்
மண் மோசமானது என்பதைக் காட்டுகிறது, எனினும்
வழிப்போக்கர்கள் அதை முடமாக இருப்பதற்காக வசைபாடுகிறார்கள்
அதுவும் மிக உரிமையுடன்.
பச்சைப் படகுகளும் நடனமாடும் பாய்மரங்களும் சப்தமிடுவது
காணப்படாமல் போகிறது. அதன் எல்லாவற்றிலும் இருந்து
நான் மீனவர்களின் கிழிந்த வலைகளை மட்டுமே பார்க்கிறேன்.
நான் மட்டும் ஏன்
நாற்பது வயதிருக்கும் ஒரு கிராமத்துப்பெண் கூன்முதுகுடன் நடப்பதைப்
பதிவு செய்ய வேண்டும்?
இளம் பெண்களின் முலைகள்
எப்போதும் போல வெதுவெதுப்பாக இருக்கின்றன.
எனது கவிதையில் ஒரு மோனை
எனக்கு அனேகமாக அகந்தையாகவே தெரியும்
எனது உட்புறம் போட்டியிடுகிறது
பூத்திருக்கும் ஆப்பிள் மரத்திடம் மகிழ்ச்சி அடைவதும்
வீட்டுக்கு வண்ணம் பூசுபவர்களின் பேச்சால் அச்சமடைவதும்.
ஆனால் இரண்டாவது மட்டுமே
என்னை எழுதுமேசைக்கு விரட்டுகிறது.
௦௦௦
அ.மேரியை ஞாபகப்படுத்துதல்
அந்த நீல மாதம் செப்டம்பரில் அது ஒரு நாள்
ஒரு ப்ளம் மரத்தின் மெல்லிய நிழலின் அடியில் மௌனம்.
அங்கு நான் அவளைத் தழுவினேன், மிக வெளுத்த அமைதியான என் காதல்
மங்கக் கூடாத ஒரு கனவாக அவள் இருந்திருந்தால்.
எங்களுக்கு மேல் மின்னும் கோடையின் சொர்க்கம்
நெடுங்காலத்துக்கு முன்பு எனது கண்கள் வசித்த ஒரு மேகம் அங்கிருந்தது
அது முழுவதும் வெண்மை மேலும் எங்களுக்கு மிக உயரத்தில் இருந்தது
பிறகு நான் உயரே பார்த்த போது அது மறைந்து விட்டிருந்தது.
அந்த நாளில் இருந்து ஏராளமான நிலவுகள், மௌனமாக
ஆகாயத்தின் குறுக்கே நீந்தி கீழே போயின.
நிச்சயமாக ப்ளம் மரங்கள் விறகுக்காக வெட்டப்பட்டுவிட்டன
அந்தக் காதல் இப்பொழுது எப்படி இருக்கிறது என்று நீங்கள் கேட்டால்?
நான் ஒத்துக்கொள்ள வேண்டும்: நிஜமாக எனக்கு ஞாபகம் இல்லை
எனினும் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
ஆனால் அவளது முகம் எதைப் போல இருந்தது என்பதை மறந்தே விட்டேன்
அன்று அதை நான் முத்தமிட்டேன்: அது மட்டும் ஞாபகம் இருக்கிறது.
முத்தத்தைப் பொறுத்தவரை நீண்ட காலம் முன்பே நான் அதை மறந்துவிட்டேன்
ஆனால் வானில் மிதந்த அந்த மேகம்,
இன்னும் அதை நான் அறிவேன், மேலும் எப்போதைக்கும் நான் அதை அறிவேன்
அது மிக வெண்மையாக மிக உயரத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
அந்தப் ப்ளம் மரங்கள் இன்னும் கூட பூத்துக் கொண்டிருக்கலாம்
அந்தப் பெண்ணின் ஏழாவது குழந்தை இப்பொழுது அங்கே இருக்கலாம்
எனினும் அந்த மேகம் சில நிமிடங்களுக்கு மட்டுமே பூத்தது
நான் உயரே பார்த்த போது, அது காற்றில் மறைந்து போனது.
௦௦௦
எனது அம்மாவைப் பற்றிய பாடல்
1. அவளது வலிகள் தொடங்குவதற்கு முன்பு அவளது முகம் எப்படி இருந்தது என்பது எனக்கு ஞாபகத்தில் இல்லை. களைப்புடன், எலும்பாக இருந்த அவளது நெற்றியில் இருந்து கறுப்பு முடியைப் அவள் பின்னுக்குத் தள்ளினாள், அவ்வாறு செய்யும் அவளது கையை இன்னும் நான் பார்க்க முடிகிறது.
2. இருபது குளிர்காலங்கள் அவளைப் பயமுறுத்தின, அவளது துயரங்கள் படையளவு இருந்தன, மரணம் அவளை நெருங்க வெட்கியது. பிறகு அவள் இறந்தாள், அவளது உடல் ஒரு குழந்தையினுடையதைப் போல இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.
3. அவள் காட்டில் வளர்ந்தவள்.
4. அவள் இறப்பதை வெகுநேரமாக பார்த்துக் கொண்டு இருந்ததால் இறுகிப்போன அந்த முகங்களுக்கு மத்தியில் அவள் இறந்தாள். துயருக்காக ஒருவர் அவளை மன்னித்தார், ஆனால் உயிர் விடுவதற்கு முன்பு அவள் அந்த முகங்களுக்கு மத்தியில் உலவித் திரிந்தாள்.
5. நாம் அவர்களை நிறுத்தி வைக்க முடியாதவாறு பலரும் நம்மைவிட்டுப் போய்விடுகிறார்கள். சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் நாம் சொல்லிவிட்டோம், நமக்கும் அவர்களுக்கும் இடையில் மேலும் எதுவும் இல்லை, நாம் பிரிந்த போது நமது முகங்கள் இறுகிப்போயின. ஆனால் நாம் அத்தியாவசியமானவை தவிர, முக்கியமான விஷயங்களைக் கூறவில்லை.
6. ஓ, முக்கியமான விஷயங்களை ஏன் நாம் கூறவில்லை, அது மிக எளிதாகத் தானே இருந்திருக்கும். அப்படி செய்யாததால் நாம் சபிக்கப்பட்டோம். எளிய சொற்கள் அவை, நமது பற்களின் மேல் அழுத்திக் கொண்டிருந்தன; நாம் சிரித்த போது அவை வெளியே விழுந்தன, இப்போது அவை நமது மூச்சை நெரிக்கின்றன.
7. இப்பொழுது எனது அம்மா இறந்துவிட்டாள், நேற்று மாலை நெருங்குகையில், மே முதல் நாளில். ஒருவர் அவரது விரல் நகங்களைக் கொண்டு இனிமேல் அவளைக் கிள்ளிவிட முடியாது.
***********