• Mon. Sep 18th, 2023

பின்னை மனித யுகத்தின் துவக்கம்

ByGouthama Siddarthan

Jul 14, 2023

 

கார்த்திக் ராமச்சந்திரன்

 

பின்னை மனிதம் என்றொரு சொற்பதம் வெகுநாட்களாகவே புழக்கத்தில் உள்ளது; பின்னை மனிதம் என்பது பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஆய்வுத்துறை. மெய்யியல், அறிவியல் தொழிற்நுட்பம், விமர்சனக் கோட்பாடு, பண்பாட்டு ஆய்வுகள் என வெவ்வேறு துறைகளின் ஆய்வுமுறையை எடுத்துக் கொள்கிறது. இந்த ஆய்வுகளானது சிந்தனை மற்றும் பண்பாடு சார்ந்த மனித எல்லைகளை கடத்த பிரச்சனைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது பற்றி தீவிரமாக விவாதிக்கிறது.

பின்னை மனிதம் என்ற கருத்தாக்கமானது மாற்று மனிதம் (Trans Humanism), தொழிற்நுட்ப ஓர்மை (Technological Singularity), பின்னை மனித பெண்ணியம் (Post human Feminism) மற்றும் விமர்சன பின்னை மனிதம் (Critical Post Humanism) என விரிவடைந்துள்ளது. இங்கு மாற்று மனிதம் என்ற கருத்தாக்கம் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கான தொழிற்நுட்பம் தொடர்பானது. தொழிற்நுட்ப ஓர்மை, மனித அறிவை செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் கடந்துவிடும் என்ற அச்சவுணர்வை மையம் கொண்டது. பின்னை மனித பெண்ணியம் என்பது மரபான பெண்ணியம் மீதான பார்வையை விமர்சிப்பதுடன் எவ்வாறு அறிவியல் தொழிற்நுட்பமானது, மாற்று பாலின உடல்களுக்கும் சமூக நியதிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று விவாதிக்கிறது. விமர்சன பின்னை மனிதம், பின்னை மனித சொல்லாடல்களின் வழியே சமகாலத்திய அதிகார அமைப்பு மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றை விமர்சனப்பூர்வமாக அணுகுகிறது.

இத்தனை நாட்கள் கோட்பாட்டளவிலும் ஆய்வகங்களில் மட்டும் இயங்கிவந்த செயற்கை தொழிற்நுட்பம் தற்போது பொது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தொழிற்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு அதிர்ச்சியுள்ளாக்கும் வகையில் அசாத்தியமாக செயல்படுகிறது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் Chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு கட்டணமில்லாமல் பயனாளர்களால் பயன்படுத்தகூடிய வகையில் அறிமுகமாகியுள்ளது. அறிமுகமான சில நாட்களிலேயே அதிகமக்களால் (5 மில்லியன்) பயன்படுத்தப்பட்டதால், அதிகமக்களை மிகக் குறைந்த காலத்தில் சென்றடைந்த தொழிற்நுட்பத்தின் வரிசையில் தற்போது chat GPT முதலிடம் வகிக்கிறது. மேலும், சமீபத்தில் அமெரிக்காவின் மருத்துவத்துறை மற்றும் சட்டத்துறை தேர்வில் தேர்ச்சியடைந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அறுநூறுக்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் தற்போது கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் விதவிதமான பணிகளை செய்யக்கூடிய தொழிற்நுட்பம். ஒன்று வரைபடம் வரையும் என்றால் மற்றொன்று பொருட்களைச் சந்தைப்படுத்த உதவும். மேலும், ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்குகூட தொழிற்நுட்பங்கள் கிடைக்கின்றன. இணையத்தை திறந்து sign up செய்துக் கொண்டால் போதுமானது. அதன் பின் நாம் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடலாம்.

Chat GPT போன்ற செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் வெவ்வேறு தரவுகளை நமக்கு தரக்கூடியது. தேடு பொறியில் கேட்டவுடன் கூகுள் எண்ணிலடங்காத தரவுகளை வந்துக் கொட்டுவது போன்றது அல்ல. Chat GPT ஒரு நபருடன் உரையாடுவது போன்ற தன்மையைக் கொண்டிருக்கிறது. ஆங்கிலமல்லாத மொழியில் விவாதிப்பதற்கு ஏற்கனவே புழக்கத்தில் உள்ள மொழிபெயர்ப்புச் செயலிகளையே பயன்படுத்துவதால் மொழிப் பயன்பாட்டில் ஆங்கிலத்திற்கு இணையாக வேறுமொழிகளில் ஆழமடையவில்லை.

எந்திரஉடலுடன் அலைவதே செயற்கை நுண்ணறிவு என்ற கற்பனையிலிருந்து விலகி, இந்த தொழிற்நுட்பமானது ஒரு செல்போன் செயலியைப் போன்று இயங்கக்கூடியது. ஆனால் சாதாரண அல்காரிதத்தை விட மேம்பட்டது. வழக்கமாக எந்தவொரு செயலியைப் பயன்படுத்தினாலும் நாம் பயன்படுத்தும் அலைப்பேசியோ கணினியோ தகவலின் ஒரு நகலை Cache Fileலாகச் சேமித்துவைக்கும். தனிநபரின் விருப்பங்களை விரைவாக அறிந்துக் கொண்டு தன் நிறுவனத்தின் சேவையை விரைந்து பெறச்செய்யும் ‘குக்கீஸ் (Cookies)’ மூலமாக அனுமதி கேட்டு Cache Fileன் தரவுகளை இணையப் பக்கங்கள் சேமிக்கும். குக்கீஸ் என்பது ஒரு நபரின் செயலியின் வழியே என்னெல்லாம் தேடுகிறார், அவர் எங்கிருந்து தேடுகிறார், அவருக்கு பிடித்தமானது, அவரின் தேவை என அனைத்தையும் தகவலாக திரட்டிக் கொடுக்கக் கூடியது. இதன் வழியே கூகுள் குரோம் போன்ற தேடுபொறி விரைவாக பயனாளிக்கு தேவையானவற்றை தரமுயலும். மேலும், குக்கீஸ்களை வேறு தளங்களுக்கும் விற்கும்.

நாம் அலைபேசியில் இன்னொரு நபருடன் கைக்கடிகாரத்தைப் பற்றி பேசினால், அடுத்த சில நிமிடங்களில் கைக்கடிகாரம் பற்றிய விளம்பரங்கள் நம் திரையில் வருவது அடிப்படையான அல்காரிதம். இந்த அல்காரிதம் தன்னளவில் சிந்தனையற்றது. உங்கள் பேச்சில் வெளிப்படும் கலைச்சொற்களை மட்டும் பிரித்தெடுத்து தரக்கூடியது. இதனை டேட்டா இன்டர்பிரட்டேசன் (Data Interpretation) என்கிறார்கள். இந்த தொழிற்நுட்பம் தனிநபரின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதன் வழியாக தனிநபரின் தேவைகள், ஆசைகள், விருப்பங்களை தெரிந்து கொண்டு அவரிடமே அப்பொருட்களைச் சந்தைப்படுத்த முயற்சிக்கிறது. மேலும், அவர் விரும்பிப் பார்க்கும் காணொளிகளை அறிந்து கொள்வதன் மூலம் அவருக்கு அதேபோன்ற காணொளிகளை தொடர்ந்து வழங்குகிறது. இதன் வழியே தன் பயனாளரை தொடர்ந்து தன் செயலியில் வைத்திருக்கு இந்த தொழிற்நுட்பம் முயற்சிக்கும். இங்கு பயனாளரே சந்தைப்பொருள். அல்காரிதம் முன்னமே அதற்கு வழங்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்களுக்குள் இருந்து செயல்படும். அதனால், கற்றுக் கொள்ள இயலாது. ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் கற்றுக் கொள்ளும் தன்மைக் கொண்டது. இதுவும் குக்கீஸிலிருந்து தரவுகளை பெற்றுக்கொள்ளும். ஒவ்வொரு முறையும் தகவல் தரும்போது அது நமக்கு மேம்பட்ட தரவுகளை தருகிறது. அல்காரிதத்தால் தரவுகளை உற்பத்திச் செய்ய இயலாது. ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் ஏற்கனவே உள்ள தரவுகளில் இருந்து புதிய தரவுகளை உற்பத்தி செய்ய இயலும்.

இன்று நமக்கு பொதுபயன்பாட்டிற்கு கிடைத்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் மனித திறனை கேள்வி கேட்கிறது. வங்கி மேலாண்மை, மருத்துவம், கல்வி, தொழிற்நிர்வாகம், சந்தைப்படுத்துதல், வரைகலை, இசை, அறிவியல் ஆய்வுகள், குற்றங்களை கண்டறிதல், வானிலை என நாம் கற்பனைக்கெட்டாத வேலைகளை செயற்கை தொழிற்நுட்பம் செய்ய இருக்கிறது. தகவல்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பது இனி ஒரு திறனாக கருதப்படப் போவதில்லை.

விதிகள், முறைமைகள், வகைமைகள் போன்ற அடிப்படைகளை அல்காரிதமாக ஒரு செயற்கை நுண்ணறிவிற்கு தரும்பட்சத்தில் அதுவே சிந்திக்க துவங்குகிறது, இங்கே ரத்தமும் சதையுமான மனித இருப்பின் தேவை என்பதை நாம் நிருபிக்க வேண்டிய நெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். சிறுகதையோ கவிதையோ அல்லது நாவலோ இவ்வாறுதான் இருக்கும் என்று அதன் முறைமைகளையும் தரவுகளையும் ஒரு செயற்கை நுண்ணறிவிற்கு கொடுப்பதன் மூலம் அதுவே இலக்கியங்களை படைக்கிறது. GPT-3 மற்றும் GPT-2 என்ற செயற்கை நுண்ணறிவுகள் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் திரைக்கதைகளையும் படைத்துள்ளன. தற்போது செயற்கை நுண்ணறிவு வழியாக படைக்கப்பட்ட Pharmako-AI, Bob the Robot: Exploring the Universe- A Cozy Bedtime Story, Autonomous Haiku Machine, Eccentric Dictionaries: An Experiment in AI-Enhanced Human Creativity, Moon Wars ஆகிய நூல்கள் தற்போது இணையத்தளங்களில் கிடைக்கின்றன. ஆச்சரியப்படத்தக்க வகையில் செயற்கை நுண்ணறிவுகள் இலக்கியம் படைப்பதாக நியூயார்க் டைம்ஸ் இதழில் நூல் விமர்சகர் கெவின் ரூசே குறிப்பிடுகிறார்.

இங்கு மனிதப் படைப்பாளியின் தேவை என்ன? செயற்கை நுண்ணறிவால் செய்ய இயலாத இலக்கியம் என்றால் என்ன? போன்ற கேள்விகளை நோக்கி மனித படைப்பாளிகள் நகர்ந்துள்ளோம்.

சுந்தர ராமசாமி எழுதிய ‘விகாசம்’ சிறுகதை கால்குலேட்டர் தொழிற்நுட்பத்தின் வருகை அதன் பின்னான மனிதநெருக்கடியைக் கையாளுகிறது. இந்த கதையில் ராவுத்தர் கண்பார்வையற்றவர். ஆனால் கணக்கில் கைதேர்ந்தவர். அவர் பணிபுரியும் துணிக்கடையில் அசாத்திய வேகத்தில் கணக்கு சொல்லும் அவர் திறமைக்காக இத்தனைநாள் அவரை பணிக்கு அமர்த்தியிருந்தனர். மற்றப்படி அவரால் மற்றவர் துணையின்றி வீட்டிற்கு நடந்துச் செல்ல இயலாது. அவரின் அசாத்திய திறமையால் அவர் சராசரிக்கும் அப்பாற்பட்ட மனிதராகக் கருதப்படுகிறார். குடும்பத்தின் பொருளாதார சுமைகளை இவரே சுமக்க வேண்டியிருந்ததால் தனிப்பட்ட கடன்கள் கழுத்தை நெரிக்க ஒரு சூழலில் கடனை சரிசெய்யவதாக கூறும் வேறு முதலாளியிடம் பணிபுரிய செல்கிறார். கடையின் ஊழியர் அவரை சண்டையிட்டு மீண்டும் கடைப் பணிக்கு வரவழைக்கிறார்கள். இத்தனை நாள் உதவிகள் செய்த கடைமுதலாளி, ராவுத்தரின் நன்றி மறந்த தனத்திற்கு பாடம் புகட்ட நினைக்கிறார். ஒரு நாள் கால்குலேட்டரை முதலாளி கடைக்கு அறிமுகப்படுத்துகிறார். கால்குலேட்டரின் வருகை ராவுத்தரின் இருப்பைக் கேள்விக்குள்ளாகுகிறது. அசாத்தியமாக கணக்கிடுதல் என்ற வேலைக்கு இன்னொன்று வந்தவுடன் தன் திறனை மேலும் விஸ்தரித்துக் கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ராவுத்தர் வந்தடைகிறார். ஒவ்வொரு பொருளுக்குமான விலைப் பட்டியல், விற்றப் பொருட்கள் மற்றும் இருப்பு எண்ணிக்கை, கடை முதலாளி அன்றாடப் பணிகளில் மறந்தவற்றை நினைவுப்படுத்துதல் என ஒரு நினைவுப் பெட்டமாக மாறிவிடுகிறார். கிட்டத்தட்ட, கால்குலேட்டர் வந்தவுடன் ராவுத்தர் கணினியாக மாறிவிடுகிறார். அதனால், கணக்கிடும் பணியிலிருந்து கடையின் மேலாளருக்கான அந்தஸ்தை ராவுத்தர் பெறுகிறார் என்பதுடன் கதை முடிகிறது.

இங்கு கதை, ஒரு தொழிற்நுட்பத்தின் வருகையால் ஏற்படும் மனித இருத்தல் சார்ந்த நெருக்கடியை கச்சிதமாக பேசியிருக்கிறது. அதற்காக பார்வையற்ற கதைமாந்தார், அவருக்காக பொருளாதார நெருக்கடி, அவருக்கென இருக்கும் பிரத்தேக திறமை என எல்லாம் திறம்பட கட்டமைக்கப்பட்ட நேர்த்தியான கதை.

மனிதன் வரலாறு எங்கிலும் புதிய தொழிற்நுட்பங்களை கண்டறிந்தவாறே இருக்கிறான். புதிய தொழிற்நுட்பத்தின் வருகை அதுவரை நிலவிவந்த போக்கை கேள்விக்குள்ளாக்குகிறது. அதன் இருப்பை அர்த்தமற்றதாக்குகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் புகைப்படக் கேமராவின் வருகை.

புகைப்படத் தொழிற்நுட்பம் யதார்த்தத்தை பதிவுச் செய்தல் என்பதை அனாயாசமாகச் செய்யத் துவங்கியது. ரியலிசபாணி ஓவியங்கள் கோலாச்சியிருந்த காலக்கட்டமென்பதால் புகைப்படங்களின் வருகை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதுவரை காலத்தை கண்முன் காட்டும் கலையாக நம்பட்டுவந்த ஓவியக்கலை ஸ்தம்பித்தது.  ‘ஓவியம் என்ற கலை வடிவத்தின் தேவை என்ன?’ என்ற கேள்வி எழுப்பி காலத்தை ஆவணப்படுத்துதல் (யதார்த்தம்) என்ற பாணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்துதல் மற்றும் பொருட்கொள்ளல் அடிப்படையிலான ஓவியங்களை நோக்கி நகர்ந்தது. அதன் பின் நடந்த மாற்றங்கள் ஓவியம் யதார்த்த பாணியையும் கடந்து இம்பிரசனிஸ்டிக், சிம்பலிஸம், க்யூபிசம், மீயதார்த்தம் மற்றும் அப்ஸ்ட்ராக்ட் ஆகிய பாணிகளுக்கு வந்தடைந்தது.

போரின் கோரத்தை துள்ளியமான ஒளிப்படங்களாகக் காட்சிப்படுத்தக்கூடிய தொழிற்நுட்பம் நிறைந்த காலகட்டத்தில் பாப்லோ பிகாசோ, போரிற்கு எதிரான வலிமையான கெர்னிகா ஓவியத்தை வரைகிறார். இதே காலகட்டத்தில் வழிந்தோடும் காலத்தை மீயதார்த்தப் பாணியில் சால்வேடார் டாலி படைக்கிறார். தொழிற்நுட்ப நெருக்கடி ஒரு கலைவடிவத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. இன்னும் அந்த ஓட்டம் நின்றுவிடவில்லை. இன்று செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பங்களுக்கெல்லாம் உச்சமாக வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவிடம் “ஏசு கிறிஸ்து கடைசி விருந்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபி” என கோரிக்கை விடுத்தால் உடனே ஏசு கிறிஸ்து மேரி மெக்டெலன், யூதாஸ் உள்ளிட்டோருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தந்துவிடுகிறது. அசாத்திய வேகத்துடன் கோரிக்கைக்கேற்ப கலைப்படைப்பை செயற்கை நுண்ணறிவு வழங்கமுடிகிறது.

செயற்கை நுண்ணறிவு மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாது மற்றும் மனித உணர்வை வெளிகாட்ட இயலாது என்ற பொதுவான அபிப்ராயங்கள் உண்டு. இன்று அவ்வாறான நிலை இல்லை. Natural Language Processing என்ற தொழிற்நுட்பம் பேச்சு மற்றும் எழுத்தில் வெளிப்படும் உணர்வுகளை மொழியின் வழியே புரிந்து கொள்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு மொழியின் வழியே வெளிப்படும் உணர்வுகளைப் பகுப்பாய்வு செய்து அதனை மகிழ்ச்சி, கோபம், வருத்தம் என அடையாளப்படுத்தும் திறன் பெற்றுள்ளது. Computer Vision என்ற தொழிற்நுட்பம் ஒளிப்படங்கள் மற்றும் அசைவுறுப் படங்களில் வெளிப்படும் முகப்பாவனைகள், உடல் மொழி மற்றும் தனிநபர் உணர்வுகளை வெளிப்படுத்தும் புலனக்கூறுகளைப் பகுப்பாய்வு செய்யும் திறன்பெற்றுள்ளது. Machine Learning என்ற தொழிற்நுட்பம் பெரும் எண்ணிக்கையிலாக அடையாளப்படுத்தப்பட்டு வகைப்படுத்தப்பட்ட ஒளிப்படங்கள் மற்றும் எழுத்துப்பனுவல்களில் இருந்து குறிப்பிட்ட வகை உணர்வுகளை புரிந்து கொள்ள பயிற்சிபெற்றிருக்கும். மேலும், இவ்வகையான செயற்கை நுண்ணறிவு தான் புதிதாக மற்றும் முன்னர் பயிற்சி பெறாத, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய கூறுகளை புரிந்து கொண்டு கற்றுக் கொள்ளும் திறன் படைத்தவை. Multi-Model Intergration என்ற தொழிற்நுட்பம் பேச்சு, எழுத்து மற்றும் ஒளிப்படம் ஆகிய வெவ்வேறு தரவுகளிலிருந்து உணர்வுகளை புரிந்து கொள்ளும் – அதுவும் வெவ்வேறு மூலத்திலிருந்து வரும் தரவுகளை புரிந்து கொள்ளும் – தன்மை கொண்டது.

செயற்கை நுண்ணறிவு உணர்வுகளை புரிந்து கொள்ளும் என்றால் அவற்றால் உணர்வுகளைக் கட்டமைக்கும் இலக்கியமும் படைக்க இயலும் தானே. Neural Network-Based Models என்ற தொழிற்நுட்பத்தை பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவால் குறிப்பிட்ட உணர்வுகளை தரக்கூடிய எழுத்துப்பனுவலை படைக்க இயலும். மகிழ்ச்சி, துன்பம், உவகை போன்ற குறிப்பிட்ட உணர்வுகளை தரக்கூடிய லட்சக்கணக்கான எழுத்துப்பனுவல்களில் இருந்து பயிற்சிபெற்று அதே போன்ற உணர்வுகளைத் தரக்கூடிய எழுத்துப்பனுவலை படைக்க இயலும். Rule- Based System என்ற தொழிற்நுட்பத்தைப் பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவும் உணர்வுப்பூர்வமான எழுத்துப்பனுவலை படைக்க இயலும். வார்த்தைகளையும் பத்திகளையும் எவ்வாறான கூட்டுச் சேர்க்கையிலும் விதிமுறைகளிலும் கையாண்டால் குறிப்பிட்ட உணர்வுள்ள சூழலை படைக்க இயலும் என்பதை இவ்வகையான செயற்கை தொழிற்நுட்பம் அறிந்திருக்கிறது. Hybrid Approach என்பது மேற்குறிப்பிட்ட இரண்டு தொழிற்நுட்பத்தையும் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு. இந்த தொழிற்நுட்பத்தின் வழியாக மிக துள்ளியமாக உணர்வுகளை எழுத்துப்பனுவலின் வழியே வெளிப்படுத்த இயலும்.

செயற்கை நுண்ணறிவு மிக இயல்பாக தஸ்தோவ்ஸ்கியின் பாணியையோ, ஆன்டன் செக்காவின் பாணியைவோ பிரதிசெய்ய இயலும். ஒரு இலக்கியத்தில் உள்ள சொற்பிரயோகங்கள், கதாப்பாத்திரத் தன்மை, நிகழ்வுகளை அடுக்கும் தன்மை, உணர்ச்சியை கையாளுதல் போன்றவற்றை விதிகளாக மாற்றி பயின்று கொள்ளும். பெர்கிலின் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் AIrish என்ற செயற்கை நுண்ணறிவு கொண்டு புதிய ஐரிஸ் நாடகங்களைப் படைத்துள்ளனர். மரபான நாடகப் பனுவல்களின் காட்சிகள், கதா பாத்திரத்தின் தன்மை, ஆண், பெண் உரையாடல்களில் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து AIrish புதிய காட்சிகளை எழுத உதவுகிறது. இந்த முறைமையை மனித மற்றும் செயற்கை நுண்ணறிவு சேர்க்கையில் உருவாகும் படைப்புகள் மற்றும் சிந்தனைகள் என்ற அர்த்தத்தில் Digital Humanistic என்கின்றனர்.

மனிதப் படைப்பாளிக்கு தற்போது இரண்டு வகையான சாத்தியங்கள் உள்ளது. ஒன்று, தற்போதுள்ள தொழிற்நுட்பத்திற்கு ஒரு மனித படைப்பாளியுடன் இணைந்து இலக்கியம் படைக்க இயலும் என்பதால், அதனை பயன்படுத்தி புதிய சாத்தியங்களைக் கண்டடைய வேண்டும். ஏனெனில், தற்போது செயற்கை நுண்ணறிவு படைத்ததாக சொல்லப்படும் இலக்கியங்கள் அனைத்தும் மனித படைப்பாளிகளின் கட்டளைக்கு கீழ் படைக்கப்பட்டவை. அதாவது, மனிதப்படைப்பாளி தனக்கு தேவையான உணர்வுகளைப் பற்றியான தெளிவைக் கொண்டிருந்தால் செயற்கை நுண்ணறிவு அவரின் கட்டளைக்குட்பட்டு இலக்கியத்தைப் படைத்துத் தருகிறது. அதாவது பெரும் எண்ணிக்கையிலான தரவுகளை ஒழுங்குபடுத்தி எழுதுவது என்பது தனிமனிதனுக்கு அதிகக் காலத்தை எடுத்துக் கொள்ளும். அதனை செயற்கை நுண்ணறிவு மிக எளிமையாகக் கையாளுகிறது.

மற்றொன்று, செயற்கை நுண்ணறிவுடன் போட்டியிடும் வகையில் தன் இலக்கியம் படைக்கும் திறனை செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கண இலக்கிய விதிமுறைகளை கற்றுக் கொண்டும், அதன் இலக்கியப்பாணிகளைக் கற்றுக் கொண்டும் செயற்கை நுண்ணறிவு செயல்படுகிறது என்பதால் மனித படைப்பாளி செயற்கை நுண்ணறிவுடன் போட்டியிட வேண்டுமென்றால் புதிய விதிமுறைகள் புதிய பாணி எழுத்துமுறைமைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். இதுவும் முடிவற்ற போட்டியை மனித படைப்பாளிகளுக்கும் செயற்கை நுண்ணறிவிற்கும் இடையை உருவாக்கும். அதாவது, இதனை மனித படைப்பாளிக்கும் செயற்கை நுண்ணறிவிற்கு இடையிலான போட்டி என்று கருதமுடியாது. புதிய தொழிற்நுட்ப பயன்பாட்டைப் புறக்கணித்த மனித படைப்பாளிக்கும் தொழிற்நுட்பத்தை கையாளும் மனிதப் படைப்பாளிக்குமான போட்டி.

தற்போதுள்ள தொழிற்நுட்பமானது நீராவி எஞ்ஜினை கண்டுபிடிக்கப்பட்டக் காலத்தில் மக்கள் எவ்வாறு அதனை கண்டுபயந்தார்களோ அவ்வாறாக நிலைதான் உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் உண்மையிலேயே நுண்ணறிவு கொண்டதல்ல. கடல் போன்ற புள்ளி விபரங்களைக் கையாளும் தொழிற்நுட்பம். இதனை Mechine Learning என்று அழைப்பதே சரி இதனை செயற்கை நுண்ணறிவு என்றழைப்பதாகாது. ஏனென்றால், இது மனிதர்களுக்காக மனிதர்களே தொழிற்நுட்ப உதவியால் உற்பத்தி செய்யப்படும் இலக்கியம் என்ற வாதமும் இருக்கிறது. உண்மையில் செயற்கைத் தொழிற்நுட்பம் குழந்தைப் பருவநிலையில் தான் இன்று உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் என்று நாம் பெயரிட்டாலும் தற்போதுள்ள தொழிற்நுட்பம் முழு திறனை எட்டவில்லை என்று விமர்சிக்கின்றனர்.

ஸ்டான்லி சேன் குஃபேன் என்ற சீன எழுத்தாளர் (Stanley Chen Qiufan) இலக்கியம் படைப்பதற்கென பிரத்தேகமாக உருவாக்கப்பட்ட GTP2. GBD2, GPD2, GPD3 ஆகிய செயற்கை நுண்ணறிவு கொண்டு புக் ஆப் சாங்காய் மற்றும் ஏஐ 2041 ஆகிய அறிவியல் புனைக்கதை நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய போட்டி ஒன்றில் இவர் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் எழுதிய ‘State of Trance’ என்ற சிறுகதையானது நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மோ யான் (Mo Yan) என்பவரின் கதையை வென்று முதல் பரிசு பெற்றுள்ளது. இதில் ஆச்சரியத்தக்க விசயம் என்னவென்றால் அந்த இலக்கிய போட்டியின் நடுவராக இருந்து கதைகளைத் திறனாய்வு செய்தது ஒரு செயற்கை நுண்ணறிவு என்பது தான்.

செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து எழுதுவது ஒரு புதிய அனுபவத்தை படைப்பாளிக்கு கொடுக்கலாம். இவ்வாறான அனுபவத்தை பெற்ற ஸ்டான்லி சேன் குஃபேன் அதனை ‘சிக்கவைக்கும் பொறி’ போன்றது என குறிப்பிடுகிறார். இவ்வுணர்வானது எல்லா இயந்திரங்களுக்கும் தரக்கூடியது. அதிவேகமாகச் செல்லக்கூடிய வாகனத்தை இயக்கும் நபருக்கு அதிவேகமாக செல்லும் தேவை எதுவுமில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அந்த வாகனம் தரும் சாத்தியத்தை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்பதே அவர் சிக்கிக் கொண்ட பொறி. அவர் அந்த வாகனத்தை இயக்குவதாக நினைத்தாலும் அந்த வாகனமும் அவரை இயக்கிக் கொண்டிருக்கும். இது ஒரு இயங்கியல் உறவு. இவ்வுறவுடனே செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்துடன் மனிதர்கள் இயங்க இருக்கிறார்கள்.

செயற்கைத் தொழிற்நுட்பம் இலக்கியம் படைப்பதற்கான சாத்தியங்களை எளிமைப்படுத்திக் கொடுப்பதால் எவரொருவரும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இலக்கியம் படைக்கும் வாய்ப்புகளைப் பெறலாம். இது ‘உபரி இலக்கியத்திற்கான’ (Surplus Literature) மற்றும் தரப்படுத்தப்படாத இலக்கியங்களின் காலகட்டத்தை நோக்கி நம்மை நகர்த்தும். தரப்படுத்தப்படாத இலக்கியங்கள் எல்லாக்காலத்திலும் இருந்துக் கொண்டுதான் இருக்கும். அதனை இலக்கிய விமர்சனம் மூலமாகதான் தரப்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவுக்கு பிறகு வலிமையான இலக்கிய விமர்சனச் சூழல் தேவைப்படும். அதையும் கூட செயற்கை நுண்ணறிவே செய்ய இயலும். ஆனால், இலக்கியம் மனிதனுக்காக படைக்கப்படுவது. அதனால், எழுதுவது செயற்கை நுண்ணறிவாக இருப்பினும் வாசகன் மனிதனாக இருப்பதால் மனித இலக்கிய விமர்சகர்களின் தரப்படுத்தலிலேயே எதிர்கால இலக்கியம் தீர்மானிக்கப்படும்.

 

***

கார்த்திக் ராமச்சந்திரன்
மதுரை காமராசர் பல்கலைகழக நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையில் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். நாட்டுப்புறவியல் சிறப்பிதழின் சிறப்பாசிரியர்களுள் ஒருவராக இருந்தார். கிழக்கு, காலச்சுவடு, நீலம், மணல்வீடு ஆகியவற்றில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page