- கௌதம சித்தார்த்தன்
முகநூல், ட்விட்டர், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் தற்காலச் சூழலில் ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெற முடியும் என்பதற்கான துறையாக இருப்பது இசை! அதுவும், சாதி, மத, இன, மொழி பாகுபாடில்லாத இந்தத் துறையின் வளர்ச்சி, இணையத் தொழில் நுட்பம் வளர்ந்தபிறகு, பெரியளவிலான வீச்சுடன் பல்கிப் பெருகுகிறது.
திரைப்பட இசையமைப்பாளர்களையும் தாண்டி, தனியாக ஆல்பம் வெளியிடும் இசைக்க கலைஞர்களே தற்காலங்களில் பெரிதும் புகழடைகிறார்கள்.
ஒரு காலத்தில், ஆல்பம் வெளியிடுவதென்பது மேலை நாட்டுக் கலாச்சாரமாக அமைந்திருந்தது. மேலும், ஆல்பங்களை தனி ஒரு மனிதன் வெளியிட முடியாமல், இசை வெளியீட்டு நிறுவனங்கள்தான் வெளியிட்டு விளம்பரப்படுத்த முடியும் என்கிற நிலை. பெருமளவு உலகப் பிரபலம் கொண்ட நட்சத்திர அந்தஸ்து பெற்ற பாடல் குழுவினர்தான் ஆல்பங்களை வெளியிட முடியும் என்ற சூழல், இந்தத் துறை சார்ந்த மாஃபியாக்களின் அழிச்சாட்டியம், பெரும் பொருட்செலவு கொண்ட தயாரிப்பு இப்படி பல்வேறு விஷயங்களில் மாட்டிக்கொண்டு சீரழியும் கலைஞனின் நிலையை மாற்றியமைத்தவை யூ டியூப் போன்ற சமூக ஊடகங்கள்! பத்துக்கும் மேற்பட்ட பாடல்களைத் தொகுத்து வெளியிடும் ஆல்பம் என்ற விதி அமைப்புகள், யூ டியூப்பின் வருகைக்குப் பிறகு, தலைகீழாக மாறி, ஒரே ஒரு பாடல்தான் என்று வெடித்து எழுந்தன. இதற்கு சிங்கிள் என்று பெயரும் வைத்து செயல்பட்ட இந்த ஐடியா, உலகம் முழுக்க பிரபலமானது.
தமிழில், இந்த சிங்கிள் என்ற கான்செப்ட் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்த, ஏராளமான தமிழ் இசைஞர்கள் பங்கு பெற்றனர். அதில் பெருமளவு ஹிட் அடித்தது சந்தோஷ் நாராயணனின் “எஞ்சாயி எஞ்சாமி!” உலகளவில் அனைவரது கவனத்தையும் பெற்று பெரும் இசை ரசிகர்களை ஈர்த்தது. இந்தப் பாடல் குறித்து உலகப் புகழ் பெற்ற இசைப்பத்திரிக்கையான Rolling Stone ஒரு கட்டுரை எழுதி கவனப்படுத்தியது. (அதில் பாடல் எழுதிய அறிவு பெயரை வெளியிடவில்லை என்று சர்ச்சையானது தனிக் கதை)
பொதுவாகவே, இசைத்துறையில் Cover என்று ஒரு போக்கு இருக்கிறது. அதாவது, ஒரு பிரபலமான பாடலையும் அதன் இசையையும் மட்டும் எடுத்துக் கொண்டு, அதனுடைய ஒரிஜினல் வீடியோவுக்குப் பதிலாக தங்கள் உருவாக்கிய வீடியோவை அதனுடன் இணைத்து வெளியிடுவதை கவர் என்று சொல்கிறார்கள். மேலும், கவர் வெர்சன், கவர் சாங், ரீமேக்.. என்று அடையாளப்படுத்தப்படுகிறது. யூ டியூபின் வருகைக்குப் பிறகு, இந்த கவர் வெர்சன் புற்றீசல் போல பெருகியுள்ளது. இணையத்தில் புகழ் பெற்ற வேடிக்கை வினோத அனிமேஷன் பாத்திரங்களால் உருவாகிக் கொட்டிக் கிடக்கும் காட்சிகளை எடுத்து அழகாக, பொருத்தமாக எடிட் செய்து பல வீடியோக்களை வெளியிடுவார்கள் யூ டியூபர்கள்! இப்படி ஒரு பாடலுக்கு கவர் வெர்சன் வந்துவிட்டால் அது “பெரும் ஹிட் அடித்த பாடல்” என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என்பதற்காக, சம்பந்தப்பட்ட ஆட்கள் புகார் எதுவும் தெரிவிக்காமல், இது போன்ற செயல்களுக்கு ஊக்குவிக்கும் போக்கே நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான கவர் வெர்சன்கள் 50 க்கும் மேற்பட்ட பல்வேறு வீடியோக்களாக “எஞ்சாயி எஞ்சாமி” க்கு உருவாகி வெளிவந்திருக்கின்றன!
இந்தப்பாடலின் மெஹா வெற்றி, தமிழ் இளம் இசைக் கலைஞர்களை புத்துணர்ச்சி கொள்ள வைத்தது மட்டுமல்லாது, வைரமுத்து போன்ற பிரபலங்களையும் கவனம் கொள்ள வைத்தது. விளைவு, “நாட்படு தேறல்” என்ற 100 பாடல்களை வெளியிட ஆரம்பிக்கும் மெஹா பிராஜெக்ட்டில் இறங்கினார் அவர். அந்த மியூசிக் சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (வேறொரு தருணத்தில் இவை குறித்து எழுதலாம்) ஆனால், அவரது யூ டியூப் சேனலில் ரேட்டிங் மிகவும் மந்தமாகவே ஏறியது.
***
இது போன்ற வரலாற்றுப் பின்புலம் வாய்ந்த தமிழ் மற்றும் உலக இசை வெளியில்தான் Boom ஆனார் யொஹானி!
இலங்கையைச் சேர்ந்த இளம் பாடகியான இவர். சமீபத்தில் பாடிய “மெனிக்கே மகே கித்தே” என்ற காதல் பாடல், உலகம் முழுக்க 150 மில்லியன் இசை ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இசைத்துறையில் ஒரு பெரும் வெடிப்பாக தோன்றிய இவர், இன்றைய சமூகவலைத் தளங்களின் வீச்சு மூலம் இசை வானில் பெரும் நட்சத்திரமாக ஒளிர்கிறார். அமிதாப் பச்சன் தனது கவர் வெர்சனாக இவரது பாடலை உருவாக்கி ட்விட்டரில் போடுகிறார். இலங்கை ஜனாதிபதி விருந்துக்கு அழைக்கிறார், தமிழ் திரைப்பட இசைஞர்களான ஏ.ஆர்.ரஹ்மானும், ஹாரிஸ் ஜெயராஜும் இந்தப் பாடகியை அழைத்து வந்து தங்களது படங்களில் பாட வைக்கிறார்கள்.. என்று பற்றிக் கொண்டது பெருநெருப்பு!
அப்படியான சமயத்தில்தான் ஒரு அதிர்ச்சியான செய்தி வெடித்தெழுகிறது. தமிழினத்தை படுகொலை செய்த இலங்கை இராணுவத்தின் 55வது பிரிவு மேஜர் ஜெனரலாக இருந்து வழிநடத்திய பிரசன்ன டீ சில்வாவின் மகள் தான் இந்த யொஹானி என்னும் செய்தி தமிழ் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது! பொதுவாகவே, தமிழின் பெரும்பான்மை மக்கள், தமிழர் மீது இனப்படுகொலைகளை நிகழ்த்திய இலங்கை மீது பெரும் கோபத்திலும், எதிர்ப்பிலும் உள்ளனர். இதே போன்று கடந்த காலங்களில், திரைப்பட உலகில் கலையை முன்வைத்து, இலங்கை சார்ந்து எழும் ஆதரவு விஷயங்களின் மீதான கண்டனக் குரல்களும், கோப தாபங்களும் பெரிதளவில் வெடித்தெழும். அந்தக் குரல்களுக்கு செவிசாய்த்து சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை விஷயங்களிலிருந்து விலகிவிடுவார்கள். விஜய் சேதுபதி, லிங்குசாமி, மலையாள துல்கர் சல்மான், சந்தோஷ் சிவன், வெப் சீரிஸ் ஃபேமிலி மேன் என்று இந்தப் பட்டியல் நீளும்.
இப்படிக் கட்டமைந்திருக்கும் தமிழ் வெகுஜன சூழலில் யொஹானியின் சர்ச்சை பெருமளவில் வெடித்தது. முகநூல், ட்வீட்டர் என இணையத்தில் செயல்படும் அனைத்து சமூக ஊடகங்களிலும் பெரும் கண்டனக் குரல் வெடித்தெழுந்தது.
யொஹானி தனது நாடு குறித்த போர்த் தியாகங்களையும், தனது அப்பாவின் வீர தீர போர் செயல்களையும் பாராட்டி பாடிய ஆல்பங்களை தேடி எடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்களது கண்டனங்களை பெரும் குரலில் தெரிவித்தார்கள் தமிழ் மக்கள்.
ஒரு கட்டத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையமைப்பிலிருந்து யொஹானியை விலக்கி விட்டதாக ட்விட்டர் பதிவு வெளியிட்டார்.
***
இந்த சர்ச்சைகளுக்கிடையில், ஞாபகம் வரும் முக்கியமான பெயர், தமிழ் ஈழப் பாடகி ஜெஸ்ஸிக்கா!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற ஜெஸ்ஸிக்கா வின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? அந்த நிகழ்வில், “விடை கொடு எங்கள் நாடே” என்ற ரத்தமும் சதையுமான அந்த வரிகளைப் பாடும்போது, ஒரு சமூகத்தின் துயரம் இசையின் அற்புதமான அழகியளாக மாற்றம் பெறும் நிகழ்வை நிகழ்த்திக் காட்டியவள்! “உயிரை வருடும் உன்னதம்” என்று எழுதும் சொல்லை இசையால் உருவாக்குபவள் அவள்!
கடந்த ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு இந்தக் குரலைக் கேட்டு கரைந்துருகிப் போனவன் நான். அதன்பிறகு அவரைப் பற்றிய செய்திகள், பெரிதாக கண்ணில் படவில்லை. பெரும் இடைவெளிக்குப் பின் சமீபகாலமாக அவரது முகநூல் பக்கத்தில், அவ்வப்பொழுது அவரது குரலைக் கேட்பேன். அது ஒரு இறைவனின் வரப்பிரசாதம் போன்ற காந்தக்குரல்! தேவதையின் குரல் வளம் கொண்ட இவர், பெருமளவுக்கு கவனம் பெறாமலேயே போனது, தமிழர்களுக்கே உரித்தான சாபம் போலும்!
சமீபத்தில் அவர் விடுத்திருந்த செய்தியில், கனடா, டொரோண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் முகமாக, ஒரு நேரடி இசை நிகழ்ச்சி நடத்துவதாகவும், உங்கள் எல்லோரது ஆதரவையும் வேண்டி நிற்கின்றேன்.. என்றும் கேட்டிருந்தார். ஒரு விடுதலைப் போராட்ட மண்ணில் இருந்து உருக்கொண்ட கலைஞியால் இப்படித்தான் யோசிக்க முடியுமே தவிர, அமிதாப் பச்சனின் கவர் ட்வீட்டில் எல்லாம் இடம் பிடிக்க முடியாது!
கலையை, கலையாகத்தான் பார்க்க வேண்டும். இதுபோன்ற அரசியல் விஷயங்களையெல்லாம் முன்வைத்து ஒதுக்கக் கூடாது என்றும் ஆங்காங்கு குரல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.
***
இந்த இடத்தில் 2019 ஆம் ஆண்டு நோபல் விருது பெற்ற ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கே குறித்துப் பேசுவது பொருத்தமாக இருக்கும்.
இவருக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்ட உடன், உலகம் முழுவதிலுமான போர் எதிர்ப்பாளர்களிடமிருந்து பெரும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பின. 1996 ஆம் ஆண்டில், அவர் எழுதிய கட்டுரை நூல் A Journey to the Rivers: Justice for Serbia. அந்த நூலில், 1990 களில் நடந்த யுகோஸ்லாவியப் போரின்போது நடந்த விளைவுகளை எழுதியிருந்தார். அதில் செர்பியாவை பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரித்து அவர்களுக்கு ஆதரவு அளித்திருந்தார்.
இந்தப் போர் குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்:
1991 முதல் 2001 வரை நடந்த புகழ்பெற்ற யுகோஸ்லாவியப் போர்கள் என்பவை, அந்த பிராந்தியத்திற்குள் அடங்கியிருக்கும் செர்பியன், போஸ்னியன், கொசோவன், ஸ்லோவேனியன், குரோஸியன்.. போன்ற பல்வேறு இனகுழுக்களின் மோதல்கள், சுதந்திரப் போர்கள் மற்றும் கிளர்ச்சிகள் ஆகிய அம்சங்கள் கொண்டவை. இது யூகோஸ்லாவிய அரசின் உடைவுக்கு வழிவகுத்தது. பெரும்பாலான போர்கள் சமாதான உடன்படிக்கைகள் மூலம் முடிவடைந்தன, ஆரம்பத்தில் யுகோஸ்லாவிய மக்கள் இராணுவம் (ஜே.என்.ஏ) பிரிவினைவாத அரசாங்கங்களை நசுக்குவதன் மூலம் முழு யுகோஸ்லாவியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முயன்றது, ஆனால் அது கட்டுக்கடங்காத சூழலில், செர்பிய ஸ்லோபோடன் மிலோசெவிச் அரசின் ஆளுமையின் கீழ் வந்தது. அதன் பிறகு அது செர்பிய இராணுவமாக மாறியது. அதன் பின், அனைத்து இனக்குழுக்களின் போராட்டங்களையும் மிக மோசமான முறையில் கடுமையாக ஒடுக்கியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிக மோசமான போர் என்று விவரிக்கப்படும் இந்தப் போர்கள் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட பல போர்க்குற்றங்களால் குறிக்கப்பட்டன. இடைக்கால நீதிக்கான சர்வதேச மையம், இந்தப் போர்களில் 140,000 பேர் இறந்ததாக மதிப்பிடுகிறது. ஐ.நா தீர்ப்பாயத்தால் ஸ்லோபோடன் மிலோசெவிச் போர்க்குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டார்.
இவரை ஆதரித்தும், யுகோஸ்லாவியப் போரில் செர்பியர்களை மிருகத்தனமான ஆக்கிரமிப்பாளர்களாக மேற்கத்திய செய்தி ஊடகங்கள் நியாயமற்ற முறையில் சித்தரித்ததாகவும் ஹேண்ட்கே வாதிட்டார். மேலும், இனமோதல்களைக் கட்டுக்குள் கொண்டுவர, நேட்டோவால் செர்பியா மீது தொடுக்கப்பட்ட குண்டுவெடிப்பை ஒரு போர்க்குற்றம் என்று ஹேண்ட்கே விவரித்தார், இதனால், செர்பிய போர்க்குற்றங்களைக் குறைக்க முயன்றதாக விமர்சகர்களால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டார்.
அதுமட்டுமல்லாது, மேலும், 2006 இல் ஸ்லோபோடன் மிலோசெவிச்சின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினார் ஹேண்ட்கே. அந்த ஆண்டு ஹென்ரிச் ஹெய்ன் விருதுக்கு (50,000 யூரோ) ஹேண்ட்கே பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால், இந்த நிகழ்வின் காரணமாக, எழுந்த கடுமையான விமர்சனங்களால் ஹேண்ட்கே பரிசை ஏற்கவில்லை.
போர் என்ற சர்வதேசக் குற்றங்களுக்குள் சம்பந்தப்பட்டிருக்கும் ஒருவர் கலைஞர் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கோபத்துடன் எழுந்த கண்டனக்குரல்களின் தார்மிகத்தை அவ்வளவு எளிதாகப் புறம் தள்ளிவிட முடியாது.
விடுதலைப் போராட்ட அமைப்பு ஒன்றில் இயங்கியவரும், பிறகு அதிலிருந்து வெளியேறி விட்டவரும், தற்போது, சமீபத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டங்களை முன்வைத்து ஒரு முக்கியமான போர் ஆவணமாக, “குமிழி” என்ற நாவலை எழுதியிருப்பவருமான, சுவிஸில் வசித்து வரும், நாவலாசிரியர் ரவி இந்த யொஹானி சர்ச்சைகளை முன்வைத்து தனது வலைப்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், //தந்தை மீதான எதிர் மதிப்பீடுகளை வைத்து பிள்ளைகளை பழிவாங்குவதை எதன் பெயராலும் நியாயப்படுத்த முடியாது. இலங்கை அரசுக்கு பிரபாகரன் பயங்கரவாதியாகத் தெரிந்தார் என்ற காரணத்தை முன்வைத்து அவரது மகனை, குடும்பத்தை கொலைசெய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோலவே இராணுவத் தளபதியின் மகள் என்பதற்காக யொஹானியை இசைத் துறையில் ‘பழிவாங்க’முடியாது. புறக்கணிக்கவும் முடியாது.// என்று தெரிவிக்கிறார்.
அதே சமயம் அவரது கட்டுரை இப்படிச் சொல்கிறது: //யொஹானி தனது ஏக்கங்களையும் விடுபடல்களையும் பாடுகிறார். நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த உணர்வு மதிக்கப்பட வேண்டியது. இதே உணர்வு இராணுவத்தில் இருந்தவர்களின் குடும்பங்களில் மட்டுமல்ல, போராளிகளின் குடும்பங்களிலும், இதே இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிலும், அரசியல் காரணங்களுக்காக சிறையில் வாடுபவர்களின் குடும்பங்களிலும் பல வருடங்களாக குழந்தைமை மீது தாக்கம் ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. இருக்கிறது.
அது போரினால் நிகழ்ந்தது என்ற புரிதல் ஒரு கலைஞருக்கு இருக்கவேண்டும். அது அவரிடம் இருக்கவில்லை. இந்தப் பாடல் வெளிவந்த 2020 இல் யொஹானிக்கு 27 வயது ஆகிவிட்டிருந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுக்கத் தவறக்கூடாது. அதேநேரம் போருக்கு எதிராக நிற்கிற, பேசுகிற இளம் பட்டாளங்களைக் கொண்ட ஐரோப்பிய நாடான இலண்டனிலும் அவுஸ்திரேலியாவிலும் இளமைப் பருவத்தைக் கழித்த யொஹானிக்கு இந்த புரிதலின்மை ஒரு கலைஞர் என்ற ரீதியிலாவது கிடைக்காமல் போனது ஒரு குறைபாடுதான்.
குறைந்தபட்சம் போரால் பாதிக்கப்படுபவர்களின் மனநிலையை காயப்படுத்தாமல் இருப்பதில் கவனம் இருக்கவில்லை. அவர் தனது தந்தை பயங்கரவாதத்தை ஒழித்த கதாநாயகனாகவும் வடக்கையும் தெற்கையும் இணைத்த கதாநாயகனாகவும் நாட்டுக்காக இரவு பகலாக உழைத்த மீட்பனாகவும் அந்த பாடலில் புகழாரம் சூட்டுகிறார். அது ஒருவகையில் போரை கொண்டாடுவதான உளவியலை வெளிப்படுத்துகிறது.//
***
போர்க்களத்தில் களமாடிய ஒரு போராளியின் ஆன்மாவில் ரத்தமும் சதையுமாகக் கசியும் இந்த வரிகள், எல்லையற்ற இசைக் களத்தில் புத்தம் புதிய இசையை மீட்டுகின்றன!
**************
நவம்பர் 2021, தமிழி இதழில் பிரசுரமான கட்டுரை