• Thu. Nov 23rd, 2023

மூன்று வெகு மக்கள் கவிதை நிகழ்வுகள்

ByGouthama Siddarthan

May 14, 2023

மூன்று வெகு மக்கள் கவிதை நிகழ்வுகள்
அறிமுகக் குறிப்புகளும் தமிழாக்கமும் : கௌதம சித்தார்த்தன்

கவிதை என்பது பெரும் சக்திவாய்ந்த ஆயுதம். அதன் எல்லையற்ற வீச்சை மிகச்சரியாக உணர்ந்தவர்கள் கறுப்பின மக்கள். “கவிதைகள் சந்திரனைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு சக மனித வாழ்வியலைப் பேசும்போது, அதன் அழகியல் மேலும் வலிமை பெறுகிறது” என்கிறார் லாங்ஸ்டன் ஹியூக்ஸ். கவிதைகளின் சொற்களை தங்களது கருத்த இசையால் உயிரூட்டி உணர்ச்சிபூர்வமாக்கியவர்கள். பத்திரிகையில் வெளிவரும் கவிதையை விடவும், இசை ஆல்பங்களில் வெளிவரும் கவிதைப்பாடல்களின் வீச்சு மிக மிக அபரிமிதமானது. பாப்மார்லியின் கவிதைப்பாடல்கள் உலகளவில் ஏற்படுத்திய தாக்கம் கடந்த நூற்றாண்டுகளில் முதன்மையானது என்று விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். பாப்புலர் கல்ச்சர் பற்றி விவாதிக்கும் ஜீஜக் போன்ற பின்நவீனத்துவ விமர்சகர்கள், இந்த கவிதை ஆல்பங்கள் குறித்து பெரும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்திவருகின்றனர். இந்தக் கவிதைப்பாடல்களின் அடிநாதம், பெரும்பாலும் அதிகாரத்துவத்தை எதிர்க்கும் கலகக் குரல்களின் உச்சஸ்தாயியாகவே அமைந்திருக்கின்றன.

தமிழில் நவீன கவிதைகளின் இசைப்பாடல்கள் ஆல்பங்களாக வெளியிடும் கலாச்சாரப்போக்கு இன்னும் ஏற்படவில்லை. வெகுமக்கள் சார்ந்த இந்தக் கலை நிகழ்வுகள், தமிழில் கவியரங்க நிகழ்வுகளாக மாற்றம் பெற்று கடந்த காலங்களில், வளர்ந்து வந்திருக்கின்றன. ஆனால், அத்தகைய கவியரங்கக் கொண்டாட்டங்கள் மலினமானவை என்றும், கலாபூர்வமற்ற வெற்றுப் பிரச்சார வசனங்கள் என்கிற மாதிரியான விமர்சனங்களைத் தொடர்ந்து உருவாக்கி, எள்ளல் செய்து அந்த கலை நிகழ்வுகளை புறம்தள்ளி, கவிதை ரசிகர்களுக்கும் அதன்மீது ஆர்வமில்லாமல் அருகச் செய்துவிட்டது கடந்த காலத் தமிழின் இலக்கியச் சூழல். இந்த மேட்டிமைவாதிகளின் விமர்சனங்களுக்குக்கேற்பவே, அப்போதைய கவியரங்க நிகழ்வுகளும் இருந்தன.

உலகம் முழுக்கவே இதுபோன்ற மலினமான பார்வைகள் கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறத்தான் செய்தன. ஆனால், இவைகளையும் மீறி கலைப் பிரக்ஞையும், சகமனிதனின் வாழ்வியல் பார்வையும் கொண்ட நிகழ்வுகள் பெருமளவில் உருவாகின. அவை பெரும்பாலும், விளிம்பு நிலையாளர்களான கறுப்பினக் கலைஞர்களின் இசைக்கருவிகளிலிருந்து முகிழ்த்தன.

இந்தப்பின்புலத்தில், சமீபத்தில் இந்தியாவிலும் உலகளவிலும் நிகழ்ந்த மூன்று வெகு மக்கள் கவிதை நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கிறேன்.

 

***

வெகு மக்கள் கவிதை நிகழ்வு : 1
“நான் இந்துஸ்தானி முசல்மான்”

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் பெருமளவில் எதிர்ப்புகளும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்ணியலாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று எல்லாத் தரப்பிலுமிருந்து அவரவர் சார்ந்த துறைகளில் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிகழ்வுகளில் வாசிக்கப்பட்ட “நான் இந்துஸ்தானி முசல்மான்” என்னும் இக் கவிதை உலகளவில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டது. இதை எழுதிய கவிஞர் ஹுசைன் ஹைத்ரி மும்பையை சேர்ந்த இளைஞர். முழுநேர எழுத்தாளரான இவர், மும்பையில் செயல்படும் Kommune என்கிற கலை நிகழ்ச்சி மையத்தின் கவிதை வாசிப்புகளிலும், நவீன நாடகங்களிலும் செயல்பட்டு வருபவர். கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில், தான் எழுதிய இக்கவிதையை Kommune முகநூல் பக்கத்தில் வெளியிட்டார் ஹைத்ரி. இது 5000 பகிர்வாளர்களுக்கும் மேலாக பகிரப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது.

அதன்பிறகு, பல்வேறு நாளிதழ்களில் பேசப்பட்டது. அத்தருணத்தில் நடந்த உத்தரப் பிரதேசத் தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சியை அரசியல் கட்சிகள் விமர்சிக்கும்போது, இக்கவிதை முழங்கப்பட்டு மேலும் பரபரப்பானது.

ஆனால், “இது ஒரு எதிர்ப்புக்கவிதை அல்ல,’ என்கிறார் ஹைத்ரி. இந்துஸ்தானி முசல்மானின் ஒவ்வொரு வரியும் தனக்கு மட்டுமே பொருந்தும், ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் அல்ல என்கிற பொருள் தொனிக்கும் விதமாகப் பேசுகிறார். “எனது அடையாளத்தைப் பற்றி நான் எப்போதும் குழப்பமடைகிறேன், “எனக்குள் பல கட்டங்கள் உள்ளன. நான் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறேன். நான் வெவ்வேறு நகரங்களில் பணிபுரிந்தேன், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமங்கள், சிறிய நகரங்கள் என. இந்த இடங்கள் அனைத்தும் எனது ஆளுமையை வண்ணமயமாக்கியுள்ளன. ஆம், நான் ஒரு முஸ்லீமாக அடையாளம் காண்கிறேன், ஆனால் எனது அடையாளம் அது மட்டுமல்ல. ’’ என்கிறார் scroll என்னும் இணைய இதழில்.

கவிதை குறிப்பிடும் ஒவ்வொரு அனுபவத்தையும் வாழ்ந்து வருகிறார். அவர் ரிஷிகேஷில் உள்ள கங்கையில் நீராடியது, வாரணாசிக்குப் பயணம் போனது, மசூதிகள் தவிர, கோயில்கள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் என நண்பர்களுடன் சென்றது என்று பல சம்பவங்களை நினைவு கூர்கிறார். தனது ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றுப்புறம் தனக்கு வழங்கிய சமத்துவத்தின் மதிப்பை தான் பெரிதும் மதிப்பதாகச் சொல்கிறார்.

இந்தக்கவிதை, ஒரு எதிர்ப்பு அல்ல, நான் எந்த செய்தியையும் கொடுக்கவில்லை, புதிதாக எதுவும் சொல்லவில்லை” என்று தீர்மானமாகச் சொல்லும் அவரைக் கவலையடையச் செய்வது, கவிதையின் தலைப்பில் உள்ள “இந்துஸ்தானி” என்ற சொல், இந்தச் சொல் தற்போது பிரபலமாக இருக்கும் கடுமையான தேசியவாதம் என்று பொருள் கொள்ளப்படலாம் – “ஆனால், எனது அர்த்தம் அப்படியல்ல,” என்று அவர் தெளிவுபடுத்துகிறார். “என்னைப் பொறுத்தவரை, இது ஒரு இந்துஸ்தானி என்பதன் சாராம்சமான கலாச்சார பன்முகத்தன்மையையே குறிக்கிறது.” என்று புன்னகையுடன் தெரிவிக்கிறார்.

2019 டிசம்பர் 27 அன்று மும்பையின் ஆசாத் மைதானத்தில் Joint Action Commitee for Social Justice என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கான எதிர்ப்புக் கூட்டத்தில் இந்த சக்திவாய்ந்த கவிதையை முழங்கினார் கவிஞர் ஹுசைன் ஹைத்ரி.

இந்தி மற்றும் உருது மொழியில் உள்ள இந்தக்கவிதை சர்வதேசப் புகழ்பெற்ற World Literature today இதழில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக மக்களின் பார்வைக்கு நகர்ந்திருக்கிறது.
ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்கள் : தீபிகா முகர்ஜி, உதித் மெஹ்ரோத்ரா.

 

இந்துஸ்தானி முசல்மான்
– ஹுசைன் ஹைத்ரி

ஒரு மாலை நேர உலாவலுக்காக என் தெருவில் இறங்குகிறேன்,
மசூதியில் ஒலிக்கும் பாங்கின் எதிரொலி, என் கால்களை நிறுத்துகிறது,
பிரார்த்திக்க வேண்டிய நேரம் இது என நினைவூட்டுகிறது,
ஆனால், நான் அக்கணம் யோசிக்கத் தொடங்குகிறேன்:

பாய், என்ன வகையான முஸ்லீம் நான்?

நான் ஷியாவா அல்லது சன்னியா?
நான் கோஜாவா அல்லது போஹ்ரியா?
கிராமத்தானா அல்லது நகரத்தானா?
நான் கிளர்ச்சியாளனா அல்லது ஆன்மீக ஞானியா ?
நான் இறை பக்தியாளனா அல்லது சாதுர்யமானவனா ?

பாய், என்ன வகையான முஸ்லீம் நான்?

நான் மண்டியிட்டு தொழலாமா,
அல்லது தலையை தரையில் வைத்துப் பணியலாமா,
என் தொப்பி என் அடையாளமா,
அல்லது முழுவதுமாக மொட்டையடித்து முகத்தில் வளர்ந்துள்ள தாடியா,
குர்ஆனிய வசனத்தை ஓதும் நானா,
அல்லது பாலிவுட்டின் பாடல்களை முணுமுணுக்கலாமா?
ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் திருநாமத்தை பாடும் நானா?
அல்லது அதிகார வர்க்க ஷேக்குகளுடன் போராடலாமா?

நான் என்ன வகையான முஸ்லீம், பாய்?
எனக்குத் தெரியும், நான் ஒரு இந்திய முஸ்லீம்.

நான் தக்காண பீடபூமிக்காரன் உத்திர பிரதேசக்காரன்
நான் போபால்காரன், டெல்லிக்காரன்,
நான் குஜராத்தி, நான் பெங்காலி,
நான் உயர் சாதியினன், தாழ்த்தப்பட்டவன்,
நான் நெசவாளன், செருப்பு தைப்பவன்,
நான் மருத்துவன், தையல்காரன்.
புனித கீதை என்னில் பேசுகிறது,
ஒரு உருது செய்தித்தாள் என்னுள் வளர்கிறது,
தெய்வீகத்தன்மை என்னில் ரமலான் ஆகிறது,
கங்கை என்னுள் பாவங்களைக் கழுவுகிறது.
நான் என் எண்ணங்களின்படி வாழ்கிறேன், உங்களுக்காக அல்ல,
நான் சிகரெட் புகைக்கிறேன்
எந்த அரசியல்வாதியும் என் நரம்புகளை ஆளவில்லை,
எந்தக் கட்சியும் என்னை தங்களின் கண்ணியில் பிணைத்திருக்கவில்லை

நான் ஒரு இந்திய முஸ்லீமாக இருக்கிறேன்.

நான் பழைய டெல்லியின் ரத்தக்களரியான வாசலில் இருக்கிறேன்,
நான் லக்னோவின் மாயாதீதக் குழப்பத்தில் இருக்கிறேன்,
நான் பாப்ரியின் இடிக்கப்பட்ட குவிமாடத்தில் இருக்கிறேன்,
நான் மங்கலான எல்லைகளில் உள்ள வீட்டில் இருக்கிறேன்,
சேரிக் குடியிருப்புகளின் வறுமையிலும்,
மதரசாவின் சிதைந்த கூரைகளிலும்,
நீறு பூத்த நெருப்பாய் எரியும் கலவரங்களிலும்,
நான் ரத்தக் கறை படிந்த உடையில் இருக்கிறேன்.

நான் இந்துஸ்தானி முசல்மான்.
இந்துக் கோவில் கதவு என்னுடையது,
அதே போல உயர்ந்த மசூதி ஸ்தூபியும் என்னுடையது,
சீக்கிய குருத்வாரா மண்டபம் என்னுடையது,
தேவாலயங்களில் உள்ள திருக்கோயில் இருக்கைகள் என்னுடையவை;
நான் நூறில் பதினான்கு,
ஆனால் இந்த பதினான்கு, மற்றவர்களில் அல்ல,
நான் நூற்றுக்குள்ளேயே இருக்கிறேன்,
நூறு என்பது, என்னையும் கொண்ட மொத்தம்.

என்னை வேறு விதமாக பார்க்க வேண்டாம்,
நூற்றுக்கணக்கான கதைசொல்லிகளிடமிருந்து
நூறு விதமான சிறு சிறு வேறுபாடுகள் கொண்ட கதாபாத்திரங்களாக இருக்க
எனக்கு நூறு வழிகள் உள்ளன.

சகோதரனே, நான் முஸ்லீமாக இருப்பதுபோல,
மிகுதியாக, இந்தியனாகவும் இருக்கிறேன்.

நான் இந்துஸ்தானி முசல்மான்,
நான் இந்துஸ்தானி முசல்மான்.

 

***

வெகு மக்கள் கவிதை நிகழ்வு : 2
“கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்..”

நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் அமைந்துள்ள சர்வதேச இலக்கிய அமைப்பு The Poetry International Foundation. இது உலகளவில் பல இலக்கிய அமைப்புகளை உள்ளடக்கியது. இது நெதர்லாந்து மற்றும் உலகெங்கிலும் இருந்து தரமான கவிதைகளை சர்வதேச வாசகர்களுக்கு வழங்குவதையும், கவிதை மொழிபெயர்ப்பை ஊக்குவிப்பதையும், கவிதை பற்றிய சர்வதேசப் போக்குகளின் பரிமாற்றத்தைத் தூண்டுவதையும், நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த கவிதைகளுக்கான இணையை இதழ் ஒன்றையும் நடத்துகிறது.

இந்த கூட்டமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் ரோட்டர்டாம் நகரில், சர்வதேச விழா கோலாகலமாக நடக்கிறது. கடந்த வருடம் ஜூன் 13 – 16 தேதிகளில் நடந்த இந்தவிழாவின் துவக்க நிகழ்வாக கடைசிக் கவிஞர்கள் (THE LAST POETS) என்னும் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களான அபியோடூன் ஒயோவோல் மற்றும் உமர் பின் ஹாசன் ஆகியோர் தங்களது பூர்வ இசைக்குழுவினருடன் கவிதைகள் பாடினர்.

எதிரிகளின் எலும்புக் குருத்துக்களைத் துளைக்கும் இறுதி அடி கொண்ட சொற்களே கவிதைகள். அத்தாக்குதல்களைத் தொடுக்கும் இறுதிக் கவிஞர்கள் நாங்கள் என்று பிரகடனமிடும் கடைசிக் கவிஞர்கள் என்னும் குழு, 1960 களின் பிற்பகுதியில் ஆப்பிரிக்க-அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தின் கறுப்பு தேசியவாதத்திலிருந்து வீறுகொண்டெழுந்த பல கவிஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுடன் துவங்கியது. சாலைகளில், பூங்காக்களில்,மனிதர்கள் கூடும் இடங்களிலெல்லாம் ஆப்பிரிக்க மரபான இசைக்கருவிகளை முழக்கி, பெருங்குரலெடுத்துப் பாடினார்கள் இவர்கள். பெரும் ஒடுக்குமுறைக்காளாகியிருந்த கறுப்பின மக்களின் அரசியல் யதார்த்தங்கள், வாழ்வியல் சூழல்கள், ஆன்மீக மற்றும் கலாச்சார விடுதலைக்கான குரல்களை, தங்களது பண்டைய இசைக்கருவிகளான காங்கோ மற்றும் டிஜெம்பே பறைகளை முழக்கி, கவிதைகளாக இசைத்தனர். புரட்சிகர இசைக்கருவி என்று ஒருசில நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்த காங்கோ பறை (முக்கியமாக, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கியூபாவின் அரசியல் எழுச்சியின் போது, கியூபா அரசாங்கம் அரசியல் அமைதியின்மைக்கு அஞ்சி காங்கோ பறையைப் பயன்படுத்தத் தடை விதித்திருந்தது.) இவர்களின் நிகழ்வில் முக்கியத்துவமானது.

தற்போது புகழ்பெற்றுள்ள ஹிப்-ஹாப் இசையின் தோற்றத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியதில் இந்தக்குழுவுக்கு முக்கியமான பங்குண்டு. ஐரோப்பாவில் மிகவும் பிரபலமடைந்த இவர்களின் இசைப்பாடல்கள், 1980 களில், ஹிப்-ஹாப் இசையின் வளர்ச்சியுடன் பெரும் புகழ் பெற்றது, இனவாதிகள் முதல் அமெரிக்க அரசாங்கம் முதல் முதலாளித்துவம் வரை அனைத்திற்கும் எதிரான தாக்குதல்களை தங்களது இசையாலும் உணர்வு பூர்வமான சொற்களாலும் தொடுக்கிறார்கள்.

இந்தத் துவக்கக் குழுவில் முக்கியமானவர்களாக, ஜலாலுதீன் மன்சூர் நூரிதீன், அபியோடூன் ஒயோவோல், உமர் பின் ஹாசன் ஆகிய மூவரை இங்கு குறிப்பிடலாம். இதில், ராப் இசையின் தந்தை என்று போற்றப்படும் இறந்துபோன ஜலாலுதீன் பற்றிய அறிமுகம் மிகவும் சுவாரஷ்யமானது.

சிறுவயதிலிருந்தே இசையில் மிகுந்த நாட்டம் கொண்ட ஜலாலுதீன், தனது இளமைப்பருவத்தில் செய்த ஒரு குற்றச் செயலுக்காக சிறைத்தணடனை பெற்றார். அத்தண்டனையிலிருந்து விலக்குப் பெற,
அமெரிக்க இராணுவத்தில் சேர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டார், அங்கு அவர் ஒரு பாராசூட் வீரராகப் பயிற்சி பெற்றார், ஆனால் அமெரிக்கக் கொடிக்கு வணக்கம் செலுத்த மறுத்ததற்காக மீண்டும் இராணுவச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதுமட்டுமல்லாது, வியட்நாமை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளில் பங்கெடுக்க முடியாது என்று மறுத்து, வியட்நாம் போரில் சண்டையிடுவதற்கு பதிலாக அதற்குரிய ராணுவத்தண்டனை பெற்று, சிறைக்குச் செல்ல தேர்வு செய்தார். சிறையில் கடைசிக் கவிஞர்கள் குழு மேலும் வலுவாக உருவானது.

இப்படியாக, கடைசிக் கவிஞர்கள் அமைப்பு என்பது, பல சிவில் உரிமைகள் இயக்கக் கவிஞர்களின் கலவையாகும், அவர்கள் தங்கள் இசைத் திறன்களை தங்கள் அரசியல் சொற்பொழிவுடன் இணைத்து, ஒரு இசை தளத்தை உருவாக்கும் பொருட்டு, அந்தக் கொந்தளிப்பான சகாப்தத்தில் கறுப்பின மக்களின் துயரங்களுக்குக் குரல் கொடுத்தனர்.

கடைசிக் கவிஞர்களின் பாடல்களில் மிக முக்கியமான பாடலாக ” கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள் ” (Understand What Black Is) என்னும் இந்தப்பாடலைக் கருதலாம். ரோட்டர்டாம் சர்வதேசக் கவிதை விழாவில், ஒயோவோல் இதைத்தான் பாடினார். உமர், “She Is” என்னும் பாடலைப் பாடினார்.

“நீங்கள் என்னைக் கொல்ல முடியாது” என்று முழங்கும் “How Many Bullets”, “மிகச்சிறந்த ஆடையணிகளை நாங்கள் அணிந்திருந்தோம், வெள்ளைக்காரன் வருவதற்கு முன்..” என்று துயருறும் “Before the White Man Came”,
“நிலத்தின் பூர்வீக மக்களைக் கொன்று உடைமைகளைத் திருடும் அமெரிக்கா ஒரு பயங்கரவாதி..” என்று ஆவேசம் கொள்ளும் “Rain Of Terror” எனது கனவுகள் கொடுங்கனவுகளாக மாறிவிட்டன என்று கதறும் “This is Madness” ஜாலியா என்கிற பண்டைய ஆப்ரிக்க பறையை பெண்ணாக உருவகித்து “அவள் எங்கள் கலை, அவள் எங்கள் சுதந்திரம்..” என்று உணர்ச்சிபூர்வமாகப் பாடும் “She is” போன்ற இவர்களின் புகழ் பெற்ற கவிதைப் பாடல்கள், இசைஆல்பங்களாக உலகம் முழுக்கத் தீயாய் கனல்கின்றன, இன்றும்…

 

கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்

கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்
அனைத்திலிருந்தும் உருவாகிறது அதன் ஆதார சுருதி
நட்சத்திரங்களைக் காக்கும் பாதுகாப்புப் போர்வை

கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்
அது ஒரு நிறம் அல்ல
அனைத்து வண்ணங்களின் அடிப்படை
அது ஒரு மேனி வனப்பு அல்ல
அனைத்து மனித மேனிகளில் படிந்துள்ள வனப்புகளின் பிரதிபலிப்பு
மேலும், அக்கறுப்புத் தன்மையிலிருந்து
கட்டுக்கடங்கா உணர்ச்சிகள் ஒரு நதி போல பாய்கின்றன
அவ்வுணர்வுகள் உண்மையைச் சொல்கின்றன
பாடலும் நடனமுமாக
உங்களைக் குதூகலிக்க வைக்கின்றன

கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் சுவாசிக்கும் மூச்சு
உங்கள் புருவத்தில் துளிர்க்கும் வியர்வை
உங்கள் தலைமீது தொங்கும் உலகை சமநிலைப்படுத்தும்
சந்தோசமும் கண்ணீரும்
நம்பிக்கை என்னும் ஈரப் பசையாக
அது நம் அனைவரையும் ஒன்றாக வைத்திருக்கிறது
இது உங்கள் கறுப்புத்தன்மை
திகில் கதை அல்ல
உடல்நிலத்தில் சுழலும்
இழந்த ஆன்மாக்களின் நீரோட்டம்
கறுப்பு என்பது காதல்
சூரியனை நோக்கிச் செல்லும் பாதையின் ஒளிர்ச்சி
அல்லது சந்திரனின் மார்பில் வருடும் கிளர்ச்சி

கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்
உங்களால் மட்டுமே விளைவிக்கும் சக்தி
தூக்கத்திலிருந்து அதை உலுக்கும் மின்சாரமாகவும்
உலகின் மீது செருகப்பட்டுள்ள மின்னேற்றியாகவும்
செயல்படும் வலுவான ஒரு சக்தி
கருப்பு என்பது மனிதநேயம்
அந்த அழகான இசைத்தந்தி
பன்னிரண்டு சரம் கொண்ட கிதாரில்
உங்களைப் புன்னகைக்கச் செய்கிறது
அது ஆறுதலளிக்கிறது,
கொந்தளிப்பான காலங்களில்
அது உணவு கொடுக்கிறது,
சாப்பிட எதுவும் கிட்டாதபோது
அது ஒரு வாழ்விடம் தருகிறது,
வசிக்க இடம் இல்லாதபோது
கருப்பு என்பது மனிதநேயம்
நம்பிக்கையை மேல்முகமாய் நட்டு வைக்கிறது,
தளர்வுறாமல்
ஏனெனில் கருப்புக்குத் தெரியும்
நெருப்பால் சோதிக்கப்பட்டதும்
நீரால் கழுவப்பட்டதுமான வாழ்வியலை
கருப்பு என்பது தணல்
கருப்பு என்பது நளிர்
கருப்பு என்பது
ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாத விவேகம்

கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்
கருப்பு ஒரு நாயகன், கொடியவன் அல்ல
கருப்பு என்பது முத்தத்தில் பொதியப்பட்ட சாராம்சம்
கருப்பு என்பது கல்
நாங்கள் எங்கள் கனவுகளை
அந்தியின் மூடுபனி நிழலில் உருவாக்குகிறோம்
யதார்த்தத்தை விடப் பெரியது அது
இரவில் உறையும்
சூரியனைக் குளிர்விக்க விடுங்கள்
மேலும் நட்சத்திரங்கள் நடனமாடுவதைப் பாருங்கள்
எங்கள் ஆன்மாக்களின் இசைலயத்திற்கேற்ற தாளகதியில்.

***

வெகு மக்கள் கவிதை நிகழ்வு : 3
“எங்கள் கனவுகள் மான்களின் இதயங்களிலிருந்து உருவாக்கப்பட்டவை..”

சமீபத்தில் அமெரிக்க அரசவைக்கவிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் மஸ்கோஜியன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த கவிஞர் ஜாய் ஹார்ஜோ! இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான அமெரிக்க நவீன இலக்கியத்தின் மறுமலர்ச்சி அலையில் அவர் ஒரு முக்கியமான கவிஞராக உள்ளார். அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த இவர், கவிஞர் மட்டுமல்லாது, சாக்ஸபோன் இசைக்கலைஞரும் ஆவார். சாக்ஸபோன் இசையுடன் தனது கவிதைப்பாடல்களை பாடியபடி நிகழும் இசை நிகழ்வு உலகம் முழுக்க பிரசித்தம் பெற்றது.

அமெரிக்கா தனது பழங்குடிகளை அழித்தொழித்த துயரங்களை அவரது இசை உலகமெங்கும் ஏந்திச் சென்றது. “ எனக்கு ஒரு மகத்தான பொறுப்பு இருக்கிறது என்று உணர்கிறேன்: கடந்த கால மற்றும் வருங்கால சந்ததியினருக்கு, எனது சொந்த நாட்டிற்கு, நான் தொடும் எல்லா இடங்களுக்கும், எல்லாக் குரல்களுக்கும், எல்லாப் பெண்களுக்கும், மற்றும் அனைத்து தொடக்கங்களுக்கும் முடிவுகளுக்கும் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு. அது என் பிறப்புக்கான அர்த்தம்.” என்கிறார்.

நவீன அமெரிக்க சமுதாயத்தில் பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், நுண்ணரசியல், பாரம்பரிய நினைவுகள் மற்றும் கவிதையின் உருமாறும் அம்சங்கள் ஆகியவற்றிலும் ஹார்ஜோவின் இசைப்பாடல்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளன. வெகுமக்கள் பண்பாடாகத் திகழும் இசை நிகழ்வுகளை மிகவும் விரும்பிப் போற்றுகிறார்.

ப்ளூஸ் மற்றும் ஜாஸ் இசைக்கூறுகளில் எமது மஸ்கோஜியன் பழங்குடி மக்களின் இசையை எழுதுகிறேன். நாங்கள் கதையிலிருந்து மறைந்துவிட்டோம், ஆனால் எங்கள் பங்களிப்புகள் இல்லாமல் ப்ளூஸ் அல்லது ஜாஸ் இருக்காது. எங்கள் பழங்குடி இசையின் தாளவகைகள், எமது வாழ்வியலின் தீராத கேள்விகளையும் அதன் ஆனந்தப்பாடுகளையும் கொண்டுள்ளன..” என்கிறார்.

“எங்கள் கனவுகள் மான்களின் இதயங்களிலிருந்து உருவாக்கப்பட்டவை, வட்டமிடும் சிறுத்தையின் எரியும் கண். அவற்றை மொழிபெயர்ப்பது அலபாமாவில் இறந்தவர்களின் ஆன்மா, பேரக்குழந்தைகளின் அழிவு, எங்கள் பூர்வ கதைகளின் அழித்தொழிப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதாகும். வேட்டையாடப்பட்ட ஒரு போர்வீரனின் பழிவாங்கலுடன் நாங்கள் எங்கள் கனவுகளைத் தேடுகிறோம். இது எங்கள் இரத்தத்தில் உள்ளது…” என்று பிரகடனப்படுத்துகிறார் ஜாய் ஹார்ஜோ.

அவரது புகழ்பெற்ற ஆல்பமான “Wings of Night Sky, Wings of Morning” இசைப்பாடலில்,

“ஓ சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்,
கடவுளின் வீட்டின் உள்ளே இருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் எங்கள் மற்ற உறவினர்கள்
அடுத்த நூற்றாண்டில் ஏறும்போது எங்களுடன் கைகோர்க்கிறார்கள்
எல்லையற்ற கதைகளுடன்
அற்புதங்களின் நிலமாக விளங்கும் இந்த கனவுகளின் நிலத்தில்
எங்கள் பாடலை நாங்கள் பாடுகிறோம்,
எங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட எந்த தொடக்கமும் முடிவும் இல்லை.”
என்று முழங்குகிறார்.

கடந்த 2019 ஜூன் மாதத்தில் Academy of American Poets அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கவிதை வாசிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு தனது புதிய கவிதையான “An American Sunrise” கவிதையை வாசித்தார். கூடியிருந்த கவிதைவாசகர்கள், வெகுமக்கள் பலத்த கரகோசத்துடன் வரவேற்றனர்.
உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தக்கவிதையின் இசை ஆல்பத்தில் அவரது சாக்ஸபோன் துயரத்துடன் இழையுறுகிறது
“நாற்பது ஆண்டுகள் கடந்த பிறகும் எங்களுக்கு கிடைக்காத நீதியை நாங்கள் இன்னும் வேண்டி நிற்கிறோம்…”

 

நினைவில் கொள்ளுங்கள்.
– ஜாய் ஹார்ஜோ

நீங்கள் பிறந்த வானத்தை நினைவில் கொள்ளுங்கள்,
நட்சத்திரங்களின் ஒவ்வொரு கதையையும் அறிந்து கொள்ளுங்கள்.
சந்திரனை நினைவில் வையுங்கள், அவள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
விடியற்காலையில் தோன்றும் சூரிய ஜனனத்தை நினைவில் வையுங்கள், அதுதான்
காலத்தின் வலுவான புள்ளி. சூரிய அஸ்தமனத்தையும் நினைவில் கொள்ளுங்கள்
மற்றும், இரவு கொடுக்கும் நினைவுகளையும்.

உங்கள் பிறப்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் தாய் எப்படிப் போராடினார்
உங்களுக்கு வடிவம் மற்றும் சுவாசம் கொடுக்க.
அவளுடைய வாழ்க்கையின் ஆதாரம் நீங்கள். அவளுடைய தாய்க்கும், அவளுக்கும்.
உங்கள் தந்தையை நினைவில் கொள்ளுங்கள். அவரும் உங்கள் வாழ்க்கை.
இந்த பூமிக்கு நீங்கள் யாருடைய தோலாக இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்:
சிவப்பு பூமி, கருப்பு பூமி, மஞ்சள் பூமி, வெள்ளை பூமி
பழுப்பு பூமி, நாங்கள் பூமி.

தாவரங்கள், மரங்கள், விலங்கு வாழ்க்கை அனைத்தையும் நினைவில் கொள்ளுங்கள்
பழங்குடியினர், அவர்களது குடும்பங்கள், அவர்களின் வரலாறுகளையும். அவர்களிடம் பேசுங்கள்,
அவர்களை கவனியுங்கள். அவை உயிருள்ள கவிதைகள்.
காற்றை நினைவில் கொள்ளுங்கள். அவள் குரலை நினைவில் கொள்ளுங்கள். அவளுக்குத் தெரியும்
இந்த பிரபஞ்சத்தின் தோற்றம்.

நீங்கள் எல்லோரும் எல்லா வித மக்களும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் இந்த பிரபஞ்சத்தையும் மற்றும் இந்த பிரபஞ்சமும் நீங்கள் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
எல்லாம் இந்த அசைவியக்கத்தில் உள்ளது, வளர்ந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள் மொழி இதிலிருந்து வருகிறது.
மேலும், வாழ்க்கை என்பது இந்த நடன மொழி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள்.

*********************

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page