• Thu. Nov 23rd, 2023

புல் – கார்ல் சாண்ட்பர்க்

ByGouthama Siddarthan

May 14, 2023

புல்
– கார்ல் சாண்ட்பர்க்

ஆஸ்டர்லிட்ஸிலும் வாட்டர்லூவிலும் உடல்களைக் குவித்து வையுங்கள்
திணித்த அக்குவியல்களுக்கு அடியில் துளிரும் என் தழல்கள்
எல்லாவற்றையும் மறைக்கிறது – நான் புல்

கெட்டிஸ்பர்க்கில் அவற்றை அம்பாரமாக குவியுங்கள்
இப்ரஸிலும் வெர்டனிலும் இன்னும் அதிகமாக குமியுங்கள்
திணிப்புகளை மறைத்து நீள்கின்றன இணுக்குகள்.

காலம், ஆண்டுகளாய் நகர,
கால்களில் குத்தும் புற்களைக் காட்டி பயணிகள் வழிகாட்டியிடம் கேட்கிறார்கள்:
இது என்ன இடம்?
நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம்?

நான் புல்.
ஊசி முனைகளாக நீள்கின்றன என் தழல்கள்.

தமிழில் : கௌதம சித்தார்த்தன்   

*****************

போருக்கு எதிரான உலகப்புகழ்பெற்ற இக்கவிதை, இரண்டாம் உலகப் போரில் வதை முகாம்கள் செயல்பட்ட விதத்தையும்,  வரலாற்றை வாழ்க்கையின் புதிய அடுக்குகளுக்கு அடியில் துளிர்க்கும் தன்மையையும் முன்வைக்கிறது.

கவிதையின் கால நீட்சி கொண்ட நீரோட்டத்தினூடே ஒரு இடைவெட்டாக ஒரு காட்சியை கொண்டு வருகிறார் கவிஞர், “இது என்ன இடம்?” மற்றும் “நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம்?” இந்த கேள்விகள் ஒவ்வொரு மனிதனும் தன் கால்கள் வேர் ஊன்றியுள்ள வரலாற்றை நினைவில் கொள்வது மிக அவசியம் என்பதைப் புலப்படுத்துகின்றன.

மிகச் சிறந்த போர் கவிதைகளாகக் குறிக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் இக்கவிதை, வில்லியம் பட்லர் யீட்ஸ்,  டபிள்யூ.எச். ஆடன், அமி லோவல்,  லார்ட் ஆல்ஃபிரட் டென்னிசன் போன்ற கவி ஆளுமைகளின் வரிசையில் இடம் பெறுகிறது.

புகழ்பெற்ற அமெரிக்க கவிஞரான கார்ல் சாண்ட்பர்க் ( 1878 –  1967), மூன்றுமுறை புலிட்சர் விருதுகளை வென்றவர். அவரது வாழ்நாளில் “சமகால இலக்கியத்தில் ஒரு முக்கிய நபராக” பரவலாகக் கருதப்பட்டார், அமெரிக்க மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டதற்கு தலையாய இரண்டு காரணங்கள் : ஒன்று அவரது கவிதைகளுக்காக. மற்றது, ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியதற்காகவும்.

ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தனது புகழ்பெற்ற திரைப்படமான “ஈ.டி.” குறித்து, இது சாண்ட்பர்க், எர்னஸ்ட் ஹெமிங்வே மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரின் கலவையை அடிப்படையாகக் கொண்ட முகம் என்று கூறினார் என்பது உபரித் தகவல்.

கவிதையில் குறிப்பிடும் இடங்கள் :

ஆஸ்டர்லிட்ஸ்: நெப்போலியன் நடத்திய போர்களின் முக்கியமான போர்க்களம், டிசம்பர் 2, 1805 இல் நடந்தது. கிட்டத்தட்ட 25,000 ஆண்கள் இறந்தனர். நெப்போலியன் போனபார்ட் மற்றும் 70,000 வீரர்களைக் கொண்ட அவரது இராணுவம் ரஷ்யர்கள் மற்றும் ஆஸ்திரியர்களின் படையை 90,000 எண்ணிக்கையில் தோற்கடித்தது. ஆஸ்டர்லிட்ஸ் தற்போதைய செக் குடியரசில் உள்ளது.

வாட்டர்லூ: நெப்போலியன் போர்களின் இறுதிப் போர், பெல்ஜியத்தின் வாட்டர்லூ அருகே 1815 ஜூன் 18 அன்று நடந்தது, இதன் விளைவாக 60,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

கெட்டிஸ்பர்க்:  1863 ஜூலை 1-3 அன்று பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பர்க் என்ற சிறிய நகரத்திற்கு அருகே நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரின் முக்கிய போர், இதன் விளைவாக 45,000 முதல் 50,000 வரை உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இப்ரஸ்: பெல்ஜியத்தில் உள்ள நகரத்தில் நடந்த மூன்று பெரிய உலகப் போர்கள். இதில், 850,000 க்கும் மேற்பட்ட ஜெர்மன் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

****************

Grass
– CARL SANDBURG

Pile the bodies high at Austerlitz and Waterloo.
Shovel them under and let me work—
I am the grass; I cover all.

And pile them high at Gettysburg
And pile them high at Ypres and Verdun.
Shovel them under and let me work.
Two years, ten years, and passengers ask the conductor:
What place is this?
Where are we now?

I am the grass.
Let me work.

************

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page