• Wed. Nov 29th, 2023

இருட்டை உடைத்து வெளிச்சமாய் ஒளிர்ந்த ஒரு கவிதை!

ByGouthama Siddarthan

May 14, 2023
  • கௌதம சித்தார்த்தன்

 

 

1980 கள். அப்பொழுது என் பெயர் ராகுலகிருஷ்ண குமாரன். ராகுல சாங்கிருத்தியாயன் நூல்களை படித்து அவர் மீதான அபிமானத்தில் வைத்துக் கொண்ட பெயர். என் சிறு கிராமத்தில் “விடியல்” என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தேன். அருகிலிருந்த சிறு நகரமான கவுந்தப்பாடி நூலகத்தில் போடுவேன். அங்கு ஒரு சிறு வாசகர் வட்டம் சேர்ந்தது.

இந்த நீட்சியில், சித்தோட்டிலிருந்த கவிஞர் தவமணி வசீகரனின் நட்பு கிடைத்தது. அது மெல்ல குரு நட்பாக பரிணாமம் பெற்றது. இலக்கியம் சார்ந்த பல நூல்களையும் சிற்றிதழ்களையும் அறிமுகப்படுத்தினார். அவைகளையெல்லாம் படித்துவிட்டு தினமும் அவருடன் விவாதிப்பேன். அந்தக்கட்டத்தில், அவரது குரு நட்பு என் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக இருந்தது. தேவிபாரதியை அறிமுகப்படுத்தினார். தேவிபாரதியின் நட்பும் மிக முக்கியமானது. அவர் மன ஓசை இதழை அறிமுகப்படுத்தினார். மக்கள் கலை இலக்கிய கழகம் அறிமுகமானது.

அந்தக்கட்டத்தில் நான் கவிதைகள்தான் எழுதிக்கொண்டிருந்தேன். கவிதைகளைத் தேடித்தேடிப் படிப்பேன். மனஓசை கவிதைகள் குறித்து என் அதிருப்தியை தேவிபாரதியிடம் வெளியிட்டேன். அந்தக்காலகட்டத்தில், வெளிவந்துகொண்டிருந்த முற்போக்குக் கவிதைகளின் வெற்றுக் கோஷங்கள் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. இது குறித்து வசீகரன், தேவிபாரதி ஆகியோருடன் பெரும் விவாதம் செய்திருக்கிறேன். அப்படியெனில், “நீங்கள் ஒரு கவிதையெழுதிக் காட்டுங்கள்” என்றார் வசீகரன்.

அப்பொழுது எழுதப்பட்ட கவிதைதான் “நன்றி”!

கவிதையைப் படித்துவிட்டு இருவரும் பாராட்டினார்கள். “இதை உடனே மனஓசைக்கு அனுப்பி வையுங்கள்” என்று உற்சாகப்படுத்தினார் தேவிபாரதி. மனஓசைக்கு அனுப்பி வைத்தேன். இப்போதெல்லாம் அனுப்பிய 10 வது நிமிடம் இணைய இதழில் வெளிவந்துவிடும் சூழல் அப்போது இல்லை. ஒரு படைப்பை சிற்றிதழுக்கு அனுப்பிவிட்டு பல வருஷங்கள் காத்திருக்கவேண்டும்! நானும் 3 மாதங்கள் காத்திருந்தேன். பிரசுரம் ஆகவில்லை.

அதன்பிறகு, மதுரையிலிருந்து வெளிவந்த ஒரு இதழுக்கு, மேலும் சில கவிதைகளையும், ஒரு சிறுகதையையும் சேர்த்து அனுப்பினேன். கடவுளே! என்ன ஒரு அற்புதம்! அனுப்பிய அடுத்த மாதத்தில், என் 4 கவிதைகளும், ஒரு சிறுகதையும், ஆசிரியருக்கு எழுதிய என் கவரிங் லெட்டரும் ஒரே இதழில் வெளிவந்தது. அதுவும் எப்படி, “ராகுல கிருஷ்ண குமாரன் சிறப்பிதழ்!” என்று அட்டையில் பெரிய எழுத்தில் போட்டு! எனக்கு ஹார்ட் அட்டாக் வராததுதான் மிச்சம்! கற்பனை செய்து பாருங்கள் : 1980 களில் அட்டையில் எந்த எழுத்தாளரின் பெயரும் வெளியிடமாட்டார்கள். ஏன் இப்பொழுதே கூட ஓரிரு இதழ்களைத் தவிற எவருமே அட்டையில் பெயர் வெளியிடுவதில்லையே, மேலும் “சிறப்பிதழ்!” என்பது கற்பனைக்கப்பாற்பட்டது.

சைக்கிளை எடுத்துக் கொண்டு, என் கிராமத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வசீகரன் மற்றும் தேவிபாரதியைப் பார்க்கப் போனேன். வசீகரன் கட்டி அணைத்துப் பாராட்டினார். தேவி பாரதியும் பாராட்டினார்.
அந்த வாரத்தில், பா.செயப்பிரகாசம் ஈரோடு வந்திருந்தார். அவரைக்காணப் போயிருந்தேன். “உங்கள் கவிதையை வெளியிட எடுத்து வைத்திருந்தோம்.. அதற்குள் வேறு இதழில் வெளிவந்துவிட்டதால் போடமுடியவில்லை..” என்று வருத்தப்பட்டார் அவர்.

அதன் பிறகு, நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். என் கவிதை வந்திருந்த இதழ், “V.O. எனப்படும் வாலென்ட்ரி ஆர்கனைசேஷன் அமைப்பினரால் நடத்தப்படுவது” என்று. தற்போது என் ஜி ஓ குழுக்கள் என்று சொல்லப்படும், இந்த வாலென்ட்ரி ஆர்கனைசேஷன் குழுக்கள் குறித்து அப்போது கடுமையான விமர்சனம் இருந்து வந்தது. வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கும் தேசத் துரோக கும்பல் என்று நான் சுருக்கிச் சொல்கிறேன். அந்தக்கட்டத்தில், இந்த அமைப்புகள் பற்றி மிக மோசமான அவப்பெயரும், அவமானகரமான அடையாளமும் நிலவிவந்தது. தமிழ் சினிமாக்களின் பாதிப்பில் கட்டமமைந்த, ஒரு எளிய கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்த எனக்கு பகீரென்றது. இது குறித்து எனக்கு ஒரு ஆழமான புரிதல் இல்லாவிட்டாலும், இவர்களோடு சேர்ந்தால், வரலாற்றில் நம் பெயர் கறைபடிந்துவிடும் என்று பெரிதும் கலக்கமுற்றேன்.

இந்த இடத்தில் சற்றே விரிவாகப் பார்க்கலாம் :

1970களில், இதுபோன்ற அமைப்புகளுக்குப் பெயர் ‘வாலெண்டிர் ஆர்கனைசேஷன்’. அந்தக்கட்டத்தில், முற்போக்குத்தோழர்கள் முழுக்க முழுக்க இந்தத் தன்னார்வக் குழுக்களைப் பற்றித்தான் பேசினார்கள். ‘அவர்கள் புரட்சியை மழுங்கடிப்பவர்களென்றும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும்’ அறிவுறுத்தப்பட்டது. புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவர்களிடம், அதே புரட்சிகரமான கருத்துக்களைத் திரித்துப்பேசி, புரட்சிக்கு விரோதமாகச் செயல்படும் போக்கை உருவாக்கி விடுவார்கள் என்று விளக்கினார்கள். ‘நம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள்’ என்கிற ரீதியில் அது பொதுவெளியில் பரவிற்று.

1970 – 80 களில் இந்தத் தன்னார்வக் குழுக்கள் பெரியளவில் செயல்பட்டன. இதில் செயல்பட்டவர்கள் அனைவரும் சமூகத்தில் புகழ் பெற்றவர்கள் அல்லர். எந்தத்துறையிலும் அடையாளமில்லாதவர்கள்.
இந்தியாவில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி நடப்பதற்கான சூழலைச் சிதைத்து அமெரிக்காவின் காலனியக் கொள்கைகளுக்கேற்ப மார்க்சீயத்தைத் திரிப்பதும், மார்க்சிய லெனினியப் போக்குகளைக் கொச்சைப்படுத்தி முடக்குவதுமான வேலையை, அமெரிக்கநிதி ஆதாரம் பெற்று இந்தியாவில் செய்து கொண்டிருப்பவர்கள் இவர்கள் என்று இடது சாரி அமைப்புகள் பிரச்சாரம் செய்து வந்தன.

தன்னார்வக் குழுக்களைப் பற்றிய தோழர்களின் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் விளைவாக, இவர்கள் மீது ஒரு படிமம் படிய ஆரம்பித்தது. அதைப் போக்கும் விதமாக,நாளடைவில் ‘வாலெண்டிர் ஆர்கனைசேஷன்’ என்ற பெயர் ‘என்.ஜி.ஓ’ என மாற்றம் பெறலாயிற்று. அரசு சாரா ஊழியர்களாகக் களம் இறங்கினர்.

தற்கால காலட்டத்தில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று ஆகிப்போனது. இதில் அவர்கள் பெறும் அந்நிய நிதி என்ன காரியத்திற்காக வாங்குகிறார்கள், எந்த அமைப்பிலிருந்து வாங்குகிறார்கள் என்று எல்லாவற்றுக்கும் ஒரு காரண காரியத்தை முன்வைத்து நியாப்படுத்துகிறார்கள், விவாதிக்கிறார்கள். அப்படிப் பேசுவது வரட்டுத்தனமான அரசியல் நிலைபாடுகள் என்று புகழ்பெற்ற இலக்கிய படைப்பாளிகள், மாற்றுச் சிந்தனையாளர்கள், மாற்றுச் செயல்பாட்டாளர்கள், நாட்டுப்புற ஆய்வாளர்கள், நூல் பதிப்பாளர்கள் என்று ஒரு பெரும் அணியினர் களம் இறங்கியதன் விளைவு, தற்போது, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று நீர்த்துப் போனது.

பின்நவீனத்துவ சிந்தனை போல இந்த ‘என்.ஜி.ஓ’ சிந்தனை குறித்தும் யாருக்கும் பூரணமாக, முடிந்த முடிவாக இதுதான் என்று சொல்லத் தெரியவில்லை. அவரவர் புரிந்து கொண்ட வகையில், பேசியும் செயல்பட்டும் வருகின்றனர்.
சரி, நாம் இதன் ஆதிமூலத்தை அலசுவதை விடுத்து, இந்த நினைவுகளில் ஏறி மீண்டும் கவிதைக்கு வருவோம் :

என் கவிதை வந்த அந்த இதழை (5பிரதிகள் அனுப்பியிருந்தார்கள்) யாருக்கும் காட்டாது, ரகசியமாக ஒளித்து வைத்தேன். தீ வைத்து எரிக்கவோ, கிழிக்கவோ மனம் ஒப்பவில்லை. என் நெருங்கிய நண்பர்கள், என் எழுத்து வாசகர்கள், எழுத்தாளர்கள் என்று எவரிடமும் காட்டாமல் ஏழுமலை தாண்டி, ஏழுகடல் தாண்டி, ஒரு பஞ்சவர்ணக் கிளியின் வயிற்றுக்குள் ஒளித்து வைத்துவிட்டேன்.

அதன் பிறகு, அந்தப் பெயருக்கே களங்கம் நிகழ்ந்து விட்டதாக எண்ணி, அந்தப்பெயரைத் தலைமுழுகி, கௌதம சித்தார்த்தன் ஆனேன்.

இடையில், தொலைபேசிகள் இல்லாத காலகட்டமான அன்றைக்கு, என்னைத்தேடி, அந்த இதழின் ஆசிரியர் வீட்டிற்கு வந்ததும், தமிழ்ப் பண்பாட்டின் விருந்தோம்பலுக்கு எதிராக அவரை நாசூக்காகத் திருப்பி அனுப்பியதுமான நிகழ்வுகளும் இந்த வரலாற்றுப் பதிவின் ஓரமாக நடந்தேறின.

**********************

இந்த வரலாறு நடந்து இப்பொழுது 40 ஆண்டுகள் ஓடிவிட்டன.

நான் தற்போது சர்வதேச எழுத்தாளராக பரிணாமம் பெற்று வருகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என் கவிதைகள் உலகின் பிரதானமான 10 மொழிகளில் வெளிவந்திருக்கின்றன! வெளிவந்து கொண்டிருக்கின்றன!

தற்போது, நம் அண்டைநாடான ரஷ்ய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் அடைந்துள்ள பெலாரஸில் பெரும் கலவரங்கள், மக்கள் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. அலெக்சாண்டர் லுகாஷென்கோ 1994 முதல் பெலாரஸ் நாட்டின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார். நாட்டின் மோசமான மனித உரிமைகள் மற்றும் லுகாஷென்கோவின் சர்வாதிகார பாணி காரணமாக பெலாரஸை சில மேற்கத்திய ஊடகவியலாளர்கள் “ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரம்” என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில்,

ஆகஸ்ட் 9 அன்று பெலாரஸின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்து வரும் அவரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பெலாரஸியர்கள், மின்ஸ்கின் வீதிகளில் இறங்கி, இந்த வாக்களிப்பு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த எதிர்ப்பில் ஈடுபட்ட பெரும்பாலான மக்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் போலிஸ் தடியடிகள் நிகழ்ந்தன. இதையொட்டி ஆகஸ்ட் 13 அன்று, பெலாரஸிய கவிஞர் டிமிட்ரி ஸ்ட்ரோட்சேவ் முகநூலில் ஒரு கவிதையை வெளியிட்டார். அடுத்த 12 மணி நேரத்தில், அவரை கைது செய்து 13 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கியது பெலாரஸ் அரசு!

உலகில் உள்ள அனைத்து முற்போக்கு எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் கண்டனக் குரல் எழுப்பினார்கள். நானும் அவரது கவிதையை தமிழாக்கம் செய்து என் கண்டனத்தை பதிவு செய்தேன்.

தற்போது பெலாரஸில் மிகக் கொடூரமான அடக்குமுறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கவிஞர்கள், எழுத்தாளர்கள், சோசியல் ஆக்டிவிஸ்ட் அனைவரையும் கடுமையாக ஒடுக்கி கொண்டிருக்கிறது அரசாங்கம். இந்த அடக்குமுறைகளுக்கு அங்குள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் கண்டனக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தொடர்ச்சியில், சட்டென 40 வருடங்களுக்கு முன்னால் நான் எழுதிய அந்தக் கவிதை நினைவுக்கு வந்தது. தற்போதைய பெலாரஸ் சூழலுக்கு உகந்த கவிதையாக அது தெரிந்தது, பெலாரஸ் சூழல் மட்டுமல்ல, உலகில் எங்கெங்கெல்லாம், எளிய மக்கள் அடக்குமுறைகளுக்கும், படுகொலைகளுக்கும் ஆதிக்க அரசுகளால் ஒடுக்கப்படுதல்களுக்கும் உள்ளாகிறார்களோ, அங்கெல்லாம் ஒலிக்கும் மஹ்முத் தார்விஸின் கவிதைக்கு ஒப்பானது அந்தக்கவிதை!

அந்தக் கவிதையை உடனே தேடி எடுக்க மனம் பரபரத்தது. ஆனால், அவசியமில்லை. என் உடலின் குருதி நாளங்களில் உடையாத குமிழிகளாக மிதந்து கொண்டிருக்கின்றன அந்தக் கவிதையின் சொற்கள். அதை எடுத்து என் மொழிபெயர்ப்பாளர் மஹாரதிக்கு அனுப்பி வைத்தேன்! அவர் பெரு விருப்புடன் உடனே அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அனுப்பினார்.

அதை டிமிட்ரிக்கு அனுப்பினேன். “பிரமாதமான கவிதை” என்று பாராட்டியவர், “இது உடனே பல மொழிகளில் வெளிவரவேண்டும், அதுவும், பெலாரஸ் சார்ந்த சுற்றியுள்ள நாடுகளின் மொழிகளில் வெளிவருவதுதான் அவசியம்” என்றார்.

அடுத்த 24 மணிநேரத்தில் அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டே இருந்தன.

ஆம் உலகின் 10 மொழிகளில் அந்தக் கவிதை மொழியாக்கம் பெற்று பரபரப்பாக பேசப்படுகிறது. பெலாரஸ், ரஷ்யன், போலிஷ், உக்ரேனியன், ஜெர்மன், செர்பியன், உஸ்பெக்கிஸ்தான், கிர்கிஸ்தான், ஆங்கிலம், தமிழ்.
இதுதான், ஏழுமலை தாண்டி, ஏழுகடல் தாண்டி, பஞ்சவர்ணக் கிளியின் வயிற்றுக்குள் ஒளித்து வைத்திருந்த சாகாவரம் பெற்ற கவிதையின் விஸ்வரூபம்!

*******************

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த அந்தக் கவிதை :

“பெலாரஸிய ஆன்மாவோடு இணைந்த ஒரு அண்டை வீட்டுச் சகோதரனின் குரல்!”

நன்றி!
– கௌதம சித்தார்த்தன்

எங்களை அங்குசத்தால் குத்தினீர்
ஈய ரவைகளால் இருதயத்தைத் துளைத்தீர்
உயர்ந்த முஷ்டிகளுக்கு இரும்புக் காப்பு அணிவித்தீர்
கராக்கிருகத்தில் காவு கொடுத்தீர்
நன்றி!

அங்குசத்தால் குத்தியதால்தான் ஆவேசத்துடன் உயர்ந்தெழுந்தோம்
ஈய ரவைகளால் துளைத்ததால்தான் இருதயத்தை நிமிர்த்தி நின்றோம்
இரும்புக்காப்பு பூட்டியதால்தான் எழுச்சியுடன் புடைத்தெழுந்தன முஷ்டிகள்
கருத்த சிறையில் அறைந்ததால்தான் இருட்டை உடைத்து வெளிச்சமானோம்
மிக்க நன்றி!

**************************

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page