உன்னதம் நடத்தும் மொழிபெயர்ப்பு உரையாடல்கள் – 2
நிகழ்வில் கலந்து கொண்டு இணையவழி உரையாடலை நிகழ்த்த அன்புடன் இசைவு தந்துள்ளார்,
ஹங்கேரிய கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான கபோர் க்யூகிக்ஸ் !
1950 களின் இறுதி மற்றும் 60 களின் துவக்கத்தில், போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் பாதிப்புகள், அரசியல் சூழல்கள், சமூகச் சிதைவுகள் போன்றவற்றின் தாக்கத்தினால், உலகம் முழுக்க கலைஞர்கள் கண்டனக் குரல் எழுப்பினார்கள். அப்பொழுது போர் எதிர்ப்பு இயக்கமாக, எதிர்க்கலாச்சார வடிவமாக Beat Generation என்ற பெயரில் இலக்கிய எதிர் கலாச்சார இயக்கம் உருவானது அவர்களில் முக்கியமான மூவர் ஆலன் கின்ஸ்பெர்க், ழாக் கியூரேக், வில்லியம் பர்ரோஸ். முறையே, Howl (1956), On the Road (1957) Naked Lunch (1959), ஆகிய மூன்று நூல்களும் பீட் இலக்கியத்தின் சிறந்த உதாரணங்கள். இந்த பீட் என்ற சொல்லை (தெருக்குரல் என்று பொருள் படும்) உருவாக்கிய ழாக் கியூரேக் இந்த இயக்கத்தின் முதன்மையானவர்.
இந்த பீட் ஜெனரேஷனின் நீட்சி உலகமெங்கும் பரவி, ஹிப்பி கலாச்சாரமாகப் பரவியது. (ஹிப்பிக் கலாச்சாரம் குறித்த வெகுஜனப் பார்வை, ஒழுக்கவாதிகளால் தவறான முறையில் பிற்காலத்தில் திரிக்கப்பட்டது)
இந்த பீட் ஜெனரேஷன் ஒவ்வொரு வருடமும் பீட் இலக்கியவிருதுகளை வழங்கி இந்தப் போக்கு இலக்கியத்தை வளர்த்தெடுத்தது. இந்த பீட் இலக்கிய விருது பெற்றவர் கபோர் க்யூகிக்ஸ்.
***
அவர் பேசும் சொற்பொழிவு சம்பந்தமாக என் விருப்பத்தை இவ்வாறாக அவரிடம் தெரிவித்துள்ளேன்:
//உங்களுக்கு மிகவும் பிடித்தமான Disembodied Poetics Movement குறித்துப் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
The Jack Kerouac School of Disembodied Poetics Movement இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்த 50 ஆண்டுவிழாவைக் கொண்டாடும் விதமாகவும், Disembodied Poetics Movement ஐ நினைவு கூறும் விதமாகவும் இந்த நிகழ்வு அமையும். //
***
The Jack Kerouac School of Disembodied Poetics Movement குறித்து சுருக்கமாக:
Disembodied Poetics என்ற இந்த இலக்கிய இயக்கச் செயல்பாடுகள் இன்றுவரை சர்வதேச இலக்கிய உலகில் முக்கியத்துவம் வகிக்கின்றன.
Disembodied Poetics என்றால் Body யை Dis செய்தல் அதாவது கவித்துவ ரீதியாக, உடலைக் கலைத்துப் போடுதல்; தாங்கள் செயல்படுகின்ற உடல்மொழியைக் கலைத்துப்போடுதல் என்று இதன் மூலக்கூறுகள் பற்றி சுருக்கமாகச் சொல்லலாம்.
இதுகுறித்து இவர்களது படைப்புகளையும், படைப்புச் செயல்பாடுகளையும் அவதானிக்கும்போது, பல்வேறு பரிமாணங்களில் அவை பயணம் போவதை உணரமுடியும்.
1974ல் பௌத்தத்தின்மீது அபார ஈடுபாடு கொண்ட திபெத்திய புத்திஸ்டான சோக்யம் ட்ருங்பா என்பவரால் அமெரிக்காவில் துவங்கிய ‘நரோபா பல்கலைக்கழகம்’ என்ற ஒரு நிறுவனம், ஜென்புத்திஸம், தியானம், மாற்றுக்கல்வி போன்ற விஷயங்களை அதற்கான ஆளுமைகளை வரவழைத்து சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டிருந்தது.
இக்கட்டத்தில் Jack Kerouac School of Disembodied Poetics என்ற புதுவகையிலான பார்வையுடன் இயங்கிய – ழாக் க்யூரேக், வில்லியம் பர்ரோஸ், ஆலன் கின்ஸ்பர்க் ஆகிய படைப்பாளிகளை அழைத்து Disembodied Poetics என்கிற பெயரில் சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்து கொடுத்தது. தங்களது படைப்பு உருவாகும் பாங்கு, நடை, உத்தி, உள்ளடக்கம், படைப்பு நுட்பம் குறித்தெல்லாம் விரிவாகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு கேட்டுக்கொண்டது. அது பின்னர் நூலாகவும் வெளிவந்துள்ளது.
இந்த நிகழ்வில், Disembodied Poetics குறித்து ஒரு சிறு நூல் (தமிழில்) வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.)
***
உன்னதம் மொழிபெயர்ப்பு உரையாடல்கள்-2
2023, ஏப்ரல் 15 சனிக்கிழமை முழுநாள் நிகழ்வு
காலை 10.00 to மாலை 6.00
இக்ஸா மையம் – கான்ஃபரன்ஸ் ஹால்,
எக்மோர், சென்னை.