• Wed. Nov 29th, 2023

2022 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் ஏழு பெரிய போக்குகள்

ByGouthama Siddarthan

Mar 8, 2023

– பெர்னார்ட் மார்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

 

மனிதகுலம் இதுவரை உருவாக்கியதிலேயே மிகப் பெரிய அளவிலான மாற்றத்தோடு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்வதை நாம் 2022 ஆம் ஆண்டு பார்க்கவிருக்கிறோம். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, `மனித குல வளர்ச்சியில் இதன் தாக்கம் நெருப்பு அல்லது மின்சாரத்தை விட அதிகமாக இருக்கும்’ எனக் கூறியிருக்கிறார். இது பேரார்வம் நிறைந்த கூற்றாகத் தோன்றலாம், ஆனால் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கும், விண்வெளியை ஆராய்வதற்கும், புற்றுநோய்க்கான சிகிச்சைகளை உருவாக்குவதற்கும் இது ஏற்கனவே பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டால் இது சாத்தியமானதுதான் என்பது தெளிவாகத் தெரியும்.

 

மனிதர்களால் செய்ய முடியாததை விட மிக விரைவாகவும் துல்லியமாகவும் முடிவெடுப்பதை செயல்படுத்தும் வகையில் இயந்திரங்களுக்கு முடிவெடுக்கும் திறனைக் கொடுப்பதென்பது இப்போது மிகவும் கடினம். ஆனால் 2022 ஆம் ஆண்டில் கண்டுபிடிப்புகளும் புதிய முன்னேற்றங்களும் சாத்தியமானவற்றின் எல்லைகளை நீட்டிக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். 2022 ஆம் ஆண்டில் வெடித்தெழும்பும் கண்டுபிடிப்புகள், நிகழவிருக்கும் முக்கிய பகுதிகள் மற்றும் துறைகளிலிருந்து நான் தெரிவு செய்தது கீழே:

 

பணியாளர்களின் ஆற்றல் அதிகரிக்கும்

 

இயந்திரங்கள் அல்லது ரோபோக்கள் மனிதப் பணியாளர்களுக்குப் பதிலாக உபயோகப்படுத்தப்படுமென்றும் அவை சில வேலைகளை தேவையற்றதாக ஆக்கிவிடும் என்ற அச்சம் எப்போதும் இருந்து வருகிறது. இருப்பினும், நிறுவனங்கள் தங்கள் குழுக்களுக்குள் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வியறிவு கலாச்சாரங்களை உருவாக்கும் செயல்முறையை வழிநடத்தும் போது, நம்முடைய சொந்த திறன்கள் மற்றும் திறமைகளை அதிகரிக்க ஸ்மார்ட் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டைப் பயன்படுத்தும் இயந்திரங்களுடன் அல்லது அதனுடன் இணைந்து செயல்படுவதை நாம் அதிக அளவில் காண்போம். மார்க்கெட்டிங் போன்ற சில செயல்பாடுகளில், எந்த ‘லீட்’கள் பின்தொடரத் தகுந்தது, சாத்தியமான வாடிக்கையாளர்களிடம் இருந்து என்ன மதிப்பை எதிர்பார்க்கலாம் என்பதைத் தீர்மானிக்க உதவும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு நாம் ஏற்கனவே பழகிவிட்டோம்.

 

பொறியியல் பணிகளில், செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் முன்கணிப்பு பராமரிப்பை வழங்குவதன் மூலம் நமக்கு உதவுகின்றன – இயந்திரங்களுக்கு எப்போது சேவை அல்லது பழுதுபார்ப்பு தேவைப்படும் என்பதை முன்கூட்டியே நமக்குத் தெரியப்படுத்துகிறது. சட்டம் போன்ற அறிவுசார் தொழில்களில், ஒரு குறிப்பிட்ட பணிக்குத் தேவையான தகவல்களைக் கண்டறிய, தொடர்ந்து அதிகரித்து வரும் தரவுகளை வரிசைப்படுத்த உதவும் கருவிகளை நாம் அதிகளவில் பயன்படுத்துவோம். ஏறக்குறைய ஒவ்வொரு தொழிலிலும், ஸ்மார்ட் கருவிகள் மற்றும் சேவைகள் வெளிவருகின்றன, அவை நமது வேலைகளை மிகவும் திறமையாகச் செய்ய உதவுகின்றன, மேலும் 2022 இல் நம்மில் பெரும்பாலானோர் அவை நமது அன்றாட வேலை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதைக் காண்போம்.

 

பெரியதும் சிறந்ததுமான மொழி மாதிரியாக்கம்

 

மொழி மாதிரியாக்கம் என்பது இயந்திரங்கள் நாம் புரிந்துகொள்ளும் மொழியில் நம்முடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் ஒரு செயல்முறையாகும் – அல்லது இயற்கையான மனித மொழிகளை எடுத்து நிரல்களையும் பயன்பாடுகளையும் இயக்கக்கூடிய கணினி குறியீடாக மாற்றவும் செய்யும். இதுவரையில் உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மேம்பட்ட (பெரியதுமான) மொழி மாதிரி GPT-3 ஐ OpenAI வெளியிட்டதை சமீபத்தில் நாம் பார்த்தோம், மொழியை செயல்முறைக்குள்ளாக்க இதில் இருக்கும் சுமார் 175 பில்லியன் “அளவுருக்கள்”- மாறிகள் மற்றும் தரவு முனைகளை இயந்திரங்கள் பயன்படுத்த முடியும். OpenAI ஆனது அடுத்து GPT-4 ஐ உருவாக்கி வருவதாக அறியப்படுகிறது, அது இன்னும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது 100 டிரில்லியன் அளவுருக்கள் வரை கொண்டிருக்கலாம் என்று சிலர் மதிப்பிட்டுள்ளனர், இது GPT-3 ஐ விட 500 மடங்கு பெரியதாகும், மேலும் கோட்பாட்டளவில் மொழி உருவாக்க மற்றும் மனிதரிடமிருந்து எடுக்கப்பட்ட பிரித்தறிய முடியாத உரையாடல்களை நடத்துவதற்கு ஒரு பெரிய முன்னெடுப்பை எடுக்கிறது. கணினி குறியீட்டை உருவாக்குவதிலும் இது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 

இணைய பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு

 

இணைய பாதுகாப்பானது பயங்கரவாதத்தை விட சமூகத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமென்று இந்த ஆண்டு உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) அடையாளம் கண்டுள்ளது. இயந்திரங்கள் நம் வாழ்வில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ளும்போது, ஹேக்கிங் மற்றும் இணைய வழி குற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒரு சிக்கலாக மாறும், ஏனெனில் நீங்கள் நெட்வொர்க்கில் இணைக்கும் ஒவ்வொரு சாதனமும் உங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தக்கூடியவர் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால் அது தோல்விக்கான சாத்தியக் குறியாக இருக்கும். இணைக்கப்பட்ட சாதனங்களின் நெட்வொர்க்குகள் மிகவும் சிக்கலானதாக இருப்பதால், அந்த தோல்வியின் புள்ளிகளை அடையாளம் காண்பது மிகவும் சிக்கலானதாகிறது. இருப்பினும், இங்கு செயற்கை நுண்ணறிவு அதன் பங்கை செய்ய முடியும். நெட்வொர்க் டிராஃபிக்கை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், மோசமான நோக்கங்களை பரிந்துரைக்கும் வடிவங்களை அடையாளம் காண கற்றுக்கொள்வதன் மூலமும், 21 ஆம் நூற்றாண்டின் குற்றத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பதில் ஸ்மார்ட் அல்காரிதம்கள் அதிகளவில் பங்கு பெறக்கூடும். 2022 இல் உருவாக்கப்படும் செயற்கை நுண்ண்றிவின் மிக முக்கியமான சில பயன்பாடுகள் இதைச் சார்ந்ததாக இருக்கக்கூடும்.

 

செயற்கை நுண்ணறிவும் மெடாவெர்ஸும்

 

மெடாவெர்ஸ் என்பது ஒரு ஒருங்கிணைந்த நிலையான டிஜிட்டல் சூழலுக்கு கொடுக்கப்பட்ட பெயர், அங்கு பயனர்கள் ஒன்றாக வேலை செய்வதோடு விளையாடவும் செய்யலாம். இது இணையத்தைப் போன்ற ஒரு மெய்நிகர் உலகம், ஆனால் ஆழ்ந்த அனுபவங்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, பெரும்பாலும் பயனர்களால் உருவாக்கப்படுவதாகும். தனது பேஸ்புக் தளத்தின் சமூக அடித்தளத்துடன் மெய்நிகர் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை இணைத்து இதை உருவாக்குவது பற்றி மார்க் ஷுக்கர்பெர்க் பேசியதிலிருந்து இந்தக் கருத்து பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது.

 

செயற்கை நுண்ணறிவு சந்தேகத்திற்கு இடமின்றி மெடாவெர்ஸின் அச்சாணியாக இருக்கும். இது ஆன்லைன் சூழல்களை உருவாக்க உதவும், அங்கு மனிதர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான தூண்டுதல்களை வளர்த்துக் கொள்கையில் வீட்டில் இருப்பது போல உணர்வார்கள். செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருள்களோடு நம்முடைய மெடாவெர்ஸ் சூழலைப் பகிர்ந்து கொள்கையில் அது நாம் செய்ய வேண்டிய பணிகளுக்கு உதவும் அல்லது நாம் ஓய்வெடுக்கவும் பொழுது போக்கவும் விரும்பும் போது டென்னிஸ் அல்லது செஸ் விளையாட்டில் நம்முடைய கூட்டாளியாக இருக்கும்.

 

குறைந்த குறியீடு மற்றும் குறியீடு இல்லாத செயற்கை நுண்ணறிவு

 

பல நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய செயல்திறனை ஏற்றுக்கொள்வதற்கு தேவையான கருவிகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்கக்கூடிய திறமையான செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த பொறியாளர்களின் பற்றாக்குறை ஒரு தடையாக இருக்கிறது.

 

கருத்தியல் அளவில் குறியீடு இல்லாத, குறைந்த குறியீடுகள் கொண்ட அதிக சிக்கலான செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய எளிய இடைமுகப்புகளை வழங்கி இதைக் கடந்து செல்வதை இலக்காகக் கொண்டிருக்கும். இணைய வடிவமைப்பு மற்றும் குறியீடு இல்லாத UI கருவிகள் இப்போது வரைகலை கூறுகளை ஒன்றாக இணைத்து விடுவதன் மூலம் இணைய பக்கங்கள் மற்றும் பிற ஊடாடும் அமைப்புகளை உருவாக்க பயனர்களை அனுமதிக்கும் விதத்தைப் போலவே, குறியீடு இல்லாத செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் முன்பே தயாரிக்கப்பட்ட வெவ்வேறான வகைகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் ஸ்மார்ட் நிரல்களை உருவாக்க அனுமதிக்கும். இயற்கையான மொழி செயலாக்கம் மற்றும் மொழி மாதிரியாக்கம் (மேலே காண்க) போன்ற தொழில்நுட்பங்கள், விரைவில் நமது குரல் அல்லது எழுதப்பட்ட வழிமுறைகளைத் தவிர வேறு எதையும் பயன்படுத்துவது சாத்தியமாகாது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு தொழில்நுட்பத்தின் தற்போதைய “ஜனநாயகமயமாக்கலில்” இவை அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கும்.

 

தன்னியக்க வாகனங்கள்

 

செயற்கை நுண்ணறிவு ஆனது தன்னியக்க கார்கள், படகுகள் மற்றும் விமானங்களுக்கு வழிகாட்டும் “மூளை” ஆகும், அவை வரவிருக்கும் தசாப்தத்தில் பயணம் மற்றும் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் 1.3 மில்லியன் மக்கள் போக்குவரத்து விபத்துகளால் இறப்பது இயல்பானது என்று நாம் நினைத்தோம், அதில் 90% மனித தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் என்பதை எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்கும்போதும் பயத்துடன் சிந்திக்கும்போது 2022 நினைவில் கொள்ள வேண்டிய ஆண்டாக இருக்க வேண்டும்!

 

அதிகமான முறையில் பயனுள்ள தன்னியக்கக் கார்கள் – டெஸ்லா தனது கார்கள் 2022 க்குள் முழு சுய-ஓட்டுதல் திறனை நிரூபிக்கும் என்று கூறுகிறது, இருப்பினும் அப்போது அவை பொதுவான பயன்பாட்டிற்கு தயாராக இருக்காது. Waymo (Google ஆல் உருவாக்கப்பட்டது), Apple, GM மற்றும் Ford ஆகியவை இதன் போட்டியாளர்கள் என்பதோடு இவற்றில் ஏதேனும் அடுத்த ஆண்டில் பெரிய முன்னேற்றங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு `அட்லாண்டிக்’ கடலானது தன்னைக் கடக்கும் முதல் தன்னியக்கக் கப்பலைக் காணும், ஏனெனில் மேஃப்ளவர் என்கிற தன்னியக்கக் கப்பல் (MAS), IBM ஆல் இயக்கப்படுவதோடு இலாப நோக்கற்ற ProMare உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மீண்டும் தனது பயணத்தை முயற்சிக்கும் (இந்த ஆண்டு அதன் ஆரம்ப முயற்சியின் போது சற்றே பின்வாங்க வேண்டியிருந்தது).

 

படைப்பாற்றல் செயற்கை நுண்ணறிவு

 

கலை, இசை, கவிதை, நாடகங்கள் மற்றும் வீடியோ கேம்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தப்படலாம் என்பதை நாம் அறிவோம். 2022 ஆம் ஆண்டில், GPT-4 மற்றும் Google -ன் பிரைய்ன் போன்ற புதிய மாடல்கள் சாத்தியமானவற்றின் எல்லைகளை மறுவரையறை செய்வதால், நாம் கற்பனைத் திறனும் திறமையான மின்னணு திறமைகளும் கொண்டவர்களிடமிருந்து மிகவும் விரிவான மற்றும் “இயல்பான” படைப்பாற்றல் கொண்ட வெளியீடுகளை எதிர்பார்க்கலாம். இப்போது இருப்பதைப் போல் 2022 ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவின் திறனைக் காட்டுவதற்கான செயல்விளக்கங்கள் அல்லது சோதனைகள் என்பதை விட, கட்டுரைகள் மற்றும் செய்திமடல்களுக்கான தலைப்புச் செய்திகளை எழுதுதல், லட்சினைகள் மற்றும் இன்போ கிராபிக்ஸ் வடிவமைத்தல் போன்ற வழக்கமான ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.

 

படைப்பாற்றல் என்பது பெரும்பாலும் மனித திறமையாகவே பார்க்கப்படுகிறது, ஆனால் இப்போது இந்த திறன்கள் இயந்திரங்களிடமிருந்து வெளிவருவதை நாம் காண்கிறோம். “செயற்கை” நுண்ணறிவு என்பது “உண்மையான” நுண்ணறிவு பற்றி நாம் கொண்டிருக்கும் சற்றே தெளிவற்ற கருத்தின் நோக்கம் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் மறுக்கமுடியாத வகையில் நெருக்கமாக வருகிறது.

 

நன்றி: Forbes, செப்டம்பர் 24, 2021

 

தமிழில் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சித்தார்த்தன் சுந்தரம்,  நோபல் விருது பெற்ற ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் – ன்   “செர்னோபிலின் குரல்கள்”,   ஜே. டி. சாலிஞ்சரின்   “குழந்தைகளின் ரட்சகன்” ஹார்பர் லீய -ன்  ” பாடும் பறவையின் மௌனம்” போன்ற பல உலகப்புகழ் பெற்ற நூல்களை மொழியாக்கம்  பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page