• Thu. Sep 21st, 2023

ஹேஷ்டேக் கடத்தல் – டி ஹேஷ் தடுத்தல்

ByGouthama Siddarthan

Mar 8, 2023

ஹேஷ்டேக்கைக் கடத்துவது என்கிற “ஹேஷ்டேக் ஹைஜாக்கிங்’ என்பது இணையப் பயன்பாட்டின் புழக்கத்தில் உள்ள ஒரு கலைச் சொல்! இந்தச் சொல் பற்றி ஒரு சில பயனாளர்கள் தெரிந்திருப்பார்கள். பெரும்பாலும், தமிழ் சார்ந்த சூழலில் செயல்படும் பயனாளர்கள் இதை அறிந்திருக்காவிட்டாலும் கூட, இந்தச் செயல்பாட்டை தாங்கள் அறியாமலேயே ஒரு வேடிக்கையான அனுபவத்திற்காக செய்திருப்பார்கள். இந்தக் கடத்தல் விவகாரம் குறித்து விரிவாக இங்கு அலசுவோம்:

 

பேஸ்புக்கில் ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் நியாண்டர் செல்வன், சமீபத்தில், போர் குறித்த பார்வையாக, ‘கனடா நாட்டின் போர்வீரர்களின் யுத்த நுணுக்கங்களையும், முதலாம் உலகப் போரிலிருந்து தற்கால ஆப்கான் போர் வரை அவர்கள் பங்கெடுத்துக் கொண்ட எந்தப் போரிலும் இதுவரை தோல்வியே அடையாத போர் வலிமை பற்றியும்’ பதிவு போட்டிருந்தார். உடனே, அந்தப் பதிவுக்கு கமெண்ட் போட்ட நண்பர்கள், அந்தப் பதிவின் மையத்தை விட்டு கடத்தி வந்து, சீமான் – பிரபாகரன் – இலங்கை – என சம்பந்தமில்லாத விஷயங்களை ட்ரோல் செய்து கலாய்த்துக் கொட்டினார்கள். இதை ஹைஜாக் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, இது ஒருவிதத்தில், இணையப் பயன்பாட்டில் ஹைஜாக்கிங் என்ற வார்த்தையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்ப நிலை என்று கொள்ளலாம்.

 

பேஸ்புக்கில் இதுபோன்ற செயல்பாடுகள் மிக அதிகம். மெயின் பதிவை தங்கள் விருப்பத்திற்கேற்ப வளைப்பது, கமெண்ட் போடும்போது, சம்பந்தமே இல்லாமல் தங்களது பிஸ்னஸ் விஷயங்களைப் பேசுவது, சுட்டி மூலம் காட்சிப் படுத்துவது.. இப்படிப் பல விஷயங்கள்!

 

இதன் உச்ச பட்சம்தான் ட்விட்டரில் முதன்மையாக விளங்கும் ஹேஷ்டேக்கைக் கடத்துதல்!

 

பொதுவாகவே, இந்தக் கடத்தல், தனிப் பயனாளர்களிடம் பெரிதாக ஈடுபாடு காட்டுவதில்லை. பெரும் வணிக நிறுவனங்கள், செயல்பாடு சார்ந்த அமைப்புகள், புகழ்பெற்ற செலிபிரிட்டிகள், நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள்.. என அதன் பயன்பாட்டு இலக்கு பெரும் வீச்சுடன் செயல்படுகிறது.

 

இந்தக் கடத்தலை, ஒரு சமூக ஊடக வணிக ஆலோசகர், க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த புகழ்பெற்ற படத்தலைப்பை நினைவு கொள்ளும் விதத்தில், The Good, the Bad, and the Ugly என்று மூன்று நிலைகளில் வர்ணிக்கிறார். ஒரு குறிப்பிட்ட பிராண்டை ஒரு பிரபலமான தலைப்புடன் தொடர்புபடுத்தி அந்தத் தலைப்பைப் பின்தொடர்பவர்களுக்கு அந்த பிராண்டை வெளிப்படுத்தும் ஒரு ஆக்கப்பூர்வமான வழி, “குட்’ என்கிறார். அதே சமயத்தில், அந்த பிராண்டை பரபரப்பான கவனிப்புக்கு மாற்றும் வேளையில், ஒரு சிறு சறுக்கல் நிகழ்ந்தாலும், அந்த பிராண்டை பேய்களாக மாற்றிவிடும் “பேட்’ தன்மையும் இதற்குள் பொதிந்திருக்கிறது என்கிறார். மேலும், சில சமயங்களில், ஹேஷ்டேக்கைக் கடத்தும் செயல் முறையில், பெரும் முட்டாள்தனமான ஆபத்தைக் கொண்டு வரும் “அக்ளி’யும் இருக்கிறதாக விவரிக்கிறார்.

 

மேலை நாடுகளில் ஹேஷ்டேக் கடத்தல் வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பதற்கென்றே ஏராளமான விற்பன்னர்கள் இருக்கின்றனர். பல்வேறு பயிலகங்களும், இணையவழி வகுப்புகளும் நடக்கின்றன. நீங்கள் ஒரு வணிகம் சார்ந்தவர் எனில், உங்கள் பிராண்டு பெயரை வடிவமைப்பதிலிருந்து, அதை, இணையத்தில் அறிமுகம் செய்யும் வரை, இந்த ஹேஷ்டேக் பெரும் பங்கு வகிக்கிறது. பிராண்டுக்கு என்ன மாதிரியான ஹேஷ்டேக்கை உருவாக்குவது, அப்படி உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்கை பயனாளர்கள் யாரும் கடத்தல் செய்யாத அளவில் மிகுந்த நுட்பத்துடன் உருவாக்குவது, முக்கியமாக போட்டியாளர்களின் கடத்தலிலிருந்து காப்பது, அந்த நுட்பத்தையும் மீறி அது கடத்தல் செய்யப்பட்டால், அதை எப்படி மீட்டெடுப்பது.. இப்படிப் பல்வேறு விதமான பரிமாணங்களில் தேர்ந்து நிற்கும் ஹேஷ்டேக்கை வடிவமைப்பு செய்வதற்காக பிரத்யேக ஹேஷ்டேக் விற்பன்னர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

 

இப்படி இந்தத் துறை பற்றி எழுதினால் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும்.

 

முதலில், எளிமையாக சாதாரண பயனாளர்களுக்கும் புரியும் விதத்தில் சில உதாரணங்களுடன் கடந்த காலங்களில் புகழ்பெற்ற கடத்தல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

 

ஹேஷ்டேக் கடத்தல் என்றாலே, உலகளவில் முதன்மையான உதாரணமாக நிற்பது, மெக் டொனால்டு நிறுவனத்தின் #McDStories.

 

2012 ஜனவரியில் உலகப்புகழ் பெற்ற துரித உணவு நிறுவனமான மெக் டொனால்டு, தனது நிறுவனம் குறித்து ட்விட்டரில் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தது. தனது நிறுவனத்தில் பணிபுரியும் இயற்கை விவசாயிகளை, ஆரோக்கியமான உணவு, காய்கறிகளை முன்னிலைப்படுத்த வேண்டும் மற்றும், உயர்தர இறைச்சியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தில் ட்விட்டரில் #MeetTheFarmers என்ற ஹேஷ்டேக்கைத் தொடங்கியது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவு, அந்த ஹேஷ்டேக் மக்களிடையே ரீச் ஆகவில்லை. நிறுவனத்தின் மக்கள் தொடர்புக் குழு ஒன்றுகூடிப் பேசி, ஹேஷ்டேக்கை மாற்ற முடிவு செய்தது. அது எளிதில் தங்களது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும், சிறந்த உணவு பற்றிய இதயத்தைத் தூண்டும் கதைகளை பகிர்விக்கும் வகையில் அமைய வேண்டும் என்ற பார்வையில் #McDStories ஹேஷ்டேக் உருவாயிற்று. இந்த ஹேஷ்டேக்கை ட்விட்டர் முகப்புப் பக்கத்தில் விளம்பரப் படுத்துவதற்காக மெக்டொனால்டு பணம் செலுத்தியது.

 

 

இந்தப் புதிய ஹேஷ்டேக் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, ட்விட்டர் பயனாளர்கள் #McDStories ஐப் பயன்படுத்தி தங்களது இடுகைகளில் கடத்தத் தொடங்கினர். முழுக்க முழுக்க தங்களது எதிர்மறையான தனிப்பட்ட அனுபவங்களையும் கதைகளையும் பிராண்டுடன் இணைத்துப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். நிறுவனத்தின் மோசமான வாடிக்கையாளர் சேவைகள், உணவில் பொதிந்துள்ள விஷத்தன்மை மற்றும் மெக்டொனால்ட் பற்றிய பிற வெறுக்கத்தக்க பார்வைகள்.. என ட்விட்டர் முழுக்க ‘மெக்டி வெறுப்புக் கதைகள்’, கடத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் தீயாய்ப் பரவின.

 

ஹேஷ்டேக் வெளியிட்ட இரண்டு மணி நேரங்களில், 2000 க்கும் மேலான உரையாடல்களும், 72,000 க்கும் மேலான ட்வீட்களும் ட்விட்டரில் நிறைந்தன. நிறுவனம் ட்வீட்களுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை, இந்த ஹேஷ்டேக் பிரச்சாரம் தோல்வியடைந்ததை உணர்ந்த 2 மணி நேரங்களில், ட்விட்டரிலிருந்து தனது #McDStories ஹேஷ்டேக்கை விலக்கிக் கொண்டது. (அதன்பிறகு #McFail என்ற ஹேஷ்டேக்கை பயனாளர்கள் ஆரம்பித்து தங்கள் கதைகளைத் தொடர்ந்து அடித்து துவம்சம் செய்தனர்.)

 

மெக்டொனால்டின் சமூக ஊடக இயக்குனர் ரிக் வியோன், “பிரச்சாரம் தோல்வியடைந்தது பற்றிய அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை’ என்றும், “#McDStories -க்கு வந்த 72,000+ டிவீட்களில் 2% மட்டுமே எதிர்மறையாக இருந்தது’ என்றும் ட்வீட் செய்ததை எவரும் கண்டுகொள்ளவில்லை.

 

இந்த உலகப் புகழ்பெற்ற ஹேஷ்டேக் கடத்தலை மிக நுட்பமாக ஆய்வு செய்து பல கேஸ் ஸ்டடிகள் வெளிவந்துள்ளன. அதில் 4 முக்கியமான விஷயங்களை சுட்டிக் காட்டுகிறார்கள்: முதலாவதாக, இந்த மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைத் திட்டமிடுவதற்கும், வடிவமைப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் முன், நிறுவனத்தைப் பற்றி மக்கள் என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, இந்தப் பிரச்சாரத்தின் நேர்மறையான அல்லது எதிர்மறையான முடிவுகளைப் பற்றிய முன்னோட்டங்களைப் பெற, நிறுவனத்தின் மக்கள் தொடர்புக் குழு, மெக்டொனால்டின் பேஸ்புக் பக்கத்தைப் பயன்படுத்தி முன்கூட்டியே சோதனை செய்திருக்க வேண்டும்.

 

இரண்டாவதாக, வாடிக்கையாளர்களின் ட்வீட்களை நிறுவனம் கண்காணிக்கவில்லை, ஆரம்ப நிலையிலேயே அவைகளை நீக்கியிருக்க வேண்டும். அல்லது, அவர்களுடன் அனுசரணையாகப் பேசி மனதை மாற்றியிருக்க வேண்டும். நிறுவனத்தின் மக்கள் தொடர்புக் குழு நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. ஹேஷ்டேக் கடத்தல்காரர்களை அடையாளம் கண்டு, எதிர்மறையான கருத்துக்களை பரப்ப அனுமதிக்காது தடுத்திருக்க வேண்டும்.

 

மூன்றாவதாக, நுகர்வோரின் ட்வீட்களுக்கு இன்ட்ராக்ட் செய்திருக்க வேண்டும். மக்கள் தொடர்புக் குழுவானது வாடிக்கையாளர்களின் உறவைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை வெளிப்படுத்தவில்லை, அவர்களது உறவுகளைப் பேணுவதற்கான நிறுவனத்தின் ஆன்லைன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதில் தோல்வியடைந்தனர். இந்த அணுகுமுறை பொது உறவுகள் காரணமாக நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவைக் கடுமையாகச் சேதப்படுத்தியது.

 

நான்காவதாக: அந்த ஹேஷ்டேக் வார்த்தைத் தேர்வில் தான் பிரச்சினை இருக்கிறது. #McDStories என்ற ஹேஷ்டேக்கின் பெயர் நேர்மறையாக இல்லை. பல்வேறு பார்வைகளை எதிர்கொள்ளும் விதத்தில் இருக்கிறது. துரித உணவுத் துறையின் எதிர்மறையான விளைவைப் பற்றி மக்கள் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர், ஆதலால், இந்த தலைப்பு, எதிர் பார்த்த மாதிரியே பரந்து பட்ட பார்வைகளை முன்வைத்தது. ஒரு பொதுவான ஹேஷ்டேக் தாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, எதிர் விளைவுகளைத் தூண்டும் என்பதை நிறுவனம் கணிக்கத் தவறி விட்டது. ட்விட்டர் போன்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் தளத்தில், பொதுவான ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தியது பிரச்சாரத்தின் பலவீனம். மிக நேரடியான, ஆதரவு அர்த்தம் கொண்ட #ILoveMcDonalds போன்ற தலைப்பிலேயே, ஆதரவு தருவது போன்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, நேர்மறையான கருத்துகளைச் சொல்ல மறைமுகமாக மக்களைத் தூண்டி வெற்றி பெற்றிருக்கலாம்..

 

ஆனாலும், இது கூட என் பார்வையில் வெற்றிதான், வரலாற்று வெற்றி! அந்த ஹேஷ்டேக் கடத்தல் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், மெக்டொனால்டின் பெயர், வரலாற்றில் பதிவாகியிருந்திருக்காது.

 

#firstdayofspring, வசந்த காலத்தைக் கொண்டாடுபவர்களின் புகழ்மிக்க ஹேஷ்டேக் இது.

 

வசந்தத்தின் முதல் நாளைக் கொண்டாடுவது, ஆடிப்பாடிக் களிப்பது என்பது மேலை நாடுகளில் ஒரு திருவிழா போன்ற அம்சம். அதுவும், அயர்லாந்து போன்ற நாடுகளில் பெரும் கொண்டாட்டம். ஐரிஷ் மக்கள், தங்களது பண்டைய நதியான பாய்ன் நதியில் பூக்களை மிதக்க விடுவார்கள். இந்த நதியை கவிதையின் தெய்வமாக, வளத்தின் சின்னமாகக் கருதுகின்றனர். பிப்ரவரி 1 ஆம் தேதி இங்கு வசந்த நாள் தொடங்குகிறது. இந்தப் பருவம், சுழற்சிக்கேற்ப பல்வேறு நாடுகளில் மாற்றம் ஏற்படும். இங்கிலாந்தும் அதன் அண்டை நாடுகளும் மார்ச் 1 ஆம் தேதியில் வசந்த காலத்தைத் தொடங்குகின்றன. பொதுவாகவே, பிப்ரவரியிலிருந்து மார்ச் முழுக்க உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.

 

“வருடத்தின் எவ்வளவு அழகான நேரம் இது. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஹையான் பூங்காவில் பறவைகள் தங்கள் திரும்பி வருவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன..’ என்று ஒரு சீனப் பயனாளர் ட்வீட் இடுகிறார்.

 

“எங்கே பூக்கள் பூக்கின்றனவோ அங்கே நம்பிக்கையும் பூக்கும்..’ என்பது ஒரு இங்கிலாந்துப் பயனாளரின் ட்வீட்.

 

இந்தப் புகழ் பெற்ற வசந்த காலத்தின் முதல் நாளை, சமூக ஊடகங்களில், வசந்தகாலப் புகைப்படங்களைப் பதிவிட்டு, #firstdayofspring என்ற ஹேஷ்டேக்கின் குழு ஒருங்கிணைப்பாகக் கொண்டாடுகிறார்கள். புகழ்பெற்ற இந்த ஹேஷ்டேக்கை, ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்று கடத்திக் கொண்டு போய், தனது பிராண்டு ஆடைகளின் புகைப்படங்களை தொடர்புபடுத்தி அந்தத் தலைப்பைப் பின்தொடர்பவர்களுக்கு தனது பிராண்டை வெளிப்படுத்தும் அழகான கடத்தலைச் செய்தது.

 

அமுல் நிறுவனம், ஒவ்வொரு கட்டத்திலும், அப்போதைய ட்ரெண்டிங்கில் இருக்கும் புகழ் பெற்ற நபர்களின் புகைப்படங்களை ஓவியங்களாகவோ, அல்லது அவர்களை ஞாபகப்படுத்தும் சின்னங்களை ஹைலைட் செய்தோ, தனது பிராண்ட் விளம்பரத்தை வெளியிடும் என்பதை நாம் அறிவோம்.. சமீபத்தில், உலக சாம்பியனை வீழ்த்திய செஸ் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் இட்டிருந்த திருநீற்றுப் பட்டையை ஹைலைட் செய்திருந்தது கவனிக்கத் தக்கது.

 

அடுத்த ஹேஷ்டேக் கடத்தலுக்குப் போவோம்.

 

1920-ல் நிறுவப்பட்ட உலகின் மூன்றாவது பழமையானதும், மிகப்பெரியதுமான உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ், “பறக்கும் கங்காரு’ என்ற செல்லப் பெயர் கொண்டது.

 

இந்த நிறுவனம் 2011 நவம்பரில், தனது ட்விட்டர் பாலோயர்களிடம், “நீங்கள் கனவு காணும் சொகுசு விமான அனுபவம் என்பது என்ன?’ என்ற கேள்வியை முன் வைத்தது. அத்துடன், இந்த கேள்வி பதிலில் ஈடுபடுபவர்கள், தங்கள் பதிலில் #QantasLuxury என்ற ஹேஷ்டேக்கைச் சேர்க்குமாறு பரிந்துரைத்தது. (இதில் கலந்து கொண்டு சிறப்பான பதில் சொல்பவர்களுக்கு முதல் வகுப்புப் பயணச் சீட்டும், பைஜாமா உடையும் தரப்படும் என்றும் அறிவித்தது.)

 

 

இதற்கு ஒரு மாதம் முன்பு, இந்த நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி ஒரு சின்ன பிளாஷ் பேக்!

 

போக்குவரத்து தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆஸ்திரேலிய, சர்வதேச விமானிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் போராட்டம் பெரியளவில் நடந்தது. இதன் விளைவாக, குவாண்டாஸ் ஏர்வேஸ் அனைத்து விமானங்களையும் தரையிறக்கியது மற்றும் அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளை காலவரையின்றி நிறுத்தி வைத்தது.

 

இதனால், பெரும் அவதிக்குள்ளானவர்கள், தொழிற்சங்கப் பணியாளர்கள் மட்டுமல்லாது, விமானப் பயணிகள் கடும் சிரமத்திற்கும், அவதிக்கும் உள்ளானார்கள். பயணிகளை நட்டாற்றில் விட்டது போல, எந்தவிதமான முன்னறிவிப்பும் செய்யாமல், நிகழ்ந்த இந்த சர்வதேச விமான நிறுத்தம் பயனாக, பல பயணிகள், விமான நிலைய வராண்டாக்களில் கவலையுடன் பொழுதைக் கழித்தார்கள். தங்களை மீட்டுக் கொண்டு போக வேறு ஏதாவது விமான சேவை முன் வராதா என்ற பதட்டம் சர்வதேச விமான நிலையங்களில் பெரும் குரலாக ஒலித்தது. (பிறகு நிலைமை சீரானது.)

 

இந்த நிகழ்வு குறித்து, போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் டோனி ஷெல்டன் கூறுகையில், “ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய சமூகத்தையும், உலகெங்கிலும் உள்ள 80,000 பயணிகளையும் அச்சுறுத்திய பிறகு, ஒரு நிறுவனம் நடவடிக்கைக்கு கொண்டு வரப்படுவது ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இதுவே முதல் முறை..’ என்று கூறினார்.

 

இதன் பின்னணியில், இந்த ட்விட்டர் கேள்வி பதிலை எதிர் கொண்ட பயனாளர்கள், அந்த ஹேஷ்டேக்கைக் கடத்திக் கொண்டு போய் வறுத்தெடுத்தார்கள். 24 மணிநேரத்திற்குள், ஹேஷ்டேக் ஆஸ்திரேலியாவில் “பிரேக்கிங் ட்ரெண்ட்’ என்ற நிலையை அடைந்தது, பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவாண்டாஸ்க்கு தங்கள் கோபத்தைத் தெரிவிக்க, சமூக ஊடகங்களில் பல்வேறு விதங்களில் ஹேஷ்டேக்கைக் கடத்தினர்.

 

“முதல் வகுப்புப் பயணச்சீட்டு முக்கியமல்ல, பயணம்தான் முக்கியம்.’ என்ற பதிவுகளும், “பைஜாமாவுக்குப் பதிலாக, கழிப்பறை கிட்டை வழங்குங்கள்.’ என்ற பதிவுகளும் பெருமளவில் பேசப்பட்டன.

 

இங்குதான் டி ஹேஷின் ஥ வருகை அத்தியாவசியமாகிறது.

 

குவாண்டாஸின், #QantasLuxury என்ற ஹேஷ்டேக்கில், அந்த ஹேஷ்டேக்கைத் தூக்கிவிட்டு டி ஹேஷை இணைத்துப் பாருங்கள்! ஥QantasLuxury

 

“நாங்கள், எங்கள் கடந்தகால பழைய பார்வைகளையும், செயல்பாடுகளையும் புறம்தள்ளி, ஒரு புதிய பார்வையுடன் மறுமலர்ச்சியுடன் வந்திருக்கிறோம். இது ஒரு புதிய நவீனமான வருகை. ஆகவே, சொல்லுங்கள் எமது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களே, உங்கள் கனவு சொகுசு விமான அனுபவம் என்பது என்ன? நாங்கள் அதை உங்களுக்குத் தர சித்தமாக இருக்கிறோம்..!” என்ற குரலை உட்பொதிந்து வைத்திருக்கிறது டி ஹேஷ் ஥!

 

நிற்க. தமிழ்ச் சூழலுக்கு வருவோம்:

 

இங்கு ஒரு தமிழ் வணிக நிறுவனம், தங்களது பிராண்டு சார்ந்த தயாரிப்பு ஒன்றை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்க விளைகிறது என்று வைத்துக் கொள்வோம். சமீப காலங்களில், தமிழகம் முழுக்க ஆர்கானிக் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. உணவு, உடை, சோப்பு.. என நாம் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசியப் பொருட்களில் சிறு நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உணவு சார்ந்த பொருட்களில் பெருமழையாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. இதில், சமீபகாலமாக தமிழகம் முழுமைக்கும் புற்றீசல் போல வளர்ச்சியடைந்திருக்கும் குடிசைத் தொழிலாக, இயற்கை சார்ந்த செக்கு எண்ணெய் வணிகத்தைச் சொல்லலாம்.

 

கடந்த இருபது வருடங்களாக, நம்மாழ்வார் போன்ற இயற்கை சார்ந்த பசுமைப் போராளிகளும், செயல்பாட்டாளர் களும், அழிந்து கொண்டிருக்கும் இயற்கையின் செல்வ வளங்களைக் காக்கவேண்டும் என்று மனித ஆரோக்கியத்தைப் பேணும் அதன் அரிய குணங்களை எடுத்துச் சொல்லி, இயற்கை சார்ந்த வாழ்வுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஓயாமல் குரல் கொடுத்துக் கொண்டு வந்ததன் விளைவு, படித்த நடுத்தர மக்கள் தங்களது பார்வையை இயற்கையை நோக்கித் திருப்பினர். இந்தப் பார்வை, பெருவாரியான மக்களைச் சென்றடையும் மாஸ் பார்வையாக எழுச்சி ஏற்பட்டு, சாதாரண மனிதனும் இயற்கையான செக்கு எண்ணெய்தான் வேண்டும் என்று வாங்க வைத்துப் பெரு வெற்றி கண்டது. கிராமங்களின் சந்து பொந்துகளிலெல்லாம் இப்போது செக்குகள் சுழன்ற வண்ணமிருக்கின்றன. இயற்கை, பசுமை, நம்மாழ்வார், பூச்சிக்கொல்லி, களைக் கொல்லி அற்ற தானியங்கள், நாட்டு மரச் செக்கு.. என்றெல்லாம் இந்த இயற்கை வியாபாரம் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

 

பெரும் கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்கள் திகைத்துப் போய் செய்வதறியாது, குழப்பத்தில் என்ன செய்வதென்று விளங்காமல், பெயரை இயற்கையான அர்த்தம் வருமாறு மாற்றி வைத்து நாங்களும் இயற்கை ஆர்வலர்கள்தான் என்று உருட்டிக் கொண்டிருக்கின்றன.

 

இப்படி பெரும் கார்ப்பரேட் சாம்ராஜ்யங்களையே தரை மட்டமாக்கிக் கொண்டிருக்கும் சூழலில், உதாரணத்திற்காக, ஒரு நடுத்தர நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். இயற்கை மற்றும் நம்மாழ்வாரின் மீது கொண்ட ஈடுபாட்டினால், ‘ஆழ்வா ஆயில்’ என்று தங்களது பிராண்டை அறிமுகப் படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்:

 

(இங்கு, புகழ் பெற்ற கோல்டு வின்னர் ஆயில் தயாரிப் பாளரான காளீஸ்வரி ரிஃபைனரி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் போன்ற ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளாததன் காரணம், பொதுவாகவே, இந்த ஹேஷ்டேக் கடத்தல் என்பது, பெரிய நிறுவனங்கள் ஏதாவது ஒரு புதிய பிராண்டுடன் ஹேஷ்டேக் போடும்போது, அவர்களின் கடந்தகால செயல்பாடுகளை விமர்சித்து ஹேஷ்டேக் கடத்தல் நடப்பதற்கு வழி வகுக்கிறது என்பதால், புத்தம் புதிய ஒரு நிறுவனத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.)

 

ஆழ்வா ஆயில் நிறுவனம், எல்லா விஷயங்களிலும் அப்டேட்டாக, கவர்ச்சிகரமாக, மாஸாக யோசிக்கிறது. “உன் சமையலறையில் நான் கொழுப்பா? கொழுப்பற்றதா?’ என்ற புகழ்பெற்ற தமிழ் சினிமாப்பாடல் வரியுடன் இணைத்து #NofatNobad #Against fat #ILoveAzhva என்றெல்லாம் மிகப்பிரமாதமாக ஹேஷ்டேக்குகளை வடிவமைக்கிறார்கள். #ILoveAzhva ரொம்ப usual ஆக இருக்கிறது, #NofatNobad பெரும்பாலான நடுத்தர வர்க்கத்திற்குப் போய்ச் சேராது. ஆகவே, ஷார்ப்பாக, கேட்ச்சியாக இருக்கும், #Againstfat முன்னிறுத்தப்படுகிறது.

 

சரி. இதை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் போட்டியாளர்கள், ஆயில் சந்தையில் முன்னணியில் இருப்பவர்கள், பயனாளர்கள்.. என யாரும் ஹேஷ்டேக் கடத்தல் செய்ய முடியாதா? பார்க்கலாம்.

 

முதலில், இந்த ஹேஷ்டேக்குகளைப் பொறுத்தவரை, அந்த வார்த்தைகளை விட்டுவிட்டு அந்தக் குறியீட்டுத் தன்மையை ஆய்வு செய்வோம். அது வெறும் ஒரு குறிச் சொல். அவ்வளவுதான். வெறுமனே ஒரு URL போன்ற தன்மை கொண்டது, ஒரு குழுவாக இணைக்கும் தன்மை கொண்டது. அவ்வளவுதான். மற்றபடி ஒன்றுமில்லை.

 

அதனால், ஹேஷ்டேக்கை விட்டு விட்டு வார்த்தைகளிலிருந்து ஆரம்பிப்போம். ‘Against fat – கொழுப்புக்கு எதிராக’

 

இந்த வார்த்தையை எதிர்கொள்ளும் ஒரு பயனாளர் கொழுப்புக்கு எதிரான ஆழ்வா ஆயில் என்று நினைத்தபடி ஒரு லைக்கை போட்டுவிட்டு விலகி விடுவார். அல்லது, மேலும் ஒரு படி முன்னேறி, ‘வாழ்த்துக்கள்’ என்று ஒரு ட்வீட் போடுவார். இவர், சாதுவானவர், இவர் பிரச்சினை இல்லை.

 

அடுத்து வருபவர் விஷயம் தெரிந்தவர். “கொழுப்புக்கு எதிரானது என்றால்… கொழுப்பு நீக்கம் செய்யப்பட்டதா? அல்லது இயற்கையிலேயே கொழுப்பு நீக்கமானதா?” என்பார். இவரிடம் இன்ட்ராக்ட் செய்யலாம். ஆனாலும், சற்றே பிசகினாலும் ஹேஷ்டேக் கடத்தல் சர்வசாதாரணமாக நடந்து விடும்.

 

இதற்கு அடுத்தவர், கலாய்ப்பவர்! இவரிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “இந்த எண்ணெய் பயன்படுத்துபவர்கள், கொழுப்பு அற்றவர்களா? கொழுப்பு உள்ளவர்களா? ஏற்கனவே கொழுப்பு உள்ளவர்களுக்கு இந்த எண்ணெய் எந்தவிதத்தில் பயன்படும்?” இதுதான் ஹேஷ்டேக் கடத்தலின் முதல் கட்டம். மளமளவென்று அனைத்து கடத்தல்காரர்களும் ஒருங்கிணைய ஆரம்பிப்பார்கள். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கடத்தல் நடந்துவிடும்.

 

ஓகே. இந்தக் கதையின் அடுத்த டி ஹேஷ் ஥ அத்தியாயத் திற்கு வருவோம்.

 

டைம் லூப்பில் மாட்டிக் கொண்டது போல மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாம். ஆழ்வா ஆயில் நிறுவனம் தனது, Against fat என்கிற ஜிங்கிள்ஸை டி ஹேஷுடன் இணைத்து ட்விட்டரில் வெளியிடுகிறது: ஥Againstfat

 

இந்த ஹேஷ்டேக் கடத்தலில் பெருமளவில் எதிர்த்து நிற்பது அல்லது தடுத்து நிற்பது டி ஹேஷ்தான் என்பதை இங்கு விரிவாக விளக்குகிறேன். அதாவது, பழைய ஹேஷ்டேக் என்பது வெறுமனே ஒரு குறிச் சொல்லுக்கான ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே செயல்படும் தன்மையை முன்பே விளக்கியிருந்தேன். ஆனால், டி ஹேஷின் பரிமாணம் என்பது பன்மையத் தன்மை கொண்டது என்பதையும் கடந்த பக்கங்களில் மிக விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறேன்.

 

அந்த விளக்கங்களை நினைவில் கொண்டு அடுத்ததாக நகருங்கள். காலங்காலமாக போட்டுக் கொண்டிருக்கும் ஹேஷ்டேக்குடன் இணைந்த ஜிங்கிள்ஸை எதிர்கொள்ளும் பயனாளர்களின் மன நிலை, இந்தப் புதிய டி ஹேஷுடன் இணைந்த ஜிங்கிள்ஸை எதிர்கொள்ளும் போது பெரிதும் மாற்றத்துக்குள்ளாகும். புதிய எண்ணங்களுக்கு வழிகோலும்.

 

அதாவது, மாற்றுப் பார்வைகளின் தன்மை கொண்ட டி ஹேஷுடன் இணைந்த ஥Against fat என்னும் டி ஹேஷ் “கொழுப்புக்கு எதிராக’ என்ற வார்த்தையாக மட்டுமில்லாது, “போலிகளுக்கு எதிராக’ – ஥Against fake  – என்ற அர்த்தத்தை மிக நுட்பமாக பயனாளர்களுக்கு உணர்த்தி விடும். இதுவரை யிலான சந்தையில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணெய் வகை அல்ல இது, இது புதிது, தற்காலங்களில் கவனப்படும் இயற்கை சார்ந்த செக்கு எண்ணெய்! கொழுப்பற்ற, மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய எண்ணெய்!

 

ஆக முதல் இன்னிங்ஸ்லேயே பாதிப்பேர் அவுட்!

 

அடுத்ததாக, லைக் போடுபவர் வருகிறார். டி ஹேஷைப் பார்க்கிறார். புருவத்தை உயர்த்தி வியப்படைகிறார். முதலில் செலவழித்த நேரத்தை விடவும் சற்று அதிக மணித்துளிகளை இதில் செலவளித்து, டிஹேஷுடன் இடுகையிடப்பட்டிருக்கும் சுட்டியை க்ளிக் செய்து, சம்பந்தப்பட்ட ஆழ்வா தளத்திற்குச் சென்று பார்க்கிறார். பிறகு அகமலர்ச்சியுடன் லைக் போட்டு விட்டு ஒரு ட்வீட்டும் போடுகிறார்.

 

அடுத்து வரும் விஷயபூர்வமானவர், டி ஹேஷைப் பார்த்ததும், நெற்றியைச் சுருக்குகிறார். ஆழ்வா தளத்திற்குச் சென்று பார்வையிடுகிறார். பிறகு, “இரும்புச் செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, கொழுப்பு கரைந்து விடுமா? கொழுப்புடன் சேர்ந்து சில மருத்துவ குணங்களும் கரைந்து போவதாகச் சொல்லப்படுகிறதே.. மரச்செக்கில் ஆட்டும் எண்ணெய் பாரம்பரியமானதா?, இரும்புச் செக்கிலா?” என்று ட்வீட் இடுகிறார். அவருடன் மாற்றுப்பார்வை என்றால் என்ன என்ற ரீதியில் இன்ட்ராக்ட் நடக்கிறது.

 

அடுத்து கலாய்ப்புப் பயனாளர் வருகிறார். டி ஹேஷைப் பார்க்கிறார். இது ஏதோ புதிதாக, புதிராக இருக்கிறதே என்று ஆழ்வா தளத்திற்கு ஒரு எட்டு போகிறார், ஒரு இனம் புரியாத எச்சரிக்கை உணர்வு ஏற்படுகிறது. “இந்த எண்ணெய் எந்த வயதில் இருப்பவர்கள் பயன்படுத்தலாம்..?” என்று பவ்வியமாக வருகிறது அவர் குரல். இதுதான் கடத்தல் நகர்வினை, தடுத்தலின் முதல் கட்டம்.

 

படபடவென்று போட்டி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடத்தல்காரர்களும் திகைத்துத் திணற ஆரம்பிக்கிறார்கள். கடத்தலுக்கு எதிராக ஒரு கேடயமாக நின்றிருக்கும் டி ஹேஷின் பல்வேறு பரிமாணங்களிலும் முட்டி மோதுகிறார்கள். கடத்தல் தடுப்பு நடவடிக்கை ஒரு பன்மையைத் தன்மை கொண்ட குறியீடாக அங்கு அமர்ந்திருக்கிறது.

 

இந்த டி ஹேஷ் ஥ அத்தியாயத்தை நான், ஏதோ ஒரு நாடகத்தனமாகச் சொல்லியிருப்பது போல நீங்கள் அபிப்ராயப்படலாம். நானும், கற்பனைக் காட்சிகள் சேர்த்து கொஞ்சம் கூட்டிக் குறைத்துச் சொல்லியிருக்கலாம். ஆனால், யதார்த்தம் இதுதான்!

 

எனில், டி ஹேஷை இணைத்து பதிவிடும் டி ஹேஷ்களை கடத்தவே முடியாது என்றெல்லாம் ஆணித்தரமாக இங்கு சொல்ல வரவில்லை. ஹேஷ்டேக் கடத்தலை விடவும், டி ஹேஷைக் கடத்துவதற்கான வாய்ப்பு சதவிகிதம் மிகமிகக் குறைவு என்று அறுதியாகச் சொல்ல முடியும்.

 

மற்றபடி, “சர்வலோக நிவாரணி’ என்கிற ரீதியில் நான் டி ஹேஷை முன் வைக்கிறேன் என்று அஞ்ச வேண்டாம், மற்றும் வஞ்ச வேண்டாம். இது சமூக ஊடகங்களில் காலங்காலமாய் கட்டமைந்து வந்திருக்கும் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுப் பார்வையை உண்டாக்கும் பின்-நவீன குறிச்சொல்!

 

****

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page