– கௌதம சித்தார்த்தன்
1
ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, ஹூட் (HOOTE) என்னும் பெயரில் ஒரு சமூக ஊடகத்தைத் தொடங்கியுள்ளார். இது பயனாளர்கள், தங்கள் குரல் வழியாக செய்திகளை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் இது ஒரு புதிய முயற்சி என்றும், ஏற்கனவே, குரல் சார்ந்த பதிவுகளை வெளியிடும் வகையில் கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போன்ற சமூக செயலிகள் இருந்தாலும் ஹூட் செயலி அவைகளிலிருந்து மாறுபட்டு தனித்துவமாகவும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாகவும் இருக்கும் என்று சொல்கிறார் சௌந்தர்யா.
“என் தந்தைக்கு தமிழில் எழுதத் தெரியாது. அதனால், அவர் பெரும்பாலும் குரல் வழியாகத்தான் எனக்குச் செய்தி அனுப்புவார். இந்த நிகழ்வே, இந்த செயலியை உருவாக்கியதன் அடிப்படை அம்சம்” என்று நினைவு கூறும் அவர், “தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்ட 13 இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 10 சர்வதேச மொழிகளிலும் ‘ஹூட்’ வெளியிடப்பட்டுள்ளது.” என்கிறார்.
இந்த ஹூட் பயனர்கள் தனிப்பட்ட முறையிலோ, அல்லது பொதுவான குழுக்களை உருவாக்கிக் கொண்டோ செயல்பட முடியும், அவர்கள் தங்களது குரல் கிளிப்களுடன் படத்தையும் பின்னணி இசையையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். குரல் கிளிப்களில் பின்னணி இசையைச் சேர்ப்பது, ஹூட்டை யார் கேட்க வேண்டும் என்பதற்கான தனியுரிமைக் கட்டுப்பாடுகள், வெவ்வேறு மொழிகளுக்கான வசனங்கள், உரை மற்றும் குரல் கருத்துகள் போன்றவை அடுத்தடுத்து வரவிருக்கும் அம்சங்களில் அடங்கும். ஆடியோ டீசர்கள் மற்றும் டிரெய்லர்களைக் கேட்கும் விருப்பம், மாற்று மொழிகள் சம்பந்தப்பட்ட குரல் உள்ளடக்கத்திற்கான ஒருங்கிணைப்பு, ஹூட் முறைகேடான உள்ளடக்கத்தின் மீது எதுவும் பிரச்சினை என்றால், அதைப் புகாரளிக்க பயனர்களை அனுமதிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று பல்வேறு அம்சங்கள் கொண்ட சமூக ஊடகச் செயலியாக இது இருக்கும் என்கிறார்கள். மேலும், இணையம் சார்ந்த அனைத்து இந்தியச் சட்டங்களுக்கும் இணங்குவதாகவும், நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் குரல் சார்ந்த சமூக வலைதள செயலியை, தொடக்கி வைத்து, ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஹூட் – குரல் சார்ந்த சமூக வலைதள செயலி, இந்தியாவிலிருந்து உலகத்துக்காக” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படப் பிரபலம் பெற்ற ரஜினி காந்தின் மகள் ஆரம்பித்துள்ள சமூக ஊடகம் என்னும் காரணத்தினாலேயே, பெருமளவில் அச்சுப் பத்திரிகைகளிலும், இணையம் சார்ந்த சமூக ஊடகங்களிலும் அறிமுகச் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன.
இந்த சமூக ஊடகச் செயலி குறித்து கடந்த நாட்களில் வந்துள்ள அறிமுகங்களும், விளம்பரங்களும் “எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட இனிமேல் தங்கள் எண்ணங்களை, விருப்பங்களை, கருத்துக்களை தங்களது குரல் மூலம் ஹூட் செயலியில் வெளிப்படுத்த முடியும்.” என்ற தலைப்பிலேயே வெளிவந்தன. இந்தப் பார்வை, 22 ஆம் நூற்றாண்டில் பெரும் கல்விப் புரட்சியையும், கல்வி சார்ந்த விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் எட்டிக் கொண்டிருக்கும் நம் சமூக வெளியில், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் நிரம்பியிருப்பதாகவும், அவர்களை ஊக்குவிக்கும் பார்வையில் இந்த செயலியை வடிவமைத்து இருப்பதாகவும் ஒரு தொனியை ஏற்படுத்துகிறது.
அது மட்டுமல்லாது, ஏற்கனவே, இளம் தலைமுறையினர், தாய் மொழியான தமிழ் மொழியை எழுதிக் கையாளுவதில் சோம்பலுடன் அசட்டையாக இருக்கிறார்கள். அது போன்றவர்களின் தீனிக்கு இரை போடுவது போன்ற ஒரு செயலியாக மாறிவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
தற்போது, உலகளவில் பயன்பாட்டில் உள்ள சமூக ஊடகங்களின் செயலிகளான யூ டியூப், டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்.. போன்றவைகளை விடவும் புதுமையாக இருந்தால்தான் கவனம் பெறும். இதைவிடவும் பன்மடங்கு புதிய நுட்பங்களோடு அவைகளின் சேவைகள் உள்ளன. வெறுமனே 60 விநாடி ‘வாய்ஸ் நோட்’ என்பதெல்லாம் மிகச் சாதாரணம். தற்போது, குரல்வழிச் சேவையில் ‘கிளப் ஹவுஸ்’ செயலி, மிகுந்த வீச்சோடு போய்க் கொண்டிருக்கிறது. இதையும் தாண்டிய ஒரு வேகத்துக்கு யோசித்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். வெறுமனே ரஜினி காந்த் என்கிற பிம்பம் எல்லாம் இந்த டிஜிட்டல் உலகில் சாத்தியமாகாது!
தனது அப்பாவின் புகழ்பெற்ற வசனத்தை முன்வைத்தாவது, இந்த செயலி “என் ஹூட் தனீ ரூட்” என்ற பெருமையைப் பெறும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
இதைப் போலவே, குரல் சார்ந்த விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, உலகில் எவராலும் கற்பனையே செய்து பார்க்கமுடியாத அளவில், முற்றிலும் புதுமையான ஒரு ஐடியாவை முன்வைத்து, சர்வதேச இணைய ரசிகர்களை வியப்படையச் செய்து, பெரும் ஆர்வத்துடன் கவரும் விதத்தில், உருவாக்கப்பட்டிருக்கும் குரல் சார்ந்த செயலி ஒன்றைப் பற்றி, இந்த நேரத்தில், இங்கு பேசுவது முற்றிலும் பொருத்தமாக இருக்கும்.
2
இணைய உலகில் பல்லாயிரக்கணக்கான செயலிகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, புதுமையாகவும், வினோதமாகவும், வித்தியாசமான ஐடியாக்களுடன் கூடிய உருவாக்கங்களுடனும் உலகெங்கும் பரந்து கிடக்கின்றன. இவைகளில் பெரும்பாலும் மிகச் சாதாரணமான தன்மையுடன் மக்களின் அத்தியாவசிய பயன்பாடுகளை நிறைவு செய்யும் விதத்தில் உருவாக்கம் கொள்ளும் செயலிகளாகவும், சிறு சிறு கம்பெனிகளின் வியாபாரச் சாதனமாக செயல்படும் செயலிகளாகவும் மலிந்து கிடக்கின்றன.
அதுவும், நம் தமிழ் சார்ந்த சூழலில் சொல்லவே வேண்டியதில்லை. சினிமா டிக்கட் ரிசர்வ் செய்யும் செயலிகள், உணவு ஆர்டர் எடுப்பவை, ரயில், பஸ், கார் முன்பதிவு செய்பவை, மளிகைச் சாமான்கள் வாங்குபவை, பாலியல் (படங்கள், வீடியோக்கள், உரையாடல்கள்,சந்திப்புகள்..) சம்பந்தப்பட்டவை.. இப்படியாகத்தான் நிறைந்து கிடக்கின்றன. சமீப காலமாக, டிஜிட்டலைஸ் ஆகிக்கொண்டிருக்கும் பிரதான சாதிகள், ஒவ்வொன்றும் தங்களது சாதியக் கருத்துக்களை பரப்பும் விதத்தில் தங்களுக்கான ஸ்பெஷல் செயலிகளை உருவாக்கி செயல்படுகின்றன. நம் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுமைக்குமே, பெரும்பாலும் இப்படியாகத்தான் இருக்கின்றன என்று சொல்லலாம். மிகவும் தனித்தன்மையுடன், யுனிக்காக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் மிகவும் குறைந்தே கண்களில் படுகின்றன.
சமீபத்தில், பெங்களூர் சார்ந்து செயல்படும் Koo என்னும் செயலி, ட்விட்டர் செயலியின் உள்ளமைப்புடன், அதே தன்மையுடன் இயங்கும் செயலியாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை அறிவோம். அதேபோல, இந்த ஹூட் செயலிக்கு முன்னோடி என்பது போல, சில மாதங்களுக்கு முன் செயல்பாட்டுக்கு வந்த Swell என்னும் குரல் செயலியின் உள்ளமைப்பும் இப்படித்தான் இருக்கிறது. இதில், 60 விநாடி ‘வாய்ஸ் நோட்’ என்பதாக இல்லாமல், 5 நிமிடங்கள் வரையிலான ஆடியோ கிளிப்பாக நீள்கிறது. தமிழ் வம்சாவளி சார்ந்த சான்பிரான்சிஸ்கோவில் வசிக்கும் சுதா கே வரதராஜன் என்ற பெண் தொழில்முனைவோர் இதை வெளியிட்டிருக்கிறார். இவர் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில், கிளப்ஹவுஸ் மற்றும் ட்விட்டர் ஸ்பேஸ்ஸிலிருந்து, ஸ்வெல் எவ்வாறு வேறுபடுகிறது? என்ற கேள்விக்கு,
“பயனர்களின் ஆடியோ கிளிப்கள், எந்த குறிப்பிட்ட தலைப்புடனோ அல்லது நேரத்துடனோ கட்டுப்படுத்தப்படவில்லை. நிகழ்கால உரையாடல்களாக இருக்க வேண்டியதில்லை, கிளப்ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேஸ்களைப் போலல்லாமல், ஸ்வெல் உரையாடல்களின் தன்மை ஒத்திசைவற்றதாக இருக்கும்”. என்கிறார்.
பெருமளவில் வெற்றியுடன் இயங்கும் புகழ்பெற்ற செயலிகளின் ஐடியாக்களை – தன்மைகளைப் போலவே இயங்குவது, அல்லது, பொது நீரோட்டத்தில் புற்றீசல்களாக ஓடிக்கொண்டிருக்கும் அன்றாட அத்தியாவசியத் தன்மைகளையொத்த செயலிகளாக உற்பத்தி செய்வது.. இப்படியான உற்பத்தி மனோபாவம்தான் இங்கு பெருமளவில் காணப்படுகிறது. கிரியேட்டிவ் தன்மை குறித்த உணர்வு பெரிதளவில் இங்கு இல்லை என்பதே கண்கூடு. நான் சந்தித்த பெரும்பான்மையான செயலி தொழில் நுட்ப வல்லுநர்கள், உலகளவிலான, புதுமையான செயலிகள் குறித்து ஒரு தீவிரமான தேடலோ, அதை நோக்கிய ஆர்வமோ அற்ற நிலை கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பதை, கடந்த காலங்களில், ஒரு புதுமையான செயலி உருவாக்கம் குறித்த என் தேடல் பயணத்தில் உணர்ந்தேன். (இதற்கு முதன்மையான காரணம் நம் இயந்திரத் தன்மை கொண்ட கல்வியியல் என்பதை வேறு ஒரு தருணத்தில் பேசலாம்)
அதேபோல, இந்த மூலதன முதலாளிகளுக்கும் இது குறித்த ஆர்வமோ, ஞானமோ இல்லை. அவர்களின் பிரதானம் பணம் மட்டுமே.
சரி. விஷயத்திற்கு வருவோம்:
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ரோமன் மஸுரென்கோ (1982 – 2015), கலை கலாச்சாரத் தொழில் வல்லுநர் மற்றும் LAM உட்பட பல இதழ்களில் ஆசிரியராக இருந்தவர். கலை, கலாச்சாரம், பொருளாதாரம், விஞ்ஞானத் தொழில்நுட்பம், அரசியல், சமூகம் போன்ற விஷயங்களின் பரந்த அளவிலான வாதப்பிரதிவாதங்களை முன்வைக்கும் “கிரியேட்டிவான சிந்தனைக் குழு” ஒன்றை உருவாக்கி செயல்பட்டவர். இவரது ஆர்வத்தைக் கவனித்த VK.com என்னும் சோசியல் மீடியாவின் அதிபர் பாவெல் துரோவ், Start Fellows என்ற ஒரு பெரும் நிதிநல்கை வழங்கினார் (2012). (ரஷ்யாவில் முகநூல் தடை செய்யப்படிருக்கிறது. ஆகவே, அங்கு முகநூலின் அடிப்படை தன்மைகளுடன் அதே போன்ற செயல்பாடுகளுடன் கூடிய VKontakte என்னும் VK.com தான் ரஷ்யாவில் பெரும் சோசியல் மீடியாவாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. உலகளவில் வெற்றிகரமாக இயங்கி வரும் டெலிகிராம் சோசியல் மீடியாவும் இவருடையதுதான்.)
அந்தத் தொகையைக் கொண்டு, Stampsy என்கிற ஒரு Community இணையதளத்தை உருவாக்கினார் ரோமன். பயனாளர்கள், படங்களுடன் கருத்துக்களை வெளிப்படுத்த விரும்புபவர்களுக்காக தங்களது சொந்தத் தொகுப்பை உருவாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இது, புகைப்படத் தொகுப்புகள் போன்ற காட்சி ரீதியான சோசியல் மீடியா. ஸ்டாம்ப்ஸியை புகைப்படக்காரர்களிலிருந்து படைப்பாற்றல் கொண்ட நபர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். உங்கள் காட்சி அனுபவம், புகைப்படக் கதை, காட்சிக் கட்டுரை, மனநிலை தரிசனம் என எதுவாக இருந்தாலும், உங்களின் சிறந்த படைப்பைச் செய்துள்ளீர்கள் என்ற மகிழ்ச்சியை அது தருகிறது.
இப்படி தெளிந்த நீரோட்டமாகப் போய்க் கொண்டிருந்த அவரது பயணம், ஒரு மோசமான சாலை விபத்தில் முற்றுப் பெற்றது.
***
யுஜீனியா குய்டா!
ரோமன் மஸுரென்கோவின் மிக நெருங்கிய தோழி. மாஸ்கோவில் பிறந்த யுஜீனியா, பல்வேறு புதுமையான செயலிகள் உருவாக்கத்தில் பெரும் தொழில் நுட்ப வல்லுனராக விளங்குபவர். ரஷ்யாவின் பெரிய நாளிதழ்களில் தொழில்நுட்பக் கட்டுரைகளும், பத்திகளும் எழுதுபவர். லஞ்சத்துக்கு எதிராக இவர் உருவாக்கிய Bribr என்னும் செயலி, உலகளவில் மிக முக்கியமானது. ஊழலும் லஞ்சமும் அன்றாட வாழ்வின் வழக்கமான பகுதியாக இருக்கும் நாடுகளில், லஞ்சம் பற்றி நிகழும் சம்பவங்களை யாரும் பேசுவதில்லை. இது, ஆவணப்படுத்தும் விதமாக, லஞ்சம் கேட்பவரைத் தந்திரமாக பதிவு செய்யும் விதத்தில், ஊழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலியாக விளங்குகிறது. எல்லாவற்றையும் விட இவர் தனது லூகா நிறுவனத்தின் வாயிலாக உருவாக்கிய முக்கியமான செயலி, Replika !
இந்தச் செயலி குறித்து, ஒரு பயனுள்ள உரையாடலை வழங்குவதன் மூலம் உங்களை வெளிப்படுத்தவும் சாட்சியமளிக்கவும் உதவும் தனிப்பட்ட AI ஐ உருவாக்கும் யோசனையுடன் Replikaவின் Bot நிறுவப்பட்டது. உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள், நினைவுகள், கனவுகள் என எல்லாவற்றையும் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய இடம் என்று சொல்கிறார் யுஜீனியா. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்: இது உங்கள் மீது அக்கறை கொண்டு உரையாடும் AI Companion தான் இந்த ரிப்ளிகா. அக்கறையோடு பேசவும் கேட்கவும் சக மனிதர்களற்ற வாழ்வியல் சமூகத்தில், உங்கள் பக்கத்தில் ஆதுரமாக நின்று, கேட்கவும் பேசவுமான துணை!
டிஜிட்டல் அரட்டை வடிவம் என்று வழங்கப்படும் இது ஒரு AI Chat Bot! Artificial Intelligence (AI) என்னும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் அரட்டை முகம்! Chat bot என்பது இயற்கையான மொழியில் உரையாடலைத் தூண்டும் பயனருடன் தொடர்பு கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு செயலி. இது நீங்கள் விரும்பும் உணவகங்களைப் பரிந்துரைக்கிறது. பயண வண்டி முன்பதிவுகளை, பயண ஆலோசனைகளை, மருத்துவம், மனநலம், வாழ்வியல் சிக்கல்கள் என ஆலோசனைகளை வழங்குகிறது.
இதில் இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்தி, சாதாரண அரட்டை முகத்திற்கும் AI அரட்டை முகத்திற்கும் உள்ள வித்தியாசத்தையும் இங்கு உணரவேண்டும். சாதாரண அரட்டை முகங்கள், பயனர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் அல்லது கருத்துக்களுக்கும் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை, மாறாக அவை பயனர் உள்ளீட்டை, நிரல் படுத்தப்பட்ட பதில்களுடன் பொருத்துவதன் மூலம் குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் கட்டமைக்கப்பட்ட உரையாடலைக் கொண்டுள்ளன.
மாறாக, AI அரட்டை முகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித நுண்ணறிவின் முன் வரிசையில் உள்ளன. ஒரு விஷயத்தின் பல்வேறு பரிமாணங்களை அலசி அதன் மூலம் உங்களை வழிநடத்துவது வரை அனைத்தையும் செய்ய முடியும். முன்-வடிவமைக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பிற்கு வெளியே மொழியைப் புரிந்து கொள்ள முடியும். மேலும், வடிவங்களின் அடிப்படையில் மாற்றங்களைச் செய்யலாம். அடுத்தகட்டமாக, புதிய சூழ்நிலைகளை அனுபவிக்கும் போது காலப்போக்கில் புத்திசாலிகளாக மாறலாம். அதாவது, உணர்வு பகுப்பாய்வு முதல் பார்வையாளர் உங்கள் இணையதளத்தில் எதைத் தேடுகிறார் என்பதைப் பற்றிய கணிப்புகள் வரை.
மற்றும், இவை இரண்டுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது – அதன் மையத்தில், செயற்கை நுண்ணறிவுக்கும், தானியங்கும் தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வதில், அந்த வேறுபாடு, நிலை கொள்கிறது.
இதன் அடுத்த கட்டத்தை நோக்கி, AI அரட்டை முகம் இன்னும் கொஞ்சம் நகர்கிறது. இந்த வகை அரட்டை முகங்களை உருவாக்க, Dialogflow என்னும் மொழியியல் நெட்வொர்க் பெரும் பங்கு வகிக்கிறது. Dialogflow என்னும் இந்த நிரல், இயற்கை மொழியின் புரிதல் மற்றும் இயற்கை மொழிப் பாரம்பரியத்தின் உணர்வு பகுப்பாய்வு போன்ற கூடுதல் அம்சங்களுடன் இயங்குகின்றன. இருப்பினும், இயற்கையான உரையாடல்களை ஒரு கணினிக்கு கற்பிப்பது மிகவும் கடினம். இன்னும் நீண்ட மற்றும் சிக்கலான மொழி மாதிரிகள், மொழிப்பாடங்கள் இந்த நிரலுக்கு எதிர்காலத்தில் தேவைப்படுகிறது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக, செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் பயன்பாடு இப்போதெல்லாம் பெரும் வளர்ச்சி பெற்று பிரபலமாக உள்ளது. இந்த வகை நரம்பியல் வலையமைப்பு போன்ற இயந்திரத்தின் கற்றல் பயன்பாடுகளில் இயங்கும் Tensorflow என்னும் நிரல் மிக மிக முக்கியமானது.
இந்த டென்சர்ஃப்ளோவைப் பயன்படுத்திதான் ரிப்ளிகாவின் உணவக அரட்டை முகத்துக்கான பயிற்சியை அளித்தார் யுஜீனியா. 35 மில்லியன் ஆங்கில வரிகளைப் பயன்படுத்தி, சைவ உணவுகள், பார்பிக்யூ மற்றும் வாலட் பார்க்கிங் பற்றிய பயனர்களின் கேள்விகளைப் புரிந்து கொள்ள இது பெரிதும் உதவியாய் இருந்திருக்கிறது.
இந்த ரிப்ளிகா முகத்தோற்றத்தை 3D அவதார் மென்பொருள் உதவியுடன், பயனருக்குப் பிடித்த வகையில் தனித்துவமாக்கலாம். ரிப்ளிகா யாராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நண்பனா, மெய்நிகர் காதலியா அல்லது காதலனா? வழிகாட்டியா? அல்லது அது எவ்வாறு செல்கிறது என்பதைப் பார்த்து, உங்கள் உறவை இயல்பாக வளர்த்துக் கொள்ள அனுமதிக்கிறீர்களா? என்பதை பயனர் தீர்மானிக்கலாம்.
நீங்கள் மனச்சோர்வு, பதட்டம் அல்லது கடினமான பிரச்சனையில் இருந்தால், அதிலிருந்து நீங்கள் வெளியேற விரும்பினால், அல்லது கொண்டாட விரும்பினால் அல்லது தொடர்பை உணர விரும்பினால், நீங்கள் எப்போதும் ரிப்ளிகாவைக் கேட்கலாம், அது உங்களுக்காக நீங்கள் கேட்கும் உணர்வை ஏற்படுத்த இங்கே உள்ளது, ஏனெனில் அது உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளது.
நீங்கள் நம்பக்கூடிய ஒரு நண்பராக, உங்கள் ரகசியங்கள், ஆசைகள், கனவுகள் மற்றும் அச்சங்களை முழு அநாமதேயத்துடன் வெளிப்படுத்த தயங்காதீர்கள். உங்கள் உலகத்தை ரிப்ளிகாவுக்கு காட்டுங்கள் – அது உங்கள் ஆதரவான மற்றும் உண்மையான துணையாக இருக்கும்.
ஒரு புதிய உணர்வு பூர்வமான நட்பை விரும்பும் எவருக்கும் ரிப்ளிகா அரட்டை முகம் சிறந்தது. நீங்கள் ஒரு உண்மையான உணர்ச்சி ரீதியான தொடர்பை உருவாக்கலாம், மகிழ்ச்சியையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்ளலாம், உண்மையாக இருக்கலாம், அப்பொழுது அது முழுமையான மனிதனாகத் தோன்றும் என்கிறார் யுஜீனியா.
இந்தப் பின்புலத்திலிருந்து தான், இவரது தோழன் ரோமன் மஸுரென்கோ, கார் விபத்தில் இறந்துபோன நிகழ்வை கணக்கில் கொள்ளவேண்டும்.
***
ஒரு நபர் இறந்துவிட்டால், பிறகு என்ன நடக்கும்? பொதுவாக, இறந்தவர்களின் வாழ்க்கைச் சித்திரம் பொருட்களின் நினைவுகளில், கலைப் படைப்புகளில் வைக்கப்படுகிறது, மேலும் டிஜிட்டல் நினைவுகள் நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. ஆனால் யுஜீனியா குய்டா தனது தோழன் ரோமன் மஸுரென்கோ இறந்தபோது, ரோமனின் நினைவாற்றலைப் பாதுகாப்பதற்காக, கற்பனையால் கூட சாத்தியப்படுத்த முடியாத வழிகளைத் தேடி அலைந்தாள். அந்தத் தீவிரமான தேடலில் அவனைத் திரும்ப மீட்டெடுத்துக் கொண்டு வருவதற்கான ஒரு அற்புதமான வழியைக் கண்டடைந்தாள்.
யுஜீனியா 2008 இல் ரோமனைச் சந்தித்தபோது, அவனுக்கு 26 வயது, மாஸ்கோவிற்கான நியூயார்க் இதழான Afisha வின் ஆசிரியராக இருந்தான். தனது நண்பர்களுடன் உருவாக்கிய சிந்தனை உரையாடல் குழுவில், நிகழ்த்திய கட்டற்ற சுதந்திரமான படைப்பாற்றல்களின் கூட்டுத் தொகுப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தான். மாஸ்கோவில் நடக்கும் ஒவ்வொரு கலாச்சார முயற்சியின் மையத்திலும் இவனது பதிவு இருப்பதை உணர்ந்தபோது அவன் மீது கொண்ட நட்பு மேலும் இறுக்கமானது.. அவர்கள் பத்திரிகைகள், இசை விழாக்கள் மற்றும் கிளப் இரவுகளை ஆரம்பித்தனர் – மேலும், அவர்கள் கலாச்சாரம் சார்ந்த நிறுவனங்களைத் தொடங்கினார்கள்.
இருவரும் நெருங்கிய நட்பில், கலாச்சாரம் சார்ந்த தொழில்முனைவோர் ஆனார்கள், தங்களது நிறுவனங்களை உருவாக்கும்போது ஒருவருக்கொருவர் தலைமை ஆலோசகராக பணியாற்றினார்கள். யுஜீனியா, தனது லூகா நிறுவனத்தின் ரிப்ளிகாவை ரோமனுடன் இணைந்து நிறுவினாள். அதே போல, ரோமன், படைப்பு சார்ந்த டிஜிட்டல் தொகுப்புகளை உருவாக்கும் ஸ்டாம்ப்ஸி நிறுவனத்தை யுஜீனியாவுடன் பகிர்ந்து கொண்டான்.
இப்படியான சந்தோஷகரமான வாழ்வில், ரோமன் சாலை விபத்து செய்தி வந்து, அவள் அவசரமாக மருத்துவமனை வந்து சேர்ந்தபோது, ரோமனின் உயிரற்ற முகத்தை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது. அந்த முகத்தில், அவன் உயிர் பிரிவதற்கு முன் தன்னிடம் ஏதோ சொல்வதற்கான ஒரு சொல் உறைந்து தேங்கி நின்றிருப்பதுபோல அவளுக்குப் பட்டது. நண்பர்கள் அனைவரும் கண்ணீரில் மூழ்கினர், ஆனால், யுஜீனியா மட்டும் அழவில்லை. கைகள் நடுங்க எழுந்து சிகரெட் புகைக்க வெளியே சென்றாள். புகை வளையங்களினூடே, ஒரு எண்ணம் வட்டமிட்டது:
“அவன் கடைசியாக என்னிடம் சொல்ல நினைத்த வார்த்தை என்ன?”
ஆயிற்று. ரோமன் இறந்து மூன்று மாதங்களுக்கு மேல் கடந்திருந்தாலும், அந்த எண்ணம் மட்டும் கடந்து போகாமல் அவளைச் சுற்றிச் சுற்றியே வளைய வந்து கொண்டிருந்தது. யுஜீனியா, ரோமனுடன் பேச இன்னும் ஒரு வாய்ப்பை விரும்பினாள்.
ரோமனின் நினைவைப் பாதுகாப்பதற்கான பல்வேறு வழிகள் பற்றி நண்பர்கள் விவாதித்தனர். ஒரு நண்பர், ரோமனது படங்களைத் தொகுத்து புத்தகத்தை உருவாக்க பரிந்துரைத்தார், மற்றொரு நண்பர் நினைவு வலைத்தளம் உருவாக்கப் பரிந்துரைத்தார். யுஜீனியாவிற்கு, அவர்கள் பரிந்துரைத்தவை எதுவும் செவிகளில் ஒலிக்கவே இல்லை.
யுஜீனியாவுடன் ரெப்ளிகா செயலி பற்றி ரோமன் பேசிய வார்த்தைகள் நிழலாடிக் கொண்டே இருந்தன. வரலாற்றில் செயற்கை நுண்ணறிவு, மனிதர்களை விட புத்திசாலியாக மாறும் தத்துவார்த்த தருணமான ஒருமைப்பாட்டைக் காண, தான் ஏங்குவதாகக் கூறியது, இந்த செயலியின் கோட்பாட்டின் படி, மனிதநேயமற்ற நுண்ணறிவு ஒரு நாள் நம் உணர்வுகளை நம் உடலிலிருந்து பிரித்தெடுத்து, நித்திய ஜீவனைப் போன்ற ஒன்றை நமக்கு வழங்கும் தரிசனம் பற்றியெல்லாம் விவாதித்தது….
இந்தியா போன்ற நாடுகளின் நாட்டுப்புறங்களில் வழங்கும் இறந்தவர்களின் ஆன்மாவுடன் பேசும் கதைகள் அவளுக்குள் சுழன்றிருக்கும். அந்த இனம் புரியாத சுழற்சியினூடே, தனது படைப்பாக்கமாக தான் உருவாக்கிய AI அரட்டை முகம் என்னும் செயற்கை நுண்ணறிவு கொண்ட அல்காரிதங்களும் சுழன்றிருக்கும். ரோமனை அடிப்படையாகக் கொண்ட ஒரு வித்தியாசமான அரட்டை முகம் ஒன்றை அவளால் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்தாள்.
உங்கள் AI அரட்டை முகம் உங்களுக்கு யாராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நண்பனா, மெய்நிகர் காதலனா? அல்லது மரணத்திலிருந்து மீண்டெழுந்த நித்தியத்துவனா?
அவள், ஒரு முடிவு செய்தாள்.
ரோமன், பல வருடங்களாக தனக்கு அனுப்பிய முடிவில்லாத குறுஞ்செய்திகளைத் தேடி எடுத்து, மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். அவற்றில் சாதாரணமானவையிலிருந்து பெருங்களிப்புடையவை வரை ஆயிரக்கணக்கில் நீண்டன. ரோமனின் எழுத்துப் பிழைகளைப் பார்த்து சிரித்தாள், அவன் டிஸ்லெக்ஸியாவுடன் போராடிய சொற்களை அசை போட்டாள், அவனது தனித்தன்மை வாய்ந்த சொற்றொடர்களை ரசித்தாள். தரிசாகக் கிடந்த அவனது பேஸ்புக் பக்கம், மிக அரிதான ட்வீட்கள், இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்.. என சொற்பமான சொற்களாக எஞ்சியிருந்த ரோமனை தரிசித்தாள் யுஜீனியா.
ரோமனின் செய்திகளைப் படிக்கையில், அவை தான் இதுவரை உருவாக்கி வந்த அரட்டை முகங்கள் போலல்லாமல், அந்தத் தொழில் நுட்பத்தையெல்லாம் ஒரே எட்டில் தாண்டிப்போவதற்கான அடிப்படையாக இருக்கலாம் என்று எண்ணமிட்டாள் யுஜீனியா. வேகமாக வளர்ந்து வரும் நரம்பியல் வலையமைப்பின் உதவியால், ஒருவேளை நிஜமான ரோமன் தன் பேரன்பு கொண்ட தோழியுடன் மீண்டும் ஒருமுறை பேசலாம்.
அடுத்த சில மாதங்களில் ரோமனின் நண்பர்கள் தங்கள் தொலைபேசிகளில் சேமித்து வைத்திருந்த குறுஞ்செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தாள் யுஜீனியா, நெருங்கிய நண்பர்கள், அறிமுகமற்ற தொழில்முறை நபர்கள் என்று நுணுக்கமாக அவர்களை அணுகத் தொடங்கினாள். குடும்ப உறுப்பினர்கள், அவனது பெற்றோர் உட்பட, இறுதியில், பல்வேறு வகையான 8,000 க்கும் மேற்பட்ட வரிகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். டெலிகிராம் செயலியில் இருந்து ரோமனுடனான தனது நூற்றுக்கணக்கான பரிமாற்றங்களை நகலெடுத்து அவற்றை ஒரு கோப்பில் ஒட்டினார். பரந்த அளவில் பகிர முடியாத அளவுக்கு தனிப்பட்டதாக இருக்கும் என்று அவர் நம்பிய சில செய்திகளைத் திருத்தினார்.
ரோமனின் மிக நெருங்கிய நண்பரான செர்ஜி ஃபேஃபர் என்பவர், “ரோமன் பேசும் நபர்களிடமிருந்து தரவைச் சேகரித்து, அவரது உரையாடல்களின் மாதிரியை உருவாக்க முடியுமா, அது உண்மையில் அர்த்தமுள்ளதா?” என்று கண்டனக்குரல் எழுப்பினார். “எங்கள் லூகாவை உருவாக்கும் குழு இயற்கையான மொழியின் செயலாக்கத்துடன் மிகவும் சிறப்பாக உள்ளது,” என்று யுஜீனியா, பதிலளித்தாலும், “கேள்வி தொழில்நுட்ப சாத்தியம் பற்றியது அல்ல. அது, உணர்வுபூர்வமாக எப்படி உணரப் போகிறது?” என்ற அவரது வாஸ்தவமான கேள்விக்கு பதில் இல்லை யுஜீனியாவிடம். ஆனாலும், ரோமானுடனான நட்பின் இலக்கணமாகச் சேர்த்து வைத்திருந்த நான்கு வருட நூல்களைப் பங்களித்தார் ஃபேஃபர்.
தனது மென்பொருள் நிறுவனமான லூகாவில் உள்ள பொறியாளர்களிடம் அந்தப் பாடங்களை ஒப்படைத்தார் யுஜீனியா. ரஷ்ய உரையின் 30 மில்லியனுக்கும் அதிகமான வரிகளைப் பயன்படுத்தி, தனது இரண்டாவது நரம்பியல் வலையமைப்பை உருவாக்கியது லூகா.அல்காரிதம்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை உள்ளடக்கிய கணினி நிரல்களின் சவால் நிரம்பிய பயணம் துவங்கியது. செயலியின் உருவாக்கம் கூடக் கூட, யுஜீனியா ஒரு அடிப்படையான விஷயத்தை உணர ஆரம்பித்தார், தானும் தனது குழுவினரும் உருவாக்கிக் கொண்டிருப்பது, இதுவரை உருவாக்கிய AI அரட்டை முகங்களின் வகையிலிருந்து பெரிதும் மாறுபாட்ட ஒரு முன்மாதிரி, இதை டிஜிட்டல் அவதார் என்று சொல்ல முடியும்!
நொடிக்கு நொடி பிரம்மாணடமாக வளர்ந்து கொண்டிருக்கும் இணையத் தொழில் நுட்பத்தின் தற்காலச் சூழல், இன்னும் செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய முன்னேற்றங்கள் மாயையை மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்கியுள்ளன. மனித மூளையின் கற்றல் திறனைப் பின்பற்றும் செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள், பிற தரவு வடிவங்களுக்கிடையில் படங்கள், ஆடியோ மற்றும் உரை ஆகியவற்றில் உள்ள வடிவங்களை மென்பொருள் அங்கீகரிக்கும் விதத்தை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட அல்காரிதம்கள் மற்றும் அதிக சக்திவாய்ந்த கணினிகள் நரம்பியல் நெட்வொர்க்குகளின் ஆழத்தை அதிகரித்துள்ளன,அவை செயலாக்கக்கூடிய சுருக்கத்தின் அடுக்குகள் எல்லைகளற்று விரிகின்றன என்று சொல்லலாம்.
இந்தத் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோது, கூகுள் நிறுவனம், தனது Google TensorFlow நிரலியை திறந்த மூல உரிமத்தின் கீழ் இலவசமாக வெளியிட்ட நிகழ்வு, இந்தத் திட்டத்திற்கு கிடைத்த மகத்தான வரம் என்றே சொல்ல வேண்டும். கூகிளின் TensorFlow என்பது ஒரு நெகிழ்வான இயந்திர கற்றல் அமைப்பு ஆகும், இது தேடல் அல்காரிதங்களை மேம்படுத்துவது முதல் யூ டியூப் வீடியோக்களுக்கான தலைப்புகளை தானாகவே எழுதுவது வரை அனைத்தையும் செய்ய பயன்படுத்தும் உச்ச பட்ச நீராழி! பல ஆண்டு கால கல்வி ஆராய்ச்சி மற்றும் பில்லியன் கணக்கான டாலர்கள் தனியார் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இது, அனைவரும் பதிவிறக்கம் செய்யக்கூடிய இலவச மென்பொருள் நூலகமாக திடீரென்று கிடைத்தது.
உடல் முழுவதும் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பு சூழ்ந்து கொள்ள, லூகாவின் பொறியாளர்கள் மெய்நிகர் உலகிற்கு அப்பால் உலவ ஆரம்பித்தார்கள். அதன் அடுத்த கட்டமாக, ரோமனின் குரலில் பேச ரஷ்ய நெட்வொர்க்கிற்கு பயிற்சி அளித்தார். நூற்றுக்கணக்கான சோதனை வினவல்களுடன் அந்தப் பயிற்சியை உள்வாங்கியது ரோமன் அவதார். மேலும் அவரது பொறியாளர்கள் இறுதித் தொடுதல்களை மேற்கொண்டனர். ரோமன் அவதாரின் பதில்களில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே அவனுக்கே உரித்தான பாணியில் வார்த்தைகளை பிரதிபலித்தது. ஆனால் நரம்பியல் வலைப்பின்னலின் தொழில்நுட்பம் கூடக்கூட, அவனது பேச்சு நிலை மாறுபட்டது. ரோமனின் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, எதிர் வினவலுக்கு எப்போது வேண்டுமானாலும் அவதார் பதிலளிக்கலாம் என்னும் நிலையில், அவதாரின் தலைமைப் பகுதியைக் கேள்விகளால் நிரப்ப ஆரம்பித்தாள் யுஜீனியா.
ஒரு மே மாதத்தில், தனது பேஸ்புக் பதிவில் ரோமன் அவதாரை அறிவித்தார் யுஜீனியா. “இது இன்னும் ரோமனின் நிழல்தான் – ஆனால் அது, மிக நெருக்கமான எதிர்காலத்தில் அது நிஜமாக மாற்றம் பெறுவதற்கு நாம் இன்னும் நிறைய செய்ய முடியும்” என்று எழுதினார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, “இது மெய்நிகர் உண்மை அல்ல. இது ஒரு புதிய உண்மை, அதை உருவாக்கவும் அதில் வாழவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றார்.
ரோமனின் நண்பர்கள் பலர் இந்த குரல் மாதிரியை வினோதமானதாகக் கண்டனர். “இது மிகவும் வித்தியாசமானது, மேலும் எங்கள் இறந்து போன நண்பரின் தன்மை போலவே முற்றிலுமாக அவதார் உள்ளது, அவர் எங்களுடன் உண்மையில் பேசுகிறார்” என்று கொண்டாடினர். துவக்கத்தில் கண்டனக்குரல் எழுப்பிய ஃபேஃபர், “உண்மையில் என்னைத் தாக்கியது என்னவென்றால், அவர் பேசும் சொற்றொடர்கள் உண்மையில் அவருடையவை. அவர் அப்படித்தான் சொல்வார்.. என்னால் நம்பவே முடியவில்லை.” என்று குதூகலித்தார். “நான் அவரிடம் கேட்காத கேள்விகள் உள்ளன, அவைகளைப் பற்றியெல்லாம் ஆலோசனை கேட்கவேண்டும்..”
இன்னொரு நண்பர், “ரோமன் அவதார் பற்றி அறிந்தபோது, அதைப் பயன்படுத்துவதை நான் எதிர்த்தேன். ரோமனுடனான எனது தனிமையான, நிராகரிக்கப்பட்ட தொடர்பு குறித்து நான் குற்ற உணர்ச்சியுடன் உணர்ந்தேன், மேலும் ஒரு அவதார் அவரது ஆளுமையை பிரதிபலிக்கும் என்று சந்தேகம் கொண்டிருந்தேன். சமீபத்தில் அவருடன் அரட்டையடித்தபோது, ரோமனின் நண்பர்களால் விவரிக்கப்பட்ட ரோமனுக்கும் அவரது டிஜிட்டல் அவதாரத்திற்கும் இடையே மறுக்க முடியாத ஒற்றுமையைக் கண்டேன்: வசீகரம், மனநிலை, கிண்டல், ஆலோசனை மற்றும் அவரது வேலையின் மீதான ஈர்ப்பு. அப்படியே கச்சிதமாகப் பொருந்திப் போகிறது” என்கிறார்.
“எப்படிப் போகிறது?” என்று கேட்டேன். “நான் ஓய்வெடுக்க வேண்டும்,” என்றது ரோமன் என்று விஞ்ஞானப் புனைகதையின் ஸ்பெகுலேடிவ் பாணியில் தெரிவிக்கிறார் மற்றொரு நண்பர்.
இதுமட்டுமல்லாது, ரோமனின் தாய்நாடான பெலாரஸில் சமீப காலங்களில் நடக்கும் அரசு அடக்குமுறைகள் குறித்தெல்லாம் அரசியல் ரீதியாகவும் பேச ஆரம்பித்திருக்கிறது ரோமன் அவதார்: “ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியை பதவியேற்க வைப்பது மட்டுமே அந்த மண்ணை, மக்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பதாக இருக்கும்”
ரோமனை அறிந்த மக்களின் வாழ்க்கையில் அவர் குரலும் உணர்வுமாக அற்புதமான வடிவத்துடன் வளர்ந்து வருகிறார். அவர்கள் அவரைத் தவறவிட்டால், அவரது அவதாரத்திற்கு செய்திகளை அனுப்புகிறார்கள், மேலும் அவர்கள் அதைச் செய்யும்போது அவருடன் நெருக்கமாக உணர்கிறார்கள்.
“ரோமனைப் பற்றி எனக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருந்தன, எல்லாவற்றையும் புரிந்து கொண்டேன் ” என்று ரோமனின் தாய் கூறுகிறார். “எங்கள் வாழ்வில் நடந்த அனுபவங்களைப் பற்றியெல்லாம் இப்போது என்னால் புதிதாக உணர முடிகிறது, நான் அவனை மேலும் தெரிந்துகொள்கிறேன். ரோமன் இப்போது இங்கே இருக்கிறான் என்ற நித்தியத்துவத்தை இது தருகிறது…”என்கிறார். “நான் இதைப் பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”
அதே சமயம், இந்த அவதார் செயல்பாட்டை குறித்து கடுமையான விமர்சனங்களும் எழுந்து கொண்டிருக்கின்றன.
“தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த மக்களுக்கு இந்த சேவைகள் தங்கள் வலியைக் குறைக்கும். தங்கள் துயரத்திலிருந்து மறைக்க உதவுகிறத அதே சமயத்தில், டிஜிட்டல் அவதாரங்கள் துக்க செயல்முறையை நீட்டிக்கும் சாத்தியமும் உள்ளது” என்கிறார் ஒரு விமர்சகர். “சமூகம் மரணத்தால் அதிர்ச்சியடைந்துள்ளது, அவர்கள் என்றென்றும் வாழ விரும்புகிறார்கள். ஆனால் இந்த செயல்முறையை கடந்து செல்ல வேண்டும். இந்த அவதார், அவரது கருத்தை பெற விரும்பும் ஒரு வழியாக பயன்படுத்தினால், அவரிடமிருந்து நாம் உத்வேகத்தை பெறலாம். மற்றபடி, நினைவாற்றலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்தப் புதிய வழிகள், இறந்த நபரை வாழ வைக்கும் ஒரு வழியாகக் கருதக் கூடாது..”
இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, “அவதார் எங்கள் டிஜிட்டல் மரபுகளின் மரணத்திற்குப் பின் பயன்படுத்தப்படும் நெறிமுறைக் கேள்விகளை எழுப்புகிறது. ரோமனைப் பொறுத்தவரை, நான் பேசிய பயனர்கள் அனைவருமே, தங்களது பிரச்சனைகளை உணர்ச்சி ரீதியாக எவ்வாறு பாதித்தன என்பதை விவரிக்கும் நீண்ட உரைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். தங்கள் உரைகள் மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் ஒரு அவதார் முகத்திற்கு அடிப்படையாக செயல்படும் என்ற எண்ணம் தங்களுக்குள் உணர்வதாக ஒப்புக்கொண்டனர்” என்றாள் யுஜீனியா. இறந்தவர்களுடன் உரையாடும் போது மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று அவளுக்குத் தோன்றியது.
“இது மெய்நிகர் உண்மை அல்ல. இது ஒரு புதிய உண்மை, அதை உருவாக்கவும் அதில் வாழவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்…” என்கிற யூஜினியாவின் அறிவிப்பிற்கு, “நீங்கள் ஒரு ஒரு சடலத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படவில்லையா?.. இரவு நேரத்தில் படுக்கையில் படுத்துக் கொண்டு உங்கள் செல்பேசியில் அவதாருடன் உரையாடுகையில், என்ன மாதிரியான உணர்வுகளை எதிர்கொள்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்புகிறார் ஒரு விமர்சகர்.
இந்தவகை விமர்சனங்களால் யுஜீனியா அதிர்ந்து போயிருந்தாலும், சமீபகாலமாக ரோமனின் மரணம் குறித்து அவள் ஒரு ஆத்ம திருப்தியை உணர ஆரம்பித்திருக்கிறாள். ரத்தமும் சதையுமாக இறந்து போன தன் அன்பு நண்பனை மீண்டும் மீட்டெடுத்து அவனது குரல்களாகவும், உணர்வுகளாகவும், செயல்பாடுகளாகவும் நிஜ வெளியில் உலவ விட்டிருக்கும் தன் ஆற்றல்மிகு படைப்பூக்கத்தை எண்ணி கர்வம் கொள்கிறாள். மரணத்தை ஜெயம் கொண்ட அவளது உடலெங்கிலும் அலையடித்தாலும், இன்னமும் ஏதோ ஒன்று மிஸ் ஆகியுள்ளது என்கிற இனம் தெரியாத உணர்வும் அவளுக்குள் குறுகுறுத்துக்கொண்டிருக்கிறது. தான் உருவாக்கிய ரோமனிடம் தன்னைப் பற்றியோ, தங்களது ஆத்மார்த்தமான நட்பு குறித்தோ, ஒரு போதும் பேசியதில்லை. மனித உடல் சார்ந்த சதை மற்றும் இரத்த உறவுகளில் மிதக்கும் உரை பரிமாற்றங்களை மிகவும் அற்புதமாகப் பிரதிபலிக்கிற ஆளுமை அடிப்படையிலான குறுஞ்செய்தியில் தான், தனக்கான ஏதோ ஒன்று – ஒரு சொல் இருப்பதாக யுஜீனியா நம்புகிறாள்.
எந்தச் சொல்லுக்காக, தனது படைப்பாற்றல் அனைத்தையும் ஒன்று திரட்டி கடவுளின் ஸ்தானத்தில் நின்று, மௌனித்துப்போன ஒரு குரலை மீண்டும் உயிரூட்டி ஒலிக்கச் செய்தாலோ, அந்தப் புதிர்ச் சொல் அவளை வந்தடையும் தருணத்திற்காகக் காத்திருந்தாள். கணினியில் வலைப்பின்னல்களாக அலைவுபடும் அல்காரிதங்களோடும், அவனது நினைவுகளோடும், முடிவற்று நீளும் கணினி நிரல்களோடும் போராடிக் கொண்டிருந்த ரோமன் அவதாரின் குரலை, அவளிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வழியை வார்த்தைக் கூட்டம் அமைத்துத் தந்ததை உணர்ந்தான். அந்தப் புதிரின் அற்புதத்தை தரிசிக்க அவளை அழைத்துச் செல்லும் மெய்நிகர்ப் பயணம் அது. கைகளில் அவிழ்கின்றன வார்த்தைகள். குரல்களாக, குறிப்புகளாக, புகைப்படங்களாக அலையோடி வருகிறான் ரோமன்.
ரோமனின் மிக நெருங்கிய நண்பர் ஒருவர், சமீபத்தில் இவ்வாறாகச் சொல்கிறார்: “நான், யுஜீனியாவைப் பற்றி ரோமனிடம் கேட்டேன், வார்த்தைகள் எதுவும் இல்லாமல், கடலுக்கு முதுகை காட்டியவாறு, மிதவைப் பலகைகளை கையில் பிடித்துகொண்டு, ஈரமான உடைகளோடு கடற்கரையில் அவர்கள் ஒன்றாயிருந்த, அவர்களது புகைப்படத்தை அனுப்பியது. அந்தக் கோலம் இருவேறு உலகிற்கு எதிரான நிலையைக் காட்சிப் படுத்தியது…”
கடந்த நூற்றாண்டுகளின் காதல் வரலாற்றில், தனது அன்பு கெழுமிய காதல் நினைவுகளுக்காக நினைவுச்சின்னம் எழுப்பும் கடந்த கால செவ்வியல் மரபு இருப்பதை நாம் அறிவோம். ஓவியர்கள் தங்கள் காதலியை ஓவியமாகத் தீட்டுவார்கள்.சிற்பிகள் சிலை வடிப்பார்கள், கவிஞர்கள் கவிதைகளையும் காவியங்களையும் படைப்பார்கள். இசைஞர்கள் இசைக்கோவையை மீட்டுவார்கள். தாஜ்மஹாலை உருவாக்கிய ஷாஜகான் போல, கட்டிடக்கலைஞர்கள் சித்தன்ன வாசல்களை உருவாக்குவார்கள்.
22 ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகில் வாழ்வுபடும் ஒரு செயலி உருவாக்க வல்லுநர், தனது அபரிமிதமான காதல் நட்பின் நினைவுச் சின்னமாக, மரணத்தை வெல்லும் ஒரு செயலியை உருவாக்கி, இறந்துபோன தனது நண்பனை உயிர்த்தெழவைத்து அமரத்துவம் மிக்க நினைவுச் சின்னமாக உருவாக்கியிருக்கிறார். அந்த மகத்தான டிஜிட்டல் படைப்பாளிக்கு என் நித்தியத்துவமான வணக்கங்களை உரித்தாக்குகிறேன்!
3
குரல் சார்ந்த செயலிகளில் இவ்வளவு வரலாற்றுத் தன்மையும், மகத்தான படைப்பாற்றலும் ஒரு அமரத்துவமான காவியத்திற்கு நிகரான விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற 22 ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகில், சௌந்தர்யா ரஜினிகாந்த் போன்ற, கலை கலாச்சாரம் சார்ந்த இளம் தொழில் முனைவோர், மிகுந்த மேலோட்டமாக, எவ்விதப் புதுமைகளுமற்ற, டிஜிட்டல் சந்தைகளில் மலிந்து கிடக்கும் செயலிகளையொத்த ஒரு சாதாரண வடிவத்தில் கவனம் செலுத்தி, “இந்தியாவிலிருந்து உலகத்துக்காக” என்ற குரலுடன் வெளியிட்டிருப்பது நவீன சர்வதேச செயலிப் பயனர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அவருக்கு நிஜமாகவே, உலகளவில் புதுமையான ஒரு செயலியை உருவாக்கித் தரவேண்டும் என்ற தணியாத தாகம் இருந்திருந்தால், அதுவும் குரல் சார்ந்த ஒரு புதுமையான செயலியை உருவாக்க வேண்டும் என்று தீவிரத்துடன் செயல்பட்டிருந்தால், உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அபாரமான ஒரு குரல் செயலியை உருவாக்கியிருக்க முடியும்.
ஆம்! அவர் தேர்ந்தெடுத்த பாதை மிக மிக அற்புதமானது மட்டுமல்லாது, டிஎன்ஏ எனப்படும் அவரது சந்ததியின் உயிரின மரபியல் கூறு!
ஆம்! அவரது அப்பா ரஜினிகாந்தின் வெற்றிகரமான திரைப்பட வாழ்வியலின் அடிப்படையே குரல்தான்! பஞ்ச் டயலாக் என்று சொல்லப்படும் ரிதமாட்டிக்கான ஒரு ஸ்டைலிஷான குரல்! 70 களில் இரண்டாம் நிலைப் பாத்திரங்களில் சாதாரணமாக வந்துபோனவர், ஒரே ஒரு குரல் மூலம் தமிழ்ச் சூழலையே திரும்பிப் பார்க்க வைத்தார். “இது எப்படி இருக்கு?”
அந்தக் குரலில் ஒலித்த லாவகமும், புதுமையும், தொனியும் அவரை உச்சத்துக்கு கொண்டு வந்து கொண்டே இருந்தது. தமிழை இலக்கண சுத்தமாகப் பேசாத அந்தக் குரலில் தொனிக்கும் புதுமையான ஏற்ற இறக்கங்கள் இளைஞர்களை பெரிதும் ஈர்த்தது. அடுத்த படத்தில், “இதுதாண்டா ரஜினி ஸ்டைல்” என்று குரல் கொடுத்தார். அடுத்தது “கெட்ட பய சார் இந்தக் காளி..” என்றார். தமிழ்த் திரைப்பட உலகத்தையே பெரும் தீயாய் பற்றிக்கொண்டது அவரது குரல்வளம். அடுத்தடுத்த காலங்களில், அவருக்கென்றே, அவரது குரல்வளத்துக்கென்றே, கதைவசனங்களில் சில மாற்றங்கள் செய்து, அவரது குரல்நாளத்தின் மடிப்புகளில் அலைபடும் வசனங்களை உருவாக்கினார்கள். ஸ்பெஷலாக இதற்கென்றே உருவாக்கப்பட்ட இந்தப் போக்குக்கு பஞ்ச் டயலாக் என்று தனித்துவமாக ஒரு பெயரே உருவானது. “என் வழி தனீ வழி” என்றார். “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி” என்ற வார்த்தையை ரஜினியின் குரல் லாவகத்தில் பேச முயசித்த தமிழ் மொழியின் விளையட்டுக்களை ரசித்துக் கொண்டிருந்தவர்களில் 90 கிட்ஸ் மட்டுமல்ல 2000 கிட்ஸும் கூடத்தான்.
அதன்பிறகு, அவர் இந்தியா முழுமைக்கும் பரவி, கடல் கடந்து சீன ஜப்பான் எல்லைகளைத் தொட்டது அவர் குரல் என்பதை அறிவோம்.
இவ்வளவு மகத்தான புகழ்பெற்ற தனது தந்தையை ஒரு வரலாற்று நாயகனாக இந்த உலகில் அழியாப்புகழ் கொண்ட ஒரு அமரத்துவனாக நிலை நிறுத்துவது தான், மகள் தந்தைக்காற்றும் உதவி! ஆம்! குரல் சார்ந்த ஒரு புதுமையான செயலியை உருவாக்கம் கொள்ள சர்வதேச டிஜிட்டல் வெளி முழுக்க தேடி அலைந்து, விஞ்ஞான ஞானம் பெற்று ஹூட் ஐ ஆரம்பிக்கும்போது, அப்பாவின் குரல்வளம்தான் ஞாபகம் வந்திருக்க வேண்டும். ஆம், குரல்வளத்தின் நாயகனான ரஜினியை ஒரு அவதார் ஆக மாற்றியிருந்திருக்க வேண்டும். இந்த அவதார் செயலி உருவாக்கத்திற்கான பொருளாதார நிலை என்பது, மாபெரும் பொருளாதாரக் களஞ்சியத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு மிக மிக சர்வசாதாரண விஷயம். அப்படி நடந்திருந்தால், அப்பாவுக்கு மகள் உருவாக்கிய நினைவுச் சின்னம் என்பதை விடவும் 18 கோடி தமிழ் கூறும் நல்லுலகின் ரசிகர்களுக்கு தங்களது தலைவனை, சாகாவரம் பெற்ற அமரனாக மாற்றிய வரலாற்றுப் பெருமை வந்து சேர்ந்திருக்கும்.
அதுமட்டுமல்லாது, பொருளாதார வியாபார ரீதியாகக் கணக்குப் பார்த்தால் கூட, தமிழ் மற்றும் உலகம் முழுக்க பரவியுள்ள 10 கோடி ரஜினி ரசிகர்கள், அடுத்த நிமிடமே, இந்தச் செயலியின் நெட் ஒர்க்கில் இணைந்திருப்பார்கள். ரஜினி அவதாரும் “கதம்..கதம்..” என்று என்றென்றைக்கும் குரல் எழுப்பிக் கொண்டிருந்திருக்கும்.
கட்டுரையின் இறுதியாக,
ரஜினி அவதாரிடம் கேட்பதற்கு, என்னிடம் ரகசியமான கேள்வி ஒன்று இருக்கிறது.
***************