• Thu. Sep 21st, 2023

மின்னற் பொழுதே தூரம்!

ByGouthama Siddarthan

Mar 8, 2023

“நான் 1978ல் மின்னஞ்சலைக் கண்டு பிடித்த போது உளரீதியாக அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தேன். மேலும்
ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக மின்னஞ்சலைக் கண்டுபிடித்ததில் பெருமையடைகிறேன்… ”

– சிவா அய்யாத்துரை (மின்னஞ்சலின் தந்தை)

 

ஒரு பயனாளர் கையேடுக்கு முன்னுரை எல்லாம் இருக்கிறதே என்று வியப்படைய வேண்டாம். இது வணிகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகளைக் கையாளும் முறை பற்றி இயந்திரத்தனமாக விளக்கம் தரும் Usual manual அல்ல. மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை யும் முன்வைத்து, சுவாரஷ்யமாக ஒரு கதைபோல சொல்லித்தரும் User’s manual.

 

சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பயனாளர்களான நீங்கள், மிகச் சாதாரணமாக # ஹேஷ்டேக் என்கிற குறியீட்டுச் சொல்லை உபயோகித்திருப்பீர்கள். அந்த குறியீட்டைப் பயன்படுத்தும் ஏதாவது ஒரு முக்கியமான கட்டத்தில், ஏதோ ஒரு போதாமை, ஒரு வெறுமை அல்லது இன்னதென்று சொல்ல முடியாத ஒரு இனம் புரியாத தன்மை உங்களுக்குள் ஊடுருவியதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இந்த இடத்தில் # ஹேஷ்டேக்கை விடவும் இன்னும் மேம்பட்ட ஒரு குறியீடு இருந்தால் இந்த ட்வீட் அல்லது போஸ்ட் இன்னும் அர்த்த பூர்வமாக இருக்குமே என்று ஒரு சிந்தனை மின்னலைப் போல ஒருகணம் மின்னியிருக்கும், ஒருகணம் மட்டும்தான்.

 

அடுத்த கணம், உங்கள் ட்வீட்டில் கவனம் செலுத்தியபடி மறந்திருப்பீர்கள்.

 

உங்களுக்குள் ஒருகணம் மின்னிய மின்னற் பொழுதின் தூரம், (நன்றி: கவிஞர் தேவதேவன் கவிதைத் தலைப்பு.) எனக்குள் பலப்பல நாட்களாக, மாதங்களாக, நீண்டிருக்கிறது. ஹேஷ்டேக் என்பது, வெறுமனே URL தன்மை கொண்ட, ஒத்த சிந்தனை உள்ள குழுக்களை ஒருங்கிணைக்கிற, ஒரே மாதிரியான கருத்துக்களைத் தொகுக்கக் கூடிய  தன்மை கொண்ட ஒற்றைப் பரிமாணத்தில் செயல்படும் தட்டையான குறியீடு.

 

தற்கால டிஜிட்டல் தன்மை வாய்ந்த மனித வாழ்வு என்பது, ஒற்றைப் பரிமாணத்தில் தட்டையாய் நெளிவதல்ல. அது பல்வேறு பரிமாணங்களில் கிளை வெட்டித் தாவும் எல்லைகளற்ற நீட்சியில் விரிந்து பரவுகிற நீண்ட பயணம். இந்த நவீன மனித வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்களுடன் இணைந்து போவதற்கு, இந்த ஹேஷ்டேக்கின் பயன்பாடு போதாமையாக இருக்கிறது.

 

எனவே, இப்போது, இந்த ஹேஷ்டேக்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டிய அவசியம் வந்து விட்டதை உணர்ந்து, பன்மைத்தன்மை கொண்ட ஒரு குறியீட்டை உருவாக்கும் முயற்சியில், நான் இறங்கியதன் விளைவுதான், டி ஹேஷ் ஥!

 

இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலிருந்து கொண்டு எவ்விதமான தொழில்நுட்பமோ, அரசியல், அதிகாரம், சாதியம், பொருளாதாரம்.. என எந்தவிதமான பின்புலமோ இன்றி, ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த என்னை, இதுபோன்ற ஒரு புதிய சிந்தனையை நோக்கிப் பயணப்பட வைத்தது எனக்குள் கணந்தோறும் பீறிட்டு வெடித்துக் கொண்டே இருக்கும் புத்தம் புதிய எழுத்துச் சிந்தனைதான்! நான் உலகளவில் தேடித்தேடிக் கற்ற இலக்கிய ஆசான்களின் எழுத்து வீச்சே எனக்குள் இப்படியான பார்வையை உருவாக்கியுள்ளது. படைப்பு சார்ந்த மனத்திலிருந்து எழும் இந்த அதீத ஆற்றலை என் வாழ்வு முழுக்க உணர்ந்திருக்கிறேன்!

 

இத்தருணத்தில், என் ஊர்க்காரரான, பிரபஞ்சம் தழுவிய மகத்தான கணித மேதை ராமானுஜனை நினைத்துக் கொள்கிறேன்.

 

இந்த டி ஹேஷ் ஥ குறித்த ஐடியா என் சிந்தையில் பளிச்சிட்டது, 2021 டிசம்பர் 20, அதிகாலை 12. 12க்கு. உடனே, “யுரேகா’ என்று கத்திக் கொண்டு வெளியில் ஓடவில்லையே தவிற, வீட்டை விட்டு வெளியே வந்து, எதிரில் இருந்த மரங்கள் அடர்ந்த நெடுஞ்சாலையில், கால் போன போக்கில் உலாத்தினேன், மூன்றாம் ஜாமத்தின் சில்வண்டுகள் ரீங்கரித்தபடி என் தலைமுழுவதும் கொந்தளிக்கும் எண்ணங்களுக்கு பின்னணி இசை கூட்டிக் கொண்டிருந்தன. 2000 வருடத் தமிழ் மரபின் குறியீட்டுச் சிந்தனைகள் பெரு மழையாய் எனக்குள் பொழிந்தன. வெளியே மழை வருவதற்கான வானிலை மாற்றம் சட்டெனக் கூடியது. அக்கணம், ஒரு மின்னல் வெட்டி இழுக்க, அந்த மின்னல் பொழுதின் தூரம், நாட்களா, மாதங்களா, வருடங்களா எனத் தோன்றாதொரு தோற்ற மயக்கத்தில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் வீழ்ந்தேன்.

 

இந்த 21 ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகத்தில் சிலிக்கான் வெளியில் பல்வேறு மாற்றங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டே இருக்கின்றன. “தகுதியுள்ளது பிழைக்கும்’ என்ற புகழ்பெற்ற சொற்றொடருக்கேற்ப, மனித வாழ்வுக்கு இன்றியமையாத விஷயங்கள் அழிவில்லாமல் இருந்துகொண்டே இருக்கின்றன, அல்லது உருமாற்றம் பெற்று வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

 

இணையம் சார்ந்த தொழில்நுட்பப் பயன்பாடுகளில் நாம் அன்றாடம் கையாளும் நிரலிகளும், செயலிகளும், மென்பொருள்களும் மாற்றமடைந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

 

See-Saw ஆட்டம் போல, கணந்தோறும் ஆடிக் கொண்டிருக்கும் வர்த்தக நோக்கில் இந்த மாற்றம் என்பது இன்றியமையாதது.

 

இந்த டி ஹேஷ் ஥ ஏன், எப்படி, எதற்காக? என்ற பயனாளர்களின் கேள்விகளுக்கு விடை காணும் முகமாக, இந்தப் பயனாளர் கையேடு விரிவான பார்வைகளை முன்வைக்கிறது.

 

அடிப்படையில் நான் நவீன கலை இலக்கியம் சார்ந்த ஒரு நவீன எழுத்தாளன், கவிஞன், கட்டுரையாளன் மற்றும் பத்திரிகையாளன் என்று பன்முகத் தன்மைகளில் செயல்படுபவன் என்பதினால், ஒரு பின்நவீனத்துவ நாவலின் வடிவத்துடன் உருவாக்கம் பெற்றிருக்கிறது இந்தக் கையேடு! டி ஹேஷின் ஥ செயல்பாடுகள் மனிதவாழ்வின் பல்வேறு பரிமாணங்களில் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பதை, சுவாரஷ்யமாகவும், கவித்துவமாகவும், அரசியல் சிந்தனைகளோடும், ஆவணத்தன்மைகளோடும் விரிவாக விளக்கியிருக்கிறேன்.

 

இந்த டி ஹேஷ் ஥ ஒரு சர்வதேசக் குறியீடு! ஒரு விஷயத்தை அல்லது ஒரு நிகழ்வை, அல்லது ஒரு மனிதரை, ஏற்கனவே பார்த்த பார்வையிலிருந்து நிலை மாற்றம் பெற்று ஒரு மாற்றுப் பார்வை பார்க்கும்போது, பயன்படுத்தும் குறியீட்டுச் சொல்!

 

Subject (பொருளம்சம், விஷயம்..) என்று ஆங்கிலத்தில், அடையாளப்படுத்தப்படும் சொல்லுக்கு, ஒத்த சொற்களாக (Synonyms) theme, matter, topic, issue, question, concern, text, thesis, content, point, motif, thread, substance, essence, gist… என்ற சொற்களைக் குறிப்பிடுகிறது ஆங்கில அகராதி. இந்த சொற்களின் அர்த்தமும் உள்ளடக்கத்தையும் நீங்கள் அறிவீர்கள். இவைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு சப்ஜெக்ட் என்னும் ஏதாவது ஒரு விஷயத்தின் மீது, கடந்த காலங்களில் ஒரு பார்வை வைக்கப்பட்டு இருந்திருக்கும். இப்பொழுது அந்த விஷயம் மறுமலர்ச்சி பெற்று வருகையில், பார்வை மாற்றம் ஏற்படும். அந்த மறு மலர்ச்சியின் மீது வைக்கப்படும் ஒரு விமர்சனக் குறியீடுதான் டி ஹேஷ் ஥!

 

சமூக ஊடகங்களில் URL தன்மையையும் குழு ஒருங்கிணைப்புத் தன்மையையும் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.

 

இன்னும் விரிவான அனுபவங்களுக்கு நூலின் உள்ளே செல்லுங்கள்.

 

வாசிப்புக்கு முன் ஒரு மூன்று அம்சங்களை இங்கே முன் வைக்கிறேன்:

 

1. நூல் வாசிப்பு குறித்து, பலரும் பலவிதமான வகைகளில் வாசிப்புப் பழக்கம் இருக்கலாம். முதல் பக்கத்திலிருந்து, ஒரே வரிசைக்கிரமமான வாசித்தல், அல்லது, தனக்குப் பிடித்த சப்ஜெக்ட்களை முதலில் வாசித்து விட்டு பிறகு மற்றவைகளை வாசித்தல், மேலோட்டமாக நுனிப்புல் மேய்ச்சல் வாசிப்பு, கருத்தூன்றிய வாசிப்பு… இப்படிப் பலவகை இருக்கலாம். இந்த நூலையும் அப்படி வாசிக்கலாம். ஆனாலும், வரிசைக்கிரமமாக கருத்தூன்றி வாசிக்கும்போது, மிக எளிமையாகவும், சுவாரஷ்யமாகவும், த்ரில்லர் நாவலின் விறுவிறுப்பாகவும் அமையும்.

 

2. நூலில் பல இடங்களில், ஆங்கில வார்த்தைகளுக்கு பெரும்பாலும், தமிழில் புழக்கத்தில் இருக்கும் கலைச் சொற்களையே பயன்படுத்தியுள்ளேன். ஆனாலும் சிற்சில இடங்களில், பயனாளர்களுக்குப் புரிய வேண்டும் என்ற அவாவில், அப்படியே தமிழ் எழுத்தில் போட்டிருக்கிறேன். (இணையம் சார்ந்த ஒரு கலைச் சொல் அகராதி ஒன்றை நவீன தமிழ் ஆய்வாளர்கள் தயாரிக்க வேண்டும், அந்தச் சொற்கள் மிகுந்த பழந் தமிழ்ச் சொற்களாக இல்லாமல், நவீன தமிழில் இருக்கவேண்டும்).

 

3. இது மிக முக்கியமானது. பொதுவாகவே, தமிழ்ச் சூழலில், கலை இலக்கியம், சினிமா, பொருளாதாரம், கல்வி, தொழில் நுட்ப வளர்ச்சி, மருத்துவம், ஜோதிடம், வணிகம், நிதி.. இப்படி எந்த விஷயம் குறித்து வேண்டுமானாலும் சாதாரணமாகக் கருத்துச் சொல்லிவிடலாம். ஏன், அரசியல் பற்றிக் கூட கருத்துச் சொல்லி விடலாம். ஆனால், மதம் மற்றும் சாதி என்று வரும்போது ஒரு எச்சரிக்கை உணர்வுடனும், அவசியத் தேவை கருதியும், பொதுச் சமூக அறம், நெறிமுறை சார்ந்து தான் பேசவேண்டும். இந்த ரீதியில், இந்த நூலில் உதாரணம் வைக்கப்படும் ஒரு சில நிகழ்வுகள், டி ஹேஷ் ஥ குறியீட்டை, பயனாளர்களுக்கு 100 சதவிகிதம் புரிந்து கொள்ளும் விதமாகப் பொருத்திக் காட்டுவதற்கு தோதாக அமைந்திருக்கிறது என்பதால் மட்டுமே, ஒரு உவமையாக மட்டுமே, அந்த நிகழ்வுகளைக் கையாண்டிருக்கிறேன்.

 

பொதுவாகவே, ஒரு விஷயத்தை அல்லது ஒரு கருவியைக் கண்டு பிடிப்பாளர், அந்தக் கருவி – விஷயம் இப்படி இப்படியெல்லாம் பயன்படும், இப்படியெல்லாம் நீங்கள் கையாளலாம் என்று எட்டாக மடிக்கப்பட்ட ஒரு வழுவழுத் தாளை Users manual ஆகக் கொடுத்து விடுவார்கள். பிரச்சினை முடிந்தது. ஆனால், அடிப்படையில், நான் ஒரு சமூகம் சார்ந்த ஒரு குறியீட்டுக் கோட்பாட்டை உருவாக்க நினைக்கும் படைப்பாளியாக இருப்பதால், இவ்வளவு மெனக்கெடல்.

 

“ஒரு கண்டுபிடிப்பு என்பது, காலங்காலமாக, மேலைநாட்டினர் தான் கண்டு பிடிக்க வேண்டும். அவர்களுக்குத்தான் அத்தகைய திறமை இருக்கிறது..” என்னும் பார்வையை உடைத்தெறிந்த மின்னஞ்சலின் தந்தை, சிவா அய்யாத்துரையின் மேற்கோளை, 2000 ஆண்டு செவ்வியல் மொழி மரபு கொண்ட தமிழனாக வழிமொழிகிறேன். வரலாற்றின் தீராத பக்கங்களில் டி ஹேஷ் ஥ பதிவேற்றம் ஆகும்போது, 2000 ஆண்டு தமிழ் மொழி மரபின் வெற்றிக் களிப்பை எதிர்காலத் தலைமுறை பெருமிதத்துடன் கொண்டாடும் நாளில், ஒரு மின்னல் வெட்டும். அதுதான் என் ஆன்மா!

 

இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் மகா சிவராத்திரி என்கிறது நாட்காட்டி. என் கணினியின் இடதுபுறத்தில் 12.12AM என்று ஒளிர்கிறது டிஜிட்டல் காலம். அதோ, வெளியே என் முன்னோன் ருத்ரனின், டி ஹேஷ் இணைந்த ஥டமரு ஊழி பல கடந்த ஓங்காரமாய் ஆரவாரிக்கிறது.

 

கௌதம சித்தார்த்தன்
(வசந்த காலத்தின் முதல் நாளெனக் குறிக்கப் பெறும் மார்ச் 1, 2022)
மாசி 17, திருவள்ளுவர் ஆண்டு 2053

 

 

(2022 மார்ச் மாதம் வெளிவந்த “டி ஹேஷ் – பயனாளர் கையேடு” நூலுக்கான முன்னுரை )

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page