• Wed. Nov 29th, 2023

“மாற்றம் என்பது முடிவுறாதது”

ByGouthama Siddarthan

Mar 8, 2023

ஹேஷ்டேக் தந்தை கிறிஸ் மெசினாவுடன் ஒரு நேர்காணல் 

 

நேர்காணல் : மரியானா போனேச்சி

(தமிழாக்கம்: சித்தார்த்தன் சுந்தரம்)

 

‘சிலிக்கான் வெளியில் மாற்றம் என்பது முடிவுறாதது..’ என்கிறார் கிறிஸ் மெசினா. இவர், கூகுள் நிறுவனத்தின் மென் பொருள் மேம்பாட்டாளர் மற்றும் ஹேஷ்டேக் என்ற உலகப்புகள் பெற்ற குறியீட்டை இணையவெளியில் உருவாக்கிய மகத்தான மனிதர்.  மெசினா, கூகுள் போன்ற பெரு நிறுவங்களின் மென்பொருள் வடிவமைப்பில் ஈடுபட்டது மட்டுமல்லாது, பல்வேறு, ஸ்டார்ட்-அப்புகளை நிறுவினார், இயக்கங்களை உருவாக்கினார் மற்றும் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் மாற்றத்திற்கான முன்னோடியாக செயல் பட்டார். அத்தோடு ஹேஷ்டேக்கைக் கண்டுபிடித்ததற்காக உலகமெங்கும் அறியப்பட்டவர்.

 

இவரை நேர்காணல் செய்தவர், Austrian Business Agency என்னும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆஸ்திரிய வணிக நிறுவனத்தின் ஆலோசகராகப் பணி புரியும், மரியானா போனேச்சி. இந்த நேர்காணல், ஆஸ்திரிய பிசினஸ் ஏஜன்சி மற்றும் வியன்னா பிசினஸ் ஏஜன்சி ஏற்பாடு செய்த  ViennaUp’21 மாநாட்டின் போது எடுக்கப்பட்டது.

 

இந்த நேர்காணல், ஆஸ்திரிய பிசினஸ் ஏஜன்சியின் அதிகாரபூர்வ தளத்தில் வெளி வந்தது. https://investinaustria.at/en/news/2021/06/interview-chris-messina.

 

மரியானா: இந்த ஹேஷ்டேக் உலகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டிவிட்டரில் மட்டும் தினசரி சுமார் 200 மில்லியன் ஹேஷ்டேக்குகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. இந்த யோசனை எப்படி வந்தது என்பதை எங்களுக்குச்
சொல்லுங்கள்.

 

கிறிஸ்: 2007 ஆம் ஆண்டு எனக்கு இந்த யோசனை வந்தபோது சமூக ஊடகத்துக்கான நம்பிக்கைகள், கனவுகள், ஆர்வங்கள் அல்லது இவை என்னவாக இருக்கும் என்பதெல்லாம் வித்தியாசமானதாக இருந்தன. நாங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங் அனுபவத்திலிருந்து மொபைலுக்கு மாறும் செயல்முறையில் இருந்தோம். நடைமுறையில் மொபைல் போனே கணினித் தளமாக மாறிய பிறகு, நமது சமூகத் தொடர்புகளுக்கு ஆதரவாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தும் முறைகள் வெளிப்படையாகத் தெரிய வந்தன. நாங்கள் எங்களுடைய நண்பர்களுடன் வெளியே சென்று ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், ஒருவரையொருவர் தெரிந்து கொள்ளவும் இந்த தொழில் நுட்பங்களை உபயோகிக்க ஆரம்பித்தோம். நாங்கள் தெரிந்து கொண்டது என்னவெனில், நடைமுறையில் அப்போது இருந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றதாக இல்லை என்பதையும், நமது தேவைகளுக்கு ஏற்றவாறு தொழில் நுட்பத்தை மாற்றியமைப்பதோடு இந்த முன்னேற்றங்களை ஒருங்கிணைக்க நமது சொந்த நடத்தையையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம். ஹேஷ்டேக் நடத்தைத் தொழில் நுட்பமாக, மொழித் தொழில் நுட்பத்துக்கும் சமூக ஊடகத் தொழில் நுட்பத்துக்கும் இடையில் இருக்கிறது. இது பெரும்பாலும் ஐபோன் போன்ற மொபைல் தொழில் நுட்பங்களின் மூலம் இயக்கப்படுகிறது.

 

மரியானா: ஹேஷ்டேக் வைராலாகிறது என்று உங்களுக்குத் தெரியவந்தபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

 

கிறிஸ்: ஹேஷ்டேக் என்பது சந்தையில் சமகால கண்டுபிடிப்பு மற்றும் நடத்தை மாற்றங்களின் விளைவாக ஏற்பட்டது ஆகும்.

 

இது முதலில் முன்மொழியப்பட்டபோது, ​​சிறிய எண்ணிக்கையிலான எனது நண்பர்களின் கவனத்தை ஈர்த்தது – ஆனால் குறுகிய சிலிக்கான் வெளிக்கு வெளியே மதிப்பு கிடைக்குமா என்பது ஒருபுறம் இருக்க, அது எப்போதாவது நடப்புப் போக்காக மாறுமா என்பதில் ஒரு பெரிய சந்தேகம் இருந்தது.

 

ஆனால் 2010 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் அறிமுகமான பிறகு இது ஒரு சக்திவாய்ந்த பயன்பாட்டை வழக்கத்துக்குக் கொண்டு வந்ததோடு ஹேஷ்டேக்கை நடப்பு போக்கு உணர்வுக்கு கொண்டு வர உதவியது. அப்போது, ​​கம்ப்யூட்டர் பற்றிய கண்ணோட்டம் என்பது சந்தை மயமாக்கப்பட்ட தேடல் தொழில்நுட்பத்தை விட பெரும்பாலும் கல்வித் துறை சார்ந்ததாகவே இருந்தது, எனவே நீங்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளடக்கத்தைத் தேடும் போது, ​​புகைப்படங்களை விவரிக்கும் மெட்டாடேட்டா கிடைக்காதவரை உங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

 

ட்விட்டர் பயனாளர்கள் ஏற்கனவே அந்த குறிச்சொற்களை ட்விட்டரில் பயன்படுத்துவதால், ட்விட்டர் நன்கு நிலை நாட்டப்பட்டது. பயனாளர்கள் புகைப்படங்களை ட்விட்டரில் இருந்து இன்ஸ்டாகிராமிற்கு பகிர ஆரம்பித்த போது ஹேஷ்டேக் செய்யும் நடைமுறையும் இயல்பாகவே இடம் பெயர்ந்தது.

 

ஆனால், ஹேஷ்டேக் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை நான் 2008 ஆம் ஆண்டில் உணர ஆரம்பித்தேன். அதற்குக் காரணம் எதுவெனில், கலிபோர்னியாவின் நடுவில், சிலிக்கான் வெளிக்கு வெளியே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது வழிகளில் ​​தேநீர் விருந்துக்கான விளம்பரப் பலகையைக் கண்டேன். அதில் அரசியல் செய்தியை விளம்பரப்படுத்த ஹேஷ்டேக்கைப் பயன் படுத்தியிருந்தார்கள். இந்த ஹேஷ்டேக் சிலிக்கான் வெளியின் தொழில் நுட்ப உலகத்தை விட்டு வெளியேறி, தொழில் நுட்பத்துடன் எந்த தொடர்பும் இல்லாத நடப்புப் போக்கு பயன்பாட்டு நிகழ்வுகளில் உபயோகிக்க ஆரம்பமாயிருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்.

 

மரியானா: ஆரம்பத்தில் ட்விட்டர் கூறியதை நம்புவது கடினம். அது ஹேஷ்டேக்குகளின் யோசனையை நிராகரித்து, ‘இவை மேதாவிகளுக்கானது’ என்று கூறியது. அவை ‘ஒருபோதும் நடைமுறைக்கு வரப் போவதில்லை’ என்றது. இந்த எதிர்வினைகளை எதிர்கொள்வதற்கு உங்களுக்கு எது உதவியது?

 

கிறிஸ்: அப்போது பண்பாட்டு சின்னத்தில் வித்தியாசமானதும் முக்கியமானதுமாகவும் இருந்தது என்னவெனில் தொழில் நுட்பத்தை உருவாக்கும் வல்லுநர்களுக்கும் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் இடையேயான உரையாடல் உறவாகும். இந்த சமூக தளங்கள் மற்றும் பொருள்கள் எங்களுடையது போல் தோன்றியது, ஏனெனில் நமக்கு கொடுப்பது மட்டுமல்லாமல் நம்மோடு சேர்ந்து கட்டமைக்கப்படுகின்றன.

 

நான் சமூகத்தை மையமாகக் கொண்ட திட்டமாக ஹேஷ்டேக்கை வழங்கும் வலைப்பதிவு இடுகையை எழுதிய மறுநாள், எனது யோசனையை முன்வைக்க ட்விட்டரின் தலைமையகத்திற்குச் சென்றேன், ஆனால் ட்விட்டரின் சேவையகங்களுக்கு அதிக சுமை இருந்ததால் எனது யோசனை நிராகரிக்கப்பட்டது. ட்விட்டர் மிகவும் பிரபலமாக இருந்ததால் ஆரம்ப நிலையில் இருக்கும் சில சீரற்ற பரிந்துரைகளைக் கருத்தில் எடுத்துக் கொள்ள அதைச் சேர்ந்த குழுவினருக்கு நேரம் இல்லை. அதனால் நிராகரிப்பைத் தனிப்பட்டதாக உணரவில்லை; ட்விட்டரின் இணை நிறுவனர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது வேறு ஒரு உத்தியின் மூலம் அவர் இதைத் தீர்க்க விரும்பியிருக்கலாம் – கூகுளில் அவர் இருந்த காலத்தில் அவரோடு பணிபுரிந்த ஒருவரால் இது தெரிவிக்கப்பட்டது. இது அவரது நிறுவனம், எனவே நிச்சயமாக அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.

 

ஆரம்பகால சமூக ஊடக வலைதள நிறுவனங்களை உருவாக்குனர்களுடனும், ட்விட்டர் தளத்திற்கான பயன்பாடுகளை உருவாக்கும் நண்பர்களுடனும்  நான் நெருக்கமான நட்பிலிருந்ததால், நான் சோர்ந்து விடவில்லை. நான் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களின் பயன்பாடுகளில் ஹேஷ்டேக்கிற்கான ஆதரவை உருவாக்க அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான்! பின்னர், அடுத்த சில ஆண்டுகளில், ட்விட்டர் அந்த நிறுவனங்களை கையகப்படுத்தத் தொடங்கியதும், ஹேஷ்டேக்குகளை இயக்கும் குறியீடு மற்றும் செயல்பாடுகளை அகற்றுவதற்குப் பதிலாக, ட்விட்டரின் பொறியாளர்கள் அதை அப்படியே விட்டுவிட்டனர். அதனால் ஹேஷ்டேக், ட்ரோஜன் குதிரையில் உள்ள ரோமானியர்கள் போல் நிறுவனங்களின் தயாரிப்புகளில் இருந்தது.

 

மரியானா: கிறிஸ், நீங்கள் சிலிக்கான் வெளியின் தொழில் நுட்பத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறீர்கள். இங்கே தோல்வியின் கலாச்சாரம் என்ன, அது உலகின் பிற பகுதியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

 

கிறிஸ்: நான் பாரிஸில் இருந்தபோது டெக் க்ரஞ்சினுடைய மைக் அர்ரிங்டனுடன் ஒரு குழுவில் இருந்தபோது பாரிஸ் எப்போதாவது சிலிக்கான் வெளியைப் போன்ற ஒன்றை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது எனக்கு மிகவும் தெளிவாக நினைவிருக்கிறது, மேலும் சிலிக்கான் வெளியின் வெற்றியைப் பார்த்து, சிலிக்கான் வெளி போலவோ, அல்லது குறைந்தபட்சம் அதனுடைய பொருளாதார விளைவுகளையாவது அடைய வேண்டுமென்று பலரும் நினைக்கின்றனர். சிலிக்கான் வெளி ஏன் அவ்வாறு செயல்படுகிறது என்பதோடு கல்வித்துறை, இராணுவ தொடர்புகள், எதிர் கலாச்சார புரட்சியாளர்கள், விசித்திரமான மனிதர்கள், மற்றும் அதற்கே உரித்தான கலாச்சாரங்கள் ஆகியவற்றின் அற்புதமான கலவையை அது எவ்வாறு கொண்டுள்ளது என்பதற்கான புரிதல் அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது.

 

கூகுளில் நான் இருந்த காலத்தில், ஒவ்வொரு வருடமும் அது எந்த அளவுக்குத் தன்னுடைய உள் குறியீட்டை மாற்றி எழுதுகிறது என்பது எனக்கு தனித்துவமாக இருந்தது. பொறியாளர்கள் பழைய குறியீடு மற்றும் யோசனைகளை அகற்றி வந்தார்கள். மேலும், வழக்கற்றுப் போன குறியீட்டை நீக்கும்போது கொண்டாடினார்கள். ஏனெனில், அவர்கள் முன்னோக்கிச் செல்கின்றனர். பழமைக்கு அல்லது முன்பு இருந்த விஷயங்களைப் பற்றிக் கொள்வதற்கு இடமில்லை. திரும்பத் திரும்பச் மாற்றியமைக்கவும், நகர்த்தவும், தொடர்ந்து முயற்சி செய்யவும் ஆசை இருந்தது.

 

ஷூக்கர்பெர்க் இதைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார் என்றாலும், வேகமாக பழையனவற்றை மாற்ற வேண்டும் என்கிற யோசனை, மிகச் சரியான குறியீட்டை எழுத முடியவில்லை என்பதாகவும், மேலும் சிறப்பாக எழுத முடியவில்லையே என்கிற மனோபாவமாக இருந்தது. நீங்கள் கட்டியெழுப்புதல், கற்றல் மற்றும் மறுபரிசீலனை செய்யும் நோக்கத்தில் வேறொருவரின் குறியீட்டை மீறினால், அது ஒன்றை ஒழிக்கும் குற்றத்திற்கு மாறாக ஏற்றுக் கொள்ளப்படும். அந்த இயங்குநிலை – அந்தத் தொடர்புகள் நிகழும்போது தரவுகளுடன் தீர்க்கப்படும் முரண்பாடு – புலப்பற்று உள்ள இடங்களில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிகவும் வித்தியாசமானது ஆகும்.

 

இணையத்தின் சகாப்தத்தில், நீங்கள் காலையில் எதையாவது தேவையில்லை என ஒதுக்கலாம், அது பல விஷயங்களை பாதிக்கிறது என்பதை உணரலாம், ஒரு சிக்கலை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதையும், அதைச் சரிசெய்வதில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்பதையும் ட்வீட் செய்யலாம், பின்னர் அந்த நாளின் முடிவில் நீங்கள் சரி செய்துவிட்டீர்கள் என்று ட்வீட் செய்யலாம். முன்பெல்லாம் இந்த சுழற்சிக்கு ஆறு மாதங்கள் எடுத்திருக்கலாம். நீங்கள் எவ்வளவு வேகமாக இயங்கலாம், விரைவாக வடிவமைக்கலாம், உருவாக்கலாம், அடுத்தடுத்து விரைவாக எப்படி அறிமுகப்படுத்தலாம் ஆகியவற்றில் இது ஒரு வித்தியாசமான சூழலாகும்.

 

மரியானா: இந்த கண்டுபிடிப்பு உங்கள் தொழில் வாழ்க்கையின் மையமாக உள்ளது, மேலும், இணையத்தில் முதன்மையாக கவனம் செலுத்தும் பயனர்கள் உருவாக்கிய மாநாடுகளின் சர்வதேச நெட்வொர்க் ஆன முதல் BarCamp பை ஒருங்கிணைத்தது, அன்கான்ஃபரன்ஸ் நிகழ்வு வடிவத்தை பிரபலப்படுத்தியது, உலகின் முதல் இணைந்து பணியாற்றக்கூடிய பணியிடத்தை திறந்தது என பல இயக்கங்களை உருவாக்கியுள்ளீர்கள். இந்த அற்புதமான யோசனைகளை உருவாக்கும் உங்கள் திறனுக்கு எதைக் காரணமாகக் கூறுவீர்கள்?

 

கிறிஸ்: இந்த அசல் யோசனைகளில் நிறைய பேர் பணியாற்றினர் என்பதையும், இந்த இயக்கங்களில் சிலவற்றை ஊக்குவிக்க நான் உதவினேன் என்பதையும் தெளிவாகக் கூற விரும்புகிறேன். Open source என்னும் திறந்த மூல மென்பொருள் பாரம்பரியத்திலிருந்து வெளியே வந்த நான், அதன் யோசனைகள் மற்றும் நடைமுறைகளில் இருந்து நிறைய உத்வேகத்தைப் பெற்றேன்.

 

ஓ’ரெய்லி மீடியாவின் நன்கு அறியப்பட்ட வெளியீட்டாளரான டிம் ஓ’ரெய்லி, கலிபோர்னியாவின் செபாஸ்டோபோலில் FOO Camp என்று அழைக்கப்படும் இந்த வருடாந்திர நிகழ்வுகளை நடத்தினார், அங்கு அவர் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் போன்ற நன்கு அறியப்பட்ட அல்லது வளர்ந்து வரும் நட்சத்திரங்களை அழைத்து வருவதுண்டு. 2005 இல் நான் அழைக்கப்படவில்லை, ஏனென்றால், நான் அப்போது ‘அறிமுகமான நபராக இல்லை’ என்பதுதான் வெளிப்படையான உண்மை! ஆனால் டிம் ஓ’ரெய்லி ஓப்பன் சோர்ஸுக்கு ஆதரவாளராக இருந்ததால், அவருடைய நிகழ்வை மாதிரியாக/உதாரணமாகக் கொண்டு நான் ஏன் எடுத்து பிரபலப்படுத்தக்கூடாது? என்று நினைத்தேன். (உண்மையில் அவரது சக ஊழியர் சாரா விங்கே இதை பிரபலப்படுத்தினார்) இதற்கு முன் இதுபோன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யாததால், நானும் எனது நண்பர்களும், அன்றைய சமூக ஊடகங்களான வீக்கிஸ், IRC, Plazes மற்றும் இணையப் பக்கங்களைப் பயன்படுத்தி, எங்கள் ‘மாநாட்டை’ வெறும் ஆறு நாட்களில் ஏற்பாடு செய்தோம்.

 

நாங்கள் 30 பேரை எதிர்பார்த்தோம், அதற்கு பதிலாக 300 பேர் வந்தனர்! அது நம்பமுடியாததாக இருந்தது. TechCrunch மற்றும் Pandora உட்பட இன்று நன்கு அறியப்பட்ட பல தளங்கள் மற்றும் தயாரிப்புகளை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். WordPress ஐச் சேர்ந்த Matt Mullenweg இணை அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார், மேலும் தொழில்நுட்ப உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க பிற ஆர்வமுள்ள நபர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

 

இந்த நிகழ்வு வயர்டு இதழில் வெளியான பிறகு, ஒரு குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டு நான் அவர்களுக்காக பார்கேம்ப்களை ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அது முக்கியமல்ல, அதற்கு பதிலாக நான் அவர்களுக்காக லோகோக்களை வடிவமைத்து, பார்கேம்ப் ஒரு திறந்த நிகழ்வு என்றும், அதை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களிடம் சொன்னேன். ஏனென்றால் நாங்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் ஆவணப்படுத்தியதால், மக்கள் தாங்களாகவே நிகழ்வுகளை நடத்தத் தொடங்கினர், மேலும் அவர்கள் மத்திய அதிகாரத்தின் அனுமதியைப் பெறத் தேவையில்லை, அவர்கள் உண்மையில் தாங்களாவே செய்து கொள்ள முடியும் என்பதை உணரத் தொடங்கினர். நான் வணிக ஆதாயங்களில் ஆர்வம் காட்டவில்லை, நமது கலாச்சாரத்தைப் பரப்புவதில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது.

 

எனவே 2006 ஆம் ஆண்டில், பார்கேம்ப் சமூகம் ஆரம்பித்து, எல்லா இடங்களிலும் பரவலாகத் தெரியத் தொடங்கிய பிறகு, நானும் சில நண்பர்களும் பார்கேம்ப்பின் சமூக அனுபவத்தை தினசரி அடிப்படையில் பெறுவது நல்லது என்பதை உணர்ந்தோம். அதற்கு நிரந்தர இடம் தேவைப்பட்டது. எனது நண்பர் பிராட் நியூபெர்க் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மிஷனில் ‘கோ-வொர்க்கிங்’ என்று அழைக்கப்படும் இருவார நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார், மேலும் இதை ஒவ்வொரு நாளும் செய்யத் தொடங்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன். அதனுடன், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள டாக்பாட்ச்சில், முதல் இணைந்து வேலை செய்யும் இடத்தை அமைத்தோம். நாங்கள் அந்த இடத்தைப் பல மாதங்கள் நடத்தினோம், நாங்கள் அதன் செயல்பாட்டில் நாங்கள் தவறாகச் செல்கிறோம் என்பதைத் தயக்கத்துடன் உணர்ந்து, அது பற்றி தீவிரமாக யோசித்தோம்… அதனால் அதை மூடிவிட்டு எங்கள் அடுத்த இடத்தைத் திறந்தோம், அதை நாங்கள் ‘சிட்டிசன் ஸ்பேஸ்’ என்று அழைத்தோம். இது சவுத் பார்க்கில் இருந்தது (ட்விட்டரின் ஆரம்பகால தலைமையகத்திலிருந்துக் கொஞ்ச தொலைவில்) அதன் பின், அது மிகப் பெரிய சமூகமாக மலர்ந்தது.

 

மரியானா: வளர்ச்சி மனப்பான்மை என்பது புதுமைக்கான உந்து சக்தியாகும், இருப்பினும் சில கலாச்சாரங்கள் இன்னும் பூரணத்துவத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன. வித்தியாசமாக சிந்திக்க ஒருவர் எவ்வாறு கற்றுக்கொள்ள முடியும்?

 

கிறிஸ்: நானே பரிபூரணவாதத்தால் பாதிக்கப்படுகிறேன், அதனால் என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். நானும் எனது நண்பர்களும் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்ய வேண்டும் என்கிற ஆசையில் ஏதாவது முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம், வளர்ச்சி மனப்பான்மை நமக்கு அவ்வளவாகத் தேவைப்படவில்லை என்று நினைக்கிறேன், நாம் வளர்ச்சியின் செயல்பாட்டில் இருந்தோம். நாம் எதிர்கொள்ளும் அல்லது நாம் புரிந்து கொள்ளாதவற்றிலிருந்து மனநிலையைப் பெற்றோம். நாம் உண்மையில் மனித அனுபவத்தின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருப்பதால், எங்களுக்கு எல்லாம் தெரியாது என்று எங்களுக்குத் தெரியும், எனவே எங்களுக்குத் தெரிந்தவரை, நாங்கள் முயன்ற அனைத்தும் முதல் முறையாக முயற்சி செய்யப்படுகின்றன.

 

உதாரணமாக, முதல் பார்கேம்ப்பில், Hackathon என்னும் பல்வேறு வல்லுநர்கள் இணைந்து செயல்படும் மென்பொருள் உருவாக்க நிகழ்வு இருந்தது, அங்கு இணைய இணைப்பு மிகவும் மோசமாக இருந்தது. ஏனெனில். நாங்கள் பாலோ ஆல்டோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்தோம், 60 மைல்களுக்கு அப்பால் இருந்து மைக்ரோவேவ் வைஃபை மூலம் ஒலிபரப்புவதற்கும், வைஃபை வசதியை வழங்குவதற்கும் ஒருவரின் உதவியைப் பெற்றோம். இதற்கு முன் நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் அங்கு யாரோ ஒருவர் அதை முயற்சி செய்வதற்கான அறிவையும் விருப்பத்தையும் கொண்டவராக இருந்தார். அது சிறப்பாக வேலை செய்தது!

 

வளர்ச்சி மனப்பான்மை என்பது ஹேக்கர் மனநிலையுடன் தொடர்புடையது என்று நினைக்கிறேன். நீங்கள் தொடர்ந்து அடைய விரும்பும் இலக்கு அல்லது விளைவுகளில் கவனம் செலுத்தினால், தற்போதைய தீர்வுகளில் மூழ்கிவிட்டால், நீங்கள் உணர்திறன் உடையவராகவும், ஏறக்குறைய அதனால் தூண்டப்பட்டவராகவும் ஆகிவிடுவதோடு, ‘விவரங்களில் மூழ்கி விட்டோம், முன்னேறவில்லை’ என்கிற நிலைக்கு வந்துவிடுவீர்கள்! இதை இடைநிறுத்தி வேறு ஏதாவது முயற்சி செய்யலாம். இதில் எந்த தன்முனைப்பும் இல்லை. அதிக முயற்சி, படைப்பாற்றல் மற்றும் ஆய்வு தேவைப்படும் பணிகளுக்கான ஆற்றலைப் பற்றியது.

 

ஆபத்தை முற்றிலும் பொருட்படுத்தாமல் இருப்பதும், மோசமாக எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும் என நிறைய பேர் இருக்கின்றனர். மனிதகுலம் இந்த காலநிலை நெருக்கடியை நோக்கி ஓடுகிறது, அதற்கு வித்தியாசமான சிந்தனை மற்றும் அதற்கேற்ற அமைப்புகள், கட்டமைப்புகள் சரியாக இருக்கிறதா, அதை எப்படி சரியான நிலையில் வைப்பது என்பதையும் வரையறையற்ற அமைப்புகளை உருவாக்க வேண்டுமென நினைத்த மக்களின் நோக்கத்தையும் ஆராய வேண்டும். உடனடி சிக்கலைத் தீர்க்க முயற்சிக்கும் ஹேக்கர்கள், கேள்விக்கு உட்படாத நிறுவனங்களை உருவாக்க விரும்புவதில்லை. ஏதோ ஒன்று இருக்கிறது அல்லது சில காலம் நீடித்திருக்கிறது என்பதால், இந்தத் தீர்வுகளைக் கேட்கக்கூடாது என்றோ நீங்கள் அவற்றைக் கண்டறிந்த நிலைக்கு அப்பால் அவற்றை உருவாக்க முடியுமா இல்லையா என்றோ அர்த்தமில்லை.

 

மரியானா: உருவாக்கங்களைத் தேடுபவர்களில் முதலாவதாக இருக்கும் உங்களுக்கு, எந்த உருவாக்கங்கள் அல்லது செயலிகள் உங்களை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன?

 

கிறிஸ்: கடந்த ஆண்டு சுவாரஸ்யமான விஷயங்களில் ஒன்று, வீடியோவை ஒரு முக்கிய ஊடகமாகப் பயன்படுத்தும் செயலிகளின் எண்ணிக்கை மற்றும் 2000 களின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்ட வலைப்பக்கங்களைப் போலவே இந்த வடிவமைப்பை உருவாக்குகிறது. 2016 ஆம் ஆண்டில் போட்கள் ஒரு பெரிய போக்காக இருந்தன, ஏனென்றால் உரையாடும் செயற்கை நுண்ணறிவிகள் சாத்தியம் என்று நாம் பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் போட்களுடன் ஒப்பிடுகையில், நாங்கள் வீடியோவின் ஆரம்ப இன்னிங்ஸில் ஒரு முக்கிய ஊடகமாக இருக்கிறோம், ஏனெனில் அலைவரிசை இல்லை, கம்ப்யூட் பவர் இல்லை, வீடியோ மற்றும் கம்ப்ரஷனுடன் வேலை செய்வதற்கான இயந்திரக் கற்றல் மாதிரிகள் அனைத்தும் மக்கள் உருவாக்க அனுமதிக்கும் வகையில் பொருள்மயமாக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் உற்சாகமானது.

 

கூடுதலாக, நான் மெய்நிகர் இருப்பை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெளிப்படையாக, நம்மில் பலர் இந்த சதுர செவ்வகங்களிலும் ஜூம் அழைப்புகளிலும் பல நாட்களைக் கழிக்கிறோம், ஆனால் நிறைய பேர் MMORPG என்னும் வீடியோ கேம் வகைகளின் கூறுகளைக் கொண்டு வந்து கேமிங் செய்கிறார்கள், அங்கு மக்கள் ஒரு இடம் சார்ந்த சூழலில் மக்கள் இயங்கவும் தொடர்பு கொள்ளவும் முடியும். ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு மற்றும் இணையத்தில் இருப்பது போன்ற மெடாவேர்ஸின் கூறுகளை ஒன்றாகக் கொண்டு வருவது போன்ற சுவாரஸ்யமான கூறுகள் அதில் கொண்டு வரப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன்.

 

மரியானா: உங்கள் கவனத்தை ஈர்த்த ஆஸ்திரிய செயலிகள் அல்லது உருவாக்கங்கள் ஏதேனும் உள்ளதா?

 

கிறிஸ்: ப்ராடக்ட் ஹன்ட் என்பது உலகளாவிய மற்றும் பலதரப்பட்ட இடமாகும், எது எங்கிருந்து வருகிறது என்பதிலெல்லாம் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை.

 

மரியானா: உங்களுக்கு remove.bg தெரியுந்தானே?

 

கிறிஸ்: ஆம், நிச்சயமாக. ஆனால் அது ஆஸ்திரியாவில் இருந்து வந்தது அல்ல!

 

மரியானா: உங்களைப் பற்றி மேலும் வாசகர்கள் எப்படி அறிந்து கொள்ளலாம் மற்றும் தயாரிப்புகளை/பொருள்களை/ தீர்வுகளை உருவாக்க நிறுவனர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவுகிறீர்கள்?

 

கிறிஸ்: chrismessina.me ஒரு சிறந்த இடம். நான் Twitter -ல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன், நீங்கள் என்னை அங்கு பின்தொடரலாம்.

 

மரியானா: நீங்கள் விடை பெறுவதற்கு முன்பு எங்களுடன் எதுவும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?

 

கிறிஸ்: பொதுவாக, எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதும், குறிப்பாக இளைஞர்கள் ஈடுபடப் போகும் வேலையின் வகையைப் பற்றி சிந்திப்பதும் மிகவும் முக்கியமானது. உங்களை நீங்கள் உணரும் விதத்திலும், நீங்கள் எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதிலும் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப அதற்கு பதிலளிப்பதும் நீங்கள் தான். நாங்கள் இன்னும் செயற்கை நுண்ணறிவின் மிக ஆரம்ப நிலையில் இருக்கிறோம், அது எவ்வாறு வேலையை மாற்றப் போகிறது. நீங்கள் ஒரு விஷயம், ஒரே விஷயம் என்று கற்பனை செய்து அந்த இடத்திற்குச் சென்றால், அது வரம்பிற்குட்பட்ட கண்ணோட்டம் ஆகும்.

 

தோல்வி அவசியமானது மட்டுமல்ல, நாம் கற்றுக் கொள்ளும் வழியும் அதுதான். வெற்றிகளுக்கு வெகுமதி அளிக்கும் வலுவூட்டல் பொறிமுறைகள் மற்றும் சுழல்கள் மூலம் இயந்திரக் கற்றல் செயல்படுகிறது, ஆனால் அந்த நேர்மறையான விளைவுகளைப் பெற மில்லியன் கணக்கான தோல்விகள் தேவைப்படுகின்றன.

 

சிலிக்கான் வெளியிலிருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், இலக்கை நோக்கி எவ்வளவு அதிகமாக முயல்கிறீர்களோ அவ்வளவு சிறந்த விளைவுகளை நீங்கள் அடைவீர்கள். உங்களிடம் ஆயிரக்கணக்கான தோல்விகள் இருக்கலாம், ஆனால் நீங்கள் பெறும் சில வெற்றிகள் மிகவும் வலுவாக இருக்கும் மற்றும் அதைப் பெறும்போது அதில் என்ன வேலை செய்யவில்லை என்பதை நீங்கள் விளக்க முடியும், இது ஒரு கற்றல் செயல்முறையின் தேவையான பகுதி மற்றும் இயந்திரக் கற்றல் ஆகும்; நாம் அனைவரும் இப்போது தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் இணை பரிணாமத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். இது நிச்சயமாக மறுக்க முடியாது, எனவே உருவாக்கங்களை வடிவமைப்பது ஒவ்வொருவரிடமும் உள்ளது.

 

****

 

தமிழில் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சித்தார்த்தன் சுந்தரம்,  நோபல் விருது பெற்ற ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் – ன்   “செர்னோபிலின் குரல்கள்”,   ஜே. டி. சாலிஞ்சரின்   “குழந்தைகளின் ரட்சகன்” ஹார்பர் லீய -ன்  ” பாடும் பறவையின் மௌனம்” போன்ற பல உலகப்புகழ் பெற்ற நூல்களை மொழியாக்கம்  பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page