• Thu. Sep 21st, 2023

நாம் காலப் பயணத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

ByGouthama Siddarthan

Mar 8, 2023

இன்ஸ்டாக்ராம் முதன்மைச் செயல் அலுவலர் கெவின் சிஸ்ட்ரோம் உடன் ஒரு நேர்காணல்

 

நேர்காணல் : ஜெமிமா கிஸ்

 

தமிழில்: ச. வின்சென்ட்

 

2015 ஆம் வருடம் கார்டியனில் வந்த இந்த நேர்காணல், அப்பொழுது புதியதாக சமூக வெளியில் அறிமுகமான  இன்ஸ்டாகிராமின் உருவாக்கம், அதன் வளர்ச்சி பற்றி பேசுகிறது. இத்தனை ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் பிரமாண்ட வளர்ச்சி பெற்றிருக்கிறது. இப்போது அதன் மதிப்பு $102 பில்லியன்.  ஸ்னாப்சாட்டை விட ஐந்து மடங்கும் ட்விட்டரை விட ஆறு மடங்கும் அதிகம். பயனாளர்கள்  எண்ணிக்கை 201 மில்லியனைத் தாண்டிவிட்டது. கெவின் சிஸ்ட்ரோம் 2018 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமிலிருந்து விலகி விட்டார். இப்போது அதன் முதன்மை செயல் அலுவலர் ஆடம் மொசெரி. அந்த துவக்க காலத்தில், பணி புரிந்த சிஸ்ட்ரோம் குறித்த அறிமுகமும், அன்றைய சூழலையும் தற்போது அறிந்து கொள்ள வேண்டி, இப்பொழுது  இதன் முக்கியத்துவம் கருதி வெளியிடப்படுகிறது.

 

***

 

நாங்கள் இன்ஸ்டாகிராம் தலைமை அலுவலகத்தில் சந்தித்தபோது கெவின் சிஸ்ட்ரோம் முகத்தில் புன்னைகையுடன் மிடுக்கான சோஃபாவின் பின்னால் கைகளைப் போட்டுக் கொண்டு புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரை இன்னொரு இடத்திற்குக் கூட்டிச் சென்றபோது புகைப்படம் எடுப்பதைப் பெரிதும் விரும்பும் ஒருவரின் நம்பமுடியாத சலிப்புடன், “இன்னும் ஃபோட்டோக்களா?” என்று பெருமூச்சு விடுகிறார். அப்படித்தான் அவர் இருக்கவேண்டும். ஏனென்றால் இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனராக அவர் அதிகம் தேடப் படுகிறார்.

 

சிஸ்ட்ரோம் 6அடி 5 அங்குல உயரம். சிலிக்கான் பள்ளத்தாக்கின் தரத்தில் அவர் மிடுக்காக உடை உடுத்துவதாகப் பெருமைப்பட்டுக் கொள்பவர். இன்று டி-ஷர்ட்டின் மேல் சாம்பல் நிற ஜேக்கட்டும் இருண்ட நிறத்தில் கால்சட்டையும் அணிந்திருக்கிறார். அவருடைய 31 வயதுக்குமேல் இருப்பது போலத் தோன்றுகிறார். 35 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொழில் நுட்ப நிறுவனத்தைத் தொடங்கி, தனக்கென்று சொந்தமாக 400 மில்லியன் டாலர் சொத்து வைத்திருக்கும் ஒருவரிடமிருக்கும் தன்னம்பிகையை வெளிப்படுத்தும் நடை அவருடையது.

 

இந்தச் சந்திப்பறை இதற்கு முன்னர் வெள்ளைப் பிளாஸ்டிக் மேசை, சாம்பல் நிறத் தரை விரிப்பு, கறுப்பு வலை நாற்காலிகளுடன் உப்புச்சப்பற்ற அலுவலக அறையாக இருந்தது. ஆனால் சென்ற ஆண்டு மே மாதம் முன்னாள் (அமெரிக்க) துணை அதிபரான அல் கோர் வருகை தந்தது அதையெல்லாம் மாற்றிவிட்டது என்று சொல்கிறார் சிஸ்ட்ரோம்.  “இது இன்ஸ்டாகிராம் சந்திப்பு அறையா?” என்று கடுப்புடன் தனது  வடிவமைப்புக்காரரான நண்பர் ஒருவரை சான் ஃப்ரான்சிஸ்கோவிலிருந்து அழைத்தார். 1970களின் பச்சை நாற்காலிகளையும் பெரிய வெள்ளைப் பளிங்கு மேசையையும் வந்து சேர்ந்தது. பணியாளர்களின் கைரேகைகளை அடிப்படையாகக் கொண்ட பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்ட சுவர் தாள்களும் இன்ஸ்டாகிராம் அணியால் எடுக்கப்பட்ட படங்களும்  சுவர்களில் அலங்காரமாக பொருத்தப்பட்டன.

 

சாலையின் எதிர்ப்புறத்தில் ஃப்ராங்க் ஜெஹ்ரி புதிதாக வடிவமைத்த அலுவலகத்தில் ஃபேஸ்புக் இருந்தது. ஒரு ராட்சத அறையில் 2800 பேர் இருந்தார்கள். இன்ஸ்டாகிராமின் அழகுணர்வு பற்றித் தெரிந்த நாம் அது தனது தாய் அலுவலகத்திலேயே இடம் கிடைப்பதைப் பற்றிக் கவலைப்படாது என்று நினைக்கலாம். ஆனால் சிஸ்ட்ரோம் தாங்கள் தனி நிறுவனமாகச் செயல்படுவதையே வலியுறுத்துகிறார். ஃபேஸ்புக்கின் மெனியோ பூங்கா வளாகத்தில் தனியாக இருக்கிறது. இது வெளியிலிருந்து பார்ப்பதற்கு படர்ந்த தூய்மையான ஆனால் சாதாரணமாகத் தோற்றமளிக்கும் கட்டிடங்கள் கொண்டது, சாலைக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாவின் தெற்கு சதுப்புப் பகுதிகளுக்கும் இடையில் இருக்கிறது. இங்குதான் சன் மைக்ரோசிஸ்டம் இயங்கியது. நான் பொதுப் பேருந்தில் வந்திருக்கிறேன் என்பதைக் கண்டு வரவேற்பாளர் குழம்பிப் போய்விட்டார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பணியாளர்கள் தங்களது கார்களில் வருகிறார்கள். அல்லது சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து 38 மைல்கள் வை-ஃபை பொருத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட ஆடம்பர சொகுசு வண்டிகளில் கொண்டு வரப்படுகிறார்கள். கடைசி நேரம் வரையில் வேலை செய்வதற்கு இது வசதியாக இருக்கும் போலும். உள்ளே, தரையில் விரிப்பு இல்லாமல் கான்கிரீட் தெரிந்தது. சுவர்கள் உற்சாகமூட்டும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன: “பிளான் பியை உதைத்துத் தள்ளுங்கள்.” “நீங்கள் இல்லாதபோது மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்துத் தான் தலைமையை நன்கு அளவிட முடியும்.” “ஒரேமாதிரியான பெரியவனத்தில் அன்பைத் தேடுவது.” மைய முற்றத்தில் ஒரு ஐஸ்-கிரீம் பார்லரும், பிராகாசமான வண்ணங்களில் உணவு ஸ்டால்களும் இருந்தன. மர இருக்கைகள், உலகையே மாற்றுவதில் அவசர வேலையாக இருப்பது போலத் தோன்றும் உற்சாகமுள்ள இளையோர்.

 

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இன்ஸ்டாகிராம் மெக்சிகோவின் டாடோஸ் சாண்டோஸ் என்ற கடற்கரை நகரில் ஒரு கோடை விடுமுறையின்போது பிறந்தது. அப்பொது சிஸ்ட்ரோமுக்கு 26 வயது. அவர் ஏற்படுத்திக் கொண்டிருந்த புதியபணிக்கான, பர்பனுக்கான, (இன்ஸ்டாகிராமுக்கு முதலில் வைத்திருந்த பெயர்: Burbn) புதிய செயலிக்கு, புதிய கருத்துக்களுக்கான வரைபடம் போட்டுக்கொண்டிருந்தார்.(இதனைப் பயன்படுத்திப் பல இடங்களில் பயனாளிகள் தங்கலாம், அவர்களது சந்திப்புகளைப் பற்றி அறிக்கை தரலாம்). இதற்கு ஏற்கனவே $250,000 முதலீடு பெற்றிருந்தார். பர்பனில் புகைப்படங்களை வெளியிடலாம் என்ற கருத்து வந்தபோது சிஸ்ட்ரோமின் காதலி நிகோல் ஷுயட்ஸ் அவளுடைய புகைப்படத்தை வெளியிட விரும்பவில்லை என்று கூறினாள். ஏனென்றால் அது அவளை அவ்வளவு அழகாகக் காட்டாது என்றாள். அவளிடமிருந்த iPhone 4 இல் கேமரா சரியில்லை. அப்படியானால் இதற்கு வடிகட்டிகளைச் (filters) சேர்ப்பதுதான் வழி. அன்று மாலைக்குள் சிஸ்ட்ரோம் X – Pro II filter ஐக் கண்டு பிடித்து விட்டார். இன்ஸ்டாகிராமின் தொடக்கநிலை அமைப்பில் ஒரு நாய் படத்தையும் நிக்கோலின் கால்கள் படத்தையும் வெளியிட்டு விட்டார். (குறியீடு codename).

 

“அந்த முதல்படம் நாங்கள் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக அமைந்து விட்டது.” என்று முதல் புகைப்படத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த காஃபி மேசையைக் காட்டிக் கூறுகிறார். “அப்போதெல்லாம் உஙகள் வாழ்க்கையில் நடந்தவற்றை அவை நிகழ்ந்தது போலக் காட்ட எந்த வழியும் இல்லை. ஃபேஸ்புக் இன்னும் டெஸ்க்டாப் அளவிலேயே நின்றது. Flickr இல் உங்களது எஸ்எல்ஆர் கேமராவிலிருந்து பதிவேற்றம் செய்யவேண்டும். டிவிட்டரில் புகைப்படம் போட முடியாது. உங்கள் வாழ்க்கையில் நடப்பதைக் காட்சிப்படுத்த இந்த வாய்ப்பு வழி வகுத்தது..” என்று தொடர்ந்தார். iPhone 4 வந்த சில மாதங்களிலேயே இன்ஸ்டாகிராம் பிறந்து விட்டது. குறைந்த தரமுடைய படங்களை மறைக்கும் வழி அது. அப்போதிருந்து, கைபேசியில் படத்தின் தரம் உயர்ந்ததால் வடிகட்டியைப் பயன்படுத்துவது குறைந்து விட்டது என்று விளக்குகிறார் சிஸ்ட்ரோம். எனினும் இன்ஸ்டாகிராமின் பயன்பாடு குறையவில்லை. இதுவரையில் 40 பில்லியன் படங்கள் பகிர்வு பெற்றிருக்கின்றன.

 

இவ்வளவு பெரிதாக இந்தத் தளம் வளரும் என்று அவர் எதிர்பார்த்தாரா? “நாங்கள் இவ்வளவு பெரிதாக வளரும் என்பதை முன்னறிவித்திருக்க முடியாது. ஆனால் அது அறிவுபூர்வமாகச் சரியாக இருந்தது. நமது மூளை அடிப்படையில் காட்சிக்கு முதன்மை தருவது. எழுத்து வடிவம், அதிகப்புலன்களின் மூலம் செய்தி சொல்ல முடியும் என்று மக்கள் தெரிந்துகொள்ளும் வரையில் ஒரு ஊடுருவல்தான்.” குட்டன்பர்கின் 15ஆம் நூற்றாண்டு அச்சு எந்திரத்தையும் அதன் புரட்சிகரமான தாக்கத்தையும் இன்றைய நிலையோடு ஒப்பீடு செய்து அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைகள் இருக்கின்றன. இன்றைய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒளி பெறும் புதிய யுகத்தை ஒருநாள் தொடங்குவது சாத்தியம். அதேசமயம் அவர்கள் தங்களுக்குள்ளேயே சில ஆண்டுகளில் நலிந்து போக அடுத்த சிறந்த கருவி ஒன்று அவர்களது இடத்தைப் பிடிப்பதும் சாத்தியம். சரியான பக்கத்திலேயே தொடர்ந்து நிற்பதுதான் சிஸ்ட்ரோம் முன் இருக்கும் சவால்.

 

இன்ஸ்டாகிராமின் வேகமான வளர்ச்சியும் வடிவமைப்பாளர் முதல் புகைப்பட இதழாளர்கள், அரசியல்வாதிகள் வரையில் அதன் செல்வாக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் மிக விரும்பப்படும் கதைகளில் ஒன்று. அதைப் பின்பற்றுபவகளில் அதிபர் ஒபாமா (ஒபாமாகேரை ஆதரித்தது), டேவிட் பெக்ஹாம் (அவருடைய பெற்றோராகச் செயல்படும் திறன்களை விமர்சித்ததற்காக டெய்லி மெய்லைக் குறை சொன்னது), கிம் கர்டேஷியன் (இணையதளத்தைத் தகர்க்க முயன்றது) ஆகியோரும் அடங்குவர். அது சாதாரண அன்றாட விஷயங்களுக்கும் இடமளித்தது: குழாய் செப்பனிடுவோர் தங்களது புதிய பணிகளைப் பகிர்ந்து கொள்ளல், ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையின் இன்பங்களையும் பயங்கரங்களையும் பகிர்ந்து கொள்ளல். அதில் மோசமான முறையில் இறந்த உடலைப் பதப்படுத்தல், பயங்கரமான உடற்கூறு ஆய்வுகள் ஆகியவற்றின் படங்களும் இடம் பெறுகின்றன. நம்மில் மில்லியன் கணக்கானவர்கள், நமது விடுமுறைகளின் படங்கள், நமது குழந்தைகள், நாம் கடைகளுக்குப் போவது, கதிரவன் மறையும் எண்ணற்ற காட்சிகளை எல்லாம் அது காட்டுகிறது.

 

குழுமத்தை 13 ஊழியர்களுடன் 30 மில்லியன் பயனாளர்களுக்கு சேவை செய்யும் நிறுவனமாக நிறுவிய 18 மாதங்களே ஆனபோது, சிஸ்ட்ரோமும் அதன் இணை நிறுவனர் மார்க் ஷுக்கர்பெர்க்கும் டிவிட்டரோடும் ஃபேஸ்புக்கோடும் பங்குச் சந்தையில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. மார்க்கின் விடாப்பிடியான முயற்சியால் ஃபேஸ்புக்குடன் $736.5 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஒப்பந்தமானது.

 

“அதிர்ஷ்டம், நல் வாய்ப்பு, கடின உழைப்பு,” என்று இந்த ஒப்பந்தம் பற்றியும் அதற்கான பலமாத வேலைகள் பற்றியும் சிஸ்ட்ரோம் கூறுகிறார். “வார விடுமுறைகள் இல்லை. எங்கள் சர்வர்கள் அதிகப்படியான சுமையால் செயலிழந்து விடுகின்றனவா என்று கண்காணிக்க நானும் மைக்கும் எங்கள் செல் ஃபோன்களில் எச்சரிக்கை மணியை அமைத்துக் கொண்டோம். நான்கைந்து மணிக்கு ஒருமுறை போய்விடும். நாங்கள் வளர்ந்த போது ஒரு மணிக்கு ஒருமுறை அல்லது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை செயலிழந்து போகும். இன்று வரையில் அந்த எச்சரிக்கை மணிக்கு பாவ்லோவின் நாய் எதிர்வினை ஆற்றியதுபோல எனக்கும் ஒரே நேரத்தில் உமட்டலும் பதற்றமும் ஏற்படும். இப்போது சிக்கல்கள் வேறு. எதில் வேலை செயவது, எங்கள் வியூகம் என்ன, எப்படிப் போட்டியாளர்களைச் சமாளிப்பது?” என்பதுதான் என்றார்.

 

சிலிக்கான் பள்ளத்தாக்கு அழுத்தப்படுத்து வதற்கும், மிக நெருக்கமான போட்டிக்கும் பெயர் போனது. அது மட்டுமல்ல, பேராசைக்காரர்கள் நிறைந்தது. அவர்கள் தங்களைத் தாங்களே முன்னே தள்ளிக் கொள்பவர்கள். நிலமையைச் சமாளிப்பதற்குப் போராடிக் கொண்டிருப்பதைச் சில வேளைகளில் அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சான் ஃப்ரான்சிஸ்கோவில் கலிஃபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் முனைவர் மைக்கல் ஃப்ரீமன் ஏப்ரலில் வெளியிட்ட ஆய்வில் அவர் கணக்கெடுத்த தொழில்முனைவோரில் 30% பேர் மன நோய் உள்ளவர்கள் என்றும் 30% பேர் மன அழுத்தம் உள்ளவர்கள் என்றும் (அமெரிக்காவில் சராசரி 8%), 27% பேர் மனப்பதற்றம் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கிறார். கம்பெனியை நிறுவியவர்களின் தற்கொலைகள் தொழிலில் ஒரு சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. டயஸ்போராவின் 21 வயது இலியா சிடொமிர்க்ஸ்கி, ஈகோமாம் இணை நிறுவனரான 47 வயது ஜோடி ஷெர்மன், கேம்ப்ரியன் ஜெனொமிக்சின் 31 வயதான ஆஸ்டன் ஹெய்ன்ஸ் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

 

ஆனால் அதிகப்படியான வேலை என்பது இன்ஸ்டாகிராமில் இல்லை. அதனுடைய தொழிலாளர்கள் பாதுகாப்பான வேகமாக வளர்ந்து வரும் நிறுவனத்தில் மனநிறைவு கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். விளம்பரதாரரால் தான் நான் சுற்றுப்பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். ஆனால் அவர்களது மகிழ்ச்சி உண்மையானதாகவே தோன்றுகிறது. (“இது எனது கனவு வேலை”) சிஸ்ட்ரோம் இளைஞர்கள் நிறைந்துள்ள தனது அணியின் மேல் கவலை கொள்வது தனது கடமை என்று கருதுகிறாரா? “மக்கள் தாங்கள் வேலை செய்யவேண்டும் என்பதற்காக டாட்காம் தளத்தில் வேலை செய்யவில்லை. அவர்களது நேரம் தேவைப்படாத பல வேலைகள் உள்ளன. ஆனால் மக்கள் உலகை மாற்றும் வித்தியாசங்களை உண்டாக்க, பல மில்லியன் மக்களிடம் தாக்கம் ஏற்படுத்தும் ஏதோ ஒன்றைக் கட்டி எழுப்ப விரும்புவதால் இதில் சேர்கிறார்கள். இப்படிப்பட்ட கம்பெனிகள் சில ஆண்டுகளில் தொழில்களில் முழுமையான மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்,” என்கிறார். இன்ஸ்டாகிராம் தன்னுடைய பணியாளர்களின் உடல் நலம் பற்றி இரகசியக் கணக்கெடுப்பு நடத்துகிறது, அவர்களது வாரக் கடைசி நாட்கள் மேலும் குடும்பங்கள் மேலும் அக்கறை கொள்கிறது என்று கூறுகிறார் சிஸ்ட்ரோம். “தினமும் வேக ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்வதால் நீங்கள் மராத்தானில் வெற்றி பெறமுடியாது,” என்று அவர் சொல்லும்போது உலகத்தை மாற்றும் தனது ஆசையைச் சொல்லும்போது இருக்கும் உணர்ச்சியுடன் கூறவில்லை.

 

பிறகு நான் ஆஷ்லி யுகியிடம் பேசுகிறேன். அவர் உற்பத்தி மேலாளர். சேவையில் உருவம், நிலக்காட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தியதை மேற்பார்வையிட்டவர். (இன்ஸ்டாகிராமின் சதுர அமைப்பு புகைப்படங்கள் சிஸ்ட்ரோமின் சொத்து. அவர் தனது ஸ்டேன்ஃபோர்ட் பட்டத்துக்காக இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரில் ஒரு பருவம் புகைப்படக்கலை பயின்றபோது ஹால்கா கேமராவைப் பயன்படுத்தியது; இது இன்ஸ்டாக்ராம் உலகில் மிகப்பெரிய செய்தி. புதிய அம்சங்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் செல்வதற்காக, வடிவமைப்பவர்கள், பொறியியலாளர்கள், சந்தைப்படுத்துவோர் முதலான எல்லா அணிகளையும் யுகிதான் ஒருங்கிணைப்பவர். அவர் நீண்ட நேரம் வேலை செய்யவேண்டியிருக்கிறது என்று நினைக்கிறாரா? “எங்களுடைய வேலை ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து – அதை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள், பயனாளர்களிடமிருந்து கிடைக்கும் பின்னூட்டங்கள், நாங்கள் செய்த வேலையின் விளைவுகள் எவை என்பதாலேயே நாங்கள் மதிப்பிடப்படுகிறோம், – எத்தனை மணி நேரம் நாங்கள் வேலைசெய்தோம் என்பதைக் கொண்டல்ல. இது தகுதிக்கான பண்பாட்டுக்கு வழிவகுக்கிறது. என்னுடைய வேலை நிரல் நெகிழ்வுடையது. எனக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எனக்கு அது பிடித்திருக்கிறது. எனவே எல்லாத் துண்டுகளையும் சரியாகச் சேர்க்கக்கூடிய ஒரு பெண் என்பதில் எனக்கு சுமையும் இருக்கிறது, மகிழ்ச்சியும் இருக்கிறது,” என்றார்.

 

கெவின், மாசசூசெட்ஸ் ஹாலிஸ்டனின் பணக்காரப் புறநகர்ப்பகுதியில் பிறந்தார். அவருடைய தந்தை மனிதவளச் செயல் அலுவலர், தாய் சந்தைப்படுத்தல் செயல் அலுவலர். 1990 களின் நடுப்பகுதியில் தோன்றிய முதல் டாட்காம் அலையின்போது, அவர்கள் மான்ஸ்டர் அண்ட் ஸ்வாப்பிட்டில் வேலை பார்த்தார்கள். கான்கார்டின் பதின் பருவ உள்ளுறைப் பள்ளியில் கணினி நிரல் கற்கத் தொடங்கினார். பிறகு ஸ்டான்ஃபோர்டில் மேளாண்மை அறிவியலும் பொறியியலும் கற்று ஓடியோவில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பின்னர் அந்தக் கம்பெனி டிவிட்டரை நிறுவியது. சிஸ்ட்ரோம் ஜேக் டார்சிக்கு அருகில்தான் இருந்தார். ஆனால் சிஸ்ட்ரோமும் கிரைகரும் இன்ஸ்டாகிராமை விற்றபோது நடந்த பேரங்களில் அது டார்சிக்கு உதவவில்லை. டிவிட்டர் தர முன்வந்ததைவிட இருமடங்கு கிடைத்தது. அதிலிருந்து டார்சி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யவில்லை.

 

சிஸ்ட்ரோமின் வெளிவாழ்க்கை அவருடைய இன்ஸ்டாகிராம் செயல்பாடு போலவே கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. நல்ல உணவு. கோல்ஃப், பனிச்சருக்கு, கலிஃபோர்னியாவின் டாஹூ ஏரியில் விடுமுறைகள் என்றிருக்கும். அவருக்குப் பிடித்தமான இன்ஸ்டாகிராமர்கள் @symmetrybreakfast, @everydayafrica, அமெரிக்கக் கண்டத்தில் புகைப்படங்கள் வெளியிடும் புகைப்படக்காரர்கள், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வமானப் புகைப்படக்காரரான @petesouza ஆகியோர். (ஒரு சில ஃபேஷன் காட்சிகளுக்கு மட்டுமே தான் போவதாக வலியுறுத்துவார். ஆனால் முதல் வரிசையில் அலெக்ஸா சங், விருது வழங்கும் விழாக்களில் டயானெ வான் ஃபர்ஸ்டென்பெர்க், கிம் கர்டேஷியன் ஆகியோருடனும் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறார்.) அவருக்குப் பிடிக்காத கேள்விகளைத் திசை திருப்புவதில் வல்லவர்: அவருடைய அரசியல் அனுதாபம் எப்படிப் பட்டது என்றோ, டொனால்ட் டிரம்ப் பற்றி அவருக்கு ஒரு கருத்து இருக்கிறதா என்றோ நான கேட்டால் அவர் உடனே தான் அரசியல் சாராதவன் என்று எளிமையாகச் சொல்லி விடுவார். இன்ஸ்டாகிராமை வியூகத்துடன் பயன்படுத்துபவர் அல்லவா? அவர் டிரம்ப்பைச் சந்தித்தது இல்லை. அவரைப் போலவே மற்ற அதிபர் வேட்பாளர்களும் தங்கள் பரப்புரைகளுக்கு தன்னுடைய சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வார்.

 

அமெரிக்கப் பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட “தேடுங்கள் ஆய்வு செய்யுங்கள்” என்ற அம்சம் இப்போது இன்ஸ்டாகிராம் கணக்குகளின் தொகுப்புகளுக்கு முக்கியத்துவம் தருகிறது. எடுத்துக் காட்டாக விளையாட்டு, பயணம், ஃபேஷன். வெவ்வேறு விதமான விஷயங்களைக் கொண்டு வருமாறு அது வடிமைக்கப் பட்டிருக்கிறது. இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இது ‘எடிட்’ செய்யும் முறையா? இதனை சிஸ்ட்ரோம் ஏற்றுக் கொள்ளவில்லை. பயனாளிகள் அக்டோபர் 2012 சேண்டி புயல் கொண்டு வந்த அழிவைக்காட்டி நூற்றுக்கணக்கான படங்களை அனுப்பியபோது இன்ஸ்டாகிராம் மிக ஆற்றலுடன் செயல்பட்டு தொலைக் காட்சிகளின் அனுபவங்களை மிஞ்சியது.

 

இன்ஸ்டாகிராம் அதன் முதல் நாளில் 25,000 பயனாளிகளுடன் தொடங்கியது. இப்போது ஃபேஸ்புக்குடன் ஒப்பந்தத்தினால் அதனுடைய தளத்தை ஒவ்வொரு மாதமும் 400 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் 80 மில்லியன் புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஃபேஸ்புக்கின் விற்பனை விளம்பரம், பொருத்தமான அல்காரிதம்கள் ஆகியவற்றில் அதன் மூலவளங்கள் இந்த வளர்ச்சிக்கு அவருக்கு உதவுவதாக சிஸ்ட்ரோம் கூறுகிறார். இதனால் அவருடைய போட்டியாளர்களைவிட வேகமாக முதிர்ச்சியடைய முடிந்தது என்கிறார். (இன்ஸ்டாகிராம் இந்த ஆண்டு விளம்பர வருவாயில் $600 மில்லியனை அடைந்து விடும் என்று ஆய்வு கம்பெனியான இ-மார்க்கட்டர் சொல்கிறது. இது 2017 இல் $2.81 பில்லியனுக்கு வளர்ந்துவிடும். அதற்குள் இன்னும் புதுமையான வடிவங்களைப் புகுத்தி டிவிட்டர் கூகுளைவிட அதிகமான வலையதள மொபைல் விளம்பர வருவாயை அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.)

 

சிஸ்ட்ரோம் ஃபேஸ்புக் பெரிய அளவில் தரமுன்வந்ததை எப்படி மறுத்திருக்க முடியும் என்று பார்ப்பது கடினம். அப்போது தொழில்நுட்பத் தொழிலில் பலரை அது வியப்பில் ஆழ்த்தியது. இன்ஸ்டாகிராம் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? “பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஒரு தொடக்க நிலைக் குழுமத்தை நடத்துவதில் வேடிக்கையான பகுதிகளும் இருக்கும், அவை இல்லாத பகுதிகளும் இருக்கும். ஃபேஸ்புக் வேடிக்கை இல்லாத பகுதிகளான உட்கட்டமைப்பு, ஸ்பேம், விற்பனை ஆகியவற்றைப் பார்த்துக் கொள்கிறது. உண்மையான் கேள்விகள் எவை என்றால் இன்ஸ்டாகிராம் எவ்வளவு பெறமுடியும்? 400 மில்லியனா அதற்கும் மேலாகவா? அவ்வளவு பெரிதாக ஆனால் நடத்தக்கூடிய ஒன்றாக இருக்குமா? சிலிக்கான் பள்ளத்தாக்கில் அனைவருடைய பட்டியலிலும் தலைப்பில் இருப்பவை தான்,” என்று கூறுகிறார்.

 

வளாகத்தில் ஷுக்கர்பெர்க்கும் அவரும் சந்திக்கும்போது இந்தக் கேள்விகளைத் தான் கேட்பார். ஃபேஸ்புக் நிறுவனர் 2012 இல் அவரை விடாமல் துரத்தி, தனது விருப்பத்தையும் திட்டத்தையும் தெரிவித்த பிறகு, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பார்க்கப் போய் விட்டார். சிஸ்ட்ரோம் தனது வழக்கறிஞர்களையும் முதலீட்டாளர்களையும் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார். இருவரும் வாரம் ஒருமுறை வேலையின் போதோ வெளியிலோ சந்திக்கிறார்கள். இருவருக்கும் பொதுவான விஷயங்கள் இருக்கும்.

 

ஃபேஸ்புக்கின் கண்காணிப்பில் இருப்பது இன்ஸ்டாகிராம் எவ்வளவு பெரியதாக இருக்க முடியுமென்பதனை இடைவிடாமல் நினைவுறுத்துகிறது. “ஃபேஸ்புக்கில் (அதற்கு ஒவ்வொரு மாதமும் 1.5 பில்லியன் பயனாளிகள் இருக்கிறார்கள்) நாங்கள் ஒரு சிறு குழந்தை. இந்தியாவில் தெருவில் போகும் யாரையாவது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வார்கள். அது தான் எங்களுக்கு நல்ல வாய்ப்பு.” இதைத்தான் சிலிக்கான் பள்ளத்தாக்கில் முதலீடு செய்பவர்கள் கேட்க விரும்புகிறார்கள். உலக அளவில் வளரும் ஆசை.

 

இந்தத் தளத்தினால் சிஸ்ட்ரோம் மட்டும் பணம் பண்ணவில்லை. இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் பலரும் குறிப்பிடத் தக்க அளவு வருவாய் பெறுவதாகச் சொல்கிறார்கள். @wahnails இன் ஷர்மடியன் ரெய்ட், டச்சு மீன் விற்பனையாளர் பார்ட் வான் ஆல்ஃபென் (அவருடைய சமையல் சின்னத்தை அறியச் செய்ய 15 செகண்ட் வீடியோவைப் பயன்படுத்தினார்) நியூயார்க் லிஸ் எஸ்வெய்ன் @NewYorkCity (அதற்கு 1.2 மில்லியன் ஆதரவாளர்கள், றீவீளீமீ போடுவது ஒவ்வொன்றுக்கும் ஒரு டாலர் விளம்பரதாரர்களிடமிருந்து பெறுகிறார்) முதலியோர் அடங்குவர். உங்களைப் பின்பற்றுவோர் 100,00-ஐத் தாண்டினால் பணம் வரும். ஒரு மாதத்திற்கு 30000 பவுன்கள். இது ப்ரையன் டிஃபியோ என்ற இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துபவர் சொன்னது. அவர் இந்தச் சேவையை எப்படிப் பயன்படுத்துவது என்று பிறருக்கு ஆலோசனை சொல்லும் ஒரு முகமையை நிறுவியிருக்கிறார்.

 

பயனாளிகளில் எழுபத்து ஐந்து விழுக்காடு அமெரிக்காவிற்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களில் இங்கிலாந்தில் 14 மில்லியன் பேர் இருக்கிறார்கள். “இது புகைப்படத்தைப் பெருமளவில் பகிர்ந்து கொள்வது,” என்று நான் சொல்கிறேன். “இன்ஸ்டாகிராமை புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு ஆப் என்று சொல்வது செய்தித்தாளை, கடிதத்தைப் பகிர்ந்து கொள்ளும் நூல் என்றோ, மொசார்டின் சிம்ஃபோனியை, இசைக்குறிப்புகளின் வரிசை என்றோ சொல்வது போன்றது. இன்ஸ்டாகிராம் ஓர் ஊடகம் என்பதைப் பற்றியது என்று சொல்வதை விட இணைய தளம் பற்றியது என்று சொல்லலாம். நீங்கள் தொழில் செய்தால் நீங்கள் விளம்பரங்களை எங்களிடம் வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் ஒரு நுகர்வோராக இருந்தால், பொழுது போக்குத் தர விரும்பினால் ஒரு 15 செகண்ட் லூப் வீடியோவைப் பதிவு செய்யலாம். நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால், ஒரு கலைப் படைப்பைச் செய்ய விரும்பினால் உங்களுக்கும் இடம் இருக்கிறது. ‘புகைப்படத்தைப் பகிர்வது’ என்று சொல்லும்போது பல நுணுக்கங்கள் விடப்படுகின்றன.”

 

ஒரு படத்தை விட இன்னொன்றைச் சிறப்பாக்குவது எது? ஒளியைப் புரிந்து கொள்ளுதல் ஒரு சிறந்த புகைப்படக்காரரையும் நடுத்தரப் புகைப்படக்காரரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது என்று ரிச்சர்ட் கோசி ஹெர்மாண்டெஸ் கூறுகிறார். இவர் சான் ஃபிரான்சிஸ்கோவின் யூ சி பெர்க்லியின் இதழாளர் கல்லூரியின் புது ஊடகப் பேராசிரியராக இருக்கிறார். “மனிதர்கள் வலுவான உருவங்களையும் வடிவங்களையும் பார்க்குமாறு பதம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மக்களை அவர்களது பாதைகளில் செல்வதைத் தடுக்க அந்தக் கணத்தைப் பிடிப்பதுடன் ஒளியும் தேவைப்படுகிறது,” என்று கூறுகிரார். ஹெர்மாண்டஸ் சிலிக்கான் பள்ளத்தாக்கின் ஸ்மார்ட் ஃபோன் காலத்தை ஆவணப்படுத்திய முதல் புகைப்படக்காரர்களில் ஒருவர். இன்ஸ்டாக்ரேமின் தொடக்கத்திலிருந்து அதனைப் பயன்படுத்தி வருகிறார். எனினும் சென்ற ஆண்டு அவர் 1,100 புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கி விட்டார். ஏனென்றால் அவை அவரைப் பொறிக்குள் அகப்பட்டது போல ஆக்கிவிட்டன என்று சொல்கிறார். ஓராண்டுக்குப்பிறகு அதுபோல 70 படங்களையும் செய்யப்போகிறார். அவை ஓரொளி தனி உருவங்கள், ஒரு நகரம். உண்மையான வாழ்க்கையிலிருந்து நிகழ்ச்சிகளைப் பிடித்தவை.

 

“என்னுடைய படங்கள் ஒரு புகைப்படக்காரர் என்பதன் பிரதிபலிப்பு. அப்படியானால் நான் யார்? சமூகவெளியில் கிடைக்கும் விருப்புகள் விமர்சனங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம். என்னிடம் ஆயிரக்கணக்கான படங்கள் இருக்கின்றன. என்னைப் பின்பற்றுவோர் டன் கணக்கில் இருக்கிறார்கள்,” என்று கூறுகிறார். 235,000 பேர் இருக்கிறார்கள். “நான் யார் என்பதைத் தாக்கம் செய்வது அது. நான் பதிவிடுவதைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நாம் எல்லோருமே நமது குரலைக் காண முயன்று கொண்டிருக்கிறோம். எது உண்மையானது என்று கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறோம். ஆனால் தன்வயம் சாராத ஒரு குறிப்பிட்ட திசையில் உங்களை விமர்சனங்கள் தள்ளும்.” என்று சொல்கிறார். ஹெர்மாண்டஸ் தன்னுடைய படங்கள் சிறிதுநேரம்தான் நிற்கவேண்டும் என்று விரும்புகிறார். இன்ஸ்டாகிராமின் மிகப்பெரிய போட்டியாளரான ஸ்னாப்சாட்டின் கவர்ச்சியே அது தான். அதற்கு 200 மில்லியன் பயனாளிகள் இருக்க்கிறார்கள். “இதுதான் உங்களைப் பற்றிச் சொல்லும். ஆனால், நாங்கள் எப்போதுமே வித்தியாசமானவர்கள், பரிணாம வளர்ச்சி பெறுபவர்கள். என்னுடைய படங்கள் ஒன்றிரண்டு நாட்கள் இருந்த பிறகு மறைந்துவிட வேண்டுமென்று விரும்புகிறேன். அப்போது தான் நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அல்லது அதையே கட்டிக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இருக்காது,” என்று சொல்கிறார்.

 

செல்ஃபிக்கள் மற்றும் காபி நுரை படங்கள் ஆகியவற்றிற்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பு பற்றி ஹெர்மாண்டஸ் நம்பிக்கையோடு இருக்கிறார். காட்சி செய்தித் தொடர்பில் இன்ஸ்டாகிராமை ஒரு மொத்த சோதனையாகப் பார்க்கிறார். “நாம் எல்லாம் ஒன்றாக இருக்கும்போது அதைத்தான் மனித இனம் செய்கிறது. நம்மையே அனைவரும் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறோம். நாம் எல்லோரும் விளையாடும் விளையாட்டு இது. குழந்தைப் பருவத்திலுள்ள ஓர் ஊடகத்திலிருந்து இதை விட அதிகம் எதிர்பார்க்க முடியாது. நிகழ்த்திக் காட்டும் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், மக்கள் பாடுவது, டப்ஸ்மேஷ் எனப்படும் பிற நடிகர்கள் பேசுவதற்கு வாயசைப்பது, ஹிப்ஸ்டர்கள் எனப்படும் புதிய நவீன விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்… என்று எல்லோருமே இன்ஸ்டாக்ராமைப் பயன் படுத்துகிறார்கள். சென்ற ஆண்டு எபோலா தொற்று பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தள நிகழ்வுகளை ஆவணப்படுத்திய புரட்சியாளர் கேட்டி மெய்லர் செய்தது போல யாரும் செய்யமுடியாது. பால்டிமோர் கிளர்ச்சிகள், ஜூனோ என்னும் குளிர்காலப் புயல் அகியவற்றின் மனத்தை உருக்கும் படங்கள் இருந்தன. புயல் படம் நியூயார்க் டைம்ஸ் அட்டையில் வந்தது. அவை ஹிப்ஸ்டர்கள் எடுத்த படங்கள் இல்லை.”

 

(subculture என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டு 21ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு இயக்கம்: ஹிப்ஸ்டர். கடந்த கால ஹிப்பி கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டு, ராக் இசை, பங்க், கலகம், எதிர்கலாச்சாரம் என்ற கூறுகளை உள்ளடக்கிய போக்குகள் கொண்ட தற்கால இளைஞர்களைக் கொண்டது. மொ – ர்)

 

இன்ஸ்டாக்ராம் போன்ற பிற சேவைகள் தோல்வியுற்றபோது அது மட்டும் எப்படி வெற்றி கண்டது? 2010 இல் புகைப்பட ஃபில்டர்கள் நிறைய இருந்தன. ஆனால் அவை நிற்கவில்லை. தன்னுடைய வெற்றிக்கு அதிர்ஷ்டம் ஒரு பெரிய காரணம் என்று சிஸ்ட்ரோம் சொல்கிறார். ஆனால் எளிமையான வடிவமைப்பு, முன்னேற்றம் செய்யப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் கேமராக்கள், காட்சிப் படங்களின் அடிப்படையிலான பரந்த இணையதளத்திற்கான ஆர்வம் ஆகிய ஆனைத்தும் சேர்ந்தது வெற்றிக்குக் காரணம் என்று நான் சொல்வேன். இந்த சேவை மிகக் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வளர்ந்திருக்கிறது. அதனால் தான் அது அணுகக் கூடியதாக இருக்கிறது. ஆனால் ஸ்னாப்சாட்டின் ஆர்வமூட்டலையும், உடனடியான செயல்பாட்டையும் எதிர்த்துப் போட்டி போடவேண்டுமென்றால் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். குறிப்பாக செய்தி அனுப்பலில் வேகமும் எளிமையும் வேண்டும். பிற சவால்கள் தொலைதூரத்தில் இருக்கும். மிகப்பெரிய ஆபத்து யாராவது ஒருவருடைய குறிப்பேட்டின் வரை படத்தில் இருக்கும்.

 

அப்படியானால் இன்ஸ்டாகிராம் இங்கிருந்து எங்கே போகிறது? மிகுந்த அதீதக் கற்பனயான ஒரு அம்சைத்தைச் சேர்ப்பதைக் கற்பனை செய்யுமாறு நான் சிஸ்ட்ரோமைக் கேட்கிறேன். மெய்நிகர் உண்மை இருக்கும் எங்கும் நிறைந்திருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். அதனை அனுபவத்தால் உணர நமக்குத் தேவையான கருவிகள் எல்லாம் இருக்கின்றன. கிராமப்பபுறத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் நீங்களும் நானும் இருக்கிறோம் நாம் அதனைக் கேட்கிறோம், நுகர்கிறோம், பார்க்கிறோம் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அல்லது அதிபரின் பதவியேற்பு – அது பெரு வியப்பூட்டும். அப்படித்தான் இன்ஸ்டாகிராம் இப்போது இருக்கிறது. நாம் காலப்பயணத்தில் செயல்படுகிறோம் என்று சொல்ல விரும்புவேன். ஆனால் என்ன வேறுபாடு என்றால் உங்களை அங்கு அனுப்பவில்லை – அது உங்களிடம் வருகிறது.”

 

இப்போது சிஸ்ட்ரோமின் முதன்மையான நிகழ்வு அவருடைய கல்லூரிக் காதலியான ஷுயட்சுடன் அடுத்த கோடையில் நடக்கவிருக்கும் திருமணம். அது உள்ளூர் நிகழ்ச்சியாக நல்ல உணவுடனும் ஒயினுடனும் இருக்கும். ஆங்கிலத் திருமணங்களெல்லாம் காலையில் நடக்கும் என்று அவர் எங்கோ படித்திருக்கிறார். ஆகவே அவரும் காலையில் திருமணம் நடத்த விரும்புகிறார். (கலிஃபோர்னியாவில் இது வினோதமாகக் கருதப்படும்.) அப்படியானால் விருந்துக்கு முன்னர் செய்வதற்கு வேறொன்றும் இல்லாததால் பிற்பகலில் எல்லோரும் நனறாகக் குடித்திருப்பார்கள் என்றேன். உடனே அவர் புருவம் சுருங்கியது. இது நல்லதா கெட்டதா என்று சிந்திக்க முயன்று கொண்டிருந்தார். மிக முக்கியமாக இந்தத் திருமணம் இன்ஸ்டாக்ராமில் வருமா? “இன்ஸ்டாகிராமில் போடாமல் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் அது எல்லோராலும் பார்க்கப்படும் என்று நான் நினைக்கவில்லை.” என்று சொல்கிறார்.

 

அடுத்து என்ன வந்தாலும் சிஸ்ட்ரோம் வாழ்வதற்காக உண்டாக்கப் பட்டிருக்கிறார். சிலிக்கான் பள்ளத்தாக்கில் இப்போது வெற்றி எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு மாதிரி அவர். நம்பிக்கையும் அதிகப் பணச்செலவு பிடிக்கும் கல்வியால் வரக்கூடிய வாய்ப்பும் தொடர்புகளூம் உள்ள வெள்ளைக்கார இளைஞர் அவர். ஐந்து ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் என்றாலும் கூட உலகை இப்போது உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக ஆகிவிட்டது. குளிர்ச்சியான, மிடுக்கான உலகத்தில் இருக்கும் இன்ஸ்டாகிராமுக்கும் வெளியில் உள்ள உண்மை உலகத்திற்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வு என்னைப் பாதித்தது. நாம் பார்க்கிறோம், பகிர்ந்து கொள்கிறோம், பிறகு?

 

நான் கட்டிடத்தை விட்டு வெளியே வரும்போது ஃபேஸ்புக்கில் வீட்டிற்குப் போகும் நேரம். சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு அழைத்துச் செல்லத் தூய்மையான சொகுசுப் பேருந்துகள் வருகின்றன. நான் மீண்டும் சாலையின் ஒன்பது வரிசைகளைக் கடந்து வளைகுடாவுக்குப் புறப்பட என்னுடைய பேருந்துக்கு $2.10 கொடுக்கிறேன். அழகான பனிமூட்டம் படர்ந்த மாலை நேரம். ஒரு வினாடி இன்ஸ்டாகிராமுக்குப் படம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய கைபேசியைப் பைக்குள் வைத்து விட்டு எனது தலையை சன்னல் மேல் சாய்த்துக் கொள்கிறேன். தண்ணீரிலிருந்து ஒரு ஸீல் குதிப்பதை என்னுடைய கண்கள் பார்க்கின்றன.

 

நன்றி: The Guardian, அக்டோபர் 2, 2015

 

***

 

பேராசிரியர் ச.வின்சென்ட்  எழுத்தாளர், விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். ஃப்ராய்ட், கிட்டி ஃபெர்கூசனின் ஸ்டீபன் ஹாக்கிங், சினுவா அச்சிபியின் சிதைவுகள், காஃப்கா கதைகள், வங்காரி மத்தாய் சுயசரிதை.. ஆகியவை முக்கியமானவை. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் பலநூலகளை மொழிபெயர்த்திருக்கிறார்.  அதில்,வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page