• Thu. Sep 21st, 2023

டி ஹேஷ் சமூக ஊடகங்களில் இடுகையிடுவது குறித்த முழுமையான பார்வை

ByGouthama Siddarthan

Mar 8, 2023

ட்விட்டர், பேஸ் புக், இன்ஸ்டாகிராம்…

 

தற்கால 21 ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகில் # ஹேஷ்டேக் என்பது தவிர்க்க முடியாத அம்சமாக மாறிப் போய் விட்டதை அனைவரும் அறிவோம்! மொழியியலிலும் அது இன்றியமையாத குறிச் சொல்லாக அங்கீகாரம் பெற்று உலகம் முழுக்க வளைய வரும் சூழலில், அது குறித்து ஒரு பறவைப் பார்வை பார்த்து விடலாம்.

 

ஒரு குறிப்பிட்ட தலைப்பு அல்லது போக்கைச் சுற்றியுள்ள உரையாடல்களை வகைப்படுத்தவும் கண்டறியவும் பயன்படுவதற்கான ஒரு குறிச் சொல்லாகவும், அது சம்பந்தமான குழுக்களை இணைக்கும் சங்கிலிக் கண்ணியாகவும் வடிவம் பெற்றிருக்கும் இதை, கிறிஸ் மெசினா என்னும் அமெரிக்க இணைய வல்லுநர் மிகவும் சாதாரணமான பயன்பாட்டுடன்தான் உருவாக்கினார். ஆனால், காலப்போக்கில் இந்தக் குறிச் சொல்லின் பயன்பாட்டை சமூக ஊடகங்களும் இணையத் தொழில் நுட்பங்களும் பெரியளவில் வளர்த்தெடுக்க ஆரம்பித்தன.

 

இந்த ஹேஷ்டேக் என்பது பற்றிய விரிவான விளக்கங்கள், இதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய கட்டுரைகள், அதுவும் பிரத்யேகமாக ஒவ்வொரு துறை சார்ந்த செயல்பாடுகளில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும், இதனுடன் இணைந்து உருப்பெறும் அரசியல் செயல்பாடுகள், இந்த அரசியல் கருத்துக்கள் பற்றிய விமர்சனங்கள், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, தொழில்நுட்பம், விஞ்ஞானம், வணிகம், உணவு, உடை, மனித வாழ்வில் அன்றாடம் இடம்பெறும் அனைத்து விஷயங்களிலும் ஊடுருவி நிற்கும் இந்த பிரம்மாண்டமான குறிச் சொல்லைப் பற்றி பல்லாயிரம் கட்டுரைகள் வந்து விட்டன. இந்த ஹேஷ்டேக்கை எப்படிக் கையாள்வது என்பது குறித்து இணையவழி வகுப்புகள் உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கின்றன.

 

ஆக, இந்த நூற்றாண்டின் முதன்மையான, இன்றியாமையாத குறியியல் சொல் # ஹேஷ்டேக் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 

இதை, முதன் முதலில், கிறிஸ் மெசினா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தபோது, (2007, ஆகஸ்ட் 23) அதை நிராகரித்து விட்டது ட்விட்டர் நிறுவனம். இது சம்பந்தமாக, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையிடம் “இது மேதாவிகளுக்கானது’ என்றும், அவற்றின் பயன்பாடு, “பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படாது’ என்றும் கூறியது.

 

 

ஆனால் மெசினா, சற்றும் மனம் தளராமல், தனது நண்பர்களிடம் எடுத்துச் சொல்லி தங்களது வலைப் பக்கங்களில் இதை பயன்படுத்துமாறு வேண்டிக் கொண்டார்.

 

ஆனால், அக்டோபர் 20, 2007-ல், கலிபோர்னியாவின் சான் டியாகோ பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிய ஆரம்பித்த நிகழ்வு நடந்தது. அந்த சம்பவத்தை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தெரிவிக்க விரும்பினார், கிறிஸ் மெசினாவின் நண்பரான நேட் ரிட்டர் என்பவர். உடனே தனது ட்விட்டர் பக்கத்தில், ‘San Diego Fires’ என்ற வார்த்தைகளுடன் 2 ட்விட்களை பதிவிட்டார். அது சிறிதும் கவனத்தைப் பெறவில்லை. இதைக் கண்ணுற்ற மெசினா, ரிட்டரைத் தொடர்பு கொண்டு தனது ஆலோசனைகளைத் தெரிவித்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரிட்டர் தனது பக்கத்தில் #sandiegofire என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தித் தொடர்ந்து ட்வீட் செய்தார். சற்றைக்கெல்லாம், வேறு சிலரும் பின்தொடர்ந்து அதே ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தலாயினர்.

 

 

இந்த இடத்தில்,தொழில்நுட்ப ரீதியாக ஒரு விளக்கம்:

 

1960 களில், அமெரிக்க நியூ ஜெர்சியில் உள்ள தொலைபேசி மற்றும் டெலிகிராப் நிறுவனத்தின் (AT&T பெல் ஆய்வகம்) நீண்டகால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, தனது புதிய கண்டுபிடிப்பான, தொடுமுறை (Touch Tone) தொலைபேசியை வடிவமைத்திருந்தது (அப்பொழுது, எண்களைச் சுழற்றும் முறை புழக்கத்தில் இருந்த காலகட்டம்). நெம்பர் பட்டன்கள் அமைக்கப்பட்ட மேல் பகுதியின் சதுர வடிவமைப்பில், மேலும் 2 பட்டன்களுக்கான காலியிடம் இருந்தது. அதில் 2 ஆப்ஷன்களை இணைத்து (ரீடயலிங், பாஸ்ட் டயலிங்) அந்த 2 பட்டன்களின் மேல் குறியீடுகளைப் பதியலாம் என்று முடிவு செய்தது. அதற்காக, எந்தக் குறியீடுகளை பொதுமக்கள் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் ஆராய்ச்சியாளர்களை அனுப்பியது. ஆராய்ச்சியின் முடிவுகள், நட்சத்திரக் குறியீடு (*) மற்றும் ஹாஷ்டேக் (#) ஆகிய இரண்டையுமே பிரதானமாக விரும்பியதால், அவைகளைப் பதிப்பித்து உருவாக்கியது அந்நிறுவனம். இதன் விளைவாக, இவை இரண்டும் நிலையான அமெரிக்க தட்டச்சுப்பொறிகளில் தோன்றின. (இந்த வரலாற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்)

 

நீங்கள் ஒரு புதிய குறியீட்டை ட்விட்டர், முகநூல் போன்ற சமூகஊடகங்களில் வெளியிட வேண்டுமானால், அதற்கு அவர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும். அதாவது, அந்தக் குறியீடு சம்பந்தமாக பிரத்யேகமான ஒரு செயல்பாட்டு நிரலியை எழுதி, தங்களது ஊடகச் செயலியில், பயனாளர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் செயலாக்கம் செய்ய வேண்டும். அதன் பின்னர்தான், அந்தக் குறியீட்டுச் சொல்லின் பயன்பாடு செயல்படும். (இது இணைய வலைப் பக்கம் உட்பட இணையம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் பொதுவானது.)

 

ஆரம்பகால சமூக ஊடக வலைதள உருவாக்குனர்களுடன் மற்றும் ட்விட்டர் தளத்திற்கான பயன்பாடுகளை உருவாக்கும் வல்லுநர்களுடன் நல்ல நட்பு பேணியிருந்தவர் கிறிஸ் மெசினா, இந்த ரீதியில், ஹேஷ்டேக் இணைப்புகளுக்கான செயல்பாடுகள் அவர்களிடையே உருவாக்கம் பெற ஆரம்பித்தன. அப்படியான பின்னணியில், ட்விட்டர் நிறுவனம் வெளியிலிருந்து பெற்ற நிரலிகளில் அமைந்திருந்த, ஹேஷ்டேக்குகளை இயக்கும் குறியீடு மற்றும் செயல்பாடுகளை நீக்குவதற்குப் பதிலாக, அப்படியே விட்டுவிட்டனர், ட்விட்டரின் பொறியாளர்கள். இப்படியாக ட்விட்டரில் ஊடுருவியிருந்தது ஹேஷ்டேக்!

 

இந்த ரீதியில், நேட் ரிட்டர் பதிவிட்ட ஹேஷ்டேக் பதிவு ட்விட்டரில் இடம் பிடித்தது. (ஏற்கனவே கிறிஸ் மெசினா ட்விட்டரில் பதிவிட்ட முதல் ஹேஷ்டேக் இடுகையும் இந்த ரீதியில்தான் இடம் பெற்றது.) படிப்படியாக அதிகமான மக்கள் #sandiegofire ஐப் பயன்படுத்தத் தொடங்கினர், இது ஹேஷ்டேக் வரலாற்றில் ஒரு பெரிய திருப்பு முனையாக மாறியது. அதன் பிறகு மெல்ல மெல்ல ட்விட்டர் தளம் ஹேஷ்டேக்கின் வீச்சைக் கண்டு கொள்ள ஆரம்பித்தது. 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள், ட்விட்டர் ஹேஷ்டேக்குகளை முறையாக ஏற்றுக்கொண்டது. அதன் முகப்புப் பக்கத்தில் மிகவும் பிரபலமான ஹேஷ்டேக்குகளை வைத்தது. ஹேஷ்டேக்குகளின் சகாப்தம் வளரத் தொடங்கியது.

 

இதன் தொடர்ச்சியாக, ஹேஷ்டேக்குகள் பிற சமூக தளங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைய அகராதியின் ஒரு அங்கமாக மாறியது. 2010-ல் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம், முதல் நாளிலிருந்தே அவற்றைப் பயன் படுத்தியது. முகநூல் 2013-ல் ஏற்றுக் கொண்டது. Google+, Tumblr மற்றும் Pinterest ஆகியவை # குறியீட்டைப் பயன்படுத்த பயனாளர்களை அனுமதித்தன. உலகளவில் முகநூலுக்கு அடுத்தபடியான இரண்டாவது பெரிய சமூக ஊடகமான VK.com என்னும் ரஷ்ய சமூக ஊடகம் அங்கீகரித்தது. (இடையில், 2011-ல் யூடியூப் ஹேஷ்டேக்குகளின் ஆதரவை முடக்கிய தருணத்தில், Tout என்னும் சமூக வீடியோ வெளியீட்டு தளம், ஹேஸ்டேக்குகளுக்கு பெரும் ஆதரவு தந்த பயன்பாட்டின் அடிப்படையில் யூ டியூப்பிற்கு, Tout ஒரு நல்ல மாற்றாக இருந்தது.)

 

ஜூன் 2014-ல், அதிகாரபூர்வமாக Oxford English Dictionary இந்தச் சொல்லையும், அதன் பொருளடக்கத்தையும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது.

 

நிற்க. இப்பொழுது, நமது டி ஹேஷுக்கு ஥ வருவோம்!

 

உலகின் அதி நவீன தொழில்நுட்ப கேந்திரம் என்று அழைக்கப்படும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பிறந்து, இணையத் தொழில்நுட்ப ஆலோசகராகவும், கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்குநராகவும், இணையப் பயன்பாட்டின் அதி நவீனத் தொழில்நுட்ப வல்லுநராகவும், பிரபல வலைப்பதிவராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கிறிஸ் மெசினா என்னும் வல்லுநர், தான் உருவாக்கிய ஹேஷ்டேக்கை, பெரும் பெரும் முயற்சிகள் செய்து 7 வருடங்கள் கடுமையாகப் போராடிய பின்தான் அங்கீகாரம் பெற்றார். அதுவும், உலகம் முழுக்க இருந்த தனது வல்லுந நண்பர்களின் பெரு முயற்சிகள் இந்த வெற்றியில் முதன்மையானவை.

 

இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலிருந்து கொண்டு எவ்விதமான தொழில்நுட்பமோ, அரசியல், அதிகாரம், சாதியம், பொருளாதாரம்.. என எந்தவிதமான பின்புலமோ இன்றி, ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த என்னை, இதுபோன்ற ஒரு புதிய சிந்தனையை நோக்கிப் பயணப்பட வைத்தது எனக்குள் கணந்தோறும் பீறிட்டு வெடித்துக் கொண்டே இருக்கும் புத்தம் புதிய எழுத்துச் சிந்தனைதான்! நான் உலகளவில் தேடித்தேடிக் கற்ற இலக்கிய ஆசான்களின் எழுத்து வீச்சே எனக்குள் இப்படியான பார்வையை உருவாக்கியுள்ளது. இது ஏற்கப்படலாம் அல்லது நிராகரிக்கப் படலாம். அல்லது பலவருட கடுமையான முயற்சிகளின் பின்னால் அங்கீகரிக்கப்படலாம். முகம் தெரிந்த, முகம் அறியாத, தமிழ் மற்றும் உலகளாவிய மொழிகளில் சிந்திக்கும் நண்பர்களின் ஆதுரமான முயற்சிகளில் இது சாத்தியமாகலாம். அப்படியான தருணம் ஒன்றில், வரலாற்றின் தீராத பக்கங்களில் டி ஹேஷ் ஥ பதிவேற்றம் ஆகும்போது, 2000 ஆண்டு தமிழ் மொழி மரபின் வெற்றிக் களிப்பை எதிர்காலத் தலைமுறை பெருமிதத்துடன் கொண்டாடும்!

 

****

 

புகழ்பெற்ற சமூக ஊடகங்களான ட்விட்டர், பேஸ் புக், இன்ஸ்டாகிராம்.. போன்றவைகளில், டி ஹேஷை ஥, பயனாளர்கள் எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

ஒவ்வொரு சமூக ஊடகமும் தனக்கென்று ஒரு தனித்துவ மிக்க பார்வையையும், வெளிப்பாட்டையும், தன்மையையும் கொண்டிருக்கிறது. அவைகளின் தனித்துவமான தன்மைகளுக் கேற்ப அதில் பங்குபெறும் பயனாளர்களின் பார்வையும் மாறுபடுகிறது என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.

 

ட்விட்டரின் வெளிப்பாடும், அதன் தனித்துவமும், அதன் பார்வையும் வேறு. தனது ட்வீட் வரம்பை 140 எழுத்துக்களிலிருந்து, சமீபத்தில், 280 எழுத்துகளாக உயர்த்தியுள்ளது. வீடியோவுக்கும் வரம்பு உண்டு (140 வினாடிகள்). ஆனால் நீங்கள் அதிக ஃபாலோயர்களைப் பெற விரும்பினால், உங்கள் ட்வீட்டில் 71 முதல் 100 எழுத்துகள் தான் சரியானது என்று Buddy Media வின் ஆய்வு கூறுகிறது. குறுகத் தரித்த ஒரு ட்வீட்டை நீங்கள் இடும் போது, அதிக பார்வைகளை அடைகிறீர்கள். அதுமட்டுமல்லாது, ஹேஷ்டேக்குகளுக்கு பெயர்பெற்ற ட்விட்டர் தளத்தில், ஹேஷ்டேக் டிவீட்களே பெரிதும் பரபரப்பாகின்றன.

 

கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து, இன்றுவரை, பெண்களின் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்க்கும் விதமாக உலகளாவிய கவனத்திற்குள்ளான ஹேஷ்டேக் #MeToo என்பதை அறிவோம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களின் இந்தக் கண்டனக் குரல், ஆண் அதிகாரத்தின் மீதான பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய உலகளாவிய #MeToo இயக்கமாகவும் உருவானது. பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தாக்குதல்களை தடுத்து அவர்களுக்கு அதிகாரமளித்தலில் முன்மாதிரி இயக்கமாகத் தோன்றிய இது, உலகம் முழுக்க ஒரு பொது உரையாடலைத் தோற்றுவித்தது. இந்த இயக்கத்தைத் துவக்கிய அமெரிக்க சமூக செயல்பாட்டாளரான டரானா பர்க், 13 வயது சிறுமியுடன் மேற்கொண்ட நீண்ட உரையாடலின் வாயிலாக அந்தச் சிறுமி மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்து மீறலை அறிந்து கொண்டார். அதன் விளைவாகவே இந்த ஹேஷ்டேக் இயக்கத்தை உருவாக்கினார். முக்கியமாக இது சிறுமிகள் மற்றும் கருப்பினப் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை மீது கவனம் செலுத்துகிறது.

 

தற்பொழுது, இந்த ஹேஷ்டேக் உலகளாவிய நிகழ்வாக மாறியிருக்கிறது. கூகுள் தேடுபொறியில் 196 நாடுகளில் தேடப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியான ஒரு கலாச்சார மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உலகின் முதல் முறையாக ஒரு பெண்கள் இயக்கம் புறக்கணிக்கப்படாமல் உற்று நோக்கப்படுகிறது. மக்கள் அதைக் கவனிக்கத் துவங்கியுள்ளனர். இது, சமூக வலைத்தளங்களில் வெறுமனே ட்வீட் செய்யும் இயக்கமல்ல. “குழு சார்ந்து ஒரு நீண்ட உரையாடலை உருவாக்கும் ஒரு வெளி” என்கிறார்கள் அமைப்பினர். (இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2018-ல், இஸ்லாமியப் பெண்கள் தங்களது பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய #MosqueMeToo என்ற ஹேஷ்டேக் பிரபலமானது.)

 

அதேபோல, #YesAllWomen என்ற மற்றொரு ஹேஷ்டேக்கையும் இங்கு குறிப்பிடலாம். இது ட்விட்டர் ஹேஷ்டேக் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரமாகும், இதில் பயனாளர்கள் பெண் வெறுப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பெண் வெறுப்பு மற்றும் பாலினப் பாகுபாடு குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள சமூக ஊடகங்கள் முழுவதும், பெண்களால் இதுபோன்ற ஹேஷ்டேக்குகள் விரைவாகப் பயன்படுத்தப்பட்டன.

 

இதெல்லாவற்றுக்கும் முன்னோட்டமாக, 2012-ல்  மிகப்பிரபலமான சர்ச்சைக்குரிய ஒரு  ஹேஷ்டேக்கையும் இங்கு நினைவு கூறலாம்:

 

#freethenipple

 

ஆண்களால், கட்டுப்பாடுகளுடன் வைக்கப்பட்ட, ஒடுக்கி வைக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட தங்களது உடலை சுதந்திரப் படுத்துவோம் என்கிற பார்வையில், தங்களது உடலின் திறந்த மேல் பகுதியை சட்டரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று, லினா எஸ்கோ என்ற அமெரிக்க நடிகை, இந்த ஹேஷ்டேக் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். ஹேஷ்டேக்குடன், தனது அரை நிர்வாண வீடியோ கிளிப்களை வெளியிட்டார். பேஸ்புக் அதன் விதிமுறைகளை மீறியதற்காக இந்த கிளிப்களை தன் தளத்திலிருந்து நீக்கியது.

 

புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் தரும் இன்ஸ்டாகிராம்,  நிர்வாண படங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ளது, பின்ட்ரஸ்ட், கலாபூர்வமான பாலியல் அல்லாத நிர்வாணத்தை அனுமதிக்கிறது. ட்விட்டர், யூ டியூப், Google+, Flickr, Tumblr.. என்று  ஒவ்வொரு சமூக ஊடக தளமும் நிர்வாணம் மற்றும் மார்புகளை வெளிப்படுத்துவது தொடர்பாக அதன் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டுள்ளன. இதுதான் ஆணாதிக்கக் கலாச்சாரம் என்று இந்த இயக்கத்தினர் வாதிட்டனர்.

 

இதற்கு முன்பே 2013 ஆம் ஆண்டிலேயே ஜெர்மனியில் பாலியல் துன்புறுத்தல்களை முன்வைத்து ஒரு சூடான ஹேஷ்டேக் விவாதம் ஓடியது. கண்டனக் குரல் என்ற பொருள் படும் #Aufschrei என்ற ஜெர்மன் மொழி வாசகத்துடன் வந்த இந்த ஹேஷ்டேக்கை பல்லாயிரக்கணக்கான பெண்கள் பின்தொடர்ந்தனர், அன்றாட பாலியல் தொடர்பான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த பிரச்சினை பிரபல ஊடகங்கள் வழியாக அரசியலுக்குள்ளும் நுழைந்தது, ஜெர்மனியில் ஒரு ஹேஷ்டேக் இவ்வளவு செல்வாக்கு பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்று ஜெர்மன் பத்திரிகைகள் விவாதித்தன.

 

2018-ல், ஒரு இளம் இந்தியப் பெண், இரவில் வீட்டிற்குத் திரும்பும் வழியில் இரண்டு ஆண்கள் தன்னைத் துரத்தி வந்ததையும், தான் கடத்தப்படுவோம் என்று அஞ்சியதையும், தனது பேஸ் புக் பக்கத்தில் விவரித்தார். இந்த நிகழ்வையொட்டி, அரசியல்வாதி ஒருவர், அந்த ஆண்களை விமர்சிப்பதற்குப் பதிலாக, “நள்ளிரவுக்குப் பிறகும் அவர் ஏன் வெளியில் இருந்தார்?’ என்று அந்தப் பெண்ணை விமர்சித்தார். இந்தக் கருத்து இந்தியா முழுவதும் பெரும் கண்டனங்களை எழுப்பியது. இதைத் தொடர்ந்து, பெண்களுக்கான ஊரடங்குச் சட்டத்தை நிர்ணயம் செய்யும் ஆணாதிக்க மனநிலையை சவால் செய்யும் விதத்தில் தங்களது நள்ளிரவுப் புகைப்படங்களை, பெண்கள் வெளியிட ஆரம்பித்தனர். அத்துடன் கூடவே, “நாங்கள் ஒன்றும் சிண்ட்ரெல்லாக்கள் அல்ல, நள்ளிரவில் நாங்கள் வீட்டில் அடைபட்டிருக்க வேண்டியதில்லை.” என்ற பொருள் படும் விதத்தில் #AintNoCinderella என்ற ஹேஷ்டேக்குகளை ட்வீட் செய்தார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந்த ஹேஷ்டேக் இயக்கத்தில் நள்ளிரவு செல்ஃபியை முதலில் பதிவிட்டவர்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்டா முகர்ஜி முதன்மையானவர்.

 

இதன் தொடர்ச்சியாக இன்னொரு இந்திய நிகழ்வு: பிப்ரவரி 2018-ல் கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், பெண்கள் பீர் குடிப்பது சம்பந்தமான தனது கருத்துக்களைத் தெரிவித்த போது, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக மாறியது. ட்விட்டர் பயனாளர் @TedhiLakeer என்பவர், #GirlsWhoDrinkBeer என்ற ஹேஷ்டேக்கை ட்வீட் செய்து, பெண்கள் பீர் அருந்தும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்யுமாறு, நாடு தழுவிய ட்ரெண்டைத் தொடங்கி வைத்தார். ஏராளமான பெண்ணியலாளர்கள் இந்த ஹேஷ்டேக் செயல்பாட்டில் கலந்து கொண்டு, பெண்கள் பீர் அருந்தி மகிழும் புகைப்படங்களைப் பகிர்ந்தனர். முக்கியமாக, டிக் டாக் தளத்தில், பெண்கள் பீர் அருந்தி மகிழும் வீடியோக்கள் ஏராளமாக பதிவேற்றம் ஆகின.

 

2015 -ல் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் மிகவும் பரபரப்பாக செய்யப்பட்ட ட்வீட் #NiUnaMas. “ஒரு பெண்ணும் இல்லை’ என்ற பொருள்படும் இந்த ஹேஷ்டேக் இயக்கத்தின் பின்னணி என்பது, தென் அமெரிக்க மாநிலங்களில், பெண் கொலைகள் என்பதாக – ஏறக்குறைய ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள் என்பதாக – இருந்தது. பெரும்பாலும், அவளுடைய முன்னாள் துணைவராலோ, அல்லது நெருங்கிய உறவினராலோ நடத்தப்படும் இந்தப் பெண் கொலைகள், ஆணவக் கலாச்சாரப் பார்வையிலும், பாலியல் துன்புறுத்தலிலும் சர்வசாதாரணமாக நிகழ்ந்தன. இதைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான பெண்கள், அர்ஜென்டினாவின் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். லத்தீன் அமெரிக்க நாடுகளின் பெண்கள், தங்களது கண்டனங்களை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் வெளிப்படுத்தினர்.

 

2014-ல், நாடுகடத்தப்பட்ட மசிஹ் அலினேஜாட் என்னும் ஈரானியப் பத்திரிகையாளர், ஹிஜாப் அணியாமல் ஜாகிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டார். (ஈரானில், பெண்கள் ஒன்பது வயதிலிருந்து, பொது இடங்களில் ஹிஜாப் அணிய வேண்டும். விதியை பின்பற்றாத பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.) அதற்காக, பல அடிப்படைவாத ஈரானியர்கள், “திருட்டுத்தனமான சுதந்திரம்” என்று கண்டனம் செய்தார்கள், உடனே, அவர் கூடுதல் படங்களை வெளியிட்டு, “எனது திருட்டுத்தனமான சுதந்திரம்’ என்ற தலைப்பில் #MyStealthyFreedom என்ற ஹேஷ்டேக் பிரச்சாரத்தைத் துவக்கினார். இந்த ஹேஷ்டேக்கின் கீழ், பெண்களுக்கான உடை விதிகளை நிராகரிக்கும் தைரியமான ஈரானியப் பெண்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அலினேஜாட் தொடர்ந்து வெளியிட்டார்.

 

இந்தப் புகழ் பெற்ற ஹேஷ்டேக்குகளை, பெண்களின் மீதான துன்புறுத்தல்களாகவும், ஒடுக்குதல்களாகவும் முன்வைக்கின்றனர் சமூக விமர்சகர்கள். இவைகளை ஒரே அணியமாக #MeToo என்கிற ஹேஷ்டேக்கின் வரிசையில் வைத்துப் பார்க்கின்றனர்.

 

கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தி பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்துதலுக்கு எதிரான ஒரு கலாச்சார மாற்றத்தை உருவாக்க விரும்பும் இந்த ஹேஷ்டேக், #MeToo என்பது, “நீங்கள் மட்டுமல்ல; உங்களோடு நானும் கூட’ என்கிற பொருள்படச் சொல்கிறது. அதாவது, பெண்களின் பாலியல் தாக்குதல்களை வெளிப்படையாக தைரியமாகச் சொல்லும் அறிக்கைகள், முழுமையாக பாதிக்கப்படக்கூடிய அவமானங்கள் தொடர்புள்ள குறிப்புகள், பதிவுகள்.. என பாதிக்கப்பட்ட பயனாளர்களின் ஹேஷ்டேக் ஆகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.

 

அதே சமயம், இந்த பாதிக்கப்பட்ட பயனாளருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் கண்டனக் குரல் எழுப்பும் மற்ற ஆதரவுக் குரல்களும், இந்த #MeToo ஹேஷ்டேக்கின் கீழ் ஒருங்கிணையும் சூழலும் உருவாக்கம் பெற்று நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, “நீங்கள் தனியாக இல்லை; உங்களுடன் நாங்களும் (ஆதரவாக) இருக்கிறோம்’ என்கிற பொருள் படும் விதத்தில் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்துகிறார்கள்.

 

இந்த ஆதரவு கொடுக்கும் ஹேஷ்டேக் ஒருவிதக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கருதுகிறேன். ஆகவே, இங்கு டி ஹேஷை ஥ இணைக்கலாம்:

 

பாதிக்கப்பட்ட பெண் எழுப்பும் குரல்: #MeToo (ஹேஷ்டேக்)

 

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்கும் குரல்: ஥MeToo (டி ஹேஷ்)

 

அல்லது, ஥IToo என்று போடலாம்.

 

****

 

ட்விட்டர் தலைப்பில் அதிக கவனம் செலுத்துகிறதென்றால், இன்ஸ்டாகிராம் படக்குறிப்புகளிலும், விளக்கத்திலும் கவனம் செலுத்துகிறது. இன்ஸ்டாகிராமைப் பொறுத்தவரை, புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இடுகைகளும், ஹேஷ்டேக்குகளும் தான் முதன்மை பெறுகின்றன. அதுமட்டுமல்லாது, வணிகம் சார்ந்த பதிவுகளிலும், சந்தைப்படுத்தல்களிலும் ஹேஷ்டேக்குகளின் செயல்பாடுகள் முக்கியமானவை. உணவு, ஆடைகள்.. போன்ற நுகர்வுக் கலாச்சாரம் சம்பந்தமாய் ஏராளமான ஹேஷ்டேக்குகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

 

உங்கள் வணிகத்திற்கு, உங்கள் பார்வையாளர்களை குறிவைக்கும் கலையை முழுமையாக்குவது முக்கியம். எனவே ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தும் போது முடிந்தவரை பழையதாக ஏற்கனவே பயன்படுத்தியதாக இல்லாமல், படைப்பாற்றலுடன் கூடிய புத்துணர்ச்சியுடன் கொடுங்கள். சரியான ஹேஷ்டேக் வைரலாகும் சக்தி கொண்டது.

 

பொதுவாகவே, தற்காலங்களில், உலகம் முழுக்க ஆடை என்பது அரசியல் ஆக வடிவாக்கம் பெற்று விட்டது. பண்டைய மற்றும் கடந்த காலங்களில் “ஆடை நெறி’ என்பது இருந்து வந்தாலும் தற்காலங்களில் பேசப்படுவது போன்ற பரபரப்பையும், பதற்றத்தையும் பெறவில்லை.

 

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது பெண் ஊழியர்களிடம் “பெண்களைப் போல் ஆடை அணிய வேண்டும்’ என்று கூறப்பட்டதான செய்திகளுக்குப் பிறகு, இணையம் முழுவதிலும் பெண்ணியலாளர்கள் கொந்தளித்தெழுந்தார்கள்.

 

#DressLikeAWoman என்ற ஹேஷ்டேக்குகள் இணையம் முழுக்க நிறைத்தன. டிரம்பின் ஆடைக் குறியீடு பற்றிய அறிக்கைக்கு பெண்கள் தங்களது பாணியில் இந்த ஹேஷ்டேக்கின் கீழ் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள்.

 

ஒரு பெண்ணின் ஆடை என்பது, பணிபுரியும் அலுவலகங்களில், அரசியலில், நீதிமன்றத்தில், காற்றில், பனியில், போரில், மருத்துவமனையில், விண்வெளியில், Netflix இல், ஷாப்பிங்களில், உடற்பயிற்சிகளில், வீட்டில்.. என ஒவ்வொரு இடத்திலும், பெண்களின் ஆடைத் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்ற ரீதியில் புகைப்படங்களாக அள்ளிவிட்டார்கள். டிரம்பின் இந்தப் பாலின ஆடைக் குறியீடுகள் பற்றிய இந்த ஹேஷ்டேக்குப் பிறகு அவருக்குப் பெரும் பின்னடைவாகத் தொடங்கியது என்பதை இங்கு நினைவு கூறலாம்.

 

இந்த ரீதியில், நீங்கள் ஒரு ஆடை சம்பந்தமான மார்க்கெட்டிங் மற்றும் ப்ரோமோஷனுக்கான இன்ஸ்டாகிராமர் ஆக இருக்கும் பட்சத்தில், ஒரு புதிய ஹேஷ்டேக்கை உருவாக்க வேண்டும்.

 

இன்ஸ்டாகிராமில் தனித்து நிற்க, காலாவதியான ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துதல் மற்றும் நகலெடுப் பதையும், ஒட்டுவதையும் நிறுத்துங்கள். அதற்குப் பதிலாக ஒவ்வொரு இடுகைக்கும் ஹேஷ்டேக் ஃபைண்டரின் சரியான பொருத்தமான தேர்வுகள் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்ற எண்ணம் உங்களுக்குள் தோன்றும்.

 

அதன்படியே, இன்ஸ்டாகிராமின் ஹேஷ்டேக் ஃபைண்டருக்கான டெய்ல்விண்ட் ஆப், ஒவ்வொரு இடுகையையும் உருவாக்கும் போது, உங்கள் கிராமில் சேர்க்க சிறந்த ஹேஷ்டேக்குகளை பரிந்துரைக்கிறது. சரியான ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துவது, ஒவ்வொரு புதிய இடுகையிலும் சரியான நபர்களை நீங்கள் அடைய உதவும். டெய்ல்விண்டில் உங்கள் இன்ஸ்டாகிராம் இடுகைகளை உருவாக்கும்போது, ஹேஷ்டேக் ஃபைண்டர் தானாகவே பாப் அப் செய்யும். உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் விளக்கத்தில் ஒரு ஹேஷ்டேக்கைச் சேர்க்கச் சொல்லும், மேலும் தொடர்புடைய ஹேஷ்டேக்குகளை டெய்ல்விண்ட் பரிந்துரைக்கும்.

 

ஆனால், அவை எல்லாமே, நிரலியில் ஏற்கனவே உருவாக்கம் பெற்ற, புதிய வடிவிலான பழைய ஹேஷ்டேக்குகளே! எனவே, நீங்கள் புத்தம் புதியதாக இதுவரை கேள்விப்பட்டிராத டிஹேஷிலிருந்து ஥ தொடங்கலாம். ஥DressPolitics என்ற டிஹேஷையும் அதன் விளக்கத்தையும், புகைப்படத்தையும் இடுகையிடும் செயல்பாடுதான், ஒரு நல்ல வணிகத்திற்கான திறவுகோலாகும்!

 

அதே சமயம், இன்ஸ்டாகிராமில், தானியங்கி ரோபோட்களின் செயல்பாடுகள் இருப்பதாகக் கருதும் இடுகைகளை, நிழல்தடை (Shadowban) செய்யும் போக்கையும் இங்கு நினைவு கொள்ளலாம்: “எங்கள் சர்வதேச சமூகத்திற்குப் பொருத்தமற்றது’ என வகைப்படுத்தப்பட்ட இடுகைகள் எங்கள் தளத்தில் இடம்பெறாது’ என்கிறது இன்ஸ்டா – இடுகைகள் மறைக்கப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப் படலாம், பெரும்பாலும் பயனருக்குத் தெரியாது.

 

இன்ஸ்டாவின் ஒரு புகழ் பெற்ற நிழல்தடையைப் பார்க்கலாம்:

 

கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பழங்குடி மக்களை, பூர்வீக அமெரிக்க சமூகங்களில் உள்ளவர்களை முன்வைத்து, பழங்குடி செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கலைப் படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டது “காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பழங்குடிப் பெண்களின் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இயக்கமான MMIW”. இந்த அமைப்பை ஒரு கனடிய தேசிய நெருக்கடி மற்றும் கனடிய இனப்படுகொலை என விவரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும், அமெரிக்காவில், பூர்வீக அமெரிக்கப் பெண்கள் வன்முறையை அனுபவிக்கும் வாய்ப்பு மற்ற மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம். மூன்று பழங்குடி பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார், மேலும் இந்த தாக்குதல்களில் 67% பழங்குடியினரல்லாத குற்றவாளிகளால் செய்யப்படுகின்றன என்கிறது பத்திரிக்கை ஆய்வு.

 

இந்த விழிப்புணர்வு அமைப்பு சார்ந்த பழங்குடிப் பெண்களின் கண்ணீர்க் கதைகளும், பழங்குடிக் கலைஞர்களின் வாழ்வியல் வரலாற்று அனுபவங்களும், அது சார்ந்த புரட்சிகரமான போராட்டச் செயல்பாடுகளும் உலகெங்கும் பிரசித்தம்.

 

கனடாவுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையான 16 வது நெடுஞ்சாலை எனப்படும் பிரின்ஸ் ஜார்ஜ்லிருந்து பிரின்ஸ் ரூபர்ட் வரையிலான 700 கிலோமீட்டர் நீளம் கொண்ட நெடுஞ்சாலை,1969 முதல் ஏராளமான பழங்குடிப் பெண்களின் கொலை நிகழ்வுகளாகவும், காணாமல் போன இடமாகவும் திகழ்கிறது. இதன் காரணமாக இது, “கண்ணீர் நெடுஞ்சாலை’ என்று அடையாளப்படுத்தப் படுகிறது. இந்த நெடுஞ்சாலையுடன் தொடர்புடைய பல கொடூரமான கண்ணீர்க் கதைகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

 

2014-ல், 15 வயதான டினா ஃபோன்டைன் என்னும் பழங்குடிச் சிறுமியின் உடல், ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு, கற்களால் அமிழ்த்தி, மத்திய கனடாவில் உள்ள சிவப்பு ஆற்றில் வீசப்பட்டது, அப்போதிருந்து, தன்னார்வ குழுக்கள் படகுகளில் கூடி, சிவப்பு ஆற்றைச் சுற்றிலும் உள்ள நீர்வழிகளில் காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட மற்ற பெண்கள், சிறுமிகளின் எச்சங்களைத் தேட ஆரம்பித்தனர். பெண்களை தண்ணீரில் அமுக்கி விடுவவது என்பது தடயங்களை அழிப்பதற்காக கொலையாளர்களால் பின்பற்றப்படும் வழிமுறை. இதன் நீட்சியாக, MMIW இயக்கத்தினரும், பழங்குடி மக்களும் சிவப்பு கை ரேகைகளை தங்களது முகங்களில் வரைந்து எதிர்ப்புகளைக் காட்டினர். மேலும், காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியினப் பெண்களின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட கலைச் செயல்பாடுகளை நிகழ்த்தும் REDress என்னும் திட்டத்தை கனடிய பழங்குடிக் கலைஞரும் செயல்பாட்டாளருமான ஜெய்ம் பிளாக் என்பவர் தொடங்கினார். இது பெரியளவில் பரவியது. பொது இடங்களில், நெடுஞ்சாலைகளில், பூங்காக்களில், மைதானங்களில் என்று பல்வேறு இடங்களில் சிவப்பு நிற ஆடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொரு வெற்று ஆடையும் காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரைக் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.

 

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிவப்பு நிற ஆடையைக் காண்பிப்பதன் மூலமாகவும், ஒரு சமூகமாக ஒன்றிணைந்து மற்ற பொது இடங்களில் சிவப்பு ஆடைகளைக் காண்பிப்பதன் மூலமும், பழங்குடிப் பெண்களுக்கு தங்களது ஆதரவைக் காட்டினார்கள். மேலும், சிவப்பு நிறத்தை மட்டுமே ஆவிகளால் பார்க்க முடியும் என்று விளக்கினார்கள். “எனவே இந்தப் பெண்களின் ஆவிகளை மீண்டும் அழைப்பது மற்றும் அவர்கள் நம்மிடையே இருக்கவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகம் மூலம் அவர்களின் குரல்களைக் கேட்கவும் வாய்ப்பளிக்கின்றன இந்தச் செயல்பாடுகள்..” என்று கலைஞர்கள் விளக்கினார்கள்.

 

2012-ல் கனடாவின் பூர்வீகக்குடிகளின் பெண்கள் சங்கத்தால் தொடங்கப்பட்ட, ‘முகமற்ற பொம்மைகள் உருவாக்கும் திட்டம்’ என்பது, காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் முகமற்ற பொம்மைகள் உருவாக்கத்தை முன்வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த கலைத் திட்டம், கனடா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூகங்களுக்குள் எழுச்சியை ஏற்படுத்தியது.

 

கனடிய தொல்பாரம்பரியம் கொண்ட இனக்குழு சமூகங்களில் முதன்மையான பண்பாட்டு நினைவுச் சின்னங்களாக விளங்குபவை “இனுக்சூட்’ எனப்படும் கற்சின்னங்கள் ஆகும். நவீன ஓவிய மற்றும் நவீன சிற்பங்களைப் போல பல்வேறு உருவ – வடிவமைப்புகளில் கற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்கள் போன்ற தோற்றத்துடன் பண்டைய காலங்களில் கற்றளிகளை உருவாக்கினார்கள் பழங்குடி சமூகத்தினர். இந்த “இனுக்சூட்’ எனும் கற்றளிகள், வரலாற்று ரீதியாக வழி காட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், ஒரு குறிப்புப் புள்ளியாக, பயணப்பாதைகள், மீன்பிடி இடங்கள், முகாம்கள், வேட்டைத் தளங்கள், வழிபாட்டு இடங்கள், வேட்டையாடலில் பயன்படுத்தப்படும் சறுக்கல் வேலிகள், உணவுத் தேக்கங்கள்.. என்று பல்வேறு வடிவங்களில், பல்வேறு மாறுபாடுகளில் அடையாளப்பட்டிருக்கலாம். மூதாதையர்கள், தங்களது இன்யூட் கலாச்சாரத்தின் பண்டைய வேர்களைக் கொண்டு இவைகளை உருவாக்கியிருந்தார்கள்.

 

இந்த தொல்பண்பாட்டின் தொடர்ச்சியாக, 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த “இனுக்சூட்’ கற்றளிகளை மீண்டும் உருவாக்க ஆரம்பித்தனர் தற்கால பழங்குடிச் சமூகப் பெண்கள். இந்தமுறை அந்தக் கற்சின்னங்கள் வெறும் பண்டைய கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவையாக மட்டுமில்லாமல், ஒரு பெரும் புரட்சிகரமான பார்வையை தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டு ஒளிர்ந்தன. ஆம், பழங்குடிப் பெண்களும், MMIW இயக்கச் செயல்பாட்டாளர்களும், காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட பழங்குடிப் பெண்களின் பிரச்சினைகளுக்கு கவனத்தை ஈர்க்கும் ஒரு வழியாக இந்தக் கல் கட்டமைப்புகளைக் கட்ட ஆரம்பித்தார்கள். ஒரு நாளைக்கு ஆறுமணி நேரம் என, வாரத்தில் நான்கு நாட்கள் கடுமையாக வேலை செய்து 1,181 இனுக்சூட்களை உருவாக்கினர். நாட்டின் ஒட்டு மொத்தப் பார்வை முழுக்க அந்தச் செயல்பாடுகளின் பக்கம் திரும்பியது. இந்தத் திட்டம் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தது, பல்லாயிரக்கணக்கான மக்கள் இனுக்சூட் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். எழுத்தாளர்களும் விமர்சகர்களும் கட்டுரைகளாக எழுதித் தள்ளினர். உலக மக்களின் கேள்விகள் சமூக ஊடகங்களில் பரபரப்பான விவாதங்களாக மாறின. காணாமல் போன பூர்வீகப் பெண்களைப் பற்றி அரசாங்கம் அதிகாரப்பூர்வ விசாரணையை மேற்கொள்ளும் வரை தாங்கள் இனுக்சூட்களைத் தொடர்ந்து கட்டிக் கொண்டிருப்போம் என்று இயக்கச் செயல்பாட்டாளர்கள் அறைகூவல் விடுத்தனர்.

 

ஒருவழியாய் டிசம்பர் 2015-ல், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிகாரபூர்வமாக விசாரணையைத் தொடங்குவதாக அறிவித்தார்.

 

இதுபோன்ற பல்வேறு கதைகள், பார்வைகள், பதிவுகள்.. என இன்ஸ்டாவில் பதிவிட்ட இடுகைகள் அனைத்தும் ‘மறைந்து’ போய்விட்டன!

 

“இது பழங்குடிப் பெண்களை மீண்டும் ஒருமுறை கொலை செய்ததைப் போன்றது..” என்று உலகின் பல்வேறு மொழிசார்ந்த எழுத்தாளர்களும் கண்டனக்குரல் எழுப்பினார்கள். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த இன்ஸ்டாகிராம் அதிகாரிகள் “பரவலான உலகளாவிய தொழில்நுட்ப சிக்கலால் நேர்ந்த துரதிர்ஷ்ட வசமான பிழை” என்று மன்னிப்புக் கோரியது.

 

****

 

சமூக ஊடக நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனம் என்று அடையாளப்படுத்தப்படும் பேஸ்புக் பதிவுகளில் இடம் பெறும் ஹேஷ்டேக்குகள், தனிப்பட்ட பயனாளர்களை மாத்திரம் அல்லாது, பல குழுக்களையும் வெற்றிகரமாக இணைக்கிறது. “சமூக நீதிப் போராளி’ Social justice warrior (SJW) என்ற வார்த்தை 2011 இல், ட்விட்டரில் முதன்முதலில் தோன்றியபோது சமூகச் செயல்பாட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுபோல, பேஸ்புக்கில் செயல்படுகின்ற சமூகச் செயல்பாட்டாளர்களை, “பேஸ்புக் போராளிகள்’ என்று அழைக்குமளவுக்கு சமூகவிழிப்புணர்வு சார்ந்த விஷயங்களே முன்னிலை வகிக்கின்றன. மேலும் சமூக ரீதியாக பெரும் கவனிப்பையும் வெற்றியையும் பெறுகின்றன.

 

2010-ல் தொடங்கிய #ArabSpring லிருந்து, #BlackLivesMatter, #MeToo, #BringBackOurGirls, #FarmersProtest என்று இந்தியா உள்ளிட்ட உலகம் முழுக்க வெடித்தெழுந்த புரட்சிகரமான போராட்டங்கள் பேஸ்புக் தளத்திலேயே பெரியளவில் செயல்பட்டு வெற்றியடைந்தன என்பது வரலாறு. மேலும் சிலவற்றைக்கூட இங்கு குறிப்பிடலாம்.

 

சீனாவின் தேர்தல் முறைகளை எதிர்த்து, 2014-ல் ஹாங்காங்கில் எழுந்த #UmbrellaRevolution என்னும் “குடை புரட்சி’. 2017-ல் டிரம்ப் கொண்டுவந்தTrump travel ban (இதை ‘Muslim ban’ என்று விமர்சகர்கள் விமர்சித்தனர்) என்னும் நிர்வாக நடவடிக்கை என்பது பிற நாட்டவர் அமெரிக்கா செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் நடவடிக்கை. இதில் பெரும்பான்மையாக இஸ்லாமிய நாடுகளின் பட்டியல் இருந்தது. இந்த டிரம்பின் பயணத் தடையை எதிர்த்து #NoBanNoWall என்ற ஹேஷ்டேக்குகளின் எழுச்சி. அதே வருடம் கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் தோன்றிய துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தோன்றிய #NotOneMore என்னும் “ஒருவரும் மிச்சம் இல்லை’. தமிழ்நாட்டில் கடந்த வருடம் ஜெய் பீம் என்னும் திரைப்படத்திற்கு, சாதி ரீதியான கடுமையான எதிர்ப்புகளும் படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற அரசியல்வாதிகளின் கோரிக்கைகளும் எழுந்தபோது, அந்தத் திரைப்படத்திற்கு ஆதரவாக வெடித்தெழுந்த ஹேஷ்டேக் இயக்கம், #Jaibeem… இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இந்த ரீதியில், பெரும் வளர்ச்சியடைந்து வரும் இணைய சமூக ஊடக உலகில், கணத்துக்கு கணம் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டே இருக்கவேண்டிய பல்வேறு உத்திகளை நோக்கி நகர்கிறது பேஸ்புக். சமீப ஆண்டுகளில், பேஸ்புக்கின் சிக்கலான அல்காரிதமிக் நியூஸ் ஃபீட் வடிகட்டல்களின் வழியாக, பயனாளரின் பதிவுகள் உண்மையில் அவரது நண்பர்களால் பார்க்கப்படும் நிலை என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது என்றும், வியாபாரத்தன்மையை நோக்கி மாறக்கூடிய இந்த நகர்வு, அரசியல் வெளிப்பாட்டின் தளமாக சமூக ஊடகங்களில் செயல்படும் பயனாளர்களிடம் பல்வேறு ஏமாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் பயனாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துக்களை ஆராய, பேஸ்புக் தற்போது அதன் செய்தி ஊட்டங்களை எவ்வாறு வடிகட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

பயனாளர் சமூகவெளியில் முக்கியமான பிரபலஸ்தரா? அல்லது சாதாரணமானவரா?

 

பயனாளர் உருவாக்கிய கடந்தகால பதிவுகள், எந்தளவு பிரபலமாக இருந்தன? (விருப்பம், கருத்து, பகிர்வு மற்றும் வாசிப்பு)

 

தொடர்ச்சியாக அப்டேட் / ட்ரெண்டிங் ஆன பதிவுகளை வெளியிட்டு வருகிறாரா?

 

தற்போது வெளியிட இருக்கும் பதிவு அப்டேட் ஆன உள்ளடக்கம் கொண்டதா?

 

சுருக்கமாக உள்ளதா? விரிவாக உள்ளதா?

 

படம் இணைக்கப்பட்டுள்ளதா? வெறும் பதிவு மட்டும்தானா?

 

ஹேஷ்டேக் இணைக்கப்பட்டுள்ளதா?

 

இதுபோன்ற நீண்ட ஆய்வுக்குப் பின்னரே பயனாளர்களின் பதிவுகளை பெருமளவில் பரவவிடுகிறது என்கிறது TechCrunch என்னும் இணைய இதழ்!

 

ஒரே வார்த்தையில் சொன்னால், “ஆர்கானிக் ரீச்’ என்னும் முறையில், பேஸ்புக்கின் நியூஸ்ஃபீடில் கொடுக்கப்பட்ட, எந்தவொரு பேஸ்புக் பதிவுகளையும் பார்க்கக் கூடிய நபர்களின் எண்ணிக்கையை வரையறுப்பது. பேஸ்புக் உங்கள் நெட்வொர்க்கில் நடந்த அனைத்தையும் கண்டிப்பான காலவரிசைப்படி காண்பிக்கும் பட்டியல் மறைந்து நீண்ட காலமாகி விட்டன. அதற்குப் பதிலாக, அல்காரிதம்கள் உங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும் என்று கணக்கிடும் சில புதுப்பிப்புகள், பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் சிற்சில கதைகளை வடிகட்டுகின்றன. இதன் பொருள் என்ன வென்றால், உங்களது 400 நண்பர்களில், ஒரு டஜன் அல்லது அதற்கு சற்று கூடுதலானவர்கள் மட்டுமே உங்களது பதிவுகளைப் பார்க்க முடியும். அதேபோல, ஒரு நிறுவனத்தின் பக்கம் 10,000 பின் தொடர்பவர்களைக் கொண்டிருந்தாலும், அவர்கள் பதிவிடும் எந்தவொரு இடுகையையும் அவர்களில் 100-200 பேர் மட்டுமே பார்க்க முடியும்.

 

பயனாளர்கள் இந்த ஆர்கானிக் ரீச் அடைவதற்கான வழிமுறைகளை சொல்லித் தரும் இணைய வகுப்புகள் நிறைய இருக்கின்றன.

 

இன்னும் சற்று முன்னோக்கிச் சொன்னால், இந்த இலக்கின் வழிமுறைகளை பல்வேறு செயலிகள் முறைப்படுத்துகின்றன. நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு தகவல் மற்றும் அவர்களின் பிராண்டுகளை / பதிவுகளை பகுப்பாய்வு செய்யவும் குறிப்பிட்ட பிரிவுகளை கண்காணிக்கும் வழிமுறைகளை வழங்குவதற்காக சமூக ஊடகத் தரவாகவும் செயல்படுகிறது. உதாரணமாக: பிராண்ட்வாட்ச் என்ற செயலி, #BlackLivesMatter (மே 25-லிருந்து ஜுன் 7 வரை) இடுகை குறித்த பயனாளர் உணர்வுகளின் தரவுகளை, சோகம், மகிழ்ச்சி, வெறுப்பு, கோபம், பயம் மற்றும் ஆச்சரியம் என்று மிகவும் சிறப்பான முறையில் கண்டறிந்தது.

 

 

ஆக, இத்தனை விஷயங்களையும் தாண்டி, உங்கள் பதிவுகள் பேஸ்புக்கில் அதிகப் பார்வைகளை அடைய, புதுமையான விஷயங்களுக்கும், புரட்சிகரமான பார்வைகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

 

ட்விட்டருக்கு புதிய ஹேஷ்டேக்கை கண்டுபிடிப்பது போல, இன்ஸ்டாகிராமிற்கு ஒரு நல்ல தலைப்பை எழுதுவது போல, டிக் டாக் / யூ டியூப்புக்கு சிறந்த வீடியோக்களை உருவாக்குவது போல, பரபரப்பு மிகுந்த, அப்டேட்டான, ஒரு விஷயத்தை, புதிய டி ஹேஷுடன் ஥ இணைத்து ஒரு புத்தம் புதிய பதிவாக இடுகையிடுவது சாலச் சிறந்தது.

 

எனவே, ‘விஷயத்திற்கு’ வருவோம்:

 

சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்னும் 16 வயதுச் சிறுவன், செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 சாம்பியனாக விளங்கும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். இவரைப் பற்றிய பதிவுகள் சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டன. ட்விட்டரில் #Chess  #Praggnanandhaa #MagnusCarlsen  #ChessChamps என பல ஹேஷ்டேக்குகள் வைரலாயின. பேஸ்புக்கில், ஏராளமான வாழ்த்துப் பதிவுகள்! அதில் முக்கியமாக,  தமிழனைக் கொண்டாடுவோம், எளிய குடும்பத்தில் பிறந்த தமிழ் மகனைக் கொண்டாடுவோம், வெற்றித் தமிழன் பிரக்ஞானந்தாவை வாழ்த்தி வரவேற்போம்.. என்றெல்லாம் பேஸ் புக்கில் நீண்ட வாழ்த்துப் பதிவுகளும், கொண்டாட்டங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. அதில் ஒரு ஹேஷ்டேக் பதிவு, #realmeritocracy.

 

பொதுவாகவே, தமிழ்ச் சூழலில் meritocracy என்னும் பொருளடக்கத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களுமாக இருசாரார் இருக்கின்றனர் என்பது சமூக ஊடகங்களில் தீவிரமாய் செயல்படும் பயனாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.  தகுதி நாயகம் அல்லது தகுதி அடிப்படை என்ற தமிழ் மொழியில் சொல்லாக்கம் செய்யப்படும் இந்தச் சொல் என்பது அரசியல் தத்துவம் சார்ந்தது. பதவி, புகழ், அதிகாரம் என்பது, ஒருவருக்கு திறமை, மற்றும் சாதனை அடிப்படையில் கிடைக்க வேண்டுமேயன்றி ஆண், பெண் பேதம், இனம், மொழி, மதம் அல்லது செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கக் கூடாது என்பதே இதன் அடிப்படை ஆகும்.

 

இந்தச் சொல்லை இன்னும் கொஞ்சம் கட்டுடைத்துப் பார்க்கலாம். இந்தச் சொல்லின் பின்னொட்டாக வரும் -cracy என்ற பதத்தை, இதற்கு முன்னொட்டாக வருகிற வார்த்தைகளில் இணைக்கும் போது, meritocracy (தகுதிஅடிப்படை), berocracy (அதிகாரத்துவம்), aristocracy (பிரபுத்துவம்), democracy (ஜனநாயகம்) autocracy (ஏகாதிபத்தியம்), dyscrasy (கருத்துவேறுபாட்டுத்தன்மை) theocrasy (இறையியல்).. போன்ற வார்த்தைகளுக்கேற்ப அதன் அடிப்படை குண நலன்களைச் சொல்லும் விதத்தில் பல்வேறு விதங்களில் வரையறுக்கலாம்.

 

தற்காலங்களில், meritocracy என்னும் ‘தகுதி குறித்த பார்வை’ உலகளவிலான பொது சமூகத்தில் பல்வேறு விதமான கருத்தலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

சமத்துவமின்மைக்கு மாற்றாகத் தோன்றிய ஒரு கொள்கையாகத் தொடங்கியது, மாறாக சமத்துவமின்மைக்கான நியாயமாக மாறிவிட்டது.. என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

‘தகுதியின் கொடுங்கோன்மை’ (The Tyranny of Merit) குறித்த விமர்சனங்கள் பெருமளவில் வந்து கொண்டிருக்கின்றன. “தகுதியை ஒரு வகையான கொடுங்கோன்மை ஆக்குவது வெற்றிகரமானவர்களுக்குத் தகுதியைக் கூறுவதுதான்…” என்று பகடி செய்கிறார்கள். ஒருவர் எவ்வாறு தகுதி வெற்றியாளராக மாறுகிறார்? மாறாக, தகுதி இழந்தவர் என்றால் என்ன அல்லது யார்? என்பது போன்ற விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.   மக்கள் ஒவ்வொருவரும், அவர்களின் பிறப்பு அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும், வேலைகள் மற்றும் சமூகப் பாத்திரங்கள், வருமானம் மற்றும் செல்வம் மற்றும் அதிகாரத்திற்காக வேறு எவருடனும் போட்டியிட முடியும் என்ற அர்த்தத்தில் விடுதலையாகத் தோன்றிய இந்தத் தகுதி நாயகம் என்னும் கருத்தியலை ஒரு பின் நவீனத்துவக் கருத்தியலோடுதான் அணுக வேண்டியுள்ளது என்கின்றனர் சமூக  விமர்சகர்கள்.

 

மாற்றுப் பார்வையும், விமர்சனமும் கொண்ட ஒரு குறியீட்டுச் சொல்தான் டி ஹேஷ் ஥ என்பதை இங்கு ஞாபகம் கொள்ளுங்கள்.

 

஥realmeritocracy  ஥tamilmeritocracy  ஥breakmeritocracy என்கிற டி ஹேஷ்களுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவுகள் உங்கள் கிரியேட்டிவ் சிந்தனைகளில் அலையலையாய் எழும்பும்.

 

முழுக்கவே அரசியல், புரட்சிகள், பிரச்சினைகள்.. என்றே பார்த்து வந்து விட்டோம்.

 

ஒரு ஜாலியான டி ஹேஷ் போடுவோம்:

 

஥Welcomebiggboss ஥Expectbiggboss

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பொறுப்பு  கமல்ஹாசனிடமிருந்து சிம்புக்கு மாற்றம் அடைந்து விட்ட  நிலையில், பழைய பிக்பாஸிலிருந்து விலகிய, புதுமையான பிக்பாஸை இனிமேல் எதிர்பார்க்கிறோம் என்ற கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்த டி ஹேஷ் ஥ செயல்படும்.

 

தற்பொழுது, உலகம் முழுக்கவும் பரபரப்பான பேச்சாகவும், துயர்மிகு சூழலையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும்  உக்ரைன் – ரஷ்யப் போர் குறித்த வரலாற்றில் நம் கருத்துக்களை எப்படிப் பதிவிடாமல் இருப்பது?

 

போர் என்பது மனித குலத்திற்கே எதிரானது. மாபெரும் நாகரிக வளர்ச்சி அடைந்து விட்டதாக பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் இந்த நவீன காலங்களிலும், மனிதன் உருவாக்கிய விஞ்ஞானமும், தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும், ஏகாதிபத்தியப் பார்வையும் யுத்த பூமியின் ரத்தச் சகதியில் விளையாடத்தான் விரும்புகின்றன, காலங்காலமாய்.

 

நான் எழுதிய கட்டுரை ஞாபகம் வருகிறது.

 

2012 ஆம் வருடத்தில் உலகப் புகழ்பெற்ற சர்வதேச தொலைக்காட்சியான “டிஸ்கவரி சேனல்’ மிக மிக நுட்பமான போர் வெறியைத் தூண்டும் நுண்ணரசியலுடன் (மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ ஒரு போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முற்போக்கு பார்வை என்ற விதத்தில்) ஒரு நிகழ்ச்சியை ஒளி பரப்பிக்கொண்டிருந்தது. சர்வதேச அளவில் நடக்கும் ஆயுத வியாபாரங்களுக்குத் துணை போகின்ற Future Weapons என்னும் அந்த நிகழ்ச்சியில் நுட்பமாக மறைந்திருக்கும் ஆயுத வியாபாரத்தையும், ஏகாதிபத்திய அரசுகளின் வியாபார போர்த்தந்திரங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தி ‘ஆயுத வியாபாரத்தின் அரசியல்’ என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதை புகழ்பெற்ற ஆங்கில இதழ் Truth out வெளியிட்டது. அதன்பிறகு, இந்தக் கட்டுரை 100 க்கும் மேற்பட்ட சர்வதேச ஆங்கில இணைய இதழ்களில் Share செய்யப்பட்டு உலகம் முழுக்க வைரலாகப் பரவியது.

 

போர் என்பது அழிவே இல்லாத அசுரனைப் போன்றது. நாட்டுப்புறக் கதைகளில் சொல்வதுபோல, அசுரனை நாம் கொல்ல முயற்சிக்கும் போது, அவன் சிந்தும் ஒவ்வொரு ரத்தத் துளியிலும் ஒரு அசுரன் தோன்றிக் கொண்டே இருப்பான்.. ஆகவே, நாம் அவனை அழிக்கவும் செய்யாமல்,  செயல்படவும் வைக்காமல், தந்திரமாகவே பேண வேண்டும்.

 

பன்னெடுங்காலமாக போரின் அவலங்களை  கொடூரங்களை ஒவ்வொரு கணமும் அனுபவித்த நாடு ரஷ்யா. வேறெந்த மொழிப் படைப்புகளிலும் இல்லாத தனிச் சிறப்பு வாய்ந்த போர் இலக்கியங்கள் கொண்டது. போருக்கு எதிரான மகத்தான படைப்பாளிகளின் ரத்தமும் சதையுமாக உருவான மனிதம் பற்றிய தேடலும் சிந்தனையும் கொண்ட தனித்துவம் மிக்கது. மாக்சிம் கார்க்கியின் “தாய்’ நாவலில் வரும் நாயகர்களான பாவெல், ரஷ்யன்; ஆந்த்ரே, உக்ரேனியன்.

 

அன்று, இருவரும் இணைந்து வாங்கிய சுதந்திர மண்ணில் இன்று, பிரிந்து நின்று போரிடுகிறார்கள். இந்தப் போருக்குப் பின்னால், பல்வேறு நுண்ணரசியல் கூறுகள் முடிவற்ற கண்ணி வெடிகளாக அந்த மண்ணில் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

 

தற்கால உக்ரேனியக் கவிஞர் செர்ஹெய் ஸேதனின் கவிதை: “எனக்கு இப்போது வீடு இல்லை, என் காலடி மணல் கரிந்து விட்டது. நான் என்னவாக ஆவேன்? கைப்பிடிச் சாம்பலில் பிதுங்கும் கரியமில நிறத்தில் எஞ்சும் மனிதமாகவா, அன்றி, மிருகமாகவா?”

 

இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் எழுகிறது டி ஹேஷ்!

 

஥StopWarPolitics  ஥StopTheWar

 

இந்த டி ஹாஷில் ஒட்டிக் கொண்டிருக்கும் சொற்றோடர்கள், ஏற்கனவே, எல்லோராலும் பயன்படுத்தப்பட்ட மிகப் பழைய வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகளுக்கு முன் டி ஹேஷ் ஥ போடும்போது, அமெரிக்காவின் தலையீடு, நேட்டோ நாடுகளின் அணிசேர்ப்பு, ரஷ்யாவின் நிலைப்பாடு, தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை, ஆயுத வியாபாரத்தின் நுண்ணரசியல்… எனப் பல்வேறு பரிமாணங்கள் அந்தக் குறியீட்டில், முடிவற்ற பார்வைகளாய் விரிந்து கொண்டே போகும்.

 

போர்க்காலத்தில் ஒரு நாட்டிற்குள் ஏற்படும் மாற்றங்களை ஹேஷ்டேக்குகள் எவ்வாறு கவனிக்கின்றன மற்றும் பிரதிபலிக்கின்றன என்பதை ஆய்வு செய்பவர்களுக்கு இந்த டி ஹாஷ் ஥, பெரும் வரலாற்று அனுபவமாக இருக்கும்!

 

****

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page