• Sun. Mar 26th, 2023

டி ஹேஷ் – ஒரு சுருக்கமான அறிமுகம்!

ByGouthama Siddarthan

Mar 8, 2023

“நான் அல்காரிதங்களால் சிந்திக்கிறேன்..” என்று ஒரு நேர்காணலில் மார்க் ஷுக்கர்பெர்க் சொன்னதாக நினைவு. அல்லது, இதைச் சொன்னது எலான் மஸ்க்கா? ஞாபகம் இல்லை. ஆனால், “நான் படிமங்களால் சிந்திக்கிறேன்” என்று சொன்னவர் ரஷ்ய நாவலாசிரியர் விளாடிமிர் நபக்கோவ் என்பதை, அநந்தகோடி உயிரணுக்கள் கொண்ட என் மூளையின் சேகர அடுக்குகளில் ஒரு சின்னஞ் சிறு துகளாக பதிவாகியிருப்பதை, தோண்டி எடுத்து, என் பார்வைக்கு கொண்டு வருவதற்கு, ஒரு ஹேஷ்டேக் தேவையாக இருக்கிறது.

 

ஆம். இந்த குறிச்சொல் என்னும் ஹேஷ்டேக், கணினியில் மட்டுமல்ல, மனிதனின் ஒவ்வொரு மூளை அடுக்குகளிலும் இருக்கிறது. நான் வெறுமனே, நபக்கோவ் என்றோ, மார்க் ஷுக்கர்பெர்க் அல்லது எலான் மாஸ்க் என்றோ குறிச்சொல்லை இடவில்லை. சிந்தனை என்கிற தலைப்பில் ஹேஷ்டேக் செய்கிறேன். அது, இவர்களைத் தூக்கி வந்து என் முன் வைக்கிறது. மனித மூளை ஒரு டேட்டா பிராசசரை விடப் பன்மடங்கு விஷயங்களை உள்ளடக்கியது. தலைமை மனதுக்கு என்ன வேண்டுமோ, அதைப் புரிந்து உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் செயல்படுவது, இதே இன்னொருவருக்கு, வேறு விதமான விஷயங்களை அவரது ஹேஷ்டேக் காட்டும். எதிர்காலத்தில் ஹேஷ்டேக்களின் பயன்பாடு இப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

 

ஹேஷ்டேக்களின் உலகளவிலான சமூக மற்றும் அரசியல் சார்ந்த பயன்பாடுகள் குறித்து அனைவரும் அறிவோம். பொதுவாகவே, தற்காலத்தில் ஹேஷ்டேக்கின் பயன்பாடு என்பது பல்வேறு இடங்களில், பலர் வேடிக்கைக்காகவே ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துகின்றனர். எந்தவிதமான அர்த்தப் பதிவுமின்றி மேலோட்டமாக, போகிற போக்கில், சற்றும் பொருத்தப்பாடில்லாமல் கூட பயன்படுத்துகின்றனர். ஹேஷ்டேக்குகளை தவறாகப் பயன்படுத்துவது, அவரது சமூக ஊடகங்களின் கணக்கு இடைநிறுத்தங்களுக்கு வழிவகுக்கும். தொடர்பில்லாத ட்வீட்களில் ஹேஷ்டேக்குகளைச் சேர்ப்பது அல்லது தேவையற்ற விதத்தில், அதே ஹேஷ்டேக்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகளின் காரணமாக, சம்பந்தப்பட்ட பயனாளரின் கணக்கை வடிகட்டலாம் அல்லது கணக்கை இடைநிறுத்தலாம் என்று டிவிட்டர் எச்சரிக்கிறது.

 

ஆனால், இந்த ஹேஷ்டேக் குறியீடுகள், ஆக்ட்டிவிஸம் சார்ந்த செயல்பாடுகள், மனித உரிமைகள், சமூக விழிப்புணர்வு, குழு ஒருங்கிணைப்பு, போராட்டச் செயல்பாடுகள்.. போன்ற அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களுக்காவும், செயல்பாடுகளுக்காவும் பெரிதளவில் பங்கு வகிக்கின்றன. மனித சமூகவாழ்வில், மிகவும் முக்கியமான அடையாளங்களாக மாறுகின்றன. உலகளவில் தவிர்க்கமுடியாத உருவகங்களாக நிலை பெற்றிருக்கின்றன.

 

சமூகம் சார்ந்த ஆக்டிவிசத்தின் முக்கிய அம்சமாகச் செயல்படும் இந்த ஹேஷ்டேக்குகள், சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்யவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. பிரச்சினையுடன் நிஜ வடிவில் தொடர்பு கொள்ள முடியாத உலகம் முழுவதிலுமிருந்து ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் உதவ அல்லது புரட்சியைத் தொடங்குவதற்கான ஒரு வழியாக இவை செயலூக்கம் தருகின்றன. ஒரு ஹேஷ்டேக்கைச் சுற்றி மக்கள் விவாதிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வழி கோலுகிறது. ஹேஷ்டேக் ஆக்டிவிசம் என்பது தகவல் தொடர்பு பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கும், ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் அதை ஜனநாயகமாக்குவதற்கும் ஒரு வழியாகும். குறிப்பாக இது வரலாற்று ரீதியாக உரிமையற்ற மக்களுக்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்குவதுடன், அவர்கள் தொடர்பு கொள்ளவும், அணி திரட்டவும் மற்றும் வாதிடவும் உதவுகிறது.

 

‘ஒரு குறியீட்டின் தன்மை என்பதே, தனக்குள் எண்ணற்ற பரிமாணங்களை பொதித்து வைத்திருக்கும் செயல்பாடுதான்..’ என்கிறார் பெர்டினாண்ட் டி சசூர். இவர் மொழியியல் மற்றும் குறியியலின் தந்தை என்று போற்றப்படும் சுவிட்சர்லாந்து நாட்டுக்காரரான 19ஆம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்.

 

குறியீட்டின் சுழற்சி என்பது ஒருமுடிவிலித் தன்மை கொண்டது. Infinity. ஒவ்வொரு காலத்திலும் அது மொழி ரீதியாக, உருவம் மற்றும் உள்ளடக்க ரீதியாக.. என்று பல்வேறு மாற்றங்களுடன் மனிதவாழ்வின் தீராத பக்கங்களில் உருமாறிக் கொண்டே போகிறது. இதன் நீட்சியில் உருப்பெறும், ஹேஷ்டேக்குகள் குறித்து சொல்ல வேண்டுமானால், எல்லையற்று நீண்டு கொண்டே இருக்கும் தொழில் வளர்ச்சி, தகவல் தொடர்பு, கேளிக்கை, கல்வி, சமூகவியல், உணவு, சூழலியல், பண்பாட்டியல்.. என்று சமூகம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் இவைகளின் பயன்பாடு இல்லாமல் ஒரு செயலும் இல்லை.

 

ஆனால், குறியீடுகளின் பன்முகத்தன்மை மறைந்து, ஒற்றைத் தன்மை மட்டுமே, இவைகளுக்குள் ஊடுருவி நிற்கிற போக்கை பல்வேறு கட்டத்தில் உணரலாம். இன்னும் விளக்கமாகச் சொன்னால், ஹேஷ்டேக்கின் பயன்பாடு போதாமையாக இருக்கிறது என்பதை பல்வேறு தருணங்களில் உணர்ந்தேன். இதற்கு மேலும், வேறொரு புதிய பார்வையைத் தரக்கூடிய விதத்தில், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

 

எனவே, இப்போது, இதனை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டிய அவசியம் வந்து விட்டதை உணர்ந்து செயலில் இறங்கினேன். ஏன், எப்படி, எதற்காக? என்ற கேள்விக் குறிகளுக்கு விடை காணும் முகமாக, விரிவாகப் பார்க்கலாம்.

 

முதலில் நம் தமிழ் மண்ணிலிருந்து ஆரம்பிக்கலாம்: ஒரு ஆணவக்கொலை நடக்கிறது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்த மாவட்ட நீதிமன்றம், வழக்குக்கான தகுந்த சாட்சியம் நிரூபிக்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்கிறது. அப்பொழுது #IOpposeThisJustice என்ற ஹேஷ்டேக் உடன் பதிவு செய்து தங்களது உணர்வுகளைக் காட்டுகின்றனர் போராட்ட குணமும் சமூகநீதியும் கொண்டவர்கள். அதன்பிறகு, அடுத்து, அந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்குப் போய் அங்கு சரியான முறையில் சாட்சியம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இப்பொழுது, #ISupportThisJustice என்று பழைய ஹேஷ்டேக்கையே போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

 

கடந்த வருடம், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதும், ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வரும் செயல்பாட்டை அமல் படுத்திய போது, நிகழ்ந்த மோசமான நிகழ்வுகளின் போது, பெருமளவில் ஓடிய ஹேஷ்டேக், #BidenDisaster என்பதை அறிவோம். அதை நாம் இப்படிப் பார்க்கலாம்: உலகளவில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வுக்காக, அதை செயல்படுத்திய ஜோ பைடன் மீது எதிர்ப்பு காட்டப்படும்போது #WeHateBiden என்று ஹேஷ்டேக் பயன்படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். மீண்டும் சில காலங்கள் கழிந்து, அவர் செய்த நற்செயலுக்காக #WeLoveBiden என்று பழைய ஹேஷ்டேக்கையே பயன்படுத்துவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

 

இதுபோல பல துறைகளிலும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும் தன்மைகளை எடுத்து முன்வைத்து பல்வேறு விஷயங்களின் நீரோட்டங்களைப் பேசலாம். ஒரே விஷயத்தை (subject) மீண்டும் (அப்பொழுதே அல்ல) அடுத்தடுத்த காலங்களில் பயன்படுத்தும் போது, அதனுடைய உள்ளடக்கம் முதலில் சொன்னதற்கு மாறாக எதிர்நிலையிலோ, அல்லது மாற்று நிலையிலோ மாறியிருந்தால், அந்த இடத்தில், இந்த ஹேஷ்டேக்கின் பயன்பாடு போதாமையாக இருக்கிறது. இதற்கு மேலும், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு விஷயத்தை எடுத்துக் கொள்வோம்: இந்த ஆலைக் கழிவுகளினால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்று, அதற்கு எதிராக பெருமளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. தமிழகத்தின் முற்போக்காளர்களும், சிந்தனையாளர்களும், போராட்ட இயக்கங்களும் இதற்கு தங்களது ஆதரவினைத் தந்தனர். மேலும் போராட்டச் செயல்பாடுகளிலும் பங்கு வகித்தனர். அந்தக் கட்டத்தில், ட்விட்டர், பேஸ்புக் முதலான சமூக ஊடகங்களில், இந்த எதிர்ப்பை முன்வைத்து #BanSterlite #StopSterlite #savethoothukudi #SterliteProtest என ஏராளமான ஹேஷ்டேக்குகள் வந்தன. 2018 ஆம் வருடம் தொடங்கிய இந்தத் தொடர் போராட்டத்தில் நடந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 11 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

 

இதன் அடுத்த கட்டமாக, நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீச்சில் தினமும் லட்சக் கணக்கானோர் பாதிப்பு அடைந்து வந்த சூழலில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு சுவாசிக்க வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்குவது இன்றியமையாத தேவையாக இருந்தது. இந்தச் சூழலில், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து, ஆக்சிஜன் தயாரித்து மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யலாம் என்ற அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்றும், குறிப்பிட்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகும் செயல்பட அனுமதிக்கப்படாது என்ற நிபந்தனையின் பேரில், தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.

 

இந்த “ஸ்டெர்லைட் திறப்பு’ நிகழ்வை, எப்படி வரவேற்பது, எந்த ரீதியில் ஏற்றுக் கொள்வது, எந்த அடிப்படையில் ஆதரிப்பது.. என்று புரிபடாமல், குழப்பத்துடனும் சங்கடத்து டனும் முற்போக்குச் சிந்தனையாளர்களும், போராட்டக் காரர்களும், சுற்றுச் சூழல் சமூக விழிப்புணர்வாளர்களும் திகைத்து நின்றனர். #welcomesterlite #reopensterlite #Isupportsterlite என்று பழைய ஹேஷ்டேக்கையே போடுவதில் எனக்கு சற்றும் விருப்பமில்லை.

 

இதுபோன்ற இக்கட்டான சூழலில், மிகவும் அபாரமான சிந்தனை வீச்சுடன், புதிய வடிவத்துடன் எழுகிறது டி ஹேஷ் ஥ !

 

உங்களால், முன்பு ஏற்றுக்கொள்ளப்படாத, அதன்பின்னர் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சூழல் வாய்க்கப்பெற்ற ஒரு விஷயத்தை அல்லது ஒரு நிகழ்வை எதிர்கொள்ளும்போது, அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதற்குள் ஒரு விமர்சனா பூர்வமான பார்வையை உள்ளே வைத்து ஏற்றுக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று, உங்கள் எண்ண ஓட்டம் இதுபோன்ற பல்வேறு கட்டங்களில் உங்களுக்குள் அரற்றியிருக்கும்.

 

2014ஆம் வருடம் நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை “போகோ ஹராம்’ என்னும் அமைப்பு கடத்திச் சென்ற துயரமான நிகழ்வை கண்டனம் செய்து, #BringBackOurGirls என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது நினைவு இருக்கலாம். அதன் தொடர்ச்சியாக மாணவிகள் மீட்கப்பட்ட நிகழ்வை மீண்டும் இதே பழைய ஹேஷ்டேக்கிலேயே எதிர்கொள்வது சற்றும் உகந்ததல்ல. அடுத்த ஹேஷ்டேக்கில் இது சம்பந்தமான, மறைமுகமான ஒரு விமர்சனம், பூடகமான ஒரு கண்டனம், உள்ளே மறைந்திருக்கும் ஒரு எதிர்ப்புணர்வு கலந்த உருவகம்.. இப்படிப் பல்வேறு பரிமாணங்களில் அந்த ஹேஷ்டேக்கின் அடுத்த வடிவம் இருக்க வேண்டும் என்று யோசித்தேன்.

 

அப்படியானால், ஒரு விஷயத்தின், அல்லது நிகழ்வின் தொடர்ச்சியான நிலைப்பாட்டில் பதிவு செய்வதற்கான ஒரு குறியீடாக அமைய வேண்டும் என்று மட்டும்தான் யோசித்தேனா? பிரெஷ் ஆக ஒரு புதிய விஷயத்திற்கோ, நிகழ்விற்கோ இடுகையிடுவது போன்றதல்லவா?

 

அப்படியல்ல. ஒவ்வொருமுறையும் இனவாதத்திற்கு எதிரான நிகழ்வுகள் தோன்றும் போதெல்லாம், #BlackLivesMatter என்கிற ஹேஷ்டேக்கை சர்வதேசம் முழுக்க உபயோகிக்கிறார்கள். இங்கு தமிழ் மண்ணில் இனவாதம் பெருமளவில் பங்காற்றுவதில்லை. மாறாக சாதிய வாதம்! அந்த ரீதியில், சாதியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இடுகையிடும்போது, இந்தப் புதிய வடிவம் செயல்பட வேண்டும். இந்தப் புதிய வடிவத்தை இணைத்து பதிவு செய்யும் போது, பழைய மரபின் தொடர்ச்சியுடன் புதிய பார்வையின் எழுச்சியும் இணைய வேண்டும். அப்படியான ஒரு சிந்தனைத் தேடலில் உருவானதுதான் டி ஹேஷ் ஥ !

 

சமீப காலங்களில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம்: (பொதுவாகவே, தமிழ்ச் சூழலில், கலை இலக்கியம், சினிமா, பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவம், ஜோதிடம், வணிகம், நிதி.. இப்படி எந்த விஷயம் குறித்து வேண்டுமானாலும் சாதாரணமாகக் கருத்துச் சொல்லிவிடலாம். ஏன், அரசியல் பற்றிக் கூட கருத்துச் சொல்லி விடலாம். ஆனால், மதம் மற்றும் சாதி என்று வரும்போது ஒரு எச்சரிக்கை உணர்வுடனும், அவசியத் தேவை கருதியும், பொதுச் சமூக அறம், நெறிமுறை சார்ந்து தான் பேசவேண்டும். இந்த ரீதியில், இங்கு உதாரணம் வைக்கப்படும் இந்த நிகழ்வின் உவமை, டி ஹேஷ் ஥ குறியீட்டை, பயனாளர்களுக்கு 100 சதவிகிதம் புரிந்து கொள்ளும் விதமாகப் பொருத்திக் காட்டுவதற்கு தோதாக அமைந்திருக்கிறது என்பதால், அதை இங்கே கையாண்டிருக்கிறேன்.)

 

சமீபத்தில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் ‘ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வரக்கூடாது என்ற சர்ச்சைகளை’ நாம் அறிவோம்.

 

இந்த சர்ச்சைகளின் தொடர்ச்சியாக, கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து ஒரு இஸ்லாமிய மாணவி உள்ளே நுழைகிறார். உடனே, காவித் துண்டு அணிந்த சில மாணவர்கள் திரண்டு, அவரை எதிர் கொண்டு, எதிர்ப்பு கோஷங்களை எழுப்புகிறார்கள்.

 

அப்பொழுது அந்த மாணவி, ‘அல்லாஹு அக்பர்’ என்று பதில் கோஷம் எழுப்பியபடி அவர்களைக் கடந்து போகிறார்.

 

அதன் பிறகு சமூக ஊடகங்கள் முழுக்க – இந்தியா முழுக்க அந்த மாணவிக்கு பெருமளவில் ஆதரவு குவிகிறது. அவர் எழுப்பிய ‘அல்லாஹு அக்பர்’ கோஷமும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகிறது.

 

இந்த ‘அல்லாஹு அக்பர்’ கோஷத்துடன் பழைய ஹேஷ்டேக்கை இணைத்து பலரும் தங்களது பதிவில் இடுகை இடுகிறார்கள். சாதி, மத, இன ரீதியான எதிர்ப்புணர்வு கொண்ட பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள் பலர், எப்படி இந்த மத ரீதியான ஸ்லோகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வது அல்லது தங்கள் பதிவுகளில் இடுகையிடுவது என்று தடுமாறுகின்றனர். பிறகு அதைக் குறிப்பிடாமலேயே அந்த இஸ்லாமிய மாணவிக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கின்றனர்.

 

இங்கு தான் டி ஹேஷின் ஥ உருவாக்கம் மிக அபாரமாகச் செயல்படுகிறது. ஆம். ‘அல்லாஹு அக்பர்’ கோஷத்துடன் இந்த டி ஹேஷை ஥ இணைக்கும் போது, அது வேறொரு பார்வை பெறுகிறது.

 

காலங்காலமாய் தொன்று தொட்டு வரும் மரபாக அறியப்படும் ஹேஷ்டேக்கின் தட்டையான ஒற்றைப் பார்வை, அந்த ஸ்லோகத்தை – அதன் அர்த்தத்தை அப்படியே முன்வைக்கும். ஆனால், அதிலிருந்து வேறுபடும் புதிய டி ஹேஷ் ஥, அந்த ஸ்லோகத்தை இப்பொழுது மீள் பதிவு செய்திருப்பதன் பின்னணி, அந்த நிகழ்வின் தார்மிகச் செயல்பாடு, மதத் தன்மையை முன்வைக்கும் அர்த்தம் இழந்துபோய், மனிதத் தன்மையாக மாறும் உருமாற்றம்.. என்று பன்முகத் தன்மைகளை பயனாளருக்குச் சுட்டிக்காட்டும் அற்புதத்தை நிகழ்த்தும்!

 

சாதி, மத, இன ரீதியான எதிர்ப்புணர்வு கொண்ட பகுத்தறிவாளர்களும், முற்போக்காளர்களும், படைப்பாளி களும், கலைஞர்களும் ஹிஜாப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதேசமயம், ஒரு சில இஸ்லாமிய நாடுகளில், ஹிஜாப் அணிய வேண்டும் என்று இஸ்லாமியப் பெண்கள் மீது கட்டாய உடை கலாச்சாரத்தை அமல் படுத்திக் கொண்டிருக்கும் பின்னணியில், கடந்த காலங்களில் அந்தச் செயல்பாடுகளுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தவர்கள் முற்போக்காளர்கள்.

 

இப்போது, அதற்கு முற்போக்காளர்கள் தரும் விளக்கம், “பெண்களை இந்த உடைதான் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஒருவகை பாசிஸம். பெண்கள் மீதான இந்த ஆடை வன்முறைக்கெதிராக நாங்கள் குரல் கொடுக்கிறோம், ஆதரவு தருகிறோம். மற்றபடி, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஹிஜாப் கட்டாயமாக அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அதற்கு எதிராகவும் குரல் கொடுப்போம்..’ என்று வாதிடுகின்றனர்.

 

இது ஒரு தர்ம சங்கடமான சூழல். இந்த சூழலைக் கடக்க டி ஹேஷ் ஥ முன்வருகிறது.

 

ஆம், #IstandWithHijab என்கிற ஹேஷ்டேக்கில் இருக்கும் பழைய ஹேஷ்டேக்கைத் தூக்கிவிட்டு, புதிய டி ஹேஷை ஥ இணைத்து பதிவிடும்போது, முற்போக்காளர்களது உள்ளக் கிடக்கை அற்புதமாக, ஒரு விமர்சனாபூர்வமாக வெளிப்படும்.

 

இதுதான் டி ஹேஷின் ஥ வெற்றி என்று நான் கருதுவது!

 

புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான ரெனே டெக்கார்தே வின் பிரபலம் மிக்க சிந்தனைக் கருத்தான,

 

“I think, therefore I am” (நான் சிந்திக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன்) என்பதை நாம் சற்றே மாற்றிப் போடுவோம்.

 

“நான் எதிர்க்கிறேன், அதனால் ஆதரிக்கிறேன்!” இதை ஆங்கிலத்தில் இன்னும் சற்று சுருக்கலாம்: I Protest, I Support. இப்பொழுது, இத்துடன் ஒரு டி ஹேஷை ஥ இணையுங்கள்.

 

IProtestISupport.

 

இதுதான் டி ஹேஷின் ஥ பன்மையத் தன்மை!

 

எமது 2000 ஆண்டு தமிழ்மொழி மரபின் சங்க இலக்கியப் பிரதியில், பறவைகளின் கூவலை வைத்தே, தலைவனின் வருகையை நுகரும் தலைவியின் மன ஓட்டங்களிலும், மலர்களின் உருவகங்களிலும், பருவங்களின் குறியீடுகளிலும் கால்பதித்து நடந்து வந்தவன் என்ற முறையில், உருவகங்களும், படிமங்களும், குழூஉக்குறிகளும் என் சிரசில் ஓயாமல் சுழன்று கொண்டே இருக்கின்றன.

 

நம் பண்டைய பாரம்பரியம் கொண்ட நாட்டுப்புறப் பகுதிகளில் வாசலுக்கு முன்பு, கோலம் போடும் கோடுகளில், மழை மேலாண்மை, பருவ மாற்றங்களின் இடர்பாடுகள் குறித்த எச்சரிக்கை.. இப்படி பல்வேறுவிதமான விழிப்புணர்வுகளை, குறியீடுகளாக கோலம் போடுவார்கள்.

 

நம் மண்ணின் பெருமை வாய்ந்த ஒரு சுவாரஷ்யமான நாட்டுப்புறக் கதை ஒன்று:

 

நம்முடைய திருமண விழாக்களில் இன்றளவிலும் ஒரு ஐதீகம் உண்டு. திருமணச் சடங்குகளின் போது “அரசுக் கால் நடுவது’ என்று ஒரு சடங்கு இருக்கிறது. (அரசமரத்தின் ஒரு சிறு கிளையை வெட்டி திருமணப்பந்தலில் முதன்மையாக நடுநாயகமாக நட்டு வைப்பது). பண்டைய நாட்களில், அரசர், தமது குடிகளின் இல்லத் திருமணங்களின் போது, அதில் கலந்து கொண்டு தலைமையற்று நடத்த, தனது பிரதிநிதியாக ஒருவரை அனுப்பி வைப்பார். தொன்று தொட்டு நடந்து வரும் இந்த நடைமுறை, நாளடைவில் அரசு சார்பாக யாரும் கலந்து கொள்ளாமல் அந்தப் பழக்கம் மருவிப் போய்விட்டது. அதனால், அப்படி ஒரு பிரதிநிதி கலந்து கொள்ளும் முகமாக, அரசுக் கால் நட்டுவைக்கும் சடங்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் அதன் தாத்பர்யம்.

 

நாட்டில் பருவ மழை மாறி ஓயாமல் பெய்து கொண்டேயிருக்கிறது. காடு கழனிகளில் பயிர் பச்சைகள் நாசமாகிக் கொண்டிருக்கின்றன. குடிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதற்குக் காரணம் மன்னனின் செங்கோன்மை தவறியதுதான் என்று குடிகளில் ஒரு சாரார் பேசிக் கொள்கின்றனர். மழை பொய்த்துப் போவதற்குத்தான் மன்னனின் செங்கோன்மை பற்றிப் பேச வேண்டும் என்று இன்னொரு சாரார் எதிர் விவாதம் செய்கின்றார்கள். கடைசியில் மழை நிற்க வேண்டுமானால், மன்னரானவர் தமது பாரம்பரிய மரபுப்படி முக்கூடல் நீர்நிலைகளில் முக்குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இதை மன்னருக்கு எப்படி எடுத்துச் சொல்வது? அரச எதிர்ப்பு – அரச குற்றம் ஆகிவிடுமே.. என்ன செய்வது, எப்படிச் சொல்வது என்று திகைக்கிறார்கள் மக்கள்.

 

அத்தருணத்தில், நடக்க இருக்கும் முக்கியப் பிரமுகரான காணியாளகாரரின் திருமண விழாவிற்கு அரசுப் பிரதிநிதி ஒருவர் வருவதாகத் தகவல் தெரிகிறது. அவர் வசம் செய்தியைத் தெரிவித்து விட்டால் அவர் மன்னரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விடுவார் என்று முடிவாகிறது. ஆனால் இதைப் பதனமாக எப்படி எடுத்துச் சொல்வது? சற்றே பிசகினாலும் தவறான பொருளாகி விடுமே, தம்முடைய உயிருக்கே ஆபத்தாகி விடுமே என்று ஒருவரும் முன் வராத போது, திருமணங்களில் வாழ்த்திப் பாடப்படும் சோபனப் பாடல் பாடும் பாட்டி முன் வருகிறாள்.

 

திருமண விழா நடக்கிறது. அரசப் பிரதிநிதி வந்திருக்கிறார். வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. நனைந்து கொண்டே சடங்குகள் நடக்கின்றன. கைதாரம் நடக்கும்போது பாடப்படும் சோபனப் பாடலைப் பாட அந்தப் பாட்டி அழைக்கப்படுகிறாள்.

 

“மாரி மழை மாறி சோஓஓ..” என்று பெருங்குரலெடுத்துப் பாடும் பாட்டி, பதமாக செய்தியைப் பாடலாகப் பாடி முடிக்கிறாள்.

 

அரசுப் பிரதிநிதி பக்கென்று முழிக்கிறார். அந்தப் பாடலின் கருத்துக்களை தனக்குள் அசை போட்டுக் கொண்டே திரும்பிப் போனவர், அரசனிடம் நயமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். மன்னனுக்கு இந்த அணுகுமுறை மிகவும் பிடித்துப் போகவே, ஒவ்வொரு திருமணத்திற்கும் தவறாமல் அரசுப் பிரதிநிதி சென்று வரவேண்டும் என்று ஆணையிட்டாராம்.

 

(இதுபோன்ற தொன்மைப் பார்வை கொண்ட, பிரெஞ்சு மானுடவியலாளரான கிளாத் லெவி-ஸ்ட்ராஸின் ‘The Story of Asdiwal’ என்னும் மானுடவியல் ஆய்வையும் இங்கு நினைவு கொள்ள வேண்டும்.)

 

இந்தக் கதையில் வருகின்ற “அரசுக்கால்’ என்னும் சடங்கு, வெறும் சடங்கு மாத்திரம் அல்ல. அது ஒரு குறியீடு! இப்படியான செழுமையும் புதுமையும் மிகுந்த குறியீட்டு மண்ணில் இருந்து டி ஹேஷை ஥ உருவாக்கிப் பார்க்கிறேன்.

 

இந்த டி ஹேஷ் ஥ என்பது, பழைய ஹேஷ்டேக் போல வெறுமனே தேடுபொறியின் சேவையை, அல்லது, ஒத்த தன்மையுடையோரை ஒருங்கிணைக்கும் சேவையை மாத்திரமே செய்வதோடு – ஒரு சடங்காக நின்றுவிடக்கூடாது, அந்தக் குறியீடு ஒரு சில பார்வைகளை பயனாளருக்கு உணர்த்த வேண்டும் என்ற நிலைபாட்டில் அந்த பழைய ஹேஷ்டேக்குக்கு முன்னொட்டாக D என்ற எழுத்தை உருவாக்கியுள்ளேன்.

 

இந்த D என்பதை எப்படியெல்லாம் பார்க்கலாம், எவ்வாறெல்லாம் கட்டமைக்கலாம், எந்த ரீதியிலெல்லாம் கையாளலாம்.. என்று விரிவாக ஆராயலாம்.

 

உலகளவில் அரசியல் மற்றும் கலை இலக்கியங்களின் பாணிகளும், போக்குகளும், சிந்தனைகளும், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே தான் வந்திருக்கின்றன. நவீனத்துவம் (Modernism), உருவக வாதம் (Symbolism), மறுமலர்ச்சி வாதம் (Renaissance), மிகை யதார்த்தவாதம் (Surrealism).. போன்ற பலவகை இலக்கியம் சார்ந்த சிந்தனைக் கோட்பாடுகளின் பார்வையும் தேடலும் விரிவு பெற்று, அடுத்த கட்டத்தில் தனது பெயரை மாற்றி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயின. சம்பந்தப்பட்ட சிந்தனையாளர்கள், இந்த ஒட்டு மொத்த சிந்தனைக் கோட்பாடுகளையும் முன்வைத்து, ஒரு புதிய வார்த்தையை அடையாளப்படுத்தினார்கள்.

 

அதாவது, ஒவ்வொரு வகை சிந்தனைக்கும் முன்னொட்டாக, பின் (Post) என்கிற வார்த்தையை இணைத்து உருவாக்கினார்கள். உதாரணமாக: ‘நவீனத்துவம்’ என்ற சிந்தனையை ‘பின்-நவீனத்துவம்’ Post-Modernism என்ற புதிய பார்வையுடன். அப்படியான போக்கில், பின்-காலனித்துவம், பின்-நவீனத்துவம், பின்-அமைப்பியல், பின்-மார்க்சியம், பின்-பெண்ணியம் பின்-உருவகவாதம்.. என்று பல்வேறு இலக்கியச் சிந்தனைகள் பல்கிப் பெருகின. இதுவரையில் முன்வைக்கப்பட்டு நாம் உய்த்துணர்ந்து கொண்டிருந்த சிந்தனையின் பார்வை, தற்கால நவீன சூழலுக்கேற்ப, பெரிதும் மாற்றம் பெற்று, அதற்குப் பிறகான, மேலும் ஒரு ஆழமான பார்வையை நமக்குப் புலப்படுத்துவது தான் இந்த Post என்னும் ஒற்றைச் சொல்!

 

20 ஆம் நூற்றாண்டு முழுமைக்கும் இந்த Post என்னும் ஒற்றைச் சொல்லின் எல்லையற்ற பரிமாணங்கள் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்தன. தெரிதா, ஃபூக்கோ, சூஸன் ஸோண்டாக், டெல்யூஸ்-கத்தாரி போன்ற மகத்தான பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களின் வருகை உலகம் முழுக்க பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது, கலை, இலக்கியம், இசை, திரைப்படம், ஓவியம், கட்டிடக்கலை மட்டுமல்லாது, மனித ஆடைகளிலும், அன்றாடம் புழங்கும் பொருட்களிலும் Post-Modernism என்பது ஒரு நவீன வாழ்வியல் சொல்லாக மாறியது.

 

சமீபகாலங்களில் இணையத்தில் ஏற்பட்டுள்ள விர்ச்சுவல் புரட்சியின் பிறகு, பின்-இணையம் (Post-Internet) என்ற வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்திருப்பதையும் கவனம் கொள்ள வேண்டும்.

 

இதன் வளர்ச்சி, உலக அரசியலிலும் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. காலனியத்தின் பிந்தைய நிலை, சோவியத்துக்குப் பிந்தைய நிலை, போருக்குப் பிந்தைய நிலை, பிந்தைய மறுமலர்ச்சி நிலை.. என்று புதிய பார்வைகள் முன்வைக்கப்பட்டு பழமைவாத அரசியல் பார்வைகள் Post-Politics ஆக மாற்றம் பெற்றன. ஆக, அந்த ஒற்றைச் சொல் என்பது வெறும் ஒற்றைச் சொல் அல்ல. அதில், உலகின் முதன்மையான பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் கடந்த கால வரலாற்றின் பக்கங்களிலிருந்து, எல்லையற்ற நவீன உருவகங்களை, நவீன குறியீடுகளை, நவீன பார்வைகளை, நவீன வாழ்வியல் தரிசனங்களாக ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

 

சங்ககால நாணயவியலின் தந்தை என்று போற்றப்படும், இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஒருசமயம் பேசிக் கொண்டிருந்த போது, “நாணயங்களில் பொதிந்துள்ள குறியீடுகள் என்பவை வெறுமனே குறியீடுகள் மாத்திரமே அல்ல, அவை, 2000 ஆண்டு மனித இனத்தின் வாழ்வியல் சுவடுகள்..” என்று கூறியது இங்கு ஞாபகம் வருகிறது.

 

இன்னும் கொஞ்சம் ஆழமாக உள்ளே நுழையலாம்:

 

1974-ல் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில், ‘நரோபா இன்ஸ்டிடியூட்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் தோன்றியது. 11 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்திய பௌத்தத் துறவியான நரோபாவின் பெயரில் துவங்கப்பட்ட இந்த அமைப்பு, ஜென்புத்திஸம், தியானம், மாற்றுக்கல்வி, மாற்று வாழ்வியல் போன்ற விஷயங்களை, அதற்கான ஆளுமைகளை வரவழைத்து சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்தது. இக்கட்டத்தில் Jack Kerouac School of Disembodied Poetics என்ற புதுவகையிலான பார்வையுடன் இயங்கிய, ழாக் க்யூரேக், வில்லியம் பர்ரோஸ், ஆலன் கின்ஸ்பர்க் ஆகிய நவீன படைப்பாளிகளை அழைத்து Disembodied Poetics என்கிற பெயரில் சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்து கொடுத்தது. தங்களது படைப்பு உருவாகும் பாங்கு, நடை, உத்தி, உள்ளடக்கம், படைப்பு நுட்பம் குறித்தெல்லாம் விரிவாகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு கேட்டுக்கொண்டது. அது பின்னர் நூலாகவும் வெளிவந்துள்ளது.

 

Disembodied Poetics என்னும் இந்த சொற்பொழிவுத் தொடர், முன்வைக்கும் பார்வை என்பது, Body யை Dis செய்தல். அதாவது கவித்துவ ரீதியாக, உடலைக் கலைத்துப் போடுதல்; தாங்கள் கலை இலக்கிய ரீதியாக செயல்படுகின்ற உடல்மொழியை – படைப்பு மொழியைக் கலைத்துப் போடுதல் என்று இதன் மூலக்கூறுகள் பற்றி சுருக்கமாகச் சொல்லலாம்.

 

எப்பொழுதுமே, எழுத்தாளர்கள் உருவாகமாகவும், பூடகமாகவும்தானே பேசுவார்கள். அவர்கள் முன்வைக்கும் பார்வையின் தெளிவான விளக்கம்: அனைத்தையும் கலைத்துப் போடுதல், அதாவது, இதுவரையிலான பார்வைகளைக் கலைத்துப் போடுதல்! Dis செய்தல்!

 

இது, கலைஞர்களின் பார்வையில் உருவாக்கம் பெற்ற பூடகமான அர்த்தம். சமீப காலங்களில் நம் இந்தியாவில் அரசியல் ரீதியாக பெரிதும் பேசப்படும் disinvestment என்னும் பார்வை, நேரடியாக, முன்வைக்கும் வேறுவிதமான மாற்று அர்த்தம் கொண்டது! Dis என்கிற வார்த்தையை எங்கு இணைக்கிறோமோ அங்கு அதற்கேற்ப அதன் பார்வை மாற்றம் பெறுகிறது.

 

இந்த Dis என்கிற ஒற்றைச் சொல்லின் முன்னொட்டு, மரபின் தொடர்ச்சியாக நம் ஆழ்மனதில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள பார்வைகளை மறுமலர்ச்சி கொள்ள வைக்கிறது.

 

இப்படியாக, இந்த D என்கிற ஒற்றை எழுத்துக்கு பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன. மேலும் இந்த ஏற்றி வைக்கப்பட்டுள்ள அர்த்தப்பாடுகளும், உருவகக் கூறுகளும் காலப்போக்கில் மாறலாம். பெருமளவில் வளர்ச்சியடையலாம். மனித வாழ்வியல் மாறிவரும் டிஜிட்டல் உலகில் நவீனம் அடைய அடைய, சிந்தனைகளும், பார்வைகளும், அடையாளங்களும், குறியீடுகளும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

 

ஆக, இந்த டி ஹேஷை ஥ பயன்படுத்தும் பயனாளர்கள் தான் இதை மேலும் மேலும் வளர்ச்சியடைய வைக்க வேண்டும். இந்த டி ஹேஷின் ஥ பயன்பாட்டை சமூக ஊடகங்கள் ஏற்றுக்கொண்டு தங்களது தளங்களில் அக்செப்ட் செய்தால் மட்டும்தான் இதனுடைய தாக்கத்தையும், புது மலர்ச்சி மிக்க வீச்சையும் கணிக்க முடியும்.

 

உதாரணமாக ஓரிரு விஷயங்களை இங்கு பகிர்கிறேன்:

 

1. ஹேஷ்டாக் ட்ரெண்டிங் என்பது, ட்விட்டர் தளத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்ற தளங்களில் சாதாரணமான முறையில் இருக்கிறது. ஆனால், டி ஹேஷின் ஥ செயல்பாடு அப்படியல்லாமல், டி ஹேஷின் ஥ மீது கர்ஸரை வைத்தாலே, அது எத்தனை ஆயிரம் பேர் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கைக் கணக்கைக் காட்டும். இந்த நடைமுறை எல்லா சமூக ஊடக தளங்களிலும் செயல்படும் விதத்தில் வடிவமைத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாது, எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அதன் வண்ணமும் மாறிக்கொண்டே இருக்கும்!

 

2. அதன் வளர்ச்சி மாற்றம்.

 

ஹேஷ்டேக் என்பது வெறுமனே URL என்பது போலத் தான் இங்கு அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது. டி ஹேஷ் ஥ அதற்கும் மேலாக, அடுத்தடுத்த வளர்ச்சிகளில் சில நகர்வுகளைச் செய்யும். முதல்கட்டமாக, F- move என்கிற செயல்பாட்டை நோக்கி நகரும்.

 

இந்த F- move என்பதை இன்னும் சற்று விளக்கமாகப் பார்க்கலாம். டி ஹேஷ் ஥ என்பது, ஏற்கனவே, அறிமுகமான ஹேஷ்டேக்கின் # தொடர்ச்சி என்று தெரிவித்துள்ளேன். அதாவது, நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை போகோ ஹராம் அமைப்பு கடத்திச் சென்ற துயரமான நிகழ்வை கண்டனம் செய்து எழுந்த, #BringBackOurGirls என்ற ஹேஷ்டேக் முதன்மையானது. அதன் தொடர்ச்சியாக, கொஞ்சம் கொஞ்சமாக மாணவிகள் மீட்கப்பட்ட நிகழ்வை ஆதரித்து, பழைய ஹேஷ்டாக்கையே வெளியிடுவதில் எந்தவித புதிய அர்த்தமோ, பொருளடக்கமோ,  புதிய பார்வையோ இல்லை.

 

ஆகவே, அந்தப் பழைய வாக்கியத்தை மட்டும் எடுத்து, புதிய டி ஹேஷுடன் இணைத்து ஥BringBackOurGirls என்றோ, அல்லது ஥CameBackOurGirls என்றோ வெளியிடும்போது, புதிய புதிய அர்த்தங்கள் (இன்னும் மீதமிருக்கிற எங்கள் பெண்களை மீட்டுக் கொண்டு வாருங்கள்) தோன்றுகிற வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும், இந்த டி ஹேஷ் ஥ இடுகைகள், அதன் மூலக் கதையின் தொடர்ச்சியாய் (Follow-up) மாறுகின்றன.

 

இந்தப் பின்னணியில் டி ஹேஷின் வளர்ச்சி மாற்றத்தை அணுகலாம்:

 

இந்த டி ஹேஷை சிங்கிள் கிளிக் செய்தால், சம்பந்தப்பட்ட டி ஹேஷ் ஥ குழுவின் பயனாளர் பக்கத்திற்கு ஥BringBackOurGirls அழைத்துச் செல்லும்.

 

டபுள் கிளிக் செய்தால், இது சம்பந்தமான மூலக் கதையின் ஹேஷ்டேக் # குழுவின் பயனாளர் பக்கத்திற்கு #BringBackOurGirls கொண்டு போகும்.

 

3. தற்போது, இந்த நூற்றாண்டின் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாகப் போய்விட்ட மெய்நிகர் உலகமான மெடாவேர்ஸ் உலகத்தில், இந்த டி ஹேஷின் ஥ செயல்பாடு மிக மிக அற்புதமான முறையில் செயல்படும் வகையில் உருவாக்கியிருக்கிறேன். இன்னும் கச்சிதமாகச் சொல்லப்போனால்,

 

இந்த டி ஹேஷ் ஥ தான் மெடாவேர்ஸில் முதன்மைப் பங்கு வகிக்கும் நிலையில் வடிவமைப்பு செய்திருக்கிறேன். அதாவது, மெடாவேர்ஸ் என்பதே எல்லையற்ற பயணம் செய்வது சம்பந்தமான ஒரு கருத்துருவம். இந்த மெய்நிகர்ப் பயணத்தின் போது, உங்களுக்கு உற்ற ஒரு வழிகாட்டியாக செயல்படும். அந்த வழிகாட்டுதல் என்பது மிகப்பெரிய மேஜிக்கல் ரியலிசம்!

 

உதாரணமாக: இன்று நடக்க இருக்கும், ஸ்நூப் டாக்கின் ராப் கச்சேரி குறித்து டி ஹேஷ் ஥ உடன் இணைத்து ஒரு அறிவிப்பு, உங்கள் டிஜிட்டல் திரையில் இப்படி ஒளிரும்: ஥SnoopDoggMetaConcert. நீங்கள் அங்கு போக விரும்பினால், இந்த டி ஹேஷை ஥ டபுள் க்ளிக் செய்தால் போதும். அடுத்த கணம் நீங்கள் அந்த இசை அரங்கின் நடு ஹாலில் அமர்ந்திருக்கலாம். (ஏற்கனவே உங்கள் இருக்கை பதிவு செய்திருக்கும் பட்சத்தில்.)

 

(சிங்கிள் கிளிக் செய்தால் அது சம்பந்தமான தகவல்களையும் தொடர்புகளையும் காட்டும்.)

 

இப்படியாக எண்ணற்ற விஷயங்களைச் சொல்லலாம். இதை வெறுமனே, புரட்சிகரமான பயன்பாடுகளுக்கோ, ஆக்டிவிஸங்களுக்கோதான் பயன்படுத்த வேண்டும் என்று மட்டுமில்லை.

 

டி ஹேஷ் ஥ குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தை வழங்குவதன் பொருட்டு சுருக்கமாக சில விஷயங்களை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன். அடுத்தடுத்த கட்டுரைகளில் சூழலியல், உணவு, ஆடைகள், விளையாட்டு, கொண்டாட்டங்கள், விழாக்கள், கலை இலக்கியங்கள், திரைப்படங்கள், அரசியல் எல்லாவற்றையும் குறித்து தனித்தனியாக எழுதுகிறேன்.

 

இப்போதைக்கு இதை முகநூல், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பதிவு செய்ய முடியாது. அவர்கள் ஏற்றுக்கொண்டு அக்செப்ட் செய்தால் மட்டும்தான் பதிவு செய்ய முடியும்.

 

2007 ஆம் வருடம் புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் ஆலோசகரான கிறிஸ் மெசினா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த குறியீட்டை, ட்விட்டர் தளம் அலட்சியப்படுத்தி நிராகரித்து விட்டது. ஆனாலும், அவரது தொடர் முயற்சிகளாலும், இந்த குறியீட்டின் அவசியம் தேவை என்பதை உணர்ந்த உலகளவிலான வலைப்பதிவர்கள் மற்றும் பயனாளர்கள் தங்களது வலைப்பதிவுகளில் இதனை பயன்படுத்த ஆரம்பித்தனர். இது போன்ற தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு – ஏறக்குறைய ஆறு வருடங்களுக்குப் பிறகு – 2013-ல் ட்விட்டர் அதை ஏற்றுக்கொண்டு பதிவு செய்ய வழி வகுத்தது. மட்டுமல்லாது, ட்விட்டர் என்றாலே ஹேஷ்டேக் ட்ரெண்டிங் தான் என்ற நிலை உருவாக்கம் கொள்ளுமளவுக்கு அதன் வளர்ச்சி பெருகியிருக்கிறது. ட்விட்டருக்குப் பிறகு, புகழ் பெற்ற அனைத்து சமூக ஊடகங்களும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டன.

 

ஆகவே, மாற்று சிந்தனைகளை விரும்பும் நண்பர்கள், போராட்ட குணம் மிக்கவர்கள், புதுமைகளை வரவேற்பவர் கள், பெண்ணியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலின நண்பர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், எதிர்க் கலாச்சாரவாதிகள்.. என்று பல சிந்தனைப்போக்கு கொண்டவர்களும்,

 

இந்த டி ஹேஷை ஥ பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன். இப்போதைக்கு உங்களது இனிய வலைப் பக்கங்களில் இதைப் பதிவிடலாம். மேலும், சமூக ஊடகங்களுக்கு உங்களது ஆதரவுக் கருத்துக்களை எழுதி அனுப்பி ஏற்றுக் கொள்ள வழிவகை செய்யுங்கள்.

 

இந்தக் குறியீட்டின் www.dhash.tech என்னும் அதிகார பூர்வ இணைய தளத்திற்குச் சென்று இந்த குறியீட்டு எழுத்துரு ஃபைலை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இறுதியாக ஒரு சொல்: இந்த டி ஹேஷ் ஥ உருவாக்கத்தின் பெருமையை, அங்கீகாரத்தை, பாராட்டுதல்களை, எனக்கு ஒரு அர்த்தம் மிகுந்த வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்த திரு. அம்ரிஷ் ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்..

 

இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலிருந்து கொண்டு எவ்விதமான அரசியல், அதிகாரம், சாதியம், பொருளாதாரம், தொழில்நுட்பம்.. என எந்த விதமான அதிகாரப் பின்புலமுமின்றி, ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த என்னை, உலக அரங்குகளை நோக்கியும், புதிய புதிய புதுமைகளை படைக்கும் நோக்கிலும் செயல்பட வைத்தது, நான் பயின்ற கலை இலக்கியக் கல்வியே! எம்மை இந்த நோக்கில், பயணப்பட வைத்த, எமது செம்மொழி தமிழ் மரபுக்கும், உலக இலக்கிய சிந்தனை மரபுக்கும் தலை வணங்குகிறேன்.

 

****

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page