டி ஹேஷ் உருவாக்குனர் கௌதம சித்தார்த்தனுடன் ஒரு நேர்காணல்
நேர்காணல் செய்தவர்: ஸ்ரீகாந்த் கந்தசாமி
ஸ்ரீகாந்த்: நீங்கள் அடிப்படையில் ஒரு நவீன எழுத்தாளராக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அங்கிருந்து, இணைய உலகத்தில் விஞ்ஞானத் தொழில் நுட்பம் கொண்ட இப்படியொரு குறியீட்டை உருவாக்கும் எண்ணம் உங்களுக்குள் தோன்றிய விதத்தையும், இப்படியான ஒரு விஞ்ஞானத் தொழில் நுட்பத்திற்கு நீங்கள் வந்து சேர்ந்த பயணத்தையும் சொல்லுங்கள்.
கௌதம்: கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாகவே, சமூக ஊடகங்களின் மீது – அதாவது இணையம் சார்ந்த தொழில் நுட்பத்தின் மீது அளவுகடந்த ஈடுபாட்டில் இருந்திருக்கிறேன். ஒரு தொழில்நுட்ப வாதியாக அல்ல, எதிர்காலத்தை தனது உள்ளங்கைக்குள் இறுக்கி ஆளப்போகும் இந்த நவீனத் தொழில்நுட்பத்தை, ஒரு எழுத்துப் படைப்பாளியாக, ஒரு சமூக செயல்பாட்டாளனாக, நாம் எப்படி சாதகப்படுத்துவது என்று ஓயாமல் சிந்தித்திருக்கிறேன். அதுவும், கிராமத்திலிருந்து, சென்னைக்கு புலம் பெயர்ந்த பிறகு, எண்ண ஓட்டங்கள் மேலும் அதிகரித்தன.
2016 செப்டம்பரில், ஆங்கில மொழியில், Alephi என்ற இணைய இதழை ஆரம்பிக்கிறேன். தமிழ் மொழியின் நவீன இலக்கிய வளங்களையும், பண்பாட்டுக் கூறுகளையும், சிந்தனை மரபையும், வாழ்வியல் அம்சங்களையும் உலக இலக்கியத் தளத்திற்குக் கொண்டு போகும் கனவின் வெளிப்பாடாக ஆரம்பிக்கப்பட்டது இந்த இணைய இதழ். உலக மொழிகளிலேயே மூத்த மொழி என்றும் செம்மொழி அந்தஸ்தும் கொண்ட தமிழ் மொழியின் கலை இலக்கிய வளங்களும், சிந்தனை மரபும் உலக இலக்கிய அரங்கிற்கு பெருமளவில் அறிமுகமாகவேயில்லை என்கிற கவலை, ஒரு தமிழ்ப் படைப்பாளியாக எனக்குள் சுழன்று கொண்டே இருந்ததன் முதல் முயற்சி இது.
இதழ் ஆரம்பித்த சில மாதங்களிலேயே பெருமளவில் கவனம் பெற ஆரம்பித்தது. தற்கால சர்வதேச இளம் எழுத்தாளர்கள் பங்கு பெற ஆரம்பித்தனர். இதன் உச்ச பட்ச வெற்றியாக, உலகப்புகழ் பெற்ற பாவ்லோ கொய்லோ ஒரு சிறுகதை எழுதினார். இந்த வெற்றி தந்த மகா போதையில், இதன் தொடர்ச்சியாக இன்னொரு விஷயத்தை ஆரம்பித்தேன்.
அதுதான் Alephi ReadsApp என்னும் செல் ஃபோன் செயலி.
பல்வேறு நாடுகளில் நடக்கின்ற இலக்கிய நிகழ்வுகளை சர்வதேச இலக்கிய வாசகனின் கவனத்திற்கு கொண்டு போய்ச் சேர்க்கும் முயற்சியாகும்.
இந்த செயலியை வடிவமைத்துத் தந்த ‘நவில்’ என்னும் செயலி வடிவமைப்பு நிறுவனத்தின் திரு, சிவானந்தம் அவர்களும், திரு, முத்துசாமி அவர்களும், மிக மிக அருமையான மனிதர்கள். இணைய ரீதியான தொழில்நுட்ப முயற்சிகளில், என் வாழ்நாளில் எதிர்கொண்ட ஏராளமான வல்லுனர்களில் எளிமையும், தொழில் நேர்மையும், கண்ணியமும் வாய்க்கப் பெற்ற அவர்களது சிறப்பியல்பை இங்கு நினைவு கூர வேண்டும்.
இந்த செயலியை ரஷ்யாவின் Chuvash மொழி எழுத்தாளர் வலேரி பெட்ரோவ்ஸ்கி ரஷ்யாவில் வெளியிட்டார். ஜிம்பாப்வே எழுத்தாளரான நடாபா ஜமேலா ஸிபான்டா அவரது நாட்டிலும், மற்றும் பிற சர்வதேச நண்பர்களும் வெளியிட்டனர்.
இது, முழுக்க முழுக்க ஒரு Literary App. சர்வதேச இதழ்களில் வரும் கலை இலக்கிய நிகழ்வுகள், மற்றும் கலை இலக்கிய செய்திகள், புத்தக வெளியீடுகள், புத்தக மதிப்புரைகள் போன்ற விஷயங்களை இலக்கிய ஆர்வம் கொண்ட சர்வதேச வாசகனுக்கு சுருக்கமாக தொகுத்து அவைகளின் Link கொடுக்கும் இலக்கியச் சேவையாக இந்த Alephi ReadsApp செயல்பட்டது. பெரும் புகழ் பெற்ற சர்வதேச இதழ்களின் செய்திகளை மட்டுமல்லாது, உலகளவில் பெரிதும் கவனத்திற்கு வராத சிறு சிறு அளவில் இயங்கிக் கொண்டிருக்கிற, எழுத்தாளர்களின் Blogகள், சிறு Websiteகள், முகநூல் பக்கங்கள், சிறு குறிப்புகள், போன்றவைகளிலிருந்து செய்திகளை எடுத்துப் போட்டு, எல்லா வாசகர்களுக்கும் அவைகளை அறிமுகப்படுத்தும் இலக்கிய சேவையாகவும் இந்தச் செயலி செயல்பட்டது. மேலும், சர்வதேச இலக்கிய தளத்தில் மிக முக்கியமான நிகழ்வு (Breaking News) எதுவும் நிகழ்ந்தால் உடனே அதை வாசகனின் பிரத்யேக கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் அவருக்கு குறுந்தகவலாக (ReadsApp Notes) அனுப்பப்படும்.
எதிர்காலத்தில், வெறுமனே செய்திகளின் தொகுப்புகள் மட்டுமல்லாது, கூடவே இந்த ReadsAppக்கென்றே பிரத்யேகமாக சர்வதேச எழுத்தாளர்களிடம் கேட்டு வாங்கப்பட்ட சிறு பேட்டிகள், சிறு குறிப்புகள், சிறு அபிப்ராயங்கள், நூல் விருப்பங்கள்.. போன்றவைகளையும் வெளியிட திட்டம் இருந்தது. ஆனால், இந்தச் செயலி, எதிர்பார்த்த அளவு போகவில்லை. காரணம், இதை சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்யவில்லை என்பதுதான் என் கருத்து. வெறுமனே, பேஸ்புக்கை நம்பி மாத்திரமே இருந்தால், எவ்வளவு சிறப்பான செயலியாக இருந்தாலும் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்பதற்கு ReadsApp உதாரணம்.
இந்த விரக்தியுடன், கடுமையான பொருளாதாரப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டது. (இந்த ஜோரில் Alephiஆங்கில இணைய இதழை அச்சு இதழாக வேறு வெளிக்கொண்டு வந்தேன்) எந்த உதவியும் இல்லை என்பதைவிட, யாரிடமும் உதவி கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில், ReadsApp செயலியின் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டேன்.
(இந்த சில வருடங்களில் தான் செல்போன் தொழில்நுட்பம் பெரியளவில் வளர்ந்திருக்கிறது. அதற்கு முன்பு மிக மிகக் குறைவான கொள்ளளவு கொண்ட சேமிப்புத்திறன்தான் இருந்தது. அந்தக் குறைந்த கொள்ளளவில், மிக மிக அத்தியாவசியமான செயலிகளை மட்டுமே தங்களது செல்பேசிகளில் பதிவிறக்கம் செய்தார்கள் பயனாளர்கள் என்பதையும் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும்)
மற்றபடி, உங்கள் கேள்வியிலேயே பயணம் என்கிற எதிர்பார்ப்பு இருப்பதால் இன்னும் சற்று விரிவாகவே, அதே சமயத்தில் சுருக்கமாகவும், சுவாரஷ்யமாகவும் சொல்கிறேன்.
இந்தக் கேள்வியை ஒரு வசதிக்காக 3 பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.
1980 களின் ஆரம்பத்தில், என் “ஒளிச் சிற்பம்’ நாவலை திரைப்படம் எடுப்பதாக பாலுமகேந்திரா ஆர்வத்துடன் முன் வந்தார். ஆனால், சிற்சில காரணங்களினால் அது நடக்க வில்லை. ஆனால், அன்றிலிருந்து, எனக்குள் சினிமா பற்றிய ஆர்வம் தீயாய் பற்றிக் கொண்டது. தயாரிப்பாளர் யாரும் கைகூடாத ஒரு சில முயற்சிகளுக்குப் பின், நானே ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து இறங்கினேன். அதாவது, சினிமா படம் அல்ல, வீடியோ படம்!
அப்போது நாட்டில் எந்த தொலைக்காட்சிகளும் இல்லை. தூர்தர்சன் மட்டும்தான் இருந்தது. அதில், வீடியோ நாடகங்கள் வெளி வந்து கொண்டிருந்தன. மேலும், அப்போது, குங்குமம் நிறுவனம், “பூமாலை’ என்ற தலைப்பில் வீடியோ இதழ் ஒன்றை வீடியோ கேசட் வடிவில் வெளியிட்டது. மாத இதழ் போல ஒவ்வொரு மாதமும் ஒரு கேசட்! இதில், வீடியோ நாடகங்கள், துணுக்குச் செய்திகள், கதைகள், நேர்காணல்கள்.. என்று ஒரு வீடியோ வடிவிலான ஒரு பத்திரிக்கை. (மேலும், புதிய வீடியோ வணிகமாக, புதிய கேபிள் தொழில் நுட்பத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.)
என் நண்பர் வெங்கட் ராகவனின் உதவியுடன், ஒரு வீடியோ படத்தை எடுத்துக் கொண்டு குங்குமம் பூமாலை அலுவலகத்துக்குப் போனேன். பூமாலை இதழில் என் படத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டேன். அங்கு என்னுடன் மிகவும் கனிவாகப் பேசியவர் எம்.ஜே.ரெகோ! மிகவும் அருமையான மனிதர். “வெளியார் எடுத்துத் தரும் படங்களை தாங்கள் வெளியிடுவதில்லை’ என்று சொன்னார். மேலும், “இந்தப் படத்தை நீங்கள் 10 பிரதிகள் (கேசட்கள்) போட்டுத் தாருங்கள் நாங்கள் விற்பனை செய்து தருகிறோம்’ என்றார். இதுவும் புத்தக விற்பனை போலத் தான் என்பதை அப்பொழுது தான் புரிந்துகொண்டேன்.
அதன்பிறகு, எதிர்காலத்தில், இனிமேல், தூர்தர்சன் போல தொலைக்காட்சிகள் வரப்போகின்றன என்று தெரிவித்தார். அவர் சொல்வதை எனக்குள் கற்பனை செய்து பார்த்தேன். ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில், பல்வேறு வீடியோக்களா? ஆனந்தத்தில் மயக்கமே வந்து விடும்போல் இருந்தது. அதன் பிறகு, ராஜ் வீடியோ விஷனுக்குப் போனேன். அவர்கள் பழைய சினிமா படங்களை, வீடியோ கேசட்களாக போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். ராஜேந்திரன் மிகவும் ஆர்வமாகப் பேசினார். “10 பிரதிகள் விற்பனைக்கு கொடுங்கள்..’ என்றார்.
அதன் பிறகு, ஊருக்குத் திரும்பி, 20 பிரதிகள் போட்டுக் கொண்டு போய் நேரில் கொடுத்து வந்தேன். இந்த முறையும், தொலைக்காட்சிகளின் வருகை குறித்து விரிவாகப் பேசினார், எம்.ஜே.ரெகோ.
இதற்கிடையில், கோவை வணிகக் கண்காட்சியில், பிரம்மாண்டமான டிஷ் ஆண்டெனாக்களைக் கொண்டு வந்து நிறுவி, வெளிநாட்டுத் தொலைகாட்சி நிகழ்வுகளை காட்டிக் கொண்டிருந்தார்கள். பெருங்கூட்டம்! நான் அது சம்பந்தப்பட்ட ஒரு விற்பனைப் பிரதிநிதியிடம் பேசுவதற்கு முயற்சி செய்தேன். அவர் பெரிய தொழில் அதிபர்களோடு பேசுவதிலேயே குறியாய் இருந்தார்.
அதன் பிறகு தான் முதல் தனியார் தொலைக்காட்சி தமிழ் மண்ணில் வெடித்தது: “சன் டிவி!’
பெரிய தொலைக்காட்சிப் புரட்சி ஆரம்பமாயிற்று! அதன்பிறகு தமிழ்நாடெங்கும் இதுதான் பேச்சு! தமிழக மக்கள் அனைவரும், ஆண்டெனா ஒன்று வாங்கி மாட்டிக்கொண்டு, பல சேனல்களைப் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, நான் மட்டும் வேறுவிதமாக யோசித்துக் கொண்டிருந்தேன். கலாநிதி மாறனுடன் போட்டி போடப் போகிறேன் என்று, ஒன்றையணா பட்டிக் காட்டில் இருந்து கொண்டு சொல்வதற்குக் கூச்சமாக இருந்தது. யாரிடமும் சொல்லாமல், என் ரகசியக் கனவை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, என் நெஞ்சுக் கூட்டில் வைத்து வளர்த்துக் கொண்டிருந்தேன்.
சரி, இது சம்பந்தமாக, யாரிடம் அடிப்படை விஷயங்களைப் பற்றிக் கேட்பது என்று தெரியாமல், சென்னை தெருக்களில் அலைந்து திரிந்தேன். ரெகோவையோ, பார்க்க முடியவில்லை. சன் டிவியில் உள்ளே நுழைவது சாத்தியமே இல்லை. கைக்காசு இழந்து, மனம் வெறுத்து, ஊருக்கு வருவேன், மீண்டும் சென்னை ஓடுவேன். அப்படி எவ்வளவுதான் அலைச்சல் இருந்தாலும் அந்த ஆர்வம் மட்டும் நீங்கவே இல்லை. “அப்படி நீர் என்ன டாட்டா பிர்லாவா? பணம் நிறைய்ய்ய்ய வைத்திருக்கிறீர்களா? ஒரு டி வி சேனல் ஆரம்பிப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாயாவது வேண்டுமே..’ என்றார் ஒரு நண்பர். (அப்போதைய நிலவரப்படி இந்தக் கணக்கு!). அப்போது எங்கள் நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கர் (100 சென்ட்) 20ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை போய்க் கொண்டிருந்தது. (தற்போதைய விலை 1 கோடி) என் பூர்விக நிலம் எல்லாவற்றையும் விற்றால் கூட சில பல லகரங்கள் தானே தேறும்! சரி, அது பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனம் தளராமல் மீண்டும் முருங்கை மரமேறினேன்.
ஆனால், இந்த அலைச்சலில், ஒரு நல்ல விஷயமும் நடந்தது. “போலீஸ் செய்தி’ என்கிற பத்திரிகையில் வேலை கிடைத்தது. நன்றாக நடத்தினார்கள். இதழின் ஆசிரியர் ராக ரவி மிக மிக அற்புதமான மனிதர். சினிமா ஆர்வம் கொண்டவர். மட்டுமல்லாது, நவீன இலக்கியத்தின் மீதும், நவீன இலக்கிய படைப்பாளிகள் மீதும் பேரன்பும், பெரும் மரியாதையும் கொண்டவர். என் மீது அளவிடற்கரிய அன்பு செலுத்தினார். அதேபோல, இதழின் உரிமையாளர் ஹரிராமன் மிக மிக அருமையான மனிதர். பணியாளர்களின் உள்ளம் அறிந்து செயல்படும் அற்புதமான மனப்பாங்கு கொண்டவர். எங்களுக்குள், உள்ள சினிமா ஆர்வத்தை உணர்ந்து கொண்டு, அந்தக் காலகட்டத்திலேயே மிகப்பெரும் தொகையைத் தந்து, டெல்லி சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இருவரையும் அனுப்பி வைத்தவர். (அங்கு கமல்ஹாசனை சந்தித்த அனுபவம் தனிக்கதை).
ஆனாலும், வழக்கம் போல ஊருக்குத் திரும்பி விட்டேன்.
இதற்கிடையில், என் பெயர் இலக்கிய உலகில் காணாமல் போய்க் கொண்டிருந்தது. தொலைக்காட்சி ஆசைகளை சற்றே தள்ளி வைத்து விட்டு, “உன்னதம்’ பத்திரிகை ஆரம்பித்தேன். பொருளாதாரப் பயன்பாடுகளுக்காக, பூர்விக நிலத்தைக் கொஞ்சம் “கை’ வைத்தேன்.
இடையில் “தமிழன்’ என்று ஒரு டிவி ஆரம்பமாகியது. அதைப் பற்றி விசாரித்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். நான், போலீஸ் செய்தி இதழில் பணியிலிருந்த போது, நிருபராக வேலை செய்து கொண்டிருந்த கலைக்கோட்டுதயம் தான் இந்த டிவியின் நிறுவனர் என்றதும் சரேலென்று பற்றிக் கொண்டது பெரு நெருப்பு!
சென்னை ஓடினேன். அவருடன் பொதுவாக நலம் விசாரிப்புகள் மட்டும் செய்தேன். ஆனால், அங்கு, முக்கியமான பொறுப்பிலிருந்த நக்கீரன் துரையிடம் ஒரு சில அடிப்படை விஷயங்கள் பற்றிப் பேசினேன். அவரது தகவல்கள் பெரும் பயனுள்ளவையாக இருந்தன. பொருளாதாரம் மட்டும் அல்ல, இதற்குப் பின்னணியில், அரசியல் செல்வாக்கு அல்லது பெரும் புகழ் பெற்ற மனிதர்களின் செல்வாக்கு வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஏமாற்றத்துடன் ஊருக்குத் திரும்பினேன்.
அதன் பிறகு, எனக்கு மிகவும் நெருக்கமான நண்பரான நடிகர் நாசர் மற்றும் நடிகர் சண்முக ராஜாவிடம் ஒரு திட்டத்தை விவரித்தேன். நாசர், “இதுபோன்ற பார்வை சிறுபிள்ளைத்தனமானது. மாபெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் செய்ய வேண்டியது. இதையெல்லாம் விட்டுவிட்டு ஒழுங்காக கதை, நாவல் எழுதுங்கள்..’ என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.
ஒரு வழியாய், அந்தத் திட்டத்தை, என் தோட்டத்தில், ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்தேன்!
அதன் பிறகு, உன்னதம் இதழைத் தொடர்ந்து நடத்துவதில் கவனம் செலுத்தினேன்.
அந்தக் கட்டம், சமூக ஊடகங்களின் ஆரவாரமான வருகை கொண்டது. என் கவனம், அதில் குவியத் தொடங்கியது. ட்விட்டரை விடவும் பேஸ்புக் எனக்குப் பெரிதும் பிடித்தமானதாக மாறியது. ஒரு கட்டத்தில் பேஸ்புக் அடிக்டாகவே மாறிப்போனேன். சதா பேஸ்புக்லேயே முழுகிக் கிடந்தேன். இரவு 2 மணி வரை, அதன் பிறகு அதிகாலை 5 மணிக்கே மீண்டும் பேஸ்புக்… அந்தக் கட்டத்தில், வேறு நல்ல விஷயங்களும் நடந்தன. உலகின் பலவேறு மொழிகளில் எழுதிக் கொண்டிருக்கும் தற்கால எழுத்தாளர்களின் நட்பு பேஸ்புக் மூலமாகத்தான் சாத்தியமானது. கேட்கவும் வேண்டுமா? அதன் விளைவாக, என் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வித்து, பல்வேறு நாடுகளை சேர்ந்த இணைய இதழ் நடத்தும் பல மொழி நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன் பல மொழிகளில் என் எழுத்துக்கள் வலம் வர ஆரம்பித்தன. மாபெரும் பேஸ்புக் அடிமையானேன்.
அப்பொழுதுதான், எனக்கே உரித்தான ஒரு உத்வேகம் மீண்டும் எழுந்தது. ஆம். நாமே சமூக ஊடகம் ஒன்றை ஆரம்பித்தால் என்ன? என் பேஸ்புக் கணக்கில், சர்வதேச நாடுகளில் புகழ்பெற்ற 5000 பேஸ்புக் பதிவர்கள் சேர்ந்திருந்தனர். அது ஒரு பெரிய உத்வேகத்தைத் தந்தது.
முதலில், இவர்களிடமிருந்தே தொடங்கலாம். இப்போதைக்கு தமிழ் வேண்டாம். வெளியில் ஃபேமஸ் ஆகிவிட்டு பிறகு இங்கு வரலாம்.. உள்ளூர் மாடு லோக்கல் சந்தையில் விலை போகாது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.
நமது செயலி, பேஸ்புக் போலவே இருக்கக் கூடாது, அதில் நமக்கான தனித்துவமாக சிற்சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் கணக்குப் போட்டு ஒரு குயர் நோட்டில் எல்லாவற்றையும் எழுதினேன். பிறகு செயலியை வடிவமைக்கும் தொழில்நுட்ப வல்லுநர் தேடி பயணம் ஆரம்பமானது. 2010 to 2020! கொடுமையான பயணம்! ஆம், சென்னை போன்ற நம் மாநிலத் தலைநகரில் கூட நான் எதிர்பார்த்த ஆப் டெவலப்பர்கள் கிடைக்கவில்லை. முதலில் நான் என்ன சொல்கிறேன் என்றே யாருக்கும் எதுவும் புரிபடவில்லை. ஒருவேளை எனக்கு கிடைத்தவர்கள் பெரும்பாலும், வேர்ட் பிரஸ் தீம் களை எடுத்து வடிவமைக்கும் மேலோட்டமான வெப்சைட் வடிவமைப்பாளர்கள் மட்டும்தான் என்று சொல்லலாம்.
ஆனாலும், என் பயணம் நின்றுவிடவில்லை. சென்னை சலித்துப் போய், மதுரை, கோவை, மேட்டுப்பாளையம் என்று தமிழ்நாட்டின் சிறு நகரங்களுக்கும், பிறகு, IT பீல்டின் சாம்ராஜ்யம் என்று போற்றப்படும் ஹைதராபாத், பெங்களூர், மும்பை.. என்று அண்டை மாநிலங்களுக்கும் அலைந்து திரிந்தேன். இந்த நீண்ட பயணத்தில், சில லட்சங்களை இழந்தேன். இந்த இழப்பு பயணத் தொகை அல்ல. “அருமை, நாங்கள் செய்து தருகிறோம்’ என்று உற்சாகமாகப் பேசி முன் பணம் பெற்று, அதன் பிறகு தலை மறைவாகிய வல்லுனர்களின் கைங்கர்யம்!
அதன் பிறகு, பேஸ்புக்கில் அறிமுகமான வெளிநாடு வாழ் தமிழர்களிடம் ஆலோசனை கேட்டேன். அதில் மிகவும் அனுசரணையாகப் பேசியவர். திரு. மணி மணிவண்ணன். INFITT (International Forum for Information Technology in Tamil) என்ற உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பில் தலைவராக இருந்தவர். அந்தக் கட்டத்தில், புதியதாக செயல்பாட்டுக்கு வந்திருந்த ட்விட்டர் போன்ற ஒரு சமூக ஊடகம் குறித்து பகிர்ந்து கொண்டார். (இந்தியாவிலும் Koo செயலி துவங்கி செயல்பட ஆரம்பித்திருந்தது).
இந்த நீண்ட பயணத்தில் தான், மீண்டும் பணம் பற்றிய பிரக்ஞை கிடைத்தது. “கௌதம், இது நீ நினைப்பது போல சிறுபத்திரிகை நடத்துவது போன்ற விஷயம் அல்ல. இது மிகப்பெரிய விஷயம். உன்னால், கற்பனையே செய்ய முடியாத விஷயம்! குறைந்த பட்சம் 100 தொழில்நுட்ப வல்லுநர்களையாவது வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இருப்பதிலேயே மிக மிக அதிக பட்சம் கொண்ட இணைய இணைப்பை மெயின்டைன் செய்ய வேண்டும். அதி நவீனத் தொழில் நுட்பத் தளவாடங்கள் பெரும் செலவு பிடிக்கும். நிமிடத்திற்கு நிமிடம் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும் தொழில் நுட்பங்களை அப்டேட்டிலேயே வைத்திருக்க வேண்டுமானால், ஒரு 25 பேர் கொண்ட அதிநவீன வல்லுநர் குழு கைவசம் வேண்டும். ஒரு 3 வருடங்கள் எந்தவிதமான வருமானமும் வராது. இப்படியாக குறைந்த பட்சம் 100 கோடி ரூபாய் கையில் இருக்க வேண்டும்…’
எங்கள் தோட்டத்தில் மீண்டும் ஒரு குழி தோண்டினேன்.
அதன் பிறகு, எல்லாவற்றையும் இழுத்துச் சாத்திக் கொண்டு நான் எழுத்தாளன் மட்டும்தான்.. என்று ஓராயிரம் முறை சொல்லிக் கொண்டு கதைகள், கவிதைகள் எழுதுவதில் முழுமனதுடன் ஈடுபட்டேன். தற்கால தமிழ்ச் சூழலின் நீரோட்டத்தில் என்னைக் கரைத்துக் கொண்டு முகநூலில் பதிவுகள் எழுதினேன். தினம், தினம் முகநூலில் ட்ரெண்டிங் ஓடிக் கொண்டே இருந்தது. அப்போது எனக்கு ஒரு அத்யந்த நண்பனாக அறிமுகமானதுதான், ஹேஷ்டேக் என்னும் குறிச் சொல்! சமூகத்தில் அதன் வீச்சும், ஒருமித்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் தொழில் நுட்பமும், பயனாளர்களை ஈர்க்கும் கவர்ச்சிகரமான போக்கும் என்னை மிகவும் ஈர்த்தது.
முழுமையாக அதில் ஆட்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். அதை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக ஊடகங்களில் இடுகையிடும்போது, ஒரு கிரியேட்டிவ் கலைஞனுக்கே உரித்தான அடிப்படை குணம் எனக்குள் சீறி எழும். அதாவது, ஏற்கனவே, வண்டி வண்டியாக சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கும் அறுதப் பழசான ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தாமல், புத்தம் புதியதாக, ஒரு Catchy யான வார்த்தையுடன், தனித்துவமிக்க ஒரு ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து பதிவிட வேண்டும் என்ற எண்ணங்கள் கடல் அலைகளைப் போல எழும்பும்.
இப்படியான தொடர்ந்த செயல்பாட்டில் தான் ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டேன். அதாவது, பல்வேறு கட்டங்களில் இந்த ஹேஷ்டேக்கின் பயன்பாடு, ஒரு சில புதிய கருத்துக்களை சொல்வதற்குப் போதாமையாக இருக்கிறது என்ற விஷயம் எனக்குள் உறைத்தது. ஹேஷ்டேக் குறியீட்டுடன் இணைத்து பதிவிடும் வார்த்தைகள் மட்டும் புதுமையாக, வித்தியாசமாக, புதியவையாக இருப்பதில் பிரயோஜனமில்லை, இந்த ஹேஷ்டேக் குறியீடே புதியதாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் கிளை வெட்டி வெட்டி ஓட ஆரம்பித்தது.
இன்னும் நுட்பமாக, தெளிவாகச் சொன்னால், இந்த ஹேஷ்டேக் குறியீட்டில், ஒரு ஒற்றைப் பரிமாணம் மட்டுமே செயல்படுகிற தன்மையை மிக நுட்பமாக உணர்ந்தேன்.
(இது குறித்து முந்தைய கட்டுரைகளில் பல்வேறு உதாரணங்கள் சொல்லியுள்ளேன். அவை எல்லாமே, உலகளவில் இருப்பதால், லோக்கல் உதாரணங்கள் சிலவற்றைச் சொல்கிறேன்.)
சமீபத்தில், ஈரோட்டில், அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடந்தது. சுதந்திரம் பெற்று 75 வருடங்களுக்கு மேலான சூழலில், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டிருந்தாலும், முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட மண்ணில், பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் திராவிடத் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இதுவரை சிலை நிறுவப்படவில்லை. இத்தனை காலமாக கண்டு கொள்ளாமல், இப்பொழுது நடந்திருக்கும் இந்த நிகழ்வை, மனப் பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
இதைப் பாராட்டி, ஒரு ஹேஷ்டேக் போட நினைக்கிறீர்கள் என்று வையுங்கள். அதே சமயத்தில், இவ்வளவு காலம் கண்டு கொள்ளாமலிருந்த சமூகத்தின் அவலமான போக்கையும் குறிப்பிட வேண்டும் என்று ஆதங்கப்படுகிறீர்கள், இவை எல்லாவற்றையும் அந்த ஒரு ஹேஷ்டேக் நினைவு படுத்த வேண்டும் என்று யோசிக்கிறீர்கள்.
வித்தியாசமான புதிய முற்போக்குப் பார்வையுடன் வார்த்தைகளை வடிவமைத்து, ஹேஷ்டேக்கை இணைக்கிறீர்கள்.
#DawnofAmbedkar #JaibhimAmbedkar #LongLiveAmbedkar இப்படி சில ஹேஷ்டேக்குகளை உருவாக்குகிறீர்கள். இவை எல்லாமே, மிக மிக சாதாரணமாக, சிலை திறப்புவிழா, அரசியல் பொதுக்கூட்ட நிகழ்வு போன்றவற்றில் வழக்கமாக ஒலிக்கும் வார்த்தைகள்தான்.
இவைகளில், இந்த நிகழ்வு குறித்த எந்தவிதமான ஒரு விமர்சனமோ, சுட்டிக்காட்டலோ, புதிய பார்வையோ, ஒரு (ஒதுக்கப்பட்ட) வரலாறோ, அரசியல் கண்ணோட்டமோ இல்லை.
இல்லை, அப்படி இல்லை, மற்ற இரண்டு ஹேஷ்டேக்குகளை விடுங்கள். முதலில் சொன்ன #DawnofAmbedkar என்ற ஹேஷ்டேக்கில் நீங்கள் சொன்ன விமர்சனம் இருக்கிறது. அதாவது, “அம்பேத்கரின் வருகை என்பது ஒரு விடியல் போன்றது’ என்கிற கருத்தில் பூடகமாக அமைந்திருக்கிறது என்று நீங்கள் இந்த இடத்தில் வாதம் செய்யலாம்.
நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பார்வையை, பின்நவீனத்துவ நோக்கில் கட்டுடைப்பு (deconstruction) செய்து பார்க்கலாம்: “அம்பேத்கரின் வருகையால் விடியல் பெறும் ஈரோடு” “ஈரோட்டுக்கு ஒரு புதிய விடியல்” “அம்பேத்கரின் விடியல்” “அம்பேத்கர் என்னும் விடியல்” இப்படிப் பல்வேறு பார்வைகளை இனங் காணலாமே தவிர, விமர்சனம் எங்கே?
இங்கு ஹேஷ்டேக் என்பது வெறுமனே, பயனாளர்களை இணைக்கும் ஒரு குறிச்சொல்லின் தொழில் நுட்பத்துடன் தான் இயங்குகிறது. அந்த வார்த்தைகள் கூட, பன்மையத் தன்மைகளுடன் இயங்குகின்றன என்று சொல்லலாம். எனவே, இந்த ஒற்றைத் தன்மை கொண்ட ஹேஷ்டேக்கின் பார்வையையும், வடிவத்தையும் பன்மையக் கூறுகளுடன் வடிமைக்க வேண்டிய கட்டாயத்தை சூழல் ஏற்படுத்துகிறது.
அதுதான் டி ஹேஷ் !
DawnofAmbedkar என்ற சொல்லுடன் டி ஹேஷை இணைக்கும்போது, அந்த வார்த்தைகளின் அர்த்தம் வேறுவிதமாக மாறுகிறது. அத்துடன் இணைத்திருக்கும் டி ஹேஷ் ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறது!
அதே போல, உலகம் முழுக்க, குறிப்பாக தமிழ்நாட்டில் உணவு என்பது அரசியல்! உணவு குறித்த பதிவுகளைப் போடும் போதெல்லாம் வழக்கமான ஒற்றைத் தன்மை கொண்ட ஹேஷ்டேக்குகளிலிருந்து பல்வேறு பரிமாணங்கள் கொண்ட டி ஹேஷ் , பயனாளரின் உள்ளக் கிடக்கையை, கருத்தை, வாழ்வியலை, பண்பாட்டை, வரலாற்றை, அரசியலை மிக அற்புதமாகப் புலப்படுத்தும்.
இப்படி எந்தவிதமான அரசியல் சிக்கல்களுமற்ற, சாதாரணமான ஒரு டி ஹேஷை சொல்லலாமா?
ChennaiBookFair2022
ஆம். “பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு நடக்கும்” சென்னைப் புத்தகத் திருவிழா நிகழ்வு என்பதை இந்த டி ஹேஷ் சுட்டிக் காட்டுகிறது.
இப்படிப் பல்வேறு அம்சங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த ரீதியில் பயணித்ததன் விளைவாக உருவான டி ஹேஷை உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று தீவிரமாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் கேள்வியில் கேட்ட மாதிரி, பயணம் இத்துடன் முடியவில்லை, இப்பொழுதுதான் பயணம் ஆரம்பமாகியிருக்கிறது.
*****
(இதன் தொடர்ச்சியான கேள்வி-பதில்கள் அடுத்தடுத்த பதிவுகளில்)
*ஸ்ரீகாந்த் கந்தசாமி, இணையம் சார்ந்த தொழில்நுட்ப ஈடுபாட்டாளர், இணையதள உருவாக்குனர் மற்றும் உன்னதம் இதழின் அறிமுக எழுத்தாளர், தற்போது இணைய ஊடகங்களில் எழுதிக் கொண்டிருப்பவர்.