– நிகோலாய் வாஸ்ஸேவ்
– தமிழில்: ரேவதி முகில்
கிட்டத்தட்ட அனைத்து தொழில்துறைகளின் மீதும் மனிதர்கள் அனைவரின் மீதும் செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே தனது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நம்புதற்கரிய இத்தொழில்நுட்பம் நல்ல பல சாதகங்களையும் கேள்விக்குரியவற்றையும் நம்முடைய வாழ்வில் கொண்டு வந்திருப்பதோடு அடுத்த இருபதாண்டுகளில் இன்னும் பெரிய தாக்கத்தை உருவாக்குவதாக உள்ளது.
மிகவும் புகழ்பெற்ற எதிர்காலவியல் (Futurism) வல்லுநர்களுள் ஒருவரான ரே கர்ஸ்வீய்ல் கூற்றுப்படி 2029-ஆம் ஆண்டுவாக்கில் கணினிகள் மனிதர்களுக்கு இணையான நுண்ணறிவைப் பெற்றிருக்கும். “செயற்கை நுண்ணறிவு டூரிங் சோதனையில்[1] தேர்ச்சி பெற்று மனிதனுக்கு இணையான அறிவுத் திறனைப் பெறும் நாள் என்று 2029-ஆம் ஆண்டை நான் அறுதியிட்டுக் கணித்திருக்கிறேன். ‘சிங்குலாரிட்டி’[2]க்கு 2045-ஆம் ஆண்டை நிர்ணயித்துள்ளேன். அக்காலத்தில்தான் நமது ஆற்றல் வாய்ந்த நுண்ணறிவு நாம் உருவாக்கிய (செயற்கை) நுண்ணறிவுடன் இணைந்து பல பில்லியன் மடங்கு பெருகியிருக்கும்.” என்பது அவரது எதிர்காலவியல் கூற்று.
இத்தொழில்நுட்பம் எத்தனை குறிப்பிடத் தகுந்ததாக இருந்தாலும் அது மனிதகுலத்திற்கு சில முக்கிய கவலைகளைத் தராமலில்லை. Ex Machina, Transcendence மற்றும் Her போன்ற திரைப்படங்கள் செயற்கை நுண்ணறிவானது மனிதனுக்கு இணையான புலுணர்வு நிலையை அடைவதன் இருண்ட பக்கங்களை நமக்குக் காட்டுகின்றன. அறிவியல் வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்த கவலை மிகுந்த சில கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவை இலகுவாக எடுத்துக் கொள்ளத் தக்க செய்திகளாக இல்லை.
செயற்கை நுண்ணறிவானது பெரும்பான்மை யோரின் நிலையை மேம்படுத்தக் கூடியதாக இருந்தாலும் அதன் வளர்ச்சியென்பது 21-ஆம் நூற்றாண்டில் மனித இருப்பின் பொருளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. வரவிருக்கும் அபாயங்கள் மற்றும் நன்மைகளின் அணிவரிசைகளை ஆராய்கிறது இக்கட்டுரை.
செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தின் பிரகாசமான பக்கம்
· செவ்விய மருந்து – ஒரு நபரின் மரபியல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை ஒரு குறிப்பிட்ட நோயைத் தடுப்பதற்கோ சிகிச்சையளிப்பதற்கோ சிறந்த அணுகுமுறையைத் தீர்மானிக்க உதவுவதைப் புரிந்து கொள்வதற்கு தற்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப் படுகிறது. டிஜிட்டல் சிகிச்சைகள், தனிநபருக்கென்று வடிவமைக்கப்பட்ட (customised) மருந்துகள் மற்றும் மேம்பட்ட நோயறிதல் தொழில்நுட்பம் ஆகியவை ஏற்கனவே சிகிச்சைகளை மிகவும் மலிவானவையாகவும், எளிதில் அணுகக் கூடியவையாகவும், துல்லியமானதாகவும் மாற்றியுள்ளதோடு மனிதர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவும் உதவுகின்றன.
· தானியங்கிக் கார்கள் – இயங்கிக் கொண்டிருக்கும்போதே அதற்கான கருதுதலிலும் கணித்தலிலும் திட்டமிடுதலிலும் வடிவமைப்பைக் கண்டுணர்தலிலுள்ள ஆழ்ந்த கற்றல் முறைகளிலும் நவீன தானியங்கிக் கார்கள் மனிதர்களை விட சிறந்து விளங்குகின்றன. 2035-ஆம் ஆண்டு வாக்கில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தின் 70 சதவிகித பரப்பை தானியங்கிக் கார்களே ஆக்கிரமிக்கும் என IEEE ஸ்பெக்ட்ரம் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. தானியங்கி வாகனங்கள் மைய நீரோட்டத்தில் கலந்து ஓட்டுநர் பிழையால் ஏற்படும் மரணங்கள் வியத்தகு அளவில் குறைவதோடு அபாயகரமான விபத்துக்கள் கடந்த காலத்தின் நிகழ்வுகளாக மாறும்.
· மெய்நிகர் உதவியாளர்கள் – சிரி, அலெக்ஸா போன்ற செயற்கை நுண்ணறிவு மெய்நிகர் உதவியாளர்களும் மனிதர்களால் கொடுக்கப்பட்ட பணிகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதற்கு இயற்கையான மொழி செயலாக்கத்தைப் பயன்படுத்தும் பிற நிரல்களும் புதிய வேகமெடுக்கத் துவங்கியுள்ளன. ஏற்கனவே குரல் தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிதாக்கும் வகையிலான பரந்து பட்ட பயன்பாட்டில் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில் மெய்நிகர் உதவியாளர்கள் ரோபோக்களுடன் இணைக்கப் பட்டு சிங்குலாரிட்டியின் ஒரு பகுதியாக மாறும் போது இத்தொழில்நுட்பம் நம் வாழ்வில் மிக முக்கியமான பங்காற்றும்.
· இம்ப்ளாண்டபிள்ஸ்[3] – பிரெய்ன்-மஷீன் இண்ட்டெர்ஃபேஸ்[4] ஆகியவற்றை பரவலாக ஏற்றுக் கொள்வது மனித நுண்ணறிவின் பெரும்பான்மை விரிவாக்கத்திற்கு வழிவகுப்பதோடு பக்கவாதம், பார்வையின்மை, மன அழுத்தம், போதைக்கு அடிமையாதல் உள்ளிட்ட பல மருத்துவ நிலைகளைச் சரி செய்ய உதவும். மனித உயிரியலின் அடிப்படையை மறுசீரமைப்பதற்கு இம்ப்ளாண்ட்டுகளின் பயன்பாடு குறுகிய ஆண்டுகளில் பெருகி, மனிதர்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள உதவும். உதாரணமாக, எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனத்தால் மூளையில் இம்ப்ளாண்ட் செருகப்பட்ட குரங்கு, தற்போது தானே சிந்தித்து பாங் (Pong) விளையாடுகிறது. இத்தொழில்நுட்பம் வணிக மயமாக்கப்பட்டவுடன் மனிதர்களால் என்னென்ன செய்ய இயலும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தின் இருண்ட பக்கம்
· மக்கள்திரள் கண்காணிப்பு – பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பெருமளவு பயன்படுத்தி டிஜிட்டல் அந்தரங்கத்தன்மையை அழித்துவிட்டன. சீனாவின் சமூகக் கடன் அமைப்பு டிஜிட்டல் கண்காணிப்பை நாட்டின் அனைத்து அம்சங்களிலும் விரிவுபடுத்தியதோடு மட்டுமல்லாமல் குடிமக்களின் நடத்தை மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்து அவர்களின் மீது கடுமையான கட்டுப்பாட்டை விதிக்கிறது. கோவிட்-19 பாஸ்போர்ட்டுகளின் வருகை, மேற்கத்திய உலகம் முழுவதும் இந்த வகையான கட்டுப்பாட்டை உருவாக்குவதற்கான முதல் படி என்று பலரும் அஞ்சுகின்றனர்.
· நவீன போர் – அடுத்து வரக்கூடிய பெரும் போரில், வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக செயற்கை நுண்ணறிவே இருக்கக் கூடும். நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா வாகனங்கள், ஸ்மார்ட் ரோபோடிக் சாதனங்கள், ட்ரோன்கள், ரோபோக்கள் மற்றும் துல்லியமான வழி காட்டும் ஏவுகணைகள் ஆகியவற்றின் தொகுதிகள் அடங்கிய நவீனப் போர்முறை இத் தொழில் நுட்பத்தால் தீர்மானிக்கப்படும். ரோபோக்கள் மனிதர்களை விடவும் விரைவாகவும், வலிமையாகவும், துல்லியமாகவும், சிறந்த முறையில் ஆணைகளைப் பின்பற்றிப் போர்வீரர்களின் தேவையை வழக்கற்றுப் போகச் செய்யக் கூடியவையாக உள்ளன.
· பெருமளவிலான வேலை இழப்புகள் – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக 2030-ஆம் ஆண்டுகளில் ஒரு பில்லியன் மக்கள் தங்கள் வேலைகளை இழப்பார்கள் என்றும் கோவிட்-19 பெருந்தொற்று இப்போக்கை துரிதப்படுத்தியுள்ளதாகவும் டைம் பத்திரிக்கையில் உடாசிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் கேப் டல்போர்டோ கூறியுள்ளார். இந்த பரவலான வேலை இழப்புகள் 1900-களில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயத் தொழிலிலிருந்து விலகிய போக்குடன் போட்டியிடுவதாக அமையும். கெடுவாய்ப்பாக, இத்தொழில்நுட்பப் போக்கு தவிர்க்க முடியாதது என்பதோடு இது சமத்துவமின்மையை அதிகரித்து அதிகாரத்தை ஒரு சிலரின் கைகளில் கொண்டுசேர்க்கும்.
· சமூகப் பொருளாதார சமத்துவமின்மை – குறைந்த-திறன் மற்றும் நடுத்தர-திறன் தேவைப்படுகிற வேலைகள் பெருமளவில் அழிந்து விடுவதோடு, நடுத்தர-திறன் மற்றும் உயர்-திறன் தொழிலாளர்களுக்கு இடையே உள்ள வருமான இடைவெளி மிக அதிகமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கின்படி “உலக மக்கள்தொகையில் 71 சதவிகிதத்தினர் சமத்துவமின்மை அதிகமாகக் காணப்படுகிற நாடுகளில் வாழ்கின்றனர்,” மேலும் “57-ல் 46 நாடுகளில் வருமானத்தின் பெருமளவிலான பங்கு உலக மக்கள்தொகையில் மேல்மட்டத்தில் இருக்கும் 1% மக்களுக்குச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது.” அல்காரிதங்களுக்காக வேலை செய்யும் பெரும்பாலான மக்களுக்கும் அல்காரிதம் அமைப்புகளை வடிவமைத்து பயிற்சியளிக்கும் சலுகை பெற்ற தொழில்நுட்ப வகுப்பு மற்றும் அல்காரிதம்களை வைத்திருக்கும் அதி-பணக்கார பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வர்க்க அடிப்படையிலான பிளவு வெகு தொலைவில் இல்லை.
இறுதி மெய்மை
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் வேகம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும் நன்மைகளை கண்மூடித்தனமாக அனுபவிப்பதைக் கைவிட்டு, வரவிருக்கும் இடையூறுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. கம்ப்யூட்டர் சூப்பர்-இன்டெலிஜென்ஸ் மனித இருப்பையே அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் கூட, நான்காவது தொழில் புரட்சியை நாம் பொறுப்புடன் கொண்டு வரவேண்டுமென்றால் பெரிய சிக்கலான பிரச்சனைகள் பலவற்றை நாம் சரி செய்தேயாக வேண்டிய நிலையில் உள்ளோம்.
[1] Turing test : ஒரு இயந்திரம் மனித புத்திசாலித்தனத்துக்கு இணையான புத்திசாலித்தனத்தைக் கொண்டிருப்பதைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு எளிய சோதனை முறை. ஒரு இயந்திரம் அது ஒரு இயந்திரம் என்று உணர இயலாத வகையில் இன்னொரு மனிதனுடன் உரையாடலில் ஈடுபட முடிந்தால், அது மனிதனுக்கு இணையான நுண்ணறிவைப் பெற்றுவிட்டது என்பதை நிரூபிக்கும் சோதனை.
[2] Singularity : தொழில்நுட்ப வளர்ச்சியானது கட்டுப்பாடற்றதாகவும், மீளமுடியாததாகவும் மாறி, மனித நாகரிகத்தில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் காலத்தின் ஒரு அனுமானப் புள்ளி.
[3] Implantables : ஒரு நபரின் உடலில் மருத்துவரீதியாக பொருத்தப்படுகிற ஒரு செயற்கைப் பொருள்.
[4] Brain Machine Interface : நரம்பியல் தகவலைக் கட்டளைகளாக மொழிபெயர்க்கும் ஒரு சாதனம். இவை பெரும்பாலும் இயக்க/உணர்ச்சிக் குறைபாடுகள் உள்ளவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவுகிற சாதனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
*Nikolai Vassev (நிகோலாய் வாஸ்ஸேவ்): Forbes பத்திர்க்கையின் கவுன்சில் உறுப்பினர்.
நன்றி: Forbes, மே 6, 2021
***
தமிழ் நவீன இலக்கியத் தளத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரேவதி முகில், முதன்மையாக கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். “எலக்ட்ரா” என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் இவரது கவிதைத் தொகுப்பு, அதன் நவீன தொன்மம் சார்ந்த உளளடக்கத்திற்காக பெரும் கவனம் பெற்றது. உன்னதம் ” மிலோராட் பாவிச்” சிறப்பிதழில், மிகச் சவாலான மொழிநடை கொண்ட அவரது நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தை மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். மேலும் பல்வேறு சிற்றிதழ்களில் இவரது மொழிபெயர்ப்புகளும் கவிதைகளும் வெளியாகி உள்ளன.