“நீங்கள் இந்த உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் உங்களிடமிருந்தே தொடங்குங்கள் …”
– மஹாத்மா காந்தி
அன்புள்ள கூ தலைமை நிர்வாக அலுவலர் அவர்களுக்கு,
வணக்கம்.
என் பெயர் கௌதம சித்தார்த்தன்.
என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்:
இந்திய நாட்டின் தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் வசித்து வரும் நான், தமிழ் மொழியில் எழுதும் நவீன இலக்கிய எழுத்தாளன். கவிஞன், விமர்சகன், மொழிபெயர்ப்பாளன், மற்றும் பத்திரிகையாளன். தமிழ் மொழியில் நான் எழுதிய கதை, கவிதை, கட்டுரை, என்று இதுவரை 25 நூல்கள் வெளிவந்துள்ளன. இந்திய பிராந்திய மொழிகள் தவிர்த்து, சர்வதேச மொழிகளில் இதுவரை 10 நூல்கள் வெளிவந்துள்ளன, சர்வதேச மொழிகளில் 23 மொழிகளில் என் படைப்புகள் வெளிவந்துள்ளன. ஸ்பானிஷ், ரஷ்யன், இத்தாலி, பிரெஞ்சு என்று 4 மொழிகளில் என் Column வெளிவருகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சு வடிவில் பத்திரிகைகள் நடத்தி வருகிறேன். என் ஆசிரியப் பொறுப்பில், உன்னதம், தமிழி, மெடாபுக் என்ற தமிழ் இதழ்களையும், அலெஃபி என்ற ஆங்கில இதழையும் இலக்கியச் சிற்றிதழ்களாக நடத்தி வருகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இணைய தளங்களை நடத்தி வந்தேன். சமீபமாக ஆங்கில இணைய தளத்தை நிறுத்தி வைத்துள்ளேன்.
மேலும், 2016 நவம்பரில், Alephi ReadsApp என்கிற ஒரு Literary App ஆரம்பித்து நடத்தினேன். சர்வதேச இதழ்களில் வரும் கலை இலக்கிய நிகழ்வுகள், மற்றும் கலை இலக்கிய செய்திகள், புத்தக வெளியீடுகள், புத்தக மதிப்புரைகள் போன்ற விஷயங்களை இலக்கிய ஆர்வம் கொண்ட சர்வதேச வாசகனுக்கு சுருக்கமாக தொகுத்து அவைகளின் link கொடுக்கும் இலக்கியச் சேவையாக இந்த Alephi ReadsApp செயல்பட்டது. தற்போது பொருளாதார பிரச்சினைகளினால், இதன் செயல்பாட்டை நிறுத்தி விட்டேன்.
உங்கள் சமூக ஊடகமான கூ மிகு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே, இணையம் சார்ந்த சமூக ஊடகங்கள், வெளிநாட்டு கார்ப்பரேட்காரர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது அரசியல் பார்வையை, கலாச்சாரத்தை, வணிகத்தை, வாழ்வியல் முறையை, சிந்தனைகளை உலகம் முழுக்க முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘Digital Colonialism’ என்று அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படும் இந்தப் போக்கை, ஒரு வகை Social Media Colonialism என்று கூடச் சொல்லலாம். இந்த மேற்கத்திய காலனிய வாதத்தின் ஆதிக்கப் போக்கை உடைத்து, நம் பாரத மண்ணில் ட்விட்டருக்கு இணையான ஒரு சமூக ஊடகத்தை உருவாக்கியிருக்கும் உங்களுக்கு, மண்ணின் மைந்தன் என்கிற முறையில், முதற்கண் என் வணக்கங்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூ வில் நான் தொடர்ந்து ஒரு பயனாளராக பங்கெடுத்துக் கொண்டிருக்கும் சூழலில், கூ சமூக ஊடகத்தை “இந்த டிஜிட்டல் நூற்றாண்டின் வளரும் உலகத்திற்கான ஒரு மாபெரும் பாய்ச்சல்’ என்று அடையாளப்படுத்துகிறேன். முழுக்க முழுக்க பயனாளர்களுக்கான துல்லியமான சேவை, புதுமையான பார்வைகள் கொண்ட பயனாளர்களின் ஒருங்கிணைப்பு, அசுரத்தனமான வேகம் கொண்ட தொழில் நுட்பம்.. என்று இதன் செயல்பாடுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.
புதுமைகளுக்கும், நவீன செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவமும், அங்கீகாரமும் கொடுத்து ஆதரிக்கும் கூ சமூக ஊடக வெளியில், கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறேன்.
நான் தொடர்ச்சியாக ஹேஷ்டேக் # குறியீட்டை பயன் படுத்தி வருகிறேன். பல்வேறு கட்டங்களில் இந்த ஹேஷ்டேக்கின் பயன்பாடு போதாமையாக இருக்கிறது. காரணம், அதன் அர்த்தமிழந்து வரும் ஒற்றைப் பரிமாணம்!
தற்கால டிஜிட்டல் தன்மை வாய்ந்த மனித வாழ்வு என்பது, ஒற்றைப் பரிமாணத்தில் தட்டையாய் நெளிவதல்ல. அது பல்வேறு பரிமாணங்களில் கிளை வெட்டித் தாவும் எல்லைகளற்ற நீட்சியில் விரிந்து பரவுகிற நீண்ட பயணம். இந்த நவீன மனித வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்களுடன் இணைந்து போவதற்கு, இந்த ஹேஷ்டேக்கின் பயன்பாடு போதாமையாக இருக்கிறது என்பதை பல்வேறு தருணங்களில் உணர்ந்தேன்.
எனவே, இப்போது, இந்த ஹேஷ்டேக்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டிய அவசியம் வந்து விட்டதை உணர்ந்து, பன்மைத் தன்மை கொண்ட குறியீட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியதன் விளைவாக, டி ஹேஷ் என்னும் புதிய வடிவத்தை உருவாக்கியுள்ளேன்.
உதாரணமாக: கடந்த வருடம், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதும், ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வரும் செயல்பாட்டை அமல் படுத்திய சமயத்தில், நிகழ்ந்த மோசமான நிகழ்வுகளின் போது, பெருமளவில் ஓடிய ஹேஷ்டேக், #BidenDisaster என்பதை அறிவோம்.
அதை நாம் இப்படிப் பார்க்கலாம்: உலகளவில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வுக்காக, அதை செயல்படுத்திய ஜோ பைடன் மீது எதிர்ப்பு காட்டப்படும்போது #WeHateBiden என்று ஹேஷ்டேக் பயன்படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். மீண்டும் சில காலங்கள் கழிந்து, அவர் செய்த நற்செயலுக்காக #WeLoveBiden என்று பழைய ஹேஷ்டேக்கையே பயன்படுத்துவதற்குப் பதிலாக , புதியதாக ஒரு வடிவத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
2014ஆம் வருடம் நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை போகோ ஹராம் என்னும் அமைப்பு கடத்திச் சென்ற துயரமான நிகழ்வை கண்டனம் செய்து, #BringBackOurGirls என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது நினைவு இருக்கலாம். அதன் தொடர்ச்சியாக மாணவிகள் மீட்கப்பட்ட நிகழ்வை மீண்டும் இதே பழைய ஹேஷ்டேக்கிலேயே எதிர்கொள்வது சற்றும் உகந்ததல்ல. அடுத்த ஹேஷ்டேக்கில் இது சம்பந்தமான, மறைமுகமான ஒரு விமர்சனம், பூடகமான ஒரு கண்டனம், உள்ளே மறைந்திருக்கும் ஒரு எதிர்ப்புணர்வு கலந்த உருவகம்.. இப்படிப் பல்வேறு பரிமாணங்களில் அந்த ஹேஷ்டேக்கின் அடுத்த வடிவம் இருக்க வேண்டும் என்று யோசித்தேன்.
இதுபோல பல துறைகளிலும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும் தன்மைகளை எடுத்து முன்வைத்து பல்வேறு விஷயங்களின் நீரோட்டங்களைப் பேசலாம். ஒரே விஷயத்தை (subject) மீண்டும் (அப்பொழுதே அல்ல) அடுத்தடுத்த காலங்களில் பயன்படுத்தும் போது, அதனுடைய உள்ளடக்கம் முதலில் சொன்னதற்கு மாறாக எதிர்நிலையிலோ, அல்லது மாற்று நிலையிலோ மாறியிருந்தால், அந்த இடத்தில், இந்த ஹேஷ்டேக்கின் பயன்பாடு போதாமையாக இருக்கிறது. இதற்கு மேலும், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று பல்வேறு விதங்களில் யோசித்து உருவாக்கியதுதான் இந்த டி ஹேஷ் !
அப்படியானால், ஒரு விஷயத்தின், அல்லது நிகழ்வின் தொடர்ச்சியான நிலைப்பாட்டில் பதிவு செய்வதற்கான ஒரு குறியீடாகத்தான் இந்தப் புதிய டி ஹேஷ் அமைந்திருக்கிறதா, பிரெஷ் ஆக ஒரு புதிய விஷயத்திற்கோ, நிகழ்விற்கோ இடுகையிடுவது போன்றதல்லவா? என்று கேட்டால்,
அப்படியல்ல. ஒவ்வொருமுறையும் இந்தப் புதிய வடிவம் புதிய புதிய பார்வைகளோடு செயல்படும். இந்த டி ஹேஷை உங்களைப் போன்ற முதன்மையான சமூக ஊடகங்கள் ஏற்றுக்கொண்டு தங்களது தளங்களில் அக்செப்ட் செய்தால் மட்டும்தான் இதனுடைய தாக்கத்தையும், புது மலர்ச்சி மிக்க வீச்சையும் கணிக்க முடியும். உங்களது தளங்களில் செயல்படும் பயனாளர்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள்தான் இதை மேலும் மேலும் வளர்ச்சியடைய வைக்க முடியும்.
உதாரணமாக ஓரிரண்டு விஷயங்களை இங்கு பகிர்கிறேன்:
1. ஹேஷ்டாக் ட்ரெண்டிங் என்பது, ட்விட்டர் தளத்தில் முதன்மையான செயல்பாடு கொண்டது. ட்ரெண்டிங் எண்ணிக்கையை பயனாளர்களுக்குத் தெரியும் விதத்தில் தனியாக ஒரு பக்கத்தில் விபரமாகத் தெரிவிப்பது போல, மற்ற தளங்கள் தெரிவிப்பதில்லை. ஆனால், டி ஹேஷின் செயல்பாடு அப்படியல்லாமல், டி ஹேஷின் மீது கர்ஸரை வைத்தாலே, அது எத்தனை ஆயிரம் பேர் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கைக் கணக்கைக் காட்டும். இந்த நடைமுறை எல்லா சமூக ஊடக தளங்களிலும் செயல்படும் விதத்தில் வடிவமைத்திருக்கிறேன்.
2. இந்த டி ஹேஷ் என்பது, ஏற்கனவே, அறிமுகமான ஹேஷ்டேக்கின் தொடர்ச்சி. அதாவது, நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை போகோ ஹராம் அமைப்பு கடத்திச் சென்ற துயரமான நிகழ்வை கண்டனம் செய்து எழுந்த, #BringBackOurGirls என்ற ஹேஷ்டேக் முதன்மையானது. அதன் தொடர்ச்சியாக, கொஞ்சம் கொஞ்சமாக மாணவிகள் மீட்கப்பட்ட நிகழ்வை ஆதரித்து, பழைய ஹேஷ்டாக்கையே வெளியிடுவதில் எந்தவித புதிய அர்த்தமோ, பொருளடக்கமோ, புதிய பார்வையோ இல்லை. ஆகவே, அந்தப் பழைய வாக்கியத்தை மட்டும் எடுத்து, புதிய டி ஹேஷுடன் இணைத்து BringBackOurGirls என்றோ, அல்லது CameBackOurGirls என்றோ வெளியிடும்போது, புதிய புதிய அர்த்தங்கள் (இன்னும் மீதமிருக்கிற எங்கள் பெண்களை மீட்டுக் கொண்டு வாருங்கள்) தோன்றுகிற வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும், இந்த டி ஹேஷ் இடுகைகள், அதன் மூலக் கதையின் தொடர்ச்சியாய் (Follow-up) மாறுகின்றன.
இந்தப் பின்னணியில், இந்த டி ஹேஷை சிங்கிள் கிளிக் செய்தால், சம்பந்தப்பட்ட டி ஹேஷ் குழுவின் பயனாளர் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
டபுள் கிளிக் செய்தால், இது சம்பந்தமான மூலக் கதையின் ஹேஷ்டேக் # பக்கத்திற்குக் கொண்டு போகும்.
இப்படியாக எண்ணற்ற விஷயங்களைச் சொல்லலாம்.
இதை வெறுமனே, புரட்சிகரமான பயன்பாடுகளுக்கோ, ஆக்டிவிஸங்களுக்கோதான் பயன்படுத்த வேண்டும் என்று மட்டுமில்லை. டி ஹேஷ் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தை வழங்குவதன் பொருட்டு சுருக்கமாக சில விஷயங்களை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன். சூழலியல், உணவு, ஆடைகள், விளையாட்டு, கொண்டாட்டங்கள், விழாக்கள், கலை இலக்கியங்கள், திரைப்படங்கள், அரசியல் எல்லாவற்றிலும் இந்தப் புதிய வடிவத்தை இணைத்து பதிவு செய்யும் போது, பழைய மரபின் தொடர்ச்சியுடன் புதிய பார்வையின் எழுச்சியும் இணைந்து மிளிரும்.
அப்படியான ஒரு சிந்தனைத் தேடலில் உருவானதுதான் இந்த டி ஹேஷ் !
ஒரே விஷயத்தையே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன பயனாளர்களுக்கு, இது ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆகவே, இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு, டி ஹேஷ் என்னும் புதிய வடிவத்தில் ஹேஷ்டாக்கை உருவாக்கியிருக்கிறேன். அது சம்பந்தமான செயல்பாடுகளை யும் சுருக்கமாக பயனாளர்களுக்கு எடுத்துரைத்திருக்கிறேன். தாங்கள் அதைக் கருத்தில் கொண்டு இந்த டி ஹேஷை தங்களது தளத்தில் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த அங்கீகரிக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
காலங்காலமாக ஒரு புதிய கண்டுபிடிப்பை, ஐரோப்பியப் பின்னணி கொண்ட மனிதர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பது போன்ற ஒரு மேலாதிக்கக் கருத்தை தொடர்ந்து ஊட்டி வந்திருக்கிறார்கள். இந்தக் கருத்தை உடைத்தெறியும் விதமாக சமீபகாலங்களில், நம் இந்திய மண் சார்ந்த மைந்தர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். “இந்தியா ஒளிர்கிறது’ என்ற வரலாற்றுப் புகழ் மிக்க வார்த்தைக்கு மேலும் புகழ் உண்டாக்கும் வகையில் சாதனையாளர்கள் இந்திய மண்ணில் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த புதிய கண்டுபிடிப்பாளர்களை அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இருக்கிறது. இந்த ரீதியில், இந்தப் புதிய குறிச் சொல்லை தங்களது கூ சமூக தளத்தில் ஏற்று அங்கீகரிக்குமாறு வேண்டுகிறேன்.
இந்தத் தருணத்தில், இந்தியாவின் மகத்தான, பெருமை மிகு, கன்னடக் கவிஞர் அக்க மஹாதேவியின் கவிதை ஞாபகம் வருகிறது:
ஓ மல்லிகார்ஜுனா,
உன் மாயா, யோகினிக்கு யோகியாகிறது.
அது துறவிக்கு சந்யாசினியாகிறது,
அது தவசிரேஷ்டனுக்கு தரிசனமாகிறது.
இவ்வாறாக ஒவ்வொருவருக்கும் அவரவர் இயல்புக்கேற்ப
தன்னை மாற்றிக் கொள்கிறது மாயா!
இந்தக் கவிதையில் அக்க மஹாதேவி முன்வைக்கும் மாயா என்னும் உருவகம்தான் டி ஹேஷ் !
இது குறித்து நேரில் பேச நீங்கள் விருப்பப்பட்டால், எந்த நேரத்திலும் நான் நேரில் வந்து, உங்களை சந்தித்து, இன்னும் விரிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள சித்தமாக இருக்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
கௌதம சித்தார்த்தன்