• Thu. Sep 21st, 2023

உங்கள் உடம்பில் ஒரு மூன்றாம் நிலை டிஜிட்டல் லேயர் உருவாகிவிட்டது..

ByGouthama Siddarthan

Mar 8, 2023

  • எலான் மஸ்க் உடன் ஒரு நேர்காணல்

சமீபத்தில் புகழ் பெற்ற ட்விட்டர் தளத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ள எலான் மஸ்க், Tesla, OpenAI, SpaceX, Boring Company, Neuralink and PayPal.. .. பல நிறுவனங்களின் முதன்மை நிறுவனர். இவர் சமீபத்தில் கிளப் ஹவுஸ் தளத்தில் கொடுத்த நேர்காணல்.

 

நேர்காணல் செய்தவர்கள் : ஆர்த்தி, ஸ்ரீராம் கிருஷ்ணன்.

 

தமிழ் மொழியாக்கம் : கண்ணன் ராமசாமி.

 

எலான் மஸ்க்: ஹாய் எலான் பேசுகிறேன். நான் பேசுவது கேட்கிறதா?

 

ஸ்ரீராம்: நன்றாகக் கேட்கிறது! ஹலோ!

 

ஆர்த்தி: அய்யோ! உங்களை நாங்க நேரில் பார்த்து விட்டோம்! என் கண்களை நம்பவே முடியவில்லை.

 

எலான் மஸ்க்: ஹா.. ஹா.. நான் தான்! நானே தான்!

 

மார்க்: எலான், நீங்க, உங்க குட்டை ஷார்ட்ஸ் தானே அணிந்திருக்கிறீர்கள்?

 

எலான் மஸ்க்: பப்ளிக்! பப்ளிக்!

 

மார்க்: உங்கள் குட்டை ஷார்ட்ஸ்-ஐ அணிவதன் மூலம் குறிப்பிட்டு எதையாவது வெளிப்படுத்த விரும்புகிறீர்களா?

 

எலான் மஸ்க்: இல்லை. நான் இந்த இறுக்கமான பேண்ட்டில் கவர்ச்சியாக இருக்க முயற்சிக்கிறேன். தங்க நிறத்தோடு சிகப்பு இணையும் போது இந்த ஷார்ட்ஸ் அட்டகாசமாக இருக்கிறதல்லவா?

 

மார்க்: இந்த குட்டை ஷார்ட்ஸ் ஏலத்திற்கு உள்ளதா?

 

எலான் மஸ்க்: மன்னிக்கவும்! என்னுடைய பார்க்லி நாய்க்குட்டி ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டது!

 

ஸ்ரீராம்: எலான், உங்களுடைய இணைப்பு தூண்டிக்கப் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இணையத்தின் விஸ்தரிப்பை பற்றி உறுதியாக எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக கிளப்ஹவுஸ் என்கிற இந்த அறை, மிகப்பெரிய அறை! ஏற்கனவே இந்த அறையில் பல பேர் குவியத் தொடங்கி விட்டார்கள். அத்தோடு கூடி உங்களது ஆளுமை இந்த அறையின் மேல் மிகப் பெரிய அழுத்தத்தை செலுத்துகிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு உண்மையான வரலாற்று தருணம்!

 

எலான் மஸ்க்: உண்மையாகவா? இது வேலை செய்கிறதா? (சிரிப்பு)

 

ஸ்ரீராம்: முற்றிலுமாக… அட்டகாசமாக…

 

எலான் மஸ்க்: நல்லது.

 

ஸ்ரீராம்: சரி. நாங்கள் இன்னும் ஒரு நிமிடம் பொருத்திருக்க போகிறோம். ஏனென்றால் நாங்கள் இரவு 10:00 மணிக்குத் தொடங்குவோம் என்று உறுதியளித்தோம். மேலும் சிலர் குதிக்கப் போகிறார்கள் என்று நினைக்கிறேன். பின்னர் நாங்கள் தொடங்குவோம்! யார் கண்டது? கிளப்ஹவுஸில் உங்களுக்கு இது ஒரு வரலாற்றுத் தருணமாக இருக்கலாம். இது மிகவும் சுவாரசியமான நிகழ்வாக இருக்கப் போகிறது. 30 வினாடிகள் பல்லை கடித்துக் கொண்டிருங்கள்.

 

எலான் மஸ்க்: சரி. ராபின்ஹூட்டிலிருந்து வந்திருக்கும் விளாட்-ஐ அனுமதிக்க முடியுமா?

 

மார்க்: கண்டிப்பாக!

 

ஸ்ரீராம்: சரி. நாம் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்? சரி. முதலில், ஒரு வரலாற்று அத்தியாயத்திற்காக எங்களுடன் இணைந்ததற்கு அனைவருக்கும் நன்றி.

 

நான் ஒரு நொடியில் எங்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்வேன். அதற்கு முன்பு, இந்த அறையின் கூடியுள்ள மற்ற முக்கியமானவர்களை விரைவாக அறிமுகப்படுத்தி விடுகிறேன். எங்களோடு இன்ஷியலைஸ்டு கேபிட்டல் புகழ் கேரி டேன் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் சுற்றுப் பயணத்திற்கு எங்களை அழைத்துச் சென்றபோது நீங்கள் சந்தித்த எனது ஆசை மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி இருக்கிறாள். அடுத்ததாக, மைக்ரோசாப்ட்-ல் பணி புரிந்த ஸ்டீவன் சினோஃப்ஸ்கி இருக்கிறார். தி ஒன் அண்ட் ஒன்லி மார்க் ஆண்ட்ரீசென்-உம் இணைத்திருக்கிறார்! தற்போது எங்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த முக்கிய நபருக்கு உண்மையிலேயே அறிமுகம் தேவை.

 

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் நிறுவனம், நியூராலிங்க், பேபால் மற்றும் பலவற்றின் நிறுவனர்.. எலான் மஸ்க் – அவர்களை, கிளப்ஹவுஸுக்கு வரவேற்கிறோம்.

 

எலான் மஸ்க்: நன்றி.

 

ஆர்த்தி: இது அருமையான தருணம்! எனக்கு புல்லரிக்கிறது. எலானை மீண்டும் வரவேற்கிறோம்.. அப்பாடா! நாள் முழுவதும் காத்திருந்தோம். இரவு 10:00 மணி வருவதற்குள் நீநீநீண்டு விட்டது! இந்த அனுபவத்தை பெறுவதற்கு எங்களால் காத்திருக்க முடியவில்லை. இது எங்களுக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறதோ, அதேபோல் உங்களுக்கும் இதன் முடிவில் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னிடமிருந்து முதல் கேள்வி – நாம் எப்போது செவ்வாய்க்குள் காலடி எடுத்து வைக்கப் போகிறோம்?

 

எலான் மஸ்க்: அது எப்போ என்று யோசித்தால்? மம்.. ஒரு ஐந்து வருடங்களில் அதற்கு நல்லதொரு வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன்.

 

அது ஏன் என்றால், பூமியும், மார்ஸ்-உம் ஒரே கோட்டில் 26 மாதங்களுக்கு ஒருமுறை வரும். சூரிய மண்டலத்தின் ஒரே அமைப்புக்குள் நாம் வருவதை போல அது. இந்த நேரத்தில் நாம் கிரகம் விட்டு கிரகம் தாவலாம்! ஆறு மாதம் முன்பு நாம் இது போன்ற ஒரு நிகழ்வை கண்டோம். இதற்கு பிறகு ஒன்றரை ஆண்டுகளில் அடுத்த நிகழ்வு ஏற்படும். அதனால், தோராயமாக எனக்கு ஐந்து அல்லது ஐந்தரை வருடங்களில் இது சாத்தியமென்று தோன்றுகிறது.

 

ஆர்த்தி: ஐந்தரை வருடங்களா! சரி.. இந்த ஐந்தரை வருடங்களில் மார்ஸ்-ல் கால் வைக்கும் நாள் வரை என்னவெல்லாம் முக்கியமாக நடக்க இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

 

எலான் மஸ்க்: ஒரு ஸ்டார் ஷிப்-ஐ பறக்க வைக்க வேண்டும். அதனை ஆர்பிட் -ற்குள் வெற்றிகரமாக இயக்கித் தள்ள வேண்டும். பின்பு அது நாம் எப்போதும் போய் வரும் மாநகரப் பேருந்தை போல போவதும் வருவதுமாக இருக்க வேண்டும். இது ஒரு வெறித்தனமான ராக்கெட்-ஆக இருக்க வேண்டும். எவருமே இதுவரை முழுமையாக திரும்பப் பயன்படும் ஒரு ராக்கெட்டை செய்ததில்லை. அதுவும் லோக்கல் வண்டியளவுக்கு அடித்து ஓட்டக் கூடிய ஒரு ராக்கெட் வேண்டும்! ஒரு விமானத்தை முழுமையாக புதுப்பிக்க பல மாதங்கள் ஒன்றும் ஆவதில்லை. விமானத்தின் செலவீனத்தில் கணிசமானது எரிபொருளுக்காக செலவிடப் படுவதாலேயே அதை நாம் திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று நினைப்போம் இல்லையா? ஒரு ராக்கெட்டை மட்டுமே எப்படி அப்படியே அண்டத்தில் கைவிட முடியும்?

 

இதற்கு பிறகான தலைவலி, நடு ஆர்பிட்-ல் எரிபொருள் தீர்ந்து போவது. ஒரு ஷிப்-ஐ அனுப்பி ஆர்பிட்-ல் பார்க் பண்ணி விட்டு, மற்றொரு ஷிப்-ல் உந்துசக்தியை அனுப்பி வைத்தால் நாம் நிச்சயம் மார்ஸ்-ஐ எட்டிப் பிடிக்கலாம்.

 

அதுவும் உங்களிடம், அதிக செயல்திறன் கொண்டு, குறைவான உந்துசக்தியை பயன்படுத்தும் ஒரு வெறித்தனமான ராக்கெட் இருந்தால் மார்ஸ் வெகு தூரமில்லை.

 

மற்றொரு விஷயம், மார்ஸ்-ற்கு சென்ற பிறகும் கூட உங்களுக்கு அங்கே ஒரு பொட்டிக் கடை போடவேண்டிய அவசியம் வரும். கரியமிலவளியை போகிற வழியில் வளிமண்டலத்தில் இருந்து எடுத்துக் கொண்டு, அதனை ஐஸ் (H2o) உடன் இணைத்து CH4 மீதேன் மற்றும் ஆக்ஸிஜன் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

 

இவை மட்டும் இருந்துவிட்டால், நாம் அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கலாம். மார்ஸ்-ல் தற்சார்புள்ள ஒரு நகரத்தை அமைக்கலாம். அதுவே முக்கியமானது. விழிப்பான விழிப்பு நிலையின் நீண்ட இருப்புக்கு நாம் அடித்தளம் இட்ட மாதிரி இருக்கும்.

 

ஸ்ரீராம்: விழிப்புநிலையின் வீச்சை அதிகப் படுத்துவது குறித்து நீங்கள் அதிகம் பேசியிருக்கிறீர்கள். பல் கிரக வாழ்வியலுக்கும் இந்த முன்னேற்றத்திற்கும் உள்ள தொடர்பு குறித்தும் அடிக்கடி பேசி வருகிறீர்கள். இதன் முக்கியத்துவம் குறித்து நீங்கள் விளக்கிச் சொல்ல முடியுமா?

 

எலான் மஸ்க்: நிச்சயமாக! சிறு குழந்தையாக இருக்கும் போது வாழ்க்கையின் பொருள் என்ன என்கிற இருப்பு குறித்தான கேள்விகள் எனக்கு எழுந்திருக்கின்றன. எதற்காக நாம் பிறந்தோம்? இதன் நோக்கம் என்ன? வாழ்க்கை அர்த்தமற்றதா? என்றெல்லாம் யோசிக்கும் போது எனக்கு மன அழுத்தம் உண்டாகும். இதில் இருந்து வெளி வருவதற்கு எனக்கு உதவியது, டக்லஸ் ஆடம்ஸ் எழுதிய, The Hitchhiker’s Guide to the Galaxy என்கிற புத்தகம்.

 

அந்த புத்தகத்தில் எந்தக் கேள்வி அவசியமானது? பதிலைக் குறித்து எந்தக் கேள்வியை எழுப்ப வேண்டும் என்கிற புரிதல் ஏற்படுவது கடினமானது என்று எனக்கு படித்த பிறகு புரிபட்டது. இந்த பிரபஞ்சமே என் கேள்விக்கு பதில்! அந்த பதிலை நோக்கியே அவசியமான கேள்வியை எழுப்ப வேண்டும்.

 

இங்கு சுவாரசியம் என்னவென்றால், பதில் மிகவும் எளிதானது. ஆனால் கேள்வி தான் கடினமானது. ஆக, எந்த மாதிரியான கேள்விகளை எழுப்பலாம் அல்லது புரிந்து கொள்ளலாம் என்பதை பற்றிய ஒரு முடிவுக்கு வருவதற்கு, முதலில் நம்முடைய விழிப்புநிலையை விஸ்தரிக்க வேண்டும். இதன் மூலம் எந்தெந்த கேள்விகளை எழுப்ப முடியும்? அல்லது, எந்தெந்த கேள்விகள் எழும்பும் போது அதற்கு மேலான ஒரு பதிலை நாமே அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு இந்த முன்னேற்றமே உறுதுணையாய் நிற்கும்.

 

அடிப்படையான கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? பல-தரப்பட்ட உயிரினமாக நாம் உருவாகி விட்டோமா என்கிற மிகப் பிரம்மாண்டமான கேள்வி நம்மிடையே உள்ளது. இந்த விண்மீன் கூட்ட நெரிசலில் ஒரு செத்த கிரகம் ஒன்று இருந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை! ஏதோ உட்கட்சிப் பூசல் காரணமாக லட்சோப லட்சம் வருடங்களாக கொடிகட்டிப் பறந்த சாமிராஜ்ஜியங்கள் எல்லாம் ஒரு காலத்தில் மண்ணுக்குள் புதையுண்டு போவதும் ஆச்சரியமல்ல.

 

எல்லா நாகரீகத்திற்கும் பொதுவாக, தொழில்நுட்பத்தில் மேலோங்கிச் செல்லும் எவரும் அதனைக் கடைபிடித்து மேலேறிச் சென்று கொண்டே இருப்பது போன்று நிகழ்வதில்லை. மேலேறுபவர்கள், வில் வளைவில் சறுக்கி அழிவை சந்திக்கிறார்கள். 5000 வருடப் பழமை வாய்ந்த எகிப்து நாகரீகத்தில் வாசித்தவர்கள் பிரமிட் கட்டுவது எப்படி என்று மறந்தார்கள்! பழமையான ஹைரோகிளிபிக்ஸ் சுவர் ஓவியங்களை படிக்கத் தெரியாமல் விழித்தார்கள்!

 

ரோமப் பேரரசு சாலைகள், குழாய் அமைத்தல் போன்ற நவீன தொழில் நுட்பங்களை அறிந்தும் அவற்றை மறந்த காரணத்தால் எப்படி வீழ்ந்தார்கள் என்பது குறித்த கெவினுடைய புகழ்பெற்ற புத்தகம் இருக்கவே இருக்கிறது. சுமேரியர்கள், பாபிலோனியர்கள் என அனைவரும் இந்த வில் வளைவு சருக்களில் இருந்து தப்பித்ததில்லை. நாமும் இதற்கு விதி விலக்கல்ல! நம்மை மீளமுடியாத ஒரு கட்டத்திற்கு உலக மயமாக்கல் கொண்டு வந்து விடும்!

 

பூமியின் நான்கரை பில்லியன் ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, தற்போது தான் பூமியைத் தாண்டி உயிரினங்களை பல்-கிரக இருப்பு நோக்கி நகர்த்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். இந்த வாய்ப்பு பல காலம் நீடிக்கலாம். அல்லது சீக்கிரத்தில் தீர்ந்து போகலாம். நாம் அது சீக்கிரத்தில் தீர்ந்து போகும் என்கிற அனுமானத்தைக் கொள்வது சிறந்தது என்று நான் எண்ணுகிறேன்.

 

நான் நம்பிக்கையாளன். சந்தேகி அல்ல! ஒரு வேலை இது குறுகிய கால பம்பர் ஆபர் என்றால், அதை உடனடியாக நமதாக்கிக் கொள்ள வேண்டும் என்றே நான் சொல்கிறேன். அந்த சாளரத்தை உயிரைக் கடத்தி, பல்-கிரக வாசிகளாக நாம் உருவாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதத் தன்மை தான் இந்த இயக்கத்தில் அடிநாதமாக இருக்க வேண்டும்!

 

பூமியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், இவ்வுலக உயிரினங்கள் நீடித்து வாழ நாம் வகை செய்ய வேண்டும். அதற்கான பொறுப்புள்ளவர்கள் நாம். புதைபடிவ ஆதாரங்களை பார்க்கும் போது, பேரழிவுகள் பல நிகழ்ந்துள்ளன. அவை மனிதர்களால் உருவாக்கப் பட்டிருக்கலாம். அல்லது இயற்கை பேரழிவாகவும் இருக்கலாம்.

 

ஆர்த்தி: நீங்கள் சொன்னவை அனைத்தையும் நாங்கள் முன்பே கேட்டிருக்கிறோம். அவை அனைத்தும் உண்மையே. இந்தக் கேள்வியில் மற்றொரு பகுதி என்னவென்றால், மார்ஸ்-ல் ஒரு சமூகத்தை, நாகரிகத்தை கட்டமைப்பது எவ்வாறு சாத்தியம் என்று யோசிக்கிறீர்கள்? அங்கே ஒரு இணையத்தை ஏற்படுத்துவது, அரசு அமைப்பது, சட்டங்கள் மற்றும் விதிகளை ஏற்படுத்துவது குறித்த உங்கள் கற்பனை என்ன?

 

எலான் மஸ்க்: எல்லா நாடுகளிலும் எப்படி அந்தந்த செயல்பாடுகள் நடந்தனவோ அதே பாணியில் தான் நடக்க வேண்டும். அங்கு இதை தான் செய்ய வேண்டும் என்று நான் எழுதிக் கொடுக்க முடியாது. ஒரு சுயசார்புள்ள நகரத்தை கட்டமைக்க தேவையான பொருட்களை அங்கு கொண்டு செல்வது, மனிதர்களை கடத்துவது குறித்து சிந்திப்பது தான் முக்கியமானது.

 

ஏன் என்றால், நாம் உண்மையில் இந்த தேர்வில் வெற்றி பெறுவது மார்ஸ்-ல் நாம் கட்டமைக்கும் நகரம் சுய சார்புள்ளதாக மாறும் நேரத்தில் தான் நிகழும். ஒரு வேளை பூமியில் இருந்து ஏதோ ஒரு காரணத்திற்கு நாம் பயன்படுத்தும் ஷிப் வரவில்லை என்றால், அங்கு மிகப் பெரிய அளவில் ஒரு பேரழிவு நடந்திருக்கலாம்; அல்லது அது ஒரு சாதாரண நிகழ்வாகவும் இருக்கலாம். நான் சொல்ல வருவது, ஒரு நாகரீகம் ஒரு பெரு வெடிப்பு காரணமாகத்தான் அழிய வேண்டும் என்றில்லை; பூமியின் ஒரு சிறிய சிணுங்கலே போதுமானது!

 

பூமியில் எப்போதும் நம் நகரத்திற்கு வரும் பேருந்து ஒரு நாள் வரவில்லை என்றால் நம் வாழ்வே அழிந்து போகும் நிலை ஏற்படுகிறதா என்ன? அது போன்ற ஒரு நிலை தான் மார்ஸ்-லும் ஏற்பட வேண்டும். உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காத போது நாம் எப்படி சமாளிக்கிறோமோ அது போல சமாளிக்க முடியவேண்டும். இங்கிருந்து எவ்வளவு கொண்டு சென்றாலும், அது ஒரு நாள் தீர்ந்து போகும் நிலை வரும். அதனால் தான் சுய சார்பு முக்கியம் என்கிறேன்.

 

இங்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து, அல்லது மனித நாகரிகத்தின் அழிவின் காரணமாக இந்த விசேஷ ஷிப் அங்கே செல்ல முடியாத நிலை ஏற்படும் முன்பாக மார்ஸ்-ஐ முதலில் சுய சார்புள்ளதாக மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும். எது முக்கியமான வாசல்? மூன்றாம் உலகப் போர் குறித்து சிந்திப்பதா? அல்லது, மார்ஸ்-ல் சுய சார்புள்ள ஒரு வாழ்க்கையை நிர்மாணிப்பதா?

 

மார்க்: அடுத்த சில பத்தாண்டுகளில் நீங்கள் கனவு காணும் வெற்றி என்பது என்ன? மார்ஸ்-ல் ஐந்து, பத்து வருடங்களில்.. அவ்வளவு ஏன், 20 அல்லது 30 வருடங்களில் சாதிக்கக் கூடியது என்ன?

 

எலான் மஸ்க்: முதலில் ஒரு சிறிய கொல்லைப் புறத்தை உருவாக்க வேண்டும். ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒரு வேலை. நான் சொல்வதை கேட்பவர்களுக்கு சில நேரம், “மனிதர்களுக்கு இது ஒரு தப்பிக்கும் முகாந்திரம் போல” என்று எண்ணத் தோன்றலாம். என்னைப் பொறுத்த வரையில், “இல்லை. இது மிகவும் ஆபத்தான ஒரு வழி. ரத்தமும், வியர்வையும் கேட்கும் பணி. எல்லையில் ராணுவப் பணி செய்வது போல கடினமான பணியாக இருக்கப் போகிறது. இங்கு இறப்பதைக் காட்டிலும் அதிக ஆபத்தான வழிகளில் அங்கு இறப்பு நிகழக் கூடும். ஆனால் இது மிகவும் சவாலான ஒரு சாகசம். நிச்சயமாக இந்த விறுவிறுப்பு ஆடம்பர வழியில் கிடைக்காது. ஒரு ப்ரோபெல்லண்ட் ப்ளான்ட்-ஐ உருவாக்க வேண்டும். சூரிய சக்தியை தயாரிக்க வேண்டும். தேவையான அளவிற்கு உணவு உற்பத்தி தொடங்க வேண்டும். இரும்புத் தாது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட வேண்டும். ஒரு தொழிற்சாலை அமைக்கத் தேவையான அனைத்தும் அங்கு உருவாக்கப் படவேண்டும். இதனை செய்ய காலம் பிடிக்கக்கூடும். ஆனால் அந்த கிரகத்தை சூடேற்றி ஒரு நிலப் பரப்பை நம்மால் உருவாக்க முடியும். இது தான் என்னளவில் வெற்றி!

 

மார்க்: நீங்கள் சொல்வதை கேட்கும் போது, உண்மையில் தோன்றுவது என்னவென்றால், மார்ஸ்-ல் உருவாகப் போகும் மார்ஷியன் நாகரீகம் என்பது, பூமியில் இருந்து கொண்டு வரப் பட்டதென்றாலும், மிகுந்த உரம் வாய்ந்த ஒரு நாகரீகமாக அவசியம் கருதி உருவாகப் போகிறது என்று வைத்துக் கொள்ளலாமா? பண்டைய கால கிரேக்கத்தில் இருந்த ஸ்பார்டான்ஸ்கள் போல? அந்த நாகரிகத்தின் வளர்ச்சி அங்கு எந்த அளவிற்கு நிலமை மோசமாக உள்ளது என்பதைப் பொறுத்து உரம் பொருந்திய ஒன்றாக உருவாகக் கூடும் அல்லவா?

 

எலான் மஸ்க்: ஆம் அப்படித் தான் இருக்க முடியும்.

 

மார்க்: நமக்கு நம்பிக்கை தருவதற்கு பூமியில் ஆள் இருக்குமோ இல்லையோ! நம்பிக்கைக்கு உரிய வழியில் எதிர்பார்த்தால், இப்படியும் நடக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு வித்யாசமான, அடிப்படையில் வேறு வேறான இரு நாகரிகங்கள் பெருகி வளருவதை நாம் கண்டு ரசிக்கவும் செய்யலாம்!

 

எலான் மஸ்க்: ஆம்! கண்டிப்பாக. ஆனால், பிரச்சனை என்னவென்றால் போகவும் வரவும் தலா ஆறு மாதங்கள் எடுக்கும் பயணத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் செய்ய முடியும். போகப் போக ஒரு மாத காலத்திற்குள் அங்கு போய் சேரும் வகையில் தொழில்நுட்பம் வளரலாம். ஆயினும், சூரியனுக்கு பின்புறம் இருந்து கொண்டு மார்ஸ்-க்கு பயணம் செய்ய முடியாது. இதை எல்லாம் கணக்கில் கொண்டால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதிய மனிதர்கள் வருவதைக் காணலாம்.

 

அங்கு சென்ற பிறகு புதியவர்கள் பழையவர்களைக் காணும் போது, “உனக்கு இந்த பூமி-மார்ஸ் ஒத்திசைவு நிகழ்வை பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் இந்த ஊருக்கு புதுசு.. மார்ஸ் ஒரு சுய சார்புள்ள நகரமாக மாறிவிட்டது என்று பத்திரிக்கையில் படித்து கேள்விப் பட்டு தான் இங்கே வந்தேன்”, என்று தங்களுக்குள் பேசிக் கொள்ளலாம். நாம் விழிப்பு நிலையை நீடித்த பயணம் மேற்கொள்ள என்னவெல்லாம் செய்து காப்பாற்ற வேண்டுமோ அதை எல்லாம் அவர்கள் செய்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இருட்டில் சிறிய மெழுகுவர்த்தி போல, நமக்குத் தெரிந்த அளவில் நாம் மட்டுமே விழிப்பு நிலையின் எஞ்சியிருக்கும் சுடரொளி!

 

இங்கு, இந்த பூமியில் மட்டுமே எரியும் நெருப்பு அது. வேறு உலகத்திலும் அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், நிஜத்தில் நாம் அவ்வாறு இருப்பதற்கான எந்த சமிக்ஞையையும் பெறவில்லை. வேற்று கிரக வாசிகள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அத்தகைய அறிகுறி இருந்தால், நான் தான் முதலில் அதனை வரவேற்பேன். ஆனால் எதுவும் இதுவரை இல்லை!

 

ஸ்ரீராம்: ஆம் எலான்.. அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று இருந்தோம். கடந்த வருடம் பலர் UFO க்களை பார்த்ததாக சொல்கிறார்கள். நம்முடைய சூரிய மண்டலத்தை ஏதோ ஒரு அமானுஷ்ய வாகனம் கடந்ததாக பேசிக் கொள்கிறார்கள். நீங்கள் ஏற்கனவே இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லி விட்டீர்கள். ஆனால், நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். என்ன நினைக்கிறீர்கள்? நாம் அவர்களை எப்போதாவது சந்திப்போமா? அப்படி சந்தித்தால்,  ‘Dark Forest Theory’ பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏலியன்கள் குறித்து நாம் சிந்திக்கும் முறை எப்படி இருக்க வேண்டும்?

 

எலான் மஸ்க்: சரியான கேள்வி. நான் அறிவியல் பார்வையில் தீர்க்கமாக ஆதாரம் இல்லை என்று கூறுகிறேனே ஒழிய, நான் இப்படி சொல்வதால் ஏலியன்களே இல்லை என்று அர்த்தமில்லை. பூமியின் நிகழ்வுகளுக்கு எப்போதும் உள்ள விளக்கங்களுக்கு மாற்றான பிற விளக்கங்கள் இல்லாத எதையும் நான் பார்த்ததில்லை என்பது தான் என் வாக்கின் உள்ளர்த்தம். அத்தகைய பிற விளக்கங்கள், இந்த ஏலியன் குறித்ததான கட்டுக் கதைகளைக் காட்டிலும் அதிகமாக நம்பகத் தன்மை வாய்ந்தவை..

 

நீங்கள் சொல்லும் ‘வெளி கிரக விமானத்தை பார்த்தேன்’ என்கிற மனிதர்களை பார்த்தால் ஒன்று கேட்கத் தோன்றும், “உங்க கிட்ட நல்ல resolution உள்ள ஒரு கேமரா கூட இல்லையாடா?” என்று.

 

ரத்தக் காட்டேறி கதையெல்லாம் நான் சென்ஸ். 500MP கேமரா நம்மிடம் இப்போது உள்ளது. ஐ போன் அளவிற்காவது புகைப்படம் எடுக்கத் தெரிய வேண்டாமா?

 

மார்க்: நான் இன்னும் ஒரு கேள்வி கேக்கலாமா? எலான், உங்களுக்கு மிகவும் அழகான குழந்தைகள் உள்ளனர். அதுவும் தற்போதைய சூழலில் உங்களுக்கு இருப்பது குவியல் குவியலான குழந்தைச் செல்வங்கள். நீங்கள் அவர்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் 18 அல்லது 22 வயதில் உங்களிடம் வந்து, ‘டேட்! நீங்க மார்ஸ்க்கு எல்லோரையும் அழைத்துச் செல்கிறீர்களே! நாங்களும் வரலாமா?” என்று கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

 

எலான் மஸ்க்: மூன்று அல்லது நான்காவது முறையாக மார்ஸ்-க்கு போகும் போது இந்த கேள்வி என் முன்னே எழுந்தால், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நானே பல முறை அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் வேண்டாம் என்கிறார்கள். அவர்கள் எண்ணம் மாற வாய்ப்புள்ளது.

 

ஸ்ரீராம்: சரி.. எலானும் நானும் டிவிட்டரில் தான் முதலில் சந்தித்தோம் என்று இங்கு பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்குத் தெரியாது. மார்ஸ் குறித்த மீம்களை பொறுத்த வரையில் எலான் ஒரு வித்தகர் என்று தைரியமாகக் கூறுவேன். ஒரு முறை, ‘மீம்களை கையாள்பவர்கள், பிரபஞ்சத்தை ஆட்கொண்டவர்கள்’ என்று போட்டிருந்தீர்கள். அவ்வாறு சொல்ல என்ன காரணம் என்று எங்களுக்கு சொல்ல முடியுமா?

 

எலான் மஸ்க்: டியூன் அவர்களின் வார்த்தையை நான் அப்படியே தகவமைத்துக் கொண்டேன். அவர், “who controls the spice – controls the universe” என்றார். இங்கு ஸ்பைஸ்-ஐ எடுத்து விட்டு நான் மீம்-ஐ சொருகி விட்டேன். அதில் உண்மை இல்லாமல் இல்லை. மீம்கள் உரையாடலுக்காக வடிவமைக்கப் பட்ட ஒரு சிக்கலான மொழி. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகள் பேசும் என்பார்களே. அது போல ஒரு மீம் 10000 வார்த்தைகள் பேசும்!

 

அது பல அர்த்தங்கள் கொண்ட சிக்கலான ஓவியம். அது பகிடியாக சொல்லப் பட்டிருக்கலாம். ஆயினும், எனக்கு மீம்ஸ்களை பார்த்தால் பிடிக்கும். அவை நுண்ணறிவு சார்ந்தவை என்று எண்ணுகிறேன். வரலாற்றில் குறியீடுகள் பல மாதிரி மனிதர்களை பாதிப்பு உள்ளாக்கியுள்ளன.

 

ஸ்ரீராம்: அது சரி.. மீம்களை போடுவதில் எப்படி வல்லவரானீர்கள்? அதுவும் உங்களை நான் பல ஆண்டுகளாக பின் தொடர்ந்து வருகிறேன். நீங்கள் போடும் மீம்கள் மிகவும் காட்டமாக இருக்கின்றன.

 

எலான் மஸ்க்: எனக்குத் தெரியும்.. என்னுடைய தொடக்க கால டிவிட்டர் காலத்தில் 10000 பேருக்கும் குறைவாகத் தான் இருந்தார்கள். அவர்கள் போடுவதை பார்க்கும் போது, இதை எதற்கு நான் படிக்க வேண்டும் என்று தோன்றும். அதனால் அந்த டிவிட்டர் அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்துவிட்டேன். வேறு யாரோ ஒரு நபர் அந்த ஐ.டியை பயன்படுத்திக் கூண்டிருந்தார்.

 

ஒரு முறை என்னுடைய நண்பர் பில்லி சொன்னார், “நீ நிச்சயமாக டிவிட்டர்-ல் இருக்க வேண்டும். நீ நேரடியாக மக்களுடன் பேச வேண்டும்”. சரியென்று நான் அந்த டிவிட்டர் பக்கத்தை மீட்டு பயன்படுத்தத் தொடங்கினேன். தொடக்கத்தில் காட்டமாகத் தான் பேசத் துவங்கினேன். அப்போது Catherine the Great -ன் சுய சரிதையை படித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ! அங்கிருந்து வெறித்தனமாகத் தான் போய் கொண்டிருந்தது.

 

ஸ்ரீராம்: என்னவோ இப்போது மட்டும் சாத்வீகமாக போய்க் கொண்டிருப்பதாகத் தான் உங்களுக்கு நினைப்பு

 

எலான் மஸ்க்: ஹா.. ஹா.. சில பேர் இவன் டிவிட்டருக்கு வந்த பிறகு பித்துப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணுகிறார்கள். நானோ, பைத்தியமாகத் தானடா இதற்குள்ளேயே வந்தேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொள்கிறேன்.

 

ஆர்த்தி: தற்போது எதைப் பற்றி மீம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? எவை எல்லாம் உங்களை சுவாரசியப் படுத்துகின்றன?

 

எலான் மஸ்க்: நான் பொதுவாக மீம்களைத் தொடர்வதில்லை.

 

ஆர்த்தி: வெறும் உருவாக்கல் மட்டும் தானா?

 

எலான்: சிலவற்றை உருவாக்குகிறேன். சில, எனக்கு அனுப்பப் படுபவை. நமக்கு சரக்கு அனுப்ப நிறைய டீலர்கள் இருக்கிறார்கள்!

 

ஆர்த்தி: இல்லையா பின்ன?

 

ஸ்டீவ்: அந்த மீம் டீலர்கள் எங்கே? மார்ஸ்-ல் உள்ளார்களா?

 

மார்க்: யாரோ சரியான ஆளைத் தான் கூட வைத்திருக்கிறீர்கள்.

 

எலான் மஸ்க்: மைக் இருக்கிறான். அவன் ஒரு நல்ல மீம் டீலர். க்ளாராவும் நன்றாக அனுப்புவாள். ஜேக்.. இன்னும் நிறைய பேர். நல்ல வேளையாக எனக்கு அனுப்புபவர்கள் எல்லோரும் சுவாரசியமானதை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆர்த்தி: சற்று நிதானமாக பேச்சை மாற்ற முயற்சிக்கிறேன். நீங்கள் இன்று நியூரா லிங்க்-ல் ஏன் வேலை செய்ய வேண்டும் என்பது குறித்து பேசியிருந்தீர்கள். அதைப் பற்றி தெரியாதவர்களுக்கு, உண்மையில் இது ஆச்சரியமான ஒன்று! இது சாத்தியமா என்று எனக்கு எப்போதும் தோன்றும். அதை பற்றி சொல்லுங்களேன். இதைப் பற்றி கிளப் ஹவுஸ்-ல் தெரிந்து கொள்ள பல என்ஜீனியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நியூரா லிங்க் என்றால் என்ன? அதை பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அதை வைத்து செய்யக் கூடியது என்ன?

 

எலான் மஸ்க்: சொல்கிறேன். நீண்ட காலத்தில் நடக்கக் கூடியது என்ன? ம்ம்.. சரி.. AI என்னும் இத்தகைய கிருபையுள்ள செயற்கை நுண்ணறிவுத் திறன் உலகுச் சூழலில் என்னுடைய பயம், நாம் எப்படி இந்தத் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஈடுகொடுக்க போகிறேன் என்பதாக இருந்தது. அந்த பதட்டத்தில் உருவானதே இந்த நியூரா லிங்க் என்கிற கருத்தாக்கம். செயற்கை நுண்ணறிவை கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். அது என்ன வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று.

 

GPT-1,GPT-2, சூப்பர் GPT-3 ஆகிய புதுப் புது முன்னேற்றங்களை காணும் போது இது தெளிவாக புலப்படும். அவர்கள் உருவாக்கிய கேம்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, இனிமேல் உருவாக்க ஒன்றுமே இல்லை என்பது போலத் தொன்றும். நான் தான் இன்னமும் Teslaவை நிர்வகித்து வருகிறேன் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். Tesla தன்னிடம் வலிமையான ஒரு செ.நு. டீம் வைத்துள்ளது. ஆனால், அது நிஜ உலக பயன்பாட்டில் தான் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

 

அதனால் செ.நு. ன் வேகத்தை உணரவும், அதனை மனிதர்களுக்கு கை அடக்கமாக வைத்துக் கொள்ளவும் தான் இந்த தீர்வை கண்டு பிடித்தேன். செ.நு. நம்மிடம் நல்ல மாதிரியாக நடந்து கொண்டாலும், நாம் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் எதையாவது செய்ய வேண்டும். நமக்கு இருக்கும் நல்ல சூழல் மாற்றம் அடையாமல் பார்த்துக் கொள்ள, ஒட்டுமொத்த மனித நோக்கத்தை செ.நு. ன் பலனோடு இணைத்து இந்த நியூரா லிங்க் உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த முயற்சி.. மன்னிக்கவும்.. நாங்கள் உள்ளே பேசும் மொழியில் பேசினால், பலருக்கு போர் அடிக்கலாம்.

 

ஸ்ரீராம்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நாங்கள் வேறு உலகத்தில் உங்களோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

 

எலான் மஸ்க்: அப்படியானால் சொல்கிறேன். மனிதர்கள் ஏற்கனவே ஒரு சைபோர்க் (மனிதர்களின் குறைகளை செயற்கை முறையில் அதிகரிக்கும் ஒரு கருதுகோள் பொருந்திய கற்பனை மனிதன்) நிலையில் தான் உள்ளனர். உங்கள் உடம்பில் ஏற்கனவே ஒரு மூன்றாம் நிலை டிஜிட்டல் லேயர் உருவாகிவிட்டது. உங்கள் உணர்வு செயலி பழமையான ஆசைகள், மறுமொழிகள் மற்றும் உளத்தூண்டுதல்களுக்கு காரணமாக உள்ளது. உங்கள் கார்டெக்ஸ் பகுதி, நீண்ட கால திட்டமிடல் மற்றும் சிந்தனைகளை உருவாக்குகிறது. இவை இரண்டும் உங்களுடைய உயிரியல் லேயர்கள். மூன்றாவது லேயர் தான் டிஜிட்டல் லேயர். அது கம்பியூட்டர்கள் மற்றும் மொபைல் போன்களில் உள்ள ஆப் மூலமாக உங்களுக்கு உதவும் டிஜிட்டல் லேயர்.

 

இத்தகைய அறிவாற்றல் சார்ந்த ஊக்கிகள் இல்லாமல் ஒரு மனிதனாக நீங்கள் மேலும் சக்தி வாய்ந்தவராக இருக்க முடியும். ஆனால், இந்த டிஜிட்டல் லேயருக்கும், உங்களது காரடெக்ஸ்-ற்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. மொபைல் போன்களின் வருகைக்கு பிறகு அது இன்னமும் அதிகரித்துவிட்டது. ஒரு கட்டைவிரலால் எவ்வளவு வேகத்தில் உங்களால் தேட முடியும்? ஒரு வினாடிக்கு 100 பிட்ஸ் அளவிற்கு என்று கூட வைத்துக் கொள்வோம்.

 

ஒரு கணினி, வினாடிக்கு டிரில்லியன் பிட்ஸ்-களை கடத்திக் காட்டும்! ஒரு கட்டத்தில் கணினிகள் அதிக அறிவாளிகளாக மாற்றமடையும். அப்போது நம்மிடம் அது பேசுவது ஒரு மரத்திடம் பேசுவதற்கு சமம். மரம் ஒரு வகையான பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடியதே. ஆனால் அது பேசுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அல்லது கேட்காது! அதனால் நாம் கணினிகளுக்கு புரியும் வகையில் பேச இடைவெளியை குறைக்க வேண்டும்.

 

கணினிகளுடன் நேரடியாக நரம்பியல் இடைமுகத்தை ஏற்படுத்திக் கொண்டால், இந்த இடைவெளியை குறைக்க முடியும். 1000 அல்லது 10,000 பிட்ஸ் கள் அளவிற்காவது முடியும் என்கிறேன். தற்போது சிந்தனை பல சிக்கலான அடுக்குகளில் இருந்து வார்த்தைகளாக குறைக்கப் பத்து, பின்பு அதனை மற்றொருவர் கிரகித்து தன் பதிலை சொல்லும் கெட்டாவி வரவைக்கும் முறைக்கு எதிராக நாம் மிக விரைவாக பல சுவாரசியமான விஷயங்களைப் பற்றி சிந்திக்க முடியும்.

 

இத்தகைய அழுகாச்சிப் பணிகளுக்கு நம் மூளையின் சக்தியை பயன்படுத்துவதை காட்டிலும், ஆழமான கருத்தாக்கங்களை சிந்திக்க பயன்படுத்தலாம். ஒரு நியூரா லிங்க்-ஐ வைத்து இரண்டு நபர்கள் டெலிபதி போன்ற ஒரு முறையில் மிகக் கடுமையான கருத்துக்களை அப்படியே மற்றொருவருக்கு கடத்தி பேசிக் கொள்ள முடியும். இது உரையாடலின் தரத்தையும் வேகத்தையும் மாதிரி அமைக்கும் திறன் கொண்டது! இது மட்டும் இல்லாமல் வேறு சில வெறித்தனமான செயல்களை செய்யலாம். மூளையின் ஒரு மூலையில் ஒரு பெட்டகத்தை உருவாக்கி, நீங்கள் இறப்பதாக இருந்தால், மற்றொரு மனிதராகவோ, ரோபாட் மனிதனாகவோ திரும்பி இந்த உலகிற்குள் நுழையலாம்.. நான் அப்போவே சொன்னேன்.. இதெல்லாம் பயித்தியக் காரத் தனமான சைன்ஸ் ஃபிக்ஷன் போல் இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்? நெளிவதிலேயே தெரிகிறது..

 

ஸ்ரீராம்: நிறுத்தாதீங்க.. அப்படியே போய்க் கிட்டே இருங்க.. ரொம்ப இண்டரெஸ்ட்டிங்-ஆ இருக்கு.

 

எலான் மஸ்க்: இல்ல.. நீங்களே உங்களுக்கு என்ன வேண்டும் என்று முடிவு செய்யலாம். ஒரு மனிதனாகவோ இல்லை ரோபாட்-ஆகவோ நீங்கள் இருக்கலாம். மாற்றத்தின் போது சிலவற்றை நீங்கள் இழக்கலாம். அதனால் நேற்று எப்படி தூக்கத்தில் இருந்து எழுந்தீர்களோ அது போலவே இன்றும் எழுந்திருப்பீர்கள் என்று அவசியம் இல்லை.

 

அல்லது போன மாசம் இருந்த ஸ்ரீராம் இப்போது சற்று மாறி இருப்பார் என்று சொல்லலாம். ஒரு சில இறந்த செல்களோடு உங்கள் மனைவியின் பிறந்த நாள் மறந்து போகலாம். அல்லது, ஒரு சில வீரியமான செல்களால், உங்கள் மனைவிக்கு நீங்கள் கூறிய முதல் கடுமையான சொல் திரும்ப நினைவுக்கு வரலாம்.

 

ஸ்ரீராம்: ஏன்? நான் நல்லா இருப்பது புடிக்கலையா?

 

எலான் மஸ்க்: நான் சொல்லவரும் பாயிண்ட், நீங்கள் நீங்களாகவே இருக்கப் போவதில்லை. ஒரு வீடியோ கேமில் நடுவில் பஸ் போட்டுவிட்டு மறுபடியும் விளையாட வருவதைப் போல. சில ஸ்கோரிங் பாயிண்ட்ஸ்-களை இழந்தாலும், நீங்கள் நீங்களாக இருக்க முடியும். இதனை சாதிக்க நீண்ட காலம் ஆகும். குறுகிய காலத்தில், நியூரா லிங்க்-ஐ வைத்து மூளை மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் காயங்களை சரி செய்வது அல்லது ஒரு சிப்பை உள்ளே செலுத்தி தேவையான உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துவது போன்ற முயற்சிகளை செய்யலாம்.

 

முதன் முதலாக நாங்கள் செய்யப் போவது ஒரு வகையான வயர்லஸ் பொறிக்கப் பட்ட சிப். இந்த சிப் பொறிக்கப் பட்ட மனிதர், தன்னுடைய சிந்தனையின் மூலமாகவே ஒரு கணினி, மவுஸ், மொபைல் போன் அல்லது வேறு ஏதாவது ஒரு டிவைஸ்-ஐ கட்டுப் படுத்த முடியும். இது வாழ்க்கையை மிகவும் எளிமைப் படுத்தக் கூடிய ஒரு செயல்.

 

இதன் மூல வடிவம் ஒன்று இருக்கிறது. உங்கள் தலைக்குள் இருந்து வெளியே வரும் ஒரு வயரை கூடவே சுமந்து கொண்டு செல்ல வேண்டும். அதை விட எளிதாக ஒரு யீவீtதீவீt வகை சிப்பை பொருத்தி அதில் இருந்து மூளைக்கு சிறு வயர்களை கொண்டு செல்வது தான் திட்டம்.

 

யாராவது fitbits, ஆப்பிள் கைக் கடிகாரம், மொபைல் போன், கணினி போன்ற எதிலாவது வடிவமைப்பு வேலையில் கை தேர்ந்தவற்காக இருந்தால், நிச்சயம் நியூரா லிங்க்-ல் உங்களுக்கு வேலை உள்ளது. இதில் எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்படப் போகின்றன என்று ஒரு மாதத்திற்குள் ஒரு வீடியோ வெளியீடுவோம்.

 

தன்னுடைய தலைக்குள் வயர்லஸ் இம்ப்லாண்ட கொண்ட ஒரு குரங்கு ஏற்கனவே வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறது. அது எந்த விதமான வெறுப்பையோ, வித்யாசமான உணர்வுகளையோ இது வரை வெளிப்படுத்தவில்லை. சந்தோஷமாகத் தான் இருக்கிறது. அந்த இம்ப்லாண்ட் எங்குள்ளது என்பதையே கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு கச்சிதாமாக பொருத்தப் பட்டுள்ளது. ஒரு தகவலுக்காக சொல்கிறேன். USDA வில் இருந்து எங்களுடைய குரங்குகளை ஆய்வு செய்ய வந்தவர்கள், இது வரை பார்த்ததிலேயே மிக நட்பாக பழகிய குரங்குகள் இவை தான் என்று கூறினார்கள்.

 

ஸ்ரீராம்: நல்லவேளை! அவற்றை நீங்கள் சைபர் பங்க் கேம் விளையாட பழக்கவில்லை.

 

எலான் மஸ்க்: ஓ, ஆமாம்..? முயற்சித்துப் பார்க்கலாமே! அவற்றிற்கு மிகவும் பிடித்துப் போகும். சும்மா சொன்னேன். நாங்கள் அவற்றை விளையாட வைக்க முயற்சிக்கும் கேம், mind pong. எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

ஆர்த்தி: நீங்கள் டெமோ விளையாடிக் காட்டிய ஒரு வீடியோ பார்த்தேன். ரொம்பவே அசத்தலாக இருந்தது.

 

எலான் மஸ்க்: பாத்தீங்களா! நன்றி. நியூரா லிங்க்-ல் எங்களுக்கு உருவாகி உள்ள குழு மிகவும் சவாலான ஒரு குழு. நல்ல முன்னேற்றத்தை சாதிக்கிறார்கள். நான் முன்பு கூறியது போல, நியூரா லிங்க்-ன் முதல் செயல்பாடுகள் மிகக் கடுமையான மூளைக் காயங்களுக்காக வடிவமைக்கப் பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் அந்த விளைவுகளின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருக்கும். கண்டிப்பாக இதில் சில ஆபத்துக்கள் உள்ளன. ஆனால் அவற்றை, ‘எதுவும் இல்லாததற்கு இது பரவாயில்லை. முயற்சிக்கலாம்’ என்கிற ரீதியில் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

 

இதற்குப் பிறகு இந்த முயற்சிக்கு சம்மதிக்கும் ஒருவரை எந்த அளவிற்கு குறைவான ஆபத்து இதில் உள்ளது என்பதை பற்றி முழுமையாக விளக்கி புரிய வைத்த பிறகு, இந்த இம்ப்லாண்ட்-ஐ வெளியே எடுக்க என்ன வழி என்கிற ஆய்வில் கவனம் செலுத்த வேண்டும். இதை எல்லாம் நாங்கள் ஏற்கனவே செய்து பார்த்திருக்கிறோம். யாராவது இந்த இம்ப்லாண்ட-ஐ எடுத்து விடுங்கள், வேலை செய்யவில்லை என்று யோசித்தால் அதற்கும் சாத்தியக் கூறுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். இது வரை, இது நன்றாக தான் வேலை செய்கிறது!

 

மார்க்: ஒரு மாற்றத்திற்காக மற்றொரு தலைப்பை பற்றி பேசுவோமா? குழந்தைகள் பற்றி.. எனக்கு ஒரு 5 வயது துடிப்பான குழந்தை உள்ளது. அவன் எல்லாவற்றையும் துழாவி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்பதில் ஆர்வமாக இருக்கிறான். தற்போது இருக்கும் தொழில்நுட்ப வசதிகளை வைத்தும், நமக்குத் தெரிந்ததை வைத்தும், ஒரு ஐந்து வயது பிள்ளைக்கு எப்படி கற்பிக்க வேண்டும்?

 

எலான் மஸ்க்: அதாவது, சிறந்த வழி என்ன என்று கேட்கிறீர்களா?

 

மார்க்: ஆம்! ஐந்து வயது பையனுக்கு கற்பித்தலில் தொடங்கி, அடுத்த 5 அல்லது 10 வருடங்களில் அவனுக்கு அடுத்தது என்ன என்று யோசிப்பது.. எந்த மாதிரியான ஒரு கல்விச் சூழலில் அவன் இருக்க வேண்டும்?

 

எலான் மஸ்க்: என்னுடைய குழந்தைகள் பெரும்பாலும் யூடியூப் மற்றும் reddit போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் தான் கற்றார்கள். தங்களுடைய சக நண்பர்கள் மற்றும் பள்ளிப் படிப்பு மூலமாகவும் தான். ஆனால், ஆன்லைன்-ல் அவர்கள் செலுத்தும் நேரம் அதிகம் என்பதால் அதுவே அதிக படிப்பினைக்குக் காரணம் என்பேன்.

 

படிப்பை பொறுத்த வரையில் எந்த அளவுக்கு சுவாரசியம் ஆக்குகிறோமோ அது சிறந்தது. ஒரு வீடியோ கேம் எப்படி ஒருவரை கட்டிப் போடுகிறதோ அது போல உருவாக்க வேண்டும். வீடியோ கேம்களில் குழந்தைகளை அதிக நாட்டத்துடன் இருக்கச் செய்ய தொழில்நுட்பத்தால் முடியும் என்றால், கல்வியிலும் அது சாத்தியம் தான்.

 

கல்வியில், ‘ஏன்’ என்கிற கேள்வி ரொம்ப முக்கியமானது. ஒன்றை சொல்லித் தருகிறோம். அதை ஏன் சொல்லித் தருகிறார்கள் என்று கற்பது முக்கியம். ஏன் இந்தக் கல்வி தற்காலத்திற்கு தேவை என்பதும் முக்கியம். நாம் தொடர்பில்லாத, பயன்படாத விஷயங்களை மறக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறோம்.

 

இது தேவையான ஒரு வடிவமைப்புத் தான். ஏனெனில், தேவையற்றதை எல்லாம் நினைவில் வைத்திருப்பது நம்முடைய எதிர்கால வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. தேவையை தெளிவாக வரையறுத்து விட்டால், அதனை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வது சுலபம். பிரச்சனைகளை தீர்க்கும் முறையில் கூட ஈர்க்கும் கதையாடலுடன் பேசினால் அதுவும் சுவாரசியமானது என்று தோன்றும். உதாரணத்திற்கு: ஒரு இஞ்ஜின் எப்படி வேலை செய்கிறது என்பதனை, அதை பிரித்து காட்டி மறுபடியும் வேலை செய்யும் அமைப்புக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக தேவைப் படும் உபகரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். ஸ்குரூ டிரைவர், ரெஞ்ச், அல்லென் கீ போன்ற பொருட்கள் தேவைப் படும். இதை எல்லாம் சொல்லும்போதுதான், நிஜ உலகின் பயன்பாடுகள் குறித்த புரிதல் ஏற்படும். இது ஸ்குரூ டிரைவரின் வடிவத்தை ஒரு கோர்ஸ் போல சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும் சிறப்பான முறை.

 

ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு, ‘இதனை சரி செய்ய எனக்கு என்னவெல்லாம் வேண்டும்?’ என்று கேள்வி எழுப்புவது மிகச் சரியான முறை.

 

மார்க்: உங்களிடம் பெரியதொரு திட்டம் இருந்தால், அதில் அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்க முடியும். அந்த தலைப்புகளை ஒரு திட்டத்திற்குள் கொண்டு வந்து, அற்புதமான ஒரு விளைவை ருசிக்க முடியும். என்ஜின்-ஐ பற்றிய தலைப்போடு சேர்த்து பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கினால், இதன் மூலம் ஒரு வாகனத்தையே உருவாக்கலாமே!

 

எலான் மஸ்க்: அதே தான்! உங்களிடம், ‘இதன் பயன்பாடு என்ன?’ என்பது குறித்த தீர்க்கமான திட்டம் நெறிமுறை இருந்தால், அதில் ஒரு கதையாடல் இருக்கும். அதில் இருந்து நூல் பிரித்தது போல பிற விஷயங்கள் குறித்தும் விளக்கலாம். இந்த என்ஜின் ஐ எப்படி நாம் மேம்படுத்துவது? என்ன செய்ய வேண்டும்? கணக்கீடு செய்து பார்க்கலாம். அது பெட்ரோல் எஞ்சினாக இருக்கும் பட்சத்தில் அதில் இருந்து அதிக RPM மற்றும் கம்ப்ரஷன் ரேஷியோவை பெறுவது எப்படி?

 

இவ்வாறு முன்னேறிச் செல்லலாம். நான் ஒப்பீட்டளவில் பழமையான ஒரு என்ஜின் ஐ பற்றி பேசுகிறேன். ஒரு மின் மோட்டாருக்கு அதிக விசை வெளியிட என்ன தேவை இருக்க முடியும்? அதில் இருந்து அதிக சக்தியை பெற என்ன செய்ய வேண்டும்? இந்த சூழலில் மாக்ஸ்வெல் சமன்பாடு எந்த அளவிற்கு பயன்படும் என்று அவர்களுக்கு படிப் படியாக சொல்லிக் கொடுக்க முடியும். (ஸ்காட்லாந்து கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளருமான ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (1831 – 1879), மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சோதனைகள், சமன்பாடுகள் போன்றவற்றை இணைத்து மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார். மொ-ர்)

 

மார்க்: நினைத்துப் பார்த்தாலே அந்த கல்விச் சூழல் அழகாக உள்ளது.

 

ஸ்ரீராம்: எலான், இன்று இந்த தலைப்பை பற்றி எத்தனை பேர் எங்களிடம் கேட்கச் சொல்லி செய்தி அனுப்பியுள்ளார்கள் என்று சொன்னால் நம்பவே மாட்டீர்கள். இரண்டு தொடர்புடைய கேள்விகளை அவர்கள் கேட்கிறார்கள். ஒரு குழந்தையை பல கலைகள் கற்றவராக உங்களை போல உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் கொடுக்கும் ஆலோசனை என்ன? இது முதல் கேள்வி… இங்கே நீங்கள் உருவாக்கி நிர்வகித்து வரும் கம்பெனிகளின் எண்ணிக்கையே கணக்கில் அடங்காதது. இந்த உலகத்தில் ஏன் உங்களை போல நிறைய எலான் மஸ்க்-கள் உருவாகவில்லை? இது இரண்டாம் கேள்வி..

 

எலான் மஸ்க்: எனக்கு தெரியவில்லை. இவ்விஷயத்தில் நான் மட்டுமே பெருமை பட முடியாது. என்னை பொறுத்த வரையில், நான் செய்தவை அனைத்தும், எனக்குள் இருந்த ஆழமான உளத் தூண்டுதலின் காரணத்தினால் செய்தேன். யாரும் என்னை செய்யச் சொல்லி வற்புறுத்தவில்லை.

 

என்னுடைய வாழ்க்கையில் பல காலங்கள் மிகவும் கடினமாக, வலி நிறைந்ததாக கடந்துள்ளன. நான் அனுபவித்ததை எல்லாம் எல்லோரும் அனுபவிக்க முன்வருவார்களா என்றால், சொல்ல முடியாது!

 

நான் செய்தவற்றை யாராவது என்னை போலவே செய்ய முற்படுவதானால், வேண்டாம். அது தவறான செய்கையாகி விடும். உள்ளுக்குள் இருந்து ஒரு வகையான வெறி பிடித்த அசுரத்தன்மை உங்களை வழி நடத்தி, நீங்கள் செய்ய நினைப்பதை செய்து முடியுங்கள். சிலர் என்னிடம் கேட்கிறார்கள்: ‘ஒரு புது கம்பெனியை தொடங்க தொழில் முனைவோருக்கு நீங்கள் உதிர்க்கும் உற்சாகமான வார்த்தைகள் என்ன?’

 

என்னுடைய பதில்: உற்சாகமான வார்த்தைகளை கேட்க வேண்டும் என்றால் ஒரு புதிய தொழிலைத் தொடங்காதீர்கள். என்னுடைய நண்பன் பில்லி தன்னுடைய புதிய தொழிலைத் தொடங்கும் போது, கண்ணாடித் துகள்களை தின்று கொண்டும், படுகுழியை நோக்கி பல காலம் பயணித்த படியும் இருந்தான். இதை அவனே என்னிடம் சொன்னான்.

 

ஸ்ரீராம்: சரி, மறுபடியும் நாம் வேறு தலைப்புக்குத் தாவ இருக்கிறோம். அதற்கு முன்பாக, சற்று முன்னர் இணைந்தவர்களுக்கு, ஒரு சிறிய வரவேற்பு. இது ஈடு இணையற்ற, எலான் மஸ்க், முதல் முறையாக கிளப் ஹவுஸ்-ல் பங்கெடுத்துக் கொள்கிறார்.

 

நிறைய பேர் இந்த அறைக்குள் தாவிக் குதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால், எங்களுடைய அறை நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. உள்ளே வர வாய்ப்புள்ளதா என்று பாருங்கள். நாங்கள் எலான்-உடன் நல்லதொரு உரையாடலில் மீண்டும் தொடர்கிறோம். நீங்கள் இதை பற்றி அடிக்கடி கிண்டல் அடித்தபடி இருக்கிறீர்கள். ஆனால் எனக்கு இந்த க்ரிப்டோ கரன்சி-யையும், பிட் காயினையும் பற்றிய உங்களது பதிலை கேட்க ஆவல்.

 

டிவிட்டரில் உங்களது பையோவை பிட் காயின் லோகோவாக மாற்றி, ‘பிட் காயின் திஸ் வீக்’ என்று நீங்கள் பதிவிட்டது ரொம்பவே பிரபலமாகப் பேசப் பட்டது. க்ரிப்டோ கரன்சியை பற்றிய உங்கள் பார்வை என்ன? ஒட்டுமொத்தமாக இந்த தலைப்பில் நீங்கள் பேச, நாங்கள் கேட்க ஆவலாய் உள்ளோம்.

 

எலான் மஸ்க்: இங்கு நான் பேசப் போவதை சற்று கவனமாக பேச வேண்டும். ஏனெனில் நான் சொல்வதில் சில அவர்களுடைய சந்தையை பாதிக்கக் கூடும்.

 

முதலாவதாக, என்னுடைய பல நண்பர்கள் என்னை பிட்காயின் வர்த்தகத்தில் ஈடுபட சம்மதிக்கச் வைக்க முயற்சித்திருக்கிறார்கள். என்னுடைய நண்பன் பில்லி, 2013 லேயே ஒரு பிட்காயின் லோகோ பொறித்த கேக் துண்டை என் வாயில் திணித்திருக்கிறான். எட்டு வருடங்களுக்கு முன்பே நான் பிட்காயின் வாங்கி இருக்க வேண்டும். அதில் நான் சற்று தாமதம் தான். மன்னிக்க.. சற்று ஆழ்ந்து சிந்தித்தால், பிட்காயின் ஒரு நல்ல விஷயம் தான் என்று எனக்கு தோன்றும். அதனால், நான் பிட்காயின்-ன் ஆதரவாளன் என்று வைத்துக் கொள்ளலாம். பாரம்பரிய வணிகம் சார்ந்து இயங்குபவர்கள் பிட் காயினை ஏற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். மற்ற க்ரிப்டோ கரன்சிகள் குறித்து எனக்கு நான் சொல்வதற்கு எதுவும் இல்லை.

 

நான் அடிக்கடி Dogecoin பற்றி கிண்டல் அடித்துக் கொண்டிருப்பேன். ஆனால் அவை வெறுமனே கிண்டலுக்காக மட்டுமே சொல்லப் பட்டவை. Dogecoin உருவாக்கப் பட்டதே க்ரிப்டோ கரன்சிகளைப் பற்றி கிண்டல் அடிக்கத்தான்.

 

முரண்பாடான விளைவுகள் தான் நாளைய உலகின் விருப்பத்திற்கு இனிய ஒரு விளைவாக கருதப் படும். அந்த வகையில் எதிர்காலத்தில் பூமியின் வர்த்தகத்தை Dogecoin என்கிற முரண்பாடான விளைவு தான் ஆளப் போகிறது என்று என் கண்களுக்கு புலப்படுகிறது.

 

ஸ்ரீராம்: கடவுளே! நீங்கள் எனக்கு இன்று மதியம் ட்வீட் செய்த போது, அதன் பதில்களை பார்த்தால், கணக்கில்லாத க்ரிப்டோ கரன்சி காயின்களாக வந்து கொட்டிக் கொண்டிருந்தது. உங்களுடைய அந்தக் காலப் பதில்களில் க்ரிப்டோ கரன்சி போட்களாக வந்து குவியும் நினைவில் இருக்கிறதா? அது ஒரு பயித்தியக்கார உலகம்! ரொம்பக் கஷ்டம்!

 

எலான் மஸ்க்: பிட்காயின் பற்றி ஒரு ஜோக் அடித்ததற்காக என்னுடைய அக்கவுண்ட்-ஐ லாக் செய்து விட்டார்கள்.

 

ஸ்ரீராம்: ஆமாம்! என்னுடைய பல நண்பர்களுக்கு பிளாக் செய்யப் பட்டது உண்மையில் நீங்கள் தான் என்று சொல்லி புரிய வைக்க வேண்டியிருந்தது. உங்களுடைய கம்பெனி விஷயத்திற்கு திரும்புவோம். வீட்டு வாசலில் ஒரு டெஸ்லா மாடல் எஸ் நின்று கொண்டிருக்கிறது. எங்கள் வீட்டின் 2 வயது குழந்தை உட்பட அனைவருக்கும் பிடித்தமான கார் அது. உங்களுடைய டெஸ்லா நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிய உங்கள் கூற்று என்ன? பேட்டரி தொழில்நுட்பம், தானியங்கி ஓட்டுதல் போன்றவற்றை பற்றிய விளக்கம் தேவை. இந்த இரண்டு விஷயங்களில் பலருக்கு அதிக ஆர்வம் உண்டு.

 

எலான் மஸ்க்: டெஸ்லா நிறுவனத்தில் எங்களுடைய இலக்கு தொடக்கத்தில் இருந்தே சுய சார்பு ஆற்றலைக் கொண்டு வருவதை நோக்கிய முனைப்புடன் இருந்து வந்திருக்கிறது. அதற்கு அவசியம் நாங்கள் நிறைய வாகனங்களை சந்தையில் இறக்கி விட வேண்டும். அவற்றை வாங்கும் விலைக்கு ஏற்றதாக சந்தை படுத்த வேண்டும். ஒரு ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் கார்களை விற்க வேண்டும். அதாவது 2 பில்லியன் கார்களையாவது நாங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே இலக்கு. பயன்பாட்டில் ஏற்கனவே இருக்கும் கார்களில் 1% த்தையாவது மாற்றியமைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்ததாக அர்த்தமில்லை. இந்த அடிப்படையில் தான் நாங்கள் 20 மில்லியன் கார்கள் என்கிற இலக்கை ஓராண்டுக்கு நிர்ணயித்தோம். சுய சார்பு எரிசக்தியின் புதையலை விரைவாகத் தோண்டி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது மிக முக்கியமானது. இந்த துறையில் சூரிய மின்சக்தி மற்றும் பேட்டரிகள் விரைவான முன்னேற்றத்தை அடைந்து வருவதை நாம் கண் கூடாக கண்டு வருகிறோம். எங்களுடைய இலக்கை அடைவதற்கு உள்ள முட்டுக் கட்டைகளில் ஒன்று, பேட்டரி செல் உற்பத்தி செய்வதில் உள்ள சுணக்கம்.

 

வெளியில் இருந்து வாங்கினாலும் போதுமானதாக இல்லை. அதனால் எங்களுடைய பேட்டரி-களை நாங்களே உருவாக்கப் போகிறோம். ஆனால் எங்களுக்கு ஏற்கனவே பேட்டரி விற்பனை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செய்ய இருக்கிறோம்.

 

LG, CATL போன்ற உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். எங்களுடைய வருடாந்திர வளர்ச்சி பன்மடங்காக பெருக வேண்டும் என்பாது எங்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

இந்த நோக்கத்தோடு கூடவே தானியங்கி கார்கள் வந்தால் அவ்வளவு தான்! தானியங்கி கார்களின் வருகையை ஒட்டி ஒரு காரினை பயன்படுத்தும் முறையில் பல மாற்றங்களை கொண்டு வரலாம். சராசரியாக ஒரு காரினை வாரத்திற்கு 12 மணி நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் அல்லது இரண்டு மணி ஒட்டினாலும் கூட சுமார் 12 மணி நேரம் தான் வாரத்திற்கு பயன்பாடு. ஒரு வாரத்தில் மொத்தம் 168 மணி நேரங்கள் உள்ளன. தானியங்கி கார்கள் விற்பனைக்கு வந்தால் இந்த பயன்பாட்டை ஐந்து மடங்காக, அதாவது 60 மணி நேரங்கள் என்கிற ரீதியில் உயர்த்த முடியும்.

 

ஒரு காரில் நீங்கள் பணத்தை செலவழிக்கும் போது, அதனை ஓரிடத்தில் நிற்க வைத்துச் செல்வதில் என்ன பயன் உள்ளது? அதன் பயன்பாடு ஐந்து மடங்கு அதிகரித்தால், குறைவான அளவில் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தினால் போதுமானது. பயன்பாடு அதிகமாகும் போது, கார்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். இதுவே இயற்கைக்கு மிகப் பெரிய நன்மை செய்வதாக அமையும். கார்களின் பயன்பாட்டு நேரம் மற்றும் தானியங்கி நேரத்தின் மீதான ஆய்வு தான் தற்காலத்தின் தேவை. பல முதலீட்டாளர்கள் டெஸ்லா அடைந்திருக்கும் வெற்றிக்கு அது தகுதியானது என்று கருதுகிறார்கள். எதிர்கால செயல்பாட்டிற்கு அவர்கள் எங்களை ஊக்கப் படுத்துகிறார்கள் என்பது ஒரு நல்ல விஷயமாக எனக்கு தோன்றுகிறது.

 

அதே போல, நான் முன்பு அழைப்பு விடுத்ததை ஒத்த மற்றொரு அழைப்பு இது. சாலை போக்குவரத்தில் நேரடி கிமி அனுபவம் பெற எந்த வல்லுனராவது விரும்பினால் உடனடியாக டெஸ்லா வின் தானியங்கிப் பைலட் அல்லது செ.நு. குழுமத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். டெஸ்லா வுக்கு இந்த உலகின் அதிநவீன செ.நு. துறையில் பெயர் உண்டு. மென்பொருள் மட்டுமல்ல.. வன்பொருள் சார்ந்தும் நாங்கள் இயங்குகிறோம். எங்களிடம் உள்ள inference கணினி, சந்தையில் உள்ள மற்றதை விட சிறந்தது. Dojo என்கிற பயிற்சி கணினி வகையை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையாக வடிவமைத்து காணொளி பயிற்சி தகவல் செயலாக்கத்திற்கு பயன்படுத்தும் வகையில் கொண்டு வர இருக்கிறோம். தானியங்கி கார்கள் மட்டும் வந்துவிட்டால், நிஜ உலகில் விபத்து காரணமாக ஏற்படும் மரணங்கள் மற்றும் தீவிரமான காயங்களை தவிர்க்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் பேர் கார் விபத்தில் உயிரிழக்கிறார்கள். பத்து மில்லியன் நபர்கள் அதி பயங்கர காயங்களால் முடங்கிப் போகிறார்கள்.

 

எந்த அளவிற்கு சீக்கிரமாக தானியங்கி கார்கள் வருகின்றனவோ அந்த அளவிற்கு உயிர்கள் காப்பாற்றப் படும். அவர்கள் வாழ்க்கையும் மேம்படும்.

 

ஸ்ரீராம்: எலான் அவர்களே! நீங்கள் LIDAR தொழில்நுட்பத்தை ஒரு காலத்தில் விமர்சித்து முக்கிய செய்திகளில் இடம் பிடித்தீர்கள். அந்த தொழில்நுட்பத்தை ரசிக்காததற்கு காரணம் சொல்ல முடியுமா?

 

எலான் மஸ்க்: ஒரு சில நேரங்களில் நான் பிறரை துன்புறுத்தும் வகையில் பேசி விடுகிறேன். தெரியும் அல்லவா?

 

ஸ்ரீராம்: அப்படி எல்லாம் இல்லை.

 

எலான் மஸ்க்: எனக்கு என்னைப் பற்றி தெரியும். அது அப்படித் தான். LIDAR தொழில்நுட்பத்திற்கு நான் அடிப்படையில் எதிரி அல்ல. Space x Dragon-ஐ உருவாக்கும் போது விண்வெளி நிலையத்துடன் தொடர்பு கொள்ள நாங்களே LIDAR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். அதனால் LIDAR ஐ நான் வெறுப்பதாக இருந்தால், இதை செய்திருக்கவே மாட்டோம். ஆனால், நிஜ உலகின் சாலைகளில் நீங்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்களாக இருக்க முடியாது. நிஜ உலகில் எதிரில் வரும் வாகனங்கள், அதன் அசைவுகள், அந்த பொருட்களின் செயல்பாடுகள், அவை வெளிப்படுத்தும் வெளிச்சம், அந்த வாகனங்கள் என்ன செய்ய இருக்கின்றன, எந்த திசை நோக்கி செல்லப் போகின்றன போன்றவை பற்றிய காட்சிப் புரிதல் இருக்க வேண்டும்.

 

நம் தலையில் இந்த பணிகளை செய்ய நரம்பியல் சார்ந்த இயக்கம் ஒன்று இருக்கிறது. அதே போன்ற ஒரு நரம்பியல் வலையை காரின் மூளைக்குள் இயக்க வேண்டும். செ.நு. மூலமாக நாங்கள் செய்திருப்பது, பார்வை குறைபாடு ஏற்படாத வண்ணம் இயக்க, நேராக கவனிக்க மூன்று, எதிரில் சாய்வாக கவனிக்க இரண்டு, பின் புறமாக சாய்ந்து நோக்க இரண்டு என மொத்தம் எட்டு கேமராக்களை பொருத்தி இருக்கிறோம்.

 

இந்த எட்டு கேமராக்களின் காட்சிகளை ஒன்றாக ஒத்திசைவுடன் காணொளிப் பயிற்சியின் மூலம் பகுப்பாய்ந்து அதன் அடிப்படையில் காரை இயக்குவது தான் தற்போது நாங்கள் செய்ய இருக்கும் முறை. இந்த எட்டு கேமராவை இயக்குவது உடலியல் ரீதியில் சாத்தியம் இல்லாத ஒன்று. ஏனெனில் உடலின் இரு கண்களும் ஒரே கண் போன்று இணைந்து வேலை செய்கின்றன. இதுவே ஒரு நரம்பியல் வலை அனைத்து காணொளிகளையும் பகுப்பாய்வு செய்து, சுற்றியுள்ள பொருட்களையும் பகுப்பாய்ந்து காரை இயக்கினால், அது ஒரு சூப்பர் மனிதனாகி விடும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது.

 

மனிதர்களுக்கு பின் மண்டையில் கண்கள் கிடையாது. மனிதர்களுக்கு எல்லா தேவைகளுக்கு ஒரே ஒரு கேமரா தான் உள்ளது. அதுவும் மிக மெதுவாக இயங்கக் கூடிய ஒரு தலைக்குள், அது பொருத்தப் பட்டுள்ளது. பல நேரங்களில் அது வெளிக் காரணிகளால் கவனச் சிதறலுக்கு உள்ளாக்கப் பட்டு, தூங்கி வழியும் ஒன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பை வைத்துக் கொண்டு தவறு மிகச் சாதாரணமாக நடக்கும் என்பதே யதார்த்தம். இதனை கேமராக்கள் பொருத்தப் பட்ட சூப்பர் ஹியூமன் தானியங்கி கார்கள் கொண்டு மாற்றியமைக்கலாம்.

 

தொழில்நுட்ப ரீதியில், activephoton generation முறையின் வழியில் பயணிக்க வேண்டும் என்றால், ராடர் வேவ் லெந்த் ஐ பயன்படுத்துவது முறையானதாக இருக்கும்.

 

ஸ்ரீராம்: இதெல்லாம் ஹை லெவல் தொழில்நுட்பம். நீங்கள் ரொம்பவே ஆழமாக இறங்கிவிட்டீர்கள். சற்று இளைப்பாற மற்றொரு பக்கத்தை புரட்டுவோம். இங்குள்ள பல பேருக்கு உங்களுடைய ஒரு நாள் எப்படி கழிகிறது என்பதை அறிய ஆவலாக இருக்கும். நீங்கள் ஒரு என்ஜீனியர் என்பதால், ஒரு திங்கட்கிழமை காலை எழுந்தவுடன், எலான் மஸ்க்-ன் வாழ்க்கை எப்படி தொடர்கிறது? என்பதை கொஞ்சம் சொல்லுங்கள்.

 

எலான் மஸ்க்: காலை எழுந்தவுடன் ஏதாவது அவசர வேலை இருக்கிறதா என்று மெசேஜ் மற்றும் மின்னஞ்சலில் பார்ப்பேன். சுவாரசியமில்லாத பணிகள் ஒன்று சேர்வது என்பது மிக ஆபத்தான ஒன்று. எப்போதும் செய்து கொண்டே இருக்க வேண்டிய பணிகளை செய்தே ஆக வேண்டும். இல்லை என்றால் எல்லாம் நாசமாகி விடும்.

 

ஆர்த்தி: நாங்கள் மட்டும் தான் சுவாரசியமில்லாத வேலைகளை அவசர கதியில் முடிக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால் அதையே தான் நீங்களும் செய்கிறீர்கள் என்று உங்கள் வாயால் கேட்கும் போது ஆசுவாசமாக இருக்கிறது.

 

எலான் மஸ்க்: இந்த காலத்தில் அப்படி தான் செய்ய வேண்டியுள்ளது. நேரடியாக பேசுவதை தான் நான் விரும்புகிறேன். ஈமெயில் அனுப்புவது.. அதற்கு பதில் அளிப்பது.. ஹோ! என்னை சாவடிக்கும் செயல் அது. அதற்கு மெசேஜ் அனுப்பி விடலாம். நேரடியாக எந்த வகையில் பார்த்தாலும் ஈமெயில்-ஐ காட்டிலும் சிறந்தது தான். அதனால் தான் நிறைய கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். ஒரு குழுவுக்கு ஒட்டு மொத்தமாக ஒரு விஷயத்தை செய்ய வலியுறுத்தவோ அல்லது அவர்கள் கருத்தை கேட்டகவோ ஈமெயில்-ஐ பயன்படுத்துவேன். மற்றபடி நேரடியாக பேசுவது தான் வாடிக்கை. என்னுடைய பெரும்பாலான கூட்டங்கள், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு சார்ந்ததாக இருக்கும். மற்றபடி, விற்பனை, வர்த்தகம் தொடர்பான அவசியமான நிறுவன இயக்கம் சார்ந்த கூட்டங்களிலும் கலந்து கொள்வேன்.

 

ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு அடிக்கடி தாவும் பழக்கம் கொண்டவன் நான். அதனால் தான் ஒருவர் எனக்கு மீம் அனுப்பினார், ‘பயம், மனிதனைக் கொல்வதில்லை. சூழலை மாற்றிக் கொண்டே போவது தான் மனிதனைக் கொன்று விடுகிறது’ என்று. நான் இந்த பழக்கத்தைக் குறைக்க முயற்சிக்கிறேன். ஒரு மணி நேரத்திற்கு ஒரு வேலை என்று கவனம் செலுத்த வேண்டும்.

 

Space x ல் இருந்து Tesla வின் பணிகளுக்கு தாவுவது மிகவும் கடினம். நான் நிர்வகிக்கும் நான்கு கம்பெனிகளின் பணிகள் ஒரு கணினியை திக்குமுக்காடச் செய்யும் அளவிற்கு இல்லை என்பது நல்ல விஷயம். இதைத் தாண்டி தனிப்பட்ட வேலைகள் உள்ளது.. மீம் போட வேண்டும்.. அதை மறந்து விடக் கூடாது பாருங்கள்.

 

ஸ்ரீராம்: மார்க்-இடம் சென்ற வருடம் நான் பேசும் போது, உன்னுடைய நேரத்தை எப்படி நீ செலவிடுகிறாய் என்று கேட்டேன். அவன் சொன்னான், சிறுவயதில் என்னுடைய காலண்டரில் பல பகுதிகள் வெறுமையாக இருக்கும் என்று. பல பெயரறிந்த தொழிலதிபர்கள் கூட இதே போன்று தங்களுடைய பணிக்கு நடுவில் இடைவெளிகளை விரும்புகிறார்கள். நீங்களோ தனித்துவமானவர். நீங்கள் நிர்வகிக்கும் கம்பெனிகளில் நிர்வாக இயக்குனராக இருப்பதைக் காட்டிலும் பணியில் ஈடுபடும் என்ஜினியராக அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள். எல்லா பணிகளுக்கும் 30 நிமிடங்களை அடுத்தடுத்து நீங்கள் ஒதுக்குகிறீர்களா? அல்லது, இடைவெளி விட்டு இயங்குகிறீர்களா?

 

எலான் மஸ்க்: நான் இடைவெளி விடுவதில்லை. பெரும்பாலும் அடுத்தடுத்த கூட்டங்கள் தான். நான் செய்வதெல்லாம் வெறிபிடித்த நாய் ஓடுவது போல. எத்தனை தெருக்களை கடந்து ஓடுகிறேன் என்று ஒரு நாள் கணக்கெடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பேன். யாரும் என்னை பின் தொடர்ந்து இப்படி செய்யக் கூடாது.

 

இந்த மாதிரி எத்தனை காலங்களுக்கு நான் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்ப்பேன். என்னுடைய மூளை வெடித்து விடக் கூடாது. நான் பங்குபெரும் கூட்டங்களில் பொழுதைக் கழிக்க முடியாது. அவை அனைத்துமே அவசியமானவை. நான் எங்காவது ஒரு வாரம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறேன். அப்போது தான் என் மூளை காலியாகும். சிலர் Tesla, Space x பற்றியெல்லாம் புத்தகம் எழுதுகிறார்கள். அவர்கள் என்றுமே என் நிலையில் இருந்து எழுத வாய்ப்பில்லை. நான் எத்தகைய தவறுகளை செய்துள்ளேன் என்றும், என் அனுபவங்கள் குறித்தும் அடுத்தவர்களுக்கு பயன்படும் வகையில் எழுத எத்தனிக்கிறேன்.

 

ஸ்ரீராம்: நீங்கள் இன்னமும் உங்களது தொழிற்சாலையின் தரையில் படுத்து உறங்குகிறீர்கள் என்று கேள்விப் பட்டேன்.

 

எலான் மஸ்க்: அதெல்லாம் ஏதாவது அவசர கால பிரச்சனை இருக்கும் போது தான். என்னுடைய டீம் அதிகமான வேலைப் பழுவில் இருக்கும் போது அவர்களுடன் நான் இருக்க வேண்டும் என்பதற்காக. நான்கு மணிக்கு தூங்கி, காலை எட்டு மணிக்கு எழும் போது அவர்கள் என்னை பார்த்தால், உண்மையில் நானும் அவர்களுடன் தான் இருக்கிறேன் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு வரும். அதோடு, நான் அந்த அளவிற்கு உழைக்கத் தயாராக இருக்கும் போது அவர்களும் முன்வருவார்கள்.

 

மார்க்: நீங்கள் முதன் முதலாக தொழிற்சாலையில் தூங்கினேன் என்று சொல்லும் போது, ஒரு நல்ல வசதியான ரூமில், பட்டு மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்திருப்பீர்கள் என்று எண்ணினேன். ஒரு முறை நான் நேரில் வந்து பார்த்த போது தான் தெரிந்தது, தொழிற்சாலைக்கு நடுவில், 15 மீட்டர் தொலைவில் இரும்பு அடிக்கும் கணீர், கணீர், சத்தத்திற்கு இடையில் நீங்கள் தூங்கும் ஆலோசனைக் கூடம் இருப்பதை கண்டேன். அங்கு எந்த வசதிகளும் இல்லை. ஒரே ஒரு படுக்கை விரிப்பு மட்டுமே இருந்தது. இதெல்லாம் கொடுமை!

 

எலான் மஸ்க்: ஆமாம்! சில நேரங்களில் கூடத்திற்கு உள்ளே தூங்கினால் யாருக்கும் நான் இருப்பது தெரியாது என்பதற்காக, வெளியே வந்து தரையில் படுத்து உறங்கி இருக்கிறேன். கடினமான செயல் தான். நம்பிக்கைக்கு உரியதை பார்த்தலில் நம்பிக்கை பிறக்கிறது என்பது பலருக்கு தெரியாது. அதை நான் தெரிந்து வைத்திருப்பதால் தான் வெளியே தூங்குகிறேன். என்னை பார்த்தால், அவர்கள் நம்பிக்கை பன்மடங்கு பெருகும்.

 

நான் தூக்கத்தில் இருந்து எழும் போதெல்லாம் என் உடம்பில் எண்ணெய் நாற்றம் அடிக்கும். ஆனால் வேறு வழி? மற்றவர்களை, தன் உயிர், உடல் முழுமையும் கொடுத்து உழைக்கச் சொல்லும் போது அதையே தானே நானும் செய்ய வேண்டும்?

 

ஸ்ரீராம்: இது உண்மையில் சுவாரசியம் கூட்டுகிறது. பொது மக்களின் கற்பனையில் ஒரு பணக்காரரின் வாழ்க்கை இப்படியானதாக வரையப் பட்டிருக்காது.

 

எலான் மஸ்க்: ஆம்! வெளியே இருப்பவர்களுக்கு தெரியாது. உள்ளே வேலை செய்பவர்களுக்கு தெரிகிறது. அது தான் முக்கியம்.

 

ஸ்ரீராம்: இந்த பகுதியை நான் மிகவும் ரசித்தேன். அடுத்த தலைப்பிற்கு மீண்டும் ஒரு முறை கடந்து செல்கிறேன். இந்த நான்கு கம்பெனிகளை நிர்வகிக்கும் நீங்கள் மாயா ஜாலமாக ஒரு நாளில் ஐந்து மணி நேரம் அதிகம் பெற்றால், மற்றொரு கம்பெனியை தொடங்குவீர்களா? அப்படியானால் அது என்ன கம்பெனி?

 

எலான் மஸ்க்: ஏங்க நீங்க வேற! இன்னொன்றை தொடங்க நிச்சயமாக நினைக்க மாட்டேன். மண்டை வெடித்துவிடும்.

 

ஒரு பேச்சுக்கு கேட்டீர்கள் என்றால், சுரங்கங்கள் அமைப்பதில் பல வாய்ப்புகள் இன்னும் பயன்படுத்தப் படாமல் உள்ளன என்று நினைக்கிறேன். அடுத்த ஐந்து வருடங்களில் இந்த துறையில் தான் அதிக வாய்ப்பு உள்ளது என்று சொல்வேன். லாஸ் என்ஜல்ஸ் நகரத்தில் நாங்கள் ஒரு சோதனை முயற்சி செய்ய ஒரு சுரங்கம் அமைத்து தான் விளையாட்டாக Boring Company யைத் தொடங்கினோம். அப்போது யாரும் எங்களை நம்பவில்லை.

 

பின்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கூடிய ஒரு சுரங்கத்தை வேகஸ் நகரில் அமைத்தோம். இந்த உலகிற்கு நிறைய சுரங்கங்கள் தேவை. போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக் கூடிய சுரங்கங்கள், அவர்களின் போக்குவரத்தை சுலபம் ஆக்குகின்றன. இந்த வாய்ப்பை நீண்ட தூரப் பயணங்களுக்கு விரிவாக்கம் செய்யும் போது, வெற்றிடத் (vaccum) தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால் ஒரு அதிவேக ரயில் மற்றும் விமானத்தை விட விரைவாக பயணிக்க முடியும்.

 

அதனால், வேறு யாராவது மும்முரமாக இருந்தால், ஒரு சுரங்க கம்பெனியை தொடங்க ஆலோசனை கூறுகிறேன். அதன் பிறகு மருத்துவத்தில் நவீனமயத்தை கொண்டு வருவதை பற்றி சிந்திக்க வேண்டும். RNA MRNA எனும் சிந்தடிக் வைரஸ்களை biointech மற்றும் moderna தடுப்பூசிகளுடன்இணைத்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இதையெல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக் கொல்வதில்லை.

 

RNA அல்லது DNA சூழலை ஒரு ப்ரோக்ராம் போல உருவாக்கி, ஒரு நீர்ம மாத்திரையில் நுழைத்தால் அது உங்களை எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும். இது தான் மருத்துவத்தின் எதிர்காலம்.

 

உங்களுடைய செல்கள் ஒரு உயிரியல் கணினிகள் போல. அவை பழங்கால கணினிகள் போல, அதன் உள்ளே செலுத்தப் படும் பஞ்ச் கார்ட் அல்லது டேப் என்ன சொல்கிறதோ அதை உள்வாங்கிக் கொண்டு செய்யும். இதன் மூலம் ஒரு மனிதரை எப்படி பட்டாம்பூச்சியை போல பறக்க வைக்க முடியும் என்று கூட நீங்கள் அறிந்து கொள்ளலாம். சென்ற வருடத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது தான். RNA வின் பயன்பாட்டை முழுமையாக அறிந்து கொண்ட பிறகு, அதனை ஒரு மைக்ரோ பேப்ரிகேஷனாக டெஸ்லா நிறுவனம் உருவாக்கியது. இதனை மற்ற கம்பெனிகளுக்கு உருவாக்கித் தரவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 

ஸ்ரீராம்: இருங்க.. இருங்க.. எனக்கு புரியவில்லை. எதற்காக டெஸ்லா நிறுவனம் RNA பேப்ரிகேஷனை உருவாக்க வேண்டும்?

 

எலான் மஸ்க்: சும்மா செஞ்சு பார்த்தோம். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எங்களுக்கு க்ரோமன் என்கிற பெயரில் இருந்த ஒரு ஜெர்மன் கம்பெனியிடம் இருந்து ஒரு உதவி தேவைப் பட்டது. அவர்கள் ஆட்டோமேஷன் துறையில் திறமையானவர்கள். அவர்களை எங்கள் குழுமத்தில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கும் போது, “நாங்கள் உங்களோடு இணைய தயார். ஆனால், ஏற்கனவே நாங்கள் ஒரு சில பிராஜக்ட்-களில் வேலை செய்து வருகிறோம். அவை ஆட்டோமோடிவ் தொடர்புடையவை அல்ல. ஆனாலும் அவற்றை செய்து முடித்து கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார்கள்.

 

அத்தகைய இரண்டு பிராஜக்ட்களின் ஒன்று இந்த பையோ டெக் சார்ந்த விஷயம். அந்த பிராஜக்ட்-ல், DNA RNA மற்றும் அதனை மூடும் ஒரு குப்பி போன்ற வடிவமைப்பை செய்து பார்த்தோம். இந்த வடிவம் தன்னை பெருக்கிக் கொண்டே போகும் போது நமக்கு பயன்படக் கூடிய ஒரு வடிவம் கிடைக்கும்.

 

ஸ்ரீராம்: ஒரு RNA பேப்ரிகேஷன் பணியில் நீங்கள் தடுக்கி விழுந்த கதை கேட்டு மிகவும் வியப்பாக இருக்கிறது. நவீன தடுப்பூசிகளில் MRNA வின் முக்கியத்துவம் குறித்து நீங்கள் பேசி வந்திருக்கிறீர்கள். தடுப்பூசிகளை பற்றி பேசும் போது கோவிட் பற்றி பேசாமல் இருக்க முடியாது. உங்களுடைய மாய உலகில் நீங்கள் தான் தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன செய்து அதனை சரியான முறையில் கொண்டு சேர்ப்பீர்கள்?

 

ஆர்த்தி: தற்போது பொருட்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வேலையில் உலக நாடுகள் சரியாக செயல்படுவதாக தெரியவில்லை. இந்த விஷயத்தில் வித்யாசமாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறோம்.

 

எலான் மஸ்க்: இன்றைய நிலை குறித்து எனக்கு சரியான பார்வை கிடையாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். யாருக்கு தேவை இருக்கிறதோ அவர்களுக்கு சுலபமாக கொண்டு சேர்க்க வேண்டும். வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சில் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள், ஆகிய அனைவருக்கும் தர வேண்டும். அவ்வாறு இல்லை என்றாலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் கொடுக்க வேண்டும். CVS மற்றும் Walgreens ல் Flu வுக்கு ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி கொடுப்பதை போல, இந்த இடத்திற்கு வந்தால் போதும். தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்க வேண்டும். Moderna மற்றும் biotech தடுப்பூசிகள் வெப்ப நிலை உணர் திறன் கொண்டவை. அவற்றை பனி நீக்கி, உடனடியாக பயன்படுத்தி விட வேண்டும். இல்லை என்றால் அவற்றின் செயல்திறன் குறைந்து விடும்.

 

இவர்கள் பயன்படுத்தும் RNA சூழல் உருமாறிக் கொண்டே இருக்கும். அவை ஒரே நிலையில் என்றும் இருக்காது. அவற்றை மிகக் குறைவான வெப்பநிலையில் உரைய வைக்க வேண்டும். இல்லை என்றால் அவை உருமாறிவிடும்.

 

எனக்கு புரிந்த அளவில் இது போலத் தான் நிகழ்கின்றது. சரியான நபருக்கு போய் சேர வேண்டும் என்று கவலைப் படுவதை விட, யாருக்கு தேவையோ அவருக்கு கிடைக்கும்; அத்தியாவசியமான நபர்களுக்கும் நம்மால் தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடியும் என்று நம்பிக்கை வரும். மற்ற விஷயங்கள் குறித்து கவலைப் படத் தேவையில்லை.

 

எத்தனை பேருக்கு கொண்டு சேர்க்க முடியுமோ அதை விரைவாக செய்ய வேண்டும். இரண்டாவது டோஸ் போடவில்லை என்கிற கவலை கூட அடுத்தது. முதல் டோஸ் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்க வேண்டும்.

 

முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களது எண்ணிக்கை குறிப்பிடத் தக்கதாக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த டோஸ் மூன்று அல்லது நான்கு வாரங்களில் கொடுக்கப் பட இருக்கிறது. நமக்கு இரண்டாம் டோஸ்-ஐ பற்றி சிந்திக்க நிறைய நேரம் இருக்கிறது. அதனால் முதல் டோஸ்-ஐ பற்றி மட்டும் சிந்தித்து, முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ‘அய்யோ! அவருக்கு தடுப்பூசி அவசரம் இல்லையே. எதற்காக அவருக்கு போட்டு ஒரு ஊசியை விரயம் செய்தாய்?’ என்று யாரையும் கோபித்துக் கொள்ள வேண்டாம்.

 

இது தான் என்னுடைய ஆலோசனை. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படப் போகிறதென்ற பயம் எல்லாம் தேவையற்றது. குவியல் குவியலாக நமக்கு தடுப்பூசிகள் வர இருக்கின்றன. அமெரிக்கா மட்டுமே 900 மில்லியன் டோஸ்களை ஆர்டர் செய்திருப்பதாக கேள்விப் படுகிறேன். இத்தனை தடுப்பூசிகள் கிடைக்கும் போது அதனை எல்லோருக்கும் இலவசமாக உணவுப் பொட்டலங்கள் தூக்கி எறிவதை போல விநியோகிக்க தொடங்குவார்கள்.

 

ஜான்சன் ஜான்சன் கம்பெனியின் தடுப்பூசிக்கு சமீபத்தில் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். ஆனால் அது ஒரே ஒரு முறை மட்டுமே போடப் படுவது. அறை வெப்பநிலையில் வைக்கக் கூடியது. இதையும் சேர்த்து பல தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க முனைகிறார்கள்.

 

எனக்கு எப்படி தெரியும் என்றால், எனக்கு டெஸ்லாவை தெரியும். அது எண்ணற்ற தடுப்பூசிகளை அதி விரைவில் உருவாக்க வல்லது. அதனால் தடுப்பூசிகளை பற்றி கவலைப் படுபவர்களுக்கு பன்மடங்காக அதன் எண்ணிக்கை அதிகரிக்கப் போவது உறுதி என்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன். அதோடு கூடி, நமக்கு கூட்டு எதிர்ப்பு சக்தி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். நம்மில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதில் இருந்து மீண்டு இருக்கிறோம். அவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை காட்டிலும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும். இது போல பல சாதகமான பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். முடிவாக ஒரு நம்பிக்கைக்குறிய அறிகுறி, நமக்கு அதிக அளவில் தடுப்பூசி கிடைக்கிறது; அதனால் அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். நான் தடுப்பூசிகளுக்கு எதிரி அல்ல. அதில் தெளிவு படுத்தி விடுகிறேன். தடுப்பூசிக்கு ஆதரவாளன் நான்!

 

மார்க்: தடுப்பூசியை பொறுத்த வரையில், விரைவாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மாநிலங்களில் கலிபோர்னியா 45 ல் இருந்து 50 ஆவது இடத்திற்கு இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மை மறுபடியும், மறுபடியும் எழும் ஒரு கேள்வியை உங்களிடமும் கேட்கத் தூண்டுகிறது. நீங்களும், நானும், இங்கு கவனித்துக் கொண்டிருக்கும் பலரும் நம்முடைய கம்பெனிகளை கலிபோர்னியாவில் தான் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்கிற ரீதியில், இந்த மாநிலத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகிறது?

 

எலான் மஸ்க்: தொடக்கத்திலேயே சொல்லி வைக்கிறேன். எனக்கு கலிபோர்னியாவை ரொம்பவே பிடிக்கும். என் வாழ்க்கையில் பாதிக்கும் மேலான வாழ்க்கையை கலிபோர்னியாவில் தான் வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய கம்பெனிகளையும் இங்கு தான் உருவாக்கி இருக்கிறேன். எனர்ஜி ஸ்டோரேஜ் தொழில்நுட்பம் பயில கோடை பயிற்சிக்கு நான்கு சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு வந்திருந்தேன். 92 ல் இருக்கும் என்று நினைக்கிறேன். 92-93 ல் பினாக்கில் ரிசர்ச் என்கிற ஒரு சிறிய கம்பெனி இருந்தது. சிலிக்கான் பள்ளத் தாக்கிற்கு முடிந்த அளவு விரைவாக வந்து சேர்ந்தேன். பின்பு ஸ்டேன் போர்டில் மின்சார வாகனங்களுக்காக அதிநவீன கெப்பாசிட்டர் தயாரிப்பு பற்றிய படிப்பில் என்னை நானே ஈடுபடுத்திக் கொண்டேன். பின்பு அதனை வலைதளம் குறித்த படிப்பிற்காக இடையில் கைவிட வேண்டியதாக போனது.

 

நெட் ஸ்கேப்-ல் கூட வேலையில் அமர முயற்சித்திருக்கிறேன். அங்கு நான் மேற்கொண்ட முயற்சியை பற்றி ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாது. ஆனால் வலை தளம் தான் எதிர்காலம் என்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன். அது வரை மனிதர்கள் குகை மாந்தர்களை போல தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். வலை தளம் மனிதர்களுக்கு புதிய நரம்பு மண்டலம் போல செயல்பட்டது. அதன் பின்னால் அவர்கள் மார்வெல் சூப்பர் ஹீரோக்களாக மாறிப் போனார்கள். அதனால் தான் அன்றே நான் அதிநவீன கெப்பாசிடர்கள் பற்றிய மேற்படிப்பால் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது என்று அதனை இடை நிறுத்தினேன்.

 

அதை விட, இன்டர்நெட் உருவாக்கத்தில் நான் பங்கெடுத்தால் அது உருவாவதை என் கண் முன்னால் கண்டு ரசிக்க முடியும். அதோடு, ஒரு பி.எச்.டி செய்ததற்கு சமமாக அறிவு வளரும். அப்போது அந்த கம்பெனி மட்டுமே வலைதளம் உருவாக்கிக் கொண்டிருந்தது. என்னுடைய ரெஸ்யூம்-ஐ போட்டுவிட்டு பதிலுக்காக காத்திருந்தேன்.

 

அதன் பின்னால் அந்த கம்பெனியின் லாபியில் காத்திருந்தேன். ஆனால் யாரிடமும் பேசும் தைரியம் வரவில்லை. என்னடா நீ கோமாளி போல வாசலில் காத்திருக்கிறாய் என்று சுய எள்ளல் செய்து கொண்டே, நானே ஒரு சாப்ட்வேர் எழுதிக் கொண்டிருந்தேன். என்னவோ நானே அந்த சாப்ட்வேரை எவர் உதவியும் இல்லாமல் எழுதி வெளியிட்டு விடலாம் என்கிற மிதப்பில்..

 

உங்களுக்கு தெரியுமா? வலை தளத்தில் முதல் மேப் மற்றும் வழிகாட்டி சாப்ட்வேர்களை நான் தான் எழுதினேன். எத்தனை பேருக்கு இது தெரியும் என்று எனக்குத் தெரியாது. எல்லோ பக்கங்கள், வெள்ளை பக்கங்கள் போன்றவற்றையும் நானே தனியாளாக என்னுடைய கணினியில் உட்கார்ந்து எழுதினேன். எங்களுடைய முதல் கம்பெனியை தொடங்கிய போது ஒரே ஒரு கணினி தான் இருந்தது. அதனால் இரவில் நான் கோடிங் செய்ய பகல் நேரங்களில் மட்டும் தான் வெப்சைட் மற்றும் சர்வர் வேலை செய்தது. அதெல்லாம் ஒரு கனாக் காலம்!

 

மார்க்: அடுத்த முறை நீங்கள் என்னுடைய கம்பெனிகளில் ஒன்றை தேர்வு செய்து கோடை பயிற்சிக்காக வந்தால், உடனடியாக கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!

 

எலான் மஸ்க்: ஐ! ஜாலி..

 

ஸ்ரீராம்: பார்த்துக் கொண்டிருக்கும் ஜனரஞ்சக ரசிகர்களுக்காக சில துண்டுச் செய்தி கேள்விகளை கேட்கிறேன். டிவி பார்க்கிறீர்களா? என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 

எலான் மஸ்க்: ‘தி லாஸ்ட் கிங்டம்’ பார்த்து முடித்தேன். நல்ல வரலாற்று ஆவணம் சார்ந்த படம். கோப்ரா கை என்கிற படம் பார்த்தேன். கத்தியை சூழற்றிக் கொண்டே இருந்தார்கள். வளர்ந்தவர்களுக்கு அவ்வளவாக அது பிடிக்காது.

 

மார்க்: எப்படி இருந்தது?

 

எலான் மஸ்க்: அதை தொடர்ந்து பார்க்க வேண்டும். நீர் பற்றாக்குறை ஏற்படுவது போல அதில் காட்டப் பட்ட போது, இதில் எந்த விதமான அறிவியல் பின்புலமும் இல்லை என்று தோன்றியது. கதை விடாதீங்கடா என்று நினைத்துக் கொண்டே நிறுத்தி விட்டேன். நீங்கள் அதை பற்றி கேட்பதை பார்த்தால் தொடர்ந்து பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

 

மார்க்: கிரகங்களுக்கு இடையிலான பயணம், நிஜமான அண்ட வெளி குறித்தெல்லாம் இம்மி பிசகாமல் படம் எடுத்தால் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். பூமி, மார்ஸ் மற்றும் சிறுகோள் என மூன்று முனை விண்வெளிப் போர் குறித்தெல்லாம் எதிர்காலத்தில் பதிவு செய்யப் படவேண்டும்.

 

எலான் மஸ்க்: நன்றாக தான் இருக்கும். மனித சமுதாயம் அங்கு போய் சேர்ந்தது பற்றிய பதிவாக இருக்கும் அல்லவா?

 

மார்க்: அடடே! ‘Devs’ ஐ பார்த்தீர்களா என்று கேட்க மறந்து விட்டேன். அது நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது தான். ஆனால் அதை நீங்கள் ரசிப்பீர்கள்.

 

ஸ்ரீராம்: சரி சரி.. வெட்டிக் கதை போதும். உங்கள் நேரத்தை நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. கிளப் ஹவுஸ்-ல் தற்போது 12 அறைகளுக்கு மேல் நிரம்பிவிட்டது. பல டிவிட்டர் திரெட்கள் வேறு வந்தவண்ணம் இருக்கின்றன. நீங்கள் இங்குள்ள பார்வையாளர்களை மிகவும் உற்சாகப் படுத்தி விட்டீர்கள். நியூரா லிங்க் மற்றும் டெஸ்லாவில் பணிக்கு சேர அழைப்பு விடுத்தீர்கள். அதோடு, இங்குள்ள பார்வையாளர்களுக்கு ஏதேனும் சொல்ல நினைக்கிறீர்களா?

 

எலான் மஸ்க்: கேம் ஸ்டாப் வீடியோ கேம் கம்பெனியில் நடந்த உண்மை சம்பவத்தை ராபின் ஹூட்-ல் இருந்து வந்திருக்கும் விளாட் சொல்ல கேட்க விருப்பமா?

 

ஸ்ரீராம்: நிச்சயமாக!

 

எலான் மஸ்க்: அவரை எந்த பட்டன் அழுத்தி பேச வைக்க வேண்டும் என்று பாருங்கள்.

 

ஸ்ரீராம்: சரி. நான் பார்க்கிறேன்.

 

ஆர்த்தி: அதை அவர் பார்க்கட்டும். நீங்கள் “Hitchhiker’s guide to the galaxy”, பற்றி தொடக்கத்தில் கூறினீர்களே! அதை பற்றி கொஞ்சம் பேசுங்கள்.

 

எலான் மஸ்க்: ஆம்! அது ஒரு மனவியல் மற்றும் தத்துவார்த்தம் சார்ந்த புத்தகம். ஆனால் அதை பலர் காமெடி புத்தகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை ‘இது ஒரு சுவாரசியமான புத்தகம்’ என்கிற நிலைப்பாட்டில் இருந்து படிக்க வேண்டும். அந்த இடத்தில் இருந்து காணும் போது உங்களை சிந்திக்க வைக்கும். நான் முன்பு சொன்னது போல, பதிலை சுலபத்தில் பெற வேண்டும் என்றால் கேள்வியை சரியாக எழுப்ப வேண்டும். ஒரு கப்பல் எல்லையில்லாத நிச்சயமற்ற தன்மையால் கடலில் உந்தப் படுகிறது. அதனை தங்கத்தின் இதயம் போல என்பார்கள். புத்தகத்தை எழுதியவர், அதிகாரத்துவத்தையும் கிண்டல் அடித்திருப்பார். அந்தக் கதையில் இந்த பூமியே ஒரு சிறிய தவறால் தான் அழிந்து போகிறது என்று காட்டியிருப்பார். நட்சத்திரங்களின் ஊடாக ஒரு பயணம் மேற்கொள்வது; அதற்கு நடுவில் பூமி உள்ளது. இந்த பயணத்தை மேற்கொள்ள பூமி அழிய வேண்டும். இதை நோக்கமாக கொண்ட ஒரு ஏலியன் குழு இருக்கும். அவர்களது நோட்டீஸ் போர்ட்-ல் பூமியில் இருந்து வந்த எவரும் இந்த பயணத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று எழுதியிருக்கும். இந்த விஷயம் பூமியில் உள்ள சிலருக்கு பிடிக்காததை கண்டு அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. நாங்கள் தான் நோட்டீஸ் போர்டில் எழுதி வைத்து விட்டோமே என்பார்கள். என்ன? நோட்டீஸ் போர்ட்-ஆ என்று பூமியில் உள்ளவர்கள் புரியாமல் கேட்பார்கள். இப்படி, டெக்லஸ் சான்டர் எழுதியவை அனைத்தும் புதுமையானவை. அந்தக் கதையில் வரும் கற்பனையான பாபெல் மீன் வகையை ஒருவர் காதுக்குள் உட்புகுத்தினால், அது தானாக மொழியாக்கம் செய்து சொல்லும். இந்த தொழில்நுட்பம் நம்மிடம் இப்போது உள்ளது! எதிர்காலம் வெகு தொலைவில் இல்லை..

 

ஸ்ரீராம்: எலான்.. ரெடி. விளாட் அவர்களே உங்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா?

 

விளாட்: ஆம்! என்னை பேச அழைத்ததற்கு நன்றி நண்பர்களே. உங்களோடு இணைத்து இந்த கிளப் ஹவுஸ் உரையாடலில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.

 

எலான் மஸ்க்: விளாட்.. உங்கள் கம்பெனியில் என்ன நடந்தது? உள் விஷயங்கள் குறித்து எங்களுக்கு சில தகவல் தாருங்கள்.

 

விளாட்: இந்த Fermi paradox சிக்கல் குறித்து பேசத் தான் நீங்கள் அழைத்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இந்த வாரம், ஒரு நம்ப முடியாத வாரமாக இருந்தது. நல்ல விஷயம் என்னவென்றால், பலர் எங்களுடைய கம்பெனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், அறிவுரை வழங்கிய படியும் இருக்கிறார்கள். இரண்டு நாட்கள் முன்பு தான், நான் கிளப் ஹவுஸ்-ஐ எதேச்சையாக பதிவிறக்கம் செய்தேன். இது என்ன என்று தெரிந்து கொண்டதே இரண்டு நாட்கள் முன்பு தான். அதனால் இதை பயன்படுத்துவது எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது. அன்டோனியோ என்கிற நண்பர் தான் எனக்கு சில அறிவுரைகள் கூறி உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

சிமுலேஷன் ஹைபோதீஸிஸ்-ல் சமீபத்தில் நான் ஆர்வம் கொண்டு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்த கிளப் ஹவுஸ் கூட்டம் பற்றி கேள்விப் பட்டு, இதில் கலந்து கொண்டால் என்ன? என்று யோசித்ததன் விளைவு தான் இங்கு உங்கள் முன்னால் நிற்க்கிறேன்.

 

எலான் மஸ்க்: ரொம்பவே உற்சாகமான வரவு தான்! போன வாரம் என்ன நடந்தது? ஏன் உங்கள் கம்பெனியான கேம்ஸ்டாப்-ன் ஷேர்களை மற்றவர்கள் வாங்க முடியாத நிலை உருவானது? இதை பற்றி எல்லோருக்கும் சொல்வது உங்களது கடமை. உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

 

விளாட்: ஆம்! அது தான் சரி. பின்னணியை பற்றி கொஞ்சம் சொல்லிப் புரிய வைக்க முயற்சிக்கிறேன். ராபின்ஹூட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நான்.

 

உண்மையில் இரண்டு கம்பெனிகளுக்கு நான் தான் தலைமை நிர்வாகி. ராபின்ஹூட் பினான்ஷியல் என்கிற முதலீட்டார்கள் ப்ரோக்கர் ஆப்-ஐ நாங்கள் வைத்திருக்கிறோம். நீங்கள் இந்த திட்டத்தின் வாடிக்கையாளர் என்றால் உங்கள் வர்த்தகத்தை இந்த ஆப் தான் நிர்வாகம் செய்யும். அதே போல ராபின்ஹூட் செக்யூரிட்டி என்கிற ஆப், உங்கள் வர்த்தகத்தை முடித்து வைக்க பயன்படும். இது இல்லாமல், ராபின்ஹூட் க்ரிப்டோ தொழில் செயல்பாடு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

இவை அனைத்தும் வித்யாசமான பல செயல்பாடுகளை உள்ளடக்கியவை. அவற்றை வித்யாசமாக தான் நிர்வகிக்க முடியும். புதன்கிழமை எதிர்பாராத விதமாக மிக அதிகமானவர்கள் இவற்றை பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். மீம் ஸ்டாக்குகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனவுடன் ராபின்ஹூட்-ஐ நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் ராபின்ஹூட் தான் iOS ஆப் ஸ்டோரிலும் கூகுள் பிளேவிலும் முதல் இடத்தில் இருந்தது.

 

வியாழக்கிழமை காலை 3:30 மணி இருக்கும். எங்களுடைய குழுமத்திற்கு தேசிய செக்யூரிட்டி க்ளியரிங் கார்ப்பரேஷன்-ல் இருந்து ஒரு செய்தி வருகிறது. அந்த கார்ப்பரேஷன்-க்கு நாங்கள் க்ளியரன்ஸ் ப்ரோக்கர் என்பதால் அதற்கு நாங்கள் ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணம் அனுப்பி வைக்க வேண்டும். இதில் வர்த்தக செயல்பாட்டில் ஒரு சில செக்யூரிட்டிகளின் மேல் அதிக நாட்டம் இருந்தால் அந்த நிலையாற்ற தன்மையை உள்ளடக்கி செய்வோம். இது அடிப்படையில் ஒரு ஈக்விட்டி தொடர்பான தொழில். இது ஸ்டாக் வர்த்தகம் தொடர்பானது.

 

அன்று என்ன நடந்தது என்றால், திடீர் என்று அவர்கள் 3 பில்லியன் டாலர்கள் கேட்டு ஒரு செய்தி அனுப்பி இருந்தார்கள். அது பொதுவாக கேட்கப் படும் தொகையை விட மிக அதிகம்!

 

எலான் மஸ்க்: இது மிக அதிகமாக தெரிகிறதே! இதை கணக்கிடுவதற்கு அவர்கள் பயன்படுத்திய பார்முலா என்ன?

 

விளாட்: வெஞ்சர் கேபிடலில் ராபின் ஹூட் அதுவரை இரண்டு பில்லியன் அளவிற்கு தான் ஈட்டியிருந்தது. அதனால் இந்த 3 பில்லியன் தொகை மிகவும் அதிகமாக தெரிந்தது.

 

ஃபார்முலா குறித்த முழுமையான தகவல் எங்களிடம் இல்லை. ஆனால் அது VAR என்கிற தெளிவற்ற ஒரு குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ஃபார்முலா. இதனை வெளிப்படையாக அவர்கள் சொல்வதில்லை. ஆனால் அதனை திருத்தி எழுதிய முடியும். ஆனால் அதனை செய்வது எப்படி என்று எல்லோருக்கும் தெரியும் வகையில் விளக்குவதில்லை. அவர்கள் விருப்பமாக உள்ளீடு செய்யப் படும் ஒரு குறியீடும் இதில் அடங்கியுள்ளது. அதுவும் இந்தத் தொகையை மேலும் அதிகப் படுத்திக் காட்டுகிறது.

 

எலான் மஸ்க்: அடிப்படையில் அது அவர்கள் விருப்பம் என்றால், அது அவர்களது விருப்பம் மட்டுமேவா?

 

விளாட்: விருப்பம் மட்டுமே என்று கூற முடியாது. அதை கணக்கிட சில வரம்புகள் இருக்கலாம்.

 

எலான் மஸ்க்: தெளிவாகக் கூறுங்கள். இங்கு ஏதேனும் தவறாக நடந்தது போல தெரிகிறதா? திடீர் என்று 10 பில்லியன் கேட்கிறார்கள் என்றால்.. இடிக்கிறதே..

 

விளாட்: 3 பில்லியன் தான்..

 

எலான் மஸ்க்: மன்னிக்கவும்.. எவ்வளவு?

 

விளாட்: மூன்று பில்லியன் யு.எஸ் டாலர்கள்.

 

எலான் மஸ்க்: 3 பில்லியன் ஆனாலும் அதிகாலை மூன்று மணிக்கு….?

 

விளாட்: இதில் ஏதும் உள்குத்து இருக்கிறது என்று பொத்தாம் பொதுவாகக் கூற முடியாது. ஏனெனில், அவர்கள் இதற்கு முன்பு நியாயமாகவே நடந்து கொண்டார்கள். இந்த முறையும் கூட இதனை குறைக்க அவர்களே உதவினார்கள். இது ஒரு அபூர்வமான நிகழ்வு. கணக்கீட்டின் போது என்ன நடந்தது என்பது குறித்த முழுமையான தகவல் என்னிடம் இல்லை.

 

ஏற்பட்ட நிகழ்வு உண்மையில் மனதை உரைய வைப்பதாக தான் இருந்தது. நான் நன்கு தூங்கிக் கொண்டிருந்த போது இது நிகழ்ந்தது. இதனை எங்களுக்கு சொன்ன போது, தலைமை நிர்வாக இயக்குனர், ‘இங்கே பாருங்கள்! இதை பற்றி அந்த கார்பரேஷனின் உயர் அதிகாரிகளிடம் பேசுங்கள். என்ன நடக்கிறது என்று கேளுங்கள். எப்படியாவது இதனை பேசிக் குறைக்க வேண்டும்!’ என்று சொன்னார்.

 

அடுத்த அழைப்பில் 1.4 பில்லியன் அனுப்பி வையுங்கள் என்றார்கள். அதுவும் கூட அதிகம் தான். ஆனால் கொஞ்சம் முன்னேற்றத்தை அடைந்தோம். அடுத்ததாக நாங்கள் நாள் முழுவதும் குறியீடுகளில் ஏற்படும் ஆபத்துக்களை எப்படி சமாளிப்போம் என்பதை பற்றி அவர்களுக்கு விளக்கிக் கூற ஒரு திட்டத்தை முடிவு செய்தோம். முடிவில் அல்லது மார்க்கெட் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மட்டுமே முன்னேறிச் செல்லும் ஒரு சில நிலையற்ற ஸ்டாக்குகளை தனியாக குறித்து வைக்க பரிந்துரை செய்தோம். இதன் காரணமாக 5:30 மணி அளவில், அவர்கள், 700 மில்லியன் மட்டும் போட்டு விடுங்கள் என்றார்கள். அப்போது தான் மூச்சு வந்தது! அதன் பின்னர் எல்லாம் சரியாகி விட்டது. இது தான்‘position closing only’ என்று சில குறியீடுகளை வரையறுக்க வேண்டியதாகிப் போனதன் காரணம்.

 

இது வாடிக்கையாளர்களுக்கு மோசமாக பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியும். ராபின்ஹூட் ஸ்டாக்குகளை பெரும் முறையை ஜனநாயகப் படுத்த முயற்சிக்கும் போது, இது மிகவும் சவாலாக இருந்த பிரச்சனை. ஆனால் இந்த குறிப்பிட்ட சவாலை இப்படித் தான் சந்திக்க வேண்டும் என்று முடிவாகி விட்டது. எங்கள் குழு என்னவெல்லாம் செய்து வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்க முடியுமோ, அதை எல்லாம் செய்தது.

 

எலான்: இந்த குழுமத்தை யார் நிர்வகிப்பது? க்ளியரன்ஸ் செய்யும் குழுவா?

 

விளாட்: ஒரு கூட்டமைப்பு உள்ளது. அது ஒன்றும் அரசு நிறுவனம் போல அல்ல. மேலதிக அறிவு எனக்கு இல்லை. இந்த மீம் ஸ்டாக்குகளை பொறுத்த வரையில், அபூர்வங்கள் அடிக்கடி நிகழும். மார்க்கெட்டில் உள்ள கொந்தளிப்பு எல்லோருக்கும் தெரிந்த கதை தான். அன்று பல பேர் போட்டிப் போட்டுக் கொண்டிருந்ததால், அந்த அமைப்பிற்கு அதிக ஆபத்து நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் அதிகமாக கேட்டிருக்கலாம். அதனால் இதனை முழுமையாக நியாயமற்றது என்று ஒதுக்கி விட முடியாது.

 

ஆனால் ஒன்று சொல்வேன். ஓபன் பொசிஷன் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் அவர்களுடைய ஸ்டாக்குகளை விற்பதற்கு நிர்வாக முறையில் ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். வாங்குவதை நெறிப் படுத்திய எங்களுக்கு, ஏன் விற்பவர்களை நெறிப் படுத்தவில்லை என்கிற கேள்வி வரக் கூடாது என்பதற்காக அதை செய்தோம்.

 

ஸ்டாக் வைத்திருப்பவர்கள் அதனை விற்க முடியாத போது மிகவும் எரிச்சல் அடைவார்கள் என்பது நிதர்சனம். இது ஒரு கொடுமையான விஷயம் என்றே நான் வகைப் படுத்துவேன்.

 

எங்களை போன்றே மற்ற பலரும் கூட இதே நிலமையில் தான் இருந்தார்கள். ராபின்ஹூட் பற்றிய செய்தி தலையங்கமாக இருந்தது. ஆனால் எங்களை போன்றே மற்ற பரோக்கர்களும் நெறிப்படுத்தியே வைத்திருந்தார்கள்.

 

எலான் மஸ்க்: சரி! ஆனால் எனக்கு என்னவோ தலையில் துப்பாக்கி வைத்து உங்களிடம் பணம் வாங்கி.. சரி அதை விடுங்கள். வாடிக்கையாளர்களை நீங்கள் முழுக விட்டீர்களா? அல்லது உங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லையா என்பதை இங்குள்ளவர்கள் அறிய வேண்டும். அதற்காகத் தான் பேசச் சொன்னேன்.

 

உங்களுக்கு வேறு வழியில்லை என்றால் புரிந்து கொள்ளக் கூடியதே. அதே சமயம், உங்களுக்கு வேறு வழியில்லாதபடி செய்தவர்கள் யார் என்று கண்டு பிடிக்க வேண்டும். அவர்கள் யார் உங்களுக்குள்ள வழியை பிடுங்க என்கிற கேள்வியும் கேட்கப் படவேண்டும்.

 

விளாட்: ம்ம்! எங்களுக்குள்ள எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். வர்த்தக நிறுவனங்களுக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இத்தகைய ஃபார்முலா குறித்த மேலதிக தகவல்கள் பொது வெளியில் கிடைத்தால், நாங்கள் சரியாக திட்ட மிடுவதற்கு வசதியாக இருக்கும்.

 

அந்த நிகழ்வுக்கு பின்னால், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் சேவையாற்ற எங்களால் முடிந்தது. 1 பில்லியன் டாலர்களை விட அதிகமான கேப்பிட்டல் அதற்கு பின் ஈட்ட முடிந்தது. வெள்ளி அன்று முன்பு கூறிய செக்யூரிட்டிகளின் மீது ஏற்படுத்தப் பட்ட தடைகள் நாளை காலை நீக்கப்படும்.

 

எலான் மஸ்க்: ஏதாவது நெறிமுறைகள் உள்ளதா?

 

விளாட்: கோட்பாட்டு ரீதியில் எப்போதும் ஒரு சில நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கும். எங்களிடம் எண்ணிலடங்கா கேபிடல் கிடையாது. வெள்ளி அன்று ஒரு சில கட்டுப்பாடுகள் இருந்தன. எப்போதும் இது போன்ற கட்டுப் பாடுகள் இருக்கும். கேள்வியே, இந்த கட்டுப்பாடுகள் 99.9% வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் இருக்குமா? என்பதே. ஒருவர் 100 பில்லியன் டாலர்களை டெபாசிட் செய்துவிட்டு, ஒரே வர்த்தக முடிவில் அதனை விற்க முடிவெடுத்தால், முடியாத காரியம் அல்லவா?

 

எலான் மஸ்க்: சரி.. உங்களுக்கு நடந்தவை, தவிர்க்க முடியாதவை. தவிர்க்க முடியாத நிலை மிகவும் அசௌகர்யமான நிலை. இதை ஏற்படுத்தியவர்கள் பொதுவெளியில் பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும்.

 

விளாட்: சற்று பொறுங்கள். இதில் நிறைய சிக்கல் உள்ளது. இவை நான் குறிப்பிட்டதை போல அபூர்வமான நிகழ்வுகள். அவர்கள் முன்பு நியாயமாக நடந்து கொண்டார்கள். ராபின் ஹூட் ஒரு வர்த்தக அமைப்பின் உறுப்பினர் மட்டுமே எனும் உண்மை தான் யாருக்கும் தெரியாத ஒன்றாக இருக்க முடியும். அதனால் இந்த அமைப்புகளுடன் ஒத்துப் போக வேண்டியது எங்களது கடமை. எதற்காக இவர்களுடன் எல்லாம் வேலை செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

 

ஆனால் இது தான் முறை. ஒரு க்ளியரிங் பரோக்கர் டீலரை அறிமுகம் செய்வதே மிகக் கடினமான செயல். அதனை பலர் செய்து காட்டியதில்லை. மாறாக, வாடிக்கையாளர்களை விற்க அனுமதிக்கும் ஒரு வர்த்தக அமைப்பு பல் அமைப்புகள் கூடிய ஒரு சிலந்தி வலை போன்றது.

 

இதனை மேம்பட்ட முறையில் நிர்வகிக்கலாம். இதனை கூர் தீட்டலாம் என்றெல்லாம் சொல்லும் போது கடினமாக உள்ளது. அமரிக்காவில் இது தான் காலத்தின் கட்டாயம்.

 

எலான் மஸ்க்: சிட்டாடெல் நிறுவனத்திற்கு நீங்கள் எந்த அளவிற்கு கட்டுப்பட்டவர்கள்? அதாவது, சிட்டாடெல் நிறுவனம் கோபித்துக் கொண்டால், அதில் உங்களுக்கு ஏற்படும் நஷ்டம் என்ன?

 

விளாட்: இது ஒரு வதந்தி. எங்களை பிற கம்பெனிகள் அழுத்தம் கொடுத்து இயங்க வைப்பதாக சொல்வது.. பொய்! மார்க்கெட் தயாரிப்பாளர்கள் எங்களுடைய வர்த்தகத்தை நடைமுறை படுத்துபவர்கள். இதே போன்றே அவர்கள் எல்லா புரோக்கர் டீலர்களின் வர்த்தகத்தை நடைமுறை படுத்துகிறார்கள். இது ஒரு க்ளியரிங் ஹவுஸ் முடிவு. கேபிடல் தேவைகள் குறித்த முடிவு. எங்களுடைய கண்ணோட்டத்தின் படி, சிட்டாடெல் அல்லது பிற தயாரிப்பாளர்களுக்கு இந்த முடிவில் பங்கு இல்லை.

 

எலான் மஸ்க்: அந்த நிறுவனம் ஒரு கூட்டமைப்பு என்று நீங்களே கூறினீர்கள்.. அதில் இந்த தயாரிப்பாளர்களுக்கு செல்வாக்கு இல்லாமலா போய்விடும்? அது ஒரு அரசு நிறுவனம் இல்லையே!

 

விளாட்: அவ்வாறு சந்தேகிக்க காரணம் இல்லை. சதித் திட்ட வாதங்களுக்குள் நான் செல்லவில்லை. அதனால் எந்தக் காரணமும் இல்லை என்றே தோன்றுகிறது.

 

எலான் மஸ்க்: சரி.. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அது மேலதிக தகவல்களை கொடுக்கலாம். அதுவும் சுவாரசியமாக தான் இருக்கும். உங்களுக்கு சுவாரசியத்திற்கு குறைவிருக்காது இல்லையா?

 

ஸ்ரீராம்: எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. விளாட் உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.. நேரமாகி விட்டது. கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் நன்றி. எங்கோ இதனை பகுதி வாரியாக பார்த்து ரசிப்பவர்களுக்கும் தான்.

 

இந்த உரையாடலை முடித்துக் கொள்கிறோம் எலான் அவர்களே. மிக்க நன்றி! கிளப் ஹவுஸ்-ல் முதல் முறையாக நீங்கள்.. உங்களுக்கு எப்படி இருந்தது?

 

எலான் மஸ்க்: மிக்க மகிழ்ச்சி! உரையாடல் மிக அருமையாக இருந்தது. இது போன்ற ஒரு தளம் இருப்பதை நான் ஒரு வாரம் முன்பு வரை அறியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். வாய்ப்புக்கு நன்றி!

 

நன்றி: Clubhouse, பிப்ரவரி 7, 2021.

 

***

நேர்காணல் : ஆர்த்தி, ஸ்ரீராம் கிருஷ்ணன் பற்றிய குறிப்புகள்.

 

கலிபோர்னியாவில் வசிக்கும் இவர்கள் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். இணையம், இணையம் சார்ந்த சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பாகச் செயல்படும் இந்த ஜோடி, கிளப்ஹவுஸ் தளத்தில், “தி குட் டைம் ஷோ” என்கிற உரையாடலை நடத்துகிறார்கள். இது சமீபத்தில் மிகவும் புகழ்பெற்ற டாக் ஷோ ஆக தரப்பட்டியலில் முதன்மையாக இருக்கிறது.

இதில், உலகளாவிய தொழில் அதிபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஃபேஷன் பிரபலங்கள், வெப் சீரிஸ் நட்சத்திரங்கள்.. என்று பலரும் பங்குபெற்று வருகின்றனர். இவர்கள் நடத்திய, முகநூலின் மார்க் ஜுக்கர்பெர்க் உரையாடல் முக்கியமானது. தற்போது, எலான் மஸ்கின் இந்த உரையாடலில், அவர் தனது வாழ்வியல், தொழில்நுட்பம், கடந்தகால நிகழ்வுகள், எதிர்காலப் பயன்பாடுகள்.. என்று மிகவிரிவாகப் பேசுகிறார்.

 

***

 

தமிழ் மொழியாக்கம் : கண்ணன் ராமசாமி பற்றிய குறிப்புகள்.

 

இவர், சிறுபத்திரிகை சார்ந்த நவீன இலக்கியத்தளத்தில் கவனம் பெற்று வருபவர். “பரமபதம்”, “ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு” ஆகிய 2 நாவல்கள் எழுதியுள்ளார். இதில், வெண் புள்ளிகள் குறித்த மாற்றுப் பார்வையை முன்வைத்து எழுதப்பட்ட “ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு” நாவலை, “ஆணவக் கொலையும் வெண்புள்ளியும் இணையும் கோடு” என விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.

 

உன்னதம் பதிப்பக வெளியீடாக வெளிவந்த, உலகப்புகழ்பெற்ற மானுடவியலாளர் ஜோசப் காம்ப்பெல் உரையாடிய புகழ் பெற்ற 6 உரையாடல்கள் கொண்ட “தொன்மத்தின் ஆற்றல்” நூலை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

***

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page