யூ ட்யூபின் முதன்மை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன் உடன் ஒரு நேர்காணல்
நேர்காணல் : நிலாய் பட்டேல்
தமிழில் : அவை நாயகன்
அண்மையில் கூகுள் தயாரிப்புகளில் ஒன்றான யூ -ட்யூப் ‘ஷார்ட்ஸ்’ என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. டிக்டாக்கிற்குப் போட்டியாக எனவும் கொள்ளலாம். ‘ஷார்ட்ஸ்’ பயனர்களுக்கு வழங்குவதற்காக 100 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ள நிலையில், இந்நேர்காணல் கடந்த ஆகஸ்டு மாதம் நிலாய் பட்டேல் என்னும் அமெரிக்க பிளாக்கரால் ‘வெர்ஜ்’ இணைய இதழுக்காக எடுக்கப் பட்டது.
துளி வியர்வை சிந்தாமல் கணினித் திரை முன்பு அமர்ந்து அல்லது கைபேசியை உபயோகித்துப் பணம் சம்பாதித்து வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்கிறது யூ-ட்யூப். பிப் 2005 -ல் தொடங்கி, படங்கள், வீடியோக்களைப் பதிவிடும் தளமாக மட்டும் இருந்தாலும் தனது பயனர்களுக்கு அவர்களின் ‘உள்ளடக்க உருவாக்கத்தை ஊக்குவிக்கும்’ வகையில் ‘பணமாக்கல்’ (Monitization) திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தது. இப்போது பல மில்லியன் டாலர்கள் புழங்கும் நிதியாதார மையமாக யூ-ட்யூப் உள்ளது.
அதன் நிதிச் செயல்பாடுகளையும், அதற்கான அளவீட்டு, கணக்கீட்டு முறைகள், புதிய தயாரிப்புகள், அவற்றின் எதிர்காலம், முதலீடுகளில் முன்னுரிமை பற்றி நீல் மோகன் இதில் விரிவாகப் பேசுகிறார்.
கேள்வி: யூ-ட்யூபின் தலைமை திட்ட அலுவலராக உங்கள் நாளாந்தப் பணிகள் எவை..?
பதில்: என் பொறுப்பு யூ-ட்யூபை நடத்த உதவுவதுதான். எங்கள் தயாரிப்புகள் அனைத்திற்கும் நானே பொறுப்பு. எங்கள் படைப்பாளிகள் பயன்படுத்தும் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தாலும் அது எனது பொறுப்புதான். இதற்காக எங்களது விளம்பரக் கூட்டாளிகளுக்கு உதவ நான், கூகுள் நிறுவனத்துடன் நெருங்கிப் பணியாற்றுகிறேன்.
ஆக, குழந்தைகளுக்கான, இசைக்கான செயலிகள் வரையிலான எங்கள் தயாரிப்புகள் என் பொறுப்பில் உள்ளன. நிறுவனத்தின் மீதான நம்பிக்கைக்கும் பாதுகாப்புக்கும் பதில் சொல்ல வேண்டியது நான்தான். எங்கள் தளம் தேர்ந்தெடுக்கும் உள்ளடக்கத்தைச் சில கொள்கை முடிவுகளைக் கொண்டு நிர்வகிக்கிறோம். அதைச் ‘சமூக வழிகாட்டுதல்’ என்றழைக்கிறோம். தயாரிப்புகளின் வடிவமைப்பு, தோற்றம், உணர்த்தும் திறன், செயல்படும் முறை ஆகியவற்றை ஒரு பயனாளி பயணித்துத் தெரிவதை அறிவது எங்கள் பணிக்குழுவின் வேலை.
இதைத்தான் நானும் குழுக்களும் நாள் முழுவதும் செய்து வருகிறோம்.
கேள்வி: எல்லா விதமான சமூகத் தளங்களிலும் இதுபோன்ற நம்பிக்கை, பாதுகாப்புத் தொடர்பான குழுக்கள், தயாரிப்பு அமைப்பிற்குத் தரும் அறிக்கைகள் முக்கியமானவை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. உங்களின் ஒருநாள் பற்றிய சித்திரம்தான் எனக்குத் தேவை. நீங்கள் கலந்து கொள்ளும் கூட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்..
பதில்: சிறிதும் பெரிதுமாகப் பல கூட்டங்களில் கலந்து கொள்கிறேன்.
அதில் சுவைமிகுந்தவை என நான் கருதும் கூட்டங்கள் பற்றிச் சொல்கிறேன். அவை யூ-ட்யூப் என்ற தயாரிப்பைப் பற்றிய, முடிவெடுக்கும் நெருக்கடி மிகுந்த கூட்டங்கள்தான். குறிப்பாக நான் கலந்து கொள்ளும் கூட்டங்களைச் ‘சீராய்வுக் கூட்டங்கள்’ என்கிறோம். யூ-ட்யூப் தொடர்பான அனைத்து அம்சங்களையும் பற்றிய அவற்றில் பல பரப்புகளில் பணியாற்றும் குழுக்கள் பங்கு பெறும். ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு தொடங்கப்படுவது, அதன் மேம்பாடு, செல்வழி -என எல்லாவற்றையும் ஓரிடத்தில் வைத்து முடிவு செய்யும் அளவுக்கு வந்துவிட்டோம்.
ஆனால் அவை விமர்சன ரீதியாக முடிவெடுக்கும் கூட்டங்கள். பல நிலைகளைக் கடந்துதான் அவற்றின் முடிவுகள் என்னிடம் வருகின்றன. சில காரணங்களால் அவை தீர்வு செய்யப்படாமல் இருக்கும். அப்போது எனது வேலை tவீமீ-தீக்ஷீமீணீளீ செய்து அதைத் தொடரலாமா, வேண்டாமா என முடிவு காண்பதாக இருக்கும். ஒரு முக்கால் மணிநேரச் சந்திப்பானது அந்த வாரத்திற்கான வேலைகளைத் தொடர்வதற்கு உதவும்.
கேள்வி: சமீபத்தில் நீங்கள் செய்த ஒரு tie-break பற்றிக் கூறுங்கள்..
பதில்: யூ-ட்யூப் பற்றிய சுவாரசியமான விஷயம். கொள்கை முடிவுகளுக்காக ஒரு செயலியை உருவாக்கினோம். அதன் பணி செயலியாக மட்டும் இருக்க வேண்டுமா வேண்டியதில்லையா என்ற கேள்வியை tie-break செய்தோம். முடிவாக அதை ஒரு ‘சூழல் அமைப்பாக’ மாற்றிக் கொண்டோம். பார்வையாளர்கள், படைப்பாளிகள், விளம்பரதாரர்கள், கூட்டாளிகள் அதில் பங்கேற்பார்கள். முக்கிய முடிவுகளை எடுக்க அது பெரும் பங்காற்றுகிறது.
அதன்படி, ஓர் அம்சத்தை வடிவமைக்கும்போது அது 1) நிகழ்ச்சி உருவாக்குபவர்களுக்கு எளிமையாகக் கையாள உதவுகிறதா 2) எந்த இடத்தில் மாறுதல்கள் தேவை என்பதை அறிந்து கொண்டோம்.
இன்னும் சில செய்திகளைச் சொல்கிறேன். ஒரு படைப்பாளியாக இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று யூ-ட்யூப் ஸ்டுடியோ எனப்படுகிறது. அது உங்களது வீடியோக்களைப் பதிவேற்றுகிற, அதற்குரிய புள்ளிவிவரங்களைத் தரக்கூடிய இடமாக உள்ளது. ஒரு வர்த்தகப் பரிமாற்றம் போலத்தான் இதுவும். படைப்பாளிகளின் வீடியோக்கள் பயனுள்ளவையா, அதற்கென அளவீடுகள் உண்டா, பார்வையாளர்களுக்குப் புரியுமா, சில மாறுதல்களைச் செய்தாலென்ன – எல்லாமே முக்கியம். இது ஒருவகையான நேரடி வர்த்தகம். ஆனால், எனது குழுக்கள் இதுபோன்ற நூற்றுக்கணக்கான தீர்வுகளைத் தருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளன.
கேள்வி: முடிவெடுக்கும் சட்டக அமைப்பு பற்றி..
பதில்: மூன்று விஷயங்கள் கருத்தில் கொள்ளத் தக்கவை. முதலாவது, எங்களது அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொண்டிருக்கச் சமூக வழிகாட்டுதல் பற்றிய தேடல் முக்கியத் தேவை.
இரண்டாவது, வெளிப்படையானது. பார்வையாளர்கள், படைப்பாளர்கள் சார்பாக எங்களின் யூ-ட்யூப் அமைப்பு நாள்தோறும் ஆயிரக்கணக்கான முடிவுகளை எடுக்கின்றது. எல்லாவற்றிலும் நான் இருப்பதில்லை என்றாலும் சரியான ஆட்கள் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.
மூன்றாவது, தயாரிப்பின் மதிப்பாய்வு பற்றியது. வடிவமைக்கப் பட்ட விதம், அதன் தொனி, கூட்டங்கள் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகள், தாக்கங்கள் இவற்றில் அடங்கும். இவை தொகுக்கப்பட, மும்மாத ஓராண்டுச் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறோம். இதுவே அந்தச் சட்டக அமைப்பு.
கேள்வி: உங்களிடம் தரப்படும் அறிக்கைகளின் அமைப்புமுறை பற்றி..?
பதில்: பல்வேறு தயாரிப்புகளுக்கும் தனித்தனி அணித்தலைவர்கள் உண்டு. படைப்பாளர்களுக்கு வேண்டியதைத் தர முனைப்புக் கொள்ளும் குழுக்கள், நம்பிக்கை, பாதுகாப்புக்குரிய பணிகளைச் செய்யும் குழுக்கள் போன்றவை இதில் அடங்கும். UX தொடர்பான உருவாக்கம், ஆய்வுகளைச் செய்ய மட்டும் ஓர் அணி உண்டு. இதில் இசை, உயர்மதிப்பு, யூ-ட்யூப் டிவி தொடர்பான அனுபவங்கள் பகிரப்படுகின்றன.
கேள்வி: அணித்தலைவர்கள் மட்டும் ஒன்பது பேரா..?
பதில்: இதில் சிலவற்றை இணைத்துக் கொள்வோம். (எ.டு) யூ-ட்யூப் மியூசிக், யூ-ட்யூப் பிரீமியம் இரண்டும் ஓரணியில் சேரும். அவர்கள் சமூக அனுபவங்களை ஒருங்கு குவிப்பார்கள். ஆகவே தலைவர்கள் எண்ணிக்கை கூடுகிறது.
கேள்வி: ஷார்ட்ஸ் – பற்றிக் கூறுங்கள். அது இந்தியாவில் தொடங்கப்பட்ட உங்களது புதிய குறும்படத் தயாரிப்பு. ஆனால் தற்போது அமெரிக்காவில் உள்ளது. கணினி முகப்புத் திரையில் யூ-ட்யூப் செயலியின் மேல்மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் புதிய ‘பணமாக்கல்’ வசதியும் உண்டல்லவா.? சோதனை முயற்சியாகச் சந்தைக்கு வந்த இது வேகமாக வளர்ந்துள்ளது. அதற்கான நிதியும் உங்களிடம் உள்ளது. இதன் செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்..
பதில்: 15 ஆண்டுகளுக்கு முன் யூ-ட்யூபில் பதிவேறிய ஒரு வீடியோவை நினைவுபடுத்துகிறேன். ‘Me at the zoo’ என்ற அது இன்னும் புகழோடு விளங்குகிறது. சாண்டியாகோ விலங்குக்காட்சி சாலையில் எடுக்கப்பட்ட 18 வினாடி வீடியோ. யூ-ட்யூபின் தொடக்கக் காலம் அது. ‘பயனர் உருவாக்கிய உள்ளடக்கம்’ என்ற சிறப்பும் அதற்குண்டு. இன்றோ அது வியக்கத்தக்க வகையில் முன்னேறியிருக்கிறது.
மொபைல் போனுக்கும், மொபைல் சாதன உருவாக்கத்திற்கும் வேறுபாடு உள்ளது. இப்போது உங்கள் போனில் இருப்பது நம்பமுடியாத வகையில் ஒரு கேமரா. 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த அந்த வீடியோவை இப்போது எடுத்துப் பகிர்ந்தால் எப்படியிருக்கும்.? கேமராவிலுள்ள எடிட்டிங் போன்ற சாதனங்களால் அதன் தரத்திற்கான சாத்தியம் அதிகமாகியிருக்கும் அல்லவா.?
எனது குழுவும் நானும் இப்போது படைப்பாளிகளின் உருவத்திற்குள் புகுந்து பார்க்கத் தொடங்கி விட்டோம். 15 ஆண்டுகளுக்கு முன்பு போலல்லாமல் இன்றைய படைப்பாளியாக இருந்தால் எப்படிச் செயல்படுவீர்கள்.? இதுதான் ஷார்ட்ஸ் உருவாகக் காரணம்.
இதற்கான ஐடியா எப்படி உருவானது என்று கேட்பீர்கள். யூ-ட்யூப் ஓர் உலகளாவிய தளம். அமெரிக்காவிலும் வட அமெரிக்காவிலும் இதற்கான வேகமாக வளரும் சந்தை இருக்கிறது. இந்தியாவிலும்தான். ஆனால், இது உலகு முழுவதும் விரைவாகத் தொடங்கப்பட வேண்டும். (15 வினாடிகள் வரையிலான வீடியோக்களை உருவாக்கும் வகையில் இந்தியாவில் யூ ட்யூப் ஷார்ட்ஸ்களுக்கான புதிய அம்சங்களைக் கூகுள் இந்தியா அறிவித்துள்ளது. இதற்காகப் படைப்பாளிகள், ஊடக நிறுவனங்களுக்கு 30 பில்லியன் தொகையைக் கடந்த நவம்பர் 18 அன்று அனுமதித்துள்ளது -மொ.ர்)
ஷார்ட்ஸை முதலில் இந்தியாவில்தான் தொடங்கினோம். பிறகு அமெரிக்காவிலும் பிற பகுதிகளுக்கும் கொண்டு சென்றோம். இந்தத் தயாரிப்பு எல்லாச் சந்தைகளிலும் வளர்ச்சியைக் கண்டது. சில நாட்களுக்கு முன்பு சுந்தர் பிச்சை, ஷார்ட்ஸ் செயலியை அதுவரை 150 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இப்போது இன்னும் அதிகரித்திருக்கிறது. அதனால்தான் இதை அடிப்படைத் தயாரிப்பு என மதிப்பிடுகிறோம். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதில் பார்வையாளர், படைப்பாளர் நிலைகளிலிருந்து ஒட்டுமொத்த யூ-ட்யூப் அனுபவத்திற்கு வந்து சேரலாம். இதுபற்றி எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கியுடன் கூடப் பேசியிருக்கிறோம்.
அதனால் இந்தச் செயலி முக்கியம் பெறுகிறது. ஓர் இணைப்பாகவும் இருக்கிறது. வேறு தளங்களிலும் இதுபோல் இருக்கலாம். ஆனால் ஒரு வீடியோவின் கீழுள்ள ‘நீக்ஷீமீணீtமீ’ பட்டனைத் தட்டிவிட்டுப் புதியதை உருவாக்கலாம் என்பதே இதன் சிறப்பு. இப்புதிய வடிவம் யூ-ட்யூப் பயனர்களுக்கு ஒரு புதிய சுவையைக் கொடுக்கிறது. இந்த ஷார்ட்ஸைக் கொண்டு எங்கள் தளத்தில் இருக்கும் எந்த வீடியோவையும் எடுத்து இணைத்துக் கொள்ளலாம்.
‘பணமாக்கல்’ குறித்துக் கேட்டீர்கள். இது யூ-ட்யூபின் தொடக்கக் காலத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியது. தற்போது ‘படைப்பாளர் பொருளாதாரம்’ பற்றிய உரையாடல் தொடங்கியுள்ளது. ஒரு தசாப்தத்துக்கு மேலாக நாங்கள் படைப்பாளர் பொருளாதார வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது மக்களுக்குத் தெரிந்திருக்கலாம். ‘யூ-ட்யூப் பங்காளர் திட்டத்தை’ நாங்கள் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் எங்கள் படைப்பாளர்களுக்கு 130 மில்லியன் தொகையை வழங்கியுள்ளோம். ஷார்ட்ஸ் பொறுத்தவரை 1000 மில்லியன். இது பயணத்தின் இன்னொரு படி. அடுத்து ‘நீண்டகாலப் பணமாக்கல் திட்டம்’ படைப்பாளர்களை ஈர்க்கும் என நினைக்கிறேன்.
கேள்வி: யூ-ட்யூபின் ஆரம்ப நாட்களைப் பற்றிச் சொன்னீர்கள். தற்போது நீங்கள் தந்த மலினமான படைப்புகள்: ஸ்னாப்ஷாட் கதைகள், இன்ஸ்டாகிராம் கதைகள், யூ-ட்யூப் கதைகள், லிங்க்டுஇன் கதைகள். இன்னும் எங்கு பார்த்தாலும் கதைகளாவே இருக்கின்றன. பிறகு டிக்டாக் வந்தது. இன்ஸ்டாகிராம் அதைப்போலவே. தற்போது டிக்டாக் பாணியில் யூ-ட்யூபில் ஷார்ட்ஸ். காலவரிசைப் படி இதுதான். டிக்டாக்கிற்குப் போட்டியாக ஷார்ட்ஸ் எனக் கருதலாமா..?
பதில்: இதை எனது கண்ணோட்டத்தின்படி முன்வைக்க விரும்புகிறேன். ஒரு வீடியோ படைப்பாளிக்குத் தன் பார்வையாளர்களை உருவாக்கப் பல தளங்கள் உள்ளன. அவை ஒன்றுபோலத் தோன்றினாலும் வேறுபட்டவை. ஆனால் படைப்பாளிகளுக்கு இது பல தேர்வுகளை வழங்கக் கூடியது. இது முதன்மையானது என்பேன்.
எளிய, வேகமான, கையாளச் சுலபமான அதேவேளையில் சக்திவாய்ந்த மொபைல் உருவாக்கம்தான் ஷார்ட்ஸ். 10 ஆண்டுகளுக்கு உன் உங்களிடம் ஒரு கேமரா இருக்கும். முக்காலி இருக்கும். வீட்டிற்குள், கொல்லைப்புறத்தில் படுக்கையறையில் கூட வைத்துப் படப்பதிவு செய்வீர்கள். இப்போதோ அது ஒரு மொபைல் போனில் சாத்தியமாகி இருக்கிறது. ஷார்ட்ஸ் உருவாக்கத்தை இதன் வழியாகவே பார்க்கிறேன். அதன் வளர்ச்சியும் இதை நிரூபிக்கிறது. நானும் ஷார்ட்ஸ்களைத் தினமும் பார்க்கிறேன். இன்னும் அதில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது.
ஆனால் இதிலுள்ள சில அம்சங்கள் நாம் ஏற்கெனவே அறிந்தவை. அவையும் தனித்துவம் மிக்க யூ-ட்யூபைச் சார்ந்துள்ளன. வீடியோ, ஆடியோ இரண்டையும் யூ-ட்யூபிலிருந்து எடுத்துக் குறும்படமாக உருவாக்கலாம். அந்த வகையில் எங்களிடமுள்ள வீடியோக்களையும் புதிய படைப்புகளையும் இணைக்கும் பாலம்போலச் செயல்படுகிறது ஷார்ட்ஸ்.
ஷார்ட்ஸ், இசை சார்ந்தே இயங்குகிறது அல்லவா..? புகழ்வாய்ந்த BTS, மற்றும் Permission to Dance ஆகிய இசைக்கோவை வெளியீடுகளை நாங்கள்தான் செய்தோம். யூ-ட்யூபில் இருக்கும் இசைவீடியோவைப் பெற அதன் ஷார்ட்ஸ் பாடலைக் கிளிக் செய்தால் போதும். இந்தவகையில் அது கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதிலிருந்து இன்னொன்றைப் பெறலாம்: மொபைலில் தயாரிக்கும் படைப்பு முதன்மையானது. அது தனித்துவம் மிக்க யூ-ட்யூபின் அம்சங்களால் ஷார்ட்ஸாக உருவெடுக்கிறது.
கேள்வி: டிக்டாக்கின் மதிப்பிடப்படாத அம்சங்களில் ஒன்று, அது மிகவும் சக்திவாய்ந்த வீடியோ எடிட்டர் என்பதாகும். பயனருக்கு அது ஒரு வெகுமதியைப் போல. அதன்மீது அதிகப்படியான முதலீட்டைச் செய்திருக்கிறீர்களா..?
பதில்: ஆம். ஏனென்றால் எங்கள் வேலை படைப்பாளர்களுக்கு மேடை அமைத்துத் தருவதும்தானே. ஆகவே இன்னும் செய்யத்தான் வேண்டும்.
கேள்வி: டிக்டாக் – விநியோகக் கூறுகளைக் கொண்டது. யூ-ட்யூப் தனது கருவிகளை உருவாக்க அதிக நேரத்தைச் செலவிடவில்லை. நீங்கள் அந்த உருவாக்கத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள். சரிதானா..?
பதில்: மிதமிஞ்சிய பயன்பாடு இருப்பது உண்மைதான். யூ-ட்யூபில் பதிவேற்றம் செய்யப்படுபவை எல்லாம் வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு, திருத்தியமைத்து அதன்பிறகே வந்து சேர்கிறது. யூ-ட்யூப் ஸ்டுடியோவில் எடிட்டிங் கருவிகள் இன்றியே வீடியோக்களை நிர்வகிக்கும் அமைப்பு உள்ளது.
ஆனால் ஷார்ட்ஸின் செயல்முறை மொபைல் போனின் சக்தியையும் பயன்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. பயன்படுத்த எளிமையானது. படைப்பாளிகள் எளிய கருவிகளை முழுவதுமாக இயக்கி விடுகிறார்கள். ஆகவே இதுதான் தொடர்ந்து நாங்கள் முதலீடு செய்வதற்குக் காரணம். எங்களது இலக்கு மேலதிக அம்சங்கள் நிறைந்த கருவிகளைப் படைப்பாளிகளிடம் கொண்டு சேர்த்து ஷார்ட்ஸ் அனுபவத்தை மேம்படச் செய்வதுதான்.
கேள்வி: இன்ஸ்டாகிராமில் கூடுதல் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது படைப்பாளி களின் ஈடுபாட்டை அதிகரிக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள். இப்போது அவர்கள் ரீல்களைப் பயன்படுத்துகிறார்கள். அது உங்களுக்கும் ஈர்ப்பாக இருக்கிறது. இதுபோன்ற தயாரிப்புகள் உங்களிடம் ஏராளமாக உள்ளன. அதன் இயக்கவியலுக்குப் பழக்கமாகிப் போனவர்கள்தான் உங்கள் தளத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் ‘ஷார்ட்ஸ் பயன்படுத்துங்கள். அப்போதுதான் உங்களுடனான இணக்கம் கூடும்’ என்று சொல்வீர்களா..?
பதில்: நீங்கள் விவரித்ததுபோல் நாங்கள் வெளிப்படையாகப் பேசவில்லை. நான் அடிப்படைக் கொள்கைகளை இணைத்துக் கொண்டே பேச விரும்புகிறேன். பயனர் தரப்பிலிருந்தும் உதாரணங்கள் தந்திருக்கிறேன். படைப்பாளிகளைப் பொறுத்தவரை அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் எங்களது குறிக்கோள். இரண்டுமணி நேரச் செய்திப்படமோ அல்லது 15 வினாடிக் குறும்படமோ அவர்கள் செய்ய விரும்பினால் யூ-ட்யூப் அதற்குரிய வெளியை உருவாக்கித் தரவேண்டும். அதற்காகத்தான் நான் யூ-ட்யூபில் வேலை செய்கிறேன். எங்கள் ஆதரவு பெற்ற படைப்பாளிகள் பலதரப் பட்டவர்கள். அவர்களோடு உரையாடுகிறோம். தயாரிப்புகளின் அம்சங்கள், கொள்கைகள் பற்றிச் சொல்லிப் பணியாற்ற அனுமதிக்கிறோம்.
கேள்வி: வெளிப்படையாக இருப்பது முக்கியமில்லையா.? ஏனெனில் படைப்பாளிகளில் தொழில் வல்லுநர்களும் உண்டு. இது அவர்களுக்கு வாழ்க்கை. வாழ்வாதாரம். அதிகப் பணம் சம்பாதிக்க முயலும்போது அவர்களுக்கு அழுத்தம் கூடுகிறது. இந்தக் கணக்கீட்டுமுறை மக்களுக்கு வேடிக்கையாகத் தெரிகிறது.
ஒரு யூ-ட்யூபரின் வாழ்வுச் சுழற்சி என்பது ஒரு வீடியோவை உருவாக்குவதில் அடங்கியுள்ளது. இது ஒரு பாதையின் முடிவு. பிறகு அந்தப் பாதை பிரிகிறது. இதுதான் புதிய தயாரிப்புகள் செயலாற்றுவதன் மூலம் கிடைக்கும் மங்கலான சித்திரம். உங்கள் தயாரிப்பு மக்களின் பணத்தைப் பாதிக்கிறது என்பதை வெளிப்படையாக மாற்றம் செய்வதற்கும் நெகிழ்வாக இருப்பதற்கும் என்ன வித சமநிலையை ஏற்படுத்துவீர்கள்..?
பதில்:உண்மையில் இது ஒரு சுவாரசியமான கேள்வி.
பணத்தைப் பற்றிப் பேசுவதால் நிறையச் சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்கென ஒரு விநியோகக் கூறு இருக்கிறது. யூ-ட்யூபில் எது வேலை செய்கிறது / செய்யவில்லை என்பதை நாங்கள் தெரிந்து கொண்டாக வேண்டும். வணிகத்தை, படைப்பாளிகளை எதிர்கொள்ளும் அணிகள் எங்களிடம் உள்ளன. எங்கள் தளத்தில் செயலாற்றிப் பார்வையாளர்களைச் சேர்த்து வைத்திருக்கும் அவர்கள் பணமாக்கல் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துகிறோம் -விளம்பரத்திற்காக மட்டுமல்ல. சிறந்த மற்றும் வளர்ந்து வரும் படைப்பாளிகள் பயன்பெற, நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளும் உள்ளன.
அவையெல்லாம் நாங்கள் முதலீடு செய்த திட்டங்களாகும். இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டுமா..? ஆம். ஒவ்வோர் ஆண்டும் படைப்பாளிகளுக்கு இதை விளக்குவதன் மூலம் நாங்களும் முன்னேறிச் செல்வதை உணர்கிறோம்.
படைப்பாளர்கள் சிந்திப்பதற்காக விநியோகம், பணமாக்கல், சமூக வழிகாட்டல் ஆகியவை உள்ளன. இதில் எங்கள் குழுக்களுக்குப் பொறுப்பு உண்டு. படைப்பாளி இதன்மீது ஊடாடி அனைத்தையும் அறிய முடியும். எங்களின் பயணம் இதுதான். தொடர்ந்து இதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.
10 ஆண்டுகள் வரை செயலாற்றிப் பார்வையாளர்களை உருவாக்கி வைத்திருக்கும் படைப்பாளிகளும் இருக்கிறார்கள். உலகின் மிக உற்சாகமான, அற்புதமான மனிதர்கள் அவர்கள். தம் பார்வையாளர்களோடு இணக்கமாகப் பழகிக் கருத்துகளைப் பெறுகிறார்கள். அதன்பின் நம்ப முடியாத, மலைப்பு ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை உருவாக்குகிறார்கள்.
இதில் இன்னொரு பகுதியும் உண்டு. சற்றே ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பும் படைப்பாளிக்குத் தகுந்த கருவிகளை வழங்குவதுதான் அது. தமது வீடியோக்கள் எவ்வாறு காட்டப்படுகின்றன, அவற்றின் தாக்கம் என்ன என்பதையும் எங்கள் குழுக்கள் உரையாடித் தரவுகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதிலிருந்து பரிணாமம் பெற்றவைதாம் எமது உள்ளீடுகள் என்பேன்.
விநியோகம், பணமாக்கல் பற்றிப் பேசும்போது, படைப்பாளி எவ்வாறு தனது ரசிகர்களுடன் உறவாடுகிறார், ஒரு வீடியோவின் கீழ்ப்பகுதியில் எத்தகைய கருத்துகள் எழுந்து வருகின்றன என்பதும் முக்கியம். நான் இந்தப் பரிமாணங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்துகிறேன். கருத்துகளின் தரவரிசைக்கு ஏற்பக் கருவிகள் வழங்கப் படுகின்றன.
கேள்வி: நீங்கள் விவரிக்கும் அனைத்தும் அழுத்தங்கள், விளம்பரம் சார்ந்தவை. யூ-ட்யூப் தரும் தலைப்புகள் மிகைப்படுத்தப் பட்டவை. சிறுபடங்கள் முதலிடம் பெறுகின்றன. இந்த அழுத்தங்கள் படைப்பு உருவாக்கத்திற்கு உதவுமா..?
பதில்: மீண்டும் யூ-ட்யூப் செயல்படும் முறைக்கே வருகிறோம். இதற்கெனப் பல அளவீடுகள் இருந்தாலும் பார்வையாளர்களின் திருப்தி முக்கியம். படைப்பாளிகள் உடனான தொடர்பின் மூலம் அவர்கள் விரும்புவதைப் பெறுகிறார்களா என்பதும்தான்.
படைப்பாளிகளுக்கும் தமது செயல் ஆரோக்கியமானதா என்பது முக்கியம். இதற்கு எமது படைப்பாளர்கள் குழுவுக்கு மட்டுமல்ல. எல்லா யூ-ட்யூப் குழுக்களுக்கும் பொருந்தும்.
புதிய படைப்பாளிகள் எமது தளத்திற்கு வந்து நிலையான வாழ்வாதாரங்களை அமைத்துக் கொள்ள வழியுண்டா..? அவர்கள் பார்வையாளர்களை உருவாக்கியதும் முழுநேர யூ-ட்யூபர்களாக மாற விரும்பினால் வருமானம் ஈட்டித் தரும் தயாரிப்புகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா -இவையும் முக்கியம்.
வாராந்தர, மாதாந்தர, காலாண்டு அடிப்படையில் படைப்பாளிகளோடு உரையாடுவதில் ‘புதியவகைக் கருவிகள், திறன்கள் என்னென்ன..?’ என்ற அவர்களின் கேள்விகளுக்குப் பின்னால் பணமாக்கல், பார்வையாளர்களை ஈர்த்தல் மட்டுமே குறியாக இருக்கலாம். ஆனால் அது பார்வையாளர்களின் தொடர்புகள் காட்டும் தன்மை பற்றியது.
அதனால்தான் ஷார்ட்ஸ் தோன்றிய விதத்தைக் கூறினேன். அதன் அடிப்படை பார்வையாளர்களை இணைப்பதுதான். பணமாக்கல், தயாரிப்பு இவற்றில் கூட விளம்பரங்கள் உள்ளன. ஆயினும் எங்களது எட்டு, ஒன்பது தயாரிப்புகள் இத்தளத்தில் பணப்பயன் பெற உதவுகின்றன.
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். யூ-ட்யூபர்களில் பெரும்பாலானோர் புத்தகங்களை எழுதியவர்கள். பிற தளங்களான டிவி, பத்திரிகை போன்றவற்றிலிருந்து வந்தவர்கள். ரசிகர்களைக் கொண்டவர்கள். இது யூ-ட்யூபின் நோக்கில் அருமையானது.
படைப்பாளர்களிடம் நான் கேட்டவரையில், அவர்கள் உண்மையான ஈடுபாடு உடையவர்கள். பார்வையாளர்களை ஈர்ப்பதில் அனுபவம் உள்ளவர்கள். அதிலும் அனுபவசாலிகள், புதியவர்கள் எனப் பலருண்டு. அதனால்தான் விளம்பரங்களைத் தாண்டி யூ-ட்யூப் மூலம் வருமானம் பெறும் வாய்ப்பை வழங்குகிறோம். இது, வேறு தயாரிப்புகள், திறன்கள் மீது அவர்கள் சாய்ந்துவிடக் கூடாது என்பதல்ல. சக்திவாய்ந்த பார்வையாளர்களை ஒருங்கிணைப்பது யூ-ட்யூப் என்பதைப் புரிய வைப்பதற்காக. வருவாயைப் பெருக்குவது மட்டுமல்லாமல் அவர்கள் தமது ரசிகர்களை யூ-ட்யூபின்பால் ஈர்க்கிறார்கள் என்பதும் முக்கியம். உதாரணமாக Super Chat, Super Stickers மூலமாக ரசிகர்களோடு அவர்களை இணைக்கிறோம். அதற்கான பணப்பயனும் அவர்களுக்குக் கிடைக்கிறது.
கேள்வி: யூ-ட்யூப் ஒரு தேடுபொறி. நீங்கள் அதில் எவருடைய பார்வையாளராகவும் இல்லை. வீடு ரிப்பேர் செய்யும் வீடியோக்களை மட்டும் பார்க்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது அதில் நீங்கள் பார்வையாளரா..? அது படைப்பாளிக்கு உரியதா.? இரண்டும் சேர்ந்த கலவையா அது..?
பதில்: ஓர் உதாரணம் சொல்கிறேன். என் வீட்டில் ஒரு வாட்டர் ஹீட்டர் சரிசெய்ய வேண்டியிருந்தது. நான் யூ-ட்யூபில் தேடும்போது ஓர் அருமையான வீடியோ கிடைத்தது. எனக்கு நல்ல பயன். இரண்டு மணிநேரமும் சிலநூறு டாலர் பணமும் மிச்சம். இதனைக் கொண்டு ‘சூப்பர்..தேங்க்ஸ்’ என்ற ஒன்றை உருவாக்கினோம். என்னால் அந்தப் படைப்பாளிக்குப் பத்து டாலர் பணம் கிடைக்கும். அவர் எனக்கு மதிப்பு மிக்கவர் ஆகிறார். தொடர்ந்து அவருடைய வீடியோக்களை ஒவ்வொரு வாரமும் நான் பார்க்கப் போகிறேனா..? நிச்சயமாக இல்லை.ஆனால் அந்தப் படைப்பாளியுடன் நான் இணைந்திருக்கிறேன்.
இது இன்னொரு பணமாக்கல் தயாரிப்புக்கு எடுத்துக் காட்டு. எனது தேவையானது ஒரு படைப்பாளிக்குப் பணம் சம்பாதிக்க வைக்கிறது. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.
கேள்வி: யூ-ட்யூபில் வழக்கமான விளம்பரத் தயாரிப்புகள் மட்டுமே உள்ளன. அவை நேரடியானவை. ஒரு வீடியோவைப் பார்க்கும்போது இடைவேளை விடப்படுகிறது அல்லவா..? அந்த வருவாயில் சில சதவீதம் படைப்பாளிக்குச் செல்கிறது. ஆனால் ஷார்ட்ஸ் அப்படியல்ல. நேருக்கு நேர் என்ற விஷயமே இதில் இல்லை. மாறாக இது போனஸ் வகையில் 100 முதல் 1000 டாலர்கள் வரை பெற்றுத் தரக்கூடும். உண்மையில் இத்திட்டம் எப்படிச் செயல்படுகிறது..? படைப்பாளி பெறும் மதிப்பை எவ்வாறு தீர்மானிப்பது..?
பதில்: உண்மையில் இது முதல் படி. அதனால்தான் இதற்கானதை வரையறுக்கப்பட்ட ஷார்ட்ஸ் நிதி என விவரித்துள்ளோம். நீண்டகால அளவில் இது மேம்பட வேண்டும் என்பதுதான் எங்கள் படைப்பாளர்களின் விருப்பம். இந்த அனுபவம் புதிது. இதுபோன்ற வகைமாதிரிகள் வேறுபட்ட விதத்தில் செயலாற்ற வேண்டும்.
10 நாடுகளில் தொடங்கியிருக்கிறோம். விரைவில் வளர்ச்சியாக வேண்டும். அதற்குப் பார்வை எத்தனை கிடைத்திருக்கிறது, அந்தச் சேனலின் தரமட்டம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட 6 மாத காலம் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அதன்பிறகு பணம் வழங்கப்படும் நிலையில் நிச்சயித்த தொகை உறுதியாகக் கிடைக்கும்.
கேள்வி: நம்பிக்கை, பாதுகாப்பு பற்றிப் பேசுவோம். தயாரிப்புகளின் தலைவர் என்ற வகையில் உங்களிடம் அறிக்கை தருவது எவ்வாறு நடக்கிறது..?
பதில்: சமூக வழிகாட்டுதல் இன்றி யூ-ட்யூப் அனுபவத்தைக் கற்பனை செய்ய முடியாது. எங்களுடைய முழுமையான சூழல் அமைப்பே பார்வையாளர்கள், படைப்பாளிகள், விளம்பரதாரர்கள் ஆகியோரைக் கொண்டதுதான்.
அடுத்தது இன்னும் நுட்பமானது. இது யூ-ட்யூப் செயல்படும் முறையைப் பொறுத்தது. அதாவது மேடையேறும் வீடியோக்கள் எங்களது பரிந்துரைக்கும் அமைப்பை, தரவரிசைப் படுத்தும் முறைமையை, தேடித் தெளியும் வழியைப் பறைசாற்றுகின்றன. படைப்பாளிகளில் 99.9 பேர் சரியானதைச் செய்ய முனைபவர்கள். அதன் மூலம் மட்டும் வெகுமதி பெறுபவர்கள்.
எங்கள் சூழலமைப்பின் பொறுப்பை நான்கு R-களைக் கொண்டு கட்டமைத்திருக்கிறோம்.
(4 R கள் என்பதை உலக வழக்கில் இவ்வாறு அடையாளப்படுத்துகிறார்கள்: Respect (மரியாதை), Relevance (சம்பந்தம்), Reciprocity (பரஸ்பரம்), and Responsibility (பொறுப்பு) (மொ-ர்)
முதல் R : சமூக வழிகாட்டல் என்ற நெறியை மீறும் உள்ளடக்கத்தினை அகற்றி விடுவது. (Remove)
இரண்டாவது R : அதிகாரப்பூர்வ உள்ளடக்கத்தை வளர்த்தெடுப்பது.
பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்கிறோம். COVID பற்றிய அதிகாரபூர்வச் செய்தி ஆதாரங்கள் உள்ளன. சுகாதார அதிகாரிகளின், மருத்துவத் தகவல்கள் கொண்ட வீடியோக்கள் தகவல் தொகுப்பாக விளங்குகின்றன. (Raising up authoritative content)
மூன்றாவது R : தெளிவற்ற தகவல்கள், தீங்கு தரும் தவறான செய்திகளைச் சமூக வழிகாட்டல் அடிப்படையில் குறைத்துக் கொள்வது. (Reducing)
நான்காவது R : இவையனைத்தையும் ஒருங்கு திரட்டி வெகுமதியாகத் தருவது. (Reward)
இவற்றால் பயனர்களுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த அனுபவத்தையும் நிர்வகிக்கிறோம்; பார்வையாளர்களை உருவாக்குகிறோம்; வர்த்தகத்தைக் கட்டமைக்கிறோம்.
கேள்வி: முதல் இரண்டு R-களில் கவனம் செலுத்துவோம். ஒரு கட்டளை விதியைப் பரிந்துரைக்கிறீர்கள். இன்னும் நல்ல வீடியோக்களைக் காட்டுவது, தெளிவில்லாதவற்றைக் குறைப்பது என்பது சரிதான். இதையெல்லாம் செயலாக்கும் குழு எத்தகையது..?
பதில்: எண்ணிக்கை இருக்கட்டும். சிறந்த பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், UX வடிவமைப்பாளர்கள் அதில் இருக்கின்றனர். அதன் மேம்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு.
எங்களிடம் உள்ளவை வெறும் பரிந்துரை, தரவரிசை தரும் கிடங்கு அல்ல. உதாரணமாக கோவிட் அல்லது கொரோனா வைரஸ் தகவல்கள் – என யூ-ட்யூபில் தேடினால் கட்டுரைகள், சுகாதாரத்துறை அறிவிப்புகள், WHO -இன் நடவடிக்கைகள் என முழுமையான விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
உண்மையில் கோவிட் பற்றி மட்டும் 6000 மில்லியன் தேடல்கள் பதிவாகியிருக்கின்றன. ஒவ்வொரு குடும்பமும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமா என்பது வரை தகவல் ஆதாரங்களைத் தந்திருக்கிறோம். இது உயர்த்துதல், குறைத்தல் பற்றிய பரிந்துரைக்குப் பொருந்தும்.
இவை கண்டுபிடிப்புகள் என்ற வகையைச் சாரும். இதைப்போலவே பல உள்ளன. நாங்கள் மையப்படுத்துவது பரிந்துரையைத்தான்.
யூ-ட்யூபின் செயல்பாடுகள் முழுமைக்கும் பரிந்துரைக்கும் குழு பெரியதுதான். ஒரு காலத்தில் பதிவிடும் வீடியோக்கள் சுவாரசியமானதா, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது முக்கியமாக இருந்திருக்கும். தற்போது அதன் போதாமையை உணர்ந்து கொண்டோம்.
பார்வைக்கு உள்ளாகும் வீடியோக்களின் தரத்தை அளவிடும் நிலைக்குப் பரிணமித்தோம். வீடியோவை உண்மையில் முழுமையாகப் பார்க்கிறார்களா என்பதை எங்கள் குழு ஆராய்ந்தது. அது ஈடுபாடு, திருப்தியைப் பொறுத்தது என்பதைப் புரிந்து கொண்டோம்.
இதன் மீதுதான் ஒட்டு மொத்தப் பொறுப்புணர்வையும் மேலடுக்காக வைத்தோம். பரிந்துரைத்த கணக்கீடுகள் அதிகாரபூர்வ உள்ளடக்கங்களின் தரத்தை உயர்த்துகிறதா, குறைக்கிறதா என்பதையும் கவனித்தோம். இதன் மூலம் விதியை மீறும் உள்ளடக்கங்களின் பார்வைகள் வெகுவாகக் குறைந்திருப்பதையும் கண்டோம். இதற்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன.
கேள்வி: யூ-ட்யூபின் உள்ளே பரிந்துரை அளவீடுகளால் நிறைந்த முற்போக்கான விவாதங்கள் நடப்பதாகக் கேள்விப் படுகிறோம். உங்களுடைய அளவீடுகள், கைக்கொள்ளும் விதம் ஆகியவை பற்றிச் சொல்லுங்கள்..
பதில்: இதுகுறித்து வெளியே ஆய்வுகள் நடந்துள்ளன. பென்சில்வேனியா, ஹார்வர்டு பல்கலைக் கழகங்கள் நடத்திய ஆய்வுகளில் எதையும் காண முடிவதில்லை என்று நினைக்கிறேன். யூ-ட்யூப் பார்வையாளர்கள் ஓர் ஊடக நுகர்வுப் பழக்கத்தினர் மட்டுமே என்று அவர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அனுபவங்கள் அல்லவா இருக்கும்..?
உயர்த்துதல், குறைத்தல் பற்றிய கவனம் இதற்கான முழுமையான அர்த்தத்தைக் கொடுக்கிற அதிகாரப்பூர்வ உள்ளடக்கங்களை மேம்படுத்துகிறோமா என்பது முக்கியம். இப்போது சரியில்லா விட்டாலும் பிறகு எப்போதும் சிறப்பாக இருக்க முயல்வோம்.
கேள்வி: யூ-ட்யூபின் இன்னொரு உள்ளடக்க மதிப்பாய்வு அமைப்பான Content ID பற்றி அறிந்து கொள்ள ஆவல். பயனர்களிடம் கேட்டபோது, ஒரு தானியங்கு பதிப்புரிமை அமைப்பு யூ-ட்யூபில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதில் சில உங்கள் கைகளில் இல்லை. டிஜிட்டல் மிலினியம் பதிப்புரிமைச் சட்டம் அதைக் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இன்னும் பல வேலைகள் நடக்கின்றன. ஆனால் உலக வரலாற்றில் ஆகப்பெரும் தானியங்கு காப்புரிமை அமலாக்க அமைப்பு உங்களிடம்தான் உள்ளது. சரிதானா..?
பதில்: ஒரு தயாரிப்பு, அதன் தொழில் நுட்பம் என்கிற கண்ணோட்டத்தில் படைப்பாளர்களுக்கும், உரிமை வைத்திருப்பவர் களுக்கும் இது புதிய அனுபவத்தைத் தருவது. நம்ப முடியாத அளவிற்குப் பயனர் அனுபவங்களை இது வழங்கியிருக்கிறது. எங்களது மற்ற படைப்புகளை நாளுக்கு நாள் மெருகேறச் செய்வது எமது வேலை. Content ID ஐப் பொறுத்தவரை, இயன்ற அளவுக்கு நாங்கள் சாதிக்க முயல்கிறோம். சில கட்டுப்பாடுகளைக் குறிப்பிட்டீர்கள். எங்களின் அடிப்படைக் கொள்கையே தளத்திலுள்ள உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுடன், உரிமைதாரர்களின் தேவையைச் சமநிலைப் படுத்த முயல்வதுதான்.
கேள்வி: Content ID தற்பொழுது எவ்வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்.?
பதில்: பயன்பாட்டில் எளிமை, வெளிப்படைத்தன்மை – இவைதான் நாங்கள் உண்மையில் கவனம் செலுத்திய பகுதி. சட்டரீதியான கட்டுப்பாடுகளுக்கும் உடன்படுகிறோம். உரிமைப் பாதுகாப்பு, நியாயமான பயன்பாடுகளுக்காகச் செயல்படும் ஏராளமான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். யூ-ட்யூபில் நாங்கள் செய்திருப்பது இன்னும் மேலதிக வெளிப்படைத் தன்மையை.
ஆகவே படைப்பாளர்களுக்கும் உரிமைதாரர் களுக்கும் அந்தத் திறன்களை தடையற்ற முறையில் கிடைக்கச் செய்திருக்கிறோம். முதலீடுகளையும் அதையொட்டியே அமைத்துக் கொள்கிறோம்.
கேள்வி: உங்களிடம் மிகப்பெரிய தானியங்கு உள்ளடக்க அளவீட்டு முறை உள்ளது. ஒரு பரிந்துரைக் கணக்கீடும் உள்ளது. மேலும் சமூக வழிகாட்டல் குழுவும் உண்டு. இவையெல்லாம் சேர்ந்து வேறொரு மிதமான அமைப்பை நோக்கி நகர்கிறதா..?
Content ID -யிலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்..? எதைத் தவிர்க்கப் போகிறீர்கள்..?
பதில்: இதன் பொதுவான இழை என்பது சிறந்த தொழில்நுட்பம் என்பதுதான். உள்ளடக்கம் உருவாக்குபவர்கள், உரிமைதாரர்கள் இருவருக்கும் இது தக்க சேவை செய்திருப்பதாக நம்புகிறேன். மில்லியன் கணக்கான டாலர்கள் பொருளிய மதிப்பைச் செயல்படுத்திய அமைப்புதான் மேலே சொன்னது.
கேள்வி: மதிப்பீட்டு வேலைப்பிரிவு – என ஒன்று கூகுளுக்காகப் பணியாற்றுகிறதா..? அது உங்களது குழுக்களின் அங்கமா..? அல்லது ஒப்பந்ததாரர்களா..?
பதில்: இதில் பல கூறுகள் உள்ளன. உயர்மட்டத்தில் அந்த அணியில் உள்ளவர்கள் யூ-ட்யூபில் பணியாற்றுபவர்கள். மேலும் அளவு மற்றும் எண்ணிக்கையைக் கொண்டு பணிகளைச் செய்து தர உலகு முழுவதும் எங்களுக்குக் கூட்டாளர்களும் இருக்கிறார்கள். நன்றாகப் பயிற்சி பெற்ற அவர்களின் பணி, எல்லாச் சவால்களையும் எதிர்கொள்ளும். ஆகவே இது முழுநேர யூ-ட்யூப் பணியாளர்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட பணியாளர்களின் கலவை ஆகும்.
கேள்வி: தளங்களை மட்டுப்படுத்துவது தொடர்பான உரையாடலில் ஒன்றைக் கவனிக்கலாம். மக்கள் கூறுவது : நம் நேரம் முழுவதையும் ட்விட்டர், பேஸ்புக் பார்ப்பதில் செலவிடுகிறோம். அவற்றின் பின்னணியில் யூ-ட்யூப் ஸ்லைடுகள் தென்படுகின்றன. இது விரக்தியைத் தருவது.
கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் சொல்வது: ட்விட்டர் பெறும் கவனத்தை யூ-ட்யூப் பெறவில்லை. இவற்றிற்கு உங்கள் பதில் என்ன..?
நீங்கள் இன்னும் விவாதங்களில் கவனம் செலுத்துகிறீர்களா..? தவறான தகவல் பரப்பு வதற்கான தடைச் சட்டப் பிரிவு – 230 பற்றிய வழிகாட்டல் உங்களிடம் இருக்கிறதா..? அல்லது பணிக்குழுவில் இருந்து ஒருவர் வந்து விசாரணைக்கு இழுத்துச் செல்லவேண்டும் என்று காத்திருக்கிறீர்களா..?
பதில்: உலகளாவிய தளத்தைப் பொறுத்துப் பேசியதெல்லாம் நான் கவனம் செலுத்தும் ஒன்றுதான். அதை சூசன் வோஜ்சிக்கியும் கவனிக்கிறார். உண்மையில் எனது முன்னுரிமை இது. காரணம், யூ-ட்யூபிலுள்ள எங்கள் பார்வையாளர்கள், படைப்பாளிகள் மற்றும் உரிமைதாரர்களின் அனுபவத்தின் அடிப்படைப் பகுதியாக இது இருப்பதுதான். மேலும் இதற்காகத்தான் ஆயிரக் கணக்கான பேர் பணியாற்றுகிறார்கள்.
கேள்வி: யூ-ட்யூப் நீண்டகாலமாக ஆப்பிள் டிவி 4K-ல் இல்லை. தற்போது உள்ளது. எதனால் இந்த மாற்றம்..? ஆப்பிளோடு என்ன சண்டை..?
பதில்: குறிப்பிட்ட விவரங்களுக்குள் நான் செல்லமுடியாது என்று நினைக்கிறேன். ஆனால் எல்லா அம்சங்களும் எங்களுடைய பரப்பில், கூடிய விரைவில் கொண்டுவரப் படவேண்டும் என்பது இலக்காகும். சில நேரங்களில் பல்வேறு தளங்களில் நிலவும் எதார்த்தச் சூழல் எங்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் எல்லாம் எங்கள் பரப்பிற்கும் வந்தாக வேண்டும்.
கேள்வி: அந்த வாதத்தில் வெற்றி பெற்றது நீங்களா..? அவர்களா..?
பதில்: நடந்து கொண்டிருக்கும் உரையாடல் பற்றிய விவரங்களுக்குள் நான் செல்ல முடியாது.
கேள்வி: டிவியில் 1.5 வேகத்தில் யூ-ட்யூபை எப்போது பார்க்கலாம்..? ஏனென்றால் எனது குரோம்செட் அல்லது ஆப்பிள் டிவியில் அதைப் பார்க்க முடியவில்லை..
பதில்: இது நல்ல கேள்வி. ஆனால் என்னால் ஒரு காலக்கெடு கொடுக்க முடியாது. ஆயினும் இது எனக்கு விடுக்கப்பட்ட முதல் கோரிக்கையல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி: சரி.. ஸ்மார்ட் டிவிகளில் யூ-ட்யூப் பார்வை எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறது. யூ-ட்யூப் டிவியையும் நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள். எனவே, இப்போது உங்களிடம் இரண்டு செயலிகள் உள்ளன. ஆனால் அவை வேறுபட்ட வணிக மாதிரிகளோடு போட்டியிடுபவை. இதில் அடிப்படை யூ-ட்யூபானது, யூ-ட்யூப் டிவியை முந்திவிடும் என்று நினைக்கிறீர்களா..?
பதில்: முந்துவது என்றால் லிவிங்ரூம் சாதனங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை யையா..? அதாவது..
கேள்வி: யூ-ட்யூப் டிவியானது, சாதாரண டிவிக்கு மாற்றாகி விட்டதா..?
பதில்: எப்போதும் அப்படியிருக்கும் என நான் நினைக்கவில்லை. உங்கள் அனுபவத்திலேயே இரு வேறுபட்ட பயன்பாட்டு அளவிலான மாதிரிகள் இருக்கும். லீனியர் ஒளிபரப்பு அல்லது கேபிள், இன்னும் யூ-ட்யூபின் தேவைக்கேற்பச் செய்திகள், விளையாட்டு போன்றவற்றை வீடியோ வடிவில் தந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் எதிர்காலத்தில் எப்படிச் சிந்திப்போம் என்பதைக் காணக் காத்திருங்கள்.
கேள்வி: யூ-ட்யூப் டிவி உங்கள் பொறுப்பில் இருக்கிறது. அதன் எதிர்காலம் பற்றி..
பதில்: எதிர்காலம் பற்றி இப்போது பேச இயலாது. யூ-ட்யூப் டிவியில் நீங்கள் பார்த்த பெரும்பாலானவை பயனர்களின் தேவைக்கேற்ப இயக்கப் பட்டவை. அதன் உள்ளடக்கத்தையும் வெளிப்படையாக யூ-ட்யூப் தொகுப்பில் சேர்க்குமாறு பயனர்கள் கேட்டுள்ளனர்.
அவர்கள் கேட்டவாறு கூடுதல் நிரல்களை எளிமையாக்கிச் சேர்ப்பதை நிறைவேற்றப் போகிறோம். கூடுதல் கட்டணமும் இருக்காது என்பது உறுதி.
கேள்வி: என்னுடைய போன் அல்லது ஐபேடில் எப்போது பிக்சர் – இன் – பிக்சரைப் பார்க்கலாம்..?
பதில்: இதற்கும் காலக்கெடு இல்லை. தொழில் நுட்பச் செயலாக்கம் தொடர்பானது என்பதால் விரைவான பதில் தர இயலவில்லை.
கேள்வி: அது ஒப்பந்தப் பிரச்னையா..? தொழில்நுட்பப் பிரச்னையா..?
பதில்: விவரங்கள் என்னிடம் இல்லாதிருக் கலாம். ஆனால் இதுவும் பயனர்கள் ஏற்கெனவே கேட்ட கேள்வி என்பது எனக்குத் தெரியும். ஆம்..ஆம்..முதலிலேயே கேட்ட கேள்வி.
கேள்வி: நான் ஒரு குழுவை நடத்துகிறேன். தளத்தில் நான் விரும்புகிற விஷயங்களைக் குவித்து வைத்து ஒன்றை மேலே கொண்டுவர நினைக்கிறேன். நீங்கள்தான் யூ ட்யூபின் தலைவர். எனது சேகரங்கள் மேலே வர என்ன அம்சங்கள் தேவைப்படுகின்றன..?
பதில்: ஆகா.. அருமை. சுவாரசியமான கேள்வி. உதாரணமாக ஷார்ட்ஸை எடுத்துக் கொள்ளலாம். அது எல்லா அம்சங்களும் பொருந்திய தயாரிப்பு அல்ல. மேலும் நான் எவ்வகையிலும் திறமையான படைப்பாளியும் அல்ல. ஆனால் எங்கள் தயாரிப்புகளோடுதான் ஊடாடி வருகிறேன். தரமான ஃபில்டர்கள், நல்ல எடிட்டிங் கருவிகள் – இவைதான் அதற்குத் தேவை. எங்கள் குழுக்கள் அதற்காக வேலை செய்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு இதைக் கேட்டிருந்தால் நான் சில அம்சங்களைப் பற்றியும் சொல்லியிருக்கக் கூடும்.
கேள்வி: யூட்யூபில் அடுத்து என்ன..? மக்கள் உங்கள் குழுவிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்..?
பதில்: பல விஷயங்களை நாங்கள் தந்துவிட்டதாகக் கருதுகிறோம். மொபைல் போனில் படைப்பு உருவாக்கம், குறும்படத் தயாரிப்பு ஆகிய இரண்டு வகைக்கும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்.
முதலீட்டின் மற்றொரு பெரிய பகுதி, படைப்பாளிகளுக்கான பணமாக்கல் தொடர்பான நிலைகளை உருவாக்க ‘சூப்பர் தேங்க்ஸ்’ என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளோம். அதையும் பாருங்கள்.
நாம் பேசாத பகுதி ஒன்றுண்டு. ஷாப்பிங், வர்த்தகம் இரண்டும்தான் அவை. பார்வையாளர்கள், படைப்பாளிகள் இணையும் இடம் அது. அடுத்த ஆண்டு வரை அதற்கு முன்னுரிமை உண்டு. மேலும் அதைத் தயாரிப்பு, கொள்கை நிலைபாடுகளிலிருந்து பொறுப்புத் தரும் முயற்சி எனக் கருதுகிறோம். ஆகவே அதற்குத் தலையாய இடம் உண்டு – எப்போதும்.
நன்றி: The Verge, ஆகஸ்ட் 3, 2021.
***
தமிழின் நவீன இலக்கிய தளத்தில் கவனம் பெறத்தக்க மொழிபெயர்ப்பாளராக இருக்கும் அவை நாயகன் கவிஞர், புனைவு எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர். இவரது 3 கவிதைத்தொகுப்புகள், சூழலியல் சார்ந்த கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவரது மொழியாக்கத்தில் வெளிவந்த, புகழ் பெற்ற கறுப்பினக் கவிஞரான மாயா ஏஞ்சலோ வின் “கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது” என்கிற நூல் தமிழ்ச் சூழலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தற்போது, ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவாவின் திரைப்படமான Dersu Uzala வின் மூலநூலான, ரஷ்ய எழுத்தாளர் Vladimir Arsenyev எழுதிய Dersu Uzala நூலை தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார்.