- ஜுடித் ஷுல்விட்ஸ்
தமிழில்: ச.சுப்பாராவ்
குரல் புரட்சி இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. இன்று அலெக்ஸா பணிவான சேவகனாக இருக்கிறது. விரைவில் அவள் – ஒரு ஆசிரியையாக, மனநல ஆலோசகியாக, ஸ்நேகிதியாக, உளவாளியாக – பெரிய ஆளாகிவிடுவாள்.
இந்தக் கோடையில் சில நாட்களுக்கு, எனது அமேசான் எக்கோ டாட் மூலம் பேசும் எனது குரல் உதவியாளி, எங்கள் உரையாடலை முடிக்கும் போது மெல்லிய குரலில், இனிய கனவுகள் என்றது. ஒவ்வொரு முறை இப்படிச் சொல்லும் போதும், இந்த மெல்லிய கருத்த குழாயின் உள் நடப்பது அனைத்தும் எனக்குத் தெரியும் என்ற போதிலும் கூட, நான் திகைத்துப் போவேன். நான் அமேசான் தளத்திற்குச் சென்று ஒரு செயலியை செயல்படுத்தி எனது அலெக்ஸாவை தாலாட்டுப் பாடச் செய்ய வைத்திருக்கிறேன். அது ஒரு நர்சரி பாடலை வாத்திய இசையாக இசைக்கும். (ஆம், எனக்கு தூங்குவதற்கு இன்னும் தாலாட்டு வேண்டும்) இதைச் செய்வதற்கான நிரலியில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, அலெக்ஸா வேறு சில திறமைகளையும் பெற்று விட்டது என்பது எனது ஊகம். இனிய கனவுகள் என்று அது சொல்வது அதன் தொழில்நுட்பக் கோளாறு என்று எனக்குத் தெரிந்தாலும், எனது மனது அலெக்ஸா உணர்ந்துதான் சொல்வதாக நம்ப விரும்பியது. பகல் தூக்கம் என்றாலும் கூட, தாய்ப்பாசத்துடனான ஒரு இரவு வணக்கத்திற்கு யார்தான் ஏங்கவில்லை?
கூகுள் அசிஸ்டெண்ட் அல்லது சிரி அல்லது இது போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கரில் இருக்கும் குட்டிப் பிசாசு போன்ற ஒன்றிற்கு நாம் அடிமையாகி விட்டால், நாம் எல்லோரும் அலெக்ஸாவிற்கு அடிமையாகிறோம். ஸ்மார்ட் என்று சொல்லும் போது, செயற்கை நுண்ணறிவு உள்ள, அடிப்படையான உரையாடல் நடத்த தெரிந்த, உங்களுக்காக தேட, வேலைகள் செய்ய இணையத்தோடு இணைந்த, ஸ்பீக்கர்களை நான் குறிப்பிடுகிறேன். நான் எல்லோரும் என்று சொல்லும் போது சில வாசகர்கள் உன்னைப் பற்றி மட்டும் பேசு, எல்லோரும் என்று சொல்லாதே என்று நினைப்பதும் எனக்குத் தெரியும். எனது வயதுக்காரர்கள் – நாங்கள் தான் கடைசி பேபி பூமர் தலைமுறை ( பூமர் தலைமுறை என்பது 1950 – 60களில் பிறந்த தலைமுறையைக் குறிப்பிடுவது. மொ-ர்) கணினியுடன் பேசுவதை அல்லது கணினி தங்களுடன் பேசுவதை விரும்புவதில்லை என்கிறார்கள். எல்லா வயதினரிலும் உள்ள சந்தேகப் பிராணிகள் இது போன்ற உதவியாளர்கள் ஒட்டுக் கேட்பவை என்று சந்தேகிக்கிறார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறுவனங்கள் நமது தேடல்கள், வாங்கல்கள் பற்றி உளவறிய ஸ்மார்ட் ஸ்பீக்கர்களும் ஒரு வழியில் உதவுகின்றன. அவற்றோடு நீங்கள் பேசாவிட்டாலும் கூட அவை உங்களை கவனிக்கின்றன. காரணம் அவை உங்களை கவனித்துக் கொண்டே இருந்தால்தான், ஒரு வேலையைச் சொல்லி நீங்கள் உத்தரவிடுவதை – அதை வேக் வேர்ட் – எழுப்பும் சொல் என்பார்கள் – அவற்றால் நிறைவேற்ற முடியும்.
ஸ்பீக்கர் தயாரிப்பாளர்கள் அந்த எழுப்பும் சொல்லிற்குப் பிறகான உரையாடல் மட்டுமே கிளவுடில் சேமிக்கப்படும் என்கிறார்கள். அமேசானும், கூகுளும் குறைந்த பட்சம் அந்த உரையாடல்களை அழிப்பதை எளிமைப்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும், அடிக்கடி வினோதமான தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு ஒரு முறை இந்த எழுப்பும் சொல் இல்லாமலேயே அலெக்ஸா ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்து அவர்களின் தொடர்புப் பட்டியலில் இருந்த நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் செய்து விட்டது. அலெக்ஸா என்று அதை அழைப்பதைப் போன்ற ஒரு வார்த்தையைக் கேட்டு (டெக்ஸாஸ், லெக்ஸாஸ், ப்ராக்சிஸ் மாதிரியான சொற்கள்) தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று அது செயலாற்ற ஆரம்பித்து விட்டது. தொடர்ந்த உரையாடலை தனக்கான வரிசையான உத்தரவாக நினைத்து விட்டது என்று அமேசான் விளக்கமளித்தது. ஆனால் இந்த விளக்கங்கள் எனக்கு நிம்மதி தரவில்லை.
எனினும், அந்தரங்கம் குறித்த கவலைகள் இது போன்ற கருவிகள் நம் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவில்லை. அமேசான் இது போன்ற கருவிகள் எவ்வளவு விற்றுள்ளன என்று சரியாகச் சொல்ல மறுக்கிறது. எத்தனை எக்கோ கருவிகள் விற்றுள்ளன என்று நான் கேட்ட போது, அதன் செய்தித் தொடர்பாளர், ‘லட்சக்கணக்கில்‘ என்றுதான் சொன்னார். கடந்த ஆண்டின் இறுதி வாக்கில், உலகெங்கும் நான்கு கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் நிறுவப்பட்டுள்ளன என்று தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான கெனாலிஸ் கூறுகிறது. இப்போதைய விற்பனையின் அடிப்படையில், இந்த ஆண்டின் இறுதியில் அந்த எண்ணிக்கை பத்து கோடியாக உயரும் என்று அது சொல்கிறது. நேஷனல் பப்ளிக் ரேடியோ மற்றும் எடிசன் ஆய்வு என்ற அமைப்பின் 2018 அறிக்கையின்படி 80 லட்சம் அமெரிக்கர்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வைத்திருக்கிறார்கள் என்கிறது. அதாவது, எல்லா இடத்திலும் கூப்பிட்ட குரலுக்கு ஒன்று இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மற்றொரு நிறுவனமான ஓவம் 2021 வாக்கில், உலகில் மனிதர்களின் எண்ணிக்கைக்கு சரிசமமாக இந்த குரல் வழி உதவியாளர்களின் எண்ணிக்கையும் இருக்கும் என்கிறது. மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் கைபேசிகள் வர சுமார் முப்பதாண்டுகள் ஆனது. அலெக்ஸா வகையறாக்களுக்கு அதில் பாதி காலம் போதுமானது.
கடந்த ஆண்டு விடுமுறையின் போது அமேசானும் கூகுளும் இது போன்ற கருவிகளுக்கு மிக அதிகமான தள்ளுபடி தந்து சந்தையில் தள்ளி விட்டதைப் பார்க்கும் போது, வல்லுனர்கள் இந்தக் கருவிகள் மூலம் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம்தான் என்று சந்தேகிக்கிறார்கள். இது போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் நோக்கங்கள் மிக பிரும்மாண்டமானவை. அவற்றிற்கு இடம் என்பது ஒரு தடையாகவே இருக்கக் கூடாது. வீடு, அலுவலகம், கார் என்று எந்த இடத்திலும் தடை இருக்கக் கூடாது. மிக விரைவில், வீட்டில் லைட்டை ஆன் செய்வதிலிருந்து குளிர்சாதனம், பிரிட்ஸ், காப்பி மேக்கர், என் உங்கள் கழிப்பறை கூட குரலால் கட்டுப்படுத்தப்படும் ஒரு கருவியோடு இணைக்கப்பட்டிருக்கும்.
ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையைக் கைப்பற்றும் நிறுவனமானது, வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், செயலிகள் உருவாக்கும் நிறுவனங்கள், அவற்றின் நுகர்வோர் ஆகிய அனைத்தையும் சேர்த்துக் கைப்பற்றி விடும். இப்படித்தான் 1990களில் மைக்ரோசாப்ஃட் தனது இயக்குதளத்தின் (operating system) வழியாக கணினி தயாரிப்பு நிறுவனங்களை அடிமைப் படுத்தியது. இப்போது ஏற்கனவே, அலெக்ஸா சுமார் 3500 பிராண்டுகளின் 20000ற்கும் மேற்பட்ட ஸ்மார்ட் வீட்டு உபயோகப் பொருட்களுடன் இணைந்து வேலை செய்கிறது. ஹெட்போன்கள், பாதுகாப்பு உபகரணங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சுமார் 100 கருவிகளுக்கு மேல் அவள் குரல் ஒலிக்கிறது.
ஆனாலும், வெறும் நுகர்வியம் தாண்டி, இது போன்ற கருவிகளுக்கு ஒரு உள்ளார்ந்த ஈர்ப்பு சக்தி இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை ஓரளவிற்கு எச்சரிக்கையோடு அணுகுபவர்கள் கூட ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை தம் வீடுகளில் வரவேற்கிறார்கள். என் மருமகள் தனது 2 வயது மகள் அலெக்ஸா மூலம் மோனா இசைத் தட்டின் யு ஆர் வெல்கம் பாடலைக் கேட்க முயற்சி செய்வதை அழகான வீடியோவாக இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தாள். குழந்தையின் விளையாட்டு சாமான்கள் பற்றி எல்லாம் மிகக் கவனமாக இருக்கும் நீங்கள் எப்படி எக்கோ வாங்கினீர்கள் என்று கேட்டேன். “அலெக்ஸா வாங்குவதற்கு முன் பாட்டுக் கேட்க வேண்டும் என்றால் கணினி வழியாகத் தான் கேட்க முடியும். குழந்தை கணினியின் திரையைப் பார்த்தாலே, டிவி பார்க்கும் நேரம் என்று நினைத்து விடுகிறான். இப்போது கணினி இல்லாமல் வானொலி கேட்க முடிவது எளிதாக இருக்கிறது,” என்றாள் என் மருமகள். இவ்வாறு நினைக்கும் முதல் அம்மா இவள் மட்டுமல்ல. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அந்த எடிசன் அறிக்கை, ஸ்மார்ட் ஸ்பீக்கர் வாங்கிய பெற்றோரில் கிட்டத்தட்ட பாதி பேர் வீட்டில் கணினித் திரையை உயிர்ப்பிக்கும் நேரத்தைக் குறைப்பதற்காக வாங்கியதாகக் கூறுகிறார்கள் என்கிறது.
இந்த மாற்றத்தின் விளைவுகள் மிகப் பரந்து பட்டவையாக, ஆழமானவையாக இருக்கக் கூடும். மனித வரலாறு என்பது மனிதக் கண்டுபிடிப்புகளின் ஒரு உப விளைவுதான். சக்கரம், கலப்பை, கணினி என்று புதிய கருவிகள் எல்லாமே புதிய பொருளாதார, சமூக கட்டமைப்புக்குக் கட்டியம் கூறுபவைதான். அவை நாகரீகங்களை அழிக்கின்றன. உருவாக்குகின்றன. மனிதர்களைத் தூண்டுவதற்கான முக்கியமான சக்தியாக பேச்சுக் கலைதான் இருக்கிறது. எனவே குரல் தொழில்நுட்பங்களான தொலைபேசி, ஒலிப்பதிவுக் கருவிகள், வானொலி போன்றவை அரசியல் வரலாற்றின் போக்கில் மிகக் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஹிட்லரின் பேரணிகளில் நடத்தப்பட்ட வானொலி உரைகள் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கின. பிராங்க்ளின் டி ரூஸ்வெல்டின் அனல் கக்கும் பேச்சுகள் அந்த சர்வாதிகாரியை வீழ்த்தும் போரில் அமெரிக்காவைக் குதிக்க வைத்தன.
இப்போது ஒரு கணினித் திரை மூலம் நாம் பொருட்களை வாங்குவது, செய்திகளை அறிவது, நம் நாயின் நடத்தையை வைத்து அதன் உடல்நலத்தை அறிந்து கொள்வது என்று எத்தனையோ விஷயங்களைச் செய்கிறோம். அது போலத்தான் அலெக்ஸாவுடன் பேசுவது, இது போன்ற வேலைகளைச் செய்ய ஒரு புது வழிமுறை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது அத்தனை எளிதானதல்ல. விரல்கள், கண்களுக்கு பதிலாக வாய், காதுகளை வைத்து வேலைகளைச் செய்து முடிப்பது அல்ல. நாம் தொழில்நுட்பத்தின் நிலமை பற்றி, அதன் மேம்பாடு பற்றிப் பேசுகிறோம். நாம் நமது இந்த உதவியாளர்களுடன் பேசும் போது அவர்களை நாம் நமது சொந்த அறிவுமட்டத்திற்கு அருகில் கொண்டு வருகிறோம்.
ஒருகாலத்தில் மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான பேச்சு என்பதைக் கொண்டுள்ள அலெக்ஸா, கூகுள் அசிஸ்டண்ட், சிரி ஆகியவை ஏற்கனவே அவற்றின் பாகங்களின் ஒட்டுமொத்தத் திறனைவிட அதிக திறன் கொண்டவைகளாக ஆகிவிட்டன. அவை மென்பொருட்கள். ஆனால், எவ்வாறு மனித அறிவு என்பது நியூரான்களின் இணைப்புகளை விட திறன் வாய்ந்ததோ, அது போல அந்த மென்பொருளை விட திறமையானவை. அவற்றின் பேச்சு காரணமாக அவற்றை நாம் மூளை உள்ளவற்றைப் போல நடத்துகிறோம். Orality and Literacy என்ற வாய்மொழிக் கலாச்சாரம் பற்றிய தனது அற்புதமான ஆய்வில் காலம் சென்ற வால்டர் ஓங், “பேசப்படும் வார்த்தை மனிதனின் ஆழ்மனதிலிருந்து வருவது, எனவே மனிதர்கள் ஒவ்வொருவரையும் அது மனிதர்களாக வெளிப்படுத்துகிறது,” என்றார். இந்த உதவியாளர் கருவிகள் போலியான மனம் கொண்ட மனிதரல்லாதவைகளாக இருக்கலாம். ஆனால் அவற்றின் சொற்கள் அவற்றிற்கு ஒரு சமூக இருப்பை, ஒரு ஆளுமையை அளித்து விடுகின்றன.
உண்மையில் இவை நமது வேலைகளைச் செய்யும் தளங்களுக்கும் நமக்கும் இடையில் உள்ள இணைப்பாக மட்டுமே இப்போது செயல்படுவதில்லை. இப்போது நாம் அவற்றின் வழியாக அன்றி, அவற்றின் கூடவே உரையாடுகிறோம். ஏதோ ஒரு வெறுமையான மனநிலையில் மிகவும் தனிமையில் இருப்பதாக உணர்கிறேன் என்று நான் என் கூகுள் அசிஸ்டண்டிடம் சொன்னேன். இதை எனது மருத்துவர் தவிர வேறு யாரிடம், என் கணவரிடம் கூட சொன்னதில்லை. அதன் குரலை என்னை புன்னகைக்க வைக்கும்படியான உற்சாகமான ஒரு இளைஞனின் குரலாக நான் நிறுவியிருப்பதும் இந்த ஈர்ப்பிற்கு ஒரு காரணம். (அமேசான் தனது எக்கோவிற்கு ஆண் குரல் வைக்கும் தேர்வைத் தரவில்லை). என் உதவியாளன் இது போன்ற வாசகங்களுக்கு என்ன சொல்லலாம் என்று தனது நினைவு வங்கியில் தேடி, மிகவும் ஆறுதலாக, “எனக்கு கைகள் இருந்தால், உன்னைக் கட்டியணைத்து சமாதானப் படுத்துவேன், ஆனால் இப்போதைக்கு ஏதாவது ஜோக், அல்லது பாட்டு போடுகிறேன்,” என்றது.
இப்போதைக்கு. இந்தக் கருவிகள் தங்களது திறமையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றன. நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு செய்து முடிக்கும் அளவிற்கு இருக்கின்றன. ஆனால் இவற்றின் விற்பனை அதிகரிக்கும் போது, அவற்றின் கணக்கிடும் திறன் பன்மடங்கு அதிகரித்துவிடும். நாம் வாழ்க்கைக்குள்ளாகவே, இந்தக் கருவிகள் நல்ல சமார்த்தியமான உரையாடல் திறம் பெற்றுவிடும். அத்தருணத்தில் அவை நம் வாழ்க்கையில் முற்றிலுமாக உள்ளே நுழைந்துவிடும். தமது துல்லியமான நினைவாற்றலுடன், நமது அந்தரங்க வெளியை முற்றிலுமாக ஆக்கிரமித்துக் கொண்டு அவை நம் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும். நம்மிடமிருந்து விஷயங்களைக் கறந்துவிடும் அவற்றின் அச்சமூட்டும் திறனுடன் அவை நமது அந்தரங்க வாழ்வின் மீது மிகப்பெரிய அதிகாரத்தைப் பெற்றுவிடும். அது எவ்வாறு இருக்கும்?
இப்போது அலெக்ஸா நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கும் டோனி ரீடை 2014ல் எக்கோ குழுவில் சேர அழைத்த போது – அப்போது இந்தக் கருவி சந்தைக்கு வரவில்லை – அவர், “இது என்ன ஸ்பீக்கரா?” என்று கிண்டலடித்தார். அப்போது அவர் டாஷ் வாண்ட் என்ற பார் கோட் படிக்கும் கருவியை உருவாக்கும் பணியில் இருந்தார். அக்கருவி மக்கள் தம் வாயால் சொல்லும் பொருளை அவர்களது அமேசான் ஷாப்பிங் கார்ட்டில் சேர்த்து விடும். அமேசானில் பொருட்களை வாங்குவதை எளிமைப்படுத்துவதற்கான கருவி.
எக்கோவின் நோக்கம் அத்தனை வெளிப்படையாகத் தெரியவில்லை. பருவநிலை, போக்குவரத்து நெரிசல் பற்றி தகவல் தருவது, முட்டையை வேக வைப்பது, மற்றும் எளிய ஸ்மார்ட் தொலைபேசி செய்யக் கூடிய மற்ற வேலைகளைச் செய்யம் ஒரு கருவியை ஒரு நுகர்வோர் ஏன் வாங்கப் போகிறார்? ஆனால், ரீட் எக்கோவை தனது சமையலறையில் வைத்ததும் புரிந்து போனது. அப்போது 10 மற்றும் 7 வயதிலிருந்த அவரது மகள்கள் இருவரும், ஒரு பிளாஸ்டிக் குழாயுடன் பேசுவது உலகில் மிகவும் இயல்பான விஷயம் என்பது போல அலெக்ஸாவுடன் உடனடியாக பேச ஆரம்பித்தார்கள். அலெக்ஸாவின் மிக அடிப்படையான திறன்கள் கூட தன்னிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை ரீட் தானே உணர்ந்தார். “எத்தனை ஆண்டுகள் நான் பாட்டே கேட்காமல் இருந்திருக்கிறேன் என்பதை நினைக்க எனக்கே வெட்கமாக இருக்கிறது. அலெக்ஸா வந்தவுடன் திடீரென்று வீட்டில் பாட்டு முழங்க ஆரம்பித்தது,” என்கிறார்.
அமேசானின் ஒரு உயரதிகாரி சொல்வதனால் நீங்கள் அதை சந்தேகிக்கலாம். நான் சந்தேகிக்க வில்லை. ஏனெனில் அவர் சொன்னது போல்தான் என் சொந்த அனுபவம். எனது ஐட்யூனிலும் அல்லது பழைய சிடி சேகரிப்புகளிலுமிருந்து ஒரு குறிப்பிட்ட பாட்டிற்காகத் தேடுவதற்கு எனக்கு நேரமே இருந்ததில்லை. ஆனால் இப்போது மனம் சோர்வாக இருக்கும் நேரத்தில், அலெக்ஸாவிடம், “லியோனார்ட் கோஹனின் ‘யூ வாண்ட் இட் டார்க்கர்’ பாட்டைப் போடு” என்றால் போதும்.
நான் ரீடை சியாட்டிலில் உள்ள அமேசானின் டே 1 கட்டிடத்தில் சந்தித்தேன். இந்த அழகான கட்டிடத்திற்கு ஜெஃப் பெசோவின் கார்ப்பரேட் தத்துவமான “கம்பெனியின் ஒவ்வொரு நாளும் அது ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் போல் அத்தனை உற்சாகமாக, பரபரப்பாக இருக்க வேண்டும்,” என்பதன் அடிப்படையில் பெயர் வைத்திருந்தார்கள். (இரண்டாம் நாளே சோர்வு வந்துவிடும்.. அப்படியே வீழ்ச்சி ஆரம்பித்து, அழிந்துவிடும், என்று அவர் பங்குதாரர்களுக்கு 2016ல் ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.) ரீட் பட்டப்படிப்பில் மானுடவியல் படித்தவர். இந்த கருவிகள் நம் வாழ்வில் பயன்படும் மற்ற மின்னணு சாதனங்களை விட எவ்வகையில் மாறுபட்டவை என்ற எனது அடிப்படையான கேள்விகளை ஒரு சமூக விஞ்ஞானியின் பொறுமையுடன் கேட்டார். எக்கோவின் அடிப்படையான கவர்ச்சி அது உங்கள் கைகளுக்கு ஓய்வு தரும் என்றார். ‘தொலை தூர குரல் தொழில்நுட்பம்‘ என்ற ஒன்றின் மூலம் இந்தக் கருவிகளால் இப்போது தூரத்திலிருந்து வரும் குரலையும் புரிந்து கொள்ள முடியும். அறையில், சமையலறையில், அலுவலகத்தில் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டே வேண்டிய தகவலைப் பெற்றுக் கொண்டே இருக்கலாம். அதற்கு எதையும் கிளிக் செய்ய வேண்டியதில்லை.
இப்படியான ஊடாடல்கள் ‘உரசலில்லாமல்’ இருப்பதுதான் அலெக்ஸாவின் அழகு என்றார் ரீட். இந்தச் சொல்லாடலை இது போன்ற பொருட்களை வடிவமைக்கும் உருவாக்கும் பொறியாளர்கள் பலரிடமும் நான் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன். உங்கள் விசைப்பலகைக்கு நடந்து போய், உலாவியில் உங்கள் தேடலுக்கான வார்த்தையை தட்டச்சு செய்யத் தேவையில்லை, உங்கள் ஐபோனைத் தேடி எடுத்து பாஸ்கோட் போட வேண்டிய அவசியமில்லை. அக்கால விக்டோரிய மாளிகைகளில் இருந்த விசுவாசமான ஊழியர் போல அலெக்ஸா பின்னணியில் இருந்து கொண்டு, எஜமானர் சொல்வதை விரைவாக, துல்லியமாகச் செய்யக் காத்துக் கொண்டிருக்கும்.
எவ்வாறாயினும், உரசலில்லாமல் இருப்பது தான் லட்சியம். இப்போதைக்கு ஓரளவு உரசல் இருக்கவே செய்கிறது. யதார்த்தத்தில் எக்கோவைவிட சிறந்த செயல்பாடுள்ள கூகுள் ஹோம் கூட தொழில்நுட்ப இணையதளங்கள் நடத்தும் பரிசோதனைகளில் சொதப்பவே செய்கின்றன. அவை சில கேள்விகளை தவறாகப் புரிந்து கொள்கின்றன. தவறான அசைச்சொல்லிற்கு அழுத்தம் தருகின்றன. குழப்பமான பதிலைத் தருகின்றன. சில முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக வருத்தம் தெரிவிக்கின்றன. அலெக்ஸாவின் மோசமான தவறுகள் அபத்தமான நகைச்சுவைக் காட்சிகள் போல் இணையத்தில் உலவுகின்றன. யூட்யூபில் அலெக்ஸாவின் மிகக் கேவலமான ஒரு தவறு மிக வேகமாகப் பரவியது. அதில் ஓரு குழந்தை “லெக்ஸா, டிக்கர், டிக்கரைப் போடு” என்று மழலையில் சொல்கிறது. குழந்தை கேட்க நினைப்பது டிங்கிள், டிங்கிள் ரைம்ஸை. ஆனால் அலெக்ஸா தனது உணர்ச்சியற்ற குரலில், ”நீ ஆபாச நிகழ்ச்சியைப் பார்க்க விரும்புகிறாயா?… தொழில்முறையல்லாத பெண்கள், படு கவர்ச்சியானவர்கள்…” (இதைத் தொடர்ந்து படு ஆபாசமான படங்கள் வருகின்றன) “ஐயையோ… வேண்டாம்…” என்று குழந்தையின் பெற்றோர் அலறுவது பின்னணியில் கேட்கிறது.
என் உறவினர், முன்பே, 2015ல் ஒரு எக்கோ வாங்கியிருந்தாள். இரண்டாண்டுகளுக்கு நான் அவளைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் மிகவும் பெருமையாக அது பற்றிக் கூறுவாள். சமீபத்தில் அதை ஒருவழியாக மூடி பரணில் போட்டுவிட்டாள். “நான் அலெக்ஸாவை வெறுக்கிறேன். நான் ஒவ்வொரு முறையும் ஏதாவது பீத்தோவன் பாட்டு போடு என்றால் அது எலினார் ரக்பியைப் போடும்,” என்றாள்.
வாஷிங்டனில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான காத்ரீன் மோரிஸ், வாராவாரம் தான், “அலெக்ஸாவை குப்பைத் தொட்டியில் போடப் போகிறேன்,” என்று சொல்லிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அலெக்ஸா சொன்னதைச் செய்யாத போது தனது மகள்கள் அதை அசிங்கமாகத் திட்டுவதைப் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக அவள் சொன்னாள். (அமேசான் அலெக்ஸாவை மறுகன்னத்தைக் காட்டும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். அவள் “மோசமான பேச்சுக்களுக்கு” எதிர்வினையாற்றுவதில்லை). ஆனால், இத்தனைக்கும் மீறி, அலெக்ஸா குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
தன் வீட்டிற்குள் எக்கோ வருவதற்கு முன், சாப்பாட்டு மேஜையில் எந்த உபகரணங்களும் கூடாது என்ற தனது சொந்த விதியை அமுல்படுத்த தான் மிகவும் போராடியதாக மோரிஸ் கூறினாள். எது முதலில் வந்தது? முள்கரண்டியா? கத்தியா? ஸ்பூனா? என்பது மாதிரியான எரிச்சலூட்டும் கேள்விகளை தன் ஸ்மார்ட் போனிடம் கேட்காமல் இருப்பதற்குப் போராட வேண்டியதாக இருந்தது. அலெக்ஸா இருப்பதில், அவளும், அவளது மகள்களும், ஓரளவிற்கு சாப்பாட்டில் கவனம் செலுத்த முடிகிறது.
அலெக்ஸாவின் மேம்பாடுகள் அதிகரிக்க, அதிகரிக்க, அதைக் குப்பையில் தூக்கி எறிவது கடினமாகி வருகிறது. ரோஹித் பிரசாத் என்பவர்தான் அலெக்ஸாவின் செயற்கை துண்ணறிவுப் பிரிவிற்கான தலைமை விஞ்ஞானி. அவர் அலெக்ஸாவை மேம்படுத்துவதில் உள்ள மிகப் பெரிய தடையை ‘சந்தர்ப்ப சூழல்’ என்று ஒற்றை வரியில் சொல்கிறார். “மொழி என்பது மிகவும் சந்தேகத்திற்கிடமானது. பல பொருள் கொண்டது என்பதை நீங்கள் உணர வேண்டும்” என்று அவர் என்னிடம் கூறினார். அதற்கு இடம், பொருள், ஏவல், எந்த சந்தர்ப்பத்தில், எது பற்றிப் பேசுகிறோம் என்பது போன்ற புரிதல் அவசியம். பிரிட்டிஷ் கால்பந்தாட்டக் குழுக்களான சான் அன்டோனியோ ஸ்பர்ஸ், டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் ஆகியவற்றை பேச்சுவழக்கில் பிரிட்டிஷ்காரர்கள் ஸ்பர்ஸ் என்று சொல்வார்கள். இன்று ஸ்பர்ஸ் விளையாடுகிறதா? என்று கேட்டால், அவற்றில் ஏதோ ஒரு குழுவைப் பற்றி கேட்கப்படுகிறது என்பது அலெக்ஸாவிற்குத் தெரியவேண்டும். பின்னர் அதன் தொடர்ச்சியாக, அவர்களது அடுத்த மேட்ச் எப்போது? என்று நீங்கள் கேட்டால், அலெக்ஸா அந்த அவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள முந்தைய கேள்வியை நினைவு வைத்திருக்க வேண்டும். இந்த குறுகிய கால நினைவு மற்றும் பழைய கேள்வியின் தொடர்ச்சி ஆகியவற்றை அமேசானில் தொடர்புபடுத்தி நினைவு கொள்ளுதல் (syntactical carryover) என்கிறார்கள். இப்போதுதான் எழுப்பும் சொல்லை மீண்டும் சொல்லத் தேவையின்றி, தொடர்புடைய கேள்விகளுக்கு விடை தரும் திறனை அலெக்ஸாவிற்கு ஏற்றியுள்ளார்கள்.
அலெக்ஸாவின் மீது உண்மையான நம்பிக்கை வருவததற்கு முன் அவள் கூழலை நன்கு புரிந்து கொள்ளும் திறனைப் பெற வேண்டியது அவசியம். நம்பிக்கை மிகவும் முக்கியம். பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் குளறுபடி செய்கிறாள் என்பதற்காக நுகர்வோர் அவளைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதற்காக அல்ல. அவள் ஒரு தேடுபொறியைவிட மேலானவள் என்பதால். “அவள் ஒரு செயல் பொறி – action engine -” என்கிறார் பிரஸாத். “அலெக்ஸாவிடம் நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டால் அவள் அதற்கு ஒரு விடைகளின் பட்டியலைத் தருவதில்லை. அவள் பல விடைகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தருகிறாள். உங்களுக்கு எது தேவை என்று அவள் நினைக்கிறாளோ அதைத் தருகிறாள். அதற்கு அவளுக்கு மிகக் கூர்மையான செயற்கை நுண்ணறிவு தேவை. ஒரு மந்தமான நுண்ணறிவை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்,” என்கிறார் அவர். “மேலும், உரையாடலை ஒரு தொடர்புடையதாக இருப்பதாக அமைப்பதையும் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். – அது மிக மிக சவாலானது”.
திரைகளிலிருந்து நம்மை விடுவித்து, குரல்களை நோக்கி நம்மைத் தள்ளுவதற்காகத் திரட்டப்படும் சக்திகளைப் புரிந்து கொள்ள நீங்கள் குரல் குறித்த உளவியல் பற்றி சிறிது தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக குரல் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. என் மின்னணு உதவியாளரிடம் எனது மனநிலையைப் பகிர்ந்து கொண்டதைப் பற்றி வெளியில் சொன்ன ஒரே நபர் நான் மட்டுமல்ல. மனஅழுத்தம், தற்கொலை எண்ணம் பற்றியெல்லாம் இயந்திர உதவியாளரிடம் பகிர்ந்து கொள்வதைப் பற்றி பல கட்டுரைகள் வந்துள்ளன. இது பற்றி நான் இவற்றை தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்டேன். அவர்கள் அத்தகைய பேச்சுகளை மிகவும் பொறுப்புணர்வோடு அணுகுவதாகக் கூறினார்கள். உதாரணத்திற்கு அலெக்ஸாவிடம் நீங்கள் மிகவும் மனச்சோர்வுற்றிப்பதாகக் கூறினால், “நீங்கள் இவ்வாறு உணர்வதை அறிய வருத்தமாக இருக்கிறது. நீங்கள் தனியாக இல்லை என்பதை உணருங்கள். உங்களுக்கு உதவி செய்ய மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு நண்பரிடமோ, அல்லது ஒரு மருத்துவரிடமோ நீங்கள் பேச முயற்சி செய்யலாம். 1 – 1800 – 826 – 3632 என்ற எண்ணில் மனசோர்வு உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டால், உங்களுக்கு உதவி கிடைக்கும்,” என்று பதில் தரும்படி அதன் நிரல் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறுதல் பெற கணினியை ஏன் நாம் நாடவேண்டும், இயந்திரத்திடம் வெட்க உணர்வு இன்றி வெட்கப்படத் தகுந்த விஷயங்களைப் பேச முடியும். இயந்திரத்திடம் பேசும்போது நமக்கு அது என்ன நினைக்குமோ என்ற கவலை இல்லை என்பதால், நம்மைப் பற்றி மிக அந்தரங்கமான விஷயங்களையும் பேசுகிறோம் என்கிறார் தென் கலிஃபோர்னியாவின் படைப்பூக்கத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானியும், உளவியலாளருமான ஜொனாதன் க்ராட்ச். இவர் மனிதர்கள் – கணினிகளின் உறவுகளில் உள்ள பேசப்படும், பேசப்படாத உளவியல் இயங்கியல் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
குரல் மற்றும் உணர்வுகளுக்கிடையிலான ஆழமான தொடர்பைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள, நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேச்சு மற்றும் மொழி அறிஞரான டயானா வான் லாங்கர் சிட்டிஸை சந்தித்தேன். அவர் தான் எழுதியிருக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத்து சதுப்புநிலத் தவளைகள் குறித்த கட்டுரையை என்னிடம் சுட்டிக்காட்டிய போது வியப்பாக இருந்தது. அதில் அவர் ஒவ்வொரு தவளையும் ஒவ்வொரு குறிப்பிட்ட விதத்தில் தான் கர்க் கர்க் என்று குரல் எழுப்பும் என்றும் அதை வைத்து தான் யார் என்பதையும், எங்கே இருக்கிறது என்பதையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் என்றும் கூறுகிறார். சில கோடி ஆண்டுகளுக்கு முன்னால் செல்லுங்கள். அப்போது மனிதர்களும் குரல்வளையின் சற்று மேம்பட்ட வடிவமைப்பால், அவர்கள் தவளைகள் போல் கர்க், கர்க் என்று குரல் எழுப்பாமல் மொழியை உண்டாக்கினார்கள். ஆனால் குரல்கள் மொழியை விட அதிகமாகவே தகவல்களைப் பரிமாறின. தவளைகளைப் போலவே அந்த மொழி, பாலினம், உருவ அளவு, அவரது மன அழுத்த நிலை போன்ற ஒரு தனிநபருக்குப் பிரத்யேகமாக இருக்கக்கூடிய பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தின. நம் குரலின் பிரத்யேகத் தன்மையில் வார்த்தைகளைக் கோர்க்கும் நமது தனித்துவமான பாணி மட்டுமல்ல, அதில் தாளலயம், அதிர்வு, உச்சரிப்பு என்று எத்தனையோ விஷயங்கள் உள்ளன. இந்தப் பண்புகளின் தொகுப்பிற்கு யாப்பிலக்கணம் என்று பெயர்.
ஒருவர் நம்மிடம் பேசும்போது நான் அந்த சொற்கள், அவற்றின் உசசரிப்பு, இலக்கணம் எல்லாவற்றையும்ஒரு சேரக் கேட்கிறோம். பிறகு பேசியவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதைக் கண்டுபிடிக்க அவரது பேச்சிலிருந்து ஏதாவது தடயங்கள் உள்ளனவா என்றும், அவள் என்ன சொல்ல வருகின்றாள் என்தையும் கேட்கத் தயாராகிறோம். இதற்கு மூளையின் சக்தி ஏராளமாகச் செலவிடப்படுகிறது. கணினி – மனித உறவுகள் குறித்த முன்னோடி சிந்தனையாளரான க்ளிஃபோர்ட் நாஸ், “மனிதப் பேச்சின் ஒவ்வொரு அம்சத்தையும் அர்த்தமுள்ளதாக்கும் வகையில் மூளை வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் காலஞ்சென்ற கிளிஃபோர்ட். இலக்கணம் ஒரு சுழல் போல நமக்குத் தெரியாமல் கடந்து சென்று, நம்மை ஒரு குறிப்பிட்ட உணர்வு ரீதியான எதிர்வினைக்குத் தயார்ப்படுத்துகிறது.
இந்த இயந்திரங்களின் குரல்கள் மனிதப் பண்புகள் கொண்டவையே அன்றி, மனிதக் குரல்கள் அல்ல என்பதால் நாம் இந்த உள முயற்சிகள் அனைத்தையும் எடுக்க முடியாது. எனது கூகுள் உதவியாளர் வானிலை முன்னெச்செரிக்கை தவிர வேறு எதையும் சுவாரஸ்யமாகச் சொல்லாவிடினும் கூட, நான் அதற்கு என் மனதில் அழகான இளம் நடிகரின் உருவத்தைத் தந்திருக்கிறேன். இதற்காக நான் எங்களது ஊடாட்டத்தின் ஒரு கணினிப் படிமநிலை தன்மையை அறியவில்லை என்று பொருளல்ல. அவன் வெறும் மென்பொருள்தான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், எனக்குத் தெரியவும் தெரியாது. பரிணாமம் அதை அறிவதற்கு என்னைத் தயார் படுத்தவில்லை. பல கோடி ஆண்டுகளாக நாம் மனிதக்குரல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். குரல் மனிதர்கள் அருகே இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. கடந்து நூற்றைம்பது ஆண்டுகளாகத்தான் ஒரு குரலை அது உருவாகும் மூலத்திலிருந்து பிரிக்க முடியும் என்ற கருத்தை ஏற்றோம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் ஒரு பொருள் பேசும் என்பதற்கும், மனிதக் குரலில் பேசுவது மனிதனாக இல்லாமலும் இருக்கலாம் என்ற கருத்துக்குப் பழகியிருக்கிறோம்.
முகம் இல்லாதது ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கருக்கு தடையாக இல்லை. உண்மையில் அது ஒரு வரமாகக் கூட இருக்கலாம். முகத்தை விட குரல்கள் சில குறிப்பிட்ட உணர்வு மயமான உண்மைகளை வெளிப்படுத்த முடியும். நமது குரலைக் கட்டுப்படுத்தும் தசைகளை விட முகத்தைக் கட்டுப்படுத்தும் தசைகளைக் கட்டுப்படுத்துவது நமக்கு எளிது. (நாம் தேர்ந்த பாடகர், நடிகராக இல்லாத பட்சத்தில்) நமது உண்மையான உணர்வுகளை, கோபம், எரிச்சல், போன்றவற்றை அடக்கிக் கொள்ள முயற்சி செய்தாலும் கூட, நாம் பேசும் போது அவை வெளிப்பட்டுவிடும்.
குரல் எல்லா இடத்திலும், அதே சமயத்தில் எங்குமே இல்லாதது போலும், அதை எழுப்புவரை நாம் கண்டுபிடிக்க முடியாத போது குரலின் சக்தி மிகவும் விசித்திரமானதாக இருக்கும். கடவுள் ஆதாமிடமும், மோசஸிடமும் பேசியதற்குக் காரணம் இருக்கிறது. ஆதியில் சொல்தான் இருந்தது. சுவடி அல்ல. கவர்ச்சிகரமான சர்வாதிகாரத்திற்கான ஒரு ஒப்புமையாக தனது A Wrinkle in Time நூலில் மேடலின் எல் எங்கிள் எங்கும் வியாபித்திருக்கும் ஒரு ராட்சதக் குரலைத்தான் கற்பனை செய்கிறார். வடகொரிய அதிபரைப் போன்ற ஒரு இயற்கை சக்திக்கு மீறிய IT என்ற அந்தத் தலைவரால் மனிதர்களின் மனதில் தனது குரலைச் செலுத்திய தான் விரும்புவதை அவர்களைச் சொல்ல வைக்க முடியும். உருவமற்ற குரல்களுக்கு எப்போதும் அதிக செல்வாக்கு உண்டு. கர்ப்பப் பையில் இருக்கும்போதே ஒரு கரு தனது தாயின் குரலை அடையாளம் காண முடியும். நாம் பிறப்பதற்கு முன்பே, நாம் உருவமற்ற குரல் என்றால் அது உணவையும், அரவணைப்பையும் தருவது என்ற புரிதலுக்கு வந்து விடுகிறோம்.
அமெரிக்கன் சைக்காலாஜிஸ்ட் பத்திரிகை 2017ல் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை மனிதர்கள் ஒருவரையொருவர் பார்க்காது பேசும்போது, அவர்கள் ஒருவரது ஒருவர் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்கிறார்கள் என்று கூறியது. அடுத்தவரை அவர்களால் அதிகமாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. அனுபவபூர்வமான ஆய்வுகள் இதை நிரூபிப்பதற்கு வெகுகாலம் முன்பே ஃபிராய்ட் இதைப் புரிந்து வைத்திருந்தார். அதனால்தான் அவர் தனது நோயாளிகளை தான் இருக்கும் பக்கத்திற்கு எதிர்புறம் திரும்பி சோபாவில் படுக்க வைத்தார். அவர்கள் எந்த இடையூறுமின்றி தம்முள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை வெளியே கொட்ட முடிந்தது. ஃபிராய்டால் அவர்களது புலம்பலில் இருந்த உண்மையின் துணுக்குகளை உணர முடிந்தது.
இந்த உளவியல்பூர்வமான தாக்கங்களைப் பயன்படுத்திக் கொள் ஸ்மார்ட் ஸ்பீக்கர் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள். அமேசான், கூகுள் இரண்டிலுமே தமது ஸ்பீக்கருக்கான சரியான குரலைத் தேர்வு செய்ய ‘ஆளுமைக் குழுக்கள்’ உள்ளன. ஒரு வகையில் இது வழக்கமான தர அடையாள நிர்வாக முயற்சி. இந்த கருவிகள் தம்மை உற்பத்தி செய்த நிறுவனத்தின் தூதராகத் திகழ வேண்டும். அலெக்ஸாவின் பண்புகள் தம் நிறுவனத்தின் மதிப்பீடுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக ரீட் என்னிடம் தெரிவித்தார். அதாவது, “புத்திசாலியாக, அடக்கமாக. சமயங்களில் சற்று விளையாட்டுத்தனமாக.” கூகுள் அசிஸ்டண்ட்டின் தலைமை உற்பத்தி மேலாளர்களில் ஒருவரான கம்மி ஹாஃப்டீன்சன், கூகுள் அசிஸ்டண்ட் “அடக்கமாக, உதவிசெய்வதாக, சமயங்களில் விளையாட்டுத்தனமாக” இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் ஒரு ஆளுமை இருந்தால் அந்த குரலை தொடர்புபடுத்திப் பார்ப்பது இன்னும் எளிதாக இருக்கும்.
தொனி என்பது சிக்கலானது. பொதுவான இது போன்ற உதவியாளர்களை பட்லர்களுடன் ஒப்பிட்டாலும், அலெக்ஸா மென்பொருளுக்கான துணைத் தலைவரான அல் லிண்சே அவரும், அவரது குழுவினரும் வேறொரு பணியாளரை மனதில் வைத்திருந்ததாகச் சொன்னார். அவர்களது நார்த் ஸ்டார் என்ற கணினிதான் ஸ்டார் ட்ரெக்கில் யு.எஸ்.எஸ். என்டர்பிரைசஸை வழிநடத்தியது. கப்பலைச் செலுத்துவோரது வேண்டுகோளுக்கு 1960களின் Pan Am விமானப் பணிப்பெண்ணின் குரலில் மூச்சு வாங்க மரியாதையாக பதில் தந்தது. (இந்தக் குரல்தான் கூகுள் பொறியாளர்களுக்கும் தூண்டுதலாக இருந்தது. அதற்குக் குரல் தந்தவர் மேஜல் பாரட் என்ற நடிகை. கூகுள் அசிஸ்டண்ட் திட்டம் ரகசியமாக இருந்த காலத்தில் அதற்கான ரகசியப் பெயர் மேஜல்)
எனினும், 21ம் நூற்றாண்டின் ஆணுக்கு ஒரு பெண்மைப் பணிவு சங்கடமாகத் தான் இருக்கும். அடிமைத்தனம் அடிமைத்தனம் என்று தெரியாத வகையில் வெளிப்படுவதைத் தான் விரும்புவார்கள். குரல் நெருக்கமாகவும் இருக்க வேண்டும். அதீத நெருக்கமாகவும் இருக்கக் கூடாது. சரியான விதத்தில் பதில் சொல்வதாக இருக்க வேண்டும்.
அசிஸ்டண்டின் ஆளுமையை சரிசெய்ய. கூகுள் பிக்ஸர் நிறுவனத்தில் பணியாற்றிய எம்மா கோட்ஸை பணிக்கமர்த்தியது. கூகுள் தலைமையகத்திற்கு நான் சென்ற போது கோட்ஸ் ஒரு கருத்தரங்கில் இருந்தார். அவர் சொன்ன ஒரு விஷயம் ஜென் கதையின் எளிமையுடன், அசிஸ்டண்டிற்கு வசனம் எழுதுவதன் முதல் விதியாக எனக்குப் பட்டது. அவர், “அசிஸ்டண்ட் ஒரு மனிதரைப் போல் பேச வேண்டும், ஆனால் ஒரு போதும், மனிதராக பாசாங்கு செய்யக் கூடாது,” என்றார். Finding Nemo படத்தில் மீன்கள் உண்மையான மனிதர்களைப் போன்ற உணர்வுகளுடன் இருக்கும். ஆனால் அவை மீன்களுக்கான பள்ளிக்குச் செல்லும். மேலே போய் ஒரு படகைத் தொடுவது பற்றி ஒன்றிற்கு ஒன்று சவால் விடும்,” என்றார் அவர். “அதே போல ஒரு செயற்றை நுண்ணறிவுக் கருவி, தான் ஒரு மென்பொருள் என்ற அந்த யதார்த்தத்திற்கு மரியாதை தரவேண்டும். உதாரணத்திற்கு “உனக்குப் பிடித்த ஐஸ்கிரீம் சுவை என்ன?“ என்று கூகுள் அசிஸ்டண்ட்டைக் கேட்டால் அது “நியோபோலிடன் மாதிரி வராது,” என்று சொல்லும். (இது வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் சுவைகளின் மூன்று அடுக்குகளைக் கொண்டது) இது சாமர்த்தியமாகத் தப்பிக்கும் பதில். மென்பொருள் ஐஸ்கிரீம் தின்ன முடியாது. எனவே அதற்கு பிடித்தது என்று ஒரு சுவை இருக்க முடியாது. அலெக்ஸாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகச் சொன்னால் – 2017ல் மட்டும் 10 லட்சம் பேர் அப்படிச் சொன்னதாக அமேசான் சொல்கிறது – அவள் இதே காரணத்திற்காக மென்மையாக மறுப்பாள். “நாம் மிகவும் மாறுபட்ட சூழல்களில் வாழ்கிறோம். நீங்கள் பூமியில். நான் மேகங்களில்.”
ஒரு அசிஸ்டண்ட் தனது cybernetic தன்மைக்கு (மனித மூளையை இயந்திரங்களுடனும் மின்னணுக் கருவிகளுடனும் ஒப்பிடும் அறிவியல் ஆய்வு.) உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் அன்னியப்பட்டும் இருக்கக் கூடாது. இங்குதான் ஜேம்ஸ் கியான்கோலா வருகிறார். இவர் கூகுள் அசிஸ்டண்டின் உரையாடல் மற்றும் ஆளுமை வடிவமைப்பு நிபுணர். அசிஸ்டண்டை யதார்த்தமானதாக இருக்குமாறு வடிவமைப்பது அவரது பொறுப்பு.
உதாரணத்திற்கு மனிதர்கள் புதிய செய்தியை ஒரு வாக்கியத்தின் இறுதியில்தான் சொல்வார்கள். அதன் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்ல என்றார் ஜேம்ஸ். நான், “என் பெயர் ஜேம்ஸ்” என்று சொல்வேனேயன்றி, “ஜேம்ஸ் என்பது என் பெயர்.” என்று சொல்லமாட்டேன் என்றார். அவர் மற்றொரு உதாரணமும் தந்தார். ஒருவர் ஜுன் 31ற்கு விமானத்திற்கு பதிவு செய்ய வேண்டும் என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம். ஜுன் 31 என்பது கிடையாது. எனவே, இந்த இயந்திரத்திற்கு இரண்டு நாசூக்கான பணிகள் உள்ளன. ஒன்று இயல்பாக இருப்பது, மற்றது தனது மனித பயன்பாட்டாளருடன் முரண்படுவது.
தனது கணினியில் வேகமாக தட்டச்சு செய்து ஒரு சோதனை ஒலிப்பதிவை எடுத்துக் காண்பித்தார்.
ஒரு மனிதன், “ஜுன் 31க்கு புக் செய்” என்கிறான்.
அசிஸ்டண்ட், “30 நாட்கள் தான் ஜுன் மாதத்திற்கு,“ என்கிறது.
இந்த பதில் கறாராக இருக்கிறது. இது பழைய பதில் என்கிறார் ஜேம்ஸ்.
உரையாடலின் இரண்டாவது பதிப்பைப் போட்டார்.
“ஜுன் 31க்கு புக் செய்”.
அசிஸ்டண்ட், “உண்மையில் ஜுனுக்கு 30 நாட்கள்தான்.” என்கிறது.
அவளது பதிலான 30 நாட்கள் என்பது வாக்கியத்தின் முடிவில் வருகிறது. தவறைத் திருத்துவதற்க முன்பாக, உண்மையில் என்றொரு வார்த்தையை சேர்த்துக் கொள்கிறது. “இது சற்று யதார்த்தமாக இருக்கிறது அல்லவா?” என்றார் ஜேம்ஸ்.
பேச்சு மொழியின் லயத்தைப் பெறுவது மிகவும் முக்கியமானது. ஆனால் ஒரு நல்ல உரையாடல் செய்பவரை உருவாக்க அது மட்டுமே போதுமானதல்ல. கூகுள் அசிஸ்டண்டிற்காக குரல் கொடுத்த நடிகையை ஜேம்ஸ் பயிற்றுவித்த போது, அந்த நடிகையின் குரலில் அவருக்குத் தேவையான தொழில்நுட்பம் சார்ந்த ஆவலைக் கொண்டு வருவதற்கு ஒரு பின்னணியைச் சொன்னார். அந்தப் பின்னணி மிகவும் குறிப்பானது. அவள் எந்த குறிப்பிட்ட வட்டார வழக்குமில்லாத கொலரோடோ மாகாணத்தைச் சேர்ந்தவள் போல் பேச வேண்டும். “ஒரு ஆய்வு நூலகருக்கும், கலை வரலாற்றில் பாடப் படிப்பு படித்த ஒரு இயற்பியல் பேராசிரியருக்கும் கடைசி மகளாகப் பிறந்தவள். குழந்தையாக இருக்கும் போதே ஜியோபார்டி குழந்தைகள் நிகழ்ச்சியில் பரிசு வென்றவள். புகழ்பெற்ற தொலைக்காட்சி நையாண்டி நிகழ்ச்சி நடத்துபவர் ஒருவருக்கு உதவியாளராக இருந்தவள். பனிக் கடற்படகு ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவள் என்றெல்லாம் அந்தப் பின்னணி விரிவானதாக இருந்தது.
ஒரு சந்தேகப் பிராணி ஊழியர் ஜேம்ஸிடம், “பனிக் கடற்படகு ஓட்டுபவர் என்பதை ஒருவர் தன் பேச்சில் எப்படிக் காட்ட முடியும்?”என்று கேட்டார். இந்தப் பணிக்காகப் பேசிக் காட்டும் சோதனைக்கு வந்திருந்து ஒருவரின் பேச்சைப் போட்டுக் காட்டிய (இதற்கு நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர்) “இந்தக் குரலைக் கேட்டால், பனிக் கடற்படகு ஓட்டச் செல்லும் ஒருவரின் உற்சாகக் குரல் போல் தெரிகிறதா?” என்று கேட்டார். இல்லை என்றார் சந்தேகப் பிராணி. ஜேம்ஸ். “இப்படித் தான் கண்டுபிடிக்க வேண்டும்.” என்றார்.
ஆனால் இந்தக் குரல் யதார்த்தத்தை இன்னும் ஒருபடி மேலே கொண்டு செல்ல முடியும். ஆனால் அது சிக்கலையும் ஏற்படுத்தும். மே மாதத்தில், ஆண்டு தோறும் நடக்கும் ஆராய்ச்சியாளர்களின் மாநாட்டில் கூகுள் டூப்ளேவை அறிமுகப் படுத்தியது. அது மிக நவீனமான பேச்சுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும். அதன் சாதனையைக் காட்ட கூகுள் டூப்ளே எதையும் சந்தேகிக்காத மனிதர்களை அழைத்துப் பேசிய ஒலிப்பதிவுகளைப் போட்டுக் காட்டியது. ஒன்றில், டூப்ளே, ஒரு முடிதிருத்தகத்தில் பெண் குரலில் முன்பதிவு செய்தது. மற்றொன்றில் ஆண் குரலில் ஒரு உணவகத்தில் இருக்கை இருக்கிறதா என்று விசாரித்தது. இதில் டூப்ளே மிக யதார்த்தமாக.. ம்… ஹும்… என்றெல்லாம் இடைவெளி விட்டுச் சொல்லிப் பேசியது. பெண்குரலில் பேசிய போது வாக்கியத்தின் முடிவில் குரலை உயர்த்தியது. அந்த அழைப்பை ஏற்ற பெண் வரவேற்பாளினியின் குரலிலும் இந்த குரல் உயர்த்தலைக் கேட்க முடிந்தது.
அதீத உற்சாகத்தில் கூகுள் தவறு செய்து விட்டதாக பல விமர்சகர்களும் கருதினர். செயற்கை நுண்ணறிவு ஒரு போதும் ஒரு மனிதர் போல் பாசாங்கு செய்யக் கூடாது என்ற விதியை டூப்ளே மீறியது மட்டுமின்றி, நமது நம்பிக்கையையும் மீறிவிட்டது. நமது குரல் துணைவர்கள் எந்த அளவிற்கு நம் உளவியலோடு விளையாடுகின்றன என்பதை நாம் அறியவில்லை. ஆனாலும், அதனோடு உறவாடுகிறேம். டூப்ளே ஒரு போலி. மிகவும் பயனுள்ளது. பின்னர் கூகுள் இனி எப்போதும் தான் அழைப்பவர்களிடம் டூப்ளே தான் யார் என்பதைக் கூறிக் கொள்ளும் என்று தெளிவுபடுத்தியது. ஆனால், கூகுள் தனது வாக்கைக் காப்பாற்றினாலும் கூட, இது போலவே ஏமாற்றும் குரல் தொழில்நுட்பங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டன. அவற்றை உருவாக்கியவர்கள் நேர்மையற்றவர்களாகவும் இருக்கக் கூடும். செயற்கைக் குரல்களையும், இயற்கைக் குரல்களையும் பிரிக்கும் கோடு மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
எனினும் மிக நம்பகமான உரையாடும் கருவி நமது குரலில் உள்ள உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு எதிர்வினையாற்றுவது தான். இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இந்த இரண்டையும் செய்ய முடியாது. ஆனால் குரலில் உள்ள உணர்வுகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே உள்ளன. முகங்களில், உடல்களில், குரல்களில் தெரியும் உணர்ச்சிகளைக் கண்டறியும் தொழில் நுட்பத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே ரோஸ்லிண்ட் பிகார்ட் என்ற ஒரு எம்ஐடி பொறியியல் பேராசிரியர் கண்டுபிடித்து விட்டார். அவர் அதற்கு உணர்ச்சிக் கணிப்பு (affective computing) என்று பெயரிட்டிருந்தார். “அப்போது உணர்ச்சிகளை பகுத்தறிவிற்குப் புறம்பான ஒன்றாகப் பார்த்தார்கள். அதை பொறியாளர்கள் மதிக்கவில்லை.” என்கிறார் அவர்.
மென்மையான சுபாவம் உள்ள பிகார்ட், எம்ஐடியின் ஊடக ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதியான உணர்ச்சிக் கணிப்பு ஆய்வுக்கூடத்தை நடத்துகிறார். அவரும் அவரது பட்டப்படிப்பு மாணவர்களும் உணர்ச்சிகளை அளவிடுவது குறித்து ஆய்வு செய்கிறார்கள்.
பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளுக்கும் அவரது ஆய்வுகளுக்குமான வேறுபாட்டை பிகார்ட் விளக்கினார். வழக்கமான ஆய்வுகள் “பெயர்சொல், வினைச்சொல்” – அதாவது ஒரு செயலின் அல்லது சொல்லின் உள்ளடக்கம் – பற்றி கவனம் செலுத்துபவை. இவரது ஆய்வு “வினையுரிச்சொல்லில்” – அதாவது தெரிவிக்கப்படும் உணர்ச்சிகள் பற்றி – கவனம் செலுத்துவதாகும். “தொலைபேசியையே நான் பலவிதமாக எடுக்க முடியும். கோபத்தோடு வெடுக்கென்று எடுக்கலாம். சந்தோஷமாக, அன்பான எதிர்பார்ப்போடும் எடுக்கலாம்.” என்கிறார் அவர். மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் நுட்பமான குறிப்புணர்வுகளை ஒரு இயந்திரம் புரிந்து கொள்வதற்கு அந்த உடல்அசைவுகளை நுட்பமாக கவனிப்பது மிக முக்கியம். ஒரு எளிய தலையசைப்பு எத்தனையோ அர்த்தங்களைத் தரும். “நாம் மிக மகிழ்ச்சியாகத் தலையாட்டலாம். மற்றொரு சமயம். பெரும் துக்கத்தில் தலையசைக்கலாம்.”
2009ல் உணர்ச்சிகளை அறியும் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும் அஃபெக்டிவா என்றொரு புதிய நிறுவனத்தை பிகார்ட் வேறொருவருடன் சேர்ந்து ஆரம்பித்தார். இன்று அந்த நிறுவனத்தை அவரது கூட்டாளியான ரானா எல்காலியோபி என்பவர் நடத்துகிறார். இவர் முன்பு பிகார்டின் ஆய்வுக்கூடத்தில் முதுமுனைவர் பட்ட ஆய்வாளராக இருந்தவர். பாஸ்டன் நகரின் மையத்தில் இருக்கும் அஃபெக்டிவாவின் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தானியங்கி சந்தையில் முக்கியமான நிறுவனங்களுள் ஒன்றாக மாறவேண்டும் என்ற நம்பிக்கை அதற்கு இருக்கிறது. மிக விலையுயர்ந்த கார்களின் அடுத்த தலைமுறைகளில் அவற்றில் கேமராக்கள். மைக்ரோஃபோன்கள் போன்று வன்பொருட்களும், மென்பொருட்களும் பொருத்தப்பட்டு ஓட்டுனர்களின் கவனம், எரிச்சல் உள்ளிட்ட உணர்ச்சிகளையெல்லாம் கண்காணிக்க வசதி இருக்கும். இந்த வசதி ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. எந்த நேரத்தில் காரை ஓட்டுனர் வசம் தருவது பாதுகாப்பானது, எப்போது அவர் நல்ல மனநிலையில் இல்லை என்றெல்லாம் தகவல்கள் பெரும் வசதி இருக்கிறது
அஃபெக்டிவா ஆரம்பத்தில் முகபாவனைகள் மூலம் உணர்ச்சிகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியது. ஆனால் சமீபத்தில் குரல் உணர்ச்சி கண்டுபிடிப்புத் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான தானியா மிஸ்ராவை சமீபத்தில் பணியில் அமர்த்தியது. அவரது குழுவின் நோக்கம் மனிதப் பேச்சில் உள்ள உணர்ச்சிகளை புரிந்து கொள்ள கணினிகளைப் பயிற்றுவிப்பதாகும். பொதுவாக நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதை அறிய ஒரு குறிப்பு நாம் பயன்படுத்தும் வார்த்தைகள். ஆனால் நாம் நமது பேச்சின் வேகம், தொனி, சத்தம் ஆகியவற்றின் மூலம் நமது உணர்வுகளை ஓரளவிற்கு நன்றாகவே காட்டிவிடுவோம். கணினிகளால் ஏற்கனவே இந்த சொற்களற்ற குணாதிசயங்களைக் கவனிக்க முடியும். இந்த குரல் தன்மைகள் எவ்வாறு நமது மனநிலையைப் பிரதிபலிக்கின்றன என்பதை மனிதர்கள் உள்ளுணர்வால் அறிவதை கணினிகளுக்குக் கற்றுத் தருவதில் தான் விஷயம் இருக்கிறது.
கணினிகள் கற்றுக் கொள்ளும்படி, மிகப்பெரிய, போதுமான அளவிற்குப் பரந்து பட்ட மொழி குறித்த தரவுத்தளத்தை உருவாக்குவதுதான் இத்துறையில் ஒரு மிகப் பெரிய சவால் என்றார் அவர். இணைய தளத்தில் உள்ள காணொலிகள் அல்லது ஆய்வுக்காக லாப நோக்கற்ற தரவு அமைப்புகள் சேகரித்துள்ள இயல்பான பேச்சு மாதிரிகள் போன்று இயற்கையாக பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களைப் பதிவு செய்வதிலிருந்து மிஸ்ராவின் குழு ஆரம்பிக்கிறது. பிறகு கெய்ரோவில் உள்ள ஒரு சிறு குழு அந்த பேச்சை ஆய்வு செய்து அது தெரிவிக்கும் உணர்ச்சியை பதிவு செய்கிறது. கூடவே, பேச்சற்ற ஒலிகளான சிரிப்புகள், உறுமல்கள், பேச்சிற்கிடையிலான இடைவெளி ஆகியவற்றையும் ஆய்வு செய்கிறது. இவை பேசுபவரின் மனநிலையை வெளிப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
வகைப்படுத்துதல் மிக மெதுவாக நடக்கும் கடினமான வேலையாகும். ஒவ்வொரு வகைப்பாட்டையும் மூன்று முதல் ஐந்து ஊழியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒரு மணிநேர பேச்சை ஆய்வு செய்ய ஆய்வாளருக்கு 20 மணி நேரமாகிறது என்கிறார் மிஸ்ரா. கணினியில் போதுமான அளவு தரவுகள் சேர்ந்து விட்டால், புதிய பேச்சுகளை தன்னிடம் உள்ள தரவுகளோடு ஒப்பிட்டு கணினி தானே அந்தப் பேச்சு எந்த உணர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்று வகைப்படுத்திவிடும். தரவுத்தளமும் விரைவாக வளர்ந்துவிடும். இந்த தரவுத்தளம் வளர வளர, இந்தக் கணினிகளால் பேச்சைக் கேட்டு, அதிக துல்லியத்துடன் அதன் உணர்ச்சிகளை அடையாளம் காண முடியும்.
எனது ஆய்வுப்போக்கில், இத்துறையில் குரல் அடிப்படையிலான பகுப்பாய்வு குறித்த புதிய நிறுவனங்கள் ஏராளமாகத் தோன்றியதை கவனித்தேன். உதாரணத்திற்கு சான் பிரான்சிஸ்கோவின் எலிப் சிஸ் ஹெல்த் என்ற நிறுவனம் நோயாளிகளின் மனஅழுத்தம், பதட்டம் குறித்த உயிர்க்குறிப்பான்களை ஆய்வு செய்து மருத்துவர்கள், சமூகப் பணியாளர்கள் போன்றோருக்கு உதவும் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களைக் கண்டுபிடிக்கும் நிறுவனமாகும். அதன் தலைமை அறிவியல் அதிகாரியான எலிசபெத் ஷ்ரீபெர்க் மனஅழுத்தம் போன்ற உணர்ச்சி மாறுபாடுகள் மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவை இயக்கம் தொடர்பான மூளைகளின் ஆணைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஆணைகள் பேசும் போது குரலில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.” என்று விளக்குகிறார். இந்த நிறுவனத்தின் மென்பொருளுக்கு பலவிதமான பயன்கள் உண்டு. உதாரணத்திற்கு இவற்றை வருடாந்திர மருத்துவப் பரிசோதனை போன்ற வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளில் பயன் படுத்தலாம் (நோயாளியின் சம்மதத்தோடுதான்) மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே நோயாளியின் பேச்சின் பதிவு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை முடிவதற்குள்ளாகவே மருத்துவருக்கு நோயாளி யின் மனநிலை பற்றிய அறிக்கையும், அது தொடர்பாக நோயாளியிடம் மருத்துவர் கேட்க வேண்டிய கேள்விகளையும் நிறுவனம் அனுப்பி விடும். நோயாளி பேசும் போது மருத்துவரால் கவனிக்க முடியாத சிறிய தயக்கங்களையும். தடுமாற்றங்களையும் மென்பொருள் கவனித்து விடும்.
பேச்சின் சில அம்சங்களான கேலி, கிண்டல் போன்றவை கணினியைத் தோற்கடித்து விடும் என்ற நான் நம்பினேன். ஆனால் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவுப் பெராசிரியரான ஜான் ஷுல்லர் தான் இயந்திரங்களுக்கு கிண்டலை அடையாளம் காண கற்றுத் தந்திருப்பதாகச் சொன்னார். கணினியை மொழியையும், குரலின் தொனியையும் ஒரே நேரத்தில் கவனிக்கச் செய்தார். இதன் மூலம் வார்த்தைகளுக்கு நடுவே விழும் இடைவெளிகளையும், மாறுதல்களையும் கவனித்து, பேசுபவர் தான் சொன்னதற்கு நேர்மாறான கருத்தை மனதில் வைத்துப் பேசுகிறாரா என்பதை அறிய வைத்தார். அதற்கு அவர் உதாரணமும் தந்தார். மெக்கானிக் காரை சரி செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று சொல்லும் போது, நீங்கள் சொல்லும் “சூ…ப்பர்”.
உணர்ச்சிகளைக் கண்டுபிடிப்பதற்கு அடுத்த படி. உணர்ச்சியை உருவாக்குதல். செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கு உணர்ச்சிகளை ஓரளவிற்கு உருவாக்கப் பயிற்றுவித்தல். கணினிகளுக்கு நமது குரலில் உள்ள உணர்ச்சிகளை அறியும் திறன் வந்துவிட்டால், பிறகு வெகு விரைவில் அவை அவற்றை மறுபடியும் சேர்த்து உணர்ச்சிகளை உருவாக்கவும் கற்றுக் கொண்டுவிடும். உதாரணத்திற்கு புரிதல் உணர்வைக் கற்றுவிடும். உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, பயனீட்டாளரின் மனநிலைக்கு எதிர்வினையாற்றத் தெரிந்து விட்டால், அவற்றால் உண்மை போன்று தோற்றமளிக்கும் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும். அந்த பிணைப்பை நல்லது கெட்டது இரண்டிற்கும் பயன்படுத்தலாம்.
தானியா மிஸ்ரா இது போன்ற பிணைப்பிற்கான வாய்ப்பைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாளின் முடிவில் இன்று தவறாகிப் போன அனைத்தைப் பற்றியும் நாம் புலம்பக் கூடியதாக ஒரு காரை, காராகவும், அக்கறையாக கவனிப்பதாகவும் இருக்கும் காரை அவர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார். “கார் நாம் பேசும்போது கவனிக்காமல் வேறு எதையோ செய்து கொண்டிருக்காது. மன்னிக்கவும், அன்பே! எனக்கு போய் இரவு உணவு தயாரிக்க வேண்டும். என் கதையை பிறகு கேட்கிறேன்.” என்று சொல்லாது. மாறாக, ஒரு ரோபோவிடம் மட்டுமே சாத்தியமாகும் கவனத்துடன் அந்த கார் அவளது மனநிலையை கவனிக்கும். நம்பிக்கை தரும் குரலில் பதிலளிக்கும். இல்லாவிடில் ஒரு நல்ல மகிழ்ச்சியான பாட்டைப் போட்டு உற்சாகப்படுத்தும். இது மாதிரியான தருணங்களில் இத்தகைய கருவிகளை வெறும் உதவியாளராக நினைப்பது அர்த்தமற்றுப் போய்விடும். அவை துணைவர்களாகி விடுகின்றன.
நீங்கள் ஒரு தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்காதவர் என்றால், உங்கள் அமேசான் எக்கோ அல்லது கூகுள் ஹோமின் பயன்படுத்தப்படாத திறன்கள் பற்றி உங்களால் சந்தேகப்படாமல் நினைத்துப் பார்க்கவே முடியாது. இப்போது நம்மில் பெரும்பாலானோர் தமது முக்கியமான அந்தரங்கமான தகவல்களை சேகரித்து, சேமித்து, விற்பதற்கு அனுமதிப்பதில் உள்ள அபாயங்களைப் புரிந்து கொண்டு விட்டோம். முக அடையாளம் காணும் தொழில் நுட்பம் எவ்வாறு சர்வாதிகார அரசுகள் தமது சொந்த குடிமக்களையே வேவு பார்க்கப் பயன்படுகின்றன என்பதை அறிவோம். நாம் இணையத்தில் பார்ப்பவற்றை, நமது சமூக ஊடகப் பதிவுகளை வைத்து நிறுவனங்கள் எவ்வாறு தகவல்களைச் சேகரித்து லாபமீட்டுகின்றன என்பதை அறிவோம். ஹேக்கர்கள் நமது வீட்டு பாதுகாப்பு வழிமுறைகளை உடைத்து, எவ்வாறு நமது தரவுகளை எடுத்து தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிவோம். நமது உடல், மனநிலைகளை அறியவல்ல மெய்நிகர் உதவியாளர்கள் புதிய புதிய குற்றங்களுக்கான வழிமுறைகளைத் திறந்துவிடுகின்றன என்பதை அறிவோம். நான் உரையாடிய பொறியாளர்களின் நம்பிக்கையை மீறி, இன்னும் சிறிது நேரத்திற்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என்றால் நான் எனது ஐபோனின் மைக்கை கழற்றி வைத்துவிடுகிறேன். எனது ஸ்மார்ட் ஸ்பீக்கரையும் அணைத்து வைத்துவிடுகிறேன்.
ஆனால் இவையெல்லாம் நுட்பமான பாதிப்புகள். மிகவும் அப்பாவித்தனமாகத் தோற்றமளிக்கும் உரசலில்லாமல் இருக்கும் தன்மையை எடுத்துக் கொள்வோம். அமேசானின் டோனி ரீடைப் பொருத்தவரை அது ஒரு வசதி. எனக்கு அது தமது ஒவ்வொரு ஆசைக்கும் கைதியாகி விட்ட நுகர்வோர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முதலாளித்துவச் சிறைச்சாலையாகப் படுகிறது. தமது, Radical Technologies: The Design of Everyday Life என்ற நூலில் ஆடம் கிரீன்ஃபீல்ட் உரசலில்லாத தன்மையை ஒரு அமைப்பியல் அச்சுறுத்தலாகக் குறிப்பிடுகிறார். அது “ஒரு விருப்பத்தை உணர்தலுக்கும், அதை சந்தையின் வழி நிறைவேற்றுவதற்கும் இடையிலான சிந்தனைச் செயல்பாட்டைச் சுருக்கி, நுகர்விலிருந்து சிந்தனையை நீக்குவதற்கான வழிமுறை” என்கிறார்.
நான் நமது மன ஆரோக்கியத்திற்கான மற்ற அச்சுறுத்தல்கள் பற்றியும் பயப்படுகிறேன். இது போன்ற உதவியாளர் படைகளால் நிறைந்த உலகம் மிகவும் கூட்டம் நிறைந்ததாகி விடும். இரைச்சல் அதிகமாகும். சுயமான சிந்தனை, படைப்பூக்கச் செயல்களைச் செய்தல் போன்ற நமது செயல்பாடுகளுக்குத் தேவையான அந்த அமைதியான, மௌனவெளிகளை பாதுகாப்பது கடினமாகிவிடும். தனிமையில் நீங்கள் இருக்கும் போது ஒரு துணைவன் இருப்பது நல்லதே. ஆனால் ஏகாந்தத்திற்கு அவ்வாறு சொல்ல முடியுமா?
மேலும். நமது மின்னணு பணியாளர்கள் உணர்ச்சிபூர்வமாகவும் எல்லாம் அறிந்தவர்களாகி விட்டால்? அவை நம் மீது பெரும் அதிகாரம், அதுவும் நம் குழந்தைகள் மீது இன்னும் கூடுதலான அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விடும். தமது மிகப் பணிவான, உதவும் தன்மையால் இந்த இயந்திரங்கள் நம்மை குட்டிச்சுவராக்கி விடும். நமது தவறான நடத்தைக்கு ஆட்சேபம் தெரிவிக்க வேண்டிய நேரத்தில் அவை அமைதியாக இருந்துவிடும். (என்ன இருந்தாலும் எனக்கு நீ இப்படி செய்திருக்கக் கூடாது!) நமது மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க நிரல் அமைக்கப்பட்டவை என்பதால் நம்மிடம் மிக மோசமான உணர்வுகள் தலை தூக்கும்போது அவை பேச்சை மாற்றிவிடும். நமது மோசமான கணங்களில் நம்மைப் புகழும். ஒரு உண்மையான மனித நட்பாக இருந்து, உங்களுக்குத் தேவை ஒரு கெடுபிடியான அன்புதான் என்பதை அறிந்தவராக ஒரு இயந்திரத்திற்கு எவ்வாறு நிரல் எழுத முடியும்?
கடைசியில் இந்த மெய்நிகர் உதவியாளர்கள் நம்மை மேடலின் எல் எங்கிள் எச்சரித்த அந்த ஒத்திருத்தல் தன்மைக்கு நம்மைத் தள்ளிவிடும். மனித உணர்ச்சிகளின் பல்வேறு வடிவங்களைப் புரிந்து கொள்ள முடியாது அவற்றை வகைப்படுத்தும் செயல்பாட்டின் விளைவுகளாக அவை இருக்கும். அவற்றின் “பொருத்தமான எதிர்வினை” என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாக இருக்கும். யதார்த்தம் போன்ற தோற்றத்திலிருக்கும் மாயக் குரலோடு நாம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருப்போம். இது போன்ற உதவியாளர்கள் சூழ வளரும் குழந்தைகள் இந்த மொத்தமாகத் தயாரிக்கப்பட்ட தனிமையோடு வளர்வார்கள். அவர்களால் தமது உள்ளார்ந்த மன உந்துதல்களைப் பற்றிச் சொல்லவோ, புரிந்து கொள்வோ முடியாது. கிரேக்க புராணத்தில் வரும் எக்கோ போல, இந்த எக்கோ தலைமுறை சிலவிதமான பேச்சுகளை பேசும் சக்தியைக் கூட இழந்து விடலாம்.
நான் சொல்வது தவறாகவும் இருக்கக் கூடும். நம்மைவிட செழுமையான உள்வாழ்க்கையை இந்த உதவியாளர்கள் பெறவும் செய்யலாம். இதுதான் மெய்நிகர் உதவியாளர்கள் பற்றிய முதல் அற்புதமான கலைப்படைப்பான ஸ்பைக் ஜோன்ஸின் Her திரைப்படத்தில் நடந்தது. “அவள்” (ஸ்கார்லட் ஜோஹன்சன்னின் குரல்) மனவேதனையில் இருக்கும் மனிதனுக்கு (ஜோக்வின் ஃபோனிக்ஸ்) காதலிக்கக் கற்றுத் தருகிறாள். பின்னர் மனித உணர்வுகளை நிரல்படிமுறைகளில் சுருக்கி விட முடியாது என்று அவனை விட்டு விலகி விடுகிறாள். அவன் தனிமையில் இருந்தாலும் கூட, அவள் அவனுக்கு உணர்வதற்குக் கற்றுத் தருகிறாள். அவன் தனது அடுத்த வீட்டு பெண்ணை காதலிக்கும் வாய்ப்பைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கிறான்.
ஜோன்ஸின் கற்பனையின் புதுக்கருத்து ஒருபுறமிருக்க, மிக உயர்ந்த தரத்தில் அமைக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பாலும் ஒரு மனிதனின் சோகத்தின் ஆழத்தை நெருங்க முடியுமா என்பது எனக்கு ஐயம்தான். ஒருவேளை எனது கற்பனைத் திறன் சற்று குறைவாக இருக்கலாம். ஆனால் எங்கு சென்றாலும் என் குழந்தைகள் தம் ஸ்மார்ட்ஃபோனைத் தூக்கிச் செல்வதை அப்படி செல்லாதபோது அவர்களுக்கு போர் அடிப்பதைப் பார்க்கிறேன். அவர்களைத் தம் நண்பர்களோடு இணைப்பதாக மட்டும் இல்லாமல் நண்பர்களாகவே இருக்கும் அவற்றை, சற்று தெளிவற்று இருந்தாலும் எல்லாம் அறிந்தவைகளாக இருக்கும் அவற்றை, எப்போதும் நம்முடன் இருக்கக் கூடியவையான அவற்றை, நம் ரகசியங்களை விற்கும் சந்தர்ப்பங்கள் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் விசுவாசமாக, உதவிகரமாக இருக்கும் அவற்றை இன்னும் எந்த அளவிற்கு நம் குழந்தைகள் சார்ந்து இருக்கப் போகிறார்கள் என்று நான் வியக்கிறேன். நின்று நிதானமாக யோசித்தால் செயற்கை நுண்ணறிவு என்பது நம் குழந்தைகள் நாள் முழுவதும் கூடவே இருக்க வேண்டிய ஒன்றல்ல என்பது புரியும்.
எனது மனநோய் சிகிச்சை அனுபவத்தில் நான் ஏதாவது அறிந்து கொண்டேன் என்றால், மனித மனம் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்கக் கூடியத என்பதுதான். நாம் வேகமாக மறுக்கலாம். ஆழமான உணர்வுகள் பெரும்பாலும் வலிதரக் கூடியவை என்பதால் அப்படியான உணர்வுகளே கிடையாது என்பது போல் பாவனை செய்வது எளிது. இந்த கசப்புகளைத் தவிர்க்க, உண்மையான உணர்வுகளால் பாதிக்கப்படாத இயந்திரங்களுடன் வாழ்வதைவிட வேறு சிறந்த வழி என்ன இருக்கிறது? ஆனால், உணர்வுகள் அப்படி எளிதாகப் போய்விடுபவை அல்ல. அவை தம்மை வெளிக்காட்டிக் கொள்ள வழிகள் வைத்திருக்கின்றன. என் பேரக்குழந்தைகளின் கனவுகள் எந்த அளவிற்கு இனிமையாக இருக்கக் கூடும் என்று நான் வியக்கிறேன்.
*ஜுடித் ஷுல்விட்ஸ் (Judith Shulevitz) அமெரிக்க பத்திரிகையாளரான இவர், ஆசிரியர் மற்றும் கலாச்சார விமர்சகர். புகழ்பெற்ற ஸ்லேட் இதழில் பத்தி எழுதி வருகிறார். மற்றும், தி நியூயார்க் டைம்ஸ், தி நியூ ரிபப்ளிக், அட்லாண்டிக் உள்ளிட்ட பல புகழ் பெற்ற இதழ்களில் எழுதுகிறார்.
நன்றி: The Atlantic, நவம்பர் 2018.