• Thu. Sep 21st, 2023

“ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” நூல் மதிப்புரை – 2

ByGouthama Siddarthan

Nov 11, 2022

ஓர் இளம் மொழிபெயர்ப்பாளனின் வாசக அனுபவம்!

  • நன்மாறன் திருநாவுக்கரசு

 

Dead Poet Society என்ற திரைப்படத்தில் ஆங்கிலப் பேராசிரியராக ராபின் வில்லியம்ஸ் தோன்றுவார். அதில் ஒரு காட்சி வரும். மாணவர்களுக்கு கவிதையை மதிப்பிடுவதை கற்றுத் தருவதற்கான வகுப்பு அது. ஒருவர் முழுமையாக கவிதையை உணர வேண்டும் என்றால் இரண்டு கேள்விகளை எழுப்ப வேண்டும். ஒன்று, அந்தக் கவிதை எப்படி கலைத்துவமாக அதன் அர்த்தத்தைக் கட்டமைத்துள்ளது. இரண்டாவது, அந்த அர்த்தம் எவ்வளவு முக்கியமானது என விரியும். ராபின் வில்லியம்ஸ் அந்தக் கவிதை குறித்த மதிப்பீட்டை விளக்கி விட்டு புத்தகத்தில் இருந்து அந்தப் பகுதியைக் கிழித்தெறிவார். மாணவர்களையும் கிழித்தெறிய அறிவுறுத்துவார். ஒரு கவிதையை மதிப்பிடுவதற்கு வறட்டுக் கோட்பாடுகள் செல்லாது என உணர்த்திவிட்டு அதன்பின் அவர் ஆற்றும் உரைதான் பிரசித்தி பெற்றது.

“We don’t read and write poetry because it’s cute. We read and write poetry because we are members of the human race. And the human race is filled with passion. Medicine, law, business, engineering, these are all noble pursuits, and necessary to sustain life. But poetry, beauty, romance, love, these are what we stay alive for. To quote from Whitman: “O me, o life of the questions of these recurring, of the endless trains of the faithless, of cities filled with the foolish. What good amid these, o me, o life? Answer: that you are here. That life exists, and identity. That the powerful play goes on, and you may contribute a verse. That the powerful play *goes on* and you may contribute a verse. What will your verse be?”

நாம் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள். மனித மனதிற்குள் பொதிந்திருக்கும் உணர்வுகளுக்காகத்தான் நாம் கவிதையை வாசிக்கிறோம், எழுதுகிறோம். நாம் வாழ்க்கை முடிவில்லா தொடர்ச்சியை கொண்டது. வாழ்க்கை இயங்கும் வரை, நீங்களும், நானும் கவிதையின் ஒரு அடியை இயற்றிக்கொண்டேதான் இருப்போம் என்பதுதான் அவர் பேசுவதன் சுருக்கம்.

கடந்த அக்டோபர் 30 2022, ஞாயிறு அன்று, ஈரோடு அந்தியூரில் உன்னதம் நடத்திய மொழிபெயர்ப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்ள நேர்ந்தது. மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள், சவால்கள் குறித்து பேசிய மொழிபெயர்ப்பாளர்கள் பல விஷயங்களை தெளிவு படுத்தினர்.

என்னைப் பொறுத்தவரை நான் ஒரு ஆரம்பகட்ட மொழிபெயர்ப்பாளன்தான். அதிலும் பெரும்பாலும் புனைவு அல்லாத ஆக்கங்களையே அதிகம் மொழிபெயர்த்திருக்கிறேன். புனைவு அல்லாத ஆக்கங்களை மொழிபெயர்ப்பது என்னளவில் எளியது. குறிப்பாக நான் தேடும் பெரும்பாலான கலைச்சொற்கள் அறிவியல் சார்ந்ததாகதான் இருக்கும். ஒப்பிட்டளவில் அதற்கான இணைச்சொல் தமிழிலேயே கிடைத்து விடும். கிடைக்காத பட்சத்தில் ஆங்கிலத்திலேயே அந்த வார்த்தையை எடுத்துக் கையாளலாம்.

ஆனால் புனைவை மொழிபெயர்ப்பது என்பது மிகவும் சிக்கலானது. அரும்பு மாத இதழுக்காக Tale of the Shipwrecked Sailor நூலை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய அந்த நூல் அபுனைவுதான். ஆனால் புனைவின் தன்மையை ஒட்டியது. புனைவை மொழிபெயர்க்க அதன் மூல மொழியின் கலாச்சாரம், அரசியல், வாழ்வியல் உள்ளிட்ட பல காரணிகளைத் தெரிந்திருக்க வேண்டும். ஓர் எளிய சொல்லுக்குப் பின் பொதிந்திருக்கும் ஆழமான அர்த்தத்தைத் தோண்டி எடுத்து தமிழ்ப்படுத்தும் புரிதலை பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரி முதலாமாண்டு ஹெர்மன் மெல்வில் எழுதிய Moby Dick நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘திமிங்கல வேட்டை’-யை எடுத்து வாசித்தத்தில் இருந்து எனது மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான தேடல் தொடங்கியது. அடுத்ததாக தபால்காரன், வெண்ணிற இரவுகள் என்று சென்று கொண்டிருந்தது. மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் என்னைக் கவர்ந்த அம்சமே வேறொரு நாட்டின் கலாச்சாரம்தாம். அவர்களது வாழ்க்கைமுறைதான். மோபி டிக் படித்தபோது கடல் வாழ்க்கையின் மீது தீராத ஆசை ஏற்பட்டது. வருடத்தில் பெரும் பகுதியை கடலிலும், ஒருசில மாதங்களை மட்டும் கடலையொட்டிய நகரங்களிலும் கழிக்கும் மக்களின் மீது ஈர்ப்பு கொண்டேன். கடலையொட்டிய நகரங்களுக்கு வந்து போகும் மாலுமிகள், அவர்களை பற்றிய சாகசக் கதைகள், அந்த மனிதர்களின் பாவங்களை கேட்பதற்காகச் சலிக்காமல் செவிசாய்க்கும் உள்ளூர் தேவாலயத்தின் கன்னி மேரி, மதுபான விடுதிகள், பாலியல் விடுதிகள், அப்போதுதான் நாகரிகம் அடைந்துவிட்டதாக கருதி உலகம் முழுவதும் மூலதனத்தை தேடி கடல் அலையைக் கிழித்துக் கொண்டு புறப்பட்டிருக்கும் ஐரோப்பியக் கப்பல்கள், அதன் மீது பந்தயம் வைத்து காத்திருக்கும் முதலாளிகள் என வேறு பல பரிமாணங்களைக் காட்டின.

இப்போதும் கூட அதிகம் மொழிபெயர்ப்புகளை வாசித்திருக்கிறேனே தவிர, எழுதியது கிடையாது. சில படைப்புகளை வாசிக்கும்போது எழுதிவிடத் தோன்றும். ஆனால் அதன் சூசகத்தை நம்மால் கையாள முடியுமா என்ற கேள்வியெழவே விட்டுவிடுவேன். பிறகு ஒரு வாய்ப்பு வந்தபோது அடிபட்டாவது தொழிலைக் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கார்சியாவின் Shipwrecked Sailor -ஐ மொழிபெயர்க்கத் தொடங்கினேன். இந்தச் சூழலில்தான் கௌதம சித்தார்த்தன் உன்னதம் நிகழ்விற்கு என்னை அழைத்து ‘ஹெராக்ளிட்டஸ் நதிக்கரையை’ பரிசாக எனக்கு வழங்கினார்.

மொழிபெயர்ப்பின் சூட்சமத்தை இத்தனை சுவாரஸியமாக இதற்கு முன் யாரும் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஓர் கவிதையை மொழிபெயர்க்கத் தொடங்கி, தான் அடைந்த ஞானத்தை ஒரே கட்டுரையில் முடித்து விட்டார். எந்த ஒரு புனைவும் ஒரு நாயகன் அவன் தேடிச்சென்ற இலக்கை எப்படி அடைகிறான் என்பதை வாசிப்பவரை சோர்வடையாமல் சொல்கிறதா, என்பதில்தான் அதை சுவையை ஒளித்து வைத்திருக்கிறது. ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை கட்டுரையில் ஒரு கவிதையை மொழிபெயர்க்க சித்தார்த்தன் மேற்கொண்ட ஆழ்மனத் தேடலை, ஒரு புனைவைப் போல சுவைபடச் சொல்கிறார்.

போருக்கு எதிராக Carl Sandburg எழுதிய Grass என்ற கவிதையை தமிழில் மொழிபெயர்க்க பொருத்தமான வார்த்தைகளையும், அர்த்தங்களையும் தேடி Wordsworth-ன் The Solitary Reaper அதன் பின்னணியில் பிரெஞ்சு புரட்சி, அந்த கவிதைக்கான மொழியமைப்பை கண்டறிய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாரி மகளிர் போருக்கு எதிராக எழுதிச் சென்ற புறநானூற்று பாடல் என்று ஒரு புதிர்வழிச் சுழலுக்குள் (Labyrinth) அழைத்துச் சென்று வெளியே கொண்டு வந்து விடுகிறார். புதிர்வழிச் சுழலின் ஒவ்வொரு படிநிலையும் ஒரு மொழிபெயர்ப்பு நிகழ்வதை அற்புதமாக நமக்குக் காட்சிப்படுத்துகிறது. இறுதியாக வழியறிந்து வெளிவரும்போதும் அந்தக் கவிதை நாம் தரிசிக்க கிடைக்கிறது. பேரனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்தக் கட்டுரை வாசிப்பிற்குப் பிறகு, ஒரு புல்வெளியையும், ஒரு வெண்ணிலவையும் காணும்போதெல்லாம் உங்களுக்குள் பேரமைதியோ, ஓய்வுநிலையோ, காதலோ ஏற்படாது. மாறாக போரில் செத்து மடிந்த நூற்றுக்காணக்கான உயிர்களின் துயர ஓலங்களைச் சுமந்து நிற்கும் இயற்கையின் சாட்சியங்கள்தான் காணக்கிடைக்கும்.

ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பு நுட்பத்தை வறட்டுச் சூத்திரத்திற்குள் அடக்காமல், அதன் அனுபவத்தைப் புரிந்து கொள்ள ஒரு பயணத்தைத் தொடங்கி பல தேசங்களையும், கவிஞர்களையும், அர்த்தங்களையும் அழைத்துச் சென்று காட்டிவிட்டார்.

இப்போது Dead Poet Society – ல் வரும் மேற்கூறிய அதே வாக்கியத்தை இங்கே குறிப்பிடுகிறேன். வாழ்க்கை இயங்கும் வரை, நீங்களும், நானும் கவிதையின் ஒரு அடியை இயற்றிக் கொண்டேதான் இருப்போம். அதற்கான திறவுகோல் ஹெராக்ளிட்டஸ் நதிக்கரையில் கிடக்கிறது.

 

***

நன்மாறன் திருநாவுக்கரசு, கவனம் பெற்று வரும் தற்கால இளம் மொழிபெயர்ப்பாளர். அரும்பு இதழில் சர்வதேச இலக்கியப் படைப்புகளை மொழியாக்கம் செய்து வருகிறார்.

இந்தக் கட்டுரை  “ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை”  நூலின் 2 வது பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

***

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page