’உன்னதம்’ அமைப்பின் “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” விழா நிகழ்வில் ஒலிபரப்பு செய்யப்பட்ட ஒலிக்கோவை.
- ஆழி செந்தில்நாதன்
நண்பர்களுக்கு வணக்கம்.
இன்று உன்னதம் நடத்துகிற இந்த “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” என்னும் இந்த மொழிபெயர்ப்பு சார்ந்த கருத்தரங்குக்கு வருகை புரிந்திருக்கும் அனைத்து மொழிபெயர்ப்புப் படைப்பாளிகளுக்கும், மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு இங்கு வந்திருக்கும் அனைத்து வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் நம் தமிழ்நாட்டில் நடக்கும் சென்னை புத்தகத் திருவிழா, இந்த வருடம் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவாக நடத்த உத்தேசித்திருக்கிறது தமிழக அரசு.
எதிர்வரும் சென்னைபன்னாட்டுப் புத்தக விழா என்பது ஒருவகையில் தொடக்கம் தான்.ஆனால், இந்த தொடக்கம் நீங்கள் அனைவரும் இருந்தால் மட்டுமே சாத்தியம். உங்களின் பிரதிநிதியாகவும் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். பல்வேறு விதமான கருத்து மாறுபாடுகள் அல்லது மோதல்கள், நலன் முரண்பாடுகள் எல்லாம் நமக்கு இடையில் இருக்கலாம்; ஆனால், அவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு இந்த சென்னை பன்னாட்டுப் புத்தக விழாவை நமது பொது விழாவாக, பொதுத் திருவிழா வாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழை உலகத்துக்கும் உலகத்தை தமிழுக்கும் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தக்கூடிய பணியில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்று உன்னதம் சார்பாக இதை நடத்துகிற திரு கௌதம சித்தார்த்தன் ஏற்பாடு செய்திருக்கிற இந்த நிகழ்வில் வந்திருக்கக்கூடிய மொழி பெயர்ப்பாளர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள்: தயவுசெய்து இந்தப் பெரு முயற்சியில் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள் இதில் பல குழுக்களை உருவாக்குவோம் அதில் ஒரு குழுவாக மொழிபெயர்ப்பாளர்களும் இருந்து, சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்த முயற்சி செய்வோம்.
பொறுமையாகக் கேட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. வணக்கம்.
***
(அக்டோபர் ஞாயிறு அன்று உன்னதம் நடத்திய “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” விழாவில் கலந்து கொள்ளுமாறு திரு ஆழி செந்தில்நாதனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தான், ஜெர்மனில் நடக்கும் சர்வதேசப் புத்தக விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பாக அரசுப் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள இருப்பதால், தன்னால் வர இயலாத நிலைமையைச் சொன்னார். விழா நிகழ்வின்போது, எதிர்வருகின்ற சென்னை புத்தகக்காட்சி, இந்த வருடம் சர்வதேசப் புத்தகக் காட்சியாக கட்டமையப் போகிறது என்ற விளக்கத்துடன் விழாவை வாழ்த்தி இந்த ஒலிக்கோவையை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார். இது நிகழ்வில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.)