• Fri. Nov 24th, 2023

உன்னதம் “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” : நாவல் மொழிபெயர்ப்பின் ஒரு பகுதி

ByGouthama Siddarthan

Nov 1, 2022

 

’உன்னதம்’ அமைப்பின் “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” விழாவுக்கு அனுப்பப்பட்ட நாவல் மொழிபெயர்ப்பின் ஒரு பகுதி

 

  • பா. வெங்கடேசன்

 

முறிந்த ஏப்ரல்
(அல்பேனியப் புதினம்)
இஸ்மைல் கடார்

தமிழில்
பா. வெங்கடேசன்

***

இஸ்மைல் கடார் (1936)

அல்பேனிய நாட்டுப் புதின எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், திரைக்கதையாசிரியர், நாடக ஆசிரியர். மேன் புக்கர் சர்வதேச விருது உள்ளிட்ட பல விருதுகளைத் தன் ஆக்கங்களுக்காகப் பெற்றிருப்பவர். 15 வருடங்களாக நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இருப்பவர். கட்சி வேறுபாடின்றி அல்பேனியாவின் அரசியல் தலைவராகப் பொறுப்பேற்று அதை வழிநடத்திச் செல்ல பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டவர். அல்பேனிய கம்யூனிச அடக்குமுறைகளையும் தணிக்கைகளையும் தப்புவதற்குத் தொன்மங்களையும் நாட்டார் கதைகளையும் உருவகக் கதைகளையும் புராணங்களையும் நீதிக்கதைகளையும் வீரக்கதைகளையும் தன் ஆக்கங்களில் உருவகங்களாய்ப் பயன்படுத்திக்கொண்டதோடு தன்னையும் தன் சொந்த நகரமான டிரானாவிலிருந்து பாரீஸூக்கு நாடுகடத்திக்கொண்டவர். அல்பேனியாவில் கடாரின் ஒரு நூலாவது இல்லாத வீட்டைப் பார்ப்பது அரிது என்கிறது தி நியூயார்க் டைம்ஸ். (நன்றி: விக்கிபீடியா)

முறிந்த ஏப்ரல் (1978)

வடக்கு அல்பேனியாவில் இன்றும் புழக்கத்திலிருப்பதாகச் சொல்லப்படும், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இரத்தப் பழி மரபைப் பின்னணியாகக் கொண்ட, 1930களில் நடக்கும் (கடாரின் சிறுபிராய தசாப்தம்) காதல் கதைதானென்றாலும் முறிந்த ஏப்ரல் உலகின் பல தொன்மையான பண்பாடுகளுக்கு மிகப் பிந்தைய காலக்கட்டத்தில் துவங்கி அவ்வனைத்தையும் தன்னுள் இழுத்துக்கொண்ட ஆங்கில மொழிச் சிந்தனை முறையால் கட்டமைக்கப்பட்ட நவீன மனம் தொன்மங்களில் உயிர்த்துக்கொண்டிருக்கும் நிலம் ஒன்றிற்குள் புக
எத்தனிக்கையில் எதிர்கொள்ளும் கேள்விகளையும் அதிர்ச்சிகளையும் மயக்கங்களையும் ஈர்ப்புகளையும் மையமாகக் கொண்டே, தன்னுடைய தொன்மை குறித்த பிரக்ஞையை மீட்டுக்கொண்டுவிட்ட மொழியில், கதையாடலை நிகழ்த்துகிறது. உலகின் மிகத் தொன்மையான பண்பாடுகளில் ஒன்றான இந்தியாவில் காலனியச் சிந்தனைமுறையை அடிப்படையாகக் அறிவியக்கங்கள் இன்றுவரை உண்டாக்கியிருக்கும் சாதக பாதகமான பாதிப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளில் இருக்கும் குழப்பங்களையும் (சொந்த நிலத்தின் நேர்மறைப் பண்பாட்டுக் கூறுகளுக்குச் சொந்த மொழிச் சிந்தனைகளிலிருந்தும் எதிர்மறைக் கூறுகளை விமரிசிக்க மேற்கத்தியச் சிந்தனைகளிலிருந்தும் அளவுகோல்களைப் பெற்றுக்கொள்ளும் இரட்டை நிலைப்பாடு) இந்தப் புதினத்தின் உள்ளார்ந்த நோக்கத்தைப் பொருத்திப் புதிய பார்வையைப் பெற முடியும் என்று தோன்றியதால் இது ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிப்பிற்கு முன்வைக்கப்படுகிறது ((நிறைய ஐயப்பாடுகளுடன்தான். “ஆங்கிலத்தின் வார்ப்பச்சில் (தென்னாப்பிரிக்காவின்) கதையை வைத்து அழுத்தினால் அது அழன்றுபோன, காலாவதியான ஒன்றாகவே வெளிவரும்” (மானக்கேடு புதினத்தில் ஜே.எம். கூட்ஸி (தமிழில் ஷஹிதா)). முறிந்த ஏப்ரல் 2001ல் ‘Behind the sun’ என்ற பெயரில் பிரேசிலில் திரைப்படமாக்கப்பட்டுச் சில விருதுகளையும் பெற்றிருக்கிறது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. பதிப்பகத்தாரே (New Amsterdam Books andSaqui Books) 1990ல் அதைச் செய்ததாக அறியப்படுகிறது. இரத்தப் பழி மரபும் அது சார்ந்த கேள்விகளும் காடரே அடிக்கடி தன் புதினங்களில் பயன்படுத்தும் ஒரு கருப்பொருளும்கூட.

பா. வெங்கடேசன் (1963)

எண்பதுகளின் பிற்பகுதி தொடங்கி தமிழ் இலக்கியச் சூழலில் செயல்பட்டுவரும் பா.வெங்கடேசன், மதுரையில் பிறந்து கல்லூரிக் காலம் வரையில் அங்கேயே வளர்ந்தவர். தொண்ணூறுகளின் மத்தியில் பணி நிமித்தமாக ஓசூருக்குக் குடிபெயர்ந்து பிறகு அங்கேயே தங்கிவிட்டிருக்கிறார். புதினங்கள், சிறுகதைகள், குறும்புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என்று இலக்கியத்தின் சாத்தியப்பட்ட தளங்களில், சாத்தியப்பட்ட வடிவங்களில் தன் பங்களிப்பைச் செய்துவருகிறார். புனைவிலக்கியத்தில் இவருடைய பங்களிப்பிற்காக ‘ஸ்பாரோ’, ‘தமிழ்திரு’, ‘விளக்கு’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

***

முறிந்த ஏப்ரல் – இஸ்மைல் கடார்

அவன் காலடிகள் சில்லிட்டிருந்தன. கால்களை ஒவ்வொரு முறை அசைக்கும்போதும் காலணியின் கீழ் கூழாங்கற்கள் அனாதரவாக உராய்வதைச் செவியற்றான். ஆனால் உண்மையில் கைவிடப்பட்ட உணர்வு அவனுக்குள்தான் இருந்தது. நெடுஞ்சாலையைப் பார்த்திருந்த ஒருமேட்டின் பின்னால் காத்திருந்த அவன் இதற்குமுன் ஒருபோதும் இப்படி நெடுநேரம் அசையாமல்கொள்ளாமல் இருந்ததில்லை.

பகல்வெளிச்சம் மங்கிக்கொண்டிருந்தது. அச்சமுற்றவனாய் அல்லது வெறுமே மனக்கலக்கமுற்றவனாய், துப்பாக்கியின் அடிக்கட்டையைத் தன் கன்னத்தில் வைத்துக்கொண்டிருந்தான். விரைவில் இரவாகிவிடும். பிறகு மங்கிக்கொண்டிருக்கும் வெளிச்சத்தில் அவன் தன் ஆயுதத்தின் இலக்கைப்பார்க்கவியலாதவனாக ஆகிவிடுவான். “குறி வைக்கவியலாத அளவிற்கு மிக இருட்டிவிடுவதற்கு முன்னால் அவன் கண்டிப்பாக வந்துதான் ஆகவேண்டும்,” அவன் தந்தை சொல்லியிருந்தார், “சற்றுப் பொறுமையாகக் காத்திரு”.

சாலையின் இரு மருங்கிலும் புதர் மண்டிய வெளியெங்கும் சிதறிக்கிடந்த காட்டு மாதுளைகளின்பக்கமாகப் பாதி உருகிய பனித்திப்பிகளை துப்பாக்கிக் குழல் மெதுவாக ஒதுக்கித் தள்ளியது. கிட்டத்தட்ட நூறாவது தடவையாக அவன் அது தன் வாழ்வில் விதிவசப்பட்ட நாள் என்று நினைத்துக்கொண்டான். பிறகு துப்பாக்கிக் குழல் ஊசலாடி முன்னர் இருந்த இடத்திற்கே மீண்டும் திரும்பியது. விதிவசப்பட்ட நாள் என்று அவன் அதை அழைத்தபோது பனித்திப்பிகளையும் தான் செய்யவிருப்பது என்ன என்பதைப் பார்ப்பதற்காக நண்பகலிலிருந்தே காத்துக்கொண்டிருப்பவைபோலத் தோற்றமளித்த காட்டு மாதுளைகளையும்தவிர வெறெதுவும் அவன் மனதில் இருக்கவில்லை.

விரைவிலேயே இரவு இறங்கிவிடும், சுடுவதற்கு இயலாத வகையில் இருள் கவிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டான். அந்தி விரைவாக வந்துவிடுவதை விரும்பினான். எனில் இரவும் அதன் பின்னாலேயே சாடி வந்துவிடும். பிறகு அவனும் இந்த இழவெடுத்த பதுங்கித் தாக்கும் வேலையிலிருந்து தொலைவாக ஓடிவிட முடியும். பழி வாங்குவதற்காக அவன் தன் வாழ்வில் இரண்டாவதுமுறையாக இப்படிக் காத்துக் கிடந்தான்,

ஆனால் அவன் கொல்ல வேண்டியவனும் அதே மனிதன்தானென்பதால் இந்தப் பதுங்கித் தாக்கும் வேலை உண்மையில் முன்னதன் நீட்சிதான்.

சில்லிட்ட காலடிகளின்மேல் மீண்டும் அவன் கவனம் திரும்பியது. குளிர் உடலுக்குள் ஏறாவண்ணம் தடுக்கிறவனைப்போலக் கால்களை அசைத்துக்கொண்டான். ஆனால் நெடுநேரத்திற்கு முன்பே அது அவன் வயிற்றை, அவன் நெஞ்சை, அவன் தலையை அடைந்துவிட்டிருந்தது. சாலை மருங்கின் பனித்திப்பிகளைப்போலத் தன் மூளையின் துணுக்குகளும் உறைந்துவிட்ட உணர்வை அடைந்திருந்தான்.

ஒரு தெளிவான சிந்தனையை வடிவமைத்துக்கொள்ளத் தன்னால் முடியவில்லையென்பதாக உணர்ந்தான். காட்டு மாதுளைகள், பனித்திப்பிகள் ஆகியவற்றின்மேலான ஒரு வெற்று எரிச்சல் மாத்திரமே இருந்தது. அவை மட்டும் இல்லையென்றால் தான் இந்தக் குறிபார்த்துக்கொண்டிருக்கும் வேலையை எப்போதோ கைவிட்டிருக்கக்கூடும் என்றும் சில சமயங்களில் தனக்குள் சொல்லிக்கொண்டான். ஆனால் அவை அங்கே இருந்தன, விலகிச் செல்வதிலிருந்து அவனைத் தடுத்து நிறுத்தும் அசையாச் சாட்சிகளாய். அவன் யாருக்காகக் காத்துக்கொண்டிருந்தானோ அந்த மனிதனைச் சாலைவளைவில் பார்ப்பதாய், ஒருவேளை அந்த நாளில் இருபதாவது தடவையாக, அவனுக்குத் தோன்றியது. அந்த மனிதன் சிறிய அடிகளாக எடுத்துவைத்து வந்தான். இவனுடைய துப்பாக்கியின் கருப்புக்குழல் வலது தோளுக்குமேல் உயர்ந்தது. கண்காணித்துக்கொண்டிருந்தவன் தயாரானான். இந்த முறை அது மாயத்தோற்றமில்லை. உண்மையாகவே அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மனிதன்தான்.

முன்பு பல தடவைகள் செய்திருந்ததைப்போலவே இப்போதும் ஜார்க் துப்பாக்கிக்குழலைத் தோளுக்குக் கொண்டுவந்து அந்த மனிதனுடைய தலைக்குக் குறி வைத்தான். ஒரு கணம் அந்தத் தலை அவனுடைய பார்வையைத் தப்ப முயன்று அவனுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைப்போலத் தோன்றியது. கடைசி நொடியில் அந்த மனிதனின் முகத்தில் ஒரு கேலிச் சிரிப்பைப் பார்த்ததாகக்கூட அவன் எண்ணிக்கொண்டான். ஆறு மாதங்களுக்கு முன்னால் இதேதான் நடந்திருந்தது. முகத்தைச் சிதைக்க வேண்டாமென்று (இறுதி நொடியில் அந்த இரக்க உணர்வு எங்கிருந்து வந்ததென்று யார் சொல்ல முடியும்) ஆயுதத்தின் குறிமுனையைக் கீழிறக்கி எதிரியின் கழுத்தைக் காயப்படுத்திவிட்டிருந்தான்.

அந்த மனிதன் நெருங்கி வந்தான். தயவுசெய்து இந்த முறை காயமெதுவும் கூடாது, ஜார்க் வேண்டிக்கொள்ளும்விதத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். முதல் காயத்திற்கான அபராதத்தைச் செலுத்துவதற்கே அவன் குடும்பம் பாடாய்ப் பட்டுவிட்டிருந்தது. இரண்டாவது அபராதம் உறுதியாக அவர்களை அழித்தேவிடும். ஆனால் சாவுக்கு அபராதம் எதுவும் கிடையாது.

அந்த மனிதன் நெருங்கி வந்தான். காயப்படுத்துவதைக் காட்டிலும் சுத்தமாகக் குறி தவறவிட்டுவிடுவது நல்லது என்று ஜார்க் நினைத்துக்கொண்டான். அந்த மனிதன் வருவதைப் பார்ப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருந்த ஒவ்வொரு தடவையும் செய்ததைப்போலவே வழமையை அனுசரித்து இப்போதும் சுடுவதற்குமுன் அவனுக்கு எச்சரிக்கை விடுத்தான். அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, தான் அவனை உரக்க அழைத்தோமா அல்லது வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டுவிட்டனவா என்பதை அவன் தெரிந்துகொள்ளவேயில்லை. உண்மையில் மற்றவன் சட்டென்று தன் தலையைத் திருப்பினான்தான். அவன் தன் தோளிலிருந்து துப்பாக்கியை விடுவிப்பவனைப்போல புஜங்களை அசைப்பதையும் ஜார்க் பார்த்தான். சுட்டான். பிறகு தலையை நிமிர்த்தி அந்தச் செத்துப்போன மனிதன் – அவன் இன்னும் நின்றுகொண்டிருந்தான்,

என்றாலும் தான் அவனைக் கொன்றுவிட்டோமென்பதில் ஜார்க் உறுதியாயிருந்தான் – ஒரு அடி முன்னுக்கு வருவதை, தன் துப்பாக்கியை வலதுபுறம் நழுவவிடுவதை, உடனே இடதுபுறம் விழுவதை, திகைத்துப்போனவனைப்போலக் கவனித்தான்.
ஜார்க் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு உடலை நோக்கி நடந்தான். சாலை வெறிச்சிட்டிருந்தது. அவனுடைய காலடிகள் எழுப்பிய ஒலி மட்டுமே ஒரே ஒலியாக இருந்தது. இறந்த மனிதன் குவியலாக விழுந்து கிடந்தான். ஜார்க் குனிந்து அவனை எழுப்புபவனைப்போலத் தன் கையை அவன் தோளில் வைத்தான். “என்ன செஞ்சிக்கிட்டிருக்கேன்?” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். இறந்த மனிதனைத் திரும்பவும் உயிர்ப்புக்குக் கொண்டுவர விரும்புகிறவனைப்போல மீண்டும் அவன் தோளைப் பற்றினான். “ஏன் இதச் செஞ்சிக்கிட்டிருக்கேன்?” என்று நினைத்தான். உடனே தான் அந்த மற்ற மனிதன்மேல் குனிந்தது அவனை முடிவிலியான உறக்கத்திலிருந்து எழுப்புவதற்காக அல்ல, மாறாக அவனை மல்லாக்கப் புரட்டிப்போடுவதற்காகவே என்று தெளிந்துவிட்டான். அவன் வெறுமே மரபைப் பின்பற்றுவதிலேயே குறியாய் இருந்தான். அவனைச் சுற்றி பனித்திப்பிகள் இன்னும் கிடந்தன, சிதறலான சாட்சிகளாக.

எழுந்து நின்றான். புறப்படவிருந்த சமயத்தில்தான் இறந்த மனிதனின் தலைக்கருகில் அவனுடைய துப்பாக்கியை வைத்தாக வேண்டுமென்கிற நினைவு வந்தது.

இவை அனைத்தையுமே அவன் ஒரு கனவில்போலத்தான் செய்தான். வாந்தி வரும்போலிருந்தது. ரத்தத்தைப் பார்த்ததுதான் காரணம் என்று பலமுறை தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். சில நிமிடங்களுக்குப்பின் வெறிச்சிட்டிருந்த சாலையில் விரைந்து இறங்கிக்கொண்டிருந்தான், ஏறக்குறைய ஒரு ஓட்டமாக.

அந்தி இறங்கிக்கொண்டிருந்தது. ஏனென்று தெரியாமலேயே அவன் இரண்டு மூன்று தடவைகள் பின்னால் திரும்பிப் பார்த்தான். சாலை இன்னும் முற்றிலும் காலியாகத்தான் இருந்தது. தளர்ந்துகொண்டிருந்த அந்த நாளில் அசைவற்று வெறிச்சோடிய சாலை புதர்க்குவியலுக்கும் புதர்க்காட்டிற்குமிடையே தொலைவாக நீண்டது. சற்றுத் தள்ளி முன்னாலெங்கோ அவன் பொதிக் கழுதைகளின் மணியோசையைக் கேட்டான். பிறகு மனிதக்குரல்களை. பிறகு ஒரு மக்கள் குழுவைப் பார்த்தான். அந்தி மயக்கத்தில் அவர்கள் வெளியூர்க்காரர்களா அல்லது சந்தையிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும் மலைக்குடிகளா என்பதைச் சொல்வது கடினமாக இருந்தது. அவர்கள் அவன் எதிர்பார்த்திருந்தததைவிட விரைவாகவே அவனை வந்தடைந்துவிட்டார்கள். ஆண்கள், இளம் பெண்கள், குழந்தைகள்.

அவர்கள் முகமன் கூறினார்கள். அவன் நின்றான். பேசுவதற்கு முன்பாகவே தான் வந்த திசையைச் சுட்டிக்காட்டினான். பிறகு உடைந்த குரலில் சொன்னான், “அங்கே, சாலை வளைவில், ஒரு மனிதனைக் கொன்றுவிட்டேன். அவனைப் புரட்டி நிமிர்த்திப் போட்டுவிடுங்கள் நல்லவர்களே, அவன் தலைக்கு அருகில் அவனுடைய துப்பாக்கியையும் வெத்துவிடுங்கள்.”

அந்தச் சிறிய கூட்டம் அசைவற்று நின்றது. பிறகு ஒரு குரல் கேட்டது, “நீ ஒன்றும் இரத்த நோய் பிடித்தவன் இல்லையே?” அவன் பதிலளிக்கவில்லை.

அந்தக் குரல் பரிகாரமொன்றைப் பரிந்துரைத்தது. ஆனால் அவன் அதைக் கேட்டுக்கொள்ளவில்லை. மீண்டும் நடையைத் துவக்கினான். இறந்த மனிதனுடைய உடல் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப் புரட்டிப்போடும்படி அவர்களிடம் சொல்லிவிட்டதில் இப்போது ஆசுவாசமாக உணர்ந்தான். அதைத் தானே செய்துவிட்டிருந்தோமா என்பதை அவனால் நினைவுகூர முடியவில்லை. கானூன் (புனிதச் சட்டம்) கொலை செய்தவருடைய அதிர்ச்சியிலிருக்கும் மனநிலைக்கான ஏற்பாடுகளைச் செய்துதானிருந்தது, அது அவரால் செய்திருக்க முடியாதவை எதுவானாலும் அவற்றைச் செய்து முடிக்க வழிப்போக்கர்களுக்கு அனுமதியளித்தது. எந்த வகையிலும், ஒரு இறந்த மனிதனை முகம் குப்புறவும் அவனுடைய ஆயுதம் தொலைவாகவும் இருக்கும்படி விட்டுவைப்பது மன்னிக்க முடியாத இழிச்செயல்.

அவன் கிராமத்தை அடைந்தபோது இரவு இன்னும் இறங்கியிருக்கவில்லை. அது இன்னும் அவனுடைய விதிவசப்பட்ட நாளாகவேதான் இருந்தது.

குல்லாவின் (அல்பேனியாவின் மலைப் பிரதேசங்களுக்கே உரித்தான கோபுர வடிவக் கல் வசிப்பிடம்) கதவு பாதி திறந்து கிடந்தது. அதை அவன் தன் தோளால் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

“என்ன ஆயிற்று?” உள்ளேயிருந்து யாரோ வினவினார்கள்.

அவன் தலையை அசைத்தான்.

“எப்போது?”

“இப்போதுதான்.”

மரப்படிகளில் காலடிகள் இறங்கி வருவதைச் செவியுற்றான்.

“உன் கைகளில் ரத்தம்” அவன் அப்பா சொன்னார். “போய்க் கழுவிக்கொள்.”

“நான் அவனைப் புரட்டும்போது பட்டிருக்கவேண்டும்.”

அவர் தேவையில்லாமல் தன்னை வருத்திக்கொண்டார். அவன் கைகளை ஒருமுறை பார்த்திருந்தாலே அது அவருக்குச் சொல்லிவிட்டிருக்கும் அவன் ஒவ்வொன்றையும் விதிகளின்படிதான் செய்திருந்தான் என்று.

குல்லாவில் வறுத்த காபியின் மணம் இருந்தது. ஆச்சரியப்படும் விதத்தில் அவனுக்குத் தூக்கக் கலக்கமாக இருந்தது. இரண்டு தடவை கொட்டாவி விட்டான். அவனுடைய இடது தோளில் சாய்ந்துகொண்ட சிறிய தங்கையின் ஒளிரும் கண்கள் ஒரு மலையின் பின்புறத்தில் இரண்டு நட்சத்திரங்களைப்போல வெகு தொலைவில் தெரிந்தன.

“இனி என்ன?” அவன் யாரிடமும் குறிப்பாக இல்லாமல் திடீரெனப் பேசினான்.

“சாவைப்பற்றிக் கிராமத்துக்குச் சொல்லவேண்டும் நாம்” அவன் தந்தை பதிலளித்தார். பிறகுதான் ஜார்க் தன் தந்தை காலணிகளை மாட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்தான்.

பிறகு அவன் தாய் அவனுக்காகக் தயாரித்திருந்த காபியைக் குடித்துக்கொண்டிருந்தபோது வெளியே அந்த முதல் கத்தலைக் கேட்டான்:

“பெரிஷாவின் ஜார்க் ஜெரியஃப் க்ரியாச்சூச்சேவைச் சுட்டாயிற்று.”
அந்தக் குரல், அதன் தனித்துவமிக்க தொனியுடன், ஒரே சமயத்தில் தண்டோராக்காரரின் அழைப்பாயும் ஒரு புராதன தோத்திரக்காரரின் பாடுகையாயும் ஒலித்தது.

ஒரு நொடி அந்த மனிதாபிமானமற்ற குரல் தூக்கக் கலக்கத்திலிருந்து அவனை உசுப்பிவிட்டது. தன்னுடைய பெயர் தன்னைத்தானே குரூரமாக வெளியில் பீய்ச்சிக்கொள்ளவேண்டி அவன் உடலை, அவன் மார்பை, அவன் தோலைப் புறக்கணித்து வெளியேறிவிட்டிருந்ததைப்போல உணர்ந்தான். இப்படி அவன் உணர்வது இதுதான் முதல்முறை. இரக்கமற்ற தண்டோராக்காரரின் ஓலத்தை அவன் தனக்குள் திரும்பச்சொல்லிக்கொண்டான், பெரிஷாவின் ஜார்க். அவன் இருபத்தியாறு வயதினன், அவன் பெயர் வாழ்வில் முதன்முறையாக அதன் முழு அர்த்தத்தைப் பெறுகிறது.

வெளியே சாவுச் செய்தி சொல்பவர்களோ அந்தப் பெயரைப் பறந்து பறந்து எல்லாயிடங்களிலும் பரப்பினார்கள்.

அரைமணி நேரம் கழித்து அவர்கள் அந்த மனிதனுடைய உடலை எடுத்து வந்தார்கள். வழமைப்படி அவனை நான்கு புங்கைமரக் கழிகளாலான சேக்கையில் கிடத்தியிருந்தார்கள். சிலர் இன்னும்கூட அவன் சாகவில்லையென்று நம்பினார்கள்.
பலியானவனின் தந்தை தன் வீட்டு வாயிற்கதவின்முன் காத்திருந்தார். அவர் மகனைச் சுமந்து வந்த ஆள் நாற்பதடி தொலைவில் இருந்தபோது அவர் உரக்கக் கேட்டார்:

“எதைக் கொண்டு வருகிறாய் என்னிடம் நீ? காயமா, சாவா?”

பதில் சுருக்கமானதாக உலர்ந்ததாக இருந்தது.

“சாவு.”

அவர் நா அவர் வாயின் ஆழத்தில், ஆழத்தில் ஈரத்தை அவாவியது. பிறகு அவர் வலி மிகப் பேசினார்:

“அவனை உள்ளே தூக்கிக்கொண்டு போ. கிராமத்திற்கும் நம் உறவுமுறைகளுக்கும் துக்கச் செய்தியைத் தெரிவி.”

ப்ரெஷ்வ்டோட் கிராமத்திற்குத் திரும்பிக்கொண்டிருக்கும் கால்நடைகளின் மணியோசைகள், மாலை வழிபாடுகளின் மணியோசை மற்றும் இரவு கவிழ்வதன் அத்தனை ஒலிகளும் சாவுச் செய்தியின் பளுவைச் சுமந்தவையாகத் தோன்றின.

தெருக்களும் சந்துகளும் அந்த மாலைப் பொழுதில் வழக்கத்திற்கு மாறான பரபரப்பில் இருந்தன. தேய்ந்துகொண்டிருந்த ஒளியில் குளிர்ந்துவிட்டவைபோலத் தீப்பந்தங்கள் கிராமத்தின் முனையிலெங்கோ மினுங்கின. இறந்த மனிதனின் வீட்டிற்கும் கொன்றவனின் வீட்டிற்குமாக வந்துபோய்க்கொண்டிருந்த ஆட்கள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தார்கள். மற்றவர்கள் இரண்டு மூன்றுபேராகப் போய்விட்டுத் திரும்பினார்கள்.

கிராமத்தின் வெளிப்பகுதி வீடுகளின் சன்னல்களில் மக்கள் இந்த அண்மைச் செய்தியைப் பரிமாறிக்கொண்டார்கள்:

“கேள்விப்பட்டாயா? ஜார்க் பெரிஷா ஜெரியஃப் க்ரியாச்சூச்சேவைக் கொன்றுவிட்டான்.”

“ஜார்க் பெரிஷா தன் அண்ணனுடைய ரத்தத்தைத் திரும்ப எடுத்துவிட்டான்.”

“பெரிஷாக்கள் இருபத்து நான்கு மணிநேர பெஸ்ஸா (வாக்குறுதி, நம்பிக்கை, சண்டைநிறுத்தம்) கேக்கப்போகிறார்களாயென்ன?”

“ஆமாம், பின்னே?”

உயர்ந்த கல்வீடுகளின் சன்னல்கள் கிராமத் தெருக்களில் வருகிறவர்களையும் போகிறவர்களையும் பார்த்தபடியிருந்தன. இப்போது இரவு விழுந்துவிட்டது. தீப்பந்தம் தழல் நிலையடைந்ததைப்போலத் திண்மை கூடித் தெரிந்தது. சிறிது சிறிதாக அது ஆழ்ந்த செந்நிறத்திற்கு மாறியது. அதன் எரிபிழம்பு மர்மமான ஆழத்திலிருந்து மேலெழுந்துகொண்டிருந்தது. வரவிருக்கிற இரத்தம் சிந்துதலை அறிவிப்பவைபோலத் தீப்பொறிகள் உயரவாக்கில் பறந்தன.

நான்கு மனிதர்கள், அவர்களிலொருவர் மூத்தவராய்த் தோன்றினார், இறந்தவனின் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

“தூது செல்கிறவர்கள் பெரிஷாக்களுக்கு இருபத்துநான்கு மணிநேர பெஸ்ஸா கேட்கப் போகிறார்கள்,” சன்னலிலிருந்து யாரோ சொன்னார்கள்.

“அவர்கள் ஒத்துக்கொள்வார்களாயென்ன?”

“ஆமாம், பின்னே?”

இருப்பினும் மொத்த பெரிஷா குலமுமே வருமுன் காப்பதற்குத் தங்களை தயாராக்கிக்கொண்டுதானிருந்தது. இங்குமங்குமாக குரல்களைக் கேட்க முடிந்தது: “முர்ராஷ், உடனே வீட்டுக்குப் போ! கென், கதவைச் சார்த்து. ப்ரேங்கா எங்கே?”

பலியானவனின் குடும்பத்தவர் கால அளவைப் பொறுத்து இரண்டுவிதமான சண்டை நிறுத்தங்களில் ஏதேனும் ஒன்றை ஒத்துக்கொள்ளாத வரையில் இது ஒரு ஆபத்தான தருணமாகவே இருக்குமாதலால், பெரிஷா குலத்தினர், அருகிலோ தொலைவிலோ இருக்கும் அவர்களுடைய உறவினர்கள் என அத்தனைபேருடைய வீடுகளின் கதவுகளும், மூடப்பட்டிருந்தன. புதிதாகச் சிந்திய இரத்தத்தால் குருட்டுக்கோபத்திலிருக்கும் க்ரியாச்சூச்சேவ்கள் புனிதச் சட்டப்படி பெரிஷா குடும்பத்தின் எந்த உறுப்பினர் மேலும் பழி தீர்த்துக்கொள்ள உரிமையுள்ளவர்கள்.

அதிகாரம் பெற்ற பேராளர் குழு மீண்டும் வெளியே வருவதற்காக அனைவரும் சன்னல்களிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். “அவர்கள் சண்டை நிறுத்தம் கொடுத்துவிடுவார்களா?” எனப் பெண்கள் கேட்டுக்கொண்டார்கள்.

கடைசியில், பேசப்போன நால்வரும் வெளியே வந்தார்கள். பேச்சு வார்த்தை சுருக்கமாகவேதான் இருந்திருந்தது. அவர்களுடைய உடல்மொழி எதையும் அறியத் தந்துவிடவில்லையென்றாலும் சீக்கிரமே ஒரு குரல் விஷயத்தை வெளிப்படுத்திவிட்டது.
“க்ரியாச்சூச்சே குடும்பம் பெஸ்ஸா கொடுத்துவிட்டது.”

அது குறுகிய காலச் சண்டை நிறுத்தமே என்பதை எல்லோரும் அறிந்தார்கள். இருபத்து நான்கு மணி நேர பெஸ்ஸா. நீண்ட கால பெஸ்ஸாவைப் பொறுத்தவரை – முப்பது நாள் சண்டை நிறுத்தம் – அதைக் கிராமம்தான் கேட்க முடியுமென்பதால், அதைப்பற்றி இன்னும் யாரும் பேசவில்லை.

எப்படியிருந்தாலும் கடைசியாகப் பலியானவனை அடக்கம் செய்யும் வரையிலும் அது வேண்டப்படவும் முடியாது.

குரல்கள் வீட்டுக்கு வீடு பறந்தன:

“க்ரியாச்சூச்சே குடும்பம் பெஸ்ஸா கொடுத்துவிட்டது.”

“க்ரியாச்சூச்சேக்களிடமிருந்து பெஸ்ஸா கிடைத்துவிட்டது.”

“சிறப்பு. குறைந்தபட்சம் ரத்தம் சிந்தாத ஒரு இருபத்துநான்கு மணி நேரம் நமக்குக் கிடைக்கும்.” ஒரு தணிந்த குரல் இறக்கியேற்றும் கதவின் பின்புறமிருந்து மூச்சுவிட்டுக்கொண்டது.

***

(அக்டோபர் ஞாயிறு அன்று உன்னதம் நடத்திய “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” விழாவில்கலந்து கொள்ளுமாறு திரு பா வெங்கடேசனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தன்னால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட நேபாளப் பயணம் இருப்பதால், கலந்து கொள்ள முடியாது என்றும், தான் தற்போது மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருக்கும் அல்பேனிய எழுத்தாளர் இஸ்மைல் கடாரின் “முறிந்த ஏப்ரல்” நாவலிலிருந்து ஒரு பகுதியை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருந்தார். அவர் அனுப்பி வைத்திருந்த நாவலின் ஒரு பகுதி இது.

இஸ்மைல் கடாரின் “முறிந்த ஏப்ரல்” என்னும் இந்த நாவல் விரைவில் காலச்சுவடு பதிப்பகத்தில் வெளிவர இருக்கிறது.)

 

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page