’உன்னதம்’ அமைப்பின் மொழிபெயர்ப்பு உரையாடல்கள் கருத்தரங்கம்
இரண்டாம் அமர்வுக்கான தலைமை உரை
***
- ஜி.குப்புசாமி
உன்னதம் வழங்கும் ‘மொழிபெயர்ப்பு உரையாடல்கள்’ கருத்தரங்குக்கு இங்கே வருகை தந்திருக்கும் என் சஹிருதய மொழிபெயர்ப்பாளர்கள், வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர் கௌதம சித்தார்த்தன் தமிழ் இலக்கிய உலகின் சோர்வற்ற போராளி. அவர் அளவுக்கு மொழிபெயர்ப்புகளின் மீது காதல் கொண்டிருப்பவரை நமது இலக்கிய உலகில் காண முடியாது. இப்போது அவர் ஒருங்கிணைத்திருக்கும் இக்கருத்தரங்கில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலாமைக்கு மிகவும் வருந்துகிறேன். இவ்வளவு முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களும் ஒரே அரங்கில் கூடியிருக்கையில் அவர்களோடு அளவளாவவும், விவாதிக்கவும் கிடைத்த வாய்ப்பை இழந்திருக்கிறேன், அதற்காக நண்பர்கள் என்னை மன்னிக்கவேண்டும்.
மொழிபெயர்ப்பு குறித்த காத்திரமான உரையாடல்களே நிகழாத சூழல் நமது தமிழ் இலக்கியச் சூழல். மொழிபெயர்ப்புக்கும் தழுவலுக்கும் இடையே வேறுபாடு தெரியாத காலம் ஒன்று தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இங்கே இருந்ததையும், புதுமைப்பித்தனும் கல்கியும் நடத்திய சமரையும் நாம் அறிவோம். அந்த காலகட்டத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்பியல் தொடர்பான தீவிர விவாதங்கள் நடந்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்புக் கொள்கைகள், உத்திகள், ஒப்பீடுகள் கல்விப்புலத்திலோ, இலக்கிய உலகிலோ விவாதிக்கப்பட்டிருக்கவேண்டும். மூலப்பிரதியுடன் மொழிபெயர்ப்புப் பிரதியை ஒப்பிட்டு ஆய்வுகள் நடந்திருக்கவேண்டும். கல்விக்கூடங்களில் மறைவாக தமக்குள்ளே, கலந்துபேசி ஆய்வேடுகளை உருவாக்கி முனைவர் பட்டம் பெற்றுக்கொண்டு இருட்டு நூலகங்களில் வைக்கப்படும் காகித அடுக்குகளைத் தவிர, ஆக்கபூர்வமாக எதுவுமே இங்கே நடக்கவில்லை, நடந்திருந்தாலும் வெளிச்சத்துக்கு வந்ததில்லை.
இதனால் விளைந்த மிகப் பெரிய அவலம், மொழிபெயர்ப்புகளை அணுகுவதிலும், அறுதியிடுவதும் காணப்படும் தெளிவின்மை. இன்னமும் நல்ல, சரியான மொழிபெயர்ப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதில் குழப்பமான கருத்துக்களே நம்மிடம் நிலவி வருகிறது. வாசிக்க எளிமையாக இருக்கும் மொழிபெயர்ப்பும், இடங்களின் பெயர்களையும் பாத்திரங்களின் பெயர்களையும் மாற்றிவிட்டால் தமிழிலேயே எழுதப்பட்ட கதையைப் போலிருக்கும் மொழிபெயர்ப்புமே சிறந்த மொழிபெயர்ப்பு என்ற நம்பிக்கை வாசகர்களிடம் மட்டுமன்றி, தீவிரப் படைப்பாளிகள் சிலரிடமும் இருந்துவருகிறது. தேர்ந்த இலக்கிய இதழ்களிலும் மொழிபெயர்ப்பு நூல்களின் விமர்சனத்தின் கடைசியில் ‘டெம்ப்ளேட்’டாக ஒரு வரி – ‘தமிழிலேயே எழுதப் பட்டதைப் போல சரளமான நடை’ – இப்போதும் இருந்து வருகிறது.
சரளமான நடையில் மொழிபெயர்ப்பதுதான் சரியான முறையா, அயற்படைப்புகள் தமிழ்நாட்டிலேயே நடப்பதைப் போல இருந்தால்தான் நல்ல மொழியாக்கமா என்பதையெல்லாம் நாம் இன்று விவாதிக்கவேண்டும்.
***
தமிழில் மொழிபெயர்ப்புகளை மூலத்துடன் ஒப்புநோக்கு சரிபார்க்கும் நடைமுறை ஏறக்குறைய கிடையாது. விமரிசகர்களும் கூட மூலத்தோடு நுட்பமாக ஒப்பிட்டு அறுதியிடுவதை காணமுடிவதில்லை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வரும் நூல்களை மூலப்பிரதியோடு ஒப்பிட்டு விமர்சனங்கள் வருவதை words without borders, world literature today போன்ற மின்னிதழ்களில் காணலாம். அதைப்போன்ற நிலை தமிழிலும் வந்தாக வேண்டும். அதுதான் சரியான விமர்சனமாகவும் இருக்க முடியும்.
நல்ல எழுத்துத்திறமை மிக்கவர்கள் மொழிபெயர்ப்புத்துறைக்கு வருவதில்லை என்ற கருத்து ஒன்று உண்டு. சிறப்பாக எழுதத் தெரிந்தவன் சொந்தமாகவே எழுதிவிட்டுப் போய்விடுவான், இந்த Thankless / dirty job ஐ தேர்ந்தெடுக்க மாட்டான் என்ற கருத்தில் ஓரளவு உண்மையும் கூட இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பலரும் மொழிபெயர்த்திருக்கின்றனர். மொழிபெயர்ப்பை ஓர் எழுத்துப்பயிற்சியாகவே கருதி ஈடுபட்டிருக்கின்றனர். புதுமைப்பித்தன் சொந்தமாக எழுதிய கதைகளைவிட மொழிபெயர்த்த கதைகளின் பக்க எண்ணிக்கை அதிகம். தி.ஜா, அசோகமித்திரன், க.நா.சு , சி.மணி எனப்பலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். தற்போது சுகுமாரன், ஆனந்த் , வண்ணநிலவன் ஆகியோரும் சில மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார்கள்.
ஆனால் ஒரு பரிபூரண மொழிபெயர்ப்பாளனாக இருப்பதற்குத் தேவைப்படும் குணாம்சங்கள் வேறு. தானே ஒரு படைப்பாளியாக இருக்கும் ஒருவருக்கு வேறுயாரோ எழுதிய படைப்பை – அது எவ்வளவுதான் அவருக்கு அபிமான படைப்பாக இருந்தாலும் – மயிரிழை நுட்பமாக பெயர்த்தெடுக்கும் சிரத்தை வருவதில்லை. ஒவ்வொரு சொல்லும் சுமந்திருக்கும் , அதற்கடியில் பொதிந்திருக்கும் உணர்இழைகளை தனது மொழியின் சொற்களில் , வாக்கிய அமைப்பில் சிந்தாமல் சிதறாமல் இறக்கிவைப்பதற்கான பொறுமை ஒரு படைப்பாளிக்கு சாதாரணமாக இருப்பதில்லை. எந்தவொரு மொழியும் அது விளைந்த மண்ணையும் புழங்கும் கலாச்சாரத்தையும் சார்ந்தே உருக்கொண்டிருக்கிறது. வேறோர் அந்நிய மொழியில் மூலப்படைப்பை அதன் அடிவேரோடு பெயர்த்து உருவாக்கம் செய்திட சாத்தியமேயில்லை. மொழிபெயர்க்கப்படும் மொழி சார்ந்த கலாச்சார பின்னணியும், மொழி இலக்கணம் சார்ந்த நுட்பங்களும், மூலப்படைப்பை இடவலம் சரிசெய்யப்பட்ட கண்ணாடி பிம்பமாகக் காட்ட அனுமதிப்பதில்லை. படைப்பாளியாக இல்லாத மொழிபெயர்ப்பாளன் இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்பவனாக இருப்பான். ஆனால் ஒரு படைப்பாளிக்கு தனது வாக்கிய அமைப்பும், சொற்தேர்வும் தனது சொந்தத் தடத்திலிருந்து சற்று தடம்மாறி இறங்க நேர்வதை சகித்துக்கொள்ள முடிவதில்லை. இதைப்போன்ற தருணங்களில் அவன் மூலப்படைப்பாளியை ஒதுங்கியிருக்க சொல்லிவிட்டு தானே ‘எழுதி‘ விடுகிறான். இந்த விபத்து அநேகமாக எல்லா படைப்பாளிகளின் மொழிபெயர்ப்புகளிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
ஒரு நேர்மையான அல்லது முழுநேர மொழிபெயர்ப்பாளன் இதைப்போன்ற இடங்களில் என்ன செய்வான்? அவனுக்கு ‘படைப்பாளி‘ என்ற சுமை முதுகில் கனக்காமல் இருப்பது பெரும் சுதந்திரம். அவன் மூலப்படைப்பாளியின் ஆன்மாவை தனக்குள் 100 % இறக்கிவைத்துக் கொண்டிருப்பான். தனது சுயத்திற்காக எந்த மூலையையும் அவன் ஒதுக்கி வைப்பதில்லை.
***
முதலில் அயல் மொழிகளிலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழுக்கு வரும் மொழிபெயர்ப்புகள் அளிக்கும் சவால்கள், சிக்கல்கள் குறித்துப் பேசலாம்.
அயல்மொழி இலக்கியங்கள் இந்தியர்களான நமக்கு மட்டுமல்லாது உலகெங்குமுள்ள பிற நாட்டவர்களுக்கு ஆங்கிலம் மூலமாக மட்டுமே பெரும்பாலும் அடைந்திருக்கின்றன. செவ்விலக்கியங்களில் ஹோமரை ஃபிட்ஸ்ஜெரால்டும், தந்தேவை சின்க்ளேரும், ப்ரூஸ்ட்டை மான்க்ரீஃபும்தான் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டு ருஷ்ய இலக்கியங்கள் அநேகமாக எல்லாமே கான்ஸ்டன்ஸ் கார்னட் மூலமாகக் கிடைத்தவையே. நவீன இலக்கியங்களில் கிரிகரி ரபாஸா மூலமாக மார்க்கேஸும், மௌரீன் ஃப்ரீலி மூலமாக பாமுக்கும், ஜே ரூபின், ஃபிலிப் காப்ரியேல் மூலமாக முரகாமியும் படிக்கக் கிடைத்திருக்கின்றனர்.
எனவே இவர்களைத் தமிழில் அறிமுகப்படுத்தும்போது, பெரும்பாலும் ஆங்கில இடைவழி மூலமாகவே மொழிபெயர்த்து வருகிறோம். பிரெஞ்ச், ருஷ்ய, ஸ்பானிய, சீன மூலத்திலிருந்து தற்போது சில மொழியாக்கங்கள் வந்தாலும் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்படுபவையே அதிகம். இதனைக் குறையாகச் சொல்ல முடியாது. இஸ்மாயில் கதாரேவை மொழிபெயர்க்க அல்பேனிய மொழியும், தாக் ஸூல்ஸ்தாதை மொழிபெயர்க்க நார்வீஜிய மொழியும் அறிந்திருப்பவர் தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்பட்ட இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது மூலப்படைப்பின் மொழிநுட்பத்தில் ஆழமாகக் காலூன்றிக்கொள்ளும் வாய்ப்பு மொழிபெயர்ப்பாளனுக்குக் கிடைப்பதைப்போல இடைவழி ஆங்கிலப் பெயர்ப்பில் கிடைப்பதில்லை. ஆங்கில மொழிபெயர்ப்புகளின் நம்பகத்தன்மை குறித்த ஐயங்கள் நபக்கோவ் தொடங்கி விமர்சகர்கள் பலராலும் தொடர்ந்து எழுப்பபட்டுக் கொண்டேயிருப்பது ஆங்கிலம் வழி மொழிபெயர்ப்பாளர்களை நிம்மதியிழக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
இலக்கிய மொழிபெயர்ப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் சில விசேஷமான சவால்கள் இருக்கின்றன.
ஆங்கில மொழி நவீனமான முறை வேறு; தமிழ் மொழி நவீனமாகிவரும் முறை வேறு. இரண்டுக்கும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்த முடியாது. ஆங்கிலம் வேறொரு பண்பாட்டுச் சூழலிலிருந்து வருகிறது. நமக்கு அதில் இரண்டாம் நிலையில்தான் பயிற்சி ஏற்படுகிறது. தமிழைப் பொறுத்தவரை நவீனம் என்பது வேறு. தமிழ்மொழி ஜனநாயகப்படுத்தப்பட்ட முறையில் அதன் பல முக்கியமான பலங்கள் இழக்கப்பட்டுள்ளன. தமிழுக்கு இருக்கக்கூடிய சொல்வளம், நுட்பமான பொருட்சாயல்கள் இந்த நவீனத்துவத்தில் போய்விட்டன. தமிழுக்கான நவீனப் புலமை மொழி இன்னும் சரியாக உருவாகவில்லை என்பதைத் திறந்த மனதோடு நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இப்படியொரு குற்றச்சாட்டை வைக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு கோபிப்பவர்கள் நவீன காலத்துக்கேற்ற புதிய பொருட்களை, பல்வேறு வகையில் விரிந்திருக்கும் தளங்களில் காத்திரமாகப் பேசுவதற்கேற்ப ஒரு புலமை நடையை நாம் ஏன் இதுவரை உருவாக்கிவைத்திருக்கவில்லை என்பதை யோசிக்கவேண்டும்.
ஆங்கிலத்தில் செய்திதாள்களில் கட்டுரைகளை எழுத ஒரு மொழிநடை, ஆய்வேட்டை எழுதும்போது ஒரு மொழிநடை, ஜனரஞ்சகப் புனைவுகளை எழுதும்போது ஒரு மொழிநடை, சீரிய இலக்கியத்தை எழுதும்போது ஒரு மொழிநடை என்று பல்வேறு மொழிவடிவங்களில் எழுத முடிகிறது.
ஆனால் தமிழைப் பொறுத்தவரை எதை எழுதினாலும் ஒரே மாதிரியான நடையில் எழுதினால்தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நிலையை தற்போதைய ஜனநாயகப்படுத்தப்பட்ட நவீனச் சூழல் ஏற்படுத்தியுள்ளது. நம்முடைய வளமான புலமை மரபிலிருந்தும், உரை மரபிலிருந்தும் நல்ல சொற்களை எடுத்துக்கொள்ளவும், உருவாக்கிடவுமான வேண்டிய தேவை கல்வியாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், முக்கியமாக மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இருக்கிறது.
ஒரு நவீனத் தமிழ் மொழிபெயர்ப்பாளனுக்கு இருந்தாகவேண்டிய அடிப்படைத் தகுதிகள் எவை? ஆங்கிலத்திலிருந்து, அல்லது பிற இந்திய, உலக மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பவன் முதலில் ஒரு நுட்பமான வாசகனாக இருக்கவேண்டும் என்பதைச் சொல்லலாம். மிகவும் எளிமையான விதியைப் போல இது தெரிந்தாலும் அவ்வளவு எளிதான, மேலோட்டமான கருத்தும் அல்ல. தேர்ந்த வாசகனாக இருப்பவனுக்குத்தான் மூல ஆசிரியனின் தொனியும், படைப்பின் உட்பிரதிகளும் கைவசமாகும். மொழிபெயர்க்கப்படும் படைப்பாளியின் (கூடியமட்டும்) எல்லா ஆக்கங்களையும் அவன் முழுமையாக வாசித்திருக்கவேண்டும். பல நாவலாசிரியர்களின் படைப்புகள் அவர்களுடைய முந்தைய படைப்புகள் சிலவற்றோடு தொடர்புகொண்டிருக்கும். அதற்கான இழைகள் அப்பிரதியில் பூடகமாகப் பொதித்துவைக்கப்பட்டிருக்கும் (உதாரனத்துக்கு, ஜோஸே ஸரமாகோவின் நாவல்கள் பலவற்றிலும் அவரது மற்ற நாவல்களின் தொடர்புக் கண்ணிகள் தென்படும். இவற்றைப் பற்றி எஸ்.வி.ராஜதுரை அவருடைய சமீபத்தைய நூலான ‘ஸரமாகோ: நாவல்களின் பயணம்’ இல், விரிவாக எடுத்துரைக்கிறார்). மூல ஆசிரியனை முற்றிலுமாக அறிந்து வைத்திருந்தால், இடைவழி மொழிபெயர்ப்பில் அவனுடைய அடையாளம் சற்றே விலகியிருந்தாலும் கூர்மையான வாசகனாக இருக்கும் மொழிபெயர்ப்பாளனுக்கு அது உணரப்பட்டுவிடும்.
மூல மொழியிலும், இலக்கு மொழியிலும் அவனுக்கு நல்ல தேர்ச்சி இருக்கவேண்டும் என்பதும் எளிமையாகவும், மேலோட்டமாகவும் தோற்றமளிக்கும் மற்றொரு தகுதி. தமிழ் மொழிபெயர்ப்பாளனின் சொற்கிடங்கு மிகப் பிரமாண்டமானதாக இருந்தாகவேண்டும். வேறு எந்த மொழியில் இயங்குபவனுக்கும் தமிழைப்போல செழுமையும் வளமையும் கொண்ட சொற்கள் கிடைக்காது எனத் துணிவோடு சொல்லலாம். ஆனால் நவீனத் தமிழ் உரைநடையாளர்கள் இம்மகத்தான கருவூலத்தின் முகவாசலைத் தாண்டி உள்ளே காலெடுத்து வைக்காதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
இனி அவனுக்கு இருக்கவேண்டிய கூடுதல் தகுதிகளை அவன் சந்திக்கும் சிக்கல்களைப் பற்றிப் பேசும்போது உட்கிடையாக வைத்துப் பார்க்கலாம்.
முதலில் சில கேள்விகள்:
இன்றைய தமிழ் இலக்கியச்சூழலில் ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு அவனது இயங்குதளத்தில் தனது ஐயங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வசதிகள் இருக்கின்றனவா?
தமிழில் இன்று வெள்ளமாக வெளிவந்துகொண்டிருக்கும் மொழிபெயர்ப்புகளில் எத்தனை நூல்கள் மேலாய்வாளர் ஒருவராலோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலோ, மூலத்துடன், அல்லது ஆங்கிலப் பிரதியுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு வெளியாகின்றன?
வாசகன் ஒருபோதும் மூலத்துடன் தனது பிரதியை ஒப்பிட்டுப் பார்க்கப்போவதில்லை என்ற யதார்த்தம் மொழிபெயர்ப்பாளனுக்கு நிம்மதியை அளிக்கிறதா, பொறுப்புணர்வை அதிகப்படுத்துகிறதா?
நாம் மொழிபெயர்க்கும் பிரதி இன்றைய மற்றும் வருங்கால தமிழ் உலகுக்கு பயனுள்ளதாகவும், சூழலை மேம்படுத்துவதற்காக ஒரு அடியேனும் முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்குமா?
மொழிபெயர்க்கப்படும் நூல் புதிய பார்வையை, புதிய திசைகளைக் காட்டுமா? புதிய படைப்பு உத்திகளை அறிமுகப்படுத்துமா?
தற்கால புதிய வாழ்வியல் சிக்கல்களை, மாறிவரும் சூழலை, கலாபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் எதிர்கொள்ளும் படைப்புகளாக அந்த அந்நியப் படைப்புகள் அமையுமா?
இந்தக் கேள்விகள் இவற்றோடு முடிந்துவிடுபவையும் அல்ல. அறிவுத் தளத்தில் இதுபோன்ற கேவிகள் நாள்தோறும் புதிதுபுதிதாக எழுந்துகொண்டேதான் இருக்கும். அவற்றை உள்வாங்கிகொண்டு செயலாற்ற நம் அவயங்களையும் மனதையும் முழுமையாகத் திறந்து வைத்திருக்கவேண்டும்.
***
”உலகத்தில் எந்த மொழியில், எந்தப் பகுதியில் மிகத் தரமானது, உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் வருவதற்கான வழிவகைகள் வகுத்துக்கொள்ளவேண்டும்,” என்றார் கநாசு.
அந்த அயலகப்படைப்பை அகத்திலும் புறத்திலும் எவ்வித மாறுதலுக்கும் உட்படுத்தாமல் மொழியை மட்டும் மாற்றம் செய்வதாக இருக்கவேண்டும் என்பது ஒரு பொது நம்பிக்கை. ஆனால் அது சாத்தியம்தானா என்று பார்க்கலாம்.
மொழிபெயர்ப்பு என்பது ஒருபோதும் நூறு சதவீதம் பரிபூரணத்துவத்தை அடையமுடியாது என்று நேர்மையான மொழிபெயர்ப்பாளர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். அந்த இயலாமைக்குக் காரணம் அம்மூலப்படைப்பு விளைந்த மண்ணையும், அந்நிலத்தின் கலாச்சாரத்தையும், அதன் மொழியழகையும் வேறொரு மொழிக்கு நூறு சதவீதம் மடைமாற்றம் செய்யமுடியாது என்பதே. எனவே மொழிபெயர்ப்பு என்பதை மூலப்படைப்பின் அச்சு அசலான மறுபிரதி என்று பார்ப்பதைவிட, வேற்று மொழி எனும் ஆடியில் தெரியும் பிரதிபலிப்பு மட்டுமே என்று மதிப்பிடலாம்.
மொழிபெயர்ப்புப் பிரதியின் சொற்கள்தான் மூலத்தின் நூறு சதவீத மறுஉருவாக இருக்க முடியாதே தவிர, மூலப்பிரதியின் உயிரை மொழிபெயர்ப்பில் நூறு சதவீதம் கொண்டுவந்துவிட முடியும். அதுவும் தமிழ் எனும் செறிவும் வளமும் மிக்க மொழியில் எந்தவொரு நுண்ணிய உணர்விழைகளையும் நெய்துவிட முடியும். தமிழின் சொற்கிடங்கை முறையாகப் பயன்படுத்தினால் பிரதிக்கும் வாசிப்புக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்காமல் செய்யமுடியும். இந்த மொழிக்கருவியை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவனால்தான் மொழிபெயர்ப்பு வெற்றி பெறுகிறது.
படைப்பாளி தனது பிரதியில் வெளிப்படையாகச் சொல்பவற்றை மீறி உட்பிரதியில் பற்பல நுண் அம்சங்களைப் பொதித்து வைக்கிறான். சொற்களுக்கிடையில் உள்ள மௌனங்கள் அர்த்தம் செறிந்தவை. இவற்றை மொழிபெயர்ப்பாளன் தனது பிரதியில் கொண்டுவருவதும், மூலப்படைப்பின் சொல்லையும் உள்ளுருவையும் – words and spirit – கொண்டுவருவதுமே அவனுக்கெதிரே நிற்கும் சவால்.
சில அடிப்படையான சவால்களைப் பார்ப்போம்:
1) மரபுத் தொடர்களை ( idioms ) மொழிபெயர்த்தல்:
ஒரு படைப்பில் இடம்பெறுகின்ற மரபுத் தொடர்களை இனம்கண்டுகொள்வதே பெரிய சவால். மொழிபெயர்ப்பாளனுக்கு ஆங்கிலத்தில் போதிய பயிற்சி இருக்கவேண்டும் என்பதோடு, அந்த அயற்படைப்பின் நிலம், கலாச்சாரம் சார்ந்த விஷயங்களும் தெரிந்திருக்கவேண்டும். Turn your back, Going for the jugular, Getting his just deserts போன்ற நூற்றுக்கணக்கான ஆங்கில மரபுத் தொடர்களுக்கு நேரடியான பொருள் அல்லவென்பதை விரிவாக இங்கே விளக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். இத்தகைய மரபுத்தொடர்களின் சொற்களை நேரடியாக மொழிபெயர்த்துவிடும் அவலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது நைஜீரியாவின் சினுவா ஆச்செபேவின் எழுத்துக்களில் உள்ள மரபுச்சொற்களை. ஆச்செபே ஆங்கிலத்தில் எழுதியவர். “ஆப்பிரிக்க ஆங்கிலம் எமது தனித்துவ அனுபவங்களின் பாரத்தை ஏற்றியிருப்பதாக இருக்கவேண்டும்” என்கிறார் அவர். தமது தாய்மொழியான இக்போவில் பயன்படுத்தும் மரபுத் தொடர்களை அப்படியே ஆங்கிலத்தில் மாற்றித் தருகிறார். ‘Be my eyes’ ‘Bring home my share’ ‘My spirit tells me’ என்ற சொற்றொடர்கள் ஆங்கிலோ சாக்ஸன் கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபட்டு தமது சொந்தக் கால்களில் நிற்பவை. இதுபோன்ற வழக்கத்துக்கு மாறான சொற்றொடர்களை மரபுத் தொடர்கள் எனக் கண்டறிந்து, அவற்றை சிதைக்காமல் கவனமாக மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. I have a hunch என்று ஆங்கிலத்தில் சொல்லவேண்டிய இடத்தில் இக்போவின் வழியில் My spirit tells me என்று ஆச்செபே எழுதுவது ஆங்கிலேயரால் ஒடுக்கப்பட்ட அவருடைய இனம் சார்ந்த அரசியற் செயற்பாடு. இதே பாணியை பின்பற்றி வழக்கமான ஆங்கிலப் பிரதிகளில் வருகின்ற மரபுத் தொடர்களை மொழியாக்கம் செய்தால் அபத்தமாகிவிடும்.
2) கூட்டு வினைச்சொற்கள்/ வினைத் தொடர்களை (phrasal verbs) மொழிபெயர்த்தல்:
ஒரு வினைச்சொல்லோடு (verb) ஒரு வினையுரிச்சொல் (adverb) அல்லது முன்னிடைச் சொல் (preposition) அல்லது இவையிரண்டும் சேர்ந்து வந்தாலும் அது ஒரே செயலைக் குறிப்பதாக இருந்தால் அது வினைத்தொடர் என்றும், வினையுரிச் சொல்லும் முன்னிடைச் சொல்லும் தனிதனி பொருளைக் குறித்தால் அது வினைத்தொடர் ஆகாது என்றும் அறிவோம். வினைத்தொடரில் ஒரு வினையுரிச்சொல்லும் முன்னிடைச் சொல்லும் சேர்ந்து வரும்போது அந்த வினைச்சொல்லுக்கு வேறு பொருள் கிடைத்துவிடுகிறது. இது மொழிபெயர்ப்பில் மற்றொரு சவால். உதாரணம்: Muddle என்றால் குழப்பம்; Along என்றால் நெடுகிலும் / துணையோடு. Muddle along என்றால் தெளிவான குறிக்கோள் ஏதுமின்றி ஒரு செயலைச் செய்வது / வாழ்வது. இதுபோன்ற சொற்றொடர்கள் வரும்போது மொழிபெயர்ப்பாளன் கவனமாக இருத்தல் வேண்டும்.
3) நகைச்சுவை / பகடியை மொழிபெயர்ப்பது:
ஒரு மொழியில் நகைச்சுவையாகத் தெரிவது இன்னொரு மொழியில் தெரியாது. நகைச்சுவைக்கும் மொழிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. மொழியும் வரலாறும் நாம் சிந்திக்கும் முறையோடும், சூழலோடும், மனிதர்களோடும் ஆதாரத் தொடர்பு கொண்டிருப்பவை.
வார்த்தை விளையாட்டுகளை மொழிபெயர்ப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். அருந்ததி ராயின் God of Small Things நாவலை நான் தமிழில் மொழிபெயர்த்தபோது அவருடைய சிக்கலான, திருகுப்பாதை வாக்கியங்கள் பெரும் சவாலாக இருந்தன. ஆனால் அந்த வினோதமான வாக்கிய அமைப்புகளில் இரண்டு கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் சின்னாபின்னப்படுத்தப்பட்ட மனவுலகம் பொதிந்திருக்கிறது. எட்டு வயதில் குரூரமாகக் கலைக்கப்பட்ட அவர்களின் குழந்தைமை ஒரு பிசாசைப்போல அவர்கள் வளர்ந்த பின்னும் துரத்திக்கொண்டே இருக்கிறது.அந்த அசாதாரணமான நிகழ்வுகள் கதை சொல்லப்படும் விதத்திலும் அதேவிதமான சிக்கல்களோடு வெளிப்படுகிறது. நேர்க்கோட்டில் பயணிக்கும் நாவல் அல்ல இது. ஒரே பத்தியில் பலமுறை காலப்பிறழ்வுகள் நிகழ்கின்றன. மிகக்கண்டிப்பான பெரியவர்களின் அதட்டல் தொனிகள் அக்குழந்தைகளை விரட்டிக்கொண்டே இருந்தாலும் அக்குழந்தைகள் பணிந்துபோவதில் குறும்பும் கலந்திருக்கிறது. இதை அருந்ததி ராய் நீளமான வாக்கியங்களில் விவரிக்காமல் ஒரே சொல்லை சற்று சிதைத்து அந்த உணர்ச்சியை வெளிப்படுத்திவிடுகிறார்:
Margaret Kochchamma told her to stoppit. So she stoppitted.
இந்தப் பிழையான சொல் மூலத்தின் தன்மையோடு மொழிபெயர்ப்பில் வருவதற்கு, மொழிபெயர்ப்பாளனும் இணையான படைப்பாளியாகவேண்டியிருக்கிறது.
மார்கரெட் கொச்சம்மா அவளிடம் ஸ்டாப்ப்பிட் என்றாள். எனவே அவள் ஸ்டாப்பிட்டினாள்.
Red sign said Exit. Estha Exitted.
சிவப்பு விளக்கு எக்ஸிட் என்றது. எஸ்தா எக்ஸிட்டினான்.
Sound of Mmu….sic
சவுண்ட் ஆஃப் ம்ம்யூ…சிக்
Barnowl
பார்னாந்தை.
மொழிபெயர்ப்பாளனாக நான் எடுத்துக்கொண்டிருக்கும் இத்தகைய சுதந்திரம் சிலருக்கு ஆட்சேபத்துக்குரியதாக இருக்கலாம். மொழிபெயர்ப்பாளனுக்கான சுதந்திரவெளி மிக மிகக் குறுகலானது என்பதை அறிவேன். படைப்பாளி சொல்லாத, சொல்ல உத்தேசிக்காத எதையும் மொழிபெயர்ப்பாளன் தனது பிரதியில் சேர்க்கக்கூடாது. மூல ஆசிரியன் பூடகமாகச் சொல்வதை வெளிப்படையாகவும் மொழிபெயர்ப்பில் கொண்டுவரக்கூடாது. இவையெல்லாம் பாலபாடங்கள். இன்னொரு பாடமும் இருக்கிறது. பிரதியை மேம்படுத்துவதற்காக மொழிபெயர்ப்பாளன் சில சலுகைகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதே அது. பிரதியின் உயிரை முற்றிலுமாக உணர்ந்திருக்கும் மொழிபெயர்ப்பாளனுக்கே இந்தச் சலுகை அனுமதிக்கப்படும் என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.
அருந்ததி ராயின் அடுத்த நாவலான Ministry of Utmost Happiness அதன் தலைப்பிலிருந்தே சவால்களை எழுப்பிக்கொண்டிருந்தது. தலைப்பு குறித்த தன்னிலை விளக்கத்தை நூலில் எனது பின்னுரையிலேயே விளக்கிவிட்டதால் மற்ற சவால்களைப் பற்றி குறிப்பிடுகிறேன்.
இந்நாவல் நெடுகிலும் பல திருநங்கைகள் வருகிறார்கள். அவர்களுடைய உலகம் வெளியுலகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அவர்கள் தமக்காக ஓர் உலகத்தை, பேரவையை உருவாக்கிக்கொண்டு, தங்களுக்கான சட்டதிட்டங்களோடு மகிழ்ச்சியாக, அல்லது பெருமகிழ்ச்சியோடு வாழ்வதாக நினைத்துக்கொண்டு – வாழ்ந்துவருகிறார்கள். அவர்களிடம் நாகரிக சமூகத்தின் தளுக்கு, ஜோடனை இல்லை. வசைச்சொற்கள், மிக மிக ஆபாசமான வார்த்தைகள், அருவறுக்கவைக்கும் சேஷ்டைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அருந்ததி ராய் இவற்றை அதிர்ச்சி மதிப்புக்காக எழுதவில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவர்களைப் பரிதாபத்துக்குரியவர்களாக அவர் முன்னிறுத்தவில்லை. மிகவும் சுயமரியாதை கொண்டவர்களாக காட்டப்பட்டிருக்கும் அவர்களை, மூலப்படைப்பில் சித்தரித்ததைப்போலவே மொழிபெயர்ப்பிலும் கொண்டுவரவேண்டியது என்னுடைய கடமையாகிறது. அவர்கள் உதிர்க்கும் உருது, கஷ்மீரி ஆபாசச்சொற்களை ’அப்படியே’ தமிழிலும் எழுதியிருப்பதற்காக என் மதிப்புக்குரிய நண்பர்கள் பலரும் என்னைக் கண்டித்தார்கள். அவர்களுக்கு நான் சொன்ன ஒரே பதில் : “படைப்பாளி எழுதிய எவற்றையும் துப்புரவாக்கித் தருவதல்ல மொழிபெயர்ப்பாளனின் வேலை” என்பதே.
ஆனால் வசைச்சொற்களை மொழிபெயர்ப்பது/ மொழிபெயர்க்காமல் அசல் வடிவத்தையே தருவது குறித்துச் சில விஷயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது.
எல்லா வசைச்சொற்களும் பாலியல் தொடர்பானவையாக இருப்பதில்லை. இனவெறுப்புச் சொற்களும் நிறைய உண்டு. நான் தற்போது மொழிபெயர்த்துவரும் டக்லஸ் ஸ்டூவர்ட்டின் ’ஷகி பெய்ன்’ ஒரு ஸ்காட்டிஷ் நாவல். இரண்டு வருடங்களுக்கு முன் புக்கர் பரிசு பெற்ற மிகச் சிறப்பான நாவல். இந்நாவல் எண்பதுகளின் தொடக்கத்தில் மார்கரெட் தாட்சர் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்கள் மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரை எவ்வளவு பாதித்தன என்பதைச் சொல்கிறது. நாவலின் பாத்திரங்கள் கிளாஸ்கோ நகரின் பாட்டாளி வர்க்கத்தினர். அவர்களின் வாழும் சூழல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கும்போது விசேஷமான வசைச் சொற்கள் நிறையவே வருகின்றன. பெரும்பான்மை பிராஸ்டண்ட்டுகளாக இருக்கும் அந்நாட்டில் சிறுபான்மை கத்தோலிக்கர்கள் மீது சரித்திர காலம்தொட்டே இருந்துவரும் பகைமை இப்போது அதிகரித்திருக்கிறது. கத்தோலிக்கர்களை இழிவாக விளிக்கும் வசைச் சொற்கள் இத்தனை இருக்கின்றன என்பது நாவலை மொழிபெயர்க்கும்போதுதான் தெரிகிறது. ‘டெய்க்’ ‘பேப்’ போன்ற சொற்களைத் தமிழில் எப்படி மொழிபெயர்க்கமுடியும்? ‘ஃப்ரீமேசன்’ குழுவினரும் வருகிறார்கள். ‘மேசன்ரி’ என்பது பெயர்ச்சொல்லாகியிருப்பதால் அதையும் மொழிபெயர்க்க முடியாது.
இந்த ஸ்காட்லாந்து நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், பாத்திரங்கள் ஆங்கிலத்திலேயே பேசுகிறவர்களாக இருந்தாலும் பல ஸ்காட்டிஷ் கொச்சை சொற்கள் இடையிடையே வந்துகொண்டே இருக்கின்றன. Lassies என்றால் இளம் பெண்கள், Wee என்றால் சிறியது என்பதுபோன்ற நூற்றுக்கணக்கான ஸ்காட்டிஷ் சொற்களை ஒரு ஸ்காட்டிஷ்-ஆங்கில அகராதியை தரவிறக்கம் செய்து மொழிபெயர்த்து வருகிறேன். ஸ்காட்லாந்தில் கால்பந்து கிளப்புகளில்கூட பிராஸ்டன்ண்டுகளுக்கு கிளாஸ்கோ ரேஞ்சர்ஸ் என்றும் கத்தோலிக்கர்களுக்கு கிளாஸ்கோ செல்டிக் என்றும் அபிமான கிளப்புகள் இருக்கின்றன என்பது மொழிபெயர்ப்பின் மூலம் அறிந்துகொண்ட செய்தி.
கலாச்சாரத் தொடர்பு கொண்ட சொற்களை அப்படியே எழுத்துப் பெயர்ப்பு (transliterate) செய்துவிட்டு அடிக்குறிப்பில் விளக்கிவிடுவதே ஒரே வழி.
எனது மொழிபெயர்ப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிக்க புது உலகம்’ (Brave New World) நாவல் dystopian novel எனும் எதிர்கால துர்க்கற்பனை நாவல். இது தமிழுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலைவிட காலத்தால் முந்தியது. இந்நாவலில் ஹக்ஸ்லி நமது இந்திய மனு சாஸ்திர சாதித் தர வேறுபாடுகளை நினைவூட்டும்படியாக எதிர்கால இயந்திரமய உலகத்தில் காட்டுகிறார். செயற்கை முறையில் கருவேற்றப்பட்ட சினைமுட்டைகளிலிருந்து எண்பதுக்கு மேற்பட்ட கருக்கள் முட்டையிலிருந்து குஞ்சு பொரிப்பதைப்போல உண்டாக்கப்படுகின்றன. இவ்வாறு பிறப்பவர்களுக்கு தனிப்பட்ட தாய் தந்தை என எவர் ஒருவரும் கிடையாது. இவ்வாறு உருவாக்கப்படுபவர்களை கரு வளர்ச்சி நிலையிலேயே ஆல்ஃபா, பீட்டா, காமா, எப்ஸிலான் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள். ஹக்ஸ்லிக்கு இந்திய யோக சாதனைகள், ஹலூசினேஷனை உண்டாக்கும் போதை வஸ்துகள் போன்றவற்றில் ஆர்வம் உண்டு. இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு வந்து சில காலங்களைக் கழித்திருக்கிறார். எனவே அவருடைய இந்த நாவலில் சொல்கின்ற தரவரிசையில் அடங்கியுள்ள சூட்சுமச் செய்தி உங்களுக்குப் புரியுமென்று நம்புகிறேன்.
இந்த வினோதக் கற்பனை நாவலில் எதிர்காலச் சமூகத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு சாதனங்களை ஹக்ஸ்லி கற்பனையில் உருவாக்குகிறார். Obstacle golf, Centrifugal bumble-puppy, escalator squash, Riemann surface tennis, Feelies எனப்படும் தொடுவுணர்வு திரைப்படங்கள்… இவையெல்லாவற்றையும் மொழிபெயர்ப்பாளன் அடிக்குறிப்புகளில் விளக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
இதே நாவலில் விஞ்ஞான முன்னேற்றம் அடையாத மத்திய அமரிக்காவின் ‘அநாகரிக’ பகுதியும் வருகிறது. நியூ மெக்ஸிகோவின் கலாச்சாரத் தொடர்புடைய சொற்கள் வெள்ளமாக வந்துகொண்டே இருக்கின்றன. டார்டில்லா, அவோனா விலோன, அஹையூதா, மார்ஸைலீமா, பூகாங், எட்சனாட்லெஹி…இவையெல்லாம் என்னவென்று ‘தீரமிக்க பு உலகம்’ நாவல் வெளிவந்ததும் அடிக்குறிப்புகளில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இந்நாவலின் ஒரு பாத்திரம் ஷேக்ஸ்பியர் நேசன். அவன் பேசும் வசனங்களில் ஷேக்ஸ்பியரின் வாசகங்கள் இடையிடையே வந்துகொண்டே இருக்கின்றன. ஷேக்ஸ்பியரை எப்படி தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டுவருவது? நான் பயன்படுத்திய முறை என்னவென்றால், வசனங்களில் வரும் ஷேக்ஸ்பியரின் வரிகளைத் தமிழில் மொழிபெயர்த்துவிட்டு அதனைத் தனியாக நட்சித்திரக்குறியிட்டு அடிக்குறிப்பில் ஷேக்ஸ்பியரின் அசல் வரிகளை ஆங்கிலத்தில் தந்துவிடுவது.
***
கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கவில்லை என்ற குறை எனக்குண்டு. மொழிபெயர்ப்பியலில் பல ‘தியரிகள்’ உண்டு. அவற்றையெல்லாம் முறையாகக் கற்றுக்கொண்டு மொழிபெயர்க்க வராமல், வெறும் வாசிப்பனுபவம், ரசனை, கொஞ்சம் எழுத்துப் பயிற்சி இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு இத்துறைக்கு வந்துவிட்டேனோ என்று தோன்றும்.
ஆனால் மொழிபெயர்ப்புக் கொள்கைகள் குறித்து எனக்கு தெளிவையும், துணிச்சலையும் அளித்த ஆசிரியர் ஒருவர் உண்டு. அவர் விளாதிமீர் நபக்கோவ். அவரே ஒரு படைப்பாளிதான். ஆனால் ஒரு மொழிபெயர்ப்பு எப்படி இருக்கவேண்டுமென்ற பரிபூரணத் தெளிவு அவருக்கு இருந்தது.
நபக்கோவின் செயற்பாடுகள் எப்போதுமே அதிரடியானவை. எதிராளிகளை விவாதங்களில் கிட்டத்தட்ட தூக்கிப்போட்டு மிதிப்பவர். சில நேரங்களில் நம்முடைய வெங்கட் சாமிநாதனின் நினைவு வரும். நபக்கோவின் நெருங்கிய நண்பரும், எழுத்தாளருமான வால்டர் ஆர்ண்ட், அலெக்ஸாண்டர் புஷ்கின் கவிதை நடையில் எழுதிய ’யூஜின் ஒனேகின்’ என்ற காவியத்தை கவிதையாகவே மொழிபெயர்த்தார். நிறைய விருதுகளைப் பெற்ற மொழிபெயர்ப்பு இது. நபக்கோவ் இம்மொழிபெயர்ப்பை கடுமையாக விமர்சித்து நிராகரித்தார். மூலப்படைப்பின் கவித்துவத்தையும் துல்லியத்தையும், ஒலிநயத்தையும் மொழிபெயர்ப்பில் கொண்டுவருவதற்காக சொற்பொருள் துல்லியத்தையும், இலக்கியத்தன்மையையும் பலிகொடுத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதே ‘யூஜின் ஒனேகி’னை நபக்கோவும் மொழிபெயர்த்தார். தனது மொழிபெயர்ப்பில் புஷ்கினின் எழுத்தில் இருந்த இசைத்தன்மையையும், ஒலியியைபையும் முற்றிலுமாக துறந்துவிட்டு மூலப்படைப்பின் அகப்பிரதியை உரைநடையில் ஆங்கிலத்திற்கு மாற்றியிருந்தார். இந்த மொழிமாற்றத்தின் போது நபக்கோவ் கையாண்ட உத்திகள் பெரும் விமரிசனத்திற்குட்படுத்தப்பட்டன. குறிப்பாக நபக்கோவின் நெருங்கிய நண்பரான எட்மண்ட் வில்சன் மிகக்கடுமையாக தாக்கினர். ஆங்கிலத்தில் பெரும் புலமை வாய்க்கப்பெற்றவர்களே வரிக்கொருமுறை அகராதியை புரட்டவேண்டியிருப்பதைப்போல மிகமிகக் கடினமான சொற்களை மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியிருப்பதாகவும், திருகலான சொற்றொடர்களையும், பொருத்தமற்ற வார்த்தைகளையும் பயன்படுத்தியிருப்பதாகவும் எழுதினார். இந்தக் கண்டனங்கள் அனைத்திற்கும் நபக்கோவ் அளித்த பதில் அவர் இலக்கிய மொழிபெயர்ப்பு என்ற இயலை எவ்வளவு ஆழ்ந்தும், விரிவையும் கற்றுத்தேர்ந்திருக்கிறார் என்பதைக் காட்டியது.
புறத்தோற்றத்தை மட்டும் மொழிபெயர்ப்பது இலக்கிய மொழிபெயர்ப்பாகாது என்பது நபக்கோவின் வாதம். மூலப்படைப்பில் பயன்படுத்தப்பட்ட புராதனச்சாயலை மொழிபெயர்ப்பிலும் கொண்டுவருதலே சரியான உத்தி. ‘ஆங்கிலத்தில் வாசிக்கும்போது உங்கள் செவிகளில் ரஷ்ய மொழியில் அது ஒலிக்கவேண்டும்.‘ என்பதை அடிக்கோடிட்டுச் சொல்லியிருந்தார்.
மொழிபெயர்ப்பு கோட்பாடு குறித்து நபக்கோவ் நிறையவே எழுதியுள்ளார். தான் நம்புகிற மொழிபெயர்ப்பு கோட்பாடுகளைக் குறித்தும், பிற மொழிபெயர்ப்புகளைப் பற்றிய விமரிசனங்களையும் மிக வலுவான அபிப்பிராயங்களோடு ’மொழிபெயர்ப்புக் கலை’ என்ற கட்டுரையில் உரத்த குரலில் தெரிவிக்கிறார். அவர் எவ்வளவு நுட்பமான கலைரசனையாளர் என்பது இக்கட்டுரையில் வெளிப்படும். பல இலக்கிய ஆவாளர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டு வருகிற ’மொழிபெயர்ப்பாளர்கள் செய்கின்ற மூன்று பாவங்கள்’ என்ற பகுதி இக்கட்டுரையில்தான் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு பல மேடைகளில் இதைச் சொல்லியிருந்தாலும், இக்கருத்தரங்கிலும் குறிப்பிடவேண்டியது முக்கியம் என்று கருதுகிறேன்:
முதல் பாவம்: அறியாமையும் தவறான புரிதலும்
இந்தப் பாவச்செயலுக்கு முக்கிய காரணம் அயல் மொழியறிவில் போதாமை. ஒரு சாதாரண சொற்றொடரைக் கூட மூல ஆசிரியர் கனவிலும் நினைத்துப் பார்த்திடாத வாக்கியங்களாக்கிவிடுவது. ஆன்டன் செகாவின் கதை ஒன்றின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பில், ‘வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியர் செய்தித்தாளை விரித்துப் படிக்கத் தொடங்கினார்‘ என்று இடம் பெறுகிறது. செகாவ் குறிப்பிட்டது தினசரி பாடங்களையும் மாணவர் செயற்பாடுகளையும் பதிவு செய்யும் ‘கிளாஸ்ரூம் ஜர்னல்‘. ஜெர்மானிய மொழிபெயர்ப்பாளர் ஜர்னல் என்றால் செய்தித்தாள் என்று புரிந்து கொண்டிருக்கிறார். அதே போல ஒரு சாதுவான ஆங்கில நாவலில் இடம்பெற்ற ‘First Night‘ , ‘public house‘ என்ற சொற்கள் ரஷிய மொழிபெயர்ப்பில் ‘nuptial night‘ (திருமணம் முடிந்த முதலிரவு ) என்றும் ‘Brothel house‘ ( விபச்சார விடுதி ) என்றும் மாறியிருக்கிறது!
பொதுவாக திறமைக்குறைவான மொழிபெயர்ப்பாளர்களை வழுக்கிவிழச் செய்பவை மரபுத்தொடர்கள். அந்நிய கலாச்சாரம், அம்மொழி புழங்கும் நிலம் போன்றவற்றின் ஆதிக்கத்திலிருந்து எழுகின்ற மரபுத்தொடர்களை இன்னொரு மண்ணுக்கு அதே வடிவத்தில் கைமாற்றிக் கொடுப்பது கடினம். அதற்கிணையான இலக்கு மொழியின் மரபுத் தொடரை அப்படி ஏதேனும் இருந்தால் – பயன் படுத்தலாம். ஆனால் அம்மரபுத் தொடரில் இலக்கு மொழியின் கலாச்சாரக் கூறுகளோ , உள்ளூர் வழக்கோ இடம்பெற்றிருக்கக் கூடாது.
இரண்டாவது பாவம் : புரியாத சொற்களை தவிர்த்து விடுதல்
ஒரு படைப்பாளி தனது படைப்பை கிட்டத்தட்ட நனவிலி நிலையிலிருந்துதான் எழுதுகிறான் . பல எழுத்தாளர்களும் சொல்வதைப்போல கதையை அவன் எழுதுவதில்லை. கதை அவனைக் கொண்டு தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது. அத்தகைய படைப்பு நிலையில் அவனால் தர்க்க நியாயங்களுக்கு கட்டுப்பட்டு சொற்களையும் வாக்கியத் தொடர்களையும் தேர்ந்தெடுக்க இயலுவதில்லை. தன்னெழுச்சியாக வந்து விழும் சொற்களின் பிரவாகத்தில்தான் அவனது கலையுணர்வும் படைப்பின் இச்சா சக்தியும் கலந்திருக்கிறது. திருகலான வாக்கிய பிரயோகங்களின் சூட்சமத்தை நுட்பமான வாசகனால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடிகிறது. மொழிபெயர்ப்பாளனுக்கு அந்தச் கூர்மையான வாசக மனம் இல்லாத நிலையில் அந்த வரிகள் மூட்டமாகவே தென்படும். அத்தகைய அவனுக்கு புரியாத குழப்பமான பகுதிகளை மொழிபெயர்ப்பாளன் விட்டுவிடுவது மகத்தான இரண்டாவது பாவம் என்கிறார் அவர்.
புரியாத சொற்களை மொழிபெயர்க்காமல் விட்டுவிடுதல் ஒரு வகை என்றால் , மொழிபெயர்ப்பாளருக்கு உவப்பானதாக இல்லாமலிருக்கும் சொல்லை தணிக்கை செய்வது அல்லது மாற்றி எழுதுவது இன்னொரு வகை என்கிறார் அவர்.
அன்னா கரீனினாவின் ஆரம்பகால ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றில் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் தனது ‘விக்டோரிய கூச்சம்’ மேலிட அன்னாவின் வசனம் ஒன்றை உருமாற்றி விடுகிறார். விரான்ஸ்கி அன்னாவிடம் ‘உன் உடம்புக்கு என்ன?‘ என்று கேட்க, அவள், ‘I am beremenna‘ என்கிறாள். வாசகர்கள் இது என்ன ஒருவகைத் தொற்று நோயோ என்று சந்தேகப்படக்கூடாது. அன்னா உண்மையில் சொன்னது “நான் கர்ப்பமாக இருக்கிறேன்.“ ”I am pregnant” என்று அப்பட்டமாக எழுதிவிட்டால் கதையைப் படிக்கும் பரிசுத்த ஆங்கில ஆன்மாக்கள் அதிர்ச்சியடைந்து விடுவார்கள் என்று மொழிபெயர்ப்பாளர் கருதி கர்ப்பத்துக்கான ரஷியச் சொல்லையே பயன்படுத்தி விட்டார் போல என்று எள்ளலாகக் குறிப்பிடுகிறார்.
மூன்றாவது பாவம் : பிரதியை எளிமைப் படுத்திவிடுவது / தட்டையாக்கிவிடுவது.
மூன்று பாவங்களில் மிகப்பெரிய பாவமாக நபக்கோவ் சொல்வது ஒரு மகத்தான படைப்பை இலக்குமொழி வாசகர்களின் கலாச்சார, பண்பாட்டுக்கேற்றார்போல வடிவத்தை மாற்றி விடுவதும், எளிமைப் படுத்திவிடுவதும், தட்டையாக்கி விடுவதும். ஆதிகாலத்தில் பைபிளை மொழிபெயர்த்தவர்களைக் கழுவில் ஏற்றியதைப் போல இத்தகைய மொழிபெயர்ப்பாளர்களையும் கழுவில் ஏற்றிவிடலாம் என்கிறார் கோபத்தோடு.
ஷேக்ஸ்பியரை ரஷிய மொழியில் மொழிபெயர்க்கும்போது ரஷியாவில் காணக்கிடைக்காத ஆங்கிலேயே மலர்களை ரஷியப் பூக்களாக மாற்றிவிட்டதையும், கோகல், எட்கர் ஆலன் போ , சார்லஸ் புத்லெயே ஆகியோரின் கவிதைகளையும் கதைகளையும் பிறமொழிகளில் மொழிபெயர்க்கும்போது, பிரதி எளிமையாக்கப்பட்டு இலக்கு மொழித் தன்மையை மேலேற்றி உருமாற்றி கொண்டுசெல்லப்பட்டதையும் எடுத்துக்காட்டும்போது வெளிப்படுகிற நபக்கோவின் சீற்றம் ரசிக்கத்தக்கது. நபக்கோவ் பல விமரிசகர்கள் வர்ணிப்பதைப்போல தடாலடிப் பேர்வழி அல்ல என்பதை அவர் பிரயோகிக்கும் சொற்களைப் பொருட்படுத்தாமல், அவர் முன்வைக்கும் கருத்துக்களை மட்டும் கவனித்துப் பார்த்தால் புரியும்.
***
மொழிபெயர்ப்பு குறித்து விஸ்கான்ஸின் – மேடிஸன் பல்கலைக் கழகத்தில் உருது, பாரசீக, இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் டாக்டர் முகமது உமர் மேமனின் கூற்றோடு என் உரையை நிறைவு செய்கிறேன்:
“படைப்பாளி என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்துகொள்வதற்காக மொழிபெயர்ப்பாளனுக்கு ஒரு மூன்றாவது கண் வேண்டும். மொழிபெயர்ப்புச் செயற்பாடு என்பது அவனுக்கு ஒரு சுயகண்டடைதல். மூலப்படைப்பாளியின் ஆன்மாவுக்குள் அவன் கூடுபாய்ந்து தன் மொழியில் அவனைப் பேசவைக்கவேண்டும். மூல ஆசிரியனின் குரல் மிகத் தெளிவாக அவனது உட்செவிகளை எட்டும்வரை ஒரேயொரு எழுத்தைக்கூட அவன் எழுதக்கூடாது.”
தலைமை உரை என்ற தகுதியில் நிறையவே பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு குறித்து எவ்வளவு பேசினாலும் இன்னும் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் ஏராளமாக இருந்துகொண்டேதான் இருக்கும். அவ்வளவு விரிந்திருக்கும் இயலான மொழிபெயர்ப்பு பற்றிய உன்னதம் முன்னெடுத்துச் செல்லும் இக்கருத்தரங்கு இனிவரும் காலங்களில் மேலும் காத்திரமான உரையாடல்களுக்கு வழிவகை செய்யும் என்று நம்புவோம்.
அனைத்து மொழியாக்கக் கலைஞர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்.
(அக்டோபர் 30, ஞாயிறு அன்று உன்னதம் நடத்திய “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை. திரு சா.தேவதாஸ் விழாவினைத் துவக்கி வைத்து முதல் அமர்வுக்கான தலைமை உரை ஆற்றினார். இரண்டாம் அமர்வுக்கான தலைமை உரை திரு ஜி குப்புசாமியின் இந்தக் கட்டுரை. விழாவுக்கு வரமுடியாத தவிர்க்க முடியாத சூழ்நிலையில், கட்டுரையை அனுப்பி வைத்திருந்தார். கட்டுரையை திரு பூ கோ சரவணன் நிகழ்வில் வாசித்தார்.)