கடந்த 30 ஞாயிறு அன்று அந்தியூரில் உன்னதம் நடத்திய “மொழிபெயர்ப்பு உரையாடல்கள் விழா” மிகப்பெரிய கொண்டத்துடனும் வெற்றிக் களிப்புடனும் நடந்து முடிந்தது.
தமிழின் முதன்மையான முக்கியமான மொழிபெயர்ப்பாளர்கள் கலந்து கொண்டு மிகவும் விரிவாக மொழிபெயர்ப்பின் சவால்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
திரு ஜி குப்புசாமி, சமயவேல், டி மார்க்ஸ், ஷஹிதா, அசதா, கணேஷ்ராம் போன்றோர் தவிர பெயர் கொடுத்திருந்த அனைவரும் வந்து நிகழ்வை சிறப்பித்தனர். ஜி குப்புசாமி, தன்னால் இந்த நிகழ்வுக்கு வரமுடியாது என்றும், முன்பே ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்ள ஒத்துக் கொண்டிருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தவர், ஆனால், ஒரு விரிவான கட்டுரை எழுதி அனுப்புவதாகச் சொன்னார்.
(உறுதி கொடுத்தபடி, கட்டுரை திரு பூ கோ சரவணன் மூலம் அனுப்பியிருந்தார். மிக முக்கியமான கட்டுரை. சரவணன், நிகழ்வில் வாசித்தார்.)
திரு பா.வெங்கடேசன் தான் இப்போது மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருக்கும் அல்பேனிய எழுத்தாளர் இஸ்மைல் கடாரின் “முறிந்த ஏப்ரல்” நாவலிலிருந்து ஒரு பகுதியை அனுப்பியிருந்தார்.
திரு வெளி ரெங்கராஜன் மொழிபெயர்ப்பு குறித்த ஒரு சிறு கட்டுரை அனுப்பிவைத்திருந்தார்.
அதேபோல, திருமதி ஷஹிதா மிகவும் வருத்தத்துடன் தன்னால் கலந்து கொள்ள முடியாத தனது இக்கட்டான சூழ்நிலையை விவரித்திருந்தார்.
இது போன்ற சிறு சிறு பாதிப்புகளையும் தாண்டி மிக மிக உற்சாகமாகத் தொடங்கிய நிகழ்வு, பெரும் கொண்டாட்டமாக மாறியது.
(இது குறித்து ஒவ்வொருவரும் பேசியது, மற்றும் நிகழ்வுப் படங்களை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிடுகிறேன்.)
திரு ஆழி செந்தில்நாதன், எதிர்வருகின்ற சென்னை புத்தகக்காட்சி இந்த வருடம் சர்வதேசப் புத்தகக் காட்சியாக கட்டமையப் போகிறது என்ற விளக்கத்துடன் விழாவை வாழ்த்தி அனுப்பியிருந்த வாட்சப் ஒலிக்கோவை நிகழ்வில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
புகைப்படங்கள் எடுத்த சிபிக்கு இந்த நேரத்தில் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது உன்னதம்!
போக்குவரத்து மற்றும் பணிச்சூழல் போன்ற பெரும் சிரமங்களுக்கிடையில், விழாவில், அனைத்து நண்பர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உணர்ச்சி பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது உன்னதம்
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக 68 நண்பர்கள் பெயர் கொடுத்திருந்தார்கள். நான் 60 பேரை எதிர்பார்த்தேன். ஏனெனில், அனைவருமே, சென்னை, பாண்டி, மதுரை, பெங்களூர், தி வேலி, தஞ்சாவூர் போன்ற வெளி நகரங்களை சார்ந்தோர். நடப்பதோ ஈரோட்டிலிருந்து மேலும் வெகுதொலைவு கொண்ட அந்தியூர் என்னும் மிக உட்பகுதி. ஆகவே, மதிய உணவு 60 பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்திருந்தோம்.
ஆனால், உணவு ஏற்பாட்டாளர், 76 பேர் என்று கணக்கு தெரிவித்தார். மனதுக்குள் பெரும் மகிழ்ச்சி பீறிட்டடித்தது.
நாங்கள் நான்கைந்து பேர் தவிர, அனைவரும் வேறு Planet லிருந்து வந்திருக்கிறார்கள்!
பூ கோ சரவணன், கார்த்திகைப்பாண்டியன் மற்றும் அகிலன், மலர்விழி.. போன்றோர் பெரும் உற்சாகத்துடன், “விழா மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது..” என்று கைகளைப் பிடித்துக் கொண்டார்கள். எனக்குள் ரத்த ஓட்டம் எகிறியது. அந்தக் குருதி ஓட்டத்தில் உடையாத குமிழிகளாக மிதந்து கொண்டிருக்கும் பூ.சோமசுந்தரமும், த நா குமாரசாமியும், காஸ்ரீ ஸ்ரீ யும் ஏனைய பிற ஆளுமைகளும் ஒரு கணம் எனக்குள் அலர்ந்தார்கள்!
தனது தள்ளாத வயதிலும், மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தூக்கிக் கொண்டு, மொழிபெயர்ப்புத் துறையில் பெரும் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று, தமிழ் நிலமெங்கும் அலைந்து திரிந்த மாபெரும் போராளியான க. நா.சு அவர்களுக்கு இந்த மகத்தான வெற்றியை சமர்ப்பணம் செய்கிறது உன்னதம்!
****