• Fri. Sep 15th, 2023

தீபாவளியின் அரசியல்

ByGouthama Siddarthan

Oct 24, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

1
தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன.

நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று மறு சாராரும் தங்கள் தங்கள் அரசியலைச் செவ்வனே முன்வைத்துக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது.

நூற்றாண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக இயங்கும் இந்தத் தொன்மத்தை, ஒட்டியும் வெட்டியும் ஆய்வு செய்யும் போக்குதான் இது. ஒரு சீரிய ஆய்வாளனை ஆய்வின் நுட்பமான தளங்களை நோக்கி நகரவிடாமல், தாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ள ஆய்வுப் போக்கிலேயே, ஒட்டி அல்லது வெட்டி யோசிக்க வைக்கும் இந்த ஆதிக்கத் தன்மைகளின் ஆய்வு அரசியல் செயல்பாடுகளைத்தான் நான் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறேன்.

பெரும்பாலும் அரசு சார்ந்த ஆவணங்கள், மேலைநாட்டாரின் குறிப்புகள், சங்ககால இலக்கியப் பிரதிகள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள்… போன்ற பொதுப்புத்தி சார்ந்த பார்வைகளுக்கு வந்த அம்சங்களையே கவனத்தில் எடுத்துக்கொள்ளும் போக்குதான் இன்றளவிலும் வெகுஜனஆய்வு தளத்தில் கைக்கொள்ளப்படுகிறது.

இது ஒருவிதமான ஆவண அரசியல். மக்களின் வாழ்நிலைகளைக் கணக்கில் கொள்ளாது, மேலோட்டமான விஷயங்களை மட்டுமே முன்னிறுத்தி தங்களது அரசியலுக்கேற்ப இந்தியச் சமூகத்தைக் கட்டமைக்கும் மேட்டிமைச் சாதிகளின் நுண்ணரசியல்.

ஆகவே, இந்த மக்களின் வாழ்வியல் கூறுகளை நுட்பமாகத் தேடுவதும் நுண்ணுணர்வுடன் ஆய்வு செய்வதும் வரலாற்றுத் திரிப்புகள் மிகுந்துவரும் இன்றைய சூழலில் மிக மிக முக்கியமான ஒன்று. அப்படியான தேடுகைகளுக்கும், ஆய்வுகளுக்கும் மேலே குறிப்பிட்ட ஆவண வகையறாக்கள் பெருமளவில் பயன்தராது. ஆகவே இதுவரை கவனம் கொள்ளாத, மறைக்கப்பட்ட நாட்டார் வழக்கில் புழங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு விதமான ஆய்வுக்கூறுகளைத் தேடிப்போக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.

நாட்டார் வழக்குகளில் புழங்கும் சொலவடைகள், நாட்டார் தெய்வங்களின் பாரம்பரியக் கதைகள், ஊஞ்சல் பாடல்கள், சுப காரியங்களின்போது பாடப்படும் மங்களப் பாடல்கள், வேளாண் பணியின் போது பாடப்படும் ஏலேலோ பாடல்கள், கிராமிய விளையாட்டுகளில் பாடப்படும் குலவைப் பாடல்கள், கும்மிப் பாடல்கள், விருத்தப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.. போன்ற பண்பாட்டு வழக்காறுகளைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. அவைகளின் அடியாழத்தை நுட்பமாக நுண்ணுணர்ந்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

ரத்தமும் சதையுமான இந்த வாழ்வியல் கூறுகளில்தான் மறைக்கப்பட்ட ஆதித் தமிழ்க்குடியின் பண்பாடுகளையும் திரிக்கப்பட்ட வரலாற்றையும் தரிசிக்க முடியும்.

இப்படியான ஒரு பார்வைப் பின்புலத்துடன் உங்கள் கையிலிருக்கும் வெடிச்சரத்திற்குத் தீ வையுங்கள். அந்த வெடியின் ஓசை ஆயிரமாயிரம் வருடங்களுக்குப் பின்னால் உங்களை அழைத்துப் போகும்.

ஒரு விழா என்பது, காலங்காலமாக உழவர்களின் செயலூக்கத்திலிருந்துதான் உருவெடுத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண்மைச் சமூகத்திற்கு மாற்றமடையும்போது நிலத்தையும் நிலம் சார்ந்த வாழ்வியல் அம்சங்களையும் வழிபாடு செய்யும் போக்கு ஆரம்பிப்பதை சங்கப் பிரதிகளில் உணரலாம். மழையை வழிபாடு செய்யும் நோக்கில் மாரியம்மன் திருவிழா, நிலத்தை வழிபாடு செய்யும் நோக்கில் பொங்கல் திருவிழா என்று பண்டைய மனிதனின் வாழ்வியலில் பெரும் பங்கு வகித்த வேளாண்மைக் கண்ணோட்டத்திலேயே உருவாகி வந்திருக்கின்றன.

ஆனால் தீபாவளி பற்றிய குறிப்புகள் சங்கப் பிரதிகளில் விரிவாகவும் விளக்கமாகவும் இல்லை. (மணிமேகலையில் வரும் ஓரிரு வரிகள் இந்த நாட்டார் விழாவைக் கோடி காட்டுகின்றன. அந்த வரிகளை உரையாசிரியர்கள் வேறுவிதமாக விளக்கம் கொடுத்து பார்வையை மாற்றிவிட்டதன பயனாக ஆதித் தமிழனின் பண்டைய விழா திசைமாறிப்போய்விட்ட அவலத்தை எதிர்கொண்டு வருகிறோம். கட்டுரையின் இறுதியில் அதைப்பார்ப்போம்) கடந்த சில நூற்றாண்டுகளாக, தீபஒளி ஏற்றுவது என்பது போன்ற செவ்வியல்தன்மை கொண்ட நிகழ்வுகளாக இலக்கியப்பதிவுகளில் சுட்டப்பட்டு வந்திருக்கின்றன. இந்தப் பதிவுகளை அரசியல் இயக்கங்கள் தங்களது அரசியலுக்கேற்ப வளர்த்தெடுக்கும் போக்கே இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது.

அரசியலாளர்களும் ஆய்வாளர்களும் முன்வைக்கும் இந்தப் பார்வைகளை சற்றே மறந்து பண்டைய நாட்டார் வாழ்வியலுக்குள் நுழையலாம்.

என் சிறு பிராயத்தில், வடதமிழகம் சார்ந்த கொங்கு மண்டலத்தில் நிகழ்ந்த வள்ளி திருமணம் என்னும் கூத்து நிகழ்வின் காட்சிகளை உங்களுக்குள் நிழற்றிக் காட்டுகிறேன்:

கூத்து நிகழ்வின் ஆரம்பத்தில் வள்ளியின் தந்தையாரான நம்பிராஜன் என்னும் அரசரும் மந்திரியும் உரையாடுகின்றனர்.

நம்பிராஜன்: அஹோ வாரும் மதியூக மந்திரி.. நமது நாட்டிலே மாதம் மும்மாரி பொழிகிறதா? நமது குடிகள் எல்லாம் ஷேமத்துடன் இருக்கின்றார்களா?

மந்திரி: ஷேமத்துக்கு ஒன்றும் குறைவில்லை மகாகனம் பொருந்திய மன்னவா.. நாட்டிலே பெய்யக்கூடிய பருவமழை தவறாது பெய்து வருகிறது. ஆனால், பருவத்தையும் தாண்டி அடைமழையாகப் பொழிகிறது. அதுதான் பெரும்பாடாக இருக்கிறது..

நம்பிராஜன்: விளக்கமாச் சொல்லுங்கள் மந்திரி..

மந்திரி: மன்னவா, காடுகழனிகளில் போட்டிருக்கும் பயிர்கள் பெருமழையால் செழித்து வளர்ந்து பூட்டை வாங்கி பூக்கதிர்களாக துளிர்த்திருக்கும் பொழுதிலே, அடைமழை பிடித்துக் கொண்டது. இந்த அடைமழை, கதிர்களின் சூலகத்தில் ஒட்டியிருக்கும் பூத் தூள்களை கழுவிக்கொண்டு போய்விடும். தானியமணிகளாக சூல் கொள்ளக்கூடிய அந்தப் பூத்தூள்கள் இல்லாததால், தானியங்கள் பதராகி விளைச்சல் குன்றிப் போய்விடுகிறது.

நம்பிராஜன்: ஓஹோஹோ.. அப்படியா சங்கதி..
என்றவர் பெருங்குரலெடுத்துப் பாடுகிறார்:

மாரியை நிறுத்தவேணும்.. மஞ்சத் தினை காக்கவேணும்..
காடு கரையெங்கும் பந்தங் கொளுத்தவேணும்..
தீபமணையாது காரியைத் திருப்பவேணும்..

என்று பாடியவாறு காடுகழனிகளெங்கும் தீப்பந்தங்களை நட்டுவையுங்கள் என்றும், தீபங்களை அணைப்பதற்கு மாரித்தெய்வம் விரும்பாது என்றும் சொல்கிறார் அரசர்.

அதைத் தொடர்ந்து, மேலும் அதன் விளைச்சலுக்கு வந்திருக்கும் நேரத்தில் வயல்களில் பறவைகள் விழுந்துவிட்டன. அவைகளை விரட்ட முடியவில்லை என்றும் செழித்து வளர்ந்திருக்கும் பயிர் பச்சைகள் பற்றியும், பறவைகள் மற்றும் விலங்குகளின் அழிமாட்டம் பற்றியும், உழவர்களின் பாடுகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கிறார் மந்திரி.

அதற்கு அரசர், அவைகளை விரட்ட இடியோசை போன்ற நம்முடைய பறைகளைத் தட்டுங்கள் என்றும், வேடுவக் குடிகள் தமது விற்களை வளைத்து அம்புகளை வானிலே செலுத்தி அவைகளை ஒன்றோடொன்று மோதவிட்டு வானிலே அக்கினிப் பந்தங்களை உருவாக்குங்கள் என்றும் நீண்ட குரலெடுத்துப் பேசுகிறார்.

மேலும், ஒவ்வொரு பருவகாலத்தின்போதும் இந்தச் செயல்பாடுகளை ஒரு ‘விழவு’ போலச் செய்யுங்கள் என்கிறார்.

(விழவு என்பதற்கு பொருள் விளங்காமல், எங்கள் தமிழ் ஐயாவிடம் கேட்டதும், அவர் புருவங்கள் விரிய பதில் சொன்னதும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது)

இந்தத் தினைப்புலத்தில், பறவைகளை விரட்ட பரண் மீதேறிப் பாடும் வள்ளியின் ஆலோலத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

இப்படியான ஒரு ஆய்வுக் கண்ணோட்டத்தில் தீபாவளியை அணுகும்போது அது உழவர்களின் பெருநாளாக வெடிச் சத்தத்தோடு முழங்குவதை அவதானிக்கலாம்.

தங்களது வேளாண் பயிர்களை பறவைகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் காக்க வேண்டி வேட்டுப் போடும் வழிமுறையை விழாவாகக் கொண்டாடும் அடையாளங்கள் நாட்டார் வழக்காறுகளில் கொட்டிக் கிடக்கின்றன.

சிறு தானியங்களின் வேளாண்மைச் சாகுபடியில் கிளியடிக்கும் பருவம் என்று பயிரின் முளைப்பருவத்தைச் சொல்வார்கள். வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக இறங்கி முளைத்தளிர்களை அடிக்கும். இந்தத் துயரமான சூழலை கருப்பு எழுத்தாளரான சினுவா ஆச்சிபி, தனது “சிதைவுகள்’ என்னும் நாவலில் அற்புதமாகப் பதிவு செய்துள்ளார். தமிழில் இதுபோன்ற பதிவுகள் பெரும்பாலும் இல்லை. அதன்பிறகு புழு அடிக்கும் காலம் தொடங்கும். இறுதியாக கருதுகள் மலர்ந்து தானிய மணிகளாகும்போதுதான் பறவைகள் அடிக்கும். இந்தப் பறவைகளை விரட்டும் முகம்தான் வேட்டு போடுதல். இதை அந்தப் பருவம் முழுவதும் ஒரு கொண்டாட்டம் போல நிகழ்த்தியிருக்கிறார்கள். உழவனின் நீரோட்டமான வேளாண் வாழ்வியலில் உருவாகிய திருநாள்தான் இது.
ஆதி இனக்குழு மனிதன் வேளாண்மையை தனது உடல் நலச் சுழற்சியுடனேயே உருவாக்கியிருக்கிறான். பருவமழையின் போக்குகளையும், தனது உடல்நலக் கூறுகளையும் அவதானித்து, சிறுதானியப் பயிர்களின் வேளாண் சுழற்சியை ஆடிப்பட்டம், மாசிப்பட்டம், வைகாசிப்பட்டம் என்று பருவங்களாகப் பிரித்து, அதற்கேற்ப வேளாண்மை செய்தான்.

ஒவ்வொரு பருவத்தின் போதும், அந்தச் சூழலின் இயல்புக்கேற்ப உடல் சத்துகள் தரும் தானியங்களை உற்பத்தி செய்யும் சுழற்சி முறை அது. கடுமையான உடலுழைப்பு வேண்டும் கோடை காலங்களில் இரும்புச் சத்து தேவைப்படும். அப்போது கேழ்வரகு பயிர் செய்திருப்பார்கள். “கல்லை உடைச்சி களியைத் தின்னு’ என்கிறது சொலவடை. மேலும், வேண்டாத கழிவுகள் உடலில் நிறையச் சேர்ந்து விடும் காலத்தில் குதிரைவாலியைப் பயிர் செய்து அந்தக் கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்றுவார்கள்.

இந்தக் குதிரைவாலிப் பயிர் குறித்த அம்சங்களில் வேட்டுபோடும் குறிப்புகள் நாட்டார் வழக்கில் காணக் கிடைக்கின்றன. இந்தப் பயிர் நல்ல விளைச்சலுக்கு வரும்போது தானியங்களைக் கொத்தித் தின்ன காக்கை குருவிகள் அண்டுவதில்லை. காரணம், இந்தத் தானியமணி ஏழு தோல்களால் மூடப்பட்டது என்று சொல்வார்கள். மாறாக, கொடுவாச்சிக் குருவி என்று ஒரு வகைக் குருவிகள்தான் வரும். அவை பெரும் கூட்டத்துடன் இந்த வயல்களில் சரேலென்று விழுந்தால் கருதுகள் அனைத்தும் கபளீகரமாகிவிடும். இவைகளை வேட்டுப் போட்டுத்தான் விரட்டுவார்கள். இதற்கான நாட்டார் கதை ஒன்று, இந்தத் தானிய மணி மிகவும் நுண்ணிய உணர்வு கொண்டது என்றும், ஒவ்வொரு வேட்டுப் போடும்போதும் ஒருதொளி உருவாகி மணியைக் கப்பிக் கொள்கிறது என்றும் சொல்கிறது. ஆக, வேட்டுப் போடுவது இந்த தானியத்திற்கு இன்றியமையாததாகிறது.

கட்டுறுதியான இந்தத் தானியத்தை உரலில் போட்டு தனி ஒரு ஆள் குத்த முடியாது. கூட இன்னொரு ஆளும் உலக்கையைப் பிடிக்க வேண்டும். அந்த ஆளுக்கு ஈட்டுலக்கை என்று பெயர். அவர்தான் உலக்கைப் பாடல் பாடுவார்.

குத்தடி குத்தடி குதரைவாலு
பத்தியிருக்குது ஏழு தோலு
வேட்டு போட்டு வெளைஞ்ச வாலு
ஆட்டம் போட்டு அழங்கும் பாரு..

இப்படிப் பல்வேறு நாட்டார் ஆவணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்தக் குதிரைவாலியை உண்பவனை, “ஏழு தோலு தொலைச்சவன் காலு, வேட்டு போட்டு விழாக் கோளும்..’ என்கிற சொலவடை, மஹாவிஷ்ணு அழித்தொழித்த நரகாசுரனின் இறப்பைக் கொண்டாடும் தொன்மமாக மாறிப்போனதுதான் நுண்ணரசியல்.

இவ்வளவு பாரம்பரியமிக்க நாட்டார் மரபின் ஆழமான பார்வைகள், செவ்வியல் இலக்கியங்களில் பதிவாகாமலேயே போய்விட்டதெங்ஙனம்? என்று விவாதிக்க வேண்டியதில்லை. ஆதிக்க வர்க்க கலை இலக்கியங்களை மட்டுமே கவனப்படுத்தி வந்த புலவர் குழாம், விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் கூறுகளை பெரிதும் கணக்கில் கொள்ளவில்லை என்பதை சங்கப்பிரதிகளில் உணரலாம். இருந்தும் சிற்சில இடங்களில் பதிவாகியிருப்பதை நாம் நுட்பமான வாசிப்பின் மூலம் தேடிக் கண்டடைய முடியும்.

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலைக்குள் நுழையலாம்:
முதலாவது காண்டமான விழாவறை காதையைப் பார்க்கலாம்.

பூம்புகார் நகரத்தில் ஆண்டுதோறும் நடக்கின்ற ஒரு விழா குறித்து அந்தக்காதை விரிகிறது. (அந்தவிழாவை சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் இந்திர விழாவாக அடையாளப்படுத்துகிறார்கள் உரையாசிரியர்கள்.) விழா என்னும் பொருள் குறித்த அருமை பெருமைகள் பேசப்படுகின்றன. விழாவின் தன்மைகள் சுட்டப்படுகின்றன. விழா பற்றிய பரந்துபட்ட நிகழ்வுகள் நினைவு கூறப்படுகின்றன. அவை அப்போதைய சூழலில் உள்ள பல்வேறு கூறுகளை பல பரிமாணங்களாகப் பேசுகின்றன. இப்படிப் பேசப்படும் பல அடுக்குகளை மூலப்பிரதியின் மையத்தன்மைக்கேற்ப ஒற்றைத் தன்மையாகக் கொண்டு உரையாசிரியர்கள் எல்லாவரிகளையும் இந்திரவிழா குறித்த பார்வையாகவே முன்வைத்தார்கள்.

முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி
வானம் மும் மாரி பொழிக மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் (1:31-35)

இந்த வரிகளில் உள்ள தீவகம் என்பதை நாவலந்தீவில் உள்ள தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்தி நாள் என்று உரையாசிரியர்களால் சொல்லப்படும் பார்வையிளிருந்து சற்றே விலகி வருவோம்.

தீவகம் என்னும் சொல்லுக்கு ‘விளக்கு’ என்றும் பொருள் இருப்பதை இங்கே
பொருத்திப்பார்க்கும்போது ஒரு அற்புதமான காட்சி நம் மனக்கண் முன் விரிகிறது. வான மும்மாரி பொழியும் கோள்நிலை திரியாத மன்னனை வாழ்த்தி முரசு கொட்டிக் கொண்டாடும் முதுகுடியான உழவனின் தீவகச் சாந்திசெய்யும் திருநாளை, இந்திர விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் உவமையாக முன்வைக்கிறார். நாட்டுப்புற மரபிற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், நாட்டுப்புறங்களில் இருந்த தீப விழாவை இங்கு பொருத்திக் காட்டுகிறார் சாத்தனார்.

இப்பாடலில் ‘முதுகுடிப் பிறந்தோன்’ என்று அவர் அடையாளப்படுத்துவது வள்ளுவர் என்னும் முரசரைபவரை என்பதாக உரையாசிரியர்கள் சொல்வது முற்றிலும் தவறான பார்வை. கவிஞர், வள்ளுவரை அடையாளப்படுத்தியிருந்தால் பாடலின் சந்தபூர்வமாக ‘வள்ளுவன்’ என்றே போட்டிருக்கலாம். அவர் அடையாளப்படுத்துவது முதுகுடியான உழவனையே இங்கு பொருத்துகிறார்.

(மேலும், இந்தப்பாடலை தீவக அணி என்னும் இலக்கணப் பார்வையில் பார்க்கலாம்.: ஒரு இடத்தில் எரியும் விளக்கானது அங்குள்ள பல பொருள்களுக்கு வெளிச்சமூட்டி விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில் குறிக்கப்படும் ஒரு சொல்லானது, அதன் பல சொற்கேளாடு பொருந்திப் பொருளை விளக்கும் தன்மையே தீவக அணி என்று தண்டியலங்காரம் (39) சொல்வதையும் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும்.)

இரண்டாவது காண்டமான ஊரலருரைத்த காதையில்,

நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் (2:1-3)

இந்த வரிகளில் தெளிவாக ‘நாவலந்தீவு’ குறித்தும், தீவகச்சாந்தி நாள் குறித்தும் பாடுவதையும் சீர்தூக்கிப் பார்க்கலாம்.

24வது காண்டமான ஆபுத்திரனாடு அடைந்த காதையில்,

தீவகச் சாந்தி செய்யா நாள் உன்
காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம் (24: 62-63)

இந்தத் தீபவிழா செய்யாத நாள் உன்னுடைய நகரம் கடல் கொண்டுபோய்விடும்..

இப்படியான மாற்றுப் பார்வையில் இந்தப் பாடல் வரிகளை மறு வாசிப்பிற்குட்படுத்தும்போது தீவகத்தின் திருநாள் சங்கப் பிரதிகளில் வெளிச்சம் போடும்.

2

இந்தக் குதிரைவாலியை உண்பவனை, “ஏழு தோலு தொலைச்சவன் காலு, வேட்டு போட்டு விழாக் கோளும்..’ என்கிற சொலவடை, மஹாவிஷ்ணு அழித்தொழித்த நரகாசுரனின் இறப்பைக் கொண்டாடும் தொன்மமாக மாறிப்போனதுதான் நுண்ணரசியல்.

இந்தத் தீபாவளிப் பண்டிகையை இந்தியாவின் பல்வேறு நிலங்களில் பல்வேறு தொன்மங்களில் கொண்டாடுகிறார்கள் என்னும் செய்திகளை பகுத்துணர்வு செய்யும்போது அந்த நுண்ணரசியல்கூறுகள் பளீரென விடுபடுகின்றன.

வடமாநிலங்களில், ஐந்து நாள் கொண்டாட்டமாகக் கொண்டாடுகின்றனர். முதல்நாள் தந்தேராஸ் என்னும் தன திரயோதசி, இரண்டாம் நாள் நரக சதுர்த்தசி, மூன்றாவது நாள் தீபஒளியுடன் லஷ்மியை வரவேற்கும் ஸ்ரீலஷ்மி பூஜை, நான்காம் நாள் கணவன் மனைவி உறவுமுறையின் தாத்பர்யத்தை’ கொண்டாடும் பத்வாபூஜை, கடைசிநாள் சகோதர சகோதரிகளின் உறவுமுறை ஐதீகத்தை முன்னிறுத்தும் பாய் தூஜ் என்னும் கொண்டாட்டத்தோடு முடிவடைகிறது.

முக்கியமாக தலைநகர் டெல்லியில், ராமன், ராவணனை அழித்து, சீதையை மீட்டுக் கொண்டு, தனது வனவாசத்தை முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்னும் பொருள்பொதிந்த தொன்மத்தின் நினைவுகளோடு தீபாவளி நாளைக் கொண்டாடுகின்றனர். அதற்கு சிலநாட்கள் முன்பாக பெருமளவில் ராவணவதத்தைக் கொண்டாடிவிட்டு, அதன் தொடர்ச்சியாக, ராமர் அயோத்தி திரும்பும் நாளை தீபாவளியாகக் கணிக்கின்றனர்.

மராட்டிய மாநிலமான மும்பையில் முதன்மையாக லஷ்மி தங்களது வீட்டிற்கு எழுந்தருளல் என்னும் தொன்மமாக உருவகித்து லஷ்மிபூஜையாகக் கொண்டாடுகின்றனர். இதைப் புதுக் கணக்கு எழுதும் லஷ்மீகரமான விழாவாக சிறப்பிக்கின்றனர்.

இதற்கு நேரெதிராக மேற்கு வங்கத்தில், தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. மேலும், தீபாவளிக்கு அரசு விடுமுறையும் இல்லை. (தீபாவளி மட்டுமல்லாது விநாயகசதுர்த்தியும் அங்கு இல்லை.) தீபாவளி குறித்துச் சொல்லப்படுகின்ற எந்தவிதமான அம்சங்களும் இல்லாமல் அந்த மண்ணின் இறைமரபான காளி பூஜையே அந்தப்பருவத்தில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமியிலிருந்து 14 நாட்கள் கழித்து அமாவாசைக்கு முந்தினநாள் இரவில், 14 தீபங்கள் ஏற்றி 14 வகையான உணவுப் பதார்த்தங்களுடன் காளியை வரவேற்கும் முகமாக காளிபூஜையாகக் கொண்டாடுகிறார்கள். துர்க்காதேவியின் ஆக்ரோஷ வடிவமான நாக்கைத் துருத்திக் கொண்டிருக்கும் காளியின் தொன்மம் மேற்கு வங்கத்தின் மரபுசார்அடையாளம்.

இந்த உருவகம் குறித்து பல்வேறு தத்துவக் கருத்தாடல்கள் வங்காளம் முழுவதும் வேரூன்றியுள்ளன. வங்க இலக்கியங்களில் எண்ணற்ற படிமங்களாக விரிபடும் காளியின் நாக்கு அந்த மண்ணின் அடையாளமாகக் கருதப்படுகிறது. காளியின் நாக்கு என்பது மெய்துணிவின் சின்னம் என்று வியக்கிறார் புராணவியல் அறிஞரான தேவ்தத் பட்நாயக். ‘வெறும் ஆவேசமாக மட்டுமே பார்க்காமல், இயற்கையுடன் இணைந்து வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் எதிர்கொள்ளும் மெய்துணிவாகக் கொள்ளலாம்’ என்கிறார் அவர்.

(கல்கத்தாவுக்கு வந்திருந்த ஜெர்மன் நாவலாசிரியரான குந்தர் கிராஸ், ‘நாக்கை நீட்டிக் காட்டு’ என்ற உருவக ரீதியான பொருள் கொண்ட தலைப்பிலேயே அந்த நகரத்தின் சமூகச்சூழல் குறித்து எழுதியிருக்கிறார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.)

14 நாட்கள் போர் செய்து ராட்சசன் தாருகனையும் தீயசக்திகளையும் அழித்துவிட்டு, ரத்தவெறியுடன் அமாவாசை இருளில் வரும் காளிக்கு 14 தீபங்களில் ஒளியேற்றி வரவேற்கும் ஐதீகம்தான் காளிபூஜை. நாக்கைத் துருத்திக் கொண்டு கடுங்கோபத்துடன் வரும் காளியை சாந்தப்படுத்த, அந்த வழித்தடத்தில் சிவபெருமான் படுத்திருக்கிறார். ஆவேசத்துடன் வரும் காளி அவர் வழியில் படுத்திருப்பது அறியாது மிதித்து விடுகிறார். அப்போதுதான் அவரது சன்னதம் குறைகிறது. (தனது கணவரை மிதித்து விட்டோமே என்று வெட்கத்தால் நாக்கை வெளியில் நீட்டினார் என்று சொல்லப்படுவதும் உண்டு) நாட்டார் தெய்வ வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும் துர்க்கையின் காலடியில் சிவபெருமான் படுத்திருக்கும் நிகழ்வு மேற்கு வங்கத்தின் பெண்ணியம் மற்றும் விளிம்புநிலை சார்ந்த முற்போக்கு முகத்தை முன்வைக்கிறது.

தீபாவளிக்கு அடுத்தநாள் வெளியான Times of India (11.11.15) நாளிதழில் South Kolkata breaks away from tradition என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒருமுக்கியமான அம்சத்தை இத்தருணத்தில் இங்கு குறிப்பிடவேண்டும். இதுவரை மண்ணின் மரபான காளி தெய்வத்தை பூஜை செய்துவந்த தன்மை மாறி, கல்கத்தாவின் தெற்குப் பகுதியில் ‘சாமுண்டா’ என்னும் சாந்தமான தெய்வத்தை இந்தவருடம் புதியதாக பூஜை செய்யும் போக்கு ஆரம்பித்திருக்கிறது என்கிறது அச்செய்தி. வங்காள மண்ணின் பண்பாட்டு அடையாளமான காளி என்னும் நாட்டார் வடிவத்தின் நாக்கு, இனி மெல்ல மெல்ல சாமுண்டீஸ்வரியின் பெருந்தெய்வ அம்சத்தில் உள்ளடங்கிப் போகும்.

அதேபோல, பஞ்சாப் மாநிலத்தில், தங்களது புனிதக்கோயிலான பொற்கோயிலின் கால்கோள் தினத்தையே, இந்நாளில் நினைவு கூர்ந்து தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர் சீக்கிய மக்கள்.

மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஜைனமக்கள், மகாவீரர் ‘வீடு பேறு’ அடைந்த தினமாக நினைவு கூர்கிறார்கள்.

குஜராத்தில் உள்ள இந்துக்கள், மஹாவிஷ்ணு, வாமன அவதாரம் கொண்டு, அழித்தொழித்த மகாபலி மன்னனின் இறப்பைப் போற்றும் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

இதன் எச்சமாக, கேரளத்தில் மகாபலியைப் போற்றும் ஒருபகுதியாக நடைபெறும் ஓணத்திருநாளைக் கணிக்கலாம். ஆனால், அவர்களது தீபாவளி பற்றிய தொன்மம் என்பது தமிழகத்தில் கட்டமைந்திருக்கும் நரகாசுரன் பற்றியதே. (அங்கிருக்கும் வெடிவழிபாடு என்னும் நிகழ்வும் தீபாவளி கொண்டாட்டங்களும் வேறுவேறு பருவங்களில் நிகழ்வதால் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாமல் இருக்கிறது.)

பண்டைய தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட நரகாசுரன் பற்றிய தொன்மம், அதன் ஒருங்கிணைந்திருந்த பகுதிகளான கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றுள் அப்படியே இன்றும் வேரோடியிருக்கிறது. ஆனால், ஆந்திராவிலிருந்து சமீபத்தில் பிரிந்த தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த ஒஸ்மானியா மற்றும் காகதீயா பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், ‘நரகாசுரன் என்னும் திராவிட மன்னனை அழித்தநாளை சந்தோஷமாகக் கொண்டாடும் போக்கிலிருந்து விலகி துக்கநாளாகக் கொண்டாடுவதாக’த் தெரிவிக்கின்றனர்.

இந்த விழாவை முன்னின்று நடத்தும் பல்கலைக்கழக பேராசிரியரும் தலித்திய அறிஞருமான காஞ்சா அய்லய்யா, ‘தசரா கொண்டாட்டத்தின் ராவணன், தீபாவளியின் நரகாசுரன் போன்றோர் திராவிட தலித் கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் என்றும், டாக்டர் அம்பேத்கர் சொல்வது போல வரலாற்றை மறுவாசிப்புக்குட்படுத்த வேண்டுமென்றும்’ சொல்கிறார். “இந்த மாற்றுத் தீபாவளிக் கொண்டாட்டங்கள் போன்றவை, தொன்மங்களையும் வரலாற்றையும் மறுவாசிப்பு செய்யவேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்குகின்றன..” என்கிறார். (The Hindu -13.6.2015)

(இது ஒருவிதத்தில் திராவிட வெகுஜனப்பார்வையை ஒத்திருந்தாலும், பிரிந்து வந்த தனது மாநிலத்தின் தனித்தன்மையை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்காக புதியதாகக் கட்டமைக்கப்படும் ஒருவகைக் கலாச்சார அரசியல் என்றும் கொள்ளலாம்.)

இந்த நரகாசுரன் என்னும் தொன்மம், பண்டைய காமரூபம் என்னும் அஸ்ஸாம் மாநிலத்தின் தோற்றுவாய். இந்த நாட்டுமக்களைப் பெரும் கொடுமைகள் செய்து வந்த நரகாசுரன் என்னும் அரசனை மஹாவிஷ்ணு அழித்தொழித்து தர்மத்தை நிலை நாட்டினார். அவனது இறப்பை நினைவு கூறும் விதமான திருவிழாவாக தீபாவளி உருவகிக்கப்பட்டது.

இந்தியாவின் பலபகுதிகளிலும் தங்களது மரபு சார்ந்து கொண்டாடிக் கொண்டிருந்த வேட்டு போடும் கொண்டாட்டத்தோடு, இந்தத் தொன்மத்தின் புராணிகத் தன்மையை இணைத்து விடப்பட்டதாக அவதானிக்கலாம். மஹாபாரதம் போன்ற புராணிகத்தன்மைகள் மிக அற்புதமானவை;

எல்லையற்ற மனித வாழ்வின் பல்வேறுபட்ட பரிமாணங்களை கண்முன்னே காட்சிப்புலங்களாக விரித்துப் போடும் இதன் அபாரமான வலைப்பின்னல், வரலாற்றுச் சொற்களை உருவகங்களாகவும், படிமங்களாகவும், தொன்மங்களாகவும் சுருக்கி மனிதனின் ஆழ்மனப் படிவங்களோடு இணை சேருகின்றது.

‘புராணக்கதை ஒரு சமுதாயத்தைப் பற்றி விளக்கக்கூடிய பயன்பாட்டை வரையறைக்குட்படுத்தி விடுகிறது. ஆனால் அது வேறு பல சாத்தியங்களுக்கு வழி வகுக்கிறது. ஒரு இனத்தின் உண்மையான வாழ்வியலைப் புராணக்கதையில் அப்படியே காணும்பொழுது, சில நேரங்களில் நனவிலி நிலையில் உள்ள சில செய்திகளை அடைவதற்கு உரிய வழியைப் பெறுகிறோம்.’ என்று புராணிகத்திற்கும் நிஜத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார் புகழ்பெற்ற மானுடவியல் ஆய்வாளரான லெவி ஸ்ட்ராஸ்.

இந்த ‘புராணிகம்’ என்கிற வடிவம் Illusion தன்மை கொண்டது. தனக்குள் வைத்திருக்கும் உருவகங்களையும், படிமங்களையும், தொன்மங்களையும் மதத்தன்மைகளாக மாற்றக்கூடிய வெளிப்பாடுகளைத் தனக்குள் கொண்டிருக்கும் அவலமும் அதுதான், மனித வாழ்வியலின் தேட்டங்களைத் தொடும் கலையின் சிகரமும் அதுதான்.

தமிழகத்தில் இத்தொன்மம் பெருமளவில் பரவியதற்கு திராவிட அரசியலுக்குப் பெரும் பங்கிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

இந்துப் புராணிகங்களை மறுத்து திராவிட அடையாளம் என்னும் ஒரு கருத்தியல் கொண்ட அரசியலை உருவாக்கிக் கொண்டிருந்த பெரியாரின் திராவிட அரசியலில், நரகாசுரன் திராவிட மன்னனாக உருவெடுத்தார். ஆரிய எதிர்ப்பு என்னும் பார்வையில் இத்தொன்மத்தை அப்படியே ஏற்றுக் கொண்டது திராவிட அரசியல்.

புராணிகங்களை பொய் என்றும் ஆரியப்பிதற்றல் என்றும் நிராகரித்து வந்த திராவிட அரசியல், தனது அரசியல் தர்க்கத்தின் தீவிரத்தை உணராமல், அந்தத்தொன்மத்தை ஏற்றுக் கொண்டு ‘நரகாசுரன் ஒரு திராவிட மன்னன்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தது.

வெறுமனே ஆரிய எதிர்ப்பு என்ற தட்டையான பார்வையை மட்டுமே எதிர்கொண்டதுதான் திராவிட அரசியல். அந்தக்கட்டத்தில் செயல்பட்ட மானுட விழுமியங்களையோ, திராவிட இனக்குழுவின் வாழ்வியல் போக்குகளையோ, பண்பாட்டு ரீதியான பார்வையில் திராவிட அரசியல் அவதானிக்கத் தவறியதன் விளைவுதான், இன்றைய இந்துத்துவப் பண்பாட்டுக் கட்டமைப்பு.

மேலும், இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்வைத்து வாதப்பிரதிவாதங்களை உருவாக்கிவிட்டு தங்களது அரசியல் இயக்கங்களின் வளர்ச்சியைப் பெருக்கிக்கொள்ளவே விழைந்தனர்.

செல்பேசி, கணினி வசதிகள் பெரிதளவில் வளர்ச்சியில்லாத கடந்த காலங்களில் தீபாவளி வாழ்த்து என்ற துறை பெருமளவில் வணிகப்பயன்பாட்டில் இருந்தது. இந்த விழாக் கொண்டாட்டங்களை முன்வைத்து, தங்களது கருத்துக்களையும், சின்னங்களையும் தீபாவளி வாழ்த்துக்களாக வடிவமைத்து ஒவ்வொரு மனிதனின் வீட்டிற்குள்ளும் நுழைந்து கட்சி கட்டியது.

தீபாவளி என்னும் இந்தக்கட்டமைப்புக்குப் பின்னால் திரளும் அரசியல் நலன்களுடன் வணிகநலன்களும் கைகோர்த்துக்கொண்டு பண்பாட்டு நலன்களாகத் தோற்றம் காட்டியபடி களமிறங்கின.

உழவர்களின் குதிரைவாலிக் கருதுகளை பட்டாசுகளாக மாற்றிக் கட்டமைத்தது சிவகாசிச் சந்தை. பட்டாசுத் தயாரிப்பின் மாபெரும் வணிகத்திலிருந்து, ஆடை, அணிகலன், வாகனம், வீட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள் என்னும் பல்வேறுபட்ட நுகர்வுச்சந்தையில் பலகோடிகள் புழங்கும் மாபெரும் நுகர்வுக் கலாச்சாரமாக மாறியது அது. திரைப்படங்கள், தொலைக்காட்சிநிகழ்வுகள், ஊடகங்களின் சிறப்புவெளியீடுகள் என்ற ஊடக வியாபாரங்களாகவும், அலுவலகங்களில் புதுக்கணக்கு எழுதுதல், போனஸ், என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றங்களெனவும் இந்த ஒற்றை வார்த்தைக்குள் லௌகீக மனிதனின் வாழ்வியல் பலதரப்பட்ட கூறுகளாகக் கட்டமைந்திருக்கிறது.

பன்மைத்தன்மை கொண்ட பல்வேறு நாட்டார் விழாக்களை தமது ஒற்றைத்தன்மைகொண்ட பேருருவாக மாற்றும் போக்கு, தற்கால இந்துத்துவ நுண்ணரசியலின் முதன்மையான கூறுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பிரம்மாண்டமான வணிகக் கலாசாரம் ஒருபுறமும், பன்மைத் தன்மைகளை அழித்து ஒற்றை ஆதிக்கத்தை நிலைநாட்டும் நுட்பமான அரசியல் கலாசாரம் மறுபுறமுமாகக் கட்டமைந்த தொன்மங்கள் பட்டாசுகளாக வெடித்துக் கொண்டேயிருக்கின்றன.

ஆத்துக்கு அந்தப்புறம் ஆடுமேய்க்கும் சின்னத்தம்பி..
வேட்டு போடும் நாளு வருது தந்தனத் திய்யாலோ..
அந்தக் காடுகரை பூக்குது பார் தந்தனத் திய்யாலோ..
என்று பாடும் எங்களூர் அம்மாசிக் கிழவனின் பாடல் வரலாற்றின் பக்கங்களில் ஏறும்போது, பட்டாசு குதிரைவாலியாக மாறும்.

(நன்றி: உயிர்மை, டிசம்பர் 2015)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page