எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ சிறுகதை உளவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மானுட உணர்வுகள் ரீதியாகவும் பல கேள்விகளை, திறப்புகளை அளிக்கிறது.
ஆத்மா தன் தம்பியின் வருகைக்கான உவகையில் இருக்கிறான். எதிர்பாராத விதமாக கரு கலைந்து விடுகிறது. ஆத்மாவை சமாதானப்படுத்த அவனின் தந்தை இல்லாத தம்பியை இருப்பதாக ஆத்மாவை நம்ப வைக்கிறார். அவனும் அந்த உருவில்லா தம்பியை ஏற்றுக் கொள்கிறான். அதன் பிறகு அவன் பல விசித்திரங்களைக் காண்பிக்கிறான். இங்கிருந்து வாசகனுக்குக் கேள்விகள் எழுகின்றன. தந்தை அவனை சமாதானம் செய்ய அந்த பொய்யை சொன்னார். ஆனால் எப்படி ஆத்மா அதை ஏற்று கொண்டான்? இப்போது நமக்கு புறச் சூழல் என்பது ஆத்மாவின் உள்ளத்தைக் குறிக்கும் குறியீடு எனத் தெளிவாகிறது. ஆத்மாவின் உள்ளில் எப்போதும் ஒரு தனித்துவமான ஒன்று உறைந்துள்ளது. அதனுடைய புறத் தோற்றமே தம்பி என்னும் அடையாளம். அதனாலேயே அவனால் அந்தப் பொய்யை ஏற்றுக் கொள்ள முடிந்தது. தம்பி வந்தவுடன் அவனின் அதீத ஆற்றல் வெளிப்படுகிறது. ஒரு கலைஞனாக, இயற்கையை ரசிப்பவனாக அன்றடாத்தை வெறுப்பவனாக. ஒரு வகையில் ஆத்மா அன்றாடத்தின் சராசரியின் குறியீடு. தம்பி அதற்கு நேர் எதிர். ஆத்மா என்ற பெயரும் ஒரு குறியீடுதான். ஆத்மாவின் அதீத ஆற்றல் அவன் தந்தைக்கு பதட்டத்தையே தருகிறது. அதனாலேயே தம்பியை மீண்டும் கொலை செய்கிறார். தம்பியின் சாவு ஆத்மாவின் தனித்துவத்தின் சாவு. உள் ஒளி அழிக்கப்பட்ட ஆத்மாக்கள். இதை ஒரு உணர்வு பூர்ணமான கதை என்பதைத் தாண்டி மேற்கூறிய விதத்தில் சிந்திக்கும் பொழுது, நம் மனதில் பல கிளைகள் விரிந்து பரவுகின்றன.
விஷ்ணுகுமார்
பாண்டிச்சேரி