எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதிய குறு நாவலான “இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை” வாசித்தேன்.
இது ஒரு தொழில்நுட்ப அறிவியல் புனைவு வகையை சேர்ந்தது. Metaverse என்று சொல்லப்படுகிற மெய்நிகர் உலகத்தின் வருங்கால சாத்தியங்களையும், அந்த மெய்நிகர் உலகில் மனிதர்கள் கொள்ளும் அக புற சுதந்திரத்தையும், மீறல்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக மெய்நிகர் உலகத்தின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் உறவு சிக்கல்களுக்கும் மரபிலிருந்து தீர்வுகளை எடுக்க முடியுமா..? என இந்நூல் ஆராய்ந்துள்ளது. மெய்நிகர் உலகுக்கும் யதார்த்தத்துக்கும் நாவல் முழுக்க ஒரு ஊசலாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நூலை வாசிப்பதற்கு, கண்டிப்பாக சிறிது கணிப்பொறி தொழில்நுட்ப அறிதல் தேவை என்ற அளவிற்கு இதில் அதன் தாக்கம் இருக்கிறது. மேலும், இந்த நாவலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்பைத் தர வேண்டும் என்பதும் என் எண்ணம். மெய்நிகர் உலகின் மொழி உருவாக்கத்திலிருந்து நாவல் தொடங்கிகிறது. சிக்கலில்லாத எளிய முறையில் உபயோகப்படுத்தக்கூடிய மொழியாக அது இருக்கவேண்டும். அதற்கான முன்முயற்சியாக, பல நாட்டு பண்பாட்டு மரபுகளிலிருந்தும், தொன்மங்களிலிருந்தும் ஆராய்கிறார்கள். கடைசியில், அந்த மொழியின் மென்பொருள் கட்டுமான தலைவன் கிறிஸ் கோதமா, தன் இந்திய மரபின் நீட்சியிலிருந்து மெய்நிகர் உலகின் மொழி உருவாக்கத்திற்குத் தேவையான கூறுகளைக் கண்டுகொள்கிறான்.
இப்படி அந்த நாவல் முழுக்க மரபின் பல கூறுகள் தீர்வாக அமைகின்றன. மெட்டாவெர்ஸ் வணிகத்திற்கு ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் போதாமையை உணர்த்தி, பச்சைக் குதிரை விளையாட்டு ஒரு தீர்வாக அமைகிறது. பச்சை குத்தும் கலாச்சாரம் மெய்நிகர் உலகத்தில் அதன் அடுத்த கட்டத்தை சென்றடைந்திருக்கிறது. அதிலும் சிறந்த பச்சை குத்தும் மரபுகளைச் சொல்லி, கடைசியில் இந்தியாவின் பச்சை குத்தும் மரபின் சிறப்பை சித்தரிக்கிறது. ஆக இந்திய மரபை முன்னிலை படுத்த ஆசிரியர் இந்த மெய்நிகர் உலகத்தை புனைந்து கொண்டாரா என்று கேள்வி எழாமலில்லை. இதில் பல கேள்விகள் எழுவது சாத்தியமே. மரபை சொல்ல இந்த உத்தி தேவையா? அல்லது அதிநவீன தொழில்நுட்பத்திற்கு மரபு எப்படி தீர்வாக அமையும்?. கதையாசிரியர் எதிர்காலத்தின் யதார்த்தம் என்பது மெட்டாவெர்ஸ்தான் என்னும் தரிசனத்தை அடைந்ததின் விளைவுதான் இந்த உத்தி எனத் தோன்றுகிறது. மேலும் மரபு தீர்வாகுமா என்பத்தைவிட மரபை முன்னிறுத்தல்தான் இதன் நோக்கம் எனவும் தோன்றுகிறது.
இதையெல்லாம் கழித்தும் இந்நாவல் சில கேள்விகளை எழுப்புகிறது அறம் அல்லது விழுமியங்கள் என்று சொல்லப்படும் கருத்துக்கள் மெய்நிகர் உலகில் எவ்வாறு பொருள்படும்? உதாரணமாக, இந்த மெய்நிகர் உலகத்தில் ஒரு விளையாட்டு மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது மனித தலையை வெட்டிக் கொண்டாடும் விளையாட்டு அது. நிஜ உலகில் அவர்களுக்கு எந்த சேதமும் இல்லை ஆனால் அவர்களின் அவதார்கள் தலை வெட்டப்பட்டு குருதி படிந்து மெய்நிகர் மண்ணில் மடிகிறார்கள். இந்த விளையாட்டும் மரபிலருந்துதான் எடுக்கப்படுகிறது. இந்தியாவில் வடகிழக்கு நாகா பழங்குடிகளிடம் இந்த வழக்கம் இருந்திருக்கிறது உலகின் வெவ்வேறு பழங்குடிகளிடமும் இந்த வழக்கம் இருந்துள்ளது. பண்பட்ட மனிதன், தனது எல்லையை மீற ஒரு மெய்நிகர் உலகம் அமையும்போது, தன் ஆதி மனித மிருக இச்சையை நிறைவு செய்துகொள்கிறான். இன்றைய இனைய யுகத்திலேயே தன் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு மனிதர்கள் தங்கள் எல்லையை மீறுகிறார்கள். மெய்நிகர் உலகம் என்பது இன்னும் கட்டற்ற தன்மையை மனிதர்களுக்கு அளிக்கும் அதேசமயம், அந்த கட்டற்ற தன்மை யதார்த்த உலகில் அவர்களை செம்மைப் படுத்துமா அல்லது மேலும் அற மீறல்களுக்கு வழிவகுக்குமா என்பது விவாதிக்க வேண்டிய பொருள்.
இந்த நாவல் மையம் இல்லாமல் சிதறி வாசகனை ஒரு மாய வெளியில் அலைய விடுகிறது. அதனாலேயே இதில் ஒரு ஈர்ப்பும் ஏற்படுகிறது. பச்சைக் குதிரை தொழில்நுட்பத்தின் போதாமையைப் பூர்த்தி செய்ய, அமேலியா என்னும் சிறுமி தன் குழைந்தமையினால் ஒரு தீர்வை முன்வைக்கிறாள். அவளே எதிர்கால மெய்நிகர் உலகத்தின் குறியீடாகவும் ஆகிறாள். இந்த நாவல் வாசகர்களின் பல்வேறு வாசிப்புகளுக்கேற்ப, பல திறப்புகளைத் தரக்கூடும்.
விஷ்ணுகுமார்
பாண்டிச்சேரி