- ந மு நடேஷ்
நேற்று க நா சுப்ரமணியம் அவர்களுடைய முகத்தை படம் போட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியது…. நான் மனிதர்களின் முகங்களை படம் போட மாட்டேன் என்று ஒரு விதமான முடிவை எடுத்துவிட்டு அது போலவே வாழ்ந்து வருகிறேன்.
எனவே நான் போடும் படத்தில் அந்த ஆளுமையின் சாயல் இருக்க வேண்டும் என்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து அதை கொண்டு வருவதற்கான நுணுக்கங்களை நான் கற்கவில்லை.
அப்பொழுதுதான் புரிந்தது, அதிமூலம் எப்படிப்பட்ட பெரிய ஓவியர், பெரிய ஆளுமை, பெரிய சிந்தனைக்காரர், பெரிய ஆகிருதி.. என்பது புரிந்தது.
மெதுவாக எனக்கு நானே பாடம் சொல்லிக் கொடுத்து ஒரு வழியாக அவரது மூக்கு அவரது புருவம் அவரது செவ்வகமான முக அமைப்பு அவர் போடும் கண்ணாடி அந்தக் கண்ணாடி அழுத்தத்தில் அவரது மூக்கில் ஏற்படும் வடிவ மாற்றங்கள் என பல நேரம் யோசித்து யோசித்து கண்டுபிடித்து ஒரு வழியாக போட்டு முடித்தேன்.
உண்மையை கூற வேண்டும் என்றால் கண்டிப்பாக எனக்கு திருப்தி இல்லை ஆனால் க நா சுவின் முகம் எனது படங்களில் இனிமேல் தோன்ற ஆரம்பித்து விடும். ஏனெனில், நான் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது என் மனதில் முழுவதுமாக அந்தப் புகைப்படம் நின்று கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் புரிந்தது நான் எவ்வளவு தூரம் என்னுடைய ஞாபகத்தையும் நினைவையும் பயன்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது பற்றிய உண்மை.
இதே போலத்தான் சிறுவயதில் நான் பார்த்த குதிரைகளும் காண்டாமிருகங்களும் யானைகளும் சிங்கங்களும் நாய்களும் என் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றி தோன்றி என் வாயை பயன்படுத்தி நான் பேசாமல் இருக்கும் பொழுது இந்த உருவங்கள் என் மனதில் பசுவை போல அசைபோட்டுக் கொண்டு இருந்திருப்பேன் என்று தெரிகிறது.
என்னதான் இதுவாகத்தான் நான் இருந்தேன் என்று முயற்சி செய்து நான் எழுதினாலும் சரியாக நான் என்ன செய்தேன் என்பது நேற்றுதான் புலப்பட்டது.
கௌதம சித்தார்த்தன் தான் நடத்தும், மொழிபெயர்ப்புக்கு கருத்தரங்கு சம்பந்தமாக க நா சுவின் ஓவியம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் அனுப்பிய ஆறு க நா சுவின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, அதிலிருந்து இரண்டு புகைப்படங்களில் இருக்கக்கூடிய வடிவங்களை மனதில் தேக்கி தேக்கி பல மணி நேரங்கள் அதோடு வாழ்ந்து அதை ஒரு விதமாக போட்டு முடித்தேன்.
அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்.
அதாவது ஒவ்வொரு முக வடிவத்திற்கும் பிரத்தியேகமாக ஏதாவது ஒரு உறுப்பு ஒரு விதமாக அமைந்து இருப்பது கண்டிப்பாக நிகழக்கூடிய ஒரு உண்மை அவ்வாறாகத்தான் இயற்கை நம்மைப் படைத்திருக்கிறது என்பதுதான் பெரிய உண்மை.
அந்த உண்மையைத் தேடிக் கண்டுபிடிப்பது பெரிய கம்ப சூத்திரம் இல்லை. ஆனால், அதற்கான வேலையை தொடர்ந்து செய்யும் பொழுது தான் அது எவ்வாறு செய்ய முடியும் என்பதை புரிந்து கொண்டு சரியாக செய்து அந்த ஆளுமையின் அசலான முகத்தை சாயலை நெருக்கமான சாயலை ஒரு சில கோடுகளின் வழியாக மட்டுமே கொண்டு வர முடியும் என்பதை, ஆதிமூலம் மீண்டும் எனக்கு உணர்த்தி இருக்கிறார்.
நான் மீண்டும் கூகுள் செய்து க நா சு அவர்களுடைய படங்களைத் தேடும் பொழுது எனக்கு சித்தார்த்தன் அனுப்பிய இரண்டு புகைப்படங்களை மட்டுமே காண முடிந்தது.
வேறு எதுவும் அவரைப் பற்றிய புகைப்படங்கள் இல்லை. உடனே எனக்கு அவருடைய பேரழகி மகள் பற்றி சிந்தனை வந்தது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து தொடர்பு கொண்டு அவர்களிடம் க நா சு வினுடைய வேறு புகைப்படங்கள் இருந்தால், அதைக் கண்டுபிடித்து அதை எடுத்து ஸ்கேன் செய்து யூ டியூப்பில் உலவ விட வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக துளிர்விட்டு இருக்கிறது. அதை செய்வேனா என்பது தெரியவில்லை.
ஆனால் கண்டிப்பாக பென்னேஸ்வரன் அவர்களிடம் கேட்டால் க நா சுவின் மகள் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து அவரிடம் தொடர்பு கொண்டு செய்ய வாய்ப்பு இருக்கிறது இதை நான் பென்னேஸ்வரன் அவர்களுக்கு டேக் செய்து விடுவேன் அதன் மூலம் அவர் எனக்கு ஏதாவது உதவி செய்து க நா சு வின் வேறு சில புகைப்படங்களை கிடைக்கச் செய்தால் நாம் செய்யக்கூடிய முக்கியமான வேலைகளில் அதுவும் ஒன்றாக இருக்கட்டும்.
பின்குறிப்பு:
அந்தப் படங்கள் யூடியூபில் இருக்கும் பொழுது ஆதிமூலம் வரைந்த ஒரு கோட்டுக்கு சித்திரம் கூட கண்ணுக்கு புலப்பட்டது அதை நான் தெளிவாக உற்றுப் பார்த்து எவ்வாறு அமைப்புகளை மனதிற்குள் வாங்கி அதை உருவமாக அசலான சாயல் கெடாமல் மிக நெருக்கமாக கொண்டு வந்து விடுகிறார் என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல பயிற்சியாக அது அமைந்தது.
நான் எப்பொழுதும் கூறுவது போல ரஜினிகாந்தை படம் போட்டால் படத்தில் முடிந்தவுடன் கவுண்டமணி வந்து நிற்கக் கூடாது ரஜினிகாந்த் படம் போட்டால் ரஜினிகாந்த் தான் இருக்க வேண்டும் கவுண்டமணியை போட்டால் கவுண்டமணி தான் இருக்க வேண்டும்.
சாயல் கெடாமல் ஒரு ஆளுமையை படத்தில் கொண்டு வருவது என்பது மிகவும் முக்கியமான வித்தை. அந்த வித்தையை ஆணித்தரமாக தெரிந்து கொண்டவர் மிகவும் நெருக்கமாக புரிந்து கொண்டவர் ஆதிமூலம் அவர்கள்.
அல்பான்சோ கூட மனிதர்களின் முகங்களை தத்துரூபமாக வரையக்கூடிய ஒரு முக்கியமான அற்புதமான ஓவியர். ஆனால் அவர் சிறு பத்திரிக்கை எனும் இடத்திற்கு உள்ளே வரவில்லை. அவர் மேற்கத்திய பாணிஎண்ணெய் ஓவியங்களை – ஆயில் பெயிண்டிங் என்று சொல்லப்படும் எண்ணெய் ஓவியங்களை – செய்யும் வேலையில் தீவிரமாக இருந்து அரசு கவின்கலை கல்லூரியில் முதல்வராக செயல்பட்டவர். அவர் மாணவர்களுக்கு செய்து காண்பித்த பயிற்சி முக்கியமானது. சரியான பயிற்சி கொடுக்கக்கூடிய ஒரு கலை ஆசிரியருடைய அருமை அவரிடம் கற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் மாணவர்கள் செய்யும் பொழுது அதை பார்த்து பார்த்து எங்கே நுணுக்கங்கள், எங்கே வித்தைகள் வந்து விழுகின்றன என்பதை கச்சிதமாக மனதில் உணரும்படி பிடிப்பதில் மேன்மை கொண்டவர். அவரது செயல்பாடுகள், மாணவர்களின் படிப்பு முடிந்து அதை தாங்களும் செய்து பார்த்து பெரிய கலை ஆளுமைகளாக மாறுவதற்கான தருணத்தை ஒவ்வொரு கணமும் உணர்த்திக் கொண்டே இருக்கும்…