(சூஃபியும் சுஜாதையும் திரைப்படத்தை முன்வைத்து…)
– கௌதம சித்தார்த்தன்
நரக பயத்தால் நான் உன்னை வணங்கினால், என்னை நரகத்தில் எரித்துவிடு.
சொர்க்கலோக ஆசையில் உன்னை வணங்குகிறேன் எனில்,
என்னை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி வாசலை பூட்டிவிடு
ஆனால், நான் தெய்வீக அன்பிற்காக மட்டுமே உன்னை வணங்குகிறேன் என்றால்,
உன்னுடைய நித்திய அழகை எனக்கு கையளிக்க மறுக்காதே.
– ரபியா அல் பாஸ்ரி (ஈராக் – பாஸ்ரா)
கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதல் பெண் சூஃபி துறவி.
நேற்று இரவு என் வாழ்வின் கணங்களை ஒரு சூஃபி இசை சூழ்ந்திருந்தது.
அற்புதம்! மகா அற்புதம்! இப்படியான ஒரு உலகப்படத்தை கடந்த சில வருடங்களாக நான் பார்த்ததில்லை.
கடந்த வாரத்தில் வெளிவந்திருக்கும் மலையாளப்படமான “சூஃபியும் சுஜாதையும்” வெறும் சினிமா அல்ல. காவியம்!
ஒரு இந்து முஸ்லீம் காதலை எந்தவிதப் பதற்றமும், மதப்பிரச்சாரமும், ஒருபக்கச் சார்பும், சிறுபான்மையினருக்கான ஆதரவுக் குரல் என்கிற பெயரில் வலிந்து திணிக்கப்படும் கருத்துக்களும், பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல், மத, இன வெறுப்புணர்வு.. இப்படி எந்தவித ஆரவாரமுமின்றி ஒரு காவியமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
கேரளத்தில் இந்து முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு கிராமப்புறத்தன்மை கொண்ட ஒரு சிற்றூர். அங்கு நிகழும் யதார்த்தமான, தமிழ் சினிமாத்தன்மையற்ற நிஜ வாழ்வியல். அங்குள்ள ஒரு மத்திய தர உயர் சாதி இந்துக் குடும்பம், அந்த இந்துக் குடும்பத்தின் ஒரே பெண்ணான, நடனக்கலையின் மீது மிகப் பிரியமாக இருக்கும் கதக் நடனம் கற்றுத் தேர்ந்திருக்கும் வாய் பேசும் திறனற்ற சுஜாதா, அந்த ஊரில் இருக்கும் சூஃபி துறவியும் சூஃபி இசைவாசிக்கும் கிளாரினட் இசைக்கலைஞருமான கால்களை இழந்த உஸ்தாத், அவரிடம் சீடனாக இருக்கும் சூஃபி நடனக் கலைஞனும் இளந்துறவியுமான சூஃபி, அவனது சூஃபி நடனத்தின் மீது அதீத ஈர்ப்பு கொண்டு காதலாகிக் கசிந்துருகும் சுஜாதா, காதலை ஏற்றுக்கொள்ளாத இந்துக்குடும்பத்தின் ஆச்சாரம், துபாயில் வேலைபார்க்கும் ஒரு இந்துப் பையனுக்கு சுஜாதாவை மணமுடித்து வைக்கும் துயரம், தனது மனைவியின் காதலை பலவருடங்கள் கழித்து தெரிந்து கொள்ளும் ராஜீவ்.. என மிக மிக அற்புதமாக பாத்திரங்களை வார்த்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.
சூஃபிசம் என்பது இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம். இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் சூஃபிகள் என அழைக்கப்படுகின்றனர். சூஃபிகள், தாங்கள் இஹ்ஸானை (முழுமையான வணக்கம்) பயிற்சி செய்வதாக நம்புகின்றனர். “சூஃபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல்” என்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். சூஃபிசம், இஸ்லாமிய ஆன்மிகத்தில் மிக மிக முக்கியமான பங்கை வகிக்கிறது, மேலும் மேற்கில் பல்வேறு வகையான ஆன்மீகப் போக்குகளையும் பாதித்துள்ளது. சூஃபி பாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரசித்தம் பெற்றவை.
“என் ஆத்மா மண்டியிடும் இடத்தில், ஒரு கோயில், ஒரு சன்னதி, ஒரு மசூதி, ஒரு தேவாலயம் உள்ளது..” என்று பாடும், கி.பி 8 ஆம் நூற்றாண்டில் ஈராக் – பாஸ்ராவில் வாழ்ந்த முதல் பெண் சூஃபி துறவியான ரபியா அல் பாஸ்ரியின் சூஃபி பாடல்கள் எப்பொழுதும் நித்தியத்துவமானவையாகவே இருக்கின்றன. கடவுளை நேசிப்பதென்பது, சொந்த நலனுக்காகவோ, வாழ்வியல் பயத்திற்காகவோ இருக்கக்கூடாது. முழுமுற்றான தெய்வீக அன்பாக இருக்கவேண்டும் என்கிற கருத்தையும் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் இவர்.
உன் நம்பிக்கை ஒளி என் இதயத்தில் பெரும் பொக்கிஷம்
என் நாவில் உன் பெயர் மிக இனிமையான சொல்
எனது அற்புதமான கணம்
நான் உன்னுடன் கழிக்கும் பொழுதுகள் –
ஓ அல்லாஹ், உன் நினைவுகளை போற்ற வழியாற்று
உன் அன்பு பேண திசைபோற்று.
என்று அவர் பாடும் இந்த சூஃபியின் தேடலே சூஃபிசத்தின் மையம்.
ஒரு குருவைத் தேடுவதன் மூலம் ஒருவர் சூஃபிசப் பாதைக்குள் நுழைவதற்கான தகுதியை அடைகிறார். ஒரு சீடனின் தேடலுக்கான வழிகாட்டுதல்களை உணர்த்துபவராக குருவின் பாத்திரம் இன்றியமையாதது. இப்படியான பின்புலத்தில், இந்தப் படத்தின் சூஃபி இளைஞன், சூபி இசைஞரான உஸ்தாத்திடம் சீடனாகச் சேருகிறார். அங்குவரும், சுஜாதை அவனது சூஃபி நடனத்தின் லாவகத்தில் லயித்துப்போய் அவன் மீது ஈர்க்கப்படுகிறாள். சுழன்றடித்தாடும் அந்த தாள கதியின் லயம் சற்றே பிசக, அவன் மார்பில் அவள் சாய,
பெரும் சூஃபி துறவியும், உலகப் புகழ்பெற்ற பாரசீகக் கவிஞருமான ரூமியின் பாடல் ஒவ்வொரு பார்வையாளனுக்குள்ளும் ஒலிக்கும் விந்தை அங்கு நிகழ்கிறது.
என் இயல்புடன் இயைந்த ஒருத்தியுடன்
நான் உதடு பொருத்த முடியுமாயின்,
நானும் புல்லங்குழலைப்போல்
சொல்லக்கூடிய அனைத்தையும் சொல்லிவிடுவேன்.
சூஃபி நடனம் என்பது மிக மிக அற்புதம் கூடிய அழகியல் ததும்பும் ஒரு பிரபஞ்சச் சுழல்வு.
(சூஃபி நடனத்தில் முக்கியத்துவம் பெறுவது இந்தச் சுழல்வுதான். அடிப்படையில் நானும் ஒரு சூஃபி நடனமாடுபவன்தான். நான் இந்தச் சுழற்சியை ஒரு Labyrinth ஆகப் பார்க்கிறேன். என் எழுத்து சார்ந்த நிகழ்வில், நான் ஆடும் சூஃபி நடனம் ஒரு பெரும் Labyrinth ஆக மாறுவது தனிக்கதை.)
இந்த சூஃபி நடனக்காரர்களை ‘whirling dervishes’ – ‘சுழல் தர்வீஷ்கள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். தர்வீஷ் என்பது சூஃபி பாதையைத் தொடங்குபவருக்கான பொதுவான சொல்; ஒரு தர்வீஷ் சுழல்கையில், அவரது கைகள், வலது கையால் வானத்தை நோக்கித் திறக்கப்பட்டுள்ளன, இது கடவுளின் நன்மையைப் பெறுவதற்கான நிலையைக் குறிக்கிறது. எளிய மாந்தர்களுக்கு கடவுளின் எல்லையற்ற அன்பை வழங்குவதற்கான வகையில், தர்வீஷின் இடது கை பூமியை நோக்கித் திரும்புகிறது. தனது சொந்த இதயத்தைச் சுற்றி வலமிருந்து இடமாகச் சுழலும் அதே வேளையில், மனிதர்கள் அனைவரையும் அன்போடு ஏற்றுக்கொள்கிறார்கள் என்னும் தன்மையாகிறது.
இந்த சூஃபி நடனக்காரனை ஒரு கதக் நடனக்காரி பிரேமிப்பது எப்படித் தவறாகும்?
நடனக்கலையின் மீது அளவற்ற காதல் கொண்டு அந்தக்கலையை கற்றுத் தேர்ந்துள்ள வாய் பேசும் திறனற்ற ஒரு பெண்ணுக்கு, அவளது கண்முன்னால் இன்னொரு நடனவகையை நிகழ்த்தும் உடல் மீது கிளர்ச்சி ஏற்படுவது ஒரு ஆன்மிகத்தன்மை கொண்ட தரிசனம். அதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். தமிழ் சினிமாவில் காட்டப்படும் உடல் பாலியல் கிளர்ச்சி பூர்வமான காட்சிகள் ஏதும் இல்லாமல், ஒரு அற்புதமான இறைத்தன்மையின் அழகியலை நெகிழ்த்தியிருக்கிறார்.
தனது கால் பாதத்தின் பந்தில் நிலம் ஊன்றி, உடலின் கிடைமட்டம் அதன் செங்குத்தான அச்சில் சமன் பெற்று இயங்கும் பிரபஞ்சத்தின் ஒரு லய அசைவு, அவனது கால் கட்டை விரலின் உந்துதலில் ஒரு பந்தாக மாறிச் சுழலும் அற்புதத்தை கண்கள் விரியப் பார்த்துக்கொண்டே நிற்கிறாள் அவள். காலம் ஒரு கணம் சமைய, அந்தச் சுழல்வில் கதக்கும், சூஃபியும் இணைந்து ஒரு அன்பு கெழுமிய பிரபஞ்சத்தை இதுவரை அனுபவித்தறியாத ஒரு சுழல்வாய் நிகழ்த்திப் பார்க்கிறாள் சுஜாதா.
இந்து பக்தி இயக்கத்தின் முக்கிய நடனமான ராதா கிருஷ்ண காவியமாக இயங்கும் கதக்கின் அடவுகளை, ராதாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையிலான காதல், ஆன்மாவுக்கும் பிரபஞ்ச வெளிக்கும் இடையேயான அன்பின் அடையாளமாக மாறும் தருணங்களை, வேறொரு பரிமாணத்தில் சுழட்டிப்பார்க்கிறது கதாகம்.
இந்துக்களின் செவ்வியல் நடனமான கதக்கை, முஸ்லீம் கலாச்சாரத்துடன் இணைந்த, தங்களது கரானா என்னும் நீதிசபைகளிலும் நிகழ்த்தும் நடனமாக மாற்றிய, இந்து முஸ்லீம் இசை தொடர்பான இந்து முஸ்லீம் கலை இலக்கியங்களின் தீராத பக்கங்களில் எழுதிக் காட்டுகிறது காலம்.
அந்த நடன இயக்கத்தை, சிரசில் நிலத்தை வைத்து உடலை சுழற்றி வளைத்து திகிரியாய்ச் சுழலும் அச்சுபாரத்தில், பிரபஞ்சம் கெழுமிய அன்பை வனைந்து பார்க்கிறது எல்லையற்ற கலை.
கதக், இந்திய முஸ்லீம் சமூகத்தினரிடையே நடைமுறைப்படுத்தப்படுவதில் தனித்துவமானதும், இஸ்லாத்துடன் வரலாற்று தொடர்பு உள்ளதுமான நடனவகையாகத் திகழ்கிறது, எனவே இந்த நடனக்கலையை, “இந்து மற்றும் முஸ்லீம் கலாச்சாரங்களின் சங்கமம்” என்று தேடிக்காட்டுகிறது ஆய்வளம்.
19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் காலனித்துவ பிரிட்டிஷ் ஆட்சி பரவியதால், கதக் மற்றும் பிற அனைத்து செவ்வியல் நடன வடிவங்களும் அடக்குமுறைக்கு உள்ளாகின. கதக் நடனக் கலைஞர்கள், பண்டைய இந்தியக் கதைகளையும் இந்து புனைவுகளையும் மறந்துவிட வேண்டும் என்றும் அவற்றை ஐரோப்பிய புராணக்கதைகள் மற்றும் கிறிஸ்தவ கதைகளுடன் மாற்ற வேண்டும் என்றும் அவர்களால் முன்மொழியப்பட்டது என்று தூசிகளை ஊதிக் காட்டுகிறது ஆவணம்.
இந்துக் குடும்பங்கள் ரகசியமாக, கதக் கலையை தங்களது தனிப்பட்ட பயிற்சியாகத் தொடர்ந்தன. மேலும், அக் கலையை வாய்வழி பாரம்பரியமாக உயிரோடு வைத்திருந்தன. கதக் மறுமலர்ச்சி இயக்கங்கள் முஸ்லீம் மற்றும் இந்து கரானாக்களில், இணைந்து உருவாக்கப்பட்டு, அந்த பழம்பெரும் மரபைப் பேணிக்காத்தன என்று எழுதிக் காட்டுகிறது வரலாறு.
சூரியனைத் தலையிலும் சந்திரனைத் தோளிலும் ஏந்தியிருக்கும் நிலத்தின் மீது சதுரங்கப்பலகையாய் விரிந்து கிடக்கும் கட்டங்களில் காய்களாக மாற்றப்படும் மனித உயிரியை, மதம், மொழி, இனம் என்று இடை வெட்டிக் காட்டுகிறது காய்கள் நகர்த்தும் அரசியல்.
நாகரிகமும் நவீன இணையத் தொழில் நுட்பமும் பின்னிய வலையில் வசீகரமாய் மாட்டிக்கொண்ட நிலத்தை வெட்டிக் கூறுபோட்டுப் பார்க்கின்றன தற்கால ஊடகங்கள்.
முன்பொரு காலத்தில் வாழ்ந்த கால்களற்ற ஆலாப் பறவையின் கதை தெரியுமா உங்களுக்கு? அது எப்போதும் ஓய்வின்றி ஆகாசவெளியில் வட்டமிட்டுப் பறந்துகொண்டேயிருக்கும். ஓயாத சுழல்வில் அசையும் றெக்கைகளின் சிறகுகள் உதிர்ந்து உதிர்ந்து நிலவெளி முழுக்கப் படர்ந்து காற்றின் பாடலை வாசிக்கும் தருணத்தில், தர்வீஷ் என்னும் பெயர் கொண்ட மனிதன் அந்த சிறகுகளின் சுழற்சியோடு தானும் சுழன்று சுழன்று, அந்தரவெளியில் கடைந்து கடைந்து ஆனந்தக்கூத்தாடும் நிகழ்போதொன்றில், ஆலா நிலம் இறங்குகிறது. தர்வீஷின் தோள்கள் தழுவி, கரங்கள் அணைந்து, முகமெங்கும் அளைந்து, அவன் சிரம் மேல் தாவிப் படர்ந்து கால்களற்ற தன் உடலை அமர்த்துகிறது. இரு உடல்களும் இணைந்து களிக்கும் கூத்தில் எல்லையற்ற தாண்டவம் சுற்றிச் சுழலும் பிரபஞ்சச் சுழற்சியில், அவன் தலைமீது கவிழ்ந்திருந்த பறவை ஒரு பாதுகையாக, நீள்வெளித் தொப்பியாக மாற்றிப் போடுகிறது பல்லாயிரம் காலடிகளைக் கொண்ட தொன்மம்.
அவர்கள் இருவரையும் இணைத்து மகத்தான காவியத்தை உருவாக்கிப் பார்க்க விழைகிறது எல்லையற்ற பிரபஞ்சம்.
இப்படியான வரலாற்றுப் பேரற்புதம் கொண்ட ஒரு படம் குறித்து, எந்த ஒரு ஊடகமும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழ் 2 ஸ்டார் கொடுத்துள்ளது எவ்வளவு பெரிய மடத்தனம்.
அந்த மடத்தனம் மேலும் தொடர்கிறது, தி வீக் இதழில் ஒரு விமர்சகர் எழுதுகிறார்: “திரைக்கதை எழுத்தாளராகவும் இருக்கும் இயக்குனர் ஷானவாஸ், அவரது கதாபாத்திரங்களுக்கு ஆழமான தன்மையை உருவாக்கத் தவறிவிட்டார்.”
இதுதான் மடத்தனத்தின் எல்லை.. கதாபாத்திரங்களுக்கு ஆழமும் அகலமும், நீளமும் சதுரமும், செவ்வகமும் சேர்ப்பதென்பது தேடல் ஈடுபாடற்ற வெகுஜன ரசனையின் எதிர்பார்ப்பு. எல்லாவற்றையும் தொகுத்து பைண்டிங் செய்து, உரித்து தனது மண்டையின் உள்ளே போடவேண்டும் என்று எதிர்பார்க்கும் மிலேச்சத்தனத்தின் வாழைப்பழ ரசனை. ஒரு காட்சி பார்வையாளனின் கண்முன் நிகழும்போது, ஒரு பெரும் வரலாறும், சமூக வாழ்வியலும் அவன் அகக்கண்களில் திறக்கப்பட வேண்டும்.
உலகப்புகழ் பெற்ற பிரெஞ்சு இயக்குனர் லூயி புனுவலின் An Andalusian Dog படத்தின் முதல் காட்சியே “ஒரு சவரக்கத்தியை கொண்டு ஒரு கண்ணை குறுக்கு வாட்டில் வெட்டுவது” போன்ற காட்சிதான். இதன்மூலம் அவர் சொல்ல வருவது, உங்கள் புறக் கண்களுக்குப் புலனாகும் விஷயங்கள் (visible) முக்கியமில்லை. அகக் கண்களுக்குப் புலனாகும் விஷயங்களே (invisible) முக்கியானமானவை என்று பார்வையாளனுக்கு உணர்த்துகிறார், 1929 -லேயே.
கதாபாத்திரங்களில் ஆழம் இல்லை, வாய் பேசமுடியாத நாயகி அதற்குரிய தன்மையோடு நடிக்கவில்லை.. என்று உளறியிருக்கும் இந்த விமர்சனப் போக்கு, cliche தன்மை கொண்ட அரதப்பழசு. மாற்றுப்பார்வைகளும் பின்நவீனத்துவங்களும் சர்வதேச சமூகச் சூழலை மாற்றிப்போட்டிருக்கும் தற்காலத்தில், இப்படி ஜல்லி அடிக்க ஆங்கிலத்தில் எழுதும் திறன் கொண்ட பல மகானுபாவர்கள் இருப்பது பிளாக் காமெடி.
அந்த பிளாக் காமெடியின் உச்சமாக ஒரு வடஇந்திய விமர்சகர் சொல்லும் காட்சி :
சுஜாதாவின் அப்பா, உஸ்தாத்திடம் போகிறார் ..’ஏனய்யா, தாயா புள்ளையா நாம பழகினோம்னுதானே.. உங்களை நம்பி என் புள்ளையை அனுப்பினேன்.. ஆனா, நான் வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் பண்ணீட்டீங்களே..’ என்பது போல நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று கோபமாகப் போகிறார். ஆவேசமாக உஸ்தாத்தோடு பேசுகிறார். அவர்களது காதல் செய்தி தெரியாததால் உஸ்தாத்துக்கு எதுவும் புரிவதில்லை.
“அவள் ஏதும் தெரியாதவள்.. அவளைக் கொண்டு நீங்கள் ஜிகாத் உண்டாக்கப் பார்க்கிறீர்கள்..” என்கிறார் அப்பா.
“எனக்கு புரிகின்ற விதத்தில் சொல்லுங்கள்..” என்கிறார் உஸ்தாத்.
இதை படித்துப்பாருங்கள் என்று காதலர்கள் இருவரும் எழுதிய டைரியை உஸ்தாத்திடம் கொடுக்கிறார்.
அதைப்படித்தவுடன் அதிர்ச்சி அடைகிறார் உஸ்தாத்.
“நீங்களும் உங்கள் கூட்டமும் சேர்ந்து என் பொண்ணை ஏமாற்றி மனசை கெடுத்து மதம் மாற்றப் பாக்குறீங்களா?” என்கிறார் ஆவேசமாக.
ஒருநிமிடம் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, “மதம் குறித்தெல்லாம் பல்வேறு அபிப்ராயங்கள் இருக்கின்றன.. அது அவரவர் தனிப்பட்ட விஷயம்.. மற்றபடி, நீங்கள் ஜிகாத் என்கிறீர்கள்.. அதென்ன என்று எனக்குப் புரியவில்லை..” என்று வாஸ்தவமாகப் பேசுகிறார் உஸ்தாத்.
“எனக்குத்தெரியும்..உங்களோட கூட்டம் உண்டாக்கியிருக்கிற யுத்தம்..”
சரேலென கோபம் மண்டையில் ஏறுகிறது உஸ்தாத்துக்கு.
“இப்படி ஒரு வெறுப்பை உன் மனசிலே வைத்திருக்கிறாய்.. இங்கிருந்து வெளியே போ” என்கிறார் உஸ்தாத்.
கடுமையான வெறுப்புடன் வெளியேறுகிறார் அப்பா.
// படத்தில் வரும் இந்தக் காட்சியை முன்வைத்து “லவ் ஜிகாத்” என்னும் சொல் குறித்து இன்னும் விரிவாகப் பேசியிருக்க வேண்டும். அப்படி விரிவான உரையாடல் காட்சிகளாக நீண்டிருந்தால், மிகவும் முக்கியமான படமாக மாறியிருக்கும்.. // என்கிறார் அந்த வடஇந்திய விமர்சகர்.
சுஜாதாவின் அப்பா, ஜிகாத் குறித்து முன்முடிவான அனுமானங்களோடு இருக்கிறார். ஊடகங்களும், சர்வதேச அரசியலும் கட்டமைத்திருக்கும் பொதுப்புத்தியின் நீட்சியில் உறைந்துபோயிருக்கும் அவரிடம் ஏதும் பேசிப் பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வரும் உஸ்தாதின் பாத்திரம் மிக அழகியலான தன் பாத்திரவார்ப்புக்கே உரித்தான தன்மையில் பேசியிருக்கிறது.
இந்தப்படத்தின் இயக்குனர் முஸ்லீம். நாரானிபுழா ஷானவாஸ். அவர், இந்த இடத்தில், ‘இஸ்லாம் சொல்லும் ஜிகாத் வேறு, ஊடகங்களும் அரசியலும் உருவாக்கிய லவ் ஜிகாத் என்னும் சொல் வேறு. இரண்டு சொற்கள் கொண்டுள்ள இந்த வார்த்தையை, ஒருபோதும் ஒரே சொல்லாக இணைத்து பயன்படுத்தக்கூடாது..’ என்றெல்லாம் விரிவான உரையாடலை வைத்திருக்கலாம். இப்படிப் பல்வேறு இடங்களில் தனது மதம் சார்ந்த கருத்துக்களை சொருகியிருக்கலாம். ஆனால், ஒருபோதும் அவர் அப்படிச் செய்யவில்லை.
அதுமட்டுமல்லாது, ஒரு இடத்தில் கூட, படத்தில் வரும் நாயகனான சூஃபியின் நிலையை ஆதரிப்பதோ, மதப் பிரச்சாரங்களோ (ஓப்பனாகவோ, கலாபூர்வமாகவோ) பல்லைக் காட்டவே இல்லை. இந்த இடத்தில் தற்கால தமிழ் சினிமா ஞாபகம் வந்து தொலைக்கிறது.
ஒருவேளை வடஇந்திய மண்ணிலிருந்து அப்படியான விமர்சனப்பார்வைதான் முன்வருமோ? சமூக வாழ்வியல் பரிமாணத்தின் ஒவ்வொரு பார்வையையும், ஒவ்வொரு மண்ணின் தன்மை தீர்மானிக்கிறது என்றெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் கூட, சிற்சில தருணங்களில் நிகழ்கின்ற எண்ணங்கள் இவ்வாறு யோசிக்க வைத்து விடுகின்றன.
இப்படியான ஒரு படம் தமிழ் மண்ணில் சாத்தியமா? என்று யோசித்துப் பார்க்கிறேன்.
ஒரு காலத்தில் (1970 – 80) தமிழ் இலக்கியச் சூழலில் வெறுமனே தட்டையான பார்வை கொண்ட கரிசல் கதைகளே, யதார்த்தக்கதைகளே, நவீன இலக்கியங்களாக வலம் வந்து கொண்டிருந்த சூழலில் தமிழுக்குள் நுழைந்த ” சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்” என்னும் மொழியாக்கத் தொகுப்பு பெரும் மாற்றம் உருவாக அடிகோலியது. தமிழின் நவீனத்துவத்தை பல்வேறு பரிமாணங்களை நோக்கி நகர்த்தியதில் இத்தொகுப்பும், மலையாள நவீன இலக்கியமும் முதன்மையாக விளங்கியது. அப்படியான தேடுதல் வீச்சும், உலகளாவிய பார்வையை சுவீகரித்து நவீனத்துவத்தை நோக்கிய பார்வையுடனான நகர்வும் கொண்ட மண் மலையாளம்.
தமிழில் கடந்த 30 வருடங்களாக இஸ்லாமிய வாழ்வை நிதர்சனமாக, யதார்த்தமாக (கே எஸ் கோபால கிருஷ்ணன், கே பாலச்சந்தர் பாணி போல) முன்வைத்த ஒரு படம் கூட வரவில்லை. (சமீபத்தில் வந்திருக்கும் நஸீர் படம் நான் இன்னும் பார்க்கவில்லை) தமிழின் திரைப்படப்போக்கு கடந்த பல வருடங்களாகவே சாதி என்கிற சமூக வாழ்வியலில் மாட்டிக்கொண்டது.
2000 களின் துவக்கத்திலிருந்தே ஒரே வெட்டுக் குத்துதான். மதுரை, திருநெல்வேலி போன்ற மண்ணை முன்வைத்து, மிகப்பெரிய வன்முறைப்படங்களை உருவாக்கினார்கள். நீண்ட வீச்சருவாள்கள் கொண்ட நாயகர்களைக் கொண்டாடினார்கள். ஒவ்வொரு பிரேமும் ரத்தம் பீறிட்டடித்துக் கொண்டேயிருந்தது. இதை ஊடகங்களில் இருந்த அந்தந்த ஊர்க்காரர்கள் மகத்தான படங்கள் என்று எழுதிக் கொண்டாடினார்கள். இன்றைக்கு சாத்தான் குளத்தில் நடந்தேறிய அவலங்களுக்கு, தமிழ் சினிமாவின் பங்கு பெரியளவில் உண்டு என்பதை மறுக்க முடியாது.
இந்த வீச்சருவாள்களும், வன்முறை வெறியாட்டமும், பீறிட்டடிக்கும் ரத்தமும், மெல்ல மெல்ல வெறியேறி, தற்காலத்தில் சாதியக் கதைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. சாதி, சாதி, சாதி.. என்று சாதிப்படங்கள் பல்கிப்பெருகிக் கொண்டிருக்கின்றன. இது போக வந்தேறி, மண்ணின் மைந்தன்கள் வகைப்படங்கள் தனியாவர்த்தனம். இந்தச் சந்தடியில் கலையாவது, பொடலங்காயாவது..
தமிழ்ச் சமூகத்தில் சாதியின் பங்கை நான் குறித்து மதிப்பிடவில்லை. சாதிய வன்மம் இன்றளவிலும் மிகக் கொடூரமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்பது நிராகரிக்க முடியாத நிஜம். சாதியப்படிநிலைகளின் வெறிக்கூத்து கோரத்தாண்டவமாடுகிறதென்பது கண்கூடான உண்மை. ஆனால், தமிழ் சினிமாக்காரர்கள் முன்வைக்கும் தட்டையான, ஒற்றைப்பார்வைகொண்ட, செய்திப்பத்திரிக்கை தன்மையை நான் விமர்சனத்துக்குள்ளாக்குகிறேன். இனிப்பும் கசப்பும் இரண்டறக்கலந்த சமூக வாழ்வியலின் அழகியலைக் கடாசித் தள்ளி விட்டு, சாதியப் பிரச்சாரத்தை உரத்து ஒலிக்கும் மொக்கையான படங்களை, சாதிய ஆதிக்கத்தை ரொமாண்டிசைஸ் பண்ணும் உயர்வு நவிற்சிப் படங்களை நான் முற்றாக நிராகரிக்கிறேன். எந்தவித கலாரசனையோ, திரைமொழி அழகியலோ, நவீனத்துவச் சிந்தனையோட்டமோ எதுவும் இன்றி வெறுமனே சாதியை முன்வைத்து படங்கள் வெளிவருகின்றன. இணைய வளர்ச்சி கூடிய தற்காலச் சூழலில் அவை மா பெரும் உலகப் படங்களாக அந்தந்த சாதிய ஆர்வலர்களால் கொண்டாடப்படுகின்றன. கலை, திரைமொழி, திரை அழகியல்.. போன்ற சொற்கள் மறைந்தே போய்விட்டன. “அதென்ன பெரீய்ய்ய கலய்ப்படம், ஒலகப்படம்.. அப்பிடியெல்லாம் ஒன்னும் கெடையாது. நல்ல படம்.. மோசமான படம் அவ்ளவ்தான்..” என்று கருத்து முத்துக்களை உதிர்க்கிறார்கள் கந்தசாமிகள். இதன் அடியொற்றி, மகத்தான விமர்சனக் கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள் தமிழ் சினிமா விமர்சன மேதைகள்.
தனது கணவன் இல்லாத சமயம், தனது முன்னாள் காதலனை வீட்டிற்கு அழைத்து அவனோடு உடலுறவு வைத்துக்கொள்ளும் நாயகி, அந்த உடலுறவின் போது இறந்துபோகும் காதலன், அந்த உடலை அப்புறப்படுத்த தனது கணவனோடு இணைந்து போராடும் நாயகியின் கதை கொண்ட புர்ர்ரட்சிப் படத்தை உலகக் காவியம் என்று பாராட்டப்பட்ட அவலமும் நடந்தேறியது. (சூஃபியும் சுஜாதாவும் படத்தில் தனது மனைவிக்கு ஒரு காதலன் இருந்திருக்கிறான் என்பதை அறியும்போது கணவன் படும் துயர், அந்தக் காதலன் இறந்துவிட்டான் என்றதும், மனைவியை அழைத்துக்கொண்டு துபாயிலிருந்து கேரளா வருகிற பதட்டம் மிகு பயணம்.. அற்புதம்! இந்தக்காட்சி அமைப்புகளுக்குப் பெயர்தானய்யா கலைத்துவம்!)
அது மட்டுமல்லாது, சமீபகாலமாக இன்னொரு கேனத்தனமும் தமிழ் சினிமாவில் கட்டமைக்கப்படுகிறது. குறியீடு. எதற்கெடுத்தாலும் குறியீடுகள். படம் எடுக்கும்போது ஒரு நாய் குறுக்கே வந்துவிட்டால், ஒரு சீன் பியூட்டிக்காக, அந்த நாய் காட்சியை வெட்டாமல் அப்படியே விட்டு விட்டால், அது மாபெரும் குறியீடாகிவிடுகிறது. இப்படியாக குறியீட்டுக் கோமாளித்தனங்கள் விமர்சன மேதைகளால் முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமாவுக்கு விமோசனமே இல்லை.
இந்தச் சந்தடியில், இஸ்லாம் வாழ்வியலை முன்வைத்து, கடந்த 30 வருடங்களாக, தமிழில் ஒரு படம் கூட உருவாகவில்லை என்பது மகத்தான துயரம். உலகின் மாபெரும் காவியங்களையும், காலத்தால் அழிபடாத இதிகாசங்களையும், கதை கவிதைகளையும், மகத்தான கலை இலக்கியங்களையும் உலகுக்குப் பெரும் கொடையாக வழங்கிய இஸ்லாமிய வாழ்வியலிலிருந்து ஒரே ஒரு படம் கூட தமிழ் என்னும் செம்மொழியில் வெளிவரவில்லை என்பது சொல்லில் அடைபடமுடியாத துயரம்.
இஸ்லாம் மதத்தினரின் தற்கால நவீன வாழ்வியல் பல்வேறு அரசியல் சிக்கல்களையும், சமூகத்தில் எதிர்கொள்ளும் அடையாள அரசியல்களையும், அவர்களது சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களையும் அதில் நெகிழும் சிறுசிறு அழகியல், துயரம், காதல், சோகம், தொன்மம், வரலாறு.. போன்ற நானாவித வாழ்வியல் துண்டுகளையும் மகத்தான காவியங்களாக முன்வைக்கும் தன்மை எவரிடமும் இல்லை. அதைவிடவும், திரைத்துறையில் செயல்படும் இஸ்லாம் இளைஞர்கள்கூட இந்து மதம் சார்ந்த கதைக்களனையே தேர்கிறார்கள். காரணம், இதற்கு முன்னால் நடந்த பல்வேறு கசப்பான சம்பவங்கள்.
இன்னும் 10 வருடம் கழித்து தமிழின் கலை, இலக்கியம், மொழி, அரசியல் வரலாற்றை எழுதும்போது இஸ்லாம் வாழ்வியல் வெறுமையாக இருக்கும் என்பது பெரும் துயரம்.
ஆனால், மலையாளம் மகத்தான காவியங்களை முன்வைத்து இஸ்லாம் வாழ்வியலுக்கு பெருமை சேர்க்கும்.
அண்டை வீடான தமிழ் சினிமாவின் பாதிப்பில், பாப்புலர் தன்மைகளை நோக்கிக் காலெடுத்து வைத்துக்கொண்டிருக்கும் தற்போதைய மலையாளத் திரைப்படச் சூழலில், மீண்டும் அந்தப்பாதையை கலாபூர்வமான நவீனத்துவ வாழ்வியலை நோக்கி மலையாள சினிமாவை திசை திருப்பும் முயற்சியாக இந்தப்படத்தைக் கருதலாம்.
இந்தப்படம் தற்போதைய பேரிடர்ச் சூழலில் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளிவந்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது. உலகளாவிய கலைப்பட ரசனையாளர்களின் பார்வைக்கு விரைவில் போய்ச் சேருவதாகவும், விருது பூர்வமான தேர்வுக்குழுவினரின் கைகளில் எந்தவித லாபியுமற்று சென்றடையும் என்பதிலும் பெரு மகிழ்வு கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாது, OTT தளத்திற்கு மலையாள சினிமாத்துறையிலிருந்து முதன்முதலாக போய்ச் சேர்ந்த படம் இது. இதன் தரம் குறித்து அறிந்து கொள்ளும், அந்த தளத்தின் நிர்வாகிகளுக்கும், அமைப்பாளர்களுக்கும் இந்தப்படம் சார்ந்த மொழி மீதும் பெரும் மரியாதையும், நம்பிக்கையும் பன்மடங்கு கூடும். வியாபாரமும் மிகவும் உத்வேகமாக நடக்கும்.
நம் தமிழிலிருந்து அனுப்பி வைத்த முதல் படம் குறித்து நான் எதுவும் எழுத முடியாது. நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
*****************