- தமிழில் : கௌதம சித்தார்த்தன்
நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் பிறந்த வானத்தை நினைவில் கொள்ளுங்கள்,
நட்சத்திரங்களின் ஒவ்வொரு கதையையும் அறிந்து கொள்ளுங்கள்.
சந்திரனை நினைவில் வையுங்கள், அவள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
விடியற்காலையில் தோன்றும் சூரிய ஜனனத்தை நினைவில் வையுங்கள்,
அதுதான் காலத்தின் வலுவான புள்ளி.
சூரிய அஸ்தமனத்தையும் நினைவில் கொள்ளுங்கள்
மற்றும், இரவு கொடுக்கும் நினைவுகளையும்.
உங்கள் பிறப்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் தாய் எப்படிப் போராடினார்
உங்களுக்கு வடிவம் மற்றும் சுவாசம் கொடுக்க.
அவளுடைய வாழ்க்கையின் ஆதாரம் நீங்கள்.
அவளுடைய தாய்க்கும், அவளுக்கும்.
உங்கள் தந்தையை நினைவில் கொள்ளுங்கள். அவரும் உங்கள் வாழ்க்கை.
இந்த பூமிக்கு நீங்கள் யாருடைய தோலாக இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்:
சிவப்பு பூமி, கருப்பு பூமி, மஞ்சள் பூமி, வெள்ளை பூமி
பழுப்பு பூமி, நாங்கள் பூமி.
தாவரங்கள், மரங்கள், விலங்கு வாழ்க்கை அனைத்தையும் நினைவில் கொள்ளுங்கள்
பழங்குடியினர், அவர்களது குடும்பங்கள்,
அவர்களின் வரலாறுகளையும்.
அவர்களிடம் பேசுங்கள்,
அவர்களை கவனியுங்கள். அவை உயிருள்ள கவிதைகள்.
காற்றை நினைவில் கொள்ளுங்கள். அவள் குரலை நினைவில் கொள்ளுங்கள். அவளுக்குத் தெரியும்
இந்த பிரபஞ்சத்தின் தோற்றம்.
நீங்கள் எல்லோரும் எல்லா வித மக்களும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் இந்த பிரபஞ்சத்தையும் மற்றும் இந்த பிரபஞ்சமும் நீங்கள் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
எல்லாம் இந்த அசைவியக்கத்தில் உள்ளது, வளர்ந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள் மொழி இதிலிருந்து வருகிறது.
மேலும், வாழ்க்கை என்பது இந்த நடன மொழி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள்.
***
கழுகு கவிதை
வானத்திற்கும் பூமிக்கும், சூரிய சந்திரனுக்குமாய்
உன்னை முழுமையாக ஒப்புவித்த பிரார்த்தனையில்
எதிரொலிப்பது உன் முழுமையான குரல்.
ஆனால், நீ பார்க்க முடியாத, கேட்க முடியாத
பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன
அசையாத பொழுதுகள் சுழலும் இயக்கத்தில்
எப்போதும் ஒலிக்காத மொழியின் குரலை
நீ அறிய முடியாது.
அந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் கழுகாக
உப்பு நதியின் மீதாக, நீல வானில் வட்டமிட்டாய்
காற்றின் புனிதச் சிறகுகளால் எம் இதயங்களை
சுத்தமாகத் துடைத்தபடி.
நாங்கள் உன்னைப் பார்க்கிறோம்
எங்களையும் பார்க்கிறோம் எல்லாவற்றிலும் நாங்கள் கைக்கொள்ளவேண்டிய
மிகுந்த அக்கறையையும் அன்பையும் அறிகிறோம்.
ஆசுவாசம் கொள். இந்த உருவாக்கத்தை அறிந்து
ஆனந்தமாக விச்ராந்தியாக விரிந்து சுவாசி
நாங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஏனெனில், நாங்கள் பிறந்தோம், விரைவில் இறந்துவிடுவோம் என்பதான
இயக்கத்தின் சுழற்சியானது
காலைப் பொழுதில் வட்டமிடும் உன் சிறகு விரித்தலாக
எங்களுக்குள் அளைவுறுகிறது.
நாங்கள் பிரார்த்திக்கிறோம், அது நிகழவேண்டும்,
அழகுடன்,
நேர்த்தியுடன்.
***
தீ
ஒரு பெண் உயிர்வாழ முடியாது
அவளுடைய சொந்த மூச்சினால் மட்டுமே
தனியாக
அவள் அறிந்திருக்க வேண்டும்
மலைகளின் குரல்களை
அவள் அங்கீகரிக்க வேண்டும்
நீல வானின் நித்தியத்தை
அவள் அளைவுற வேண்டும்
இரவுக் காற்றில் நழுவும் உடல்களுடன்
யார் அவளை அழைத்துச் செல்வர்
தன்னுள்.
என்னைப் பார்
நான் ஒரு தனியான பெண் அல்ல
நான் நீல வானத்தின் தொடர்ச்சி
நான் மலைகளின் குரல்வளை
அவள் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சிலும்
எரியும்
ஒரு இரவுக் காற்று.
***
இந்தக் காலைப்பொழுதை என் எதிரிகளுக்காக பிரார்த்திக்கிறேன்
என் எதிரி என்று நான் யாரை அழைப்பது?
ஒரு எதிரி என்பவர் அர்ப்பணிப்புக்கு தகுதியானவராக இருக்க வேண்டும்.
நான் சூரியனின் திசையில் திரும்பி நடக்கிறேன்.
இது கேள்வி கேட்கும் இதயம், என் கோபமான மனம் அல்ல.
இதயம் சூரியனின் மிகச்சிறிய உறவினர்.
இது எல்லாவற்றையும் பார்க்கிறது மேலும் அறிந்து வைத்திருக்கிறது
இது ஆசீர்வாதத்தைக் கேட்பது போலவே வெறுப்பையும் கேட்கிறது.
மனதின் கதவு இதயத்திலிருந்து மட்டுமே திறக்கப்பட வேண்டும்.
உள்ளே நுழையும் ஒரு எதிரி, நண்பனாகும் அபாயத்தை எதிர்கொள்கிறார்.
***
பூர்வ குடி அமெரிக்கக் கவிஞரான ஜாய் ஹார்ஜோ (1951 – ) புகழ்பெற்ற கவிஞர், இசைக்கலைஞர் மற்றும் எழுத்தாளர். அமெரிக்காவின் முதல் பூர்வீக அமெரிக்க கவிஞர் பரிசு பெற்றவரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலக்கிய பூர்வீக அமெரிக்க மறுமலர்ச்சியின் இரண்டாவது அலைகளில் அவர் ஒரு முக்கியமான ஆளுமையாக உள்ளார். புத்தகங்கள் மற்றும் பிற வெளியீடுகளை எழுதுவதோடு மட்டுமல்லாமல், பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படைப்பு கல்வியையும் கற்பிக்கிறார்.. கவிதை வாசிப்பு மற்றும் இசை நிகழ்வுகளை நிகழ்த்துகிறார், மேலும் அவரது அசல் இசையின் ஐந்து ஆல்பங்கள் உட்பட கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். பல்வேறு படைப்பு விருதுகளை பெற்றிருக்கும் இவர், 2019 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசவைக்கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
******