- கௌதம சித்தார்த்தன்
தன்னாசிக் கருப்பராயனைப் பார்த்து தவசிச் சிலம்பன் சொல்கிறான்:
“தன்னாசி… பிறந்தநாள் என்று எதைக் கருதுகிறாய் நீ?
உன் உடல் முதன்முதலாக இந்த நிலத்தில் வந்து விழுந்த கணத்தையா? குழந்தை பிறந்த உடன் நமது குலத்தலைவரான உடும்புத்தலைக்கோசர் தனது அறவாளினால் அதன் தொப்புள் கொடியை அறுத்துக் கொடுக்கும் கணத்தையா?
குழந்தைகள் வளர வளர ஒவ்வொரு பௌர்ணமியன்றும் வம்சாவளிக்கதைகள் சொல்ல முப்பாட்டுக்காரியான பெருக்காத்திப் பாட்டி வருவாளே. அவள் முடிந்து வைத்திருக்கும் சுருக்குப் பையில் இனித்துக் கிடக்கும் தின்பண்டங்களுடன் அற்புதமான கதைகளும் கலகலத்துக் கொண்டிருக்குமே கதைகளிடையே பல்வேறு அடுக்குகளில் அன்பு, அறம், அதிகாரம் என்ற முப்பாட்டுக்களை வைத்து கதை நடத்தும் பாங்கில் குழந்தை நிலையிலிருந்து பதின் பருவ நிலைக்கு மாறுகின்ற தருணத்தையா?
ஒன்பது வயது நிறைந்த உடன் நமது பாரம்பரிய வாள்வீச்சில் ஈடுபடுவாயே…
இரு கைகளிலும் இரு கத்திகளை ஏந்திக் கொண்டு ஒரு லாவகமான ஒழுங்கசைவில் அந்த வாட்கள் நடனமாடுமே… கத்திகள் இடசாரி வலசாரியாகவும் வலசாரி இடசாரியாகவும் வாட்டணையாய் விளையாடும் திருகு வீச்சில், இரு வாட்கள் நான்காகவும், நான்கு எட்டாகவும், எட்டு பதினாறாகவும் மாறும்போது குழந்தைகளின் வளரிளம் பருவம் மாறி மாறி நெஞ்சுரம் மிக்க இளைஞனாக உருமாற்றம் அடையும் அந்தத் தருணத்தையா?
பத்தொன்பது வயதில் அந்த நடனத்தின் ஆனந்த லயம் மெல்ல மெல்லச் சீற்றமடைந்து அறத்தாண்டவமாக மாறும் அழகியலில் பதினாறு வாட்கள் முப்பத்திரண்டாக அசைந்தாடும்போது, உனது பனஞ்சேகு பாய்ந்த கருத்த மார்பில் சாந்து பூசுவார்களே.. உனக்கு பனம்பூ மாலை சூட்டுவார்களே…
இதில் எந்த கணத்தைப் பிறந்தநாள் என்று கருதுகிறாய் கருப்பராயா? “
(எழுதிக்கொண்டிருக்கும் ” தன்னாசி” நாவலிலிருந்து)
நான், புனைவின் முதல் எழுத்தைக் கீறிய கணங்களையே என் பிறந்தநாளாக, இப்பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சமர்ப்பிக்கிறேன்.
******
இப்படியான முன்னுரையுடன்தான் உன்னதம் இலக்கிய விழாவை துவங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், விழா ஏற்பாடுகள், நண்பர்களை உபசரித்தல், வெளியூர் நண்பர்களை நிகழ்விடத்திற்கு அழைத்து வந்து சேர்க்கும் ஏற்பாடுகள், வெளியீட்டு நூல் அச்சகத்திலிருந்து கைக்கு வந்து சேரும் கடைசி நேரப் பதற்றம்.. இப்படிப் பல்வேறு அலைக்கழிப்புகளில் இருந்ததால் மிக எளிமையாக விழாவைத் துவக்கினோம்.
விழாவில், தம்பி குதிரைவால் ராஜேஷ் வருவதற்கு சற்று நேரம் ஆகியதால், வெளியிட இருக்கும் நூலான “காலப்பயண அரசியல்” நூல் ஆக்கம் குறித்து ஒரு சில சுவாரஷ்யமான விஷயங்களைப் பேச ஆரம்பித்தேன்.
இந்த நூலின் முதல் புள்ளி என்பது, சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதியிருந்த ரே பிராட்பரி கதை குறித்த குறிப்பைப் படித்தபோது அந்தக்கதையைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதை நோக்கிய தீவிரமான தேடலில் எனக்குள் எழுந்த ஒருவிதமான, என் மண்ணின் ஞானார்த்தப் பார்வையே இக்கட்டுரைநூல்! (நான் ஏற்கனவே இது குறித்து விளக்கமாக ஒரு கட்டுரையில் சொல்லியுள்ளேன்.)
இந்தக்கட்டுரை உலகின் பிரதான 6 மொழிகளில் வெளியாகிய விஷயத்தையும், அந்த மொழியில் நிகழ்ந்த பாராட்டுகளையும் பகிர்ந்து கொண்டேன். இந்த நூல் வெளிவந்த பிறகு சர்வதேச மொழிகளில் என் நட்பு வட்டம் விரிந்தது. முதன்முதலாக, என் நேர்காணல் வெளிவந்தது என் தாய்மொழியில் அல்ல, இத்தாலி மொழியில்தான் வெளிவந்தது. அது மட்டுமல்லாது, இந்த நேர்காணல் கவனம் பெறுவதற்காக என்னைப் பற்றிய மீம்கள் வெளியிட்டார் அந்த இதழ் ஆசிரியர்! இதைவிடவும் மிகப்பெரிய விஷயம், எவராலும் கற்பனை செய்ய முடியாத விஷயம், இத்தாலியின் தற்கால விஞ்ஞான புனைவு விமர்சகரான கார்மன் ட்ரெயானி, இத்தாலி மொழியில் தற்கால விஞ்ஞான புனைவு எழுத்தாளர்களின் பட்டியலை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். அந்தப் பட்டியலில் என் பெயரையும் இணைத்திருந்தார்.
அதன்பிறகு, இந்தத் தொடர்ச்சியை விடக்கூடாது என்று மேலும் சில மொழிகளை நோக்கி நகர்ந்தேன்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதி சொன்ன வார்த்தைகள் போல, நான் இத்தாலிய மொழி குறித்து, இத்தாலிய மண், அங்குள்ள கலாச்சாரம், புதிய செயல்பாடுகளை திறந்த மனதுடன் ஒரு கொண்டாட்டமாக வரவேற்கும் இத்தாலிய மக்களின் அற்புதமான மனநிலை குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டேன். பாரதி, பழமொழிகள் கற்றவன், அந்த பின்னணியிலிருந்து தமிழை புகழ்வதுபோல, எனக்கிருக்கும் இப்படிச் சொல்லும் தகுதி இருக்கிறது. ஆம். உலகின் பிரதான மொழிகளில் 24 மொழிகளில் என் கவிதைகள் வெளிவந்துள்ளன. 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் தொடர்ந்து வருகின்றன. 4 மொழிகளில் பத்தி எழுதுகிறேன்.
இந்தப் பின் புலத்திலிருந்து சொல்கிறேன்.
ஸ்பானிஷ் மொழி சார்ந்த இலக்கிய நண்பர்களின் உணர்வுகள், சற்றே இறுக்கமாக இருந்தாலும், தரமான ஒரு இலக்கியப்படைப்பை அங்கீகரிக்கிறார்கள். என் எழுத்தை சிற்சில முயற்சிகளுக்குப்பிறகு, பெரியளவில் கொண்டாட ஆரம்பித்தார்கள். அதேபோல, பிரெஞ்சு மொழி நண்பர்கள் இன்னும் சற்று இறுக்கமாக இருக்கிறார்கள்.இலக்கிய வரலாற்றில், உலகக் கலைகள், நவீனத்துவத்தை நோக்கி நகரும் ஒவ்வொரு கால கட்டத்திலும், பிரெஞ்சு மொழிதான் முன்னோடியாக இருந்திருக்கிறது. அந்த உணர்வுகளின் கர்வம் அவர்களிடம் இருக்கிறது. ஆகவே, பிற மொழி இலக்கியங்களை ஒருவித மேலோட்டமான தன்மையிலேயே அணுகுகிறார்கள். ஆனாலும், அவர்களது DNA விலேயே இருக்கும் புதுமை விரும்பும் ஜீன்களின் தன்மையில் புதுமையான படைப்புகளை அங்கீகரிக்கவும் செய்கிறார்கள்.
அதேபோலத்தான், இன்னும் சொல்லப்போனால், அதைவிடவும் ஒரு படிமேலாக, ரஷ்ய மொழி நண்பர்களின் மனோபாவம்! உலக இலக்கியத்தின் பிதாமகர்களாக விளங்கிய படைப்பாளிகள் உருவான மண்! உலக இலக்கியத்தின் போக்கையே தீர்மானிக்கும் சக்தி கொண்ட மொழி! உலக மொழி இலக்கியங்களிலேயே பேரிலக்கியங்களை படைத்த மகத்தான ராஜ்ஜியம்! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவ்வளவு மகத்துவம் கொண்ட மொழிக்குள், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்த மொழி என்று வெறுமனே வெட்டி ஜம்பம் அடித்துக்கொண்டு, இந்தியாவின் கடைக்கோடி மாநிலத்தில் பிறந்து, உலக அரங்குகளில், “இந்தியா என்றாலே வங்காளம், ஹிந்தி, மலையாளம் என்ற மொழிகள்தான்..” என்ற அரசியலில் மாட்டிக்கொண்ட சாமான்ய மொழிக்காரனான என் படைப்புகள் வருவதென்றால், அதுவும் monthly column வருவதென்றால்?
அந்த விடா முயற்சி குறித்து விரிவாக விளக்கம் கொடுத்தேன்.
ஒரு வழியாய் ராஜேஷ் வந்து விட்டார். தற்போது தமிழ்நாட்டில் பரவி வருகின்ற ஒரு வகைக் காய்ச்சலில் ஆட்பட்டு சற்று சோர்வாக இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாது, மிகவும் உற்சாகமாக இருந்தார்.
அவர் நூலை வெளியிட, நண்பர் துறையூர் சரவணன் நூலை பெற்றுக் கொண்டார். உன்னதம் முதல் இதழில் ஆரம்பித்த துறையூர் சரவணனுக்கும் எனக்குமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு சோதனைகள், முரண்பாடுகள், கோபதாபங்கள் வந்தாலும், மேலும் மேலும் எங்கள் நட்பின் கணங்கள் கூடிக்கொண்டே இருக்கும் தன்மையை நான் அங்கு பேசவேண்டும்.
நூலை வெளியிட்டுப் பேசிய ராஜேஷ், ” காலப்பயண அரசியல்” நூலை மேனுஸ்கிரிப்டிலேயே படித்துவிட்டுப் பேசிய ஞாபகங்களை நினைவு கூர்ந்தார். ‘தயவு செய்து இதை வெளியிட வேண்டாம், இது ஒரு அற்புதமான பின்நவீனத்துவப் புனைவு. கட்டுரை ரீதியில் அமைந்திருக்கும் இதை கதைப் பிரதியாக மாற்றி, புனைவாக – நாவலாக – விரித்தெழுதி வெளியிடுங்கள்..’ என்று என் கைகளை பற்றிக் கொண்ட அந்த கணங்களை விவரித்தார்.
உன்னதம் பத்திரிக்கைச் செயல்பாடுகள், என் எழுத்தியக்கப் போக்குகள், அவரை வசீகரித்த என் எழுத்துச் சுளிப்புகள் பற்றியெல்லாம் விரிவாகப் பேசினார்.
அதன்பிறகு, ஒரு வாசகர் கேட்டுக் கொண்டதன் பேரில், “குதிரைவால்” திரைப்பட அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
அவர் உரையை முடித்ததும் அவருக்கான பதிலாக, நான் சில நிமிடங்கள் பேசினேன். அந்த நூல் 2008லிருந்து 2022 வரை 14 வருடங்கள் என் மண்டைக்குள் பெரும் தலையிடியாக சுழன்று கொண்டே இருந்த அதன் திகிரியை இன்னும் விரிவாகச் சொல்லியிருக்க வேண்டும். நேரமின்மை!
“இதற்கு மேலும், அந்த நூலை சுமக்க முடியாது, ஆகவே, அதை என் மண்டையிலிருந்து இறக்கிவைக்க, நான் சற்றே ஆசுவாசம் ஆக அது நூலாக்கம் பெறவேண்டும்..” என்பதை சுருக்கமாக பேசினேன்.
(விழாத் தொடர்ச்சி அடுத்த பதிவில்)