• Wed. Nov 29th, 2023

சாமுவேல் பெக்கட்டின் மோலாய்: மனப்பிறழ்வின் ஆவணம்

ByGouthama Siddarthan

Sep 23, 2022

 

 

  • முபீன் சாதிகா

 

 

இருபதாம் நூற்றாண்டின் இறுதி நவீன எழுத்தாளர் அல்லது முதல் பின்நவீனத்துவ எழுத்தாளர் என்று அழைக்கப்பட்டவர் சாமுவேல் பெக்கெட். அயர்லாந்தில் 1906ல் கிறித்தவ புராட்டஸ்டன்ட் குடும்பத்தில் பிறந்தார். அவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் எழுதியவர். அவருடைய நாவல்களும் நாடகங்களும் இருத்தலியல் தத்துவத்தையும் பொருளாம்சத்தை நிராகரிக்கும் போக்கையும் கொண்டிருந்தன. அவருடைய டிராலஜி என்று அழைக்கப்படும் நாவல்களில் ஒன்றான ‘மோலாய்’ ஒரு முக்கியமான படைப்பு. மோலாய், மெலோன் டைஸ், அன்னேமபிள் என்ற மூன்று நாவல்களில் முதலாவது. இது 1951ல் பிரெஞ்சிலும் 1953ல் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்பட்டது. ‘மோலாய்’ நாவல் கடினமான முறையில் எழுதப்பட்டிருந்தாலும், பல முறை படிப்பதன் மூலம் அதனுள் ஊடுருவ முடியும். பெக்கெட், அயர்லாந்து நாட்டு எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸின் எழுத்தால் கவரப்பட்டிருக்கிறார். பிரெஞ்சு எழுத்தாளர் புரௌஸ்ட்டின் எழுத்துகள் அவரை அதிகம் ஈர்த்தன. அவருடைய படைப்புகளில் அபத்தவாதமும் அநாயாசமான நகைச்சுவையும் கலந்து இருந்தன. அவருடைய படைப்பாக்காத்தின் காலத்தை மூன்றாகப் பிரிக்கலாம். எழுதத் தொடங்கியதிலிருந்து இரண்டாம் உலகப் போர் முடிய 1945வரை ஒரு பகுதி, அதன் பிறகு 1960 வரை இரண்டாம் பகுதி, அதன் பின் 1989ல் அவர் இறக்கும் வரை ஒரு பகுதி. நடுவிலிருந்த காலகட்டத்தில் அவர் அதிகம் எழுதினார். அவருடைய எழுத்துகளில் ‘கோடோவுக்காகக் காத்திருத்தல்'(Waiting for Godot) என்ற நாடகம் மிகவும் பிரபலமான ஒன்று. அவரது முதல் நாவலான ‘மர்ஃபி’ அவருக்கு பெரும் பெயரைக் கொடுத்தது. அவர் கவிதைகளையும் எழுதினார். அவருக்கு 1969ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரராகவும் இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது பிரெஞ்சு எதிர்ப்புப் படையில் சேர்ந்தார். அதன் பின் அயர்லாந்துக்குத் திரும்பினார். 1938ல் பிரான்ஸில் பாலியல் தொழிலின் முகவர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டதால் மரணப் படுக்கையில் விழுந்து மீண்டார். புனித வெள்ளி நாளில் பிறந்த பெக்கெட், டிசம்பர் மாதர் 22ஆம் தேதி 1989ஆம் ஆண்டு மறைந்தார்.

 

மோலாய்-எதார்த்த மாயை

இரு பகுதிகளாக எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. முதல் பகுதியில் மோலாய் தன் தாயைத் தேடிச் செல்லும் பயணம் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாவது பகுதியில் மோரான் என்ற துப்பறிவாளர் மோலாயைத் தேடிச் செல்லும் பயணம் கதையாகிறது. முதல் பகுதியில் மோலாய் தன்மொழியாக, தனிமொழியாக பேசுவதை வர்ணிப்பதை விவரிப்பதை பதிவு செய்யும் கதையாக மாறியிருக்கிறது. இரண்டாம் பகுதியில் மோரான் தன் பயணம் பற்றி எழுதும் ஓர் அறிக்கை கதையாகிறது. உண்மையில் இந்த அறிக்கைதான் முதல் பகுதியாக இருக்கலாம்.

மோரான், மோலாயைத் தேடிச் சென்று நடந்த சம்பவங்களைப் பற்றி தன் தலைமைக்கு ஓர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. அதில் எழுதப்படுவதுதான் மோலாய் பற்றிய கதை. மோலாய் முதல் பகுதியில் செய்வதை எல்லாம் மோரான் இரண்டாம் பகுதியில் செய்வதை கவனிக்க முடிகிறது. மோலாய் பாத்திரம் தன் பயணத்தின் இடையில் பலரை சந்திப்பது போல் மோரான் பாத்திரமும் சந்திக்கிறது. மோலாய் ஒரு சைக்கிளில் பயணத்தைத் தொடர்வதைப் போல் மோரானும் தன் மகன் மூலமாக ஒரு சைக்கிளை வாங்கி வந்து பயணத்தைத் தொடர்வதாகவும் கதை நகர்கிறது. மோரான் செய்வதை மோலாய் செய்வதாகக் கொண்டு எழுதப்படுவதாகவும் கொள்ளமுடியும். மோரான் தன்னைத் தேடுவதைத்தான் மோலாயைத் தேடுவதாக எழுதுவதாகவும் இந்த நாவலை வாசிக்க முடியும்.

மோலாய் எழுதும் கதையாகவும் இதை வாசிக்கலாம். மோலாய் தன்னைத் தானே தேடி மோரான் போல் தன்னை உருவகித்து ஒரு பாத்திரமாக மாற்றி எழுதுவதாகவும் கதையைப் புரிந்துகொள்ளலாம். நாவலுக்குள் எழுதப்பட்ட நாவல் என்பது போல் இந்த கதை எழுதப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம். மோலாயும் மோரானும் ஒரே பாத்திரத்தின் இரு வேறு கதையாடல்கள் மற்றும் இரு வேறு பரிமாணங்கள் என்ற பிளவுதான் இந்த நாவலாகியிருக்கிறது. ஒரு பாத்திரத்தின் இரு துண்டுகள் அல்லது ஒரு பாத்திரத்தின் இரு வகைமைகள் என்ற நோக்கில் சொல்லப்பட்ட கதையாக இது உள்ளது.

எதார்த்த வகை பாணியில் எழுதப்படுவது போல் இருக்கும் இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும் பொருள், எதார்த்த வகையைச் சார்ந்தது அல்ல. மோரான் என்ற பாத்திரம் மோலாய் என்ற பாத்திரத்தை ஏன் தேடவேண்டும், மோலாய் இறந்து போனதாக நம்பப்படும் தன் தாயை ஏன் தேடவேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் நோக்கம் நாவலில் இல்லை. அதற்கான விடையை வாசிக்கும் போது தேடிக் கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்காமலும் இருக்கலாம்.

மோரான் என்ற பாத்திரம் ஒரு மாயையில் இருப்பது போல் மோலாயும் ஒரு மாயையில் இருக்கிறது. தேடலும் மாயை ஆகிவிடுகிறது. தேடப்படுவதும் மாயை ஆகிவிடுகிறது. மோரான் உருவாக்கிய மாயை மோலாய் எனவும் கொண்டுவிடலாம். மோலாய் விரும்பிய மாயை மோரான் என்ற முடிவுக்கும் வரலாம்.

மோலாய் என்று நாவலுக்குப் பெயரிட்டதன் மூலம் இயல்பான மனித குணாம்சங்களுக்குப் பொருந்தாத, நவீன அல்லது அநவீன அல்லது நவீனத்தைத் தாண்டிய ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கும் போது அப்படிப்பட்ட ஒரு மனிதனை எதிர்கொள்வது நடக்கிறது. இடம், காலம் சாராத பிசகிய குழப்பத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு குவிமையத்தை சொல்வதாக இந்தப் பெயர் நாவலுக்குள் உருமாறுகிறது. எதார்த்தத்திலிருந்து மீறிய ஒரு பிரமையை உருவாக்குவதில் நாவல் வெற்றி அடைகிறது.

இடிபலுக்கு எதிராதல்

தாயைத் தேடுதல் என்பது ஃப்ராய்டின் ஆய்வுப்படி இடிபல் சிக்கலி[1]ன் எச்சம்தான். ஆனால் மோலாய் தாயைத் தேடிக் கண்டடைவது தாயாக இருக்கும் தன்னை. ஒரு காவல்நிலையத்தில் மோலாய் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது பெயர் கேட்கப்படுகிறது தன் பெயர் மோலாய் என்றும் தன் தாயின் பெயரும் மோலாயாகத்தான் இருக்கக்கூடும் என்றும் கூறும் பதிலில் தாயைத் தேடி தானே தாயாக மாறுவதைச் சொல்கிறது. இடிபலுக்கு எதிராக தாய் மீதான விருப்பை தன் மீதான விருப்பாக மாற்றிக் கொள்வதைச் சொல்கிறது. ‘இடிபலுக்கு எதிராக’ [2]என்ற நூலில் இந்த நாவலைப் பற்றிய குறிப்பு வருகிறது. அதில் தாயின் பெயர் தனது பெயராகத் தெரிவிக்கும் இந்த பகுதியை எடுத்து விளக்கும் தத்துவவியலாளர்கள் ஜில் டெல்யூஜ், பிலிக்ஸ் கட்டாரி இடிபலுக்கு எதிராதல் என்ற கருத்தை பெக்கெட்டின் இந்த நாவல் கடைபிடிக்கும் விதத்தைக் கூறுகிறார்கள்.

இடிபலுக்கு எதிராக மாறும் போது விருப்பத்தின் திசை மாறுகிறது. சுயவிருப்பு அல்லது விருப்பின்மைக்கான இடம் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. உடலற்ற தன்னிலையின் பிறப்பு நடக்கிறது. மோலாய் சமூகத்திற்கு வெளியே அலையும் உடலற்ற தன்னிலை. அந்த உடலில் நிறைந்திருப்பது அராஜகமான சுயநசிவும் வன்மமும். அது மனப்பிறழ்வின் அடிப்படை இலக்கணம். இரண்டாம் பகுதியில் மோலாயைத் தேடுவது என்ற செயல்பாடே மோலாய் தாயாகுதல் என்ற நிலைக்கு மாறி அது தானாகுதல் என்று கொள்ளப்பட்டால் மோரானுடைய தேடல் என்பது தன்னைத் தேடல் என்பதாக மாறுகிறது. சுயமற்ற மோரான் ஒரு தேடலில் அது கிடைத்துவிடும் என்று புறப்படுவதும் அது கிடைக்காமல் திரும்புவதும் அது பற்றி எழுதுகையில் மோலாயாக அதை மாற்றி தன் அடையாளமாகக் கொள்ளுவதில் நிறைவடைகிறது. அதே போலத்தான் தாயைத் தேடிய மோலாய் தன்னை தாயாக உருவகித்துக் கொள்வதில், அந்த அடையாளத்தில் சிக்கிக் கொள்வதில், மனப்பிறழ்வு உற்பத்தியாகிறது.

மோலாய் பாத்திரம் மனப்பிறழ்வின் உச்சமாக இருந்தால் மோரான் பாத்திரம் சந்தேக நோயின் களமாக இருக்கிறது. மோரானின் மகனும் மோரான் என்ற பெயர் கொண்டவன்தான். அவன் மோலாய்க்கான தேடலில் தந்தையால் ஈடுபடுத்தப்படுகிறான். ஆனால் பாதியில் அவன் திரும்பிவிடுகிறான். மோரான் அவனுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருப்பதால் அவனுக்கு தேடல் தேவையில்லை. மோரானுக்கு தந்தையாக இருப்பதில் நிறைவின்மை இருக்கிறது. அதனால்தான் மோலாயைத் தேடவேண்டியிருக்கிறது. மோலாய்க்கும் ஒரு மகன் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுவதால் மோரான் மற்றும் அவன் மகனும் மற்றொரு மோரான்தான் என்று மோலாய் கொள்வது போலக் காட்டுகிறது நாவல் பிரதி.

மோரான் பாத்திரம் தன் கால்கள் சரியாக நடக்கமுடியாத நிலையில் ஊன்றுகோல்கள் இல்லாமல் தவழ்வது போல, மோலாய் பாத்திரமும் கால்கள் நடக்க முடியாமல் தவழ்ந்து காட்டில் இருந்து ஒரு தற்கொலைக்கு முயன்று தோற்று ஒரு கழிவுநீர் கால்வாயில் விழுந்து மீட்கப்பட்டு தன் தாயின் அறையை அடைகிறது. தன் தாயின் அறையை அடைந்த பின் முழுமை அடையும் உணர்வைப் பெறுகிறது. அதைப் பற்றி எழுதுகிறது. மோரான் பாத்திரமும் தன் வீடு திரும்பியவுடன் தன் இயல்பை பெறுகிறது.

கண்ணாடி நிலை

ஜாக் லக்கான் எழுதிய கண்ணாடி நிலை என்ற விளக்கத்தில் குழந்தை வளர்கையில் தனது பிம்பத்தை கண்ணாடியில் பார்க்கும் போது ஏற்படும் ஒரு மன உணர்வு அதன் ஆளுமையில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டிருக்கிறது. கண்ணாடி பிம்பத்தை தனது மற்றமையாக மற்றொரு தானாக குழந்தை கற்பனை செய்துகொள்கிறது. ஆளுமையின் வளர்ச்சிப் போக்கில் சமூகம் கட்டமைக்கும் மற்றமையாக கண்ணாடியின் பிரதிபலிப்பு இருக்கிறது. தன் சுற்றம், தன் நண்பர்கள் தன் எதிரிகள் தன்னை எப்படிப் பார்க்கிறார்களோ அதுதான் தானாக தன் அடையாளமாக தன்னிலையாக ஏற்கும் மனப்போக்கு உருவாகிறது. இப்படித்தான் உளப்பகுப்பாய்வை லக்கான் விளக்குகிறார். அந்த அடிப்படையில் மோரானின் கண்ணாடி பிம்பமாக, மற்றமையாக மோலாய் பாத்திரமும் மோலாய்க்கு மோரான் பாத்திரமும் இருக்கிறது. மோரானும் மோலாயும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான காரணம் இந்த பிரதிபலிப்பு அம்சம்தான்.

மோரான் தன் அடையாளமாக மோலாயைக் காண்பதில் தன்னிலைப் பற்றிய ஆவணம் கதையாக தயாராகிறது. மோலாய் தன்னை மோரான் போல் பார்ப்பதில் நாவல் உருப்பெறுகிறது. மோரான், மோலாய் இரு பாத்திரங்களும் கொலை செய்கின்றன. மோலாய் இறுதியில் மரணத்திற்கு முன்பாக சொல்லவேண்டியவற்றை எழுதுகிறது. மோரானும் தன் பயணத்தைப் பற்றி எழுதுகிறது. இந்த பிரதிபலிப்பு தான் நாவலின் கதையாக நிலைபெறுகிறது. மோரான் பாத்திரமும் மோலாய் பாத்திரமும் கண்ணாடி நிலையில் அடையும் சுயநசிவையும் வன்முறையும்தான் அந்த பாத்திரங்களின் கால்கள் நடக்க முடியாமல் ஆவதும் கொலை செய்வதும்.

ஒரு பாத்திரத்தின் இரு தன்னிலைகளைப் பற்றிய பதிவாக இந்த பிரதியைக் கொண்டால் இங்கு பன்மை தன்னிலைகள் நிலை கொள்கின்றன. மோலாய், மோரான் என்ற இரு ஆளுமைகள் ஒன்றானதாகவும் இதைப் பார்க்கலாம். கண்ணாடிப் பிரதிபலிப்பின் ஆளுமைகளை இரு வேறாக்கியும் ஒன்றாக்கியும் ஒரு விளையாட்டு பிரதிக்குள் நடக்கிறது. வாசிப்பில் அந்த விளையாட்டு நடக்கும்படி இந்த பிரதி ஆக்கப்பட்டிருக்கிறது. மோலாய், மோலாயின் பிரதிபலிப்பு மோரான், மோரான் மற்றும் மோரானின் பிரதபலிப்பு மோலாய் என்ற வகையில் சிதைவுற்ற பல ஆளுமைகள் உருவாகின்றன. இரு தன்னிலைகள் ஒற்றைத் தன்னிலையை மறுத்தல் என்ற செயல்பாடகவும் இது நிகழ்கிறது. நிலையான ஒருமுகப்படுத்தப்பட்ட ஒற்றைத் தன்னிலை என்பதை மறுத்து சிதைவுற்ற, நெகிழ்ச்சி மிக்க, குழையும் பன்மை, என மாறிய தன்னிலையாக, பொருள் கொள்ளும் பாத்திரங்களாக மோலாயும் மோரானும் உள்ளன. எது எதன் பிரதிபலிப்பு என்று உணராத வகையில் பாத்திரங்களின் ஆளுமைகள் நிழலாடுகின்றன.

மனப்பிறழ்வும் சந்தேகமும்

மோலாய் மனப்பிறழ்வின் கூறுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும் பாத்திரம். மோரான் சந்தேக நோயின் அம்சங்களை வெளிப்படுத்தும் பாத்திரம். மோலாய் பின்னப்பட்டுத்தப்பட்ட சேர்க்கையில் உள்ள பாத்திரம். மோரான் சந்தேக நோயில் தொடங்கி முடியும் போது மனப்பிறழ்வு நோயில் விழும் பாத்திரம். மோரான் கடவுளுக்கு பயப்படும் ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் ஒரு பாத்திரமாக இயல்பான ஒன்றாக இருப்பதாகக் காட்டப்படுகிறது. மோரான் தன் மகனை சந்தேகிப்பது தன் வேலைக்காரியை சந்தேகித்தல் சர்ச்சின் பாதிரியாரை சந்தேகித்தல் என்று அந்த நோயின் பரிமாணம் விளக்கப்படுகிறது. மோலாயைத் தேடும் பயணம் தொடங்கியவுடன் மோலாய் பாதிக்கப்பட்டிருக்கும் அதே போன்ற நோயால் பாதிக்கப்படுவதாகச் சித்திரிக்கப்படுகிறது. மோலாய் தன்னைப் பற்றி எழுதும் போதே அதன் பிறழ்ந்த மனநிலை வெளிப்பட்டுவிடுகிறது.

மோலாய் இயல்பாகவே கொலை உணர்வில் இருக்கும் பாத்திரம். காட்டில் பார்த்த ஒரு நிலக்கரி எரிக்கும் நபரை கொன்றுவிடுகிறது மோலாய் பாத்திரம். மோரான் பாத்திரம் தன் தந்தையைத் தேடி வரும் ஒரு மகன் பாத்திரத்தைக் கொன்றுவிடுகிறது. மேலும் அந்தப் பாத்திரம் தன்னை போலவே இருப்பதால் கொல்கிறது. இதில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது, மோரான் தன்னை உணர்தல் என்பதால் கொலை நிக்ழ்கிறது. மோலாயைத் தேடுதல் என்பது தன்னைத் தேடுதல் என்பதாக இருப்பதால் தன் தன்னிலையை அழித்தால் என்ற குறிப்பீட்டு செயல்பாடுதான் இப்படி கொலையாக நடத்தப்படுகிறது. மோலாயைக் கொல்லுதல் மூலம் தேடல் நிறைவு பெறும் என்ற நிலைக்கு மோரான் பாத்திரம் வருகிறது. தன்னிலை அற்று இருத்தல் என்பதான ஒரு மிதக்கும் உடலற்ற சுயங்களைக் கட்டமைத்தல் என்ற நாவலுக்குள்ளான செயல்பாடு கொலை என்பதாக உருவகம் கொள்கிறது. தன்னிலையை அழித்தல் என்பது இங்கு கொல்லல் என்ற வினையாக மாறுகிறது மோலாய் கொல்லும் முறையிலேயே மோரான் பாத்திரமும் கொல்கிறது. மோரான் மோலாயையும் மோலாய் மோரானையும் கூடக் கொன்றிருக்கலாம். மோலாய் மற்றும் மோரான் பாத்திரங்கள் ஸ்தூலமான உடல்களாகவோ பருண்மையான உடல்களாகவோ இருப்பதில்லை. மாறாக உடல்களற்ற உருவங்களாக இருக்கின்றன. அல்லது அப்படி உணர்கின்றன. உடலற்ற அடையாளத்துக்கான அவசியத்தை உணர்ந்தது போல் அவை பேசுகின்றன. மோலாய், ‘இப்போது நான் யாரென்று என்னை உணர்ந்திருப்பது மட்டுமல்லாமல் எப்போதும் இல்லாத அளவுக்கு என் அடையாளத்தைத் துல்லியமாகவும் கூர்மையாவும் உணர்கிறேன்” என்கிறது. மோரான், ‘உடலியல் ரீதியாகப் பார்த்தால் இப்போது நான் என்னை அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறியிருக்கிறேன். முகமாக என் கைகள் தொடுவது என் முகமல்ல, கைகளாக என் முகம் உணர்ந்தது என் கைகளல்ல’ என்கிறது.

‘மனப்பிறழ்வு நோயாளிகள் தங்களை முழுமையானவர்களாக உணர்வதில்லை. அறிவுடன் இரண்டு அல்லது மூன்று உடல்கள் இணைந்திருப்பது போல் உணர்கிறார்கள். தங்கள் உடலிலிருந்து அந்நியமான உணர்வில் இருக்கிறார்கள்’ என்கிறார் லேய்ங்[3]. அது போன்ற பாத்திரங்களாகத்தான் மோலாயையும் மோரானையும் இந்த நாவல் பிரதி உருவாக்கியிருக்கிறது. மூடிய ஜாடிக்குள் தண்ணீரில் மிதக்கும் உடல்கள் போல் இவை இருக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்கள் இணைந்திருப்பது போல் இவை நடமாடுகின்றன. பிதற்றும் சொற்களைப் பேசி மனித பழக்கங்களுக்கு புறமான செயல்பாடுகளை இந்த பாத்திரங்கள் நிகழ்த்துகின்றன. மோலாய் பல கூழாங்கற்களை தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் எடுத்து சப்புவதும் அதன் வரிசையை நினைவு வைத்துக் கொள்ள சிரமப்படுவதும் பெரிய வர்ணனையாக நாவலில் உள்ளது. மனப்பிறழ்வை இயல்பாக்கும் நடவடிக்கை இது.

மோலாய் பாத்திரம் தற்செயலாக ஒரு நாயை விபத்தில் கொல்கிறது. அதை புதைக்க உதவுகிறது. தன்னுடைய புதைத்தல் போல் உணர்கிறது. நாயும் தானும் ஒன்றானது போல் இருப்பதாகக் கூறுகிறது அந்தப் பாத்திரம். விலங்காக இருப்பதில் விடுதலையை பாவித்தல் என்ற அகத்தின் பிறழ்கூறு இது. மனப்பிறழ்வின் வலி உணர்த்தும் சொற்கள் இவை. நாயின் இடத்தை அடைதல் என்பது பாதுகாப்பைத் தருவதாக இருக்கிறது. மேலும் அதன் மீது மோலாய்க்கு ஏற்பட்ட ஒரு பச்சாதாபம் போல் தன் மீதே பச்சாதாபம் கொள்ளவில்லை. இப்படி தன்னிலிருந்து விலக்கும் மனப்பிறழ்வின் சிக்கல் ஊடாடுவதுதான் இந்தப் பிரதியின் மொத்த கதையாடலாக இருக்கிறது.

பெயர்களை மாற்றி விளித்தல் என்பதும் ஒரு முக்கிய வினையாக மனப்பிறழ்வின் அம்சம் வெளிப்படுகிறது. நாயின் உரிமையாளரான லோய் என்ற பெண்ணின் பெயரை, லோஸ் என்று விளிப்பது மோலாய் என்ற பெயரை மோலோஸ் என்று அழைப்பது என்பது பெயரற்ற தன்னிலைகளாக பார்த்தல் என்ற நிலைதான்.

‘மனப்பிறழ்வாளர்கள் சமூகத்தின் எதிர்நிலையில் இருப்பவர்கள். அவர்களின் குற்றவுணர்வு இயல்பை விட அதிகம் இருக்கும். மேலும் செய்யாத குற்றத்திற்கும் குற்றவுணர்வு கொள்ளும் தன்மை உருவாகும். அது தவிர அச்சமும் அதிகரிக்கும்'[4] என்கிறார் லேய்ங். இந்த குணாம்சங்களைக் கொண்ட பாத்திரங்கள்தான் மோலாயும் மோரானும். இடிபலுக்கு எதிரானவர்களாக மனப்பிறழ்வாளர்கள் இருப்பதாகக் கொள்ளப்படுவதால் அவர்களை எல்லைக்குத் தள்ளி மறுஎல்லையாக்கம் செய்து அவர்களை மீண்டும் உளவியல் பாற்படுத்துவது சமூகத்தின் வேலை. அந்த வகையான எல்லை நோக்கித் தள்ளும் நெறி வகைதான் இந்த பிரதியில் உறைந்திருக்கிறது. இடிபலாக்கத்தில் தொடங்கி அதற்கு எதிராக முடிகிறது கதை.

தாய் எனும் அடையாளம்

தாயைத் தேடுவதாகத் தொடங்கும் கதையில் உருவகமாகக் குறிப்பிடப்படுவது தாய் நாட்டுக்கான தேடலாக இருக்கலாம். ஏனெனில் அயர்லாந்து நாடு தனி நாடாகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததற்கு ஆதரவாக வந்த சிந்தனையின் வெளிப்பாடாக இதைக் கொள்ளலாம். இந்த பிரதியின் எல்லா பெண் பாத்திரங்களும் தாய்க்கு நிகரானவர்களாகவே இருக்கிறார்கள். எல்லா பெண்களும் தாயைப் போலவே மோலாய்க்கும் மோரானுக்கும் தெரிகிறார்கள்.

மோலாய் காதலிக்கும் பெண்ணான எடித், மோலாய்க்கு பாட்டி போல் தெரிகிறார். குப்பைகள் குவிந்திருக்கும் இடங்களில் உறவு நிகழ்வதும் அது காதல் என்பது போல் பாவிக்கப்படுவதும் உறவுக்காக மோலாய்க்கு பணம் கிடைப்பதும் எடித் இறந்து போன பின்பு பணம் கிடைக்காமல் போவதும் மோலாய்க்கு ஒரு காதல் அனுபவமாகக் கொள்ளப்படவேண்டிய ஒன்று, கேலிக்குள்ளாக்கப்படுகிறது. லோஸ் என்ற பெண்ணின் காதலையும் எடித் காதலையும் ஒன்றாகவே பார்க்கக்கூடியதாக மோலாய் பாத்திரம் இருக்கிறது. மேலும் இந்த பெண்களும் தாய் போலவே மோலாய்க்குத் தெரிவதுதான் தாயின் அடையாளத்தைத் தரும் பெண் பாத்திரங்களின் தேடலாகவே இந்த அனுபவங்கள் மிஞ்சுகின்றன. மேலும் ஒரு பாட்டியுடன் காதல் கொண்டதாக சொல்வதற்குக் காரணம் ஆதித்தாயுடனான உறவு என்ற ஒரு கிறித்துவ மதரீதியான கதையாடலை முன்வைப்பதும் ஒரு நோக்கமாக இருக்கிறது. மேலும் இது எல்லாப் பெண்களும் ஆதித்தாயுடனான பிரதிபலிப்பைக் கொண்டிருப்பதையும் அதனால் பெண்ணுடனான உறவு என்பது தாயுடனான உறவாக, இடிபல் சிக்கலாக மாறுகிறது. தாயைச் சேர்தல் என்ற உருவகமான நிறைவு என்பதும் அது தன்னை தாயாக உருவகிப்பதுமாக இடிபலுக்கு எதிரான மனப்பிறழ்வைத் தருகிறது.

ஏவாள் ஆணின் விலா எலும்பிலிருந்து அல்லாமல் அவன் பின்புறத்திலிருந்து அல்லது காலிலிருந்து ஏன் முளைத்திருக்கக்கூடாது என்று இந்த நாவலில் ஒரு கேள்வியும் எழுப்பப்படுகிறது. கிறித்தவ நம்பிக்கையை ஒரு விதமாக சுய விமர்சனத்தில் தள்ளுவதற்காக இப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பப்படுவதை இந்த நாவலில் பார்க்கமுடிகிறது. மேரி தன் காது வழியாக கருவைப் பெற்றதாக நம்பலாமா என்ற கேள்வியையும் நாவல் எழுப்புகிறது. தாய்க்கான தேடலாக, தாயின் அடையாளமாக கொண்டிருப்பதற்கும் தொல்கதையாகக் கூறப்பட்டு வரும் தாய் என்ற சித்திரத்தின் பொருளுக்கும் இருக்கும் தொலைவை இப்படி நகர்த்திக் காட்டுகிறது இந்த நாவல் பிரதி.

தாயும் நாடும் ஒன்றாகிவிடுகின்றன. செப்பனிடப்படாத காடு போல் தாயும் கவனிப்பாரற்று இருக்கிறாள். இடமும் உறவும் ஒன்றாவதில் இரண்டும் கிடைக்காமல் இருப்பது பற்றிய ஓர் ஏக்கமும் அதற்கான வேட்கையும் உள்ளடங்கியிருக்கிறது. தாயை மோட்சத்தில் பார்ப்பது எட்டினால் நாடும் வாய்க்கும் என்பதாக சுய விளக்கம் தருகிறது கதை.

சிறுபான்மை எனும் தகுதி

அயர்லாந்தில் பிறந்து நாட்டைவிட்டுச் சென்று பிரான்ஸில் வாழ்ந்து பிரெஞ்சில் கதை எழுதி அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இலக்கிய வாழ்வை எதிர்கொண்டார் பெக்கெட். இந்த வகையில் எழுதப்படும் இலக்கியங்களை சிறுபான்மை அல்லது சிறுவாரி[5] இலக்கியம் என்ற பொருளில் தத்துவவியாலாளர்கள் ஜில் டெல்யூஜ், பிலிக்ஸ் கட்டாரி கருதுகிறார்கள். இந்த இலக்கியங்களில் ஓர் எதிர்ப்பு இருக்கும். பெக்கெட் பற்றி அவர்கள் பெரும்பான்மை இடத்தில் தனக்கான முக்கியத்துவத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல் உள்ளடங்கி முணுமுணுப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த வகையான இலக்கியம் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பெக்கெட் கிறித்தவ மத நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறார். ஏசு மீண்டும் வருவார் என்பது அவநம்பிக்கை சார்ந்த ஒன்று என்பதை வலியுறுத்துவதை அவர் விரும்புகிறார். இந்த நாவலும் அந்த செயல்பாட்டை கேள்விக்குட்படுத்துகிறது.

இந்த நாவலில் பல குரல்கள் ஒலிக்கின்றன. மோலாய் பாத்திரத்தின் தன்னிலையில் தொடங்கி அதை விமர்சிக்கும் குரல் ஒன்றும் உடன் வருகிறது. மோரான் பாத்திரமும் தன்னிலையில் தொடங்கி கதை கூறினாலும் அதனுடனேயே ஒரு குரல் கதையின் அம்சத்தையும் கதைக்கு வெளியிலான அம்சங்களையும் விமர்சிக்கிறது. அந்த குரல்தான் அயர்லாந்துக்கான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. ஏசுகிறித்துவின் மறுவரவை கேள்விக்குள்ளாக்குகிறது. பெரும்பான்மை விருப்புக்கு எதிராக இவற்றை வைக்கிறது. மோட்சம் என்பது கதை பாத்திரங்களுக்குக் கூட சாத்தியமில்லை என்பதை சொல்லிச் செல்கிறது.

பெக்கெட்டின் இந்த நாவல் தர்க்கமற்ற எல்லையின்மையை நோக்கி வீசப்பட்ட ஒன்று. ஒரு பிறழ்ந்த மூளைக்குள் நடந்த சாகச பயணமாக நாவல் இருக்கிறது. அசாதாரணமான இயல்பின்மை கொண்டிருக்கும் பாத்திரங்களாக வடிப்பதில்தான் படைப்பாக்கம் முனைந்திருக்கிறது. அறவியல் சார்ந்த, ஒழுக்கவியல் சார்ந்த எந்த படிப்பினைகளையும் இந்த பாத்திரங்கள் உருவாக்குவதில்லை. ஒழுக்கமற்ற கடினமான வாழும் நெறிமுறைகளுக்குத் தள்ளப்பட்ட பாத்திரங்கள் இவை. தாயின் தேடல் என்ற உருவகத் தேடலானது தன்னிலையின் தேடலாக மாறி இறுதியில் உடலற்ற தன்னிலைகளாக அலைவதுதான் இந்த பாத்திரங்களின் பிரதான செயல்பாடாக இருக்கிறது. ஞானம் என்பதே உதாசீனப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறுகிறது இப்பிரதியில். இரு பாத்திரங்களும் ஒன்றையொன்று உருவாக்கி எழுதிக் கொள்கின்றன. தேடிக் கண்டடைய முடியாத தன்னிலைகளின் வடிவமற்ற பிதற்றலாக இந்த பிரதி உள்ளது. ஒரே பாத்திரம் தாயாகவும் மகனாகவும் தந்தையாகவும் மாறக்கூடிய மனப்பிறழ்வில் உள்ளது. குற்றம் செய்வதும் அதை உணராமல் இருப்பதும் மனப்பிறழ்வின் நோய்க்கூறில் முதன்மையாக இருக்கிறது. குற்றவாளியாகவும் குற்றம் இழைக்கப்பட்ட பாத்திரமாகவும் ஒரே நிலையில் நின்று நிலவும் வகையில் நாவல் சமன்படுத்தியிருக்கிறது. சுயத்தின் பிளவுகளாக அவை மாறிப் போயிருப்பதை இது காட்டுகிறது. அகத்தின் வழியே பயணம் செல்வதை புறவழிப் பயணமாகக் காட்டி அங்கிருக்கும் குழப்பங்களைச் சுட்டுகிறது இந்த நாவல். உணர்வுகளின் கொந்தளிப்பற்ற வெற்று முணுமுணுப்புகளாக சொற்களின் கூட்டிணைவாக நாவலின் மொழியாடல் நகர்கிறது. அலங்கோலமான மனித ஆளுமையின் திக்கற்ற தடம் புரளல்களை பதிவு செய்கிறது இந்த நாவல் பிரதி. நிலைகுலைந்த வாழ்வின் ஒட்டுமொத்த நம்பிக்கைகளும் பறிபோன அமைதியின்மையை அறிக்கையாக்குகிறது இந்த நாவல்.

 

********************

 

உதவிய நூல்கள்

1.The Trilogy of Samuel Beckett-Siona Elisabeth Bastable, Dissertation, McMaster University 1976

2.Beckett’s Molloy:Postmodern Schizophilia, Mamoud Daram and Razia Rahmani, Shahid Chamran University, Iran, 2013.

 

அடிக்குறிப்புகள்

[1] இடிபல் சிக்கல் என்றால் தாயுடன் உறவு கொள்ள விரும்பும் மகனின் சிக்கல். அது பற்றிய ஒரு கிரேக்கப் புராணக்கதை உள்ளது.

[2] Anti-Oedipus-Capitalism and Schizophrenia-Gilles Deleuze, Felix Gautari

[3] The Divided Self, RD. Laing, Penguin Books, London, 1959, P.66

[4]The Divided Self, RD. Laing, Penguin Books, London, 1959, P.76

[5] மைனர் லிட்டரேட்சர் என்பதை சிறுபான்மை இலக்கியம் என்றோ சிற்றிலக்கியம் என்றோ மொழிபெயர்க்க முடியாது. காரணம் மைனாரிட்டி என்ற சொல்லே சிறுபான்மையை குறிப்பது. அது மக்கள்தொகை சார்ந்த ஒரு கருத்தாக்கம். சிற்றிலக்கியம் என்பது பொருத்தமான சொல். காரணம் பேரிலக்கியங்களின் பெருமொழிக்கு எதிரான ஒன்றே இவ்விலக்கியம். ஆனால், தமிழில் சிற்றிலக்கியம் என்ற இலக்கிய வகைமைகளான பள்ளு, குறவஞ்சி, பரணி, கலம்பகம், உலா, தூது போன்றவற்றை குறிக்க ஏற்கனவே சிற்றிலக்கியங்கள் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. அதனால் மைனர் லிட்ரேச்சர் என்பதை சிறுவாரி இலக்கியம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. பெருவாரி என்பதற்கு எதிர்ப்பதமாக இது கையாளப்படுகிறது.- ஜமாலன்

(Translation of an article “What is a Minor Literature?”- Gilles Deleuze, Felix Gautari, Toward a Minor Literature)

***

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page