• Wed. Sep 20th, 2023

புதுவகை எழுத்தின் இரண்டாவது கட்டத்தில்…

ByGouthama Siddarthan

Sep 23, 2022

 

(தோழர் மைத்ரேயி 2002 ல் என்னுடன் கண்ட நேர்காணல்இது.  நான் எழுதாமல் விரக்தியுற்றிருந்தபோது என்னை மீண்டும் புதுவகை எழுத்தை நோக்கி செயல்பட வைத்த முக்கியப் புள்ளி இது.)

 

கௌதம சித்தார்த்தன்: புதுவகை எழுத்தின் இரண்டாவது கட்டத்தில் நிற்கிறோம் நாம். உங்களுக்கே தெரியும் இப்பொழுது புது எழுத்து என்கிற பெயரில் வெளிவந்துகொண்டிருக்கிற சிறுகதைகளைப் பற்றி. உருவம், உள்ளடக்கம், உத்தி போன்ற பல்வேறு பரிமாணங்களில் நுட்பத்துடனும், இதுவரை சொல்லப்படாத புதுத்தன்மையுடனும் வெளிவந்து கொண்டிருந்த கடந்த கால சிறுகதைகளின் நிறம், இப்போது மங்கிப் போய் விட்டது. (ஆனால் கவிதைகள் முற்றிலும் புதிய தளத்தில் வளர்ச்சியடைந்திருக்கின்றன என்பது வேறு விஷயம்) இந்த யதார்த்த பாணிக் கதைகளைத் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் வெளியிட்டு, இந்தப் போக்கை ஒரு புதிய பாணிக்கதைகள் என்பது போல உருவாக்கி விட்டார்கள். ஆனால், நுட்பமாகக் கவனித்துப் பார்த்தால், 1980களில் வெளிவந்த யதார்த்த அலையின் சாயல் அப்படியே இந்தக் கதைகளில் பிரதிபலிப்பதைக் கண்டுணரலாம்.

மைத்ரேயி: அப்படியென்றால், பின்நவீனத்துவம், புதுவகை எழுத்து என்றெல்லாம் எழுதிவந்த சிறுகதைகள் என்னவாயிற்று? சிறுகதை ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ச்சியடைந்து கொண்டே வந்திருந்திருக்கிறது. மரபிலிருந்து யதார்த்தத்திற்கும், யதார்த்தத்திலிருந்து நவீனத்துவத்திற்கும் பிறகு பின் நவீனத்துவத்திற்கும் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. அந்த வளர்ச்சியை நீங்கள் வேறு சில பரிமாணங்களுக்குள் மேலெடுத்துச் சென்றீர்கள், அந்த பாணியை கட்டுரைகள் எழுதி விளக்கினீர்கள்,  அதை “புதுவகை எழுத்து” என்று ஒரு கருத்துருவத்தை உருவாக்கினீர்கள். இடையில் சிலகாலம் உங்களிடமிருந்து படைப்புகள் எதுவும் வெளிவரவில்லை. திடீரெனப் பார்த்தால் சிறுகதைத்துறை யதார்த்தத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏன் இந்த மாற்றம்?

கௌதம சித்தார்த்தன்: யதார்த்தம் என்பது புதுவகை எழுத்தின் ஒரு கூறுதான். நவீனத்தும், பின்நவீனத்துவம், புதுவகை எழுத்து போன்ற எல்லா பாணிகளிலும் உள்ள ஒரு கூறுதான் யதார்த்தம். ஆனால், கவனியுங்கள் ஒரு கூறு மட்டுமே. புதுவகை எழுத்து என்றாலே புரியாத எழுத்து என்ற கருத்தை ஒருசாரார் வலிந்து திட்டமிட்டு உருவாக்கினார்கள். அதனால் வளர்ச்சியடைந்து வந்துகொண்டிருந்த சிறுகதைத்துறை தேக்கமடைந்திருக்கிறது. இவை எல்லாமே இலக்கிய ஊழல்கள் சம்பந்தப்பட்டவை. இந்த அருவருப்பான விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு அயர்ச்சியாக இருக்கிறது.

புதுவகை எழுத்து குறித்து முதல்கட்டத்தில் நான் விளக்கிய படிமங்கள் புரியாமல் போயிருந்தால் பரவாயில்லை, இந்த இரண்டாம் கட்டத்தில் நான் இன்னும் எளிமைப்படுத்தி விளக்குவதென்று முடிவெடுத்து நிற்கிறேன். அதன் உயிரோட்டமே எளிமைதான். ஆனால், சற்று அசாதாரணமான எளிமை. இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

புதுவகை எழுத்தின் நுட்பங்களையும், படிமங்களையும், உத்திகளையும் இந்த யதார்த்தக் கூறுகளிலிருந்தே எடுக்கிறேன். அம்மா குழந்தைக்கு சோறு ஊட்டும் போது நிலாவைக்காட்டி “அதுக்கு ஒரு ஆப்பு”  ” உனக்கு ஒரு ஆப்பு” என்று சோறூட்டுவாள். அதன்பிறகு, பக்கத்தில் இன்னொரு குழந்தை இருப்பதுபோல பாவித்து “தம்பிக்கு ஒரு ஆப்பு”  “உனக்கு ஒரு ஆப்பு” என்று அந்நிகழ்வு வளர்ச்சியடையும். இந்த யதார்த்தத்தின் அழகியலை வேறுசில பரிமாணங்களுக்கு நகர்த்திச் செல்லும்போது தானாகவே புதுவகை எழுத்து உருவாகி விடுகிறது.

நான் தூங்கி எழுந்ததும் பாத்ரூம் போய்விட்டு முகம் கழுவி, பக்கத்தில் மாட்டியிருக்கும் கண்ணாடியைப் பார்க்கிறேன். //ஓ… என் முகத்தைக் காணவில்லை// என்ன நடந்தது? என் மகன் முந்திய நாள் கைத்தவறுதலாக பாத்ரூம் கண்ணாடியை  உடைத்துவிட்டான். அப்பா கோபித்துக் கொள்வாறே என்று அதை சுத்தம் செய்து கண்ணாடியில்லாத அந்த வெறும் சட்டகத்தை மட்டும் அழகாக மாட்டிவிட்டு கமுக்கமாக இருந்து விட்டான். காலையில் நான் கண்ணாடியைப் பார்த்தால் என் முகத்தைக் காணோம்… //புதுவகை எழுத்து உருவாகிவிட்டது//

என் நண்பனைச் சந்திக்க அவன் வேலைபார்க்கும் அலுவலகத்திற்கு அடிக்கடி போவேன். அது எட்டுமாடிகள் கொண்ட அடுக்ககம். அதன் உச்சியில் அவனுக்காகக் காத்திருக்கையில் கைப்பிடிச் சுவரோரம் சாய்ந்து கீழே மனிதர்களும், வாகனங்களும்  தலை கீழாக ஊர்ந்து செல்லும் அலங்கோலத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். ஒரு பறவையைப்போல அதை வெறித்துக் கொண்டிருப்பேன். சலிப்புடன் தோன்றும் காட்சிகள் சூன்யமாக இருக்கும். இப்படிக் காத்திருந்த எரிச்சலின் போதான ஒரு நாள், கீழே தெரிந்த நிலக்காட்சிகளின் உருவம் மாறத் தொடங்கின… //புதுவகை எழுத்து உருவாகி விட்டது//

மைத்ரேயி: பொதுவாக நம்கதை மரபு என்பது சொல்கதை வழிப்பட்டது. இரவில் குழந்தைகள் புடைசூழ கட்டிலில் படுத்துக்கொண்டு ஆகாசத்தைக் காட்டிக் கதைகள் சொல்வாள் பாட்டி. இது யதார்த்தம். இதை வேறு மாதிரி திருப்பிப் பாருங்கள்: பாட்டி நிலாக் கட்டிலில் படுத்துக்கொண்டு நட்சத்திரக் குழந்தைகளுக்கு பூமியைக் காட்டிக் கதை சொல்கிறாள். இது புதுவகை எழுத்து.

கௌதம சித்தார்த்தன்: நிலாவைக் கட்டிலாக உருவகித்து என்பாட்டி சொன்ன கதை ஞாபகம் வருகிறது…

மைத்ரேயி: கதைக்கான களனே கட்டில்தானா?

கௌதம சித்தார்த்தன்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். கட்டிலையே எடுத்துக் கொள்வோமே… கட்டில் என்பது ஒரு யதார்த்தம். அதை மேலோட்டமாகப் பார்த்தால் அது ஒரு யதார்த்தத்தின் வடிவு. கட்டிலை கட்டிலாகப் பார்ப்பது யதார்த்தம். கட்டிலின் பல்வேறு கூறுகளுக்குள் படுத்துப் பார்ப்பது புதுவகை எழுத்து.

மைத்ரேயி: சற்றுப் புரிகிற மாதிரிப் பேசலாமே… கட்டிலின் பல்வேறு கூறுகள் என்றால்?

கௌதம சித்தார்த்தன்: கட்டில் மனிதவாழ்வின் இன்றியமையாத ஓர் அம்சம். சகல பிரச்சினைகளிலிருந்தும் விலகி சற்றே ஆசுவாசம் கொள்ள தலைசாய்த்துக் கொள்ளும் ஒரு தாய்மடி.  ஏன் மனிதன் நிலத்தில் மட்டுமே படுத்துறங்கவில்லை? கட்டில் என்பது ஒரு குறியீடு. அது வாழ்வுப் பாடலைத் தாலாட்டும் ஒரு தொட்டில். அதில் படுக்கும்போது மனிதன் குழந்தையாக மாறிவிடுகிறான். கட்டிலை அவன் ஏன் சாதாரணமாகப் புனையவில்லை? கட்டிலுக்கான கயிற்றுப் புனி (வரிசை) கட்டும்போது அதற்குள் (அந்த வரிசையில்) ஒரு அழகியலை உருவாக்கி அந்தப் புனிக்கு “ராசாகயிறு”, “மந்திரிகயிறு” என்று பெயர் வைத்துக் கதைகளோடு புனைகிறான்…

இந்தப் புனி வரிசையை மாற்றி மாற்றிப் புனையும்போது அதற்கு வேறு வேறு பெயர்கள் கொடுக்கப் படுகின்றன. அரசலோகம், அரசபோகம், தரிசுபோகம் என்று அற்புதமான தொன்மங்களை நம் மரபு உருவாக்கி வைத்திருக்கிறது.

கட்டிலை முன் வைத்து புதுவகை எழுத்துக்காரன் வேறு ஒரு கட்டிலைப் புனைகிறான். கட்டிலில் புனையப்படும் கயிறுகளான “ராசா புனி”, “மந்திரி புனி” என்கிற படிமத்திற்குள் அறம், அதிகாரம் சம்மந்தப்பட்ட கருத்தாடல்களைக் கட்டியமைக்கிறான். இப்பொழுது அரசலோகம் ஆகிறது அந்தக் கட்டில். அதில் நீதிமான்கள் வந்து உட்கார்கிறார்கள்.

இதே போல “கோட்டைப் புனி” போட்டு புனையப்படும் கட்டில் என்கிற படிமத்திற்குள் வாழ்வியல் சம்மந்தப்பட்ட கருத்தாடல்கள் களம் கொள்கின்றன. (இந்த இடத்தில் கோட்டை என்பது தானியங்கள் அளக்கப் பயன்படும் அளவை) இப்பொழுது அந்தக் கட்டில் “அரசபோகம்” ஆகிறது அந்தக் கட்டில். அதில் தலைவனும் தலைவியும் அமர்கிறார்கள்.

இன்னொரு வகையான “இறங்கு சால்” போட்டு புனையப்படும் கட்டில் என்ற படிமத்தில் புனிகள் இறங்கு முகமாய் உருவகம் கொள்கின்றன. இப்பொழுது தரிசுபோகம் ஆகிறது கட்டில். அதில் கைம்பெண்கள் வந்து படுக்கிறார்கள்.

இப்படியொரு யதார்த்தக்கூறை அதன் எல்லா திசைகளிலும் போய்ப் பார்க்கும் போது புதுவகை எழுத்து உருவாகி விடுகிறது.

மைத்ரேயி: கைம்பெண்கள் படுப்பதற்கான கட்டில்தான் இருக்கிறதே தவிர மனைவியை இழந்த ஆண்கள் படுப்பதற்கான கட்டில் இல்லையே…

கௌதம சித்தார்த்தன்: ஆணாதிக்க சமூகத்தின் இந்த நுண் அரசியலைத்தான் நாம் இப்போது பேச வேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு ஏன் அப்படி ஒரு கட்டில் இல்லாமல் போனது? கைம்பெண்களுக்கு ஏன் “இறங்கு சால்” போட்டு புனையப்படும் கட்டில் கட்டமைக்கப்பட்டது? இந்த கலாச்சாரக் காவலர்களின் பிரச்சினைதான் என்ன? இந்த சமூகம் காலங்காலமாய் உருவாக்கி வைத்திருக்கும் படிமங்களின் பின்னணி என்ன? என்பதையெல்லாம் முன் வைக்க அதன் வேர்களை நோக்கித் தேடிப் போக வேண்டும்.

மைத்ரேயி: இதுவரை சொல்லப்படாத தளத்தில் நுண் அரசியலைப் பேசுவதுதான் புதுவகை எழுத்து என்று சொல்லலாமா?

கௌதம சித்தார்த்தன்: காலங்காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்மொழி தனது நுண் அரசியலை முன்வைத்து வெற்றியடைந்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல தலித் எழுத்தின் ஒடுக்கப்பட்டோரின் மொழியும் இதைநோக்கி நகரவேண்டும். பறையின் இசைக்குறிப்புகள் சாவுமோளமாக மாறிய அரசியலை எழுத வேண்டும். யதார்த்த தளத்திலேயே நின்று, பறையடிப்பதையும், பீக்கதைகளையும் எழுதுவதோடு நிற்காமல், அதன் உடல் மொழியை நோக்கி நகரவேண்டும். மறைக்கப்பட்ட இரண்டாயிரம் வருடத் தொன்மங்களை மீட்டுருவாக்கம்செய்ய வேண்டும். தலித் சிந்தனையாளர் ரவிக்குமார் சொன்னது போல, “பறையடிப்பதும், பீ அள்ளுவதும் மட்டுந்தானா தலித்?”  என்ற வார்த்தைகளை  பரிசீலனை செய்ய வேண்டும்.

அதற்கு அப்பால் தாண்டிப்போகும்போது புலனாகாத எழுத்துவெளி கைகூடும்.

மைத்ரேயி: இன்னும் சற்று விளக்கமாகப் பார்க்கலாமே…

கௌதம சித்தார்த்தன்: செவ்விந்தியப் பழங்குடி இனத்தவனான லியோனார்ட் பெல்ட்டியரின் சிறைக்குறிப்புகளை (சூரியனைத் தொடரும் காற்று – தமிழில் : எஸ் பாலச்சந்திரன்) எடுத்துக் கொள்ளலாம். எனது வாழ்க்கையே சூரியநடனம் என்கிறார் அவர். சூரிய நடனம் என்பது அவர்களின் பாரம்பரிய நடனம். அந்தக் கலை அவரை வலிமையானவராக ஆக்குகிறது. அவரது பாரம்பரியம் மிக்க கலையும் அவரது வாழ்வியலும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை எழுத்து மொழி அறியாத பெல்டியர் சொல்லும்போது பிரமிப்பாக இருக்கிறது. அவரை போலீஸ் காவலில் வைத்து சித்திரவதைப் படுத்தும்போது அது அவரைப் பாதிப்பதில்லை. ஏனெனில், அவர் சூரியநடனம் ஆட ஆரம்பித்து விடுகிறார். தனது சூரியநடனத்தில் கொந்தளிக்கும் உடல்மொழியை விவரிக்கும் பாங்கில் யதார்த்தம் என்கிற தளம் நகர்ந்து புதுவகை எழுத்தின் தளம் கம்பீரமாய் மேலெழும்புவதை உணரலாம்.

“சூரியநடனம் எமது மதம், எமது வலிமை.எமது மக்களை நாங்களே காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எம்மீது திணிக்கப்படும் வேதனைகளையும் சித்திரவதைகளையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ள எமக்கு உதவுகின்ற அந்த வலிமையை நினைத்து நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம்…”

“சூரியன் உங்கள் கண்களினூடாக உங்களுடைய உள்ளார்ந்த இருத்தலினுள் உருகிப் பாய்வதைப் போல, உங்கள் நெஞ்சில் பொருத்தப் பட்டிருக்கும் கொக்கிகள் அலறித் துடிக்கின்ற உங்களுடைய சதையைப் பற்றியிழுப்பதையும் வெட்டிப் பிளப்பதையும், கிழித்தெடுப்பதையும் போல, ஒரு வினோதமான ஆற்றல் வாய்ந்த தெளிவு படிப்படியாக உங்கள் மனதிற்குள் விரிந்து பரவுகிறது. அந்த வலி ஒரு பேரொளியாக, ஒரு வெளிப்பாடாக வெடிக்கிறது. அனைத்து வாழ்நிலையுடன் – அனைத்து உயிர்களுடன் – உறவுகொண்டிருப்பது எப்படிப்பட்டது என்பதைப் பற்றிய சொற்களால் விவரிக்கமுடியாத காட்சி உங்களுக்கு வழங்கப்படுகிறது.”

அதேபோல சிறையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் காலம் பற்றிய பிரக்ஞை மேலோங்கி நிற்பதுபோல இவரிடமும் இருக்கிறது.  ஆனால், காலத்தை இவர் வேறுவிதமாய்ப் பார்க்கிறார். மனித ஆயுளின் சதையைச் சுவைத்துத் தின்னும் காலத்தைத் தாண்டிச் செல்கிறார். ஒருகலைஞன் செய்யும் மகத்தான காரியம் அது.

மைத்ரேயி:  காலம் பற்றிய உணர்வுடன் இன்றைய கதையாடல்கள் செயல்படவில்லை என்று கருதலாமா?

கௌதம சித்தார்த்தன்:  இதை வேறு விதமாகப் பார்க்கலாம். நகரும் படிக்கட்டுகள் (Escalator) என்னும் ஒரு கருவியைப் பாருங்கள். அது தொடர்ந்து நகர்ந்து கொண்டேயிருக்கிறது. அதில் ஏறிப் போகிறவர்களைக் கவனியுங்கள். ஒருவர் படிக்கட்டில் ஏறி நின்றுகொண்டே போகிறார். இன்னொருவரோ நகரும் படிகளில் தாவி ஏறி நடந்து போகிறார். இந்தப் பயணத்தை நாம் வேறுவிதமாகப் பார்க்கலாம்.

அது ஒரு காலத்தின் குறியீடு. காலஓட்டத்தில் நிற்கும் ஒருவன், நடப்புக் காலத்தில் பயணம் செய்கிறான். காலத்தின் படிகளில் தாவி ஏறி நடந்து போகிறவன் காலத்துக்கு அப்பால் பயணம் போகிறான்.

இந்த உருவகங்களை இப்போது எளிமைப் படுத்தலாம். காலம் எதைத் தருகிறதோ அதை எழுதுவது யதார்த்தம். மாறாக யதார்த்தத்தில் கால் வைத்து காலத்தினூடே நடந்துபோய், வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தும் அதன் உயிரோட்டத்தில் மறைந்துள்ள படிமங்களைத் தூசி தட்டியும், காலத்தின் பல்வேறு கூறுகளைத் தரிசிப்பதும் புதுவகை எழுத்து.

மைத்ரேயி:  எனக்கு ஒரு விமானக் கம்பெனியின் விளம்பரப் படம் ஞாபகம் வருகிறது. ஒரு பெண் தனது சக்கர சூட்கேஸை இழுத்துக் கொண்டு நடந்துபோவாள். அவள் நடந்து போகும் பாதை கற்பனைக் கெட்டாத தளத்தில் வடிவமைந்திருக்கும். அதாவது, ஒருசோளத்தட்டின் பசுமையான நீண்ட தோகை (இலை) மீது நடந்து சென்று கொண்டிருப்பாள். அந்தப் பயணம் நம்மை வேறு ஒரு காலத்துக்கு அழைத்துச் செல்வது போலிருக்கும். பசுமையான நினைவுகளைக் கிளறும் அந்தப் படிமமே ஒரு நோஸ்டால்ஜியா தன்மையுடன் சிலிர்க்க வைக்கும்.

கௌதம சித்தார்த்தன்:  எங்கள் ஊர் சந்தைக்குக் காய்கறி வாங்கப் போயிருந்தேன். சந்தையின் ஜன இரைச்சல் தூள் பறந்து கொண்டிருந்து. திடீரென ஒரு குரல்: //எலி தூக்குப்பையைக் கடிக்குதே…// நான் திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தேன். ஜனநடமாட்டத்தில் எதுவும் விளங்கவில்லை. மீண்டும் அதே குரல், //எலி கடலைக்காயைத் திங்குதே…// சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்டேன். சற்றே வயதான ஒருவரிடமிருந்து அந்தக் குரல்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு புதிர்த்தன்மை சூழ ஓரமாக ஒதுங்கி நின்று அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

தக்காளிப் பழங்களைச் சுமந்துகொண்டு அவரைக் கடந்து செல்லும் ஒரு பெண்மணியைப் பார்த்துக் கூவினார், //எலி தக்கோளிப் பழத்தைக் கடிக்குதே…// எனக்குள் உற்சாகம் எகிறியது. அவரைக் கடந்துபோகும் ஒவ்வொருவரும் என்ன பொருள் வைத்திருக்கிறார்களோ, அதற்கேற்றாற் போல அவரது குரல் மாறிக்கொண்டேயிருந்தது.

சட்டென எனக்குப் புரிந்து போயிற்று. அவர் எலிமருந்து விற்கும் வியாபாரி. ஓ…  என் உடலெங்கும் சிலிர்த்தது. விளம்பர விற்பன்னர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வசதிகள் ஏதுமில்லாத ஒரு கடைத்தெரு வியாபாரி, அபாரமான ஒரு விளம்பர வாக்கியத்தை (Jingles) உருவாக்கியிருக்கிறார்.

இப்படியெல்லாம் விளம்பரம் செய்தால் வியாபாரம் ஆகுமா? நுகர்வோனுக்குப் புரியுமா? என்றெல்லாம் அவரும் யோசித்திருப்பார்தானே… அப்படி யோசித்ததன் விளைவுதான் இது. ஏனெனில் அவர் வாழ்வின் யதார்த்தம் அறிந்தவர். யதார்த்தத்திற்கு அப்பாலும் இன்றைக்குப் போக வேண்டிய நிலையை உணர்ந்து செயல்படுகிறார்.

உலக அளவில் உள்ள பல்வேறு விதமான விசயங்களைக் கரைத்துக் குடித்த இலக்கிய அதிமேதாவிகள், “இப்படியெல்லாம் கதை எழுதினால் யாருக்கும் புரியாது” என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் பின் நவீனத்துவ கால கட்டத்தில், எந்த விதமான மேதா விலாசங்களுமற்ற ஒரு எளியவர், புதுமையை நோக்கி காலடி எடுத்து வைத்திருக்கிறாறென்றால், அவரிடம் நவீன இலக்கிய உலகம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

ஒரு விஷயத்தை அதன் நேர் கோட்டில் யோசிக்காமல், குறுக்குவெட்டுக் கோடுகளில் யோசித்த அந்த எளியவரின் முகத்தைப் பார்த்தேன், //புதுவகை எழுத்து பிறந்து விட்டது //

***

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page