• Sat. Sep 16th, 2023

கதை சொல்லும் கலை

ByGouthama Siddarthan

Sep 23, 2022

 

  • கௌதம சித்தார்த்தன்

 

கதை சொல்லுதல் என்பது ஒரு மகத்தான கலை என்கிறான் ஆண்டன் செகாவ்.

எனக்கு 10 அல்லது 12 வயதிருக்கும்.

காந்தாராவ் நடித்த மாய மோதிரம் என்னும் படத்தை எங்களூர் டூரிங் டாக்கீஸில் பார்த்திருந்தேன்.அந்த சிறு பிராயத்தில், காந்தாராவ், என்.டி.ராமாராவ் இருவரின் படங்களும் மாயாஜால மகேந்திர ஜாலப் படங்களாக இருக்கும். இவர்களது படங்கள் வந்து விட்டால் போதும், வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அனுமதி வாங்கி பெரியவர்களுடன் போய் பார்த்து விடுவேன். அதிலும், காந்தாராவ் தான் பிடிக்கும், என்.டி.ராமாராவ் அவ்வளவாகப் பிடிக்காது. (இயக்குனருக்காக படம் பார்ப்பது என்கிற விஷயமெல்லாம் அந்த சின்ன வயசில் இல்லை. ஆதலால், விட்டலாச்சார்யா வெல்லாம் தெரியாது) மாய மோதிரம் காந்தாராவின் மாஸ்டர் பீஸ்!

அடுத்த நாள் காலையில், எங்க சின்னக்கண்ணு மாமன் பிடித்துக்கொண்டார். என்னை விடவும் பத்து வயசு மூத்தவர், மாடு மேய்க்கப் போகும்போது என்னையும் கூட அழைத்துச் செல்வார்.

“டேய், நேற்றைக்கு படம் பார்க்கப் போனியே.. படம் எப்படி இருந்திச்சு?” என்றார்.

படத்தின் மாயாஜாலக் காட்சிகள் உற்சாகமாக என் கண்களில் நிழலாடின.

“அட்டகாசமாயிருந்திச்சு மாமா”

“ஓ. செரி, அது என்ன கதைன்னு சொல்லு..”

நான் ஒரு கணம் தடுமாறிப்போனேன்.

அது என்ன கதை..

“ஃபஸ்ட் எடுத்த உடனே, ஒரு பெரீய்ய அரண்மனை.. அதிலே ராஜாவும், அமைச்சரும் பேசிக்கிறாங்க…”

” டேய் டேய், நிறுத்துடா.. கதை என்னன்னு சொல்றான்னா.. இவன், சினிமாவுலே வர்ற சீனெல்லாம் சொல்றான்…” என்று கேலியாக பெருங்குரலில் சிரிக்க ஆரம்பித்தார் அவர். எனக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. வீட்டிற்கு ஓடி வந்து விட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து, என்னைத் தேடி வீட்டிற்கு வந்தார் மாமா. “டேய்.. இன்னிக்கு பள்ளிக்கூடம் லீவ்தானே.. மேய்ச்சலுக்கு வர்றியா?” என்று மாடு மேய்க்கக் கூப்பிட்டார்.

நான் மறுத்து விட்டேன். நான் எப்போதும் லீவ் நாட்களில் மாடு மேய்க்க உல்லாசமாகப் போய் வருவேன். (சொல் உபயம்: ஊத்துக்காடு வேங்கட கவி). இப்பொழுது போகவில்லை என்று சொன்னதும் என்னை விசித்திரமாகப் பார்த்தாள் அம்மா.

நான் வீட்டிற்குள் போய் சுவரில் சாய்ந்து கொண்டேன். ‘எனக்கு அந்தக் கதையைச் சொல்ல வேண்டும், அதை எப்படிச் சொல்வது?’ மறுபடியும் மறுபடியும் தீவிரமாக யோசித்துப் பார்த்தேன். காட்சிகள் என் மனக்கண் முன்னால் சுழன்று கொண்டிருந்தனவே தவிர, அவைகளை எப்படி கதையாக கோர்த்துச் சொல்வது என்று விளங்கவில்லை.யோசித்துக்கொண்டே சாய்ந்திருந்தவனை அம்மாவின் குரல் அழைத்தது. சோம்பலுடன் வெளியே எழுந்து போய் பார்த்தேன். வெளியே என் பள்ளித் தோழன் சேகரன் நின்றிருந்தான்.

விளையாடுவதற்காக என்னை வெளியே அழைத்துப் போக வந்திருந்தான். “நான் வரல்லே” என்று தலையை ஆட்டிவிட்டு, மீண்டும் வீட்டிற்குள் திரும்ப யத்தனித்தபோது, அவன், தன் டவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு பொருளை ரகசியமாக எடுத்துக் காண்பித்தான். அது உண்டி வில்!. எனக்கு உண்டி வில்லில் விளையாடுவது என்றால் அவ்வளவு உசுர். அர்ச்சுனன் வில் விசையை விட என் வில் விசை ஒசத்தியானது என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாள் என் பாட்டி பெருக்காத்தி.

“அணில் அடிக்கப் போகலாம் வா” என்றான்.

எனக்குள் சரேலென எழுந்த உத்வேகத்தில் அவனுடன் புறப்பட்டேன். வேலியோர மரங்களில் சற்றைக்கெல்லாம் எதிர்ப்பட்டன இரண்டு அணில்கள்! கோவைப்பழத்தின் செம்படலத்தை பிய்த்து விளையாடிக்கொண்டிருந்த உற்சாகம் எங்கள் இருவருக்கும் ஏறியது. சேகரன் ஓசைப்படாமல், என்னிடம் வில்லைக் கொடுத்து விட்டு ஆர்வத்துடன் என்னைப் பார்த்தான். நான், வில்லில் ஒரு வாகான கல்லைப் பொருத்தி, ஒரு கண்ணைச் சுருக்கிக்கொண்டு சரியான குறிபார்த்தேன். இரண்டும் குதித்துக் குதித்து விளையாடியபடி இலக்குக்கு போக்குக் காட்டிக்கொண்டிருந்தன. ஒரு வேட்டையில் 2 விலங்குகள் சேர்ந்துவிட்டாலே பிரச்சினைதான். ஒரு சிறந்த வேட்டைக்காரன், ஒரு சேர 2 விலங்குகளை வேட்டையாடும் தருணம் வாய்த்து விட்டால், அவனது விசை இலக்கற்று இருக்க வேண்டும் என்கிற ஜென் கதையை, அந்தச் சிறு வயதில் வேறுவிதமாகச் சொல்லியிருந்தார் என் தாத்தா. பருத்த ஒரு அணிலின் புட்டத்தைத் தேர்ந்து, விசையை இழுத்துச் சுண்டினேன்.

ஹோவ்! பெருக்காத்தியின் வாக்கு பொய்த்து விட்டது!

அணில் சுதாரித்துக்கொண்டு கண்ணிமைக்கும் தருணத்தில் மரத்தின் கிளைகளில் தாவி சடுதியில் மறைந்து போனது. சேகரன் என்னை ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வையின் ஏளனம் தாளாமல், அவனிடம் வில்லைக் கொடுத்துவிட்டு திரும்பி நடந்தேன். பின்னாலேயே ஓடிவந்த சேகரன், “செரி பரவால்லே வா.. அடுத்த மரத்துக்குப் போலாம்…” என்று கைகளைப் பிடித்து தாஜா செய்ய ஆரம்பித்தான்.

நாங்களிருவரும் மெதுவாக நடந்தோம். என் இறுக்கத்தையும், நான் ஏதோ ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதையும் என் அசுவாரஷ்யமான செய்கைகளில் அவன் உணர்ந்து கொண்டான். எதிரிலிருந்த ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தோம். அவன் என் சோகமயமாக விஷயத்துக்கு என்ன காரணம் என்று விசாரிக்கத் தொடங்கினான்.

நான் எல்லாவற்றையும் சொன்னேன். “இப்போது எனக்கு ஒரு கதை வேணும்…”

ஃபூ இவ்வளவுதானா.. நான் என்னவோ ஏதோன்னு பயந்து போனேன்.. எந்திரி எங்க தாத்தா கிட்டே போலாம்..” என்று துள்ளி எழுந்தான் அவன்.

அவனது தாத்தா முத்தாயப்பன் கதைகள் சொல்வதில் வல்லவர் என்றும், ஏராளமான கதைகள் அவரிடம் இருப்பதாகவும், அதில் ஒரு கதையை எனக்கு வாங்கித் தருவதாகவும் தெரிவித்தான்.

“இல்லை எனக்கு அது வேண்டாம்.. எனக்கு மாயமோதிரம் சினிமா கதைதான் வேண்டும்..” என்றேன்.

“அட.. எல்லாக் கதையும் எங்க தாத்தா கிட்டே இருக்கும்..” என்றான்.

இருவரும் படு உற்சாகமாக எழுந்து நடந்தோம்.

எங்கள் வீட்டிற்கு அருகாமையிலேயே ஓடுகிறது உப்புக்கரைப் பள்ளம். முத்தாயப்பன் அங்குதான் துணி துவைத்துக் கொண்டிருப்பார். ஒரு சிற்றாறாக ஓடிக்கொண்டிருக்கும் அந்த நீர்நிலை அருகில் உள்ள சிறு சிறு விவசாய நிலங்களின் வெள்ளாமைக்கு உதவும் வகையில் நீர் வற்றாது ஓடிக்கொண்டே இருக்கும். நாங்கள் அதில் இரவு நேரங்களில் மீன் வெட்டப் போவோம். அது தனிக்கதை. அந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் ஆடைகளை வெளுத்துக் கொடுக்கும் வாழ்வியலில், குடிமைச் சமூகமான வண்ணார் மக்கள், அழுக்குத்துணி மோலிகளை அந்த ஓடைப்பள்ளத்தில் பாய்ந்தோடும் நீரில் துவைப்பார்கள். அலசிய துணிகளை கரையோரத்தில் உயர்ந்து நிற்கும் பாறைகளில் காயப்போட்டிருக்கும் காட்சியை தூரத்தில் இருந்து பார்த்தால், ‘கொக்கு பூத்த வயல்’ என்று இலக்கிய நயமாகச் சொல்லும் சொற்றொடர் இங்கு மிகச் சரியாக அணியமாகும்.

நாங்கள் வண்ணாம் பாறைக்குப் போய்ச் சேர்ந்தபோது, முத்தாயப்பன், தனக்கு முன்னால் பரப்பியிருந்த வெளுத்த துணிகளுக்கு அடையாளமாக, வண்ணாங்குறி போட்டுக் கொண்டிருந்தார். காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த அவரது முடிக்கற்றை வெள்ளாவியில் வைத்தது போல தும்பைப்பூவாய் வெளுத்திருந்த அழகு அவர் மீது பெரும் வசீகரத்தை ஏற்படுத்தியது.

அருகில் சென்று, அவர் ஆடைகளில் குறியிடும் அழகை பார்த்துக் கொண்டே நின்றிருந்தோம். அவர் அவ்வப்போது, தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த கழுதையை அதட்டி திருப்பி விட்டுக் கொண்டிருந்தார். வெகு நேரம் தயங்கியவாறு, அங்கேயே நின்றிருந்த எங்களைப் பார்த்து, “என்ன ஏதும் விசேஷமா?” என்று கேட்டார்.

சேகரன் அவரிடம் குனிந்து, எனக்கு ஒரு கதை வேண்டும் என்று வந்திருப்பதாகச் சொன்னான்.

அவர் உடனே பரவசப்பட்டு, மிகுந்த உற்சாகமடைந்து பெருங்குரலெடுத்து நாலரைக் கட்டையில் ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தார்.

வண்ணாங்குறியில் ஒளிஞ்சி நிக்கற
சின்னாச்சாமி சித்தா
அழுக்கு வெளுத்து அழுக்கு வெளுத்து
வானம் வெளுத்துப் போச்சு
வெள்ளாவிப் புகை மூட்டம் போட்டு
கூரை கறுத்துப் போச்சு….

(சிறுவயதில் கேட்ட அந்தப்பாட்டு வரிகள் அச்சு அசலாக ஞாபகம் இல்லை. ஆனால், உள்ளடக்கம் இதுதான். பின்னாளில் நான் செழுமைப்படுத்திய பாடல் வரிகள் இவை.)

“ஐயையோ எங்களுக்கு பாட்டெல்லாம் வேண்டாம்… கதைதான் வேணும்..” என்று இருவரும் கோரஸாகக் கத்தினோம்.

பாட்டை நிறுத்திய அவர், என் முகத்தை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார், தூரத்தே தெரிந்த கழுதையின் நிழலை நோக்கினார். “மொதல்லே நீங்க ரெண்டு பெரும் என்ன பண்றீங்கன்னா.. அதோ, அப்படியே வடக்காலேப் பக்கமாப் போயி நம்ம செல்லியை முடுக்கிட்டு வந்துருங்க.. அதுக்குள்ளே நான் கதையைப் புடிச்சி வெச்சிருக்கேன். ” என்றார்.

நானும், சேகரனும் உற்சாகத்துடன் ஒரே ஓட்டமாய் ஓடி செல்லியை அந்தப் பக்கமாக ஓட்டிக்கொண்டு வந்தோம்.

“ஒரு ஊர்லே ஒரு முட்டாள் ராசா இருந்தான்.. அவனுக்கு ஒரு மந்திரி. அவன் இவனைவிட பரம முட்டாளு… ஒரு நாள், அந்த ஊருக்கு ஊசி பாசிமணி, விக்கிற ஒரு நரிக்கொறவன் வந்தான்..”

நான் சேகரனை ஒரு கிள்ளு கிள்ளினேன். அவன் திரும்பி என் முகத்தைப் பார்த்து என் எண்ணங்களைக் கண்டு கொண்டவனாக,

“தாத்தா, நிறுத்து, எங்களுக்கு ‘மாயமோதிரம்’ கதைதான் வேணும்..” என்றான்.

கதை சொல்வதை நிறுத்திய தாத்தா, தனது வெண்ணிற முடியைக் கோதி வீட்டுக் கொண்டார். செல்லி, திசைமாறி வேறு திசையில் திரும்பியிருந்ததைக் கவனித்த அவரது கண்கள் கலவரமடைந்ததை உணர்ந்த நாங்கள், எழுந்தோடி எங்களுக்கு அருகாமையில் ஓட்டிக்கொண்டு வந்தோம்.

“மாய மோதிரம்… ம்..” என்று கண்களை மூடியவாறு யோசித்தவர், சட்டென பிரகாசமாய் கண்களைச் சிமிட்டினார்.

“உங்களுக்கு ‘ஏகாலி ராஜா’ கதை சொல்றேன்.. ஒக்காருங்க…”

“ம்ஹூம்.. ‘மாய மோதிரம்’ கதைதான் வேணும்..”

“அட அதாம்பா .. அந்தக் கதைதான்.. ஒக்காருங்க..”

நாங்கள் அவர் முன் சம்மணமிட்டு உட்கார்ந்து, விவரிக்கமுடியாத பதற்றத்துடன் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

“ஒரு ஊர்லே ஒரு ஏகாளியப்பன் இருந்தான்.. அவன் தினமும் ஊருக்குள்ளே போயி குடியானவங்களோட அழுக்குத் துணிகளை எடுத்திட்டு வந்து வெள்ளாவி வெச்சு வெளுத்து கொண்டு போயிக் குடுத்து, ஜீவனம் பண்ணிட்டு வந்தான். தும்பைப்பூக் கணக்கா வெள்ளை வெளேர்னு சொலிக்கிற அவனோட வெள்ளாவியை அந்த ஊர் மக்கள் அவ்வளவு கொண்டாடுவாங்க.. வெள்ளை வெளேர்னு இருக்கற எதைப்பாத்தாலும், ஏகாளியப்பனோட வெள்ளாவி மாதிரி இருக்குன்னு சொல்வாங்க ஊர்க்காரங்க. “ஈசான மூலையிலே மின்னல் வெட்டிச்சின்னா, ஏகாளியப்பனோட வெளுப்பு” என்பது சொலவடை. ஏகாளியப்பனோட வெள்ளாவி வெளுப்பு, அந்த எம்பெருமானோட தலையிலே இருக்கிற நெலா மாதிரி, வெள்ளை வெளேர்னு மின்னல் மாதிரி மின்னும். இன்னும் சொல்லப்போனா, அந்த நெலாவையே மாசத்திக்கு ஒரு மொறை வெள்ளாவியிலே வெச்சு வெளுத்துக் குடுப்பாரு.. நெலா மேலே ஒவ்வொரு நாளும் அழுக்கு சேந்து சேந்து, நெலாவையே மறைச்சுப் போடுமல்லா… அப்பிடி இருந்த ஒருநாள், எம்பெருமான் வந்து, நெலாவை வெளுத்துக் குடுக்கச் சொல்லி ஏகாளியப்பன் கிட்டே கேக்க, அவரோட வாக்குக்கு இணங்கி, ஏகாளியப்பனும் வெள்ளாவியிலே வெச்சு வெளுத்துக் குடுத்தாரு, அந்த வெள்ளாவியிலே வெக்கற காலம்தான் அம்மாவாசை..

இப்படி இருக்கிற சமயத்திலே, ஒரு நாள் பொழுதிலே, ஒரு கொக்கு ஏகாளியப்பன் கிட்டே வந்திச்சு.. அந்தக் காலத்திலே கொக்கெல்லாம் அட்டக்கருப்பா காக்கா மாதிரி இருக்கும்.. அந்தக் கொக்கு வந்து அவருக்கு முன்னாடி நின்னு தேம்பித் தேம்பி அழுத்திச்சி.

“கொக்கம்மா கொக்கம்மா.. ஏன் அழுகறே..” ன்னு ஆறுதல் வார்த்தை கேட்டாரு ஏகாளியப்பன்.

உடனே அந்தக் கொக்கு சொல்லிச்சு.. “எங்க துயரத்தை உன்கிட்ட சொல்லி நாங்க கொஞ்ச நேரம் அளுவரோம்.. எங்களை படைச்ச கடவுளுக்குத்தான் கண்ணில்ல.. உன்னை நாங்க கடவுளா நெனச்சி ஒரு ஒத்தாசை கேக்கறோம் செஞ்சி குடுப்பியா” என்றது.
“என்னாலே முடிஞ்சதை செய்றேன், சொல்லு..” என்றார் ஏகாளியப்பன்.

“ஏகாளியப்பா, ஏகாளியப்பா ஊருக்கெல்லாம் வெள்ளாவி வெளுத்து, பளீர்னு பாலொரு நெறமும் உன் வெளுப்பொரு நெறமுமாக ஆகாசத்திலே தொங்கற முகில் மாதிரி சலவை பண்ணிக் குடுக்கறே.. அட்டக்கருப்பா காக்கா மாதிரி இருக்குற எங்களை உன்னோட வெள்ளாவியிலே வெச்சு வெளுத்து ஆகாசத்திலே தொங்கற முகில் மாதிரி மாத்திக் குடுப்பியா?” என்று கெஞ்சலுடன் கேட்டது.

உடனே, நெத்தியைச் சுருக்கீட்டு பலமா யோசிச்சாரு ஏகாளியப்பன். ” செரி. அப்பிடி நான் உங்களை வெளுத்துக் குடுத்திட்டா எனக்கென்ன வெகுமானம் தருவீங்க..” ன்னு கேட்டார்.

“நீ எது கேட்டாலும் செஞ்சி தர்றோம்..” ன்னு சொல்லிச்சு கொக்கு.

“அப்பிடியெல்லாம் பொத்தாம் பொதுவா சொல்லப்படாது.. இதா, இதைச் செய்து தாரேன்னு வாக்குக் குடுக்க வேணும்..”

இந்த இடத்தில் கதையை நிறுத்தி விட்டு, தொலைவாய்ப் போயிருந்த செல்லியை இந்தப்பக்கமாக மடக்கிக்கொண்டு வருமாறு சொன்னார். நாங்கள் இருவரும் சிட்டாகப் பறந்து செல்லியைப் பத்திக்கொண்டு வந்தோம்.

மீண்டும் கதையை ஆரம்பித்தார்.

“நான் உங்க வம்சத்தோட வரலாற்றையே மாத்தப் போறேன். அது எவ்வளவு பெரிய்ய காரியம்னு யோசிச்சு, அதுக்கேத்தா மாதிரி, உலகத்திலே யாருக்கும் கெடைக்காத அபூர்வமான ஒரு வெகுமானம் குடுக்க வேணும்..” என்றார் ஏகாளியப்பன்.

கொக்கு வெகு நேரம் மண்டைய ஒடைச்சிட்டு யோசிச்சிப் பாத்தபோது, சட்டுனு, ஒரு மின்னல் வெட்டிச்சி.

“ஏகாளியப்பா, இந்த உலகத்திலேயே யார் கிட்டேயும் இல்லாத ஒரு அபூர்வமான பொருளு எங்கிட்டே இருக்கு.. அதுதான் மாய மோதிரம்.. அதை, மனுஷ ஜீவராசியாப் பொறந்த யாரு போட்டுக்கிட்டாலும் அவங்க உடனே மாயமா மறைஞ்சிடுவாங்க.. அப்பேர்ப்பட்ட விசித்திரமான பொருளை நான் உனக்குத் தாரேன்..” என்று சொல்லிச்சு கொக்கு.

ரெண்டு பெரும் கையடிச்சு சத்தியம் பண்ணிட்ட பிறகு, ஏகாளியப்பன், கொக்கம்மாவை வெள்ளாவியில் வைத்து வெளுக்க ஆரம்பித்தார். அடுத்த பொழுதில், கொக்கு பளீரென்று மின்னும் தும்பைப்பூ கணக்காய் மாறி ஆகாசத்திலே வட்டமடிக்க ஆரம்பிச்சது, ஆகாசத்திலே தொங்கற முகில் கூட்டமெல்லாம் அந்த வெள்ளாவி நெறத்தைப் பாத்து வெக்கப்பட்டு ஓடியே போயிடுச்சி.

ஏராளமான சந்தோசத்தோடு ஏகாளியப்பன் கிட்டே வந்து, அந்த மாய மோதிரத்தைக் குடுத்திட்டு, ஆனந்தத்தோடே றெக்கையடிச்சிட்டு பறந்து போயிடுச்சி கொக்கு.

அதுக்குப் பெறகு, ஏகாளியப்பன் அந்த மாய மோதிரத்தை கை வெரல்லே போட்டுட்ட மறு பொழுதிலேயே மாயமா மறைஞ்சிட்டாரு…

இப்படி கிளை கிளையா கதையைச் சொல்லிக் கொண்டே இருந்தார் முத்தாயப்பன்,

ஏகாளியப்பன் மாயமோதிரத்தை போட்டு மாயமாக மறைந்து செய்த சாகசச் செயல்கள், இளவரசியை தூக்கிக்கொண்டு போன ராட்சசனை ஒழித்துக்கட்டிவிட்டு, இளவரசியை காப்பாற்றி அழைத்து வருவது, மன்னர் இளவரசியை ஏகாளியப்பனுக்கு மணம் முடித்து வைத்தது என்று அந்தக்கதை ஒவ்வொரு பொழுதும் நீண்டு கொண்டே போனது. நான் கழுதையை மேய்த்துக் கொண்டே அந்தக் கதையை கிடைத்ததற்கரிய பெரும் செல்வமாக உள்ளே வாங்கிக் கொண்டேன்.

அதன்பிறகு, என் மாமனுக்கு “மாயமோதிரம்” கதையை நான் சற்று மாடிஃபை செய்து சொன்னேன். ஏகாளியப்பனை, சிறு குழந்தையிலேயே காணாமல் போய் ஏழைக் குடியானவன் வீட்டில் வசிக்கும் இளவரசனாக மாற்றினேன். வில்லன் எய்த அம்பில் கீழே வீழ்ந்த கொக்கை எடுத்து காப்பாற்றிய இளவரசனுக்கு மாயமோதிரம் கொடுத்துச் செல்கிறது கொக்கு. அதை வைத்துக் கொண்டு மாயமாக மறைந்து அந்த நாட்டின் தீய சக்திகளை ஒழித்துக் கட்டி இளவரசியை மணமுடிக்கிறான் கதாநாயகன் என்று கதையைச் சொன்னேன்.

ஆனால், மாயமோதிரத்தின் கதைகள் இத்தோடு முடிந்து விடுவதில்லை.

 

******

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page