- கௌதம சித்தார்த்தன்
நேற்றைய உன்னதம் விழாவில் வெளியிட்ட காலப்பயண அரசியல் நூல் குறித்து சற்றே விரிவான குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
‘காலப்பயண அரசியல்’ என்னும் இந்த நூல் 2008 ல்நான் எழுதிய ஒரு கட்டுரை. 2009 ஜனவரி உன்னதம் இதழில் வெளிவந்தது. அந்த இதழில் வெளிவந்த, ரே பிராட்பரி மற்றும் ஆல்ஃப்ரெட் பெஸ்டர் ஆகியோரது காலப் பயணம் சார்ந்த 2 கதைகளை (தமிழ் மொழியாக்கம் : கால. சுப்ரமணியம்) முன்வைத்து, நான் எழுதிய தனித்துவமான விமர்சனக் கட்டுரை இது.
அப்போதைய சூழலில் இக்கட்டுரை தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பெரும் கவனம் பெற்ற நிலையில் பலரும் பாராட்டினார். அந்த உத்வேகத்தில் அதை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் மேலெழுந்தது. அந்த உத்வேகத்தில், 2015 ல் மீண்டும் செழுமைப் படுத்தினேன். அதன்பிறகு என் மொழிபெயர்ப்பாளர் மஹாரதியின் ஆலோசனையின் பேரில், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, என் சர்வதேச நண்பர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்தேன். பெரும் கொண்டாட்டத்துடன் இதை வரவேற்றார்கள் நண்பர்கள். அந்தக் கொண்டாட்டம் தீயாய் பரவி பிறமொழிகளிலும் பற்றிக் கொள்ள, இத்தாலி, ஸ்பானிஷ், சீனம், ரோமானியன், போர்த்துகீஸ் என்று தகத்தகாயமாக ஒளிர்ந்தது.
இந்த நூலை தமிழில் வெளியிட ஆர்வம் கொண்டு, 2018 ல் 50 பிரதிகள் POD யில் வெளியிட்டேன். பிறகு வழக்கம் போல தமிழ்ச் சூழல் மீதான கசப்புகளினால் அந்தப் பிரதிகளை அப்படியே கட்டி வைத்து விட்டேன். இப்பொழுது பிறமொழிகள், இந்த நூலை எதிர்கொண்ட அப்டேட்ஸ் எல்லாவற்றையும் இணைத்து, 2022ல் வெளியிடுகிறேன்.
இந்த நூல் உருவான பின்னணி ஒரு பின் நவீனத்துவக்கதை பாணியில் மிக மிக சுவாரஷ்யமானது.
***
1980 – 90 களிலிருந்து விஞ்ஞான புனைவு இலக்கியத்தின் மீது எனக்கு பெரும் ஆர்வம் ஏற்பட்டது. தமிழில், விஞ்ஞான புனைவு இலக்கியம் குறித்து, சரியான பார்வையோ, படைப்புகளோ இல்லை.தமிழின் நவீன இலக்கியத்தில் விஞ்ஞான புனைவுக்கான தளம் காலியாகவே இருந்து வருகிறது; விஞ்ஞான புனைவு என்பது ஏதோ குழந்தைக் கதைகள் சமாச்சாரம் போலவும், அல்லது பாப்புலரான மசாலா கதைத்தன்மை போலவும் ஆதியிலிருந்தே கட்டமைக்கப்பட்டு விட்டது. காரணம், தமிழ் மொழியின் வெகுஜன எழுத்தாளர் சுஜாதாதான் முதன்மையாக இந்தத் துறை பற்றி, தமிழ் சூழலில் பேசியும் எழுதியும் வந்தவர். அதனாலேயே விஞ்ஞான புனைவு என்பது கமர்சியல் எழுத்து என்கிற எண்ணம் தமிழ் நவீன இலக்கியத்தில் படிந்து விட்டது.
எனக்கு அவரது எழுத்திலேயே மிகவும் பிடித்தவை விஞ்ஞான புனைவுகள் தான். 1980 கள் கால கட்டத்தில், அவரது விஞ்ஞான புனைவு எழுத்துக்கள், “தேவன் வருகை” என்ற தொகுப்பாக வெளிவந்தது. அவரது எழுத்துக்களை தொடர்ந்து வெளியிடும் குமரி பதிப்பகம் என்ற நாகப்பட்டிணத்திலிருந்து வெளிவரும் வெளியீட்டு நிறுவனம் இந்த தொகுப்பை வெளியிட்டது. இன்றுவரை என் நூலகத்தில் இடம் பெற்றிருப்பது “தேவன் வருகை”
இதில் இடம் பெற்றுள்ள “சூரியன்” என்கிற கதை உலகளவில் பேசப்பட வேண்டியது. இன்றுபோல இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி சுஜாதாவுக்கு கிடைத்திருந்தால், உலகளாவிய ஒரு கவனத்தை பெற்றிருப்பார்.
என் சிறு பிராயத்தில், சுஜாதாவின் எழுத்துக்கள் என்னைக் கவர்ந்திருந்தன. அப்பொழுது எங்கள் கிராமத்தில் மிக எளிதாகக் கிடைத்தது குமுதம்தான். அதில் வெளிவந்த ‘ப்ரியா’ என்ற அவரது தொடர்கதையும், அதன் எழுத்து பாணியும் என்னை அந்த வயதில் வசீகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில், அவர் மீதான வாசகப் பித்தில், அவர் ஒருகாட்சியில் வருகிறார் என்பதற்காக, ‘தைப்பொங்கல்’ என்னும் ஒரு திரைப்படத்தைப் பார்க்க பெரிதும் மெனக்கெட்டிருக்கிறேன்.
ஆனால், பின்னாட்களில் அவரது எழுத்தின் பாப்புலர் தன்மை பிடிக்காது விலகினாலும், அவரது, விஞ்ஞான புனைவுகளையும், விஞ்ஞானம் சார்ந்த கட்டுரைகளிலிருந்தும் விலகமுடியவில்லை. சிலிக்கன் சில்லுப்புரட்சி, நானோ டெக்னாலஜி போன்ற விஞ்ஞான நூல்கள் முக்கியமானவை.
ம.ராஜாராமுடன் இணைந்து எழுதியிருந்த ‘காசளவில் ஒரு உலகம்’ நூல் என் விருப்பங்களில் ஒன்று. ம.ராஜாராம் எனக்கு மிக மிகப்பிடித்தமான “தற்கால மலையாளச் சிறுகதைகள்” என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர். அந்தக்கட்டத்தில் தமிழுக்கு, அந்த நூலின் வருகை என்பது மிக முக்கியமானது. யதார்த்தவாதம் என்கிற பெயரில், எந்தவிதமான புதிய narration ம் இல்லாமல், தட்டையான பார்வைகளுடன் Cliche வாக செயல்பட்டுக் கொண்டிருந்த சூழலை புத்தம் புதிய நுட்பங்களை கொண்ட கதையாடல் பாணிகளை நோக்கி திசை திருப்பிய நூல்.
இந்தப் பின்னணியில், சுஜாதாவின் விஞ்ஞான கட்டுரைகளை – எழுத்துக்களை விரும்பிப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு தருணத்தில், அவர், Chaos theoryயை முன்வைத்து Butterfly effect என்னும் கருத்துருவத்தை விளக்கியிருந்தார். அவருக்கே உரித்தான வெகுஜன வாசகன் புரிந்து கொள்ளும் விதத்திலான மேலோட்டமான சுருக்கம் அது. அந்தச் சுருக்கமான பதிவில், ரே பிராட்பரியின் ஒரு சிறுகதையில், “ஒரு பட்டாம்பூச்சியின் பறத்தல் என்பது எவ்வாறெல்லாம் கால வெளியைப் பாதிக்கிறது” என்பதை, ரே பிராட்பரி தனது சிறுகதையில் எழுதியிருப்பதாக, ஒருவரி – ஒரே ஒரு ஒற்றை வரி – எழுதியிருந்தார். அந்த ஒற்றை வரி எனக்குள் பெரும் புதிராக மாறி என்னை அலைக்கழிக்க ஆரம்பித்தது. அந்தக் கட்டத்தில், என் மிக நெருங்கிய நண்பராகவும், உலகளவிலான இலக்கிய விஷயங்களை அறிமுகப்படுத்துபவராகவும் நான் போற்றிக்கொண்டிருந்தவர் கால.சுப்பிரமணியம். அவரிடம் இது குறித்து பேசினேன், “அது என்ன கதை? அந்தக்கதை உங்களிடம் இருக்கும். அந்தக் கதையை நாம் தமிழில் மொழியாக்கம் செய்து உன்னதம் இதழில் வெளியிடலாம் ..” என்று வேண்டினேன். (பிராட்பரியின் அனைத்து நூல்களையும் வைத்திருப்பவர் அவர்.)
“முதலில் நீங்கள் சொல்வதே எனக்குப் புரியவில்லை. பிராட்பரியின் அந்தக் கதையின் பெயர் என்ன? ”
“இல்லை. சுஜாதா அந்த ஒரு வரியைத்தான் சொல்லியுள்ளார்..”
அவர் மிகவும் யோசித்து, “அப்படியானால், அது ‘A Sound of Thunder’ கதையாகத்தான் இருக்கும்..” என்றார்.
“அப்படியா.. அதென்ன கதை?”
“ஆனால், அது நீங்கள் சொன்னதுபோல இல்லையே.. அது Time travel பற்றிய கதையாச்சே..”
Chaos theory பற்றியும் Butterfly effect புரியும் வெளிவந்த பல்வேறு விஞ்ஞானப்புனைவுகள் பற்றி விஸ்தாரமாகப் பேசினார்.
எனக்கு அந்த உரையாடலின் குவி மையத்தில் எங்கோ தப்பு நடந்துவிட்டது என்று யூகித்தேன்.
அதன்பிறகு, கால சுப்ரமணியத்துடனான பல்வேறு சந்திப்புகளிலும் உரையாடல்களிலும், அந்த வண்ணத்துப்பூச்சியின் மர்மம் உடைபடவே இல்லை.
சுஜாதா தவறாகச் சொல்லியுள்ளாரா, அல்லது சுஜாதா சொன்னதை நான் என் கற்பனைக் கட்டமைப்புக்கேற்பப் புரிந்து கொண்டு அவ்வாறான ஒரு கதையைத் தேடிக் கொண்டிருக்கிறேனா? ஒரு labyrinth போன்ற ஒரு பெரும் புதிரில் மாட்டிக் கொண்டு வெளியே வரும் வழி தெரியாது அந்தப் புதிர் வளையத்துக்குள்ளேயே காலங்களற்று தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்தேன்.
இது குறித்து, நவீன தமிழ்ச் சூழலில் எவரிடமும் எதுவும் பேச முடியவில்லை. ஏனெனில், நான் ஏற்கனவே சொன்னதுபோல், விஞ்ஞான புனைவுகள் என்பது குழந்தைக் கதைகள் சமாச்சாரம். மட்டுமல்லாது, கமர்ஷியல் மசாலாக்கதைகள் அய்யா.. அதைப்பற்றிப் பேசுவது இலக்கிய அந்தஸ்துக்கு உகந்தது அல்ல.
சரி, இந்தப் புதிர்ப்பாதையிலிருந்து என்னை மீட்டெடுக்க சுஜாதாவால் மட்டும்தான் முடியும். அவரைத் தேடிப் போய்ச் சந்திப்பதெல்லாம் சாத்தியமில்லை.. என்று அந்த நினைவுகளைக் கடாசி விட்டேன். இவையெல்லாம் 2000 துவக்கங்களில் நடக்கிறது.
***
அந்தக் கட்டத்தில் சென்னையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில், எழுத்தாளர் தமிழ் மகனை சந்தித்துப் பேசினேன். என்னிடமிருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவர், தான் ஆசிரியப் பொறுப்பில் இருந்த “மின்மினி” என்னும் வெகுஜனப் பத்திரிகையில் இந்த genre ல் கதைகள் எழுதுங்கள் என்றார். அதைத்தொடர்ந்து, வாரம் ஒரு கதை என்ற ரீதியில் ரகசியமாக, சில வாரங்கள் விஞ்ஞானச் சிறுகதைகள் எழுதினேன். ஆனால், எவர் ஒருவரிடமும் சொல்லவில்லை. இலக்கிய உலகில் தெரிந்தால் “இலக்கிய பிரஷ்டம்” செய்து இலக்கிய உலகிலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள்.
***
இப்படியான தருணத்தில், சுஜாதா குமுதம் பொறுப்பாசிரியராக பணியில் சேருகிறார். அது மட்டுமல்லாது, சிறுகதை, கவிதை, நாவல், குறுநாவல் என்கிற பிரிவுகளில் ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைந்து ஒரு பரிசுப்போட்டி ஒன்றை அறிவிக்கிறார். வெற்றியாளர்கள் தங்களது கனவு நாடுகளுக்கு விமானத்தில் இலவசமாகப் பயணம் செய்து வரலாம் என்று அனைவரையும் பங்குபெறச் சொல்லி அழைப்பு விடுக்கிறார். மட்டுமல்லாது, இந்தப் படைப்புகளைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் அனைவருமே சீரியஸ் இலக்கியவாதிகள்!
உடனே, பெரும்பான்மையான இலக்கிய எழுத்தாளர்கள் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
நானும் ‘மண்’ என்ற தலைப்பில் ஒரு குறுநாவலை எழுதி அனுப்பினேன்.
***
இந்தக்கட்டத்தில், கோவை ஞானியிடமிருந்து ஒரு கடிதம்: “தன்னை உடனே வந்து சந்திக்குமாறு..”
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஞானிக்கும் எனக்கும் பெரிதான தொடர்பு எதுவும் இருந்ததில்லை. ஆனால், ஞானி குமுதம் தேர்வுக்குழுவின் நடுவர். ஒருவேளை என் குறுநாவல் தேர்வாகி விட்டதோ?
ஆர்வமுடன் ஓடினேன்.
ஞானி, நாவல் குழுவின் நடுவர். நான் அனுப்பியிருந்தது குறுநாவல்! அதற்கு வேறு ஒரு நடுவர்! குமுதம் போட்டிக்கு வந்திருந்த நாவல்களை ஞானிக்கு அனுப்பி வைத்திருந்தது குமுதம் நிர்வாகம். அதை அவருக்குப் படித்துக் காண்பிக்க வேண்டும். அதற்கு இலக்கியம் சார்ந்த ஒருவர் வேண்டும் என்று தேடியதில், என்னை அழைக்கலாம் என்று பிரியப்பட்டிருக்கிறார் ஞானி.
தேர்வுக் குழுவுக்கு அனுப்பட்ட அனைத்து நாவல்களையும் படித்து தேர்வு செய்வதா? எவ்வளவு அற்புதமான பணி! ஏறக்குறைய நாவல் தேர்வின் நடுவர்! நான் மட்டற்ற மகிழ்ச்சியில் வெகு ஆர்வத்துடன் சம்மதம் தெரிவித்தேன்.
ஆனால், அந்த மட்டற்ற மகிழ்ச்சி இரண்டுமூன்று நாட்களிலேயே சுருங்கிப் போயிற்று! அந்த தருணங்கள் குறித்து விரிவாகச் சொல்ல முடியாவிட்டாலும் சுருக்கமாக: ‘அது ஒரு பெரிய தலை இடி. ஒரு நாவலை சத்தம் போட்டு வாசிப்பது என்பது – ஒரு சில இடங்களில் அவருக்குப் புரியாத பகுதிகளை மீண்டும் வாசித்துக் காட்டுவதென்பது ஒரு கொடுமை!’
ஆனால், என் அப்பாவுக்கு நான் மகாபாரதம் வாசித்துக் காட்டியிருக்கிறேன். கும்பகோணம் பதிப்புகள்! அந்த வாசிப்பு எனபதே அவ்வளவு அற்புதமான அனுபவத்தை எனக்குள் ஏற்படுத்தும். அதை வாசிக்கும்போது, நான் ஒரு குரலாக மாறி, அஸ்தினாபுரத்தின் வீதிகளில், அஞ்ஞாத வாசக் காடுகளில் அலைந்து கொண்டிருப்பேன். இன்னும் சொல்லப்போனால், வாசிப்பு நேரமான, இரவு நேரம் விரைவில் வராதா என்றெல்லாம் ஏங்கியிருக்கிறேன்!
தேர்வுக்கு வந்திருந்த 50 க்கும் மேற்பட்ட நாவல்கள் மலை போல குவிந்திருந்தன. நான் ஊருக்குப் போய்விட்டு இரண்டு நாட்களில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். இருந்தாலும் விடாமல், வற்புறுத்தி என்னை அழைத்தார். பெரியவரின் சொல்லைத்தட்டமுடியாது.வேறு வழியின்றி அவ்வப்போது போய்வருவேன். என் சுணக்கத்தையும் பற்றற்ற தன்மையையும் உணர்ந்த ஞானி, வாசிப்புக்கு மேலும் சில நண்பர்களை சேர்த்துக் கொண்டார்.
சலித்துக் கொள்ளாதே வாசகா…பிரதான விஷயமே இனிமேல்தான் வருகிறது!
நான் இவ்வளவு ஒவ்வாமைகளையும் சகிப்புடன் ஏன் ஏற்றுக் கொண்டேன் என்ற உள்ளக்கிடக்கை புரிந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன்.
ஆம், எப்படியிருந்தாலும் இந்த செயல்பாடுகள் மூலமாக சுஜாதாவை நேரில் சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தேன். அத்தருணத்தில், அவர் சொல்லியிருந்த அந்த பிராட்பரியின் கதை குறித்தும், அதன் தலைப்பு குறித்தும் கேட்டுவிடவேண்டும் என்ற தணியாத தாகம்!
“சுரட்டையன் குறி என்றைக்கும் பெரட்டியதில்லை” என்ற சொலவடை உருவான வமிசாவளியில் வந்தவன் நான்.
ஒரு வழியாய் நாவல் பிரதிகளைப் படித்து முடித்து கட்டியெடுத்துக் கொண்டு, நானும் ஞானியும் குமுதம் அலுவலகத்தில் கொண்டுபோய் சேர்த்த என் கணக்கு என்றும் தப்பியதில்லை.
சுஜாதா, இலக்கியவாதிகள் மீது பெரும் மதிப்பும் மரியாதையையும் வைத்திருந்தார் என்பதை எங்கள் மீது காட்டிய அதீத உபசாரத்தில் உணர்ந்து கொண்டேன். ஞானி அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். என் பெயரைக் கேட்டதும் ஓரிரு வினாடிகள் திகைத்துப் போனவராக அவர் முகம் மாறிப்போனது. எனக்குத் தாங்க முடியவில்லை. என் பெயரைக் கேட்டதும், நான் பெரிதும் நேசித்த ஒரு எழுத்தாளர், பெரும் பரவசத்துடன் என்னை எதிர்கொள்ளும் அந்தக் கணங்களுக்கு ஒப்புக்கொடுத்தேன்.
ஞானியும் அவரும் நாவல் தேர்வு குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். ‘நான் நடுவராக இருந்தாலும், இவரும் மற்றும் சில நண்பர்களும் நடுவர் குழுவில் தனக்கு உதவியாக செயல்பட்டார்கள்..’ என்றும், ‘வாய்ப்பிருந்தால் இவர்களின் பெயரை நாவல் வாசிப்புக்கு உதவியவர்கள் என்று வெளியிடுங்கள்..’ என்று தெரிவித்தார். எனக்கு அந்த உரையாடலில் மனம் லயிக்காமல், கடந்த பல வருடங்களாக எனக்குள் உழன்று கொண்டிருந்த புதிரின் வளையங்கள் பெரும் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தன. ஒரு சிறு இடைவெளி கிடைத்தால் போதும், சட்டென்று அந்தப் புதிர் முடிச்சை அவிழ்த்து விடவேண்டும் என்று நிலை கொள்ளாது தவித்தேன். ஒரு வழியாய் பேசி முடித்து விட்டு விடைபெற்றுக்கொண்டு அவரது அறையிலிருந்து வெளியே வந்தோம். கடவுளே!
வெளியே ரிசப்ஷனில் ஆளரவமற்ற இருக்கை கண் சிமிட்டியது. சட்டென்று அதில் ஞானியை அமர்த்தி விட்டு, “ஒரு நிமிஷம் உக்காருங்க.. என் பேனாவை உள்ளே அறையில் விட்டுட்டேன், போய் எடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்..” என்று சொல்லிவிட்டு, ஒரே பாய்ச்சல்..
நல்லவேளையாக சுஜாதா அங்கேயே இருந்தார். என்ன விஷயம்? என்று தலையை உயர்த்தினார். “சார்.. ஒண்ணுமில்லே.. நான் உங்க எழுத்தை தொடர்ந்து படிச்சிட்டு வரேன்.. நீங்க ஒரு கட்டுரையிலே ரே பிராட்பரி கதை பத்தி எழுதியிருக்கீங்க.. அது என்ன கதைன்னு தெரிஞ்சுக்கணும்..” படபடவென்று நா குழறினேன்.
“மொதல்லே உக்காருங்க.. ம். இப்ப சொல்லுங்க.. என்ன விஷயம்..?”
சொன்னேன்.
ஓரிரு நிமிடங்கள் புருவத்தைச் சுளித்துக் கொண்டார், நெற்றியில் 2 வருட ரேகைகள் ஓடின..
“ஓ எஸ் அதுவா? ஆமா.. அது.. அந்தக் கதையோட டைட்டில் Sound of Thunder னு நெனைக்கிறேன்.. நல்ல கதை. ஒரு அருமையான Time travel கதை..”
ஒரு கணம் என் புதிர் வளையங்கள் படீர் படீர் என உடைந்தன. உடலெங்கும் பெரும் மகிழ்ச்சி குறு குறுத்தது. கால்கள் பரப்பரத்தன
சட்டென்று எழுந்தேன். “ஓகே தேங்க் யூ சார்..” விடை பெறும் நோக்கில் இரு கரங்களையும் கூப்பினேன்.
அவர் கையை உயர்த்தி, “ஒரு நிமிஷம் உக்காருங்க..” என்றார். “உங்ககிட்டே ஒரு விஷயம் பெர்சனலா சொல்லணும்..”
நான் கலவரத்துடன் அமர்ந்தேன்.
“நீங்க இந்தப் போட்டிக்கு குறுநாவல் அனுப்பி இருக்கீங்கல்லே..”
“ஆமா சார்..”
“செலக்சன் லிஸ்ட்லே உங்க குறு நாவல் இருக்கு.. ஆனா.. நீங்க நாவலுக்கான நடுவர் குழுவிலே செயல்பட்டிருக்கீங்க..” என்று இழுத்தார் அவர். (நடுவர் குழுவில் இருப்பவர்கள் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்னும் விதியை அறிந்திருப்பீர்கள்.)
“ப்ச்.. ஓ கே.. பாக்கலாம்..” என்று என் தோளைத் தட்டி விடை கொடுத்தார்.
ஒரு நிமிடம் உறைந்து போனேன். அது பிரமிப்பா, அதிர்ச்சியா, ஆனந்தமா, துயரமா.. என்று விளங்கவில்லை. ஒரு புதிரிலிருந்து மீண்டு வேறொரு சதிருக்குள் மாட்டிக் கொண்ட பல்வேறு எண்ணங்களுடன் சென்னையிலிருந்து கோவை ஞானியின் வீட்டிற்கு வந்தடைந்தேன்.
(குமுதம் – ஏர் இந்தியா போட்டியில் குறுநாவல் பகுதியில் சுப்ர பாரதி மணியனின் கதை பரிசுக்குரிய கதையாக தேர்வாகி இருந்தது. என் கதை (மண்) பிரசுரத்திற்குரிய கதையாக தேர்வு பெற்று குமுதம் இதழில் 8 வாரங்கள் வெளிவந்தது தனிக்கதை.)
ஞானியை வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு, என் வீட்டிற்குக் கூட போகாமல், நேராக கால சுப்ரமணியத்தின் வீட்டை நோக்கித் திரும்பின கால்கள்.
“நான்தான் அன்றைக்கே சொன்னேனே..”Sound of Thunder” கதைதான் அதுன்னு..” என்று சிரித்தார்.
தனது புத்தக அடுக்குகளை நோண்டி பிராட்பரியின் கதைத் தொகுப்பை எடுத்துக் காண்பித்தார்.
“இது நல்ல Time travel கதை” என்றார்.
“ஆமாம், சுஜாதாவும் அப்படித்தான் சொன்னார்..”
“சரி.. நான் வீட்டிற்கு போகிறேன்..நீங்க உடனே வேலையை ஆரம்பிச்சுடுங்க..” என்று பிளீஸ் செய்து விட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
***
பிறகு, ஒரு வாரம் கழிந்து போய்ப் பார்த்தால், அதை அப்படியே வைத்திருக்கிறார்.
“என்னங்க.. எதுவுமே செய்யலை போலிருக்கு..” என்று சலித்துக் கொண்டேன்.
அவர், இதிலிருந்து சமாளிப்பதற்காக, “இல்லே.. செய்யத்தான் கையில் எடுத்தேன்.. ஆனா.. இந்த டைம் டிராவல் சம்பந்தமா.. இருக்கிற வேறு சில கதைகளை ஒரு ரீடிங் பண்ணீட்டு அப்பறமா செய்யலாம்னு கொஞ்சம் படிக்கிறதிலே இறங்கிட்டேன்..” என்றார்.
இதுபோல நிறைய பார்த்துவிட்டேன்.. ஆகையால் சமாதானம் ஆகாமல், முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
அவர் சமாதானம் செய்யும் போக்கில், சமீபத்தில் படித்த ஒரு சில காலப்பயணக் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
அதாவது, பிராட்பரியின் கதையில் உள்ள காலப் பயணம் ஒரு புதிய பார்வையைத் தருகிறது என்றால், அதற்கு நேர் எதிரான இன்னொரு பார்வையைத் தருகிறது பெஸ்டரின் கதை என்றார். அவரது நாக்கில் சனி!
சடக்கென்று என் முகம் அவரை நோக்கித் திரும்பியது.
காலப் பயணம் குறித்த எதிரும் புதிருமான 2 கதைகள்! அட்டகாசம்! இரண்டும் ஒரே இதழில் வெளிவர வேண்டும். “நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது! ரெண்டையும் மொழிபெயர்த்துக் கொடுத்துடுங்க.. ரெண்டையும் ஒரே இதழில் கொண்டு வந்தால்தான் சூப்பரா இருக்கும்..”
அவர் முகம் அஷ்ட கோணலாகிப் போனது. தான் விரித்த வலையில் தானே மாட்டிக் கொண்டார்.. “ஐயையோ ..அதெல்லாம் முடியாது.. இந்த இதழுக்கு ஒரு கதை, அடுத்த இதழுக்கு ஒரு கதை..”
“ம்ஹூம் முடியவே முடியாது.. ஒரே இதழில்தான் ரெண்டையும் கொண்டு வர வேண்டும்..”
“அப்படியானால், இன்னும் ஒரு மாசம் ஆகும்.. எனக்கு வேறு சில வேலைகள் இருக்கின்றன..”
“ஆறுமாசமானாலும் பரவால்லே.. நீங்க ரெண்டையும் முடிச்சுக்க கொடுத்த பிறகுதான் இதழ் வெளிவரும்..”
திட்ட வட்டமாகத் தெரிவித்து விட்டு வந்து விட்டேன்.
அதன் பிறகு ஒரு மாதம் இழுவை போட்டு, ஒரு வழியாய் மொழியாக்கத்தை ஒப்படைத்தார்.
***
அந்த இரண்டு மொழியாக்கங்களையும் ஒரே மூச்சில் தமிழில் படித்து முடித்த போது எனக்குள் பல்வேறு விதமான தத்துவத்தேடல்களின் பரிமாணங்கள் திறந்து கொண்டே இருந்தன. சுஜாதாவும், கால சுப்பிரமணியமும் ரே பிராட்பரியின் கதையை எதிர்கொண்ட காலப் பயணம் என்கிற ஒற்றைப் பரிமாணம் எனக்குள் பன்மைத்துவம் கொண்ட பரிமாணங்களாக விரிந்தன. அந்தக் கணங்களில் ஏற்பட்ட வாசிப்பின் அற்புதத்தில், பல்வேறு தத்துவ தரிசனங்கள் சிருஷ்டிகரமாயின. இந்த இரு வேறு கட்டுரைகளுக்குள் மகத்தான தத்துவத்தேட்டங்கள் இருப்பதை உணர ஆரம்பித்தேன். அவர்களது பார்வை பொதுவாக உலக அரங்குகளில் பல்வேறு விமர்சகர்கள் வைக்கும் ஒரே விதமான, சொல்லிச் சொல்லிச் சலித்துப் போன, Cliche வான பார்வையாக மட்டுமே நின்றுபோனது. (இப்படிச் சொல்வது, நான் அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதல்ல. அது அவர்களுக்கான தேடல். என் தேடல் வேறு. ஒவ்வொரு படைப்பாளிக்குள்ளும் ஓயாது தனித்துவமாய் ஓடிக்கொண்டிருக்கும் தேடலின் அபூர்வ தரிசனம் அது!) எனக்குள் விஸ்வரூபித்த அந்தத் தரிசனமானது, உலகளவில் அதுவரை எவரும் சொல்லாத தனித்துவமான ஞான திருஷ்டி என்பதை பின்வந்த காலங்கள் உணர்த்தின.
இந்தக்கட்டுரை நூல் சர்வதேச மொழிகளில் 6 பிரதான மொழிகளில் வெளி வந்து கொண்டாடப்பட்டது.
ஐந்து முறை ஹ்யூகோ விருதுகளையும், ஒருமுறை நெபுலா விருதையும் வென்ற, புகழ்பெற்ற அமெரிக்க விஞ்ஞான புனைகதை எழுத்தாளரான மைக் ரெஸ்னிக், நூலைப் பாராட்டி, நூலுக்கு முன்னுரை தந்தார்.
நெபுலா விருது பெற்ற மற்றொரு அமெரிக்க விஞ்ஞான புனைகதை எழுத்தாளரான ரிச்சர்ட் ச்வெய்க், ஒரு நீண்ட கட்டுரை எழுதி தனது பிளாக்கில் வெளியிட்டார்.
இத்தாலி மொழியில்தான் இந்த நூலுக்கு அதிகளவில் விமர்சனங்களும் மதிப்புரைகளும் வெளிவந்தன. அந்த மொழியின் புகழ் பெற்ற விஞ்ஞான புனைவு விமர்சகர்களால் எழுதப்பட்டன. என் எழுத்துலக வாழ்வில் முதல் நேர்காணல், இத்தாலி மொழியில்தான் வந்தது. இரண்டு நேர்காணல்கள் அந்த மொழியில் வெளிவந்தன.
உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இந்த நூலை முன்வைத்து இத்தாலி மொழியில் 2 மீம்கள் வந்தன என்பதை..
இதைவிடவும் மிகப்பெரிய, எந்த ஒரு தமிழனாலும் கற்பனை செய்யமுடியாத மகத்தான அற்புதம் ஒன்று நடந்தது : ஆம் நண்பர்களே! தற்கால விஞ்ஞான புனைவு விமர்சகரான கார்மன் ட்ரெயானி, இத்தாலி மொழியில் தற்கால விஞ்ஞான புனைவு எழுத்தாளர்களின் பட்டியலை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். அந்தப் பட்டியலில், கௌதம சித்தார்த்தன்!
இந்த மாதிரியான சர்வதேச மொழிகளில் வெளிவந்த கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, ‘எங்கள் இணைய இதழில் ஒவ்வொரு மாதமும் விஞ்ஞான புனைவு குறித்து column எழுதமுடியுமா?’ என்று ஒரு இத்தாலி இதழ் கேட்டது. சர்வதேச மொழிகளில் பத்தி எழுதும் செயல்பாட்டின் முதல் கட்டம் ஆரம்பமானது. இத்தாலி மொழியைத் தொடர்ந்து, ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்யன் என நான்கு மொழிகளில் பத்தி எழுத ஆரம்பித்தேன். அதற்கான அடிப்படைகளை உருவாக்கியது இந்தக் கட்டுரை!
சர்வதேச விமர்சகர்கள் கணித்த தேடலுக்கு அப்பாலும், நான் பயணம் போயிருக்கிறேன் என்பதை சர்வதேச மொழி வாசகர்களும் விமர்சகர்களும் இந்தக் கட்டுரையை வரவேற்று தங்களது மொழிகளில், “தனித்துவமான பார்வை மிகுந்த கட்டுரை” என்று பாராட்டி எழுதிய போது காலத்துக்கு அப்பால் நின்று நகைக்கிறது, காலாதீதம்.
****************
காலப்பயண அரசியல், உன்னதம் வெளியீடு, ரூ.150.