அன்புள்ள நண்பர்களுக்கு
வணக்கம்.
உன்னதம் இலக்கிய விழா எதிர்பார்த்ததை விடவும் மிகவும் சிறப்பாக நடந்தது.
இந்த வார்த்தை பொதுவாக எல்லா விழாக்குழுவினரும் கூறும் சம்பிரதாயமான வார்த்தை. இந்தச் சொல் எப்படி உன்னதம் விழாவில் சம்பிரதாயமான வார்த்தையாக அல்லாமல், வரலாற்றுப் பொருள் பொதிந்த வார்த்தையாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்:
கடந்த 1980 களில் என் எழுத்து முறையின் ஓயாத தேடல் பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி பெற்று “புதுவகை எழுத்து” என்கிற ஒரு எழுத்து வடிவமாக உருப்பெறத்தொடங்கியது. அந்த எழுத்து வடிவத்தையும், தரிசனத்தையும் மேலும் நீட்சியாக்கி ஒரு கோட்பாட்டுத் தன்மையாக வளர்த்தெடுத்தேன். அந்த கோட்பாட்டு வடிவம் தந்த ஒரு வித போதையில் உன்னதம் இதழ்களில் இந்த எழுத்து முறையை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்.
இந்த வடிவமும், கோட்பாட்டு முறைகளும் அன்றைய தமிழ்ச் சூழலில் பெரும் பரபரப்புக்கு உள்ளாயின. என் சக எழுத்தாளர்களின் கடுமையான விமர்சனங்கள் எனக்குள் ஒருவித பின்னடைவை ஏற்படுத்த முயற்சித்தன. ஆனால், இளம் வாசகர்களின் அட்டகாசமான வரவேற்புக் கருத்துக்கள் என்னை பெரிதும் ஊக்குவித்தன. அப்போதைய என் நண்பர்கள் துறையூர் சரவணன், ஆர் வி ராஜேந்திரன், அகில் பழனிசாமி, எஸ் செந்தில்குமார் ஆகியோருடன் இது குறித்து பலநாட்கள் உரையாடியிருக்கிறேன். இந்த எழுத்துமுறையை தமிழ்ச்சூழல் முழுக்க கொண்டு போய் கவனப்படுத்த வேண்டும் என்று மிகவும் ஆர்வமாகச் செயல்பட்டவர் ஆர் வி ராஜேந்திரன்.
ஒரு பித்துப்பிடித்த மனநிலையில், உலகளவிலான கோட்பாடுகளைத் தேடித்தேடிப் பயின்றதும், (இணைய வளர்ச்சி இல்லாத காலகட்டம் அது) டாடாயிஸம், சர்ரியலிஸம் போன்ற கோட்பாடுகளை கற்றுணர்ந்து அந்த மயக்க நிலையிலேயே திரிந்தேன். 2000 ஆண்டு தமிழ் மொழிமரபில் கால்பதித்தெழுந்த புது வகை எழுத்து என்னும் கோட்பாட்டை, தமிழ் எழுத்துச் சூழலில் உருவாக்க முற்பட்டேன்.
நண்பர்கள் தந்த உற்சாகத்தில், “புதுவகை எழுத்துக்கான ஒரு இயக்கத்தை” ஈரோட்டு மண்ணில் ஆரம்பித்தேன். இதற்கான துவக்கவிழா ஒன்றை இந்த சொற்ப நண்பர்களுடன் விவாதித்து ஒழுங்கு படுத்தினோம்.
விழாவில் புது வகை எழுத்து இயக்கத்தை, எழுத்தாளர் X துவக்கி வைப்பதென்றும், இந்த எழுத்தியக்கத்தை வரவேற்று வாழ்த்துபவர்களாக எழுத்தாளர்கள் Y மற்றும் Z ஆகியோரை அழைப்பதென்றும், புதுவகை எழுத்து குறித்த ஒரு அறிமுகத்தை நான் வழங்குவதென்றும் முடிவு செய்து பெரும் உற்சாகத்துடன் செயல்பட்டோம்.
X Y Z எழுத்தாளர்களும் வருவதாக சம்மதம் தெரிவித்து விட்டார்கள். (இந்த எழுத்தாளர்களின் பெயர்கள் என் ஞாபக அடுக்குகளிலிருந்து என்றைக்கோ மறைந்து போய்விட்டன. ஆகவே, ஒரு அடையாளத்திற்காக ஆங்கில எழுத்துக்களை தந்துள்ளேன்)
மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும், 2000 வருட தமிழ்ச் சூழலையே புரட்டி எடுத்து உலக அரங்குகளில் பேசுவதற்கு இணையான ஒரு எழுத்து முறையை தமிழின் நவீன மொழியில் உருவாக்கி தமிழை உலக அரங்கில் உரையாட வைப்பது என்ற மாபெரும் புல்லரிப்பு மனோபாவத்தில் முக்கியமான அடிப்படை வேலைகளை ஆரம்பித்தோம். (அப்பொழுது எனக்கு 25 வயதுக்குள் இருக்கும். என் கால்கள் நிலத்தில் தங்கவில்லை. மிதந்துகொண்டே தமிழின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் என் நண்பர்களை விழாவிற்கு அவசியம் வருமாறு வேண்டி அழைத்தேன்)
அந்த நாளும் வந்தது.
விழாவுக்கு நான் மிகவும் எதிர்பார்த்திருந்த எழுத்தாளர் X வரவில்லை. அதற்குப் பதிலாக தன் சார்பாக வேறொரு XX ஐ விழாவிற்கு அனுப்பி வைத்திருந்தார். எழுத்தாளர்கள் Y Z இருவரும் வந்து விட்டார்கள். விழாவை, சித்தார்த்தா என்னும் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தோம்.
விழா செயல்பாடுகளை முழுக்க முழுக்க கடந்த நூற்றாண்டில் பிரெஞ்சில் தோன்றிய டாடாயிஸத்தின் அறிமுக விழாவைப் போல, படு புதுமையாக ஏற்பாடு செய்திருந்தேன்.
விழா அரங்கிற்கு உள்ளே நுழையும் முன்வாசலில் 3 கோடுகளை போட்டிருந்தோம். விழாவுக்கு வரும் பார்வையாளர்கள், அந்த 3 கோடுகளையும் தாண்டித்தான் உள்ளே வர வேண்டும்.
முதல் கோடு : காலங்காலமாக தனக்குள் படிமமாக உறைந்திருக்கும் – தனது மண்டைக்குள் ஏற்றி வைத்திருக்கும் – இலக்கியக் கசடுகளைத் தாண்டுவதற்கான முதல் எட்டு!
இப்படி 2 வது கோடு 3 வது கோடு என்று ஒவ்வொரு கோட்டுக்கும் ஒரு உருவகத்தை ஏற்படுத்தி இந்தப் பழைய கசடுகளைத் தாண்டி ஒரு புதிய எழுத்து முறைக்குள் வாசகன் நுழையவேண்டும் என்பதற்கான குறியீடுகள்தான் அந்த 3 கோடுகள் ! (அந்தக் குறியீடுகளை மிகவும் அழகியல் சார்ந்த, கோட்பாட்டு உருவகம் சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த விதத்தில் பலநாட்கள் யோசித்து உருவாக்கம் செய்திருந்தேன். இப்பொழுது அவைகள் என் ஞாபகத்தில் இல்லை.)
உள்ளே, புது வகை எழுத்து குறித்த கூட்டம் ஆரம்பித்ததும், முதல் செயல்பாடாக, “புதுவகை எழுத்து இயக்கத்தை” திருவாளர் டபுள் X துவக்கி வைப்பார். இந்த நிகழ்வையும் புதுமையாக வடிவமைத்திருந்தேன். அதாவது, ஒரு வெற்று கேன்வாஸில், திருவாளர் டபுள் X, நீலநிற வண்ணத்தை எடுத்து வீசி துவக்கி வைப்பார்.
இப்படி எல்லாமே, பின் நவீனத்துவ பாணிதான். (கவனிக்க: அப்பொழுது பின்நவீனத்துவம் தமிழுக்கு அறிமுகம் ஆகவில்லை)
அப்படியான அந்த நாளும் வந்தது. தமிழ்நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் எழுத்தாளர்களும், வாசகர்களும் வந்து குவிந்து விடுவார்கள் என்று இறுமாந்திருந்த எனக்கு பெரும் அடி! ஒருவர்கூட வரவில்லை. விழா ஏற்பாட்டாளர்களான நான், ஆர் வி ராஜேந்திரன், அகில் பழனிசாமி, எஸ் செந்தில்குமார், புதிய பெண் வாசகர் தேவி செல்வக்குமாரி, அவரது தோழி மற்றும் என் நண்பர் ( இவர், பட்டி மன்றப்பேச்சாளர்) என்று நாங்கள் மொத்தம் 8 பேர்! என் கால் தரையூன்ற ஆரம்பித்தது. ஒருவழியாய் மனதைத் தேற்றிக் கொண்டு, விழாவை ஆரம்பித்தோம்.
புது வகை எழுத்தியக்கம் குறித்து சுருக்கமாகப் பேசினேன். பிறகு,
திருவாளர் டபுள் X ஐ புது வகை எழுத்தியக்கத்தை துவக்கி வைக்க அழைத்தேன். அவர், நீல நிறத்தை எடுத்து வெற்று கேன்வாஸில் அறைந்தார். டாடாயிஸத்தின் துவக்க விழாவில் நடந்த நிகழ்வுகள் என் மனக்கண் முன்னால் அலையடித்தெழுந்தன. ஒரு நிமிடம் என் கண்களில் நீர் துளும்பிற்று!
இந்தக் கணம் வெகு நேரம் நீடிக்கவில்லை. அந்த எழுத்தாளர், பேச ஆரம்பித்தார். தனக்கு இதிலெல்லாம் அக்கறை இல்லை என்றும், தனக்கு வேறு விஷயங்களில்தான் அக்கறை என்றும் பேசினார். நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மற்ற இரு எழுத்தாளர்களும் தங்களுக்கு, கௌதம சித்தார்த்தன் சொல்லும் புதுவகை எழுத்து குறித்து உடன்பாடில்லை என்றும், தங்கள், தங்கள் எழுத்து முறை குறித்தும் பேசினார்கள். நான் சுத்தமாக மனம் உடைந்து போனேன். ரெண்டு மூணு பேர் வந்திருக்கிற கூட்டத்துக்கே இப்படியா?
நன்றியுரை சொன்ன ஆர் வி ராஜேந்திரன் வெளிறிய முகத்துடன் பேசினார்.
இதில் கலந்து கொண்ட பட்டி மன்றப் பேச்சாளர், சொல்லாமல் கொள்ளாமல் ஓடியே போய்விட்டார்.
அதன் பிறகு, நான்கைந்து நாட்கள் பெரும் மன அவசத்தில் இருந்தேன். உலக இலக்கியங்கள், இலக்கியக் கோட்பாடுகள் எல்லாமே சுருங்கிப் போயின.
பிறகு ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு, நமக்கு கூட்டம் நடத்துவதெல்லாம் செட் ஆகாது, பத்திரிக்கையில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று உன்னதம் இதழை தீவிரமாக நடத்தத் தொடங்கினேன். அதில், புதுவகை எழுத்து குறித்த உரையாடல்களை – கட்டுரைகளை வெளியிட்டபடி செயல்பட ஆரம்பித்தேன்.
****
சமீபத்தில், சென்னையிலிருந்து என் கிராமத்திற்கு திரும்பிய சூழலில் நண்பர் ஸ்ரீகாந்த் கந்தசாமியுடன் தான் உரையாடல்.
டி ஹேஷ் குறித்த நூலில் அவர் என்னிடம் ஒரு நீண்ட நேர்காணல் செய்திருக்கிறார்.
டி ஹேஷ் மற்றும் “இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?” ஆலா செயலி, மற்றும் இன்னொரு பிராஜெக்ட், (அதைப் பிறகு சொல்கிறேன்) இப்படிப் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. எனக்ளுக்கு ஒரு ட்ரீட் கொடுங்க சார் என்று ஸ்ரீகாந்த் வேடிக்கையாக கேட்ட போது,
“இதோ, இப்பொழுது, என் பிறந்தநாள் வருகிறது.. அன்றைக்கு தருகிறேன்..’ என்றேன்.
“அப்படியா, அப்படியானால் நாம் அதை பெரிதாகக் கொண்டாடலாம்..” என்றார். நான் மறுப்பு தெரிவித்தேன். “இல்லை சார், உங்கள் பிறந்தநாளை முன்வைத்து, டி ஹேஷ், குறுநாவல், ஆலா செயலி, மற்றும் இன்னொரு பிராஜெக்ட் இவைகளையெல்லாம் அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு நடத்தலாம்..” என்றார்.
என் மனக்கண் முன்னால், 30 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு அறைந்தது.
நான் மறுத்துவிட்டு வந்து விட்டேன், வீட்டிற்கு வந்து யோசித்தேன், “குதிரை நாவல்” ஆங்காங்கு கவனம் ஏற்பட்டு வருவதை உணர்ந்தேன். நண்பர் விஷ்ணுகுமார், எம் விஜய், பாரி.. போன்றவர்கள் முதன்மையாக சக்திவேல், ஆகியோரின் தொலைபேசி/ நேர்ப்பேச்சுக்கள் உற்சாகமேற்படுத்தின. சரி, டி ஹேஷ், ஆலா செயலி, அந்த இன்னொரு பிராஜெக்ட் குறித்தெல்லாம் பிறகு பார்க்கலாம்.. இப்போதைக்கு குதிரை நாவலை முன்வைத்து, நண்பர்களுடன் ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தலாம் என்று யோசித்தேன்.
நண்பர் சக்திவேலிடம் இது குறித்து கலந்துரையாடினேன். அவர், இது குறித்து மிகவும் ஆர்வமாக பேசினார். பிறகு பாரியும் மகிழ்ச்சியுடன் சொன்னார்.
நான், பாரி, சக்திவேல் இது குறித்து நண்பர்களுக்கு தெரியப்படுத்தினோம். நண்பர்களும் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். எனக்கு பழைய உற்சாகம் எல்லாம் இல்லை. குதிரை நாவலை நண்பர்களிடையே அறிமுக்கப்படுத்த வேண்டும் அவ்வளவுதான்.
நண்பர்களுடன் ஒரு மாலைநேரக் கலந்துரையாடல் என்று வடிவமைத்தேன். இப்படி ஒரு சிறு நிகழ்வாக குறுக்கியது ஸ்ரீகாந்துக்குப் பிடிக்கவில்லை. ஒரு முழு நாள் நிகழ்வாக வைக்கலாம். உங்களது ‘காலப்பயண அரசியல்’ என்ற நூல் கைவசம் உள்ளது அல்லவா? அதை வெளியிட்டு நிகழ்வாக ஒரு அமர்வு வைத்துக் கொள்ளலாம் என்று பிடிவாதம் பிடித்தார்.
காலப்பயண அரசியல் நூல் குறித்து சுருக்கமாக ஒரு விஷயம் :
இந்த நூலை 2018 ல் 100 பிரதிகள் போட்டேன். அதன்பிறகு, அப்போது தமிழ்ச் சூழலின் மீதிருந்த கசப்பான உணர்வுகளினால் அதை யாருக்கும் அனுப்பாமல், கட்டி எடுத்து வைத்து விட்டேன். இப்போது அதை அப்படியே வெளியிட மனம் வரவில்லை. அது குறித்த சர்வதேச மொழிகளில் வந்துள்ள அப்டேட்ஸை இணைத்து வெளியிடலாம் என்று வேலையில் இறங்கினேன்.
இந்தக் கூட்டத்திற்கு நான் அதிகப்படியாக பத்து நண்பர்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன். ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்வில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பதை, என்னை நுட்பமாக பின்தொடரும் வாசகர்கள் அவதானித்திருந்திருப்பார்கள். பெரிதாக விளம்பரப்படுத்தவில்லை. யாருடனும் தொலைபேசி செய்து தனி அழைப்பு தந்ததில்லை. ஊடகங்களுக்கு செய்தி அனுப்பி வெளியிடச் சொன்னதில்லை. கூட்ட நிகழ்விடத்திற்கு முன்பு விளம்பரப்பதாகைகள் வைக்கவில்லை, கூட்ட அரங்கில் பெயர்ப்பதாகை பொறுத்தவில்லை.
ஆனால், கூட்ட ஆரம்பத்திலிருந்தே நல்ல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டே இருந்தன. 50 க்கும் மேற்பட்ட நண்பர்கள் வந்திருந்தனர். பழைய நண்பர்கள் நேரம், உடல் சார்ந்த அசதிகளையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர். வெளியூரிலிருந்து நிறைய நண்பர்கள் வந்திருந்தனர்,
குதிரைவால் ராஜேஷ், மொழிபெயர்ப்பாளர் எஸ் பாலச்சந்திரன், பேராசிரியர் மகுடீஸ்வரன், ஜீவா தங்கவேல், கவிஞர் மனுஷி, கவிஞர் தேவரசிகன், கேசி செந்தில்குமார், துறையூர் சரவணன், விஷ்ணுகுமார், மணவாளன், அச்சுதன் தங்கவேல் முருகன், ஆர் வி ராஜேந்திரன், கவிஞர் அதீதன், கவிஞர் மா காளிதாஸ், கவிஞர் சூர்யநிலா, கவிஞர் த. விஜயராஜ், கவிஞர் நெகிழன், கலைக்கோவன், குரு பழனிசாமி, மூர்த்தி, ஆர் வி ராஜேந்திரன், என் சத்யராஜ், மணிவேல், ஸ்ரீகாந்த், பாலு தயாளன், வினோத், பவானி கண்ணன், பகலவன்..
(அடுத்த பதிவில் கலந்து கொண்ட அனைவரைப் பற்றியும் எழுதுகிறேன்)
இந்த நண்பர்கள் அனைவரும் நேரில் வந்து என் கையை பற்றிக்கொண்டது, வெறும் சம்பிரதாயமான கைலாகு மட்டுமல்ல. கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இப்படியான ஒரு நிகழ்வில் முடங்கிப்போன என் எழுத்தியக்கத்தை மீண்டும் புத்துயிர்ப்பு ஊட்டிய வரலாற்றுத் தருணங்கள்!
இந்த நிகழ்வு தந்த உற்சாகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு இலக்கிய நிகழ்வு நடத்தலாம் என்ற உத்வேகமும் புதிய நம்பிக்கையும் புதிய தேடலும் எனக்குள் பெரும் தீயாய் பற்றிக்கொண்டு விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த நிகழ்வு குறித்து உங்களிடையே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த நிகழ்வு முழுமை பெற்றதற்கான முழுமுதற் காரணம் நண்பர் சக்திவேல்தான். இந்தக் கூட்டம் பெரும் வெற்றியடைந்ததற்கான முழுக் கிரெடிட் அவரையே சாரும். அவருக்கும், நண்பர் பாரிக்கும், மொழிபெயர்ப்பாளர் ஏ வி தனுஷ்கோடி படத்தை அழகுற வடிவமைத்துத் தந்த ஓவியர் சுந்தரன் அவர்களுக்கும் உன்னதம் சார்பாக தீராத நன்றிகள்!
நிகழ்ச்சி சிறப்பாக அமைய இன்னொரு காரணம், போக்குவரத்து வசதிகளுக்கு அருகாமையில் அமைந்திருந்த நியூடெக் எஜிகேசன் சென்டர் ஹால். இலக்கிய விழாவுக்கு இடம் கொடுத்துதவியது மாத்திரமல்லாது, தனது மாணவர்களையும் ஒரு சில உதவிகள் செய்யப் பணித்த நல்ல குணசேகரன் அவர்களுக்கு உன்னதம் சார்பாக மிகுந்த நன்றிகள் !
அடுத்தடுத்த பதிவுகளில் நிகழ்வுகளில் பேசிய நண்பர்களின் உரைகளும், கலந்துரையாடல் குறிப்புகளும் கடிதங்களும் வெளிவரும்.
இந்த நிகழ்வை வரலாற்றுப் புகைப்படங்களாக்கிய நண்பர் சிபி அவர்களுக்கு பிரத்யேக நன்றியை முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டும்.
*******
கௌதம்ஜீ…..
அகவை 60 வாழ்த்துக்கள்…
சிகரம் தொடும் தூரம் விரைவில்
அருமையான பதிவு…. இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று வருந்துகிறேன்….வாழ்க…வெல்க