- கௌதம சித்தார்த்தன்
ஏ வி தனுஷ்கோடி வென்ற மொழிபெயர்ப்புக் கலைஞன், நேற்று, தமிழ்ச் சூழலிருந்து விடைபெற்றுக் கொண்டான்.
ஏ வி தனுஷ்கோடி முதன்முதலாக பிரான்ஸ் காஃப்காவை நவீன தமிழ் இலக்கியச் சூழலுக்கு மொழியாக்கம் செய்து அறிமுகப்படுத்தியவர். ஜெர்மன் மற்றும் பிரஞ்சு மொழியில் விற்பன்னர். காஃப்காவின் “விசாரணை ” நாவலை நேரடியாக ஜெர்மனிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த மொழிபெயர்ப்பாளர். இந்த நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. 1980 களில் இந்த நாவல் மொழியாக்கம் வெளிவந்தபோது, தமிழ் இலக்கியச் சூழல், கிராமியக் கதைகளையும்,கரிசல்கதைகளையும் வேலை கிடைக்காத துயரக்கதைகளையும், யதார்த்த மொழிநடையில் தொடர்ச்சியாக வெளியிட்டு, ஒரு பெரும் அயர்ச்சி நிலவிக் கொண்டிருந்த சூழல். கடந்த காலங்களில், ஆங்கில மொழிப்பயிற்சி (வாசிப்பு, எழுதும் திறன்) அற்ற சூழலில், உலகளவிலான இலக்கியப் போக்குகள் இதுபோன்ற மொழியாக்கங்களின் மூலம்தான் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் வந்தடையும். (ஏறக்குறைய இன்றளவிலும் கூட அதுதான் நிலை!)
இந்த விசாரணை நாவல் வெளிவந்ததும், தமிழ்ச் சூழலில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் அடுத்த கட்ட படைப்பு மொழிக்கான உத்வேகமும் வெடித்தெழுந்தது. ஒரு ஆய்வாளன் இந்த ரீதியில் ஆய்வு செய்தால் இன்றைக்குள்ள நவீன இலக்கியத்தின் போக்குக்கான வேர்கள் எங்கிருந்து உருமாற்றம் கொள்கின்றன என்னும் ஒரு ஆய்வியல் சித்திரத்தை வரைய முடியும்.
முற்றுப்புள்ளியில்லாமல் பல பக்கங்கள் நீளும் ஒற்றை வாக்கியம், கதை சொல்லும் ஒரு narration வாசக மனதில் பல்வேறு பரிமாணங்களை ஏற்படுத்தும் தன்மையை அந்த நாவலின் narration உருவாக்கியது. melancholy எனப்படும் ஒரு வித literary mood ஐ மனநிலையை, உணர்வுகளை நவீன படைப்பு வெளியாக உருவாக்கியது. அதுவரை ரஷ்ய இலக்கியத்தின் இருள் படர்ந்த உணர்வுகளின் liner narration லிருந்து ஒரே தாவாகத் தாவி, nonliner narration க்குள் அந்த மனச்சோர்வுகளையும் துயரார்ந்த நிலைகளையும் நோக்கி நகர்ந்தது.
ஏ வி தனுஷ்கோடியின் இந்த மொழியாக்கம் தமிழ்ச் சூழலில் ஒரு பெரும் பாய்ச்சலையும், மாபெரும் மாற்றத்தையும் நிகழ்த்தியது. அந்த வகையில் முக்கியமான மகத்தான கலைஞன் தனுஷ்கோடி!
***
மேலும் சில குறிப்புகள்:
ஒரு கல்லூரியில் 5 ஆண்டுகள் ஆங்கிலம் கற்பித்தல்; 20 ஆண்டுகளாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் பொருளாதார/வணிக ஆய்வாளர்; அமெரிக்க வர்த்தகத் துறையிலிருந்து 3 விருதுகளைப் பெற்றது; ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் பல நாடகங்களில் நடித்தார்; ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் நாடகங்கள் இயக்கினார்; பெர்லின் மற்றும் மியூனிச்சில் உள்ள சமகால நாடகங்களைப் படிக்க மேற்கு ஜெர்மன் அரசாங்கத்திடம் இருந்து ஸ்காலர்ஷிப் பெற்றார்; ஆங்கிலம், தமிழ் மற்றும் பிரஞ்சு மொழிகளில் சிறப்புத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்தார்; பள்ளியில் படிக்கும் போதே ஓவியப் போட்டிகளில் இரண்டு மாநில விருதுகளை வென்றார்; ஓவியத்திற்கான மற்ற விருதுகளை வென்றார்; பல குழு ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றார்; மூன்று தனி ஓவியக் காட்சிகளை நடத்தினார்; பத்தாண்டுகளாக “தி இந்து” நாடக விமர்சகராக இருந்தவர்; தற்போது, தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்காக பல தமிழ்ப் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார்.
இவர் எழுதிய ஆங்கில நவீன நாடக ஸ்கிரிப்ட் DRESSED TO KILL அவரது இந்த தளத்தில் உள்ளது : https://dhanplays.blogspot.com/?fbclid=IwAR3cFUXZKlWSFqeahJ4SOLJEUop3OEMfIxYlyHJZoM7rtHIRA94zu7qmSoc
CLOSE ENCOUNTERS OF THE UNBELIEVABLE KIND என்ற தலைப்பில் 12 அத்தியாயங்கள் கொண்ட ஒரு நாவல் போன்ற பல சிறுகதைகளின் இழைகளை ஆங்கில மொழியில் எழுதியிருக்கிறார். அவைகளை, அவரது SPADE என்றஇந்த தளத்தில் வாசிக்கலாம்: https://arcodhan.blogspot.com/2012/01/close-encounters-of-unbelievable-kind.html
அவரது நவீன ஓவியங்களை அவரது முகநூல் பக்கத்தில் பார்க்கலாம் : Dhanushkodi Varadharajan
***
நான் சென்னையில் இருந்து ஊர் திரும்பிய கடந்த எலெட்டு மாதக்களில், மீண்டும் பழையபடி உற்சாகத்தோடு இலக்கிய செயல்பாடுகளில் இறங்கினேன். முதலில் ஒரு இலக்கிய நிகழ்வு நடத்தத் திட்டமிட்டபோது, மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் தான் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் அதிகமாதலால், மொழிபெயர்ப்பு சார்ந்த ஒரு கலைஞனை அழைத்து ஒரு நிகழ்வை நடத்தலாம் என்று யோசித்த போது, சட்டென நினைவுக்கு வந்தவர், தனுஷ்கோடி! சாதியக்கூச்சல்களிலும், குறுங்குழுவாதக் கும்மியடிப்புகளிலும், உழன்று கிடக்கும் அருவருப்பான நவீன தமிழ்ச் சூழல் மறந்த மாபெரும் கலைஞன்!
உடனே அவரது தொடர்பு எண்ணை க்ரியா பதிப்பகத்தில் வாங்கி, அவரைத் தொடர்பு கொண்டேன்.
முதலில் நான் என்ன பேசுகிறேன் என்பது அவருக்கு விளங்க சிறிது நேரம் பிடித்தது. “இலக்கியக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு பேச வேண்டுமா?, அப்படியா?” அவரால் அதை நம்பவே முடியவில்லை. எவ்வளவு பெரிய கலைஞனை எவ்வளவு கேவலமான தாழ்மையுணர்ச்சியை ஏற்படுத்தி வைத்திருக்கிறது பாருங்கள் இந்த தமிழ்ச் சூழல்?
“ஒரு அரைமணிநேரம் கழித்து பேசுகிறேன்.. நான் இங்கு ஒரு கல்லூரியில் மொழியியல் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு செல்பேசியை அணைத்தார்.
பிறகு அவர் தொலைபேசி செய்தார். என்னைப் பற்றி விசாரித்தார். தனக்கு அந்த ஈடுபாடெல்லாம் போய்விட்டது என்றும், தன்னால் வரமுடியாது என்றும் சொல்லிவிட்டார். மொழிபெயர்ப்பாளர் எஸ் பாலச்சந்திரனிடம் தொலைபேசியில் நிலைமையைச் சொன்னேன். மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யுங்கள்: என்றார்.
அடுத்த நாள் தொலைபேசி செய்தேன். அவர், மன்னியுங்கள்.. இது வகுப்பு நேரம். பிறகு பேசுங்கள்..” என்றார். மறுபடியும் என்ன நினைத்தாரோ, “கௌதம்..நாம் வேறு ஒரு தருணத்தில் சந்திக்கலாம்.. இலக்கிய நிகழ்வுகள் வேண்டாம்.. என்னை இன்றுவரை ஞாபகம் வைத்து, என் மீது பிரியப்பட்டு அழைத்ததற்கு நன்றி ” என்றார். அந்தப் பேச்சில் தொனித்தது கசப்பின் வாடை.
விசாரணை நாவலில் வருகின்ற ஒரு வாக்கியம் எனக்குள் ஒரு melancholy யாக அளைகிறது!
“நமக்குப் பிடித்தமான புத்தகங்கள் நம் மீது ஒரு துரதிர்ஷ்டம் போல செயல்படுகின்றன, நம்மை விட நாம் நேசிக்கும் ஒருவரின் மரணத்தைப் போல நம்மைத் துன்பப்படுத்துகின்றன, அவை தற்கொலையின் விளிம்பில் இருப்பதைப் போலவும், காட்டில் தொலைந்து விட்டதாகவும் உணர வைக்கின்றன. அனைத்து மனித வாழ்விடங்களிலிருந்தும் தொலைவில் உள்ளன.”
****
[…] […]