• Fri. Mar 24th, 2023

JRR டோல்கின் நினைவு நாள் : தமிழ்ச் சூழலின் சித்திரம்

ByGouthama Siddarthan

Sep 6, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

உலகளவில் ஃபேண்டஸி இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் JRR டோல்கின் நினைவு நாள் கடந்த வெள்ளி, செப்டம்பர் 2 ஆம் நாள்!

JRR டோல்கின் எனக்கு அறிமுகமானது 30 வருடங்களுக்கு முன்பு. அப்பொழுது, என் நண்பர் அருள் சின்னப்பன் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருந்தார். அவர்தான் JRR டோல்கின் உலகம் குறித்து முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகம் எனக்குள் பெரும் மயக்கத்தையும் இனம் புரியாத ஒரு வித ஈடுபாட்டையும் ஏற்படுத்தியது. இன்னும் விரிவாக கால.சுப்ரமணியத்திடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

உடனே, கால சுப்ரமணியத்தைத்தேடி அந்தியூர் கிராமத்திற்கு பயணமானேன்.

அவர் வீட்டில் 2 நாட்கள் தங்கி முழுக்க முழுக்க JRR டோல்கின் உலகம் குறித்த உரையாடல்கள்தான். விடியவிடிய அவரது The Lord of the Rings முத்தொகுதிகளை முன்வைத்து, அவர் உருவாக்கிய ஒரு புதிய உலகத்தினூடே பயணம் அழைத்துப் போனார்.  டோல்கின் உருவாக்கியிருந்த அந்த Middle-earth னூடே காலங்களற்று பறந்து திரிந்தேன்.

சுப்ரமணியத்தை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், The Hobbit நாவலை தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பேன். அவர், அது பயங்கரமான, சாத்தியமற்ற விஷயம் என்று பீதியுடன் சொல்வார். குறைந்த பட்சம் ஒரு அத்தியாயத்தையாவது மொழிபெயர்த்துத் தாருங்கள் என்று கெஞ்சிக் கேட்பேன். பார்க்கலாம் என்று தலையை ஆட்டி விடுவார்.

பிறகொருநாள், கவிஞர் பிரமிளிடம் பேசிக்கொண்டிருந்த போது, அடுத்த உன்னதம் இதழில், ஹோபிட் நாவலின் முதல் அத்தியாயம் வருகிறது, கால சுப்ரமணியம்தான் மொழிபெயர்க்கிறார் என்று சொல்லிவிட்டேன். உடனே பெரும் கோபத்திற்கு வந்துவிட்டார். “டோல்கின் எல்லாம் ஜெயண்ட், அவரையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்க பெரும் அசுர உழைப்பு வேண்டும், அதுமட்டுமல்லாது, ஹோபிட் ன் உலகத்தை இங்குள்ள தமிழ் இலக்கிய சூழலால் புரிந்து கொள்ளவே முடியாது..” என்று ஆவேசப்பட்டார்.

நான் உடனே கோபித்துக் கொண்டு அவரிடம் பேசாமல் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டேன்.

பிறகு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த உரையாடலில் கலந்து கொள்ளவில்லை. பிரமிளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அவரது செல்லப்பிள்ளை அல்லவா நான்? அவர் எனக்கு செல்லமாக வைத்திருந்த பெயர் GOA. இது இருபொருள் படும் வார்த்தை. அதாவது, GOA என்ற Francisco Goya என்னும் ஸ்பானிஷ் ஓவியரின் நினைவாகவும்,  வயதுக்கு மீறிய நுண்ணுணர்வு கொண்டவன் – Genius of the Age – என்ற பதமாகவும் பொருள்படுவது.

பிரமிள் என்னை தாஜா செய்தார். “சரி வாரும், டோல்கின் உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதற்கு முன்னாள் பலகாத தூரம் பயணம் போக வேண்டும். இப்போதைக்கு சில எட்டுகள் நடந்து வரலாம்..” என்று எழுந்தார். சுப்ரமணியம் ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தார்.

நாங்கள் இருவரும் நடந்தோம். அந்தப்பயணம் காலங்களற்று நீண்டு கொண்டே இருந்தது. டோல்கின் உலகத்தின் Middle-earth னூடே இரு வினோதமான விலங்குகளாக மாறி விளையாடியபடி நீண்ட அந்தப் பயணம், காசினோ தியேட்டரின் முன் நிலைக்கு வந்தது.

அட்டகாசமான ஃபேண்டஸி சினிமா! Ladyhawke! ரிச்சர்ட் டோனர் எடுத்த லேடிஹாக்! இரவில் காதலன் ஓநாயாகவும், காதலி பெண்ணாகவும், பகலில் காதலி கழுகாகவும், காதலன் ஆணாகவும் இருப்பார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மனித ரூபத்தில் பார்க்கவே முடியாது. இது ஒரு சாபம். இந்த சாப நிவர்த்திக்காக இருவரும் போராடும் நிகழ்வுகளே கதை!

பிரமிள் அதுவரை பேசியதன் தொடர்ச்சி! இந்த படம்தான் என்னை இன்றுவரை ஃபேண்டஸி வகை இலக்கியத்தின் மீதான காதலோடும், உயிர்ப்போடும் வைத்திருக்கிறது. அந்தப் படம் முடிந்ததும் பிரமிளின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

அவரது நடுவிரலில், புதிதாக ஒரு மோதிரம் மின்னியது!

***

அதன் பிறகு, டோல்கின் மீதான காதல் ஒரு வெறியாக உன்மத்தமாக தலைக்கேறி ஆட்டுவித்துக்கொண்டே இருந்தது. சரி பரவாயில்லை, டோல்கின் நாவலை மொழிபெயர்க்கவிட்டால் பரவாயில்லை. ஒரு சிறுகதையாவது மொழியாக்கம் செய்து தாருங்கள் என்று சுப்ரமணியத்தை வேண்டினேன்.

அவர்,  Leaf by Niggle என்ற சிறுகதையைத் தந்தார். இந்தக்கதை குறித்து மிக விரிவாகப்பேச வேண்டும். இப்போதைக்கு சுருக்கமாக, உலக ஃபேண்டஸி இலக்கியங்களின் முன்னோடியாகவும் இன்றளவிலும் உலக இலக்கியங்களில் பேசப்பட்டு வருவதுமான ஒப்பற்ற காவியம்!

கதையைத் தன்னால் மொழியாக்கம் செய்வதற்கு நேரமில்லையென்றும் வேறு ஒருவரிடம் தந்து மொழியாக்கம் செய்து கொள்ளுங்கள் என்றும்  சொல்லிவிட்டார்.

அதைத் தூக்கிக் கொண்டு பலநாள் அலைந்தேன். அதற்குகந்த சரியான நபர் கிடைக்கவே இல்லை.

மீண்டும் கால சுப்ரமணியத்திடம்தான் வந்து சேர முடிந்தது. அவர் பலவந்தமாக மறுத்தவர், ஒரு நண்பரின் பெயரைச் சொல்லி அணுகுமாறு தெரிவித்தார்.

எனக்குள் சட்டென பொறி வெடித்தது. : ஆம். எப்படி அவரை மறந்து போனேன், குற்றாலம் கவிதைப்பட்டறையில் கலந்து கொண்ட ஒரு நாளில், அவர் என்னை அழைத்துக்கொண்டு வெளியே நடந்தபோது, நிகழ்ந்த உரையாடல் எனக்குள் அலையடித்தது:  ஜெர்மன் நாவலாசிரியர் Patrick Süskind எழுதிய The Perfume நாவல் குறித்து அவர் பேசிய ஃபேண்டஸிக்கல் ரியலிஸ உரையாடல், ஒரு அற்புதமான மணமாக எனக்குள் கமழ்ந்தது. (அவரது பெயர் இங்கு வேண்டாம். தேவையற்ற வீண் வம்புகள் கொண்ட நம் தமிழ்ச் சூழலில், இந்தச் செயலின் ஆக்கபூர்வமான விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இந்த வீண் வம்பு விவகாரமே பேசப்படும்.)

உடனே அவரது ஊருக்கு பஸ் ஏறினேன்.

அவரது மனைவி அற்புதமான இலக்கிய வாசிப்பாளர். என் ‘தம்பி’ கதை குறித்து உரையாட ஆரம்பித்துவிட்டார். நான் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போனேன். இரட்டை சந்தோசம்!

அதன்பிறகு, ஒருவாரத்தில், அவரது மொழியாக்கம் தபாலில் வந்து சேர்ந்தது. கட்டுக்கடங்காத ஆனந்தத்தில், தபால் அலுவலகத்தின் புங்க மரநிழலில் அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். தலைப்பு : நிகில் வரைந்த இலை! ஆஹா!

ஆனால், அந்த மரத்தின் வடக்கு நோக்கி நீண்டிருந்த  ஒரு வலிய கிளையின் மீது அமர்ந்திருந்த விதி, இடிஇடி யென நகைத்தது.

அந்த மொழிபெயர்ப்பு மிக மிக அற்புதமான வார்த்தைக் கட்டமைப்புகளோடும், மொழிபெயர்ப்பு அழகியலோடும் செய்திருந்தார். ஆனால், பெயர்ச் சொற்களை தமிழ் வழக்குக்கேற்ப தமிழ்ப் படுத்தியிருந்தார். உதாரணமாக, Mr. Parish என்ற பெயர்ச் சொல்லை திருவாளர் பரிசேயர் என்று மாற்றியிருந்தார். பெயரைத் தமிழ்ப்படுத்துவதா? மனம் துணுக்குற்றது.தொல்தமிழ் மொழிபெயர்ப்புகளின் பெயர்ச் சொற்கள் ஒருகணம் கலகலவென கூடி நகைத்தன. இது போல் சில பெயர்களை தமிழ்ப்படுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாது, என் பிரியமான டோல்கின் பெயர் டொல்கீன் என்று செய்யப்பட்டிருந்தது. நான் சட்டென்று கலவரப்பட்டுப் போனேன்.

அந்தக் காலத்தில், இன்றைக்கு இருப்பது போல, இணைய வளர்ச்சியோ, Top 10 Name Pronunciation Tools வகையறாக்களோ, You Tube தொழில்நுட்பமோ இல்லை.

சிலமணி நேரங்கள் குமைந்துபோனேன். உடனே சுப்ரமணியத்திடம் ஓடினேன்.  விரிவான விவாதத்திற்குப் பிறகு, நான் சொல்வதை ஏற்றுக்  கொண்டார் அவர்.

வீட்டிற்கு வந்து  மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘மொழியாக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும், நீங்கள் தமிழ்ப்படுத்திருந்த பெயர்ச் சொற்களை மாத்திரம், ஆங்கிலத்தில் உள்ள பெயர்ச் சொற்களின் பெயரிலேயே வெளியிடுகிறேன் என்றும்’ எழுதியிருந்தேன். அதற்கு அவர் மிகவும் ஆவேசமாக எதிர்வினை செய்தார். ‘நீங்கள் அவ்வாறு வெளியிட்டால், மொழிபெயர்ப்பு செய்தவர் என்ற இடத்தில் உங்கள் பெயரை வெளியிட்டுக் கொள்ளுங்கள் என் பெயர் போடக்கூடாது..’ என்று வன்மையாக  எழுதினார்.

அப்போதிருந்த என் மன உத்வேகத்தில், “நான் எப்போதும் இன்னொருவரின் உழைப்பை என் பெயரில் போட்டுக் கொள்பவன் அல்ல. இது உங்கள் பெயரில்தான் வரும். ஆனால், நீங்கள் மறுதலிப்பதால் உங்கள் பெயரின் சுருக்கெழுத்துக்களில் வெளிவரும்..” என்று எழுதி விட்டேன்.

ஒரு வழியாய் கதை வெளிவந்தது: நிகில் வரைந்த இல்லை. ஜேஆர்ஆர் டோல்கின். தமிழில் : ஆர்எஸ்ஆர்.

***

இந்தக்கணம் வரை, என் பிரியமான டோல்கின் மீதிருந்த பிரியம் மாறவே இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தினமும் ஒரு கவிதையை மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தோடு இயங்கிய காலகட்டத்தில் அவரது கவிதை ஒன்றை நான் மொழியாக்கம் செய்து ஜென்ம சாபல்யம் அடைந்தேன்.

நான் கணப்பருகில் அமர்ந்து யோசிக்கிறேன்
– ஜே. ஆர். ஆர். டோல்கின்
தமிழில் : கௌதம சித்தார்த்தன்

நான் கணப்பருகில் அமர்ந்து யோசிக்கிறேன்
நான் பார்த்த எல்லாவற்றையும் புல்வெளியின் பூக்களும்,
பட்டாம்பூச்சிகளும் அசைந்த கோடைகாலங்களை

பழுத்த மஞ்சள் இலைகள் மற்றும் சிலந்தி நூல்கள்
தொங்கிய இலையுதிர்காலங்களை
காலை மூடுபனி மற்றும் வெள்ளிச் சூரியனுடன்
என் தலைமுடியைக் கலைக்கும் காற்றை

நான் கணப்பருகில் அமர்ந்து
உலகம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்
வசந்தம் இல்லாமல் ஒரு குளிர்காலம் வரும்போது
நான் அனுபவித்துப் பார்ப்பேன்.

இன்னும் பல விஷயங்கள் உள்ளன
நான் பார்த்திராதவை :
ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஒவ்வொரு மரத்திலும்
வேறு வேறு பச்சை உள்ளது.

நான் கணப்பருகில் அமர்ந்து யோசிக்கிறேன்
நீண்ட காலத்திற்கு முன்பு
இந்த உலகைப் பார்த்த மக்களை
நான் ஒருபோதும் அறிய மாட்டேன்.

ஆனால், நான் அமர்ந்திருக்கும் எல்லா பொழுதுகளிலும்
முன்பு இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்,
திரும்பி வரும் காலடிகளின் அரவத்தைக் கேட்கிறேன்.
மற்றும் வாசலில் குரல்களின் ஆரவாரத்தையும்.

*********

சர்வதேச அளவில் ஃபேண்டஸி இலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக கருதப்படும்  ஜே. ஆர். ஆர். டோல்கின் (J. R. R. Tolkien 1892 – 1973) ஆங்கில எழுத்தாளர், கவிஞர்.  இவர் கற்பனைக்கெட்டாத புதிய புதிய உலகங்களை தோற்றுவித்து ஒரு புத்தம் புதிய நவீன ஃபேண்டசியை உருவாக்கினார்.  The Lord of the Rings, The Hobbit, The Silmarillion ஆகியவை இந்தவகையில் முதன்மையான படைப்புகள். இவருக்கு முன்பே பல எழுத்தாளர்கள் ஃபேண்டஸி தளத்தில் படைப்புகளை எழுதியிருந்தாலும் இவரது படைப்புகளே முதன்மையாகவும் முக்கியமானவையாகவும் நிலைத்து நிற்கின்றன. இதனால்தான், இவரை ‘நவீன ஃபேண்டஸி இலக்கியத்தின் தந்தை’ என்று கொண்டாடப் படுகிறார். இவரது நாவலை அடிப்படையாக வைத்து பீட்டர் ஜாக்ஸன் இயக்கிய லார்ட் ஆஃப் த ‌ரிங்ஸ் சீ‌ரிஸ் உலகளவில் மிகப்பெ‌ரிய வரவேற்பை பெற்றது.அதைத்தொடர்ந்து, டோல்கினின் The Hobbit நாவலை மையமாக வைத்து மூன்று பாகங்கள் திரைப்படங்களாக வெளிவந்தன.

1990 களில், உன்னதம் இதழில், அவரது சிறுகதையான  “நிகில் வரைந்த இலை”  (தமிழாக்கம் : ஆர்எஸ்ஆர்) வெளிவந்துள்ளது.

******

இந்த நினைவு நாளில் அவரை முன்வைத்து, ஒரு காலகட்டத்து தமிழ்ச் சூழலின் சித்திரத்தை வரைந்து பார்த்த ஞாபகங்களுடன்…

************

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page