• Thu. Sep 21st, 2023

புதுவகை  எழுத்தின்  உரையாடல்

ByGouthama Siddarthan

Sep 1, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

சித்தார்த்தன்: கௌதம சித்தார்த்தன் என்றழைக்கப்படுகிற  மற்றவனின் கையெழுத்தில் சுழலும் புதிரிலிருந்து புதுவகை எழுத்து (New Writing) பற்றிய பிரக்ஞையுடன் விவாதத்தின் முடிச்சு இறுகுகிறது. அதன் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் இது. சுழலும் பல்வேறு தோற்றப் பாதைகளின் இணைவு முழுமையை நோக்கி அழைத்துப் போகக்கூடும் புது வகை எழுத்தில்.

 

கேள்வி: புதுவகை எழுத்து என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: வாழ்க்கைக்கும் கலைக்கும் இடையே உள்ள இடைவெளியை புதிர் வெளியாக்குவது தான் புதுவகை எழுத்தின் சவால். மொழியின் சவால்களை எதிர்கொள்ளும் எழுத்தின் தீராத பக்கங்களில் திறந்து கொள்ளும் எழுத்துத்தளம், வாசகனின் வாசிப்பு ரசனையை புதுவகையான தரிசனமாக விரிக்கிறது.

கதைக்குள் கதைக்குள் கதையாய் ஆயிரத்தொரு இரவுகளில் மாயக் கம்பளத்தில் விரியும் ஜால யதார்த்தம், வார்த்தைக்குள் வார்த்தைக்குள் வார்த்தையாய் சுழன்று புதுவகை எழுத்தில் வினோத வடிவம் கொள்கிறது. பிரதியில் இடறிவிழும் வாசகனை பிரதிக்கு அப்பாலும் சுழட்டி வீசியெறிவதுதான் புதுவகை எழுத்து.

 

கேள்வி: வெறும் அலங்காரமான வார்த்தைகளை மட்டுமே முன்வைத்திருக்கிறீர்கள். அல்லது புரிபடாத திருகலான ஒருமொழிநடையில் பேசுகிறீர்கள். இப்படி யார்வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு திரியலாம். தெளிவாகவும், விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லுங்கள்.

பதில்: இந்தச்சமூக வெளியில் வேர்பிடித்துள்ள எழுத்துமுறையை உடைத்து ஒரு புதிய எழுத்து முறையைக் கட்டமைப்பதற்காக இப்படியான பீடிகைகள் அவசியம். காலங்காலமாய் உருவாக்கி வைத்திருக்கும் செக்குமாட்டு ரசனையில் உழலும் வாசகனைச் சடாரென்று திரும்பிப் பார்க்கவைக்கும் கவனத்திசைதிருப்பல். அவ்வளவுதான். மற்றபடி புதுவகை எழுத்து என்னும் கோட்பாட்டை மிகவும் சுவாரஸ்யமாக கட்டமைக்கலாம்.

நான் கால விளையாட்டு பற்றி ஒரு கதை எழுத ஆரம்பிக்கிறேன். அந்தக்கதை யதார்த்த தளத்தைத் தாண்டிய மாய யதார்த்த தளத்தில் செயல்படுகிறது. அதாவது காலத்தை முன்னும் பின்னும் கலைத்துப் போடும் கால விளையாட்டு. அப்படியெனில் அதற்கான ஒரு விளையாட்டை இதற்குள் கொண்டுவரலாம் என்று எண்ணுகிறேன். சட்டென என் நினைவுகளில் முன் வந்து நிற்பது See – Saw விளையாட்டு. இந்த விளையாட்டு பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.. இது ஒரு அற்புதமான விளையாட்டு. என் கதைத் தளம் இந்த விளையாட்டைக் கோருகிறது.

கதையின் நாயகனும் நாயகியும் சின்னஞ் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். அவர்களது பதின்பருவத்தில் பிரிந்து போய்விடுகிறார்கள். காலங்கள் நகர்கின்றன. இளமைப் பருவத்தில் அவளைத் தேடிச்செல்கிறான் நாயகன். இருவரும் சந்திக்கின்றனர்.

இப்படியான சந்திப்பு பலகதைகளில் வந்திருக்கிறது. ஆனால் அவை எல்லாமே யதார்த்ததளத்தில் நிகழும் சந்திப்புகள். எனது கதைமாந்தர்கள் சந்திக்கும் சந்திப்பு வேறு ஒருதளத்தில் நடக்கிறது. அதுவே புதுவகை எழுத்தின் தளம்.

அவனும் அவளும் பங்கு கொள்ளும் சீரான கதையோட்டத்தில் காலத்தின் பங்கு என்ன? என்பதுதான் புதுவகை எழுத்து.

இந்த விளையாட்டுக்குள் மறைந்திருக்கும் மாய யதார்த்தம், நான் புதுவகை எழுத்து என்று கட்டமைக்கும் கதைப் போக்கிற்கு முற்றிலும் பொருந்திப் போக வல்லதாக இருக்கிறது.

நேர்கொண்டு பார்க்கும் பார்வையில் அது யதார்த்தம். சுழட்டியடிக்கும் நுட்பமான அவதானிப்பின் தரிசனத்தில், மாய யதார்த்தம் கொண்ட புதுவகை எழுத்து!

ஆம். கவனியுங்கள்: அந்த விளையாட்டுப் பலகையின் இரு பக்கங்களில் உள்ள இரு வேறு முனைகளில் ஒரு சிறுவனும், சிறுமியும் அமர்ந்திருக்கிறார்கள். மேலும் கீழும் அசைகிறது See – Saw வின் பலகை. ‘ஏத்தலாந்தொட்டி’ என்று நாட்டுப்புறங்களில் அழைக்கப்படும் அந்த விளையாட்டின்  ஆட்டம்  ஆரம்பமாகிறது.  சிறுவன்  கீழே போக, மேலே வருகிறாள் சிறுமி. அவன் மேலே வர, அவள் கீழே…

என் கதைப்பிரதியில் யதார்த்தமான இந்த விளையாட்டின் அசைவை, காலத்தின் அசைவாக மாற்றிப் போடுகிறேன்.

லேலாந்தொட்டி ஏத்தலாந்தொட்டி
ஏலேலாந்தொட்டி எறக்கலாந்தொட்டி
எம்பக்கம் ஒசந்தா எம்பொழுது ஓடுது
உம்பக்கம் ஒசந்தா உம்பொழுது ஓடுது….

இப்போது காலம் என்னும் உருவகம் See – Saw வின் பலகையில் வந்து உட்கார்ந்து கொள்கிறது. இப்போது அந்த ஆட்டம் வினோதமான காட்சிகளை புலனாக்குகிறது.

காலுக்குக் கீழே விலகிப் போகிறது நிலம். அந்தர வெளியில் அசைகிறது உடல். மௌனத்தை உடைத்துக்கொண்டு உயர எழும்புகிறது காற்று. ஆகாசமும் பூமியும் மாறிமாறிக் கண்களில் நிறைகின்றன. பஞ்ச பூதங்கள் என்னும் ஐம்பெரும்நிலைகள் அந்த யதார்த்தத்தை மாயாஜாலமாக மாற்றுகின்றன.

சிறுமியின் பக்கம் மேலே உயர்ந்தால், அவளது காலம் கணப்பொழுதில் ஓடி ஓடி அவளுக்குள் பருவ மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

அதே போல சிறுவனுக்கும்.

இருக்கை அசையும்போது காட்சிகள் மாறுகின்றன. கண்களில் அகப்பட்ட உலகம் விலகிப் போய் பிரம்மாண்டமான வெளி விரிகிறது. தலைக்கு மேலே உறையும் காலம், காலடியில் நதி நீராய் சுழித்தோடுகிறது. ஒரு முனையில் வெயிலின் நினைவுகள் சுரீலெனக் கவ்வி இழுக்க, மறு முனையில் படர்கிறது இருளின் மந்தாரம். அவனது இருக்கை முனை மேலே வரவர அவனுக்குள் மாறுதல் நிகழ்வதை உணர்கிறான். அந்தரத்தில் உயர்ந்திருந்தபோது பெரியவனாகிப் போயிருந்தான். சட்டென அவனது முனைதாழ, எதிர்முனை உயர்ந்துகொண்டே வந்தது. சிறுமியாக இருந்தவளின் முகத்தில் பருக்கள் வெடித்தன. கீழே இறங்கும்போது சிறுவனாகவும், மேலே எழும்பும்போது பெரியவனாகவும் மாறிப்போகிற விசித்திரமான விளையாட்டு அது.

இறந்த காலமும் எதிர் காலமும் அசைந்து அசைந்து காட்சிகள் மறைந்து, காலத்தின் நடுவே அவர்கள் வீற்றிருந்த நிகழ் காலம் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த விளையாட்டின் அசைவை காலத்தின் அசைவாக மாற்றிப் போட்டதன் மூலம் யதார்த்தம் என்னும் கதைத் தளத்தில் காலவெளி என்னும் Metaphor உருவாகிறது. அந்தக்கணத்தில் கதையின் யதார்த்ததளம், அதுவாகவே புதுவகை எழுத்து என்னும் தளமாக தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

அதுமட்டுமல்லாது, இந்த  விளையாட்டில் பயன்படுத்தப்படும்பலகை See-Saw பலகையாகஇல்லாமல் மாட்டுவண்டியில் பயன்படுத்தப்படும் நுகத்தடியாக இருக்கிறது. கதையின் நாயகர்கள் கிராமத்து மாந்தர்களாக இருப்பதால், கிராமத்து ‘ஏத்தலாந்தொட்டி’ விளையாட்டில் ஆடும் நுகத்தடி கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது கதையின் வாஸ்தவமான போக்காகத் தோன்றலாம். ஆனால் அதுவல்ல விஷயம். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் See-Saw பலகையில் அவர்கள் இருவரும் ஆடுவதாக  கதையை  சொல்லியிருக்கலாம்.  மாறாக, நுகத்தடியை முன்வைத்திருக்கிறேன்.

இது ஒரு கருத்தியல் உருவகம். சமூகத்தில் ‘அடிமை’ என்னும் கருத்தியலுக்காக முன்வைக்கப்பட்ட உருவகம். அந்த ஒரு சொல்லின் மூலமாக அந்த கதைத்தளம் காலவெளியை தலைகீழாகச் சுழட்டியடிக்கிறது.

சொற்கள் என்பவை மிகமுக்கியத்துவம் வாய்ந்தவை. ‘தென்னங்கீற்றுகளில் மின்னுகிற நிலா வெளிச்சம் 30 வெள்ளிக் காசுகளைப் போல மின்னியது’ என்கிற மாயகோவ்ஸ்கியின் வார்த்தைகளில் பின்னப்பட்டிருக்கிறது ஒரு நீண்ட உருவகம். துரோகம், பேராசை, அழிவு, 30 வெள்ளிக் காசுகளைப் பெற்றுக் கொண்டு ஏசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் என்னும் தொன்மம் என்று வார்த்தைக்குள் வார்த்தையின் உருவகங்களுக்குள் பயணம் போக வேண்டும். கார்ஸியா மார்க்வெஸ், ‘அன்றைக்கு 13ந்தேதி’ என்றால் 13 என்ற எண்ணின் நியூமராலஜியிலிருந்து டேரட்கார்டு வரை வாசகன் பயணம் போக  வேண்டுமென்கிறான்.

ஆனால், எல்லா வார்த்தைகளுக்குமே அப்படி அல்ல. கதையுடனான ஓட்டத்தில் பட்டுத் தெறிக்கும் உருவகங்கள் கொண்ட வார்த்தைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். அப்படியான வார்த்தைகள் புதுவகை எழுத்தில்தான் கட்டமைகின்றன. அல்லது அப்படியான சொற்கள் உருவாகும்போது புதுவகை எழுத்து கட்டமைகிறது.

 

கேள்வி: இது போன்ற புதிர் மொழி கவிதைக்குச் சரி; கதையில் உபயோகிக்கப்படும்போது கதைத் தன்மை மறைந்து போகுமே…

பதில்: கதைக்கு சம்பந்தமில்லாத புதிர் முடிச்சை இறுக்கும் போதும், அந்தப் புதிர் வழியின் சுழல்கைகள் அதீதப்படும் போதும் அப்படி நிகழலாம். சொல்லப்படும் கதைமையின் பரிமாணங்களுக்கேற்ற புதிர் மொழியமைவு நிகழ்த்தப்படும்போது கதைக்குள் பல தளங்கள் நகர்த்தப்படுகின்றன.

இப்போது ஒரு வாக்கியத்தைப் பார்க்கலாம்: “கார்டெனியாப்  பூக்களின்  வாசனை  ஒரு  பெரிய வெள்ளமாக மாறி அவனை அடித்துச் சுழற்றுகையில் வெகு இழத்தில் புதைந்திருந்த வெட்டுப்பட்ட குதிரைக்காதுகளில் பளீரிட்டது இளஞ்சிவப்பு நகப்பிறை”.

என்கிற புதிர் வாக்கியத்தில் கார்டெனியாப் பூக்களின் வாசனை (அன்னிய மொழி சார்ந்ததாயிருப்பதால் அதன் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை) என்றால் என்ன, அது எதற்காக என்று தெரியாததால் அந்த இடத்திலே செத்து விழுகிறது வாக்கியம்.

அதை சற்றே மாற்றி “ஆவாரம் பூ வாசனை” எனும் போது எளிதில் நுழைய முடியும்.(ஆவாரம்பூ, ஆண் பெண் பரஸ்பரம் தங்களது அன்பைத் தெரிவிக்கும் ஒரு பூ) அந்த வாசனை அவனுக்குள் சுழலும் போது அவனது பால்ய பருவத்து அற்புதம், அய்யனார் கோவில் குதிரைச் சிலைகளில் ஆரோகணித்த வினோதப் பயணம்.. என்று துருவேறிய சூரியனின் நிழல் அசையும். இளஞ்சிவப்பு நகப்பிறை என்றதும் நகப்பிறையை வைத்து சிற்பம் செதுக்கும் சிற்ப சாஸ்திரம் விரிபட அவனது இளம்பிராயத்துத் தோழியின் உடல்மொழியும் காலத்தின் லாவண்யமும் சுழன்றோடும்.

 

கேள்வி: தொன்மங்களின் புதிர் மொழியே புதுவகை எழுத்தை நிர்மாணிக்கிறதா?

பதில்: உடனடியாக ஆம் என்று சொல்வதற்கில்லை. தொன்மங்களின் புதிர் முடிச்சில் புதுவகை எழுத்து இறுகித் தெறிக்கிறது. கதைக்கும் தொன்மங்களுக்குமான இணைவு கதை வரிகளினூடே தொன்மங்களின் படிமம் வரும் போதும், தொன்மத்தின் ஒரு பகுதி கதையாக மாறும் போதும் நிகழும் ஜாலத்தன்மையில் புதுவகை எழுத்தின் எல்லைகள் விரிகின்றன. எழுத்தில் அனுமானிக்க முடியாத சாத்தியங்களை நிரப்பும் கார்ஸியா மார்க்வெஸ்ஸுக்குள் மூதாதைகளின் தொன்மங்கள் சுழல்கின்றன. மேற்கில் உள்ள ஜால யதார்த்தத்தைப் பார்த்து நொட்டைவிட்டுக் கொண்டிருக்கிற நாம், நம்முடைய புராணிகத் தொன்மங்களைப் பார்க்கத் தவறுகிறோமா? புதுமைப்பித்தனின் ஜால யதார்த்தங்களில் விரியும் தொன்மம் நம் செழுமையான மரபில் காலூன்றி எழுவதைக் கவனிக்கலாம். இந்த மண்ணின் ரத்தமும் சதையுமான ஜால யதார்த்தத்தின் எல்லைகளற்ற தன்மையை நம் கையெழுத்தாக மாற்றும் போது, உலகின் கவனிப்பு மிகுந்த கதை சொல்லிகளாக மாறுவோம்.

சூரபத்மன் தனது நூற்றியொரு சிரங்களையும் ஒவ்வொன்றாக வெட்டி, எரியும் யாக குண்டத்தில் ஆஹுதியாக்கினான் என்கிற தொன்மம், நெறி தவறிய  பெண்கள்  அந்தக்  கிணற்றில்  நீர்  மொள்ள குடத்தைக் கீழே இறக்க இறக்க, நீர் கீழே கீழே போய்க் கொண்டேயிருக்கும் என்கிற ஜால யதார்த்தம்.. என்று நமது வேர்களில் கிளைத்தெழும் அற்புத சிருஷ்டிகளை மறந்து, அந்நியமான, படிமத்தன்மை தெரியாத, விஷயங்களை வினோதப்படுத்தும்போது  புதிர்மொழியின்  வீரியமிழந்து போகிறது.

அதே சமயம் உலகம் முழுவதும் (முழுப்பரிமாணமும் புரிந்த) தெரிந்த ஒரு படிமத்தை உபயோகிப்பதில் தவறில்லை. உபயோகிக்கும் விதத்தில் தவறில்லாமல் இருக்க வேண்டும். “தோல்விக்கு அப்பாற்பட்டவன் நீ, அக்கிலஸின் குதிகால் உனக்கில்லை..” என்று டி.எஸ். எலியட் சொல்லும் போது அவனுடைய மண்ணின் வெதுவெதுப்பு அது. அக்கிலஸ் பிறந்தவுடன், அவனை யாராலும் தோற்கடிக்கப்பட முடியாத வீரனாய் மாற்றும் பொருட்டு, ஸ்டைக்ஸ் நதியில் குழந்தை அக்கிலஸை அவனது அம்மா முக்கி எடுக்கிறாள். ஆனால் அவள் கரம் பற்றியிருந்த குழந்தையின் குதிகாலில் நதிநீர் படாததால் அது பலவீனமடைகிறது. பின்னாளில் அந்தக் குதிகால் பகுதியில் அம்பு பாய்ந்து செத்துப் போகிறான் அக்கிலஸ். இந்த  முழு  வரலாறும்  தெரியாத  நாம்  அக்கிலஸின் குதிகால் என்ற படிமத்தை எதிர் கொள்ளாமல் தாண்டிப் போகும் போது வாக்கியம் இறந்து போய்விடுகிறது. கூடவே  வார்த்தையும்,  வார்த்தைகளின்  கூட்டமான கதையும். நம்முடைய தொன்மத்தின் வேர்கள் அக்கிலஸின் குதிகாலில் இல்லை: துரியோதனனின் தொடையில் இருக்கிறது.

 

கேள்வி: சொற்கள் மாறுகின்றன, மொழி மாறுகிறது, தூக்கணாங் குருவிகள் சொற்களைத் தூக்கிக் கொண்டு பனைமர வரிசைகளுக்குச் செல்லுகின்றன: கதையின் உருவம் உள்ளடக்கம் மாறுகிறது. கதையின் வடிவமும் மாற வேண்டியதன் அவசியம் என்ன?

பதில்: கதையின் கோடுகளும் வண்ணங்களும் மாற்றம் பெற்று எழுத்தின் வாக்கியங்களில் இணையும் போது கோடுகள் மற்றும் வண்ணங்களாலான மொழி விரிகிறது. கதையின் பத்திகளைக் கலைத்துப் போடுவதும் நேர்கோட்டினை இல்லாமலாக்குவதும் புதுவகை எழுத்தின் ஒற்றைப் பரிமாணமே. கதைக்கேற்ற வடிவங்களைக் கட்டமைக்கலாம், ஆனால் எல்லாக் கதைகளுக்குமே வடிவ மாறுதல்களில் ஈடுபடும் போது இனம் புரியாத இழப்பு கதைகளைக் கவ்வும். புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளரான ஜே.ஜி.பல்லார்ட், தனது கதை ஒன்றில் கதைப் பத்திகளைக் கலைத்துப் போட்டிருப்பார். அவைகளை எடுத்துச் சரியாக அடுக்கும்போது ஒரு புதிய கதை சொல்லல்முறை உருவாகியிருக்கும். இன்னும் விளக்கமாகச் சொன்னால், அந்தக்கதை, ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசைப்படியான (A,B,C,D,) உப தலைப்புகளின் வழியாக, ஒவ்வொரு பத்தியாக விரியும். அவைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்யும்போது, தமிழ் எழுத்துக்களின் அகர வரிசைப்படி மாற்றிப் போடலாம். அப்போதும் இந்தக் கதையின் உள்ளடக்கம் சிதையாது. ஏனெனில் அந்தக் கதையின் வடிவமே ‘சீட்டு ஆட்டம்’ பற்றிய உள்ளடக்கம்தான். கதையின் உலகமே கதையின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது.

என்னுடைய ‘பலிபீடம்’ கதையைமுதலில்முற்றுப்புள்ளி இடாமல், பத்தி பிரிக்காமல் தான் எழுதினேன். காரணம், ஒரு கல்லில் சிற்பம் வடிக்கின்ற கலையின் வடிவம், கதையின் வடிவமாக மாற வேண்டுமென நினைத்தேன்: கல் – கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பம் – சதுரமாக நீளும் வார்த்தை வரிகள் – அதற்குள் ஒளிந்திருக்கும் கதை – கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பத்தை சிற்பி செதுக்கியெடுப்பது போல், வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் கதையை வாசகர் பகுத்துணர வேண்டும் என்கிற ரீதியில் – அபத்தமாக – யோசித்துக் கிடந்த போது திரைப்படத்தின் Dissolve உத்தி (ஒன்று மறைந்து மற்றொன்று தோன்றுவது) இதற்குப் பொருந்தி வருமெனத் தோன்றியது. உடனே பரபரப்புடன் மாற்றியெழுத ஆரம்பித்தேன். முற்றிலும் சுயமான புதுவகை உத்தியாக, புதுவகை எழுத்தின் மற்றொரு பரிமாணமாகச் சுழன்றது பிரதி.

சுழற்சியாலான முளைக்காம்பினை உறிஞ்சிக் கொண்டிருக்கும் செக்கு மாட்டு எழுத்துக்களின் பல்வேறு பரிமாணங்களில் வெற்று வார்த்தைகள் சுற்றிக்  கொண்டிருக்கின்றன.  வார்த்தைகளை  உருவாக்க வேண்டும். சீவிச்சீவிச் செய்யும் வார்த்தையணு வெடிக்கும் போது உருவாகும் பிரளயத்தில் புதுவகை நெடியின் அற்புதம் சமையும். லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளின் சொற்கட்டுமானத்தையும், அதனூடாக இயங்கும் படிமங்களையும் அவதானியுங்கள். நீண்டு செல்லும் அதில் ஒரு பெரும் புதிரோ அல்லது ஜாலத் தன்மையின் துணுக்கோ  ஒட்டிக்  கொண்டிருக்கிறது.

“எனவே நான் தோட்டத்தைக் கடக்க வேண்டும், மரங்களைப் பின் விட்டு, மூன்று மூன்று படிகளாகத்தாண்டி மலையை விட்டு இறங்கி குறுகிய செஸ்ட்நட் மரத் தோப்பு வழியேசென்று – இங்கேதான், நிச்சயமாக, அந்தக் குழந்தை வெள்ளை நிற இதழ்களைச் சேகரித்து கிறீச்சிடும் பூங்காக் கதவைத் திறந்து, திடீரென நினைவு கூர்ந்து, தெரியும் தன்னைத் தெருவில் கண்டு, ஒருவனுடைய இளம் பருவத்தின் எல்லா மத்தியானங்களையும் உணர்ந்து, ஒரு மாய மந்திரம் போல, வெள்ளப் பெருக்கான விசில்கள், மணிகள், குரல்கள், விசும்பல்கள், என்ஜின்கள்,ரேடியோக்கள், சாபங்கள் ஆகியவற்றை இல்லாமல் ஆக்கி, சூழ்ந்துள்ள நகரத்தின் துடிப்பை அறுப்பதில் அவன் வெற்றி கண்டான்”. இது கார்லோஸ் ஃபுயண்டஸின் Magic line. (பொம்மை ராணி)

“அவன் மண்டையெங்கும் வண்டுகளின் ரீங்காரத்தில் ஊழி பல தோய்ந்த புழுதி தேகமாத்யந்தமும் சுழட்டியடிக்க, உளியின் பிலத்துவாரம் பெரிதாகிக் கசியும் ஒளியில் காலடி எட்டிப் போடும் மிதப்புகளில், இருட்பந்தாய் அசையும் நிழல்வெளி நீட்டநீட்ட நெளிநெளியாய்ச் சுருண்டு குடைந்து நீறும் கற்பாதையின் சுழற்சி தலையைக் கால்களாகவும், கால்களைத் தலைகளாகவும் மாற்றிப்போடும் பாசம் படிந்த தொல்சுவர் விரிப்பில் மோதிச் சிதைந்து பூஞ்சனம் பூத்த அவன் கால்களில் நுரை சுழித்தோடும் நதிக்கரையின் நாணற் புதர்களில் மண்டியிருந்த இருள் மெல்ல விலகிக் கொண்டிருக்கிறது”. இது என்னுடைய Dissolve line. (பலிபீடம்)

கதையின் ஓட்டத்தினூடான இணைவிலேயே வாக்கியங்களில் நீளும் வார்த்தைகளின் உருவகம் முழுமை பெறுகிறது.

 

கேள்வி: இது போன்ற எழுத்துமுறையில் வாசகனால் உள்ளே  நுழையமுடிவதில்லையே.. கதைப்பிரதி தன்னைப் பூடகமாகவும் இறுக்கமாகவும் பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் நிலைதான் ஏற்படுகிறது. அந்தப் பூட்டைத் திறந்து கொண்டு வாசகனை உள்ளே நுழைய வைக்கும்விதத்திலான எளிய கதைமொழியாக இல்லையே நீங்கள் கட்டமைக்கும் புதுவகை எழுத்து..?

பதில்: எழுத்து எல்லோருக்கும் புரிகிற மாதிரி எளிமையாக இருக்க வேண்டும் என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் எளிமை என்பது என்ன என்பதை வாசகப்பரப்பு உணர்ந்து கொள்ள வேண்டும்.

உன்னதம் இதழில் எஸ் பாலச்சந்திரன் மொழியாக்கம் செய்த, நவீன உலகக் கவிஞரான Dennie Abse எழுதிய ‘ஜன்னல் கண்ணாடியில் வழியும் எழுத்துக்கள்’ என்ற கவிதையைக் கேளுங்கள்:

எல்லோரும்  புரிந்து  கொள்ளும்படியான
எளிய விஷயம் எதையேனும் எழுத நான் விரும்புகிறேன்
சுத்தமான தண்ணீர்போல எளிமையான எதையேனும்
ஆனால் சுத்தமான தண்ணீர் என்பது H²O
மேலும் அது சிக்கலானது
நீராவி போல, பனிக்கட்டி போல, மேகங்களைப் போல..
ஏதேனும் சொல்ல விரும்புகிறேன்
நீரைப்போல் எளிய காதலைப்பற்றி..
காலத்தையும் பற்றி..

ஆக, நாம் எண்ணியிருந்த எளிமை என்பது எளிமையல்ல. யதார்த்தமான தளத்தில் தண்ணீர் என்கிற உருவகம் எளிமையானது. நவீன தளத்தில் அது சிக்கலானதாக மாறும் படிமமாகிறது. அதை இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக நகர்த்தும்போது நீரின் குளுமை காதலாக மாறுகிறது. காலமாக மாறுகிறது. ஆக எளிமையான புரிதல் என்னும் தன்மை, ஒரு கலைவடிவத்தில் சிக்கலான புதிர்த்தன்மையாகிறது. அதுதான் வாசகனின் மன உணர்வுகளைப் புத்துணர்ச்சியூட்டும் வாசக சுவாரஸ்யம் மற்றும் வாழ்வியலை எளிமையாக எதிர்கொள்ளும் படைப்பூக்கம். ஆக, சிக்கல் என்பது சிக்கல் அல்ல.

இவ்வாறாக, வாசகன் பிரதியின் பல்வேறு பரிமாணங்களினுள்ளே நுழைய அந்த எளிமையின் புதிர்த்தன்மை அழைக்கிறது. வாசகன் மேலோட்டமான இறுக்கத்தினால், முயற்சியைக் கை விட்டு சோர்வுடன் திரும்பி விடுகிறான். அல்லது மேலோட்டமாக கண்ணில் படும் காட்சியை வெறுமனே தங்களது ஜோடனைகளுடன் அளந்துவிடும் விமர்சகர்களின் அலட்சியப் போக்கில் சுகம் கொள்கிறான்.

முற்றிலும் தவறானவை இந்த இருமன நிலைகளும். பிரதியின்  பிரம்மாண்டமான  ஆளுமையை  உள்வாங்க வேண்டுமெனில்,  அரண்களின்  கதவுகளைத்  திறந்து உள்ளே செல்லத்தான் வேண்டும். சிரத்தையுடன் அதற்கான திறவுகோலைத் தேடிப் பிடித்துத்தானாக வேண்டும்.

ஒரு தீவிர வாசகன் செய்யவேண்டியதெல்லாம் தன்னிடம் தரப்பட்டுள்ள பிரதிக்குள் நுழைய, அதிலேயே சாவியும் உள்ளது என்பதை உணர்ந்துகொள்வதுதான்.

எனில் வாசகன் திறவுகோலை உணர்ந்துகொள்வது எவ்வாறு?

ஒரு பெருங்கதையாடலில் (தேவாரம்) இந்த நுட்பமான வாசிப்பை  உணர்த்தியிருப்பதைக்  கவனியுங்கள்:

வேதாரண்யம் திருமலைக்காட்டில் உள்ள ஒரு பழமையான கோயிலின் கதவு வெகுகாலமாகத் திறக்கமுடியாமல் கிடக்கிறது. அந்த வழியாய் வருகிற அப்பர், ஒரு குறிப்பிட்ட ராகபூர்வமான பதிகம் ஒன்றைப் பாடுகிறார். அந்தக் கதவு திறவுபடுகிறது. அதன் பிறகு சிலநாட்கள் கழித்து அந்தக் கதவை மூட முயற்சி செய்கிறார்கள். முடியவில்லை. அப்பொழுது அந்த வழியாக வந்த சம்பந்தர், அப்பர் பாடிய அதே ராகத்தில் வேறு ஒரு பதிகம் பாடுகிறார். கதவு மூடிக்கொள்கிறது. இதில் உள்ள ஜாலயதார்த்தம், கதவை எந்தச் சாவிகொண்டு திறக்கிறீர்களோ, அதே சாவியால்தான் மூடமுடியும் என்பதே. பதிகம் வேறாக இருப்பினும், அதே ராகார்த்தத்தில்தான் சாத்தியம் என்கிற யதார்த்தமான அதே சமயத்தில் யதார்த்தமற்ற யதார்த்தத்தில் மொழி நடை சுழன்று சுழன்று செல்வதை உணரலாம்.

இந்த உதாரணம் என்பது மிகமிக எளிமையான அனைத்து வாசகர்களாலும் உணர்ந்து கொள்ளப்படும் வகையில் இங்கு முன்வைத்திருக்கிறேன்.

ஆனால், நவீன கதைகளில் இந்த திறவுகோல் என்பது, மிகவும் நுட்பமாகவே உருவாக்கப்பட்டிருக்கும்.

 

கேள்வி: நவீன எழுத்து தோல்வியுறும் இடத்திலிருந்து புதுவகை எழுத்து பிறக்கிறது என்கிறீர்கள்.. அதுகுறித்து விளக்கமுடியுமா?

பதில்: நவீன எழுத்தின் சாத்தியமானவற்றிற்குமப்பால் விரிந்து கிடக்கிற புலனாகாத இடைவெளியைப் புதுவகை எழுத்தால்தான் நிரப்பமுடியுமென நம்புகிறேன்.

சிறுகதை வடிவமாக வடிவமைப்பதற்கு முற்றிலும் பொருந்திப் போகிற ஒரு Plot ஐ முன் வைத்துப் பேசலாம். கிராமம் சார்ந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கோடைப் பருவத்தின் போது முயல்வேட்டைக்குப் போவார்கள். ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த விழாவில், சாமி தனது பரிவாரங்களுடன் வேட்டைக்குப் போவதாக ஐதீகம். இது ஒரு வேட்டைச் சடங்காக இன்றளவிலும் கிராமங்களில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. கோயிலிலிருந்து கிளம்பி தாரைதப்பட்டைகளை முழக்கிக் கொண்டு கொம்புகள் ஊதியபடி கொட்டுக்காரர்கள் முன்னால் போக, பின்வரிசையில் ஊர் மக்களும்  வேட்டைநாய்களும் பாய்ந்தோடிச் செல்வார்கள். இளைஞர்கள் குறுந்தடியை ஏந்திக் கொண்டு நடைபயிலும் வேட்டையில் கொட்டு முழக்கின் சத்தம் கேட்டு புதர்களில் பதுங்கியிருக்கும் முயல்கள் எழுந்து ஓடும். அப்போது பறை கொட்டிக் கொண்டு போகும் தலித்துகள் அந்த முயலை அடிக்கமாட்டார்கள். அடிக்கக் கூடாது. ஆதிக்க உயர் சாதிக்காரர்கள்தான் அடிக்கலாம். நாய்கள் பாய்ந்து பிடுங்கலாம். ஆனால், தலித்துகள் அடிக்கக் கூடாது.

சாதிப்படிநிலைகளை பொத்திப் பாதுகாத்துவரும் கிராமங்களில் இப்படி ஒரு ஐதீகம் பலமாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒரு தலித் இளைஞன், இந்த கருத்தோட்டத்தை கதையாகச் சொல்கிறான் என்று வைத்துக்கொண்டால், தற்கால நவீன கதை ஆசிரியன் என்ன மாதிரியான காட்சிப்புலங்களை கட்டமைப்பான் என்பதைப் பார்க்கலாம்.

அந்த வேட்டை சம்பந்தமான நுட்பங்கள், பெண்கள் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்னும் தகவல்கள், மருள் வந்து ஆடும் பூசாரியின் பச்சை ரத்தம் குடிக்கும் சடங்குத் தன்மை, கொம்புகளின் முழக்கத்தில் அதிரும் கானகம், இரும்புப் பூண்போட்ட குறுந்தடியின் இலக்கு தவறாத தன்மை, முயல்களின் உறைந்துபோன கண்கள்… என்று புனைவின் யதார்த்தத்துடன் நகர்த்துவான். இறுதி முத்தாய்ப்பாக அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாத ஒரு தலித்தின் கையறு நிலையை காவிய சோகமாக முன் வைப்பான். அந்த யதார்த்த சோகத்தை நவீனத்துவப் பார்வையாக, அந்தக் கதையாடலில் மாற்றும்போது, “சட்டென அவன் அந்த அகண்ட வெளியின் தரிசுநிலத்தில் கரம்பைப் புற்களின் ஜிமிக்கிகளில் காதுகளை இடுக்கிக் கொண்டு பறந்தோடி வரும் முயலாக மாறிப்போவான்.” என்ற நவீனத்துவத்தின் கலை அழகியல் அற்புதமாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு நவீன கதையாக்கமாகத் திரளும்.

இதுபோன்ற நவீனமொழிநடை சார்ந்த புனைவின் ஓட்டம் அல்லது புனைவின் ஜீவன், இந்தக் கதையில் இயங்கும் ஒரு வரலாற்றுத் தார்மிகத்திற்கு நேர்மையாகச் செயல்படவில்லை என்பதை நுட்பமாக நோக்கும்போது உணரலாம்.

இந்தக் கதையின் மையமே தலித் இளைஞனின் தார்மிகமான ஆவேசம்தான். அந் த ஆவேசமான எதிர்வினையை கலை அழகியல் சார்ந்த மொழிநடையின் கட்டமைப்பில் முன்வைத்திருக்கவேண்டும். சற்றே மொழிநடை மாறுபட்டாலும், கதையின் கலைத்தன்மை பிரச்சாரத் தன்மைக்கு உருமாறி கதையின் ஜீவன் அழிந்து போகும் அவலம்தான் ஏற்படும்.

அதனால்தான் கலைஅழகியலுக்கு முக்கியத்துவம் தரும் நவீனம் சார்ந்த மொழிநடையில் கதையைக் கட்டமைக்கிறான் ஆசிரியன். நாட்டாரியலின் நுட்பமான தகவல்களை வாசக சுவாரஸ்யத்துடன் பிணைத்து, ஒரு துயரமான அழகியலோடு முன்வைக்கிறான். இந்த நவீன மொழி நடைஉத்தியில் கதையின் தார்மிகமான ஆவேசம், பூரணத்துவமடையவில்லை என்பதை உணரலாம். கதைசொல்லியின் இயலாமை காட்டுவெளியில் ஒலிக்கும் துயரத்தை சமூகவெளியில் நிரப்பமுடியாத அவலமாய்த் தேங்கி நின்று விடுகிறது.

இந்தத் தேக்கநிலை என்பது ஆசிரியனால் ஏற்படுவதல்ல.  அவன்  கையாளும் மொழிநடையின் போதாமையினால்தான்.

இங்குதான் புதுவகை எழுத்து தோன்றுகிறது. நவீன மொழியில் நிரப்பமுடியாத இந்த இடைவெளியை நிரப்பவல்லது புதுவகை எழுத்து. பிரச்சாரத் தொனியின்றி கலைத்தன்மை சற்றும் குறையாமல் கதையின் பரிமாணங்களை விரிவுபடுத்துகிற வாக்கிய அமைப்பாக்கமும், கதை சொல்லலும் முடிவற்ற சுழற்சியாய் நீளும்போது, அதற்குள் அகப்படும் வாசகன், கதை வளையங்களின் கோடுகளுக்குள் சுழன்று சுழன்று, காலம் – வரலாறு – சமூகம் போன்ற பல்வேறு தளங்களில் சுற்றித்திரியும் காட்சிப்புலங்களை உருவாக்குகிறது புதுவகை எழுத்து..

இந்த Plot ஐ புதுவகை எழுத்தில் முன்வைக்கும்போது, மறைக்கப்பட்ட வரலாற்றின் பசிய மடிப்புகள் வெடித்துக் கொண்டு மேலெழும்பும். திரிக்கப்பட்ட சடங்குகளின் அசைவுகள் மீண்டும் தங்களைப் புனரமைத்துக் கொள்ளும். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தார்மிகங்கள் கலை அடுக்குகளுக்குள் விரிந்தோடும். இந்த அறவியல்களில் கட்டமையும் மொழிநடையானது காலங்காலமான தார்மிகத்தின் ஆவேசத்திற்கு நியாயம் சேர்ப்பித்திருக்கும்.

இந்த இடத்தில் பெருமாள்முருகன் எழுதியுள்ள ‘கொட்டு’ என்ற கதையை எடுத்துக் கொள்ளலாம்:

ஊர்த்திருவிழாவில் ஆட்டமாடுகின்ற உயர்சாதி இளைஞர்கள் X கொட்டுக் கொட்டும் தலித்துகள். பறைக் கொட்டுக்கேற்ப ஆடிக்கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள். டன்டணக்கு டன்டணக்கு என்று ஒலிக்கும் பறையின் முழக்கம் சுருதி குறையும்போது, தீக்கணப்பில் பறைகளைக் காய்ச்சிக்கொண்டு வந்து சுருதி குறையாமல் கொட்டவேண்டும். அவ்வாறாக சுருதி குறையும் போதெல்லாம் பறையடிப்பவர்களை இளைஞர்கள் வசையுடன் திட்டுவார்கள். இப்படித் தங்களை கேவலமாய் நடத்துவதற்கு எதிர்வினையாக, தங்களது கொட்டின் அடியை மாற்றிக் கொட்டுவார்கள் கொட்டுக்காரர்கள். ‘போடா நாயே.. போடா நாயே..’ என்று வசைமொழியாக அந்தக் கொட்டின் அடி மாறிவிழுவதாக இந்தக் கதை முடியும்.

இந்தக் கதையாடலைக் கூர்ந்து நோக்கினால், இருசாராரையும் திருப்திப்படுத்தும் போக்கு இதில் ஊடாடுவதைக் கவனிக்கலாம். தலித்துகளின் கோபம் கொட்டின் தாளத்தில், ‘போடா நாயே.. போடா நாயே..’ என்று விழுகிற அதேசமயம், ஆட்டம் போடுபவர்களுக்கு ‘டன்டணக்கு.. டன்டணக்கு..’ என்றுதானே கேட்கும்? இருசாராருக்கும் திருப்தி ஏற்படுத்தும் வண்ணம் சுபத்துடன் முடிகிறது கதை.

இதில் வெளிப்பட்டிருக்க வேண்டிய கொட்டுக்காரர்களின் தார்மிக ஆவேசம் வெறுமையான கலை அழகியலாக மாறியிருக்கிறது. நாட்டார் மொழியில் சொன்னால், மொன்னைக் கோபமாக மாறியிருக்கிறது.

கதையின் இந்தப் போதாமை கதைஆசிரியனால் நிகழ்வதல்ல, கதையாடலின் தார்மிகத்தை முழுமையாக்க இயலாத  மொழிநடையினால்தான்  நிகழ்கிறது.  இதை வேறுவிதமான நேரடித்தாக்குதல்களிலோ, எதிர்ப்புச் செயல்பாடுகளிலோ மாற்றினால் கதையின் போக்கு சரேலென பிரச்சார தளத்திற்குத் தாவி கதையின் ஜீவன் சிதைந்து போய்விடும்.

கொட்டுக்காரர்களின்  பறையொலியை,  ஆட்டம் போடுபவர்களின் உடல்மீது அறைந்து நொறுக்கித் தள்ளுகிறாற்போல மாற்ற புதுவகை எழுத்தே சாத்தியம். அதன் தொன்மங்களின் கலை அடுக்குகளே சாத்தியம்.

உதாரணமாக, கிராமிய அழகியல் சார்ந்து இயங்கும் பனம்பழத்தின் தொன்மத்தைப் பாருங்கள். பனம்பழத்தில் மேலும் கீழும் என இருபகுதிகள் உள்ளன. அதில் மேல் உள்ள பகுதி, வெள்ளையாய் ருசியே இன்றி சப்பையாய் இருக்கும். அந்தப்பகுதிக்கு ‘பாப்பான் பொச்சி’ என்று பெயர். அதேபோல் கீழ் உள்ள பகுதி, சாந்துச் சிவப்பாய் அபாரருசியுடன் இருக்கும். அந்தப்பகுதிக்கு ‘பறையன் பொச்சி’ என்று பெயர். இப்படி கலகத்தன்மையோடும் நுட்பமான அரசியல் தன்மையோடும் தொன்மங்களை உருவாக்கி வைத்திருக்கிறது நாட்டாரியல். இந்தத் தொன்மங்களின் அடுக்குகளில் நுழைந்து படிமங்களாக உருவாகும் மொழிநடையில், புதுவகை எழுத்து தார்மிக ஆவேசமாகிறது.

 

கேள்வி: புதுவகை எழுத்து V/s வாசகன்?

பதில்: இருவேறு விதமான வாசக மனங்களால் கட்டப்படுவது இந்தப் புதிர் மொழி. மேலோட்டமான பார்வையும், நுனிப்புல் வாசிப்பும் கொண்ட வாசகன் அவனது நினைவிலி மனத்தில் அடைபட்டுக் கிடக்கும் பார்வையில் இந்தக் கதைமொழியை எதிர்கொள்வான். ஆழமான வாசிப்பும் நுண்ணுணர்வும் கொண்ட வாசகனோ முற்றிலும்  வேறு  விதமான  தரிசனத்துடன்  நினைவு மனத்துக்கும், நினைவிலி மனத்துக்குமிடையே ஊடறுத்துப் பயணம் போவான். இந்த இருவேறு வாசகமனங்களிலுள்ள வாசக சுவாரஸ்யங்களையும், ஜால வினோதங்களையும், அற்புத அனுபவமாக மாற்றவல்லது புதுவகை எழுத்து. இரு வேறு தளங்களையும் ஒரே பாய்ச்சலாகத் தாண்டிச் செல்லும் பிரம்மாண்டம் அது.

தகிப்பு மனோ நிலை கொண்ட கலைஞனே புதுவகை எழுத்தைத் தோற்றுவிக்கிறான் என்கிற வாக்கியத்தின் முனையில் இந்த உரையாடலை நிறுத்திக் கொள்வோம் இப்போதைக்கு. பூர்வ பீடிகைகளின்றி ஒரு கணத்தில் நடந்தேறிய இந்த உரையாடல் புதிர் எழுத்தின் மையத்தை நெருங்கும் ஒரு பரிமாணம் மட்டுமே. இந்த எழுத்தில் கவனம் கொள்பவர்களின் தொடர்ந்த விவாதம் புதிர்ச் சுழலைக் கடைந்து செல்ல இயலும்.

(ஜனவரி 1996, உன்னதம் 5)

 

***

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page