• Thu. Sep 21st, 2023

சோமு என்னும் ஈமு

ByGouthama Siddarthan

Aug 29, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

‘ரஜினிகாந்தைக் கொலை செய்வதென்று தீர்மானித்துவிட்டேன்; ஆமாம், தமிழ்ச்சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான்…’

என்செல்பேசியில் வந்திருந்த இந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததும் வெலவெலத்துப் போனேன். ஒருவேளை தமாஷாக இருக்குமோ…? மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அப்புறம் தமிழ் சினிமாவின்கதி? சற்றைக்கெல்லாம் ஒருமுடிவுக்கு வந்தவனாக செல்பேசியில் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டேன்.

“இன்னும் 25 நிமிடங்களில் உங்களை வந்து சந்திக்கிறேன்…” என்றது அந்த மர்மக்குரல்.

அடபெத்தராயுடா! அது இன்னும் ஆபத்தாச்சே… உடம்பில் ஒரு நடுக்கம் ஏறியடித்தது. பயம் கலந்த பதட்டத்துடனும் தவிப்புடனும் காத்திருந்தேன்.

சரியாக 25ஆம் நிமிடத்தில் வந்து சேர்ந்தார் ‘அவர்.’ தோளில் தொங்கிக் கொண்டிருந்த குஞ்சலங்கள் பதிந்த பை இந்திக்காரர்போல அடையாளப்படுத்தியது. நாளைக்கு போலீஸ் என்கொயரியில் கணினி முன்னால் அடையாளம் சொல்ல அமரும்போது சொல்வதற்கு வாகாக, அவரது அங்கலட்சணங்களை நோட்டம் விட்டேன். முப்பதைத் தாண்டிக் கொண்டிருக்கும் அவர், சாவகாசமாக அமர்ந்து தனது ‘கனமான’ பையைக்கழட்டி மேஜையின் மீது வைத்து விட்டு ஆசுவாசமானார். பேக் கே பீச்சே கியா ஹை?

அவரோடு பேசப்பேச என்னுள்ளிருந்த பரபரப்பு பறந்தோடி விட்டது. பதட்டப்படாதீர்கள் கிச்சிலிபாளையம் வட்டார ‘காக்கும்கடவுள் கோச்சடையான்’ ரசிகர்மன்ற நிர்வாகிகளே, விஷயம் இதுதான்:

அப்பாஅம்மா பழனிமலையில் மொட்டையடித்து வைத்த பெயர் பழனிச்சாமி; கோலிவுட்டுக்காக நியூமராலஜி பார்த்து தானே சூட்டிக்கொண்ட பெயர் ஆதவன் பழனிசுவாமி. கடந்த 10 வருடங்களில் தமிழின் புகழ் பெற்ற இயக்குனச் செம்மல்களிடமெல்லாம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். தற்போது ஒரு படம் இயக்கும் தணியாத தாகத்தில் அலைந்து கொண்டிருப்பவர்.

அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் ஒருபுதிய திரைக்கதையோடு கோலிவுட்டின் இண்டு இடுக்குகளிலெல்லாம் நுழைந்தவர். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒருகதை:

“விக்ரம், வாசனையை நுகரமுடியாத வினோதமான நோய்கொண்டவராக இருக்கிறார். அமலாபால் தனக்குள் வைத்திருக்கும் இருவாட்சிப்பூவின் அற்புதமான நறுமணத்தை அவருக்குள் நுகரக் கொடுத்து அந்த நோயை எப்படிப் போக்குகிறார் என்பது ஒரு கதை. சூர்யாவுக்கு, ஒருவிபத்தில் தலையில் அடிபட்டு, உருவங்கள், காட்சிகள், எழுத்துக்கள் எல்லாமே இடவலமாகத் தெரிகின்றன. அதாவது இப்படி. ?????? ?????? அவருக்காகவே ஸ்பெஷலாகத் தயாரிக்கப் பட்ட கண்ணாடியைப் போட்டுக் கொண்டு இருக்கிறார். கிளைமாக்ஸில் கொஹெய்ன் கடத்தும் பிரகாஷ்ராஜ், ஜோதிகாவைக் கடத்துகிறார். ஜோதிகாவை மீட்கப்போகும்போது சூர்யாவின் விஷேசமான கண்ணாடி உடைந்து போக, அவர் எப்படி மீட்கிறார் என்பது இன்னொரு கதை. தன்னைவிட வயது அதிகமான பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சிம்புக்கு ஒருகட்டத்தில்…”

“சரி, ஆதவன்… இப்போ என்ன விஷேசம்?”

(என்னிடம் கதை கேட்டுள்ள பத்திரிகை, 3½ பக்கங்களுக்குள் கதையை முடிக்கச் சொல்லியுள்ளதால் சு.சொல்லிவிடுகிறேன்.)

இப்படி ஒழுங்காய் கோலிவுட்டின் விதிகள் பிரகாரம் போய்க்கொண்டிருந்த ஆதவனின் வாழ்க்கையில் நுழைந்தார் நவீன தமிழ் இலக்கியவாதியான சேசோபா (சேரசோழபாண்டியன்). ஆதவனுக்கு உலக இலக்கியத்தைக் கரைத்துக் குடிக்க வைத்தார். இருவரும் சோறு தண்ணியில்லாமல் உலகசினிமாவிலிருந்து, பின்நவீனத்துவம் வரை பிரித்து மேய்ந்தார்கள். சேசோபா வின் தொடர்ந்த வாதப்பிரதிவாதங்களில் ஆதவன் மெல்ல மெல்ல ஒரு பின்நவீனத்துவப் பார்வை கொண்ட தமிழ்சினிமாக்காரராக மாற்றம் பெற்றார்.

(பின்நவீனத்துவ சிந்தனை என்பது புனிதங்களை உடைப்பது, வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வது, தொன்மங்களை உருவாக்குவது, எல்லாவற்றையும் புதிய கோணத்தில் பார்ப்பது… என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட ஆழமான பார்வையில் எதிர்கொள்ளவேண்டிய நவீனத்திற்கு அடுத்த படிநிலையான சிந்தனை. ஐநூத்திச் சொச்சம் பக்கங்களில் சொல்ல வேண்டியதை நாலரை வரிகளில் சொல்லச் சொல்கிறீர்களே… இது நியாயமா?)

தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமா எடுப்பதென்ற முடிவில் தயாரிப்பாளர் தேடஆரம்பித்தார் ஆதவன். ஆனால் தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை பின்நவீனத்துவ எழுத்தாளர் போர்ஹேஸின் லேபிரிந்த் என்னும் சிக்கல் மிகுந்த புதிர்த்தேடல்தான் அது.

தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமாக்காரராக தன்னை உருவகப்படுத்தினார் ஆதவன்.

“தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமாக்காரர் சாண்டோ எம்எம்ஏ சின்னப்பாதேவர்தான்” என்றேன். ஆதவன் வியப்புடன் என்னைப் பார்த்தார்.

அவரது முதல் படமான தாய்க்குப்பின் தாரத்திலிருந்து, புகழ்பெற்ற எம்ஜிஆர் போன்ற படிமங்களை உடைத்து மிகச்சாதாரணமான, ஆடுமாடுகளை புகழேணியில் ஏற்றும் படிமங்களாக மாற்றுவதில் கில்லாடி அவர் என்றேன். புகழின் உச்சியிலிருந்த எம்ஜியாரை வேட்டைக்காரன், நல்ல நேரம் போன்ற படங்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் துணைநடிகராக மாற்றியிருக்கும் தொழில்நுட்பத்தை விளக்கினேன். ‘ஆட்டுக்கார அலமேலு’வில் ஆட்டையும், வெள்ளிக்கிழமை விரத’த்தில் பாம்பையும் கதாநாயகர்களாக நடிக்க வைத்து அந்தத் தத்துவத்தை ஒரு வெற்றிச் சூத்திரமாக மாற்றியவர் தேவர் என்றும், படத்தில் நடித்த ஆட்டை திரையரங்குகளில் தோன்ற வைத்து சூப்பர்ஸ்டார்களின் புகழை வஞ்சப்புகழ்ச்சியாக (Irony) மாற்றியவர் என்றும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.

“அதுமட்டுமல்ல, நெம்பர்.2 ம் நீங்கள் ஆகமுடியாது. அவர் பேராசிரியர் அல்ல; இராமநாராயணன்.”

தேவரின் தத்துவ நீட்சியாக ஜனரஞ்சக சினிமா தளத்தில் இந்தப் புகழ்மிக்க நாயக பிம்பங்களை மிகப் பெரிய நையாண்டி செய்தவர். குரங்கு, பூனை, எலி என்று அங்கதத்தின் பன்முகத்தன்மைகொண்ட நோக்கில் சமூகத்தை எள்ளிநகையாடியவர். சமூகத்தில் கட்டமைத்திருக்கும் புகழைக் கேள்விக்குள்ளாக்கியவர் என்றேன்.

(சமூகம் கட்டமைத்திருக்கும் புகழ்பெற்ற முகபிம்பத்திற்குப் பின்னாலுள்ள நிஜமுகத்தின் விகாரரூபத்தைப் பதிவு செய்யும் நாசர் நடித்த ‘முகம்’ என்னும் குறும்படத்தையும் இந்த விவாதத்தில் நினைவு கூர்ந்தோம்.)

இவர்கள் எல்லோருமே ஒரு தீர்க்கமான தத்துவப் பின்புலத்திலிருந்து வந்தவர்கள் அல்லரென்றும், எம்ஜியார் கால்சீட் கொடுக்காமல் சொதப்பியதால்தான் தேவர் இந்த முடிவை எடுத்தாரென்றும், இதற்குப் பின்னணியில் இருப்பது வெறும் ஜனரஞ்சகச் சந்தைதானென்றும் விவாதித்தார் ஆதவன்.

நீங்கள் சொல்லும் இருவரும் இந்தப் படிமத்தை ஒருசிந்தனாபூர்வமாகவோ, தத்துவவழியிலோ உடைக்கவில்லையென்றும், தி.பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்திலிருந்து எம்ஜியார் வழியாக இன்றைய ரஜினிகாந்த் வரை கட்டமைக்கப்படும் நாயக பிம்பத்தை உடைத்தால்தான் தமிழ் சினிமா விமோசனம் பெறுமென்றும், அப்படி உடைத்திருந்தால் இன்றைக்கு அந்தப்படிமம் இப்படிப் பூதாகரமாக வளர்ந்திருக்காது என்றும் ஆவேசமாகப் பேசினார்.

“ரஜினிகாந்த் என்பது ஒரு சாகாவரம் பெற்ற படிமம்… இதைப்பற்றி உலக சினிமாவின் தலைசிறந்த கோட்பாட்டாளர் கில்லஸ் டெல்யூஸ் என்ன சொல்கிறாறென்றால்…”

“சரி, ஆதவன்… இப்போ என்ன விஷேசம்?”

(மறுபடியும் சு.) இந்தப் பின்நவீனத்துவ எழவெல்லாம் தெரியாத, சில கோடிகளைக் கொட்டிப் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபம் அள்ளித்தர வேண்டும். அதேசமயத்தில் தனது கொள்கைக்கேற்றபடியும் இருக்க வேண்டும். இந்த பாழாய்ப்போன பத்திரிகைகளும் பாராட்டித் தொலைக்கவேண்டும். உலகப்படரேஞ்சுக்கு எடுத்திருக்கான்யா என்று கோலிவுட் வாயைப்பிளக்க வேண்டும். கடவுளே! இப்படி எத்தனை ‘வேண்டும்கள்’… ஆனால் இத்தனை மாங்காய்களையும் ஒரேகல்லில் அடித்துவிடும் வாய்ப்பு நம் பழனிசுவாமிக்கு நேர்ந்ததுதான் பேரதிர்ஷ்டம்!

அவரது தயாரிப்பாளர் தேடும் யாத்திரை ஈரோட்டில் கொண்டுவந்து சேர்த்தது. வளமான ஈரோட்டு மண்ணும் மனிதர்களும் அவருக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். ஆனால், ஈரோட்டுக்காரர்கள் அரசியலில் முதலீடு செய்வதில்தான் ஆர்வம் காட்டினார்கள். அடுத்தபடியாக ஈமுகோழியில்.

ஒவ்வொருமுறையும் ஈரோட்டில் புதியபுதிய தொழில்கள் வடிவெடுக்கும். ஆண்மைவிருத்திக்குப் பயன்படுவதாகச் சொல்லப்படும் மண்ணுளிப்பாம்பு வியாபாரம், நாகரத்தினக்கல் வியாபாரம், விண்வெளி ஆராய்ச்சிக்குப் பயன்படுவதாகச் சொல்லப்படும் இரிடியம் வியாபாரம், சித்த,ஆயுர்வேத மருந்துகளுக்கான அரியவகையான அகர்மரம் வளர்ப்பது, டேடாஎன்ட்ரி… என்று யாராலும் கற்பனை செய்யமுடியாத கணிதசூத்திரத்தில் பலகோடிகள் புழங்கும் வியாபாரங்கள். டேடாஎன்ட்ரியை இப்படியெல்லாம் அபாரமான தொழில்துறையாக உருவாக்கலாம் என்ற சூத்திரத்தை ஒபாமாவிடம் சொல்லியிருந்தால் இந்தியர்களைக் கண்டு நடுங்கியிருப்பார்.

இந்தமுறை ஈரோட்டைப் பிடித்திருப்பது ஈமு.

ஈரோட்டின் ஈமுகோழித்தொழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்ததை நொடியில் புரிந்துகொண்டார் ஆதவன்.

இதன் தாய்மண்ணான ஆஸ்திரேலியாவில்கூட இத்தொழில் இவ்வளவு முதலீட்டுடன் நடக்காது. பலகோடிகளையெல்லாம் தாண்டிய மில்லியன் டிரில்லியன் பணம் இத்தொழிலில் புழங்குகிறது. ஒரு ஈமுக்குஞ்சின் விலை 10,000, அதை ஆறுமாதம் வளர்த்துக் கொடுத்தால் ஒருலட்சம். அதைப்பார்த்துக் கொள்வதற்கு மாதாமாதம் 10,000, பத்துக்குஞ்சுகளுக்கு மேல் வாங்கினால், ‘விலையில்லாப் பொருளாக’ இரண்டு பவுன் தங்கக்காசு… என்றெல்லாம் பலதிட்டங்கள் மூலம் பணத்தை அள்ளிக் கொண்டிருந்தார்கள் ஈமுஅதிபர்கள். நடிகை நமீதா, ஈமுவாடிக்கையாளர்களைப் பார்த்து ‘மச்சான்ஸ்’ என்று விளிப்பதும், பாக்யராஜ் தனது வெள்ளந்தியான பேச்சில் ஈமு புகழ் பாடுவதும்… இவ்வளவு முதலீட்டில் உற்பத்தி செய்யும் இக்கோழிகளை என்ன செய்கிறார்கள்? இதன் நிழலாக நடக்கும் சீட்டாட்டத்தின் சூத்திரம் என்ன என்பதெல்லாம் ஈமுஅதிபர்களுக்கும் பத்திரிகைகளுக்குமே வெளிச்சம். இன்றைய தேதியில் வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்துப் பத்திரிகைகளிலும் ஈமுவின் ஈஸ்ட்மேன்கலர் விளம்பரம்தான். ஈமுகோழி இல்லையென்றால் தமிழ்ப்பத்திரிகைகளின் எண்ணிக்கையே கணிசமாகக் குறைந்துவிடும் என்று டி.ஆர்.பி. கருத்துக்கணிப்பு சொல்கிறது.

இதைப்பற்றி விரிவாக ஒரு சர்வே எடுத்துப் பார்த்து, ஈமுமார்க்கெட்லேயே மிகமிகமிக… பெரிய தொழிலதிபராக, ஈமுமாஃபியாவாகத் திகழும் ஒருவரை மிகுந்த சிரமங்களுக்கிடையில் கண்டுபிடித்தார் ஆதவன். அதிபரின் உபயோகத்திற்கான கார்கள் மட்டும் 37 இருப்பதாகவும் அதில் பிஎம்டபிள்யூ 3 என்றும் தற்போது சத்தியமங்கலத்தில் ஒரு ஹெலிபேடு(வானூர்தித்தளம்?) கட்டியிருப்பதாகவும் கசிந்த செய்திகளின் பரவசத்துடன் அதிபரை அணுகினார். ஐந்து நிமிடம் ஒதுக்கிய ஈமுஅதிபர், ஆதவனைப் பிடித்துப் போகவே, மேலும் 25 நிமிடங்கள் ஒதுக்கி தயாரிப்பாளராக இருக்க சம்மதம் தெரிவித்தார்.

“படத்திற்குப் பட்ஜெட் எவ்வளவு?” என்றார் ஈமுஅதிபர்.

“2¾ கோடி…” என்றார் ஆதவன்.

“100 கோடி ரூபாயில் படம் எடுக்கலாம்; ஆனால், இரண்டு நிபந்தனைகள்” என்றார் ஈமு.

கண்ணா லட்டு தின்ன ஆசையா…

1. ஈமு கோழியைச் சுற்றித்தான் கதை இருக்கவேண்டும்.

2. ரஜினிகாந்த் நடிக்க வேண்டும்.

கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா…

மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடிப் போனார் ஆதவன்.

இந்த நிபந்தனைகள் கோடம்பாக்க சினிமாக்காரர்களுக்கு வேண்டுமானால் பெரும் சிக்கலாக இருக்கலாம். ஆனால், பின்நவீனத்துவச்சிந்தனை கொண்ட ஆதவன் பழனிசுவாமிக்கு லட்டு.

தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நான் ஈ’ என்னும் படம் அவரது மனக்கண்ணில் நிழலாடியது. ‘இந்தப்படத்திற்குள் பின்நவீனத்துவச் சிந்தனை கொண்ட ஒருபார்வை இருக்கிறதென்று’ சேசோபா அவரிடம் கதைத்த வார்த்தைகள் தலைக்குள் கிர்ரென்று ஏறின.

ரஜினிகாந்த் என்னும் சாகாவரம் பெற்ற படிமத்தைக் கொன்றே தீரவேண்டும்.

அடுத்த 55 ஆவது நிமிடத்தில் ‘சோமு என்னும் ஈமு’ கதையோடு அவரைப் பார்த்துக் கதைசொல்லி அட்வான்சும் வாங்கிவிட்டார்.

“ஸாரி… தப்பா எடுத்துக்காதீங்க, கதையை உங்க கிட்டே சொல்லமுடியாது. ரஜினிசார் கதை… லீக்காய்டும்…” என்றார் ஆதவன்.

“அதனாலென்ன… பரவால்லே…” என்று தப்பித்தேன்.

நான் உங்ககிட்டே வந்திருப்பதன் முக்கியக் காரணம்… நீங்க எனக்கொரு உதவி செய்யணும்…” என்றார்.

“சொல்லுங்க ஆதவன்…”என்றேன் கலவரத்துடன்.

(இறுதிச் சு.) ரஜினிகாந்த் எனக்குத் தெரிந்தவர் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். அவரிடம் ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தர வேண்டும் என்றார். எனக்கு ரஜினிகாந்தைத் தெரியும்; ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது என்ற ஜோக் ரொம்பப் பழசாகி விட்டதால், ‘இலக்கிய எழுத்தாளர் எஸ்ராவிற்கு ரஜினிசார் நன்கு தெரிந்தவர் அவரிடம் நீங்கள் முயற்சி செய்யுங்கள்’ என்று எஸ்ராவின் முகவரியைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

தமிழ் சினிமாவிற்கு விமோசனமே இல்லையா?

***

 

(2012 ஆகஸ்ட் குமுதம் இதழில் வெளிவந்த கதை)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page