• Thu. Nov 23rd, 2023

பலிபீடம்

ByGouthama Siddarthan

Aug 26, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

 

அந்தக் கல்லிருந்து அவள் எழுந்து வருவாள் என்று அவன் சற்றும் நினைத்தானில்லை. கல்துகள்கள் உதிர உதிர கறுத்த கல்லைப் பிளந்துகொண்டு வெளியே வந்தாள் ரேணுகாதேவி. பாறைத்தோலின் தடிப்புகளும் உடலமைப்பின் புடைப்புகளும் ஒன்றிணைந்திருந்த சிடுக்கலை வெகுநுட்பமாக இழைந்தெடுத்தது அவன் கை விசை. உளியின் மொழி வீச்சில் காலத்தின் சில்லுகள் தெறித்து விழுகின்றன. அவன் மண்டையெங்கும் வண்டுகளின் ரீங்காரத்தில், ஊழி பல தோய்ந்த புழுதி தேகமாத்யந்தமும் சுழட்டியடிக்க, உளியின் பிலத்துவாரம் பெரிதாகிக் கசியும் ஒளியில், காலடி எட்டிப் போடும் மிதப்புகளில், இருட்பந்தாய் அசையும் நிழல்வெளி நீட்ட நீட்ட நெளிநெளியாய்ச் சுருண்டு குடைந்து நீளும் கற்பாதையின் சுழற்சி, தலையைக் கால்களாகவும் கால்களைத் தலைகளாகவும் மாற்றிப்போடும் பாசம் படிந்த தொல்சுவர் விரிப்பில் மோதிச் சிதைந்து பூஞ்சனம் பூத்த அவன் கால்களில் நுரை சுழித்தோடும் நதிக்கரையின் நாணற்புதர்களில் மண்டியிருந்த இருள் மெல்ல விலகிக் கொண்டிருக்கிறது. அதிகாலைக் குளிரின் முயங்கலுடன் ஈர மணலில் கால்களை எத்தி நடக்கிறாள் ரேணுகா. முடிந்திருந்த கூந்தல் கற்றைகளை அவிழ்த்து வீசி நடக்கிற காற்று. முகத்தில் ஒருக்களித்து விழுந்த அவைகூட மேலும் அழகுதான். மஞ்சில் விறைத்துக் கிடந்த நதியின் இளம்பல் உளியின் செதுக்கலில் பட்டு நீர் வளையங்கள் சுழல்கின்றன.

சூரிய வளையங்களின் கடைசலில் சிக்கிக்கொண்டவனாய் கற்பாறையினடியில் கிடந்தான் அவன். காலங்களற்று செதுக்கும் கணந்தோறும் உளியின் மொழியமைப்பையும் மீறி நெகிழும் பெண்மையின் பொலிவில், சுடர் விட்டெழும் அற்புதம். நதியின் அலைமேடுகளில் தலைசீவிச் சரிகிற அவளது எழில்ரூபத்தில், ஒரு அகண்டவெளி மற்றும் ஒரு புதிர். யாகசாலைக்கு ஜலம் கொண்டு போக வரும் கற்புக்கரங்களில் பானையாய்த் திரளக் காத்திருக்கும் ஆற்றங்கரை மண்ணின் பிசுக்குகளில், தானே ஆஹுதியாய் உருகும் திணையை, துளைபடாத நாணல்கள் ஆனந்தப்பையுளாடுகின்றன. ஓங்கிய உளியின் கூச்சம் அவனது இருதயத்தைக் களிமண்ணாய்ப் பிசைந்து, உடலைத் திணித்துச் சுருட்டி, உருண்டையாய்த் திருகி இரண்டு கைகளிலும் கோளமாய் உருட்டிக் கொண்டிருந்தாள். உளியோசையின் எல்லையற்ற வெளியில் சிருஷ்டியின் தரிசனம் விரிகிறது.

நதியின் சில்லிப்பில் ஈரம் பரவி உளியின் நெகிழ்ச்சியில் பாறை இறுகுகிறது. உளியின் கூர்மைக்கும் கற்பாறைக்கும் இடையில் சமையும் கணங்களில் சம்பவிக்கும் புன்னகை மண்டும் வேதனை இரும்பூதெய்தும். புஞ்சையோடியிருந்த அவனது முகவாய்க் கற்றைகளைக் கோதுகிற காற்று. வெளியினில் நதியின் நீரோட்டம் கண்களில் நிறையும் நடுக்கமும், அலையடித்து வரும் பிரவாகத்தைக் கலைத்து தண்ணீர் அள்ளும் அவளின் கண்காணாத சுழற்சியும். பசும்பானையின் தெளிந்த படிகத்தில் தனது கேசம் கலைந்து கிடக்கிறது. உளியின் முனை அவளது நடுவகிடைச் சீவி எடுக்க, குழலின் சுழற்சி சுழன்று சரிந்தபோது குடத்தின் ஜலக்கண்ணாடியில் பிம்பம் சட்டெனக் கலைய, ஆண்மையின் மிடுக்கு, அதிரூபலாவண்யம், கார்த்த வீரியார்ச்சுனன், கற்பரப்பு முழுமைக்கும் உஷ்ணத்தின் வலைப்புயல். உளி பாய்ந்து பாய்ந்து முகமெங்கும் அளைந்ததில் தீப்பொறி உராய்ந்து காற்று. மண்குடம் கரைந்து ஓடும் நதியில் நழுவுகிறது.

உளியின் பிரக்ஞை தவறியது. புழுதிச் சுழலில் சிக்கிய அவன் தாடி நீண்டு நீண்டு சிலையைச் சுற்றிய இறுக்கத்தில் நெரிந்து காட்டுகிறது காற்றின் தொடர்ச்சி. அவள் உளியின் மீது உராய்ந்து கொள்வதும், நதியின் அலைக்கரம் காலடி மண்ணைக் கவ்வி இழுக்க கீழே விழுந்து கொண்டேயிருப்பதுமாய், உளியின் வடிவம் வெயில் பட்டு உருகியோடி ஒழுகுகையில் பாறையின் நெகிழ்வு உள்முகம் நோக்கி, மேலும் கீழுமாய் நடக்கிறார் ஜமதக்னி முனிவர். “உங்களில் யார் அவளைக் கொல்லப் போகிறீர்கள்?” முனிவரின் துருவேறிய கண்களில் நிறங்கள் மாறிமாறிப் பிரிகின்றன. மைந்தர்கள் செய்வதறியாது தலை கவிழ, பரசுராமனின் மழு உயருகிறது. “தந்தையே, நான் அன்னையை வெட்டி வருகிறேன்” சடக்கென நடையை நிறுத்தி ஏறிட்டுத் தனயனைப் பார்க்கிறார் ரிஷி. அவரது எரியோம்பிய கரம்பட்டு சாம்பற் பூத்த குண்டத்தில் சூன்யம் அசைகிறது.

கல் திடுமென கெட்டி தட்டிக்கெண்டு வருவதை உணர்ந்தது உளியோசை. திரடு கட்டிய இறுக்கம் க்ரீச்சிட்டு உள்ளங்கையின் அழுந்தலில் புடைத்தெழுகையில், லாவகமான இயங்கு விசை மாறி ஊர்த்துவ தாண்டவமாய் கைப்பிடியில் அவிழும் முத்திரை. கோடரி ரேணுகாதேவியின் தலைக்கு மேலாக அசைகிறது. குருதித் துளிகள் தெறித்த நீர்ப்பரப்பு திகைத்து சுளித்து மங்கியது நிறமிழந்து.

உரிக்கப்பட்ட பாறையின் முன்னால் உழன்று கிடந்த அவன் உடம்பெங்கும் அதீத கணங்கள் சூழ்ந்து உளிக்கீற்றில் வெயில் பொசுங்கியது. கல்லின் வாசனை மங்கி கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்து உளியின் தனிமையில் கரைந்து சூரியன் பட்டுத் தெறிக்கும் அதன் நடுக்கத்தில் தானும் ஒரு அதிர்வுக் கணமாக உதிர்ந்ததைக் கண்டான். கல்லுக்கப்பால் உயரும் கூந்தல் கற்றைகள் தன் சுழற்சியால் மலர் மொக்கென விரிய, உளியின் இரும்பு இயக்கம் கால்களில் பட்டோடியது. பரசுராமனின் குருதி தோய்ந்த மழுவும், அளகபாரம் கலைந்த ரத்தமும் சதையுமான தலையும்; முனிபுங்கவர் திகைக்கிறார். “கேள் மகனே, உனக்கு என்ன வேண்டும்?” தழுதழுக்கின்றது தந்தையின் குரல். தனயனின் தீர்க்கமாக நாசி உயருகிறது. “அம்மா” ஒரு கணம் விக்கித்த தபஸ்வி கமண்டலத்தை எடுக்கிறார்.

கல்லின் நுட்பங்கள் அறிந்த உளியோட்டம் திகைக்க, கல்லின் போக்கு கைக்குள் அடங்க மறுக்கின்ற விபரீதம் தொடர்ந்தது. அதன் தன்மை நொடிக்கு நொடி மாறி நிற்கும் அமானுஷ்ய கணங்களில் அவனது உள்ளங்கையில் ஊடுருவியிருந்த சிற்பசாஸ்திரம் திகைத்தது. அவன் சிரசுக்குப் பின்னால் சுழன்ற கற்கிடங்கு திகைத்தது. படைப்பின் கலை வன்மை நெக்கிடுகின்ற கற்பிரிகைகள் அவனைச் சுற்றிலும் அசைகின்றன. பாறைத்தோலின் முதல் கீறலில் துடிக்கும் உயிர்த்தாரை, பொங்கிப் பிரவகித்தோடி மெல்ல மெல்ல தனது நுட்பங்களையெல்லாம் திறந்து காட்டி முழு ஜீவனும் அவனது உழுபடையில் தொங்கிக் கொண்டிருக்குமே… பூரண விளைச்சலில் புடம் போட்ட கல்லின் பக்கங்கள் தோறும் காத்துக் கிடக்குமே, வெளிப்படுத்தவல்ல ஒரு சிறு இசைவு…

நட்சத்திரங்களற்ற இருள் மெதுவாகப் புரண்டு கொடுக்க, ஒளி பாய்ந்திருந்த நதிதீரம். ரேணுகாதேவியின் செவ்வரி உறைந்த சிரத்தோடும், நீர் சுமந்த கமண்டலத்தோடும் ஓடிவந்த பரசுராமன் கண்களில் உளியின் திகைப்பு. அதிர்ச்சியின் செங்குத்துப் பாய்ச்சலில் எழுந்து வந்த ஒரு பிரம்மாண்டம் வாழ்வையும் மரணத்தையும் ஒரே பாய்ச்சலாகத் தாண்டுகிறது. மணற்பரப்பின் நீண்ட படுகை, நாணற்புதர்களின் அடர்த்தி, உயரும் சரிவுகள் கண்முன்னால் விரியும் திசைகளெங்கும் அலைந்தோடிய கால்களில் அம்மாவின் உடல் தட்டுப்படவில்லை. காதுகளில் சீறுகிறது விலங்கின் காலடி வாசனை. கபாலமெங்கும் சூலநாவுகளின் தீண்டலின் கால்களில் பின்னிய நெளிவுச் சுழல் சுழட்டி வீச கண்கள் செருகி சரிந்தபோது, தன்னைத் தானே விழுங்கும் காலசர்ப்பத்தின் வளையம் ஒரு அற்புதமெனக் கவிகிறது. எதிரே தோன்றுகிறாள் வண்ணாத்திப் பெண். பெண்மையின் பூரணத்துவம் கொண்ட உடல். முதுகில் தீட்டாடைகளுடன் ஆற்றை நோக்கி நடக்கிறாள். சூரியனின் பொன்ரச்மிகள் மின்னும் ஆற்றுப் பரப்பு கண் சிமிட்டுகிறது. பரசுராமனின் கோடரி உயருகிறது. வண்ணாத்தியின் தலை துண்டாகி வீழ, அழுக்குக் கமழ்ந்த உடம்பில் அன்னையின் சிரத்தைப் பொருத்துகிறான்.

பின்பு அவள் அற்புதமாக எழுந்தாள். தசைக்கோளம் பரவிய பாறையின் நெகிழ்ச்சியில் பச்சையோடிய நரம்புக் கொடிகளின் ஜீவ ஓட்டம் உள்ளோடிக்களிக்க, உடலைத் தழுவித் தனக்குள் சுருட்டிக் கொண்டு நித்யத்துவம் தந்தது சிலை.

க்ளுக் கென்று சிரிக்கிறது நதி.

மெல்ல மெல்ல சிருஷ்டியின் தோற்றம் பூரணத்துவமெய்ய பிறிடும் கலாபோதத்தில் சொருகிக் கிடந்தான் அவன். கலையின் சுவாசத்தில் சுழலும் பரிமாணங்களினூடே அலைவுறும் தன்மையின் ரெக்கைகளில் உள்முகமாய் அசைகிறது பிரபஞ்சம். கையெழுத்திடும் இறுதிக் கீறலாய் கண்களைத் திறந்து கொண்டிருந்தது உளியின் விகாசம். வாழ்வுக்கும் இறப்புக்குமான பேரர்த்தத்தை அவிழ்க்கும் குறியீடாக நின்றிருக்கும் அவள். இறப்பிலிருந்து வாழ்வை மீட்டெடுக்கும் குறியீடாக நின்றிருக்கும் அவன். உளியின் கைப்பிடி நழுவ கல்விழிகளின் நிலை குத்தல்களில் நின்றெரிகிறது ஓயாத காலாக்னி. அவனுடைய கண்களும் அவளுடைய கண்களும் சந்திக்கும் நேர்கோட்டில் திறந்துகொண்ட புதிர்வழியின் குகையிருளில் தன்னகத்தே இழுத்துக் கொள்ளும் சுருள்வாளின் பசிய இதழ்களோடு சிலைக்குள்ளிலிருந்து ஒரு கை நீண்டு அவனைச் செதுக்கி எடுக்கிறது.

வியர்த்தம் வியர்த்தமென்று உதிரும் கற்பாறைகளின் சில்லுகள். சநாதன வீச்சத்தின் வெறிச்சிரிப்பு. மணியின் வெண்கல உறுமல் எதிர்ப்படும் கோபுரங்களின் வான் தொடுகை. வெண்புறாக்களின் பதற்றமுறும் ரெக்கையடிப்பு.

“எனக்கு உடல் எங்கேடா?”

மூவிழைக் காலத்தில் அவன் சுழன்றேக, ஆலயத்துக்குள் ரேணுகாதேவியின் சிலையைத் தேடி அலைந்தான். வர்ண தர்மங்களின் வெறி ஊளைகள் கோயில் பிரகாரங்களில் பட்டுத் தெறித்து, காலக்கிடங்கின் சாம்பல் வர்ணத்தில் மனுவின் நகைப்பு முதுகில் வெடித்து துருவேறிய சூரியனைக் கவ்வித் தின்கிறதே. வண்ணாத்திப் பெண்ணின் அலறல் தேய்ந்து கடவுளர்களின் தரிசனத்தில் பிரமிக்கும் விதானங்களைப் பார், மந்திரங்களின் தொணதொணப்பில் முக்குளிப்பதை. கேள்: ஆடைகளின் துவையோசை தாழ்வதையும், ஆச்சார அனுஷ்டானிகளின் சங்கொலி உயர்வதையும், நதிதீரம் மறைந்தது. ஊறுபட்ட கற்கள் மறைந்தன. கோடரியின் கூர்மை மறைந்தது. எல்லாமே மறைகின்றன. சிரிக்கின்றன வானுயரும் தம்பங்களின் கற்சாயைகள். ஆலயவெளிகளில் ரத்தத் தீட்டுகள் பட்ட உடற்பகுதி எல்லையற்ற சில்லுகளாக உடைந்திருக்க, வெறும் தலை மட்டுமாகத் தொங்கிக் கொண்டிருந்தாள் ரேணுகாதேவி. குருதி அபேதத்தில் ஒழுகும் மனித வாழ்மை அர்த்தமற்றொழிகிறது. ஜீவனற்று ஆலயத்தில் வீற்றிருக்கும் தலை.

 

*******

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page