- கௌதம சித்தார்த்தன்
(ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)
எனக்கு சின்ன வயதிலிருந்தே புல்லாங்குழல் மிகவும் பிடிக்கும். எனது மாமனும் பால்யபருவத்து தோழனுமான முத்தண்ணன்தான் புல்லாங்குழல் வாசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்த குரு. மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் பக்கத்திலிருக்கும் வெள்ளாமை நிலத்தை நோக்கி நகரும்பொழுது, குழல் வாசித்தே அவைகளை மேய்ச்சல் நிலத்தை நோக்கி திசைதிருப்பி விடும் மகத்தான இசைஞன்! இந்த அற்புதத்தில் லயித்துப் போய் புல்லாங்குழல் மீதான பிரியம் என் பிஞ்சுப்பிரபஞ்சம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது. அவனோடு சேர்ந்து மேய்ச்சல் நிலங்களில் காடுகரைகளில் குழலோடு அலைந்திருக்கிறேன். ஆனால் இசை பற்றி எதுவும் தெரியாது. குழலின் துளைகளின் வழி பரவும் காற்று, என் உடலைத் துளைக்கும் ஆனந்த நிலையே என் இசைரசனை.
நானும், என் புல்லாங்குழலும், மேய்ச்சல் நிலங்களுமாக இருந்த என்னை, புல்லாங்குழல் இசையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியவர் இலக்கிய ஆர்வலரான கோபிசெட்டிபாளையம் ஸ்ரீராம். எனக்குள் பற்றியெரிந்து கொண்டிருந்த புல்லாங்குழல் இசைத் தீயை உணர்ந்து, எனக்கு ‘ஹரிபிரசாத் சௌராஸ்யாவின் புல்லாங்குழல்’ இசை கேசட் ஐ தந்தார். கேசட்கள் புழக்கத்தில் இருந்த காலம் அது. மேலும், இணையம் பெருமளவில் வளர்ச்சியடையாத காலகட்டமும்தான்.
அது எனக்கு வேறு விதமான இசை அனுபவத்தை வழங்கியது. ஒரு குழலிசை இப்படியெல்லாமா நம் உயிரை வருடிவிடும்.. பித்துப் பிடித்தவன் போல தீவிரமான தேடலில் இறங்கினேன். இந்திய கர்னாடக சங்கீத சாஸ்திரிய மரபின் புல்லாங்குழல் இசைஞர்களான வே.மாலி, ரமணி, பன்னாலால் கோஷ்.. என்று தேடித் தேடி ஓடினேன். ஆனால், அந்த இசை ராகங்களில் ஏதோ ஒரு புலனாகாத தன்மை miss ஆகிக்கொண்டேயிருந்தது என்பதை உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.
இவைகளிலிருந்து விலகி, பிரபஞ்சம் முழுக்க அலைந்தேன். ஆம், இந்த இடைவெளியில் இணையம் பெருமளவில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்ப்பட்டதுதான் ஜப்பானியப் பெருமரபின் Shakuhachi!
ஏழாம் நூற்றாண்டில் ஜப்பானில் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசை மரபான ஸகுஹாச்சி (Shakuhachi) என்னும் இசைமுறை மிகவும் வித்தியாசமானது.
இவர்களின் இசைபாணி குழலிசையின் நீள அகலத்தை உள்ளும் புறமுமாக அளக்கும் அலகுகளைக் குறிக்கும் சொல் என்று சொல்வார்கள். நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசிக்கலாம். மட்செவிக்குப் புலனாகும் குழலிசையின் மாத்திரையும், கட்செவிக்குப் புலனாகா இசைவெளியின் யாத்திரையும் ஒன்றிணையும் புள்ளி என்று கவித்துவமாக விவரிக்கலாம்.
இந்த இசைமரபு, பெரிதும் ஜென் மரபின் ஈடுபாட்டோடு இணைந்து வருவதால், ஆழ்ந்த தியானத்தை மனமெங்கும் கசியவிடுகிறது. A perfect shakuhachi music note, இந்த உலகத்திற்கே, அமைதியைக் கொடுக்கும் என்பது இந்த இசைவகை பற்றிய புகழ்பெற்ற சொல்லணி! .
இதன் இசைப்பாரம்பரியத்தில் புகழ்பெற்ற, ‘Fuke Zen (ஃபுகேஜென்’) என்றழைக்கப்படும் ஜப்பானிய ஜென் புத்திஸமரபில் வரும், Komuso (கொமுசோ) துறவிகளால் இசைக்கப்படும் குழலிசை அற்புதம்!. தங்களின் அடையாளத்தை விரும்பாத தன்மையுடன், ஒரு பிரம்புக்கூடையை முகம் முழுவதும் மூடி கவிழ்த்துக் கொண்டு, மூங்கில்குழல் வாசித்தபடி வீதிகளில் வலம் வரும் குழலிசைஞர்கள்.
ஒரே ரிதமாக ஒலிக்கும் குழல், எவ்வித சலனமுமற்று ஒரே பிரவாகமாய் ஓடிக் கொண்டிருக்கும் நதியின் நீரோட்டத்தைப் போன்றது. அந்த நீரோட்டத்தில் அவ்வப்பொழுது எழும் நீரின் அலையடிப்புகள் நீரோட்டத்தை பெரும் பிரளயமாக மாற்றும்.
ஜலம் உடம்பெங்கும் புகுந்து உடலில் கலக்கிறது. காற்றின் தலை சீவலில் நதியின் அலைமேடுகள் இசைத்துணுக்காக மாறும். நதியில் மிதந்து வரும் இலைகளின் ஸ்படிகத் துளிகளில் லௌகிக இழைகள். நதியின் நீரோட்டம் இசையில் நிறைகிறது. நீர் நிறைந்தபோது இசை மங்குகிறது. நதியின் கொப்புளிக்கும் நுரை மங்குகிறது. மங்கி மங்கி சர்வமும் சூன்யமாகிறது. அந்தச் சூன்யக்குமிழியின் உடையாத கண்ணாடியில் ஒளிர்கிறது ஜென். நதி சிரிக்கிறது.
(இந்த ஒரே சீரான ஜென் நீரோட்டத்தை ‘பிரேவ் ஹார்ட்’ படத்தில் நுரைகக்கிப் பொங்கிப் பிரவாஹமெடுக்கும் Revenge ஆக எதிர்மறையாக மாற்றியிருப்பார் ஜேம்ஸ்கானர். ‘லாஸ்ட் சாமுராய்’ படத்தில் வரும் Intro காட்சியில் ஒரு சில நொடிகளே வரும் இந்த இசைத்துணுக்கில் சாமுராய்களின் யுத்த வரலாறு ஒலித்தெழும்புவதை கம்போஸ் செய்திருப்பார் ஹான்ஸ்ஷிம்மர்.)
இந்த வகை ‘ ஸகுஹாச்சி பிளேயர்ஸ்’ குழுவினரில் மிகவும் புகழ் பெற்றவர், கோரோ யமகுச்சி. இவரது “A Bell Ringing In The Empty Sky” என்னும் ஆல்பம் மிகவும் புகழ்பெற்றது.
இப்பொழுது, ஸகுஹாச்சி இசைஞர் கோய்ச்சி யோஷிடா மற்றும் ஜமில்லா இருவரும் இணைந்து நிகழ்த்தும் “The Empty Sky” என்னும் ஒரு ஜென் கவிதையை இந்த இணைப்பில் பார்த்து ரசியுங்கள்: https://www.youtube.com/watch?v=eggbMZ2BhZw
நல்லது. எங்கள் தமிழ் மரபுக்குத் திரும்புவோம்:
நான் மேய்ச்சல் நிலங்களில் அனுபவித்த புல்லாங்குழல் இசை இன்பத்தை, இவை எதுவும் தரவில்லை என்பதை உணர்ந்தேன். அதன்பிறகு, கர்னாடிக் சாஸ்திரிய மரபிலிருந்து விலகி, நாட்டுப்புற மரபிற்கு பயணமானேன்.
ஆங்கிலத்தில் Flute என்று சொல்லும் இந்த இசைக்கருவியின் origin என்பது முழுக்க முழுக்க எங்கள் இந்தியநாடுதான். அதிலும் இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், எங்கள் தமிழ் நிலம்தான். எங்கள் தமிழின் செவ்விலக்கியமான 2000 ஆண்டு தொன்மையான சங்க இலக்கியங்களில் இதற்கான கூறுகள் காணக் கிடக்கின்றன.
(“மேய்ச்சல் நிலங்களிலிருந்து பசுக்களை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் ஆயர்கள் இசைக்கும் குழலிசை செவியில் நிறைகிறது.” – அகம் – 214)
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐம்பெரும் நிலங்களாக அடையாளப்படும் பண்டைய வாழ்வியலில், முல்லை நிலத்தின் வாழ்வியல், மாடுகளை முன்வைத்தே மக்களின் ஜீவாதாரம் நடந்திருக்கிறது. ஆயர்கள் எனப்படும் இந்தவகை மக்கள், மாடுகளை பேணி வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவர்கள், மாடுகளை மேய்க்கும்போது, புல்லாங்குழல் இசைப்பதை ஒரு வழிபாடாக செய்து வந்திருக்கின்றனர். இந்த மக்களின் நாட்டுப்புற தெய்வமாக புல்லாங்குழலை வாசிக்கும் கிருஷ்ணன் விளங்கியுள்ளார்.
இந்த ஆயர்கள் தங்களுக்கு ஏதும் பிரச்னை வந்துவிட்டால், புல்லாங்குழல் இசைப்பார்கள். அப்பொழுது வானத்தில் பெருமாள் கழுகு எனப்படும் ஒருவகை கழுகு வந்து காட்சி தரும். இந்த பெருமாள் கழுகு என்பதை கிருஷ்ணனின் அவதாரமாக அந்த மக்கள் நம்பினார்கள். அதை தரிசித்ததும், இந்த மக்களுக்கு தங்கள் பிரச்னை இனி தீர்ந்துவிடும் என்று உளப்பூர்வமாக நம்பினார்கள் என்று சொல்கிறது ஒரு நாட்டுப்புறக்கதை.
நாட்டுப்புற மக்களின் நாட்டார் மரபுப் புராணிகமாக இருந்த இந்தக் கருத்துரு, இந்து மதவாதிகளால், மதம்சார்ந்த உயர்நிலையாக்கமாகத் திரிக்கப்பட்டது தனிக்கதை. தொல்குடி மக்களின் கடவுளாக இருந்த கிருஷ்ணன், நிறுவனமயமான விஷ்ணு என்னும் பெருந்தெய்வமாக இந்து சமயத்தின் முதன்மைக் கடவுளாகக் கட்டமைக்கப்பட்ட மதம் சார்ந்த அரசியல், 2000 ஆண்டு கால இனக்குழுவின் ஆதித் தொன்மத்தை தங்களது மேலாதிக்க மதக் கட்டுமானத்திற்குள் கபளீகரம் செய்தது. இயற்கை மற்றும் விலங்கினங்களையும் பறவையினங்களையும் உருவவழிபாடாகக் கொண்டு வெகுஜனமக்களின் ஆழ்மன உளவியலில் பதிந்துள்ள நாட்டுப்புற தெய்வங்களை,
பல்வேறுவிதமான புனைவுகளால் கட்டமைத்து மத அதிகாரம் கொண்ட பெரும் தெய்வங்களின் வாகனங்களாக மாற்றியது.
இந்த காலநிகழ்வுகளின் மாற்றத்தில் காணாமல் போனதுதான் தமிழின் பாரம்பரியம் கொண்ட புல்லாங்குழல் மரபு. நாட்டுப்புற மக்களின் தெய்வமான கிருஷ்ணன் வாசிக்கும் புல்லாங்குழல் நேர்முகமாக ஊதுவது. குறுக்கு வாட்டில் வாசிப்பது அல்ல. தமிழில் “புல்” என்று அழைக்கப்படும் மூங்கிலிலிருந்து செய்யப்படும் இந்தக்கருவி தமிழில் “pullankuzhal” என்று அழைக்கப்படுகிறது. இந்த “புல்” என்னும் மூங்கிலை சமஸ்கிருதப் பெயரில் “Venu ” என்றாக்கி கிருஷ்ணனுக்கு வேணு கோபாலன் என்று பெயரை மாற்றி, குறுக்கு வாட்டில் வாசிக்க வைத்து… இப்படி பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியது இந்திய மதம் சார்ந்த பெரு மரபு. எங்கள் நாட்டுப்புற தமிழ் மரபு வழி “pullankuzhal” என்பது, இந்திய பெரு மரபு சார்ந்த “Venu ” அல்ல.
இந்த மனநிலையில் இருக்கும் இந்தத் தருணத்தில்தான், உலகப் புகழ்பெற்ற இசைஞனான லியோ ரோஜாஸின், பெருநாட்டு இசைக் காவியமான “El Cóndor Pasa” இசை ஆல்பத்தை கேட்டேன். அந்த அனுபவத்தை எந்த மொழிச் சொற்களாலும் விவரிக்க முடியாது. பான் புல்லாங்குழல் என்னும் ஏழுவிதமான மூங்கில் குழல்களை இறங்குவரிசையில் இணைத்து இசைக்கும் பான்குழலில் இருந்து எழும்பும் அக் குழலிசை, உயிரை வருடும் உன்னதம். நேர்முகமாக வாசிக்கும் தமிழின் புல்லாங்குழல் மரபின் காற்று, அந்தப் பான்குழலில் துளைந்து பெருவின் நாட்டுப்புற மரபின் வழிவரும் மாந்திரீக யதார்த்தமாக இசைந்தது.
கடந்தகாலங்கள் முழுக்க என் தேடலில் அளைந்த குழலிசையில், miss ஆகிக்கொண்டேயிருந்த ஏதோ ஒரு தன்மை அக்கணம், சட்டென முழுமை பெறலாயிற்று. உடலெங்கும் இசைவு படும் புல்லாங்குழலின் மெலோடி, மெல்ல, மெல்ல பாம்பின் சீற்றம் கொள்ளலாயிற்று. மேய்ச்சல் நிலங்களின் சோளக்கருதுகள் தலை துளும்பியாடுகின்றன. புள்ளில் துளைவு படும் கருவண்டின் ரீங்காரம் காது ஜவ்வுகளைத் துளைக்கிறது. நதியில் நழுவும் கூழாங்கற்களின் நளிர்ப்பும், மஞ்சள்வெயிலில் கரைந்துள்ள துடிப்பும், சூரியனிலிருந்து பிறைச் சந்திரனுக்கு நடனமாடும் சொற்களாக உருமாறுகின்றன. மீனின் துள்ளலில் தண்ணீர்ப் பரப்பின் சுழல்மம் கொளுவி இழுக்கிறது. எங்கள் பெருக்காத்திப் பாட்டியின் கைகளில் குத்தியிருந்த பச்சைக் கொம்புகள் இசைக்குறிப்புகளாய் மாறுகின்றன. உடலெங்கும் பச்சை திரவத்துடன் ஓயாமல் எழுதிச் செல்லும் ஒற்றை இறகை, தலையில் அணிந்து கொண்டு மாடுகள் மேய்த்தபடி ஆதி கிருஷ்ணன் குழலிசைக்கிறான். அவன் கண்களில் மின்னிய பச்சையம் ஒளிர்ந்து ஒளிர்ந்து கழுகுப்பறவையின் கண்களாய் அசைவுபட, என் கழுத்தைத் துளைத்த கழு முனையில் சூரியக் கொழுந்து. அதன் நிழலில் பழுப்பு நிற ரெக்கைகள் பிரம்மாணடமாக அசைகின்றன.
ரோஜாஸ் வாசிக்க வாசிக்க, ஆகாயத்தில் சிறகடித்து எழும்புகிறது cóndor! பிரம்மாண்டமான அதன் சிறகசைப்பில் பிரபஞ்சம் சுருங்குகிறது. ரோஜாஸின் கையில் வைத்திருக்கும் உருண்டு திரண்ட கம்பு எங்கள் நாட்டுப்புறக் கடவுளான முனியப்பனின் காவல்தடியில் கிலுங்கும் பல்வேறு விதமான குறியீடுகளாக நிரம்பி ஜொலிக்கிறது. ஆகாயத்திலிருந்து சரேலித்து இறங்கும் அதன் றெக்கையடிப்பில் நிழற்றுகிறது எங்கள் முல்லை நிலம்.
மிக உயரத்தில் ரெக்கைகளை விரிக்கும் cóndor பறவையை தெய்வ கடாட்சமாக நம்புகின்றனர் பெரு மக்கள். cóndor -ஐ ஒருமுறை தரிசித்துவிட்டால் தங்கள் வாழ்வில் நல்லது நடக்கும் என்ற பெருவிய நம்பிக்கை இசையாய் வழிபடுகிறது. If I could, I’d rather feel the earth beneath my feet என்று கீச்சிடுகிறது cóndor.
அந்த குழலிசை உடலெங்கும் உள்ளோடி வியாபிக்க, அந்த அதிசயம் நிகழ்ந்தது! ரோஜாஸின் முகம் மறைந்து சட்டென அர்ஜுனனின் முகம் தோன்றியது.
இன்றளவிலும் எங்கள் தமிழ் நாட்டுப்புறங்களில் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வு, ‘தவசிப்பண்டிகை’ ! தங்களது வாழ்நிலை சீரும் சிறப்புமாக இருக்க வேண்டி பயிர் அறுவடைக் காலங்களில் ‘தவசிப்பண்டிகை’ கொண்டாடுவார்கள் உழவர் மக்கள். இதில் முக்கியத்துவம் பெறுவது பதின்மூன்று நாட்கள் நடக்கும் தவசிக் கூத்து.
புகழ்பெற்ற இந்திய புராணிகமான மகாபாரதக் கதையில் வரும் ஒரு கிளைக்கதையான “அர்ஜுனன் தபஸ்” என்னும் “அர்ஜுனன் தவம் செய்து அருள் பெறும் நிகழ்வு” கிராமத்து மக்களிடையே வெகு பிரபலமானது. பாண்டவர்களான தங்களை வஞ்சித்து, தங்களது நாடு நகரங்களை அபகரித்து, தங்களை நாட்டை விட்டே நாடுகடத்திய எதிரிகளான கௌரவர்களோடு போர் செய்து அவர்களை தோற்கடிக்க வேண்டும், மீண்டும் தங்களது நாடுநகரங்களை கைப்பற்றி அரசாளவேண்டும் என்றும், அதற்கு எல்லாம் வல்ல மாபெரும் கடவுளான சிவபெருமாள் ஆசீர்வதித்து அருள் புரியவேண்டும் என்று பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் தவம் செய்யும் நிகழ்வே இந்தக் கூத்து. அர்ஜுனன் தவம் செய்வது மிகக்கடுமையான நிகழ்வு.
இந்தக் கூத்து நிகழ்ச்சி பதின் மூன்று நாட்கள் நடக்கும். ஒவ்வொரு நாள் இரவுப் பொழுதிலும் நடைபெறும் இக்கூத்தாட்டத்தில், அர்ஜுனன் வேசங்கட்டும் நடிகன் பத்துநாட்கள் கூத்து நடக்கும் மைதானமான பூமியில் கூத்தாடுவான். பதினோறாவது நாள் இரவு, கூத்து நடக்கும் மைதானத்தில் நடப்பட்டிருக்கும் ஒரு பெரிய பனைமரத்தின் மீதேறி அதன் உச்சியில் நின்று கொண்டு ஆடுவான். மர உச்சியில் பிடிமானம் ஏதுமில்லாமல் இருப்பதால், ஆடுவதற்கு வாகாக உருண்டு திரண்ட கம்பு ஒன்றை கையில் பிடித்தபடி, மரஉச்சியில் ஊன்றிக் கொண்டு ஆடுவான். அந்தக்கணத்தில், தனது இடுப்பில் சொருகியிருந்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பான்.
“ஓ பெருமாளே,
உன் பார்வை பட்டால் இந்த பூமி சுபிட்சமடையும்.
உன் அலகின் கூர்மையில் வஞ்சமும், துன்மார்க்கமும், துயரமும் கிழியும்..
எங்கள் நிலத்தின் மீது உன் பரந்த ரெக்கை நிழல் பட்டால், தானியக் கதிர்கள் தழைத்து வளரும்
உன் விழிகளின் ஒளிர்ச்சியில் என் ராஜ்ஜியம் ஒளிரும் … “
அந்த இசைக் கூவல், கழுகின் கிரீச்சொலியாக, ஆகாயத்தை வளைக்கும். தன் கையில் ஊன்றியிருக்கும் கம்பை வானை நோக்கி உயர்த்தி ஆலாபனை செய்து, புல்லாங்குழலில், சுருதி கூட்டும்போது அந்தப் பிராந்தியமே இசையில் முயங்கி நிற்கும்.
இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் மரத்தை விட்டு இறங்காமல், அன்னஆகாரமின்றி ஆடவேண்டும். கூத்து நடக்காத பகல் பொழுதில், ஓலைக் கருக்குகளிலேயே சாய்ந்து படுத்துக் கொள்வான். பதின் மூன்றாவது நாளின் நிறைந்த பௌர்ணமி மங்கும் விடிகாலையில், சிவபெருமாளாகப் பட்டவர், அவனது தவவலிமையைக் கண்டு மெச்சி, ஒரு பெருமாள் கழுகுப் பறவையாக மாறிப் பறந்து வந்து, பனைமரத்தின் மீது நின்று ஆடும் அர்ஜுனனை தலைக்கு மேலாக வலம் வந்து ஆசீர்வதிக்கும் அற்புதம் நடந்தேகும். இந்த வரம் கொடுக்கும் சடங்குதான் பிரசித்தி பெற்றது. இறையியலும், கலையியலும், வாழ்வியலும் இணைந்து கூடும் அபூர்வத்தில், அர்ஜுனனுக்கு வரங்கொடுக்கும்போது, அந்த நாட்டு மக்களுக்கே வரங்கொடுக்கிறாற் போல மக்கள் எல்லோரும் எழுந்து நின்று பயபக்தியுடன் கைகுவித்துக் குலவையடிப்பார்கள்.
எல்லையற்ற வெளியின் அகண்ட வானத்தில், மேலும் கீழுமாய் கிழித்துச் செல்லும் இசைச் சுருதிக்கு எதிர்ச் சுருதி கூட்டும் கழுகின் கூரிய விழிகளில் நிழற்றுகிறது, இறையியலும், கலையியலும், வாழ்வியலும் இணைந்து கூடும் மகத்தான காவியம்!
இவ்வளவு கடுமையான நிகழ்வில் நடிக்கும் அர்ச்சுன வேஷம் கட்டும் நடிகன், கூத்து நிகழ்விற்கு ஒரு மாத காலம் முன்பே, தெய்வ அனுஷ்டானங்கள் செபதபங்கள் காத்து விரதமிருந்து பூஜைகள் செய்வான். அந்தப் பூஜையில், தான் பனை மரத்தின் மீது ஊன்றிக்கொண்டு ஆடும் கம்பை வைத்து மந்திரங்கள் சொல்லி உருவேற்றுவான். அந்தக் கம்பு பூஜை முடியும்போது உயிருள்ள வஸ்துபோல துடிப்புடன் மிளிர்ந்து நிற்கும். அந்தக் கம்பை லியோ ரோஜாஸின் கரங்களில் கண்டேன்!
ஆரவாரத்துடன் எழும்பும் அந்தப் புல்லாங்குழலின் இசையில் சுழலும் சொற்களில் என் தமிழ் நிலம் சார்பாக, மேலும் ஒரு stanza வைச் சேர்க்க ஆசைப்படுகிறேன் :
உன்னால் முடியும்
உன் பார்வையின் மூலம் இந்த பூமியை சுபிட்சமாக்க முடியும்
ஆம், உன் றெக்கைகளில் அசைகிறது குடிமக்கள் வரலாறு
உன்னால் முடியும்
நிச்சயமாக உன்னால் முடியும்.
***
குறிப்பு : Bald eagle வகையிலிருந்து சற்றே வேறுபட்ட வெண் கழுத்து கழுகு. தற்காலங்களில் மிகவும் அருகிப்போன, கழுத்தில் வெண் பட்டை விழுந்த இந்த அரிய வகை கழுகை, எங்கள் நாட்டின் கிராமப்புறங்களில் “பெருமாள் கழுகு” என்று அழைக்கிறார்கள். இந்தக் கழுகைப் பார்த்தால் தங்களது வாழ்வில் நற்செயல்கள் நடப்பதற்கான அறிகுறியென நம்பப்படுகிறது. நாட்டுப்புறங்களில் இதற்கான கோயில்களும், கதையாடல்களும் பெருமளவில் இருக்கின்றன. இந்து புராணிகங்களில் கடவுள் விஷ்ணுவின் வாகனமாகக் குறிப்பிடப்படும் “கருடன்” என்னும் கழுகு இதன் நீட்சியான பெருங்கதை வடிவம்.
*************