- கௌதம சித்தார்த்தன்
ஹிஸ்டரி டிவி எனக்குப் பிடித்தமான தொலைகாட்சி. அதில் வருகிற பான் ஸ்டார் மற்றும் பல நிகழ்வுகளை விரும்பிப் பார்ப்பேன்.
இந்தமுறை லீபு & பிட்புல் ரியாலிட்டி நிகழ்ச்சி தொடர் கவனத்தை ஈர்த்தது.
அமெரிக்காவில் பழைய கார்களை நவீனமாகப் புதுப்பித்து பயன்படுத்தும் கார்ப் பிரியர்களுக்கான ரியாலிட்டி நிகழ்ச்சி இது.அட்டகாசமான நிகழ்ச்சி.
பழைய கார்களைப் புதுப்பிதுத்தரும் கடை உரிமையாளரான பிட்புல் ஒரு திறமை மிக்க கார் மெக்கானிக். இவருடைய நண்பரும் பணியாளருமான லீபு அட்டகாசமான கார் வடிவமைப்பாளர். வங்காள தேசத்தைச் சேர்ந்த இவரின் கனவு உலகப் புகழ் பெற்ற கார் வடிவமைப்பாளர் ஆகவேண்டும் என்பது.
இவர்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்களை அட்டகாசமான வடிவமைப்பிலும் நேர்த்தியான தொழில் நுட்பத்திலும் பிரமிக்கத்தக்க முறையில் உருவாக்கித் தருவதில் மகா கில்லாடிகள். இவர்களுடைய அனுபவங்கள்தான் இந்த நிகழ்ச்சி .
ஒரு ஆவணப்படம் போன்ற தன்மையுடன் நிகழும் இந்த நிகழ்வுகளை திரைப்படத்திற்கே உரிய தன்மையில் அவ்வளவு சுவாரஸ்யமாக, விறுவிறுப்புடன் பரபரப்புடன் நம்முன் நிகழ்த்துகிறார்கள். மேலும் அந்த நிகழ்வுகள் ஒரு உயிர்ப்புடன் நம் மனதை ஆக்கிரமிக்க வைப்பதில் பெரும் வெற்றி கொள்கின்றன. மோபிடிக் போன்ற ஒரு உலகப் புகழ்பெற்ற இலக்கியப் படைப்பை வாசிப்பதுபோல நாள் முழுவதும் வாசித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு பகுதியைப் பாருங்கள்:
தன்னுடைய புதல்வனுக்கு பிறந்த நாள் பரிசாக தான் பயன்படுத்திய பழைய காரை புதுப்பித்துத்தர ஒரு செல்வந்தர் நினைக்கிறார். அதற்கு 20 ஆயிரம் டாலர் கேட்கப்படுகிறது. செல்வந்தருக்குப் பணம் ஒரு விஷயம் இல்லை. தன மகனை திகைக்கவைக்கும் பிரமிப்பில் ஆழ்த்தவேண்டும்.
வேலை ஆரம்பமாகிறது.
பிட்புல் காரின் மோட்டார் பாகங்கள் மற்றும் உபகரணங்களை நுட்பமாகச் செப்பனிடுகிறார். நிகழ்வில் முக்கியத்துவம் பெறுவது இதுவல்ல. காரின் வடிவமைப்புதான். வடிவமைப்பாளர் லீபுவின் அட்டகாசம்தான். காரை உருவாக்குவதற்கென்று எந்தவிதமான விதிகளோ, வடிவமைப்புக் கொள்கைகள் கோட்பாடுகளோ எதுவும் வைத்துக் கொள்வது கிடையாது. படமாக வரைந்து பாகங்களைக் குறித்துக் கொள்வது கிடையாது. எந்தெந்தக் காருக்கு என்னென்ன வடிவமைப்பு வேண்டும் என்பதை அந்தக்கணத்தில் அவர் தலையில் உருவாகும் உத்வேகமும் அகத்தூண்டுதல்களுமே தீர்மானிக்கின்றன. 100% Pure Creative Designer. அவர் ஒரு காரை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் தன்மையே அலாதியானது. அதைத்தடவிதடவி அதோடு பேசி சிநேகமாகி ஒரு நல்ல நட்பின் அடையாளமாக இருவரும் நண்பர்களாகிவிடுவார்கள். பிறகு பூரணமாக அந்தக் கார் அவரிடம் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுகிறது. காரை வெட்டுவார். ஒட்டுவார், உடைப்பார், பிரிப்பார், சேர்ப்பார். அவர் ஒரு அட்டகாசமான பின் நவீனத்துவ கார் வடிவமைப்பாளர்.
அந்தக்காரை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று மண்டையை உடைத்துக் கொண்டு யோசிப்பார். அதன் முன்பக்கம் எப்படி இருக்கவேண்டும்? பின்பக்கம் எப்படி இருக்கவேண்டும்? பக்கவாட்டுப் பகுதிகள்? ஒளி விளக்கு என்ன மாதிரியான வடிவமைப்பில்? சிவப்பு விளக்கின் வடிவமைப்பு? இப்படித் தேடித்தேடி நுட்பமாக யோசிப்பார்.
இதற்கெல்லாம் முதலில் அந்த கார் பற்றிய ஒரு அகதரிசனம், ஒரு அகத் தூண்டுதல், Inspiration வேண்டும் என்று அதைத் தேடி அலைகிறார்.
நான் என்மனதில் உருவாகி வடிவம் கொண்ட ஒரு கதையின் அமைப்பை எப்படி, எங்கிருந்து, எந்த விதத்தில் முதலில் ஆரம்பிப்பது என்ற opening sequence ஐத் தேடி எங்கெங்கோ அலைந்திருக்கிறேன்.
அப்படியாக லீபு அலைகிறார். இதுபோன்ற தருணங்களில் கார்களின் பழைய உபகரணங்கள் விற்கும் ஜிம்மியின் கடைக்குப் போவது அவரது வாடிக்கை. அங்கு விதவிதமான கார் உபகரணங்களைப்பார்க்கும்போது அவரது மனதில் கூடியிருக்கும் ஐடியா அற்புதமாக வடிவம் கொண்டுவிடும்.
அன்றைக்கும் அங்கு வந்து தேடி ஒரு அபாரமான பொருளால் கவரப்பட்டு, கிடைத்ததற்கரிய அற்புதமாகத் தூக்கி வருகிறார்.
அது ஒரு eagle statue.! அவரது மனக்குகைக்குள் ஒன்று திரண்டிருக்கும் புதிரான ஐடியாவுக்கு விடை கிடைத்துவிட்டது. ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை எப்படி கலாபூர்வமான அழகியலாக சொல்கிறார்கள் பாருங்கள்..!
அந்தகாரை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற புதிரான யோசனைக்கு விடை கிடைத்துவிட்டது. கூரிய மூக்கின் விடைத்த தன்மையுடன், சிறகுகளை அகலவிரித்து காற்றுவெளியைக் கிழித்தபடி பாய்ந்து ககனத்தை அளக்கும் கழுகின் கம்பீரமன பாய்ச்சல்..! அதுதான் லீபுவின் மனதில் திரண்டிருந்த Invisible Vision.
அந்தக் கழுகு சிலையை மார்போடணைத்துக் கொண்டு தனது காரிடம் வருகிறார். அந்தக் கணத்தில் உருவாகிறது கழுகின் அந்தரவெளியில் அலைபடும் பாய்ச்சல்.
தனது கைகளால் தட்டித்தட்டி அந்த அற்புதத்தை உருவாக்குகிறார். ஒரு சிற்பத்தின் இறுதிக் கட்டம் என்பது அதன் கண் திறக்கச் செய்தல். அதுபோல காரின் இறுதிக்கட்டம் என்பது அதன் முகத்தில் உள்ள கத்தி போன்ற மூக்கை உருவாக்குதல் என்கிறார் லீபு. என்ன ஒரு அற்புதமான பார்வை!
அவர் மூக்கை வடிவமைப்பதற்கு முன் அந்தக்காரை பரிசோதனை ஓட்டத்திற்கு உட்படுத்துகிறார் பிட்புல்.
பரிசோதனையில் மோட்டார் எஞ்சின் பெருமளவில் வெப்பம் அதிகமாகி புகை பெரிதாகக் கிளம்புகிறது. அதற்குக் காரணம், எஞ்சினுக்கு காற்றோட்டம் இல்லாமல் பானெட் டின் காற்றுத் துவாரங்களை அடைத்துக்கொண்டு நிற்கும் அந்த மூக்கு போன்ற வடிவமைப்பினால்தான் என்று தெரிய வருகிறது. பிட்புல், அந்த மூக்குப் பகுதியையே அடியோடு எடுக்க வேண்டும் என்கிறார். உடம்பெங்கும் ஏறியடிக்கிறது பரபரப்பு.
வடிவமைப்பின் கலை அழகும் உச்சபட்ச நேர்த்தியும் அதுதான். அது குலைந்துபோக அனுமதிக்க மாட்டேன் என்கிறார் லீபு. இருவரது வாதங்கள் பெரிதாக ஒலிக்கின்றன.
அதன் பிறகு என்னதான் நடந்தது?
***
இதன் இன்னொரு பகுதியையும் சொல்லாவிட்டால் என் தலை வெடித்துவிடும்! (சுருக்கமாக)
கார்களுக்கேன்றே பிரத்யேகமாய் வெளிவரும் உலகப்புகழ் பெற்ற பத்திரிகை Mob Magazine இதன் ஆசிரியர் தனது பழைய காரை வடிவமைத்து தனது அப்பாவிற்கு பிறந்தநாள் பரிசாக வழங்க வேண்டும் என்று அவர்களிடம் வருகிறார். இதுவரை அப்படி ஒரு வடிவமைப்பு வெளிவந்திருக்கவே கூடாது. புத்தம்புதிய நவீன வடிவமைப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த வடிவமைப்பை தனது பத்திரிகையில் அட்டைப் படத்தில் வெளியிட்டு அவர்கள் குறித்த ஒரு ஸ்டோரி வெளியிடப்போவதாக வாக்களிக்கிறார். அதன் மூலம் அவர்களது புகழ் உலகம் முழுக்கப் பரவும் What a great Great Opportunity! எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் தாவிக்குதிக்க ஒரு அபாரமான செய்தியைத் தெரிவிக்கிறார். எதிர் வருகிற New York International Car Show வில் அவர்கள் வடிவமைக்கும் காரைக் கலந்து கொள்ள வைப்பதாகவும், ஆனால், காரின் வடிவமைப்பு எவராலும் கற்பனை செய்யமுடியாத Stunning Design ஆக இருக்க வேண்டும் நிராகரிக்கவே முடியாத அப்படியான வடிவமைப்பாக இருந்தால் நிச்சயம் கலந்து கொள்ள வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்றும் தெரிவிக்கிறார்.
லீபுவும் பிட்புல்லும் பைத்தியம் பிடித்தவர்களாய் அலைகிறார்கள்.
லீபு Inspiration தேடி அலைகிறார். இந்தமுறை அவருக்கு அகதரிசனம் உதயமாகும் ஜிம்மியின் கடையில் எதுவும் கிடைக்கவில்லை. அலைந்து திரிந்தபோது சட்டென்று லீபுவுக்கு ஒரு சக்கரம் கிடைக்கிறது. உருத்தெரியாமல மறைந்திருந்த Invisible Vision அந்தக்கணத்தில் Visible ஆகி விட்டது. அதுதான் அவரது அகதரிசனம்.
அந்த சக்கரம் என்கிற Metaphorஐ வைத்து புத்தம்புதிய வடிவமைப்பை எப்படி உருவாக்கினார் லீபு? அந்தக்கார் International Car Show வில் கலந்து கொண்டதா?
ஒரு ரியாலிட்டி ஷோ வை இப்படியெல்லாம் எடுக்க முடியுமா என்ன?
இந்த 3 பகுதிகளைப் பார்த்த பிறகு நான் லீபுவின் பரம ரசிகனாகி விட்டேன்.
பயன்படுத்தாமல் கிடக்கும் எங்கள் கண்டெஸா காரை புதுப்பித்து ஓட்ட ஆர்வமாக இருக்கிறேன், லீபு வடிவமைத்துக் கொடுத்தால்…