- கௌதம சித்தார்த்தன்
(ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)
வானில் ரெக்கைகளை விரித்து வட்டமிடுகிறது ஒரு பறவை.
குரு துரோணாச்சாரியார் தனது சீடர்களை நோக்குகிறார்.
அர்ச்சுனன் வில்லும், அஸ்வத்தாமா வில்லும் வானை நோக்கி உயருகின்றன.
இறக்கைகள் துள்ளித் துவள சுழன்றபடி பறவை வீழ்கிறது.
அருகில் சென்று பார்த்தால், அர்ச்சுனனின் அம்பு மட்டும் பறவை மீது தைத்து நிற்கிறது.
அப்படியானால், அஸ்வத்தாமாவின் அம்பு எங்கே?
அது, முடிவற்ற கால வெளியில் போய்க்கொண்டேயிருக்கிறது…
இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் காவியப் புகழ்பெற்ற இந்தக் காட்சி உலகின் அனைத்து – Science fiction, Speculative fiction, Fantasy, Postmodern – எழுத்துவகைகளுக்கும் முன்னோடியானது. தனக்கு என்றும் மரணமில்லாத நித்யத்துவ வரம் பெற்றவன் அஸ்வத்தாமா. முடிவற்ற காலவெளியில் மரணமில்லாப் பெருவாழ்வு கொண்டவன் அவன். இன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவன். அவனது உடலுக்கு என்றும் மரணமில்லை. பற்பல யுகங்கள் கடந்த அந்த உடல், ஒவ்வொரு காலத்திலும் அந்தக் காலவெளியின் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே இருக்கும்.
என் அனுமானத்தின்படி அஸ்வத்தாமா இப்பொழுது லத்தீன் அமெரிக்க மண்ணில்தான் இருக்கவேண்டும். ஏனெனில், உலகின் தொன்மையான இந்திய கட்டிடக்கலையின் மகத்தான சிற்பி மயனுடைய வேர்கள் தென்னமெரிக்காவரை நீண்டு மாயன் பாரம்பரியத்தில் தொடர்பு கொண்டுள்ளன என்று இந்திய ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்கட்டும்.
எங்கள் மயனின் கதை மிகவும் சுவாரஸ்யம் கொண்டது. காண்டவ வனம் என்னும் காட்டை அழித்து அரண்மனை கட்ட விழைகிறார்கள் பாண்டவர்கள். காட்டை அழிக்கும்போது அதிலிருந்து வெளியேறும் பூர்வகுடி நாகர்களை அழித்துக் கொல்கிறான் அர்ச்சுனன். அந்த இனத்தைச் சேர்ந்த மயன் தனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்குமாறு வேண்டுகிறான். தான் கட்டிடக்கலையில் சிறப்புற்று விளங்கும் சிற்பி என்றும், தன்னை காப்பாற்றினால் மூன்று உலகங்களும் வியக்கும்படியாக உங்களுக்கு ஒரு அரண்மனையை நிர்மாணித்துக் கொடுப்பேன்” என்றும் இறைஞ்சுகிறான்.
அதன்பிரகாரம், மாயாஜாலம் கொண்ட இந்திரப்பிரஸ்தம் என்னும் அரண்மனையை நிர்மாணித்துக் கொடுக்கிறான் மயன். அது மாயாவிசித்திரங்கள் கொண்டது. நீரும் நிலமும், கானலும், மாயையும் இணைந்து தோற்றமளிக்கும் மகேந்திரஜாலம் கொண்டது. சிற்பக்கலையின் அதி உன்னத சாதனை.
அந்த அதி உன்னதத்தில்தான் ஒரு நுட்பமான நுண்ணிய கலைவேலைப்பாட்டை சாமர்த்தியமாக அமைத்தான் மயன். அதாவது, தனது உறவுகளை தன் கண்முன்னால் உயிரோடு துடிக்கத் துடிக்க எரித்துக் கொன்ற கொடூரத்திற்குப் பழி வாங்குவதற்காக, கட்டிட சாஸ்திரங்களின் வியாசங்களை மிக மோசமாக மாற்றியமைத்து அரண்மனையை நிர்மாணித்தான். அதன் பிறகு, பாண்டவர்களின் துயரமான வாழ்வியல் அந்த அரண்மனையிலிருந்து ஆரம்பித்து அந்த வம்சத்தையே நிர்மூலமாக்கிய கதையை “மகாபாரதம்” சொல்கிறது.
இந்த தொன்மையான மகாபாரதத்தின் மேஜிக்கல் ரியலிசக் கண்ணியிலிருந்து தோன்றிய அஸ்வத்தாமா, மாயனுடைய நிலத்தில்தான் இருக்கவேண்டும் என்பது வாஸ்தவம்தானே..1
முடிவற்று நீளும் தீராத காலத்தின் பக்கங்களில் உழன்று கொண்டிருக்கும் அஸ்வத்தாமா போல, அவனது அம்பும் இந்த முடிவற்ற கால வெளியினூடே ஒரு metaphor ஆகப் போய்க்கொண்டேயிருக்கிறது…
அதுபோலத்தான் கவிதைகளும்.
*******
மெல்லிய சாம்பல் புகை கமழ நான்கு கோப்பைகளில் தேநீர் மணக்கிறது. அந்த தேநீர் விடுதியின் வெளிறிய தோற்றம், காலமும்,வெளியுமற்ற ஒரு நீண்ட நிழற்பட்டைபோல பலவேறு காட்சிப் பின்னல்களினால், அலைவுறுகிறது. அகன்ற சாளரத்தின் வலி, கடந்து செல்லும் நான்கு பறவைகளின் றெக்கையடிப்பானது, பருவங்களை எதிரெதிர்த் திசையில் நகர்த்துகின்றன. நதியின் அலைமேடுகள் முகடுகளில் மோதி மோதிச் சரிகின்றன. பறவைகளில் ஒன்று எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்திற்கும், மற்றொன்று கடந்த காலத்தினின்று எதிர்காலத்திற்குமாகப் பாய்கிறது. மூன்றாவது பறவை காலங்களற்ற ஒரு காலவெளியில் றெக்கையடிக்க, மிஞ்சிய பறவையோ தனது நீண்ட மூக்கில் ஒரு மலரை கொத்திக்கொண்டு, என் எதிரில் இருந்த மேஜையின் மேல் வந்து அமர்கிறது. அந்தப் பூவின் அலர்ச்சி, எல்லையற்ற விகாஸமாய் அந்த வெளியெங்கும் நிறைகின்ற அற்புதத்தில், தேநீர் விருந்தின் உபசரிப்பு நிமித்தம், அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
அவர்கள் மூவர். முடிவற்று நீளும் தீராத காலமும் வெளியுமற்ற ஒரு புதிய திணையில் அவர்களுக்காக காத்திருக்கிறேன். காத்திருப்பின் கணங்களில் சூழும் வண்டுகளின் ரீங்காரம், ஒரு ரிதமான லயத்தில் ஒலிக்கும் பிரக்ஞையாய் மிதக்க, அவைகளை சொற்களாக உருமாற்ற முயல்கிறேன். ஏனெனில் என்னுடைய தேநீர்க் கோப்பையில் அவை மீன்கள்! ஏனெனில் அவர்கள் மூவருக்குமான கோப்பைகளில் பச்சைநிறத் தவளைகள்!
ஒரு கோப்பை எனக்கானது.
மற்றொரு கோப்பை உனக்கானது நிகனோர் பர்ரா.. காதல் என்னும் படிமத்தை எதிர்நிலையில் வைத்து உருவாக்கிப் பார்த்த உன் எதிர்க் கவிதைக்கானது.
அகேசியா மலர்கள் மலர்ந்து விட்டன பர்ரா.. அதோ, மொக்கெனத் திரண்டிருக்கும் அந்த மலரின் இதழ்கள் வெடிக்கும் ஓசையைக் கேள்: அந்தக் கணம் இருவேறு காட்சிப் புலன்களாக விரிகின்றன.
ஒன்று, அதன் வெடிப்பு. எந்த இசைஞனாலும் சிருஷ்டிக்கமுடியாத அபூர்வ இசைகுறிப்பாய் எழும் அதன் லயம். மற்றொன்று, மொக்கவிழ்ப்பில் கமழும் காதல். என்றலர்ந்த காதலின் கணங்கள் நகராது, திரைந்து நிற்கும் எதிர்க் கவிதை!
அகேசியா மலர்கள் மலரும் ஒவ்வொரு பருவத்திலும் உன் காதலின் நினைவு ஆட்கொள்ளும் இக்கணத்தில் நீ செய்யவேண்டியது ஒன்றுதான், ஆரவாரத்துடன் உன்னைத் தழுவுகின்ற காற்றின் தொன்மையான ஸ்பரிசத்தில் ஒப்புக்கொடுத்து நில்.
முல்லை மலர்களைக் காணும்போதெல்லாம், தான் காதலிக்கும் திருமால் ஸ்ரீ கிருஷ்ணனின் நினைவுகளில் வாட்டமுறும் எங்கள் ஆண்டாளுக்கானது இன்னொரு கோப்பை. 2
கடவுளையே காதலனாக வரித்த அவளது முலைகளின் விம்மலில் நதியின் அலைமேடுகள் நடனமாடுகின்றன. கடவுளுக்கு முல்லை மலர்களைத் தொடுக்கும் அவளது கரங்கள் ஒரு காதல் கவிதையை எழுதும் லாவகத்துடன் இயங்கும் செயல்பாட்டில், அது ஒரு சடங்காக மாறுகிறது. அலர்ந்த மலர்களின் இதழ்கள் முகம் குவிந்து மாலையாகத் திரள, கடவுளுக்காகக் கட்டப்பட்ட மாலையைத் தான் சூடிக் கொண்டு மனிதனும் கடவுளும் இணையும் அபாரமான தரிசனத்தை உருவாக்கிப் பார்க்கிறாள் அவள்!
சுழன்றடித்தேகுகிறது முல்லையின் வாசம்!
சட்டென நளிரின் வெம்மை மாறுகிறது. என் முன் அலர்ந்து நிற்கும் மலர் மணந்து ஜாஜ்வலிக்கிறது, அதோ வந்துவிட்டாள் அவள்!
அன்பே, நீயும் நானும் பலமுறை தேநீர் அருந்தியிருக்கிறோம். உன் கோப்பையில் இதழ்களைப் பொருத்தி உறிஞ்சி ருசிக்கும் நீயும், என்கோப்பையில் நானும். அதன் கதகதப்பான ருசி, உன் இதழ்களின் ஓரத்தில் தேங்கியிருக்கும் புத்துணர்ச்சியைப் போன்றதென நான் சுவைத்திருக்கிறேன். என் அதரங்களின் கணப்பைப் போன்றதென நீயும் என் தோளில் சாய்ந்திருக்கிறாய்.
ஆனால், இந்த நான்காவது கோப்பைத் தேநீரை நீ உறிஞ்சும் கணங்கள், கால நதி பின்னோக்கிப் பாயும் கணங்கள், நாம் ஓடித்திரிந்த செங்குத்தான மலைஅடுக்குகள், தலைகீழாக மோதி, மடிப்பு மலைகளாகும் இயல்பான காட்சியை உருவாக்கும்.
இந்த மடிப்புகளுக்கு சாட்சியமாக, மைத்ரேய மலரின் மணம் அலர்கிறது. நம் காதல் பிரிந்தபோது, செவ்வியல் நாடகபாணியில் நான் உனக்கு அளித்த செவ்வந்திப் பூ! இதழ்கள் பிய்ந்து சிதைந்து வீழ்ந்த அந்த மலரின் மரணத்தை, நான் மரணிக்கிறேன். மலரின் காம்புகளில் முளைத்திருக்கும் முட்களின் கூர்மை என் உடலைத் துளைத்தெடுக்கிறது, உடலெங்கும் ரத்தம் பீறிட சதையைத் துளைத்தெடுக்கும் குத்து; முள் முனையில் பறந்துவந்து அமர்கிறது ஒரு மஞ்சள் வண்ணத்து பூச்சி. சரேலென வீசும் காற்றில் மலர் தனது இதழ்களை விரித்து நளினமாக அசையும் இசைவில் வலி மறைந்துபோக, காற்றின் சீரான ஒலிவேகம், பூவின் கிளைகளை உசுப்புகிறது. காவியத்திலிருந்து மலர் வீழும்போது எழும் மலர்களின் வாசனை மட்டுமே அங்கே இறுதியாக இருந்தது என்பதை, ஊழி பல கடந்த தேநீர் மணம் உணர்த்துகிறது.
******
காவிய காலத்திலிருந்து இன்றைய நவீன, பின் நவீன காலம் வரை, மலர்களை உருவகமாக முன்வைத்தே காதலைப் பாடுகிறார்கள். ஏன் ஆப்பிள், ஆரஞ்சு, வெண்டைக்காய் போன்ற காய்கனிகளையோ, பறவைகளையோ உவமைகளாகப் பேசுவதில்லை? காதலின் ரொமாண்டிக் தன்மைக்கும், பூக்களுக்கும் அப்படியென்ன தாத்பர்யம் என்று தேடிஅலைந்ததில் எங்கள் பகுதியில் கிடைத்த ஒரு நாட்டுப்புறக்கதை :
வானுலகமான மேலுலகத்திலிருந்த கடவுள், மனிதர்களுக்கான ஒரு உலகத்தை உருவாக்கும் பொருட்டு கீழுலகத்தில் ஆணையும் பெண்ணையும் படைத்தார். இருவரும் கீழுலகத்துக் காடுகளில் கிடைத்த காய்கனிகளை உண்டும், விலங்குகளை வேட்டையாடியும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். ஆனால், அவர்களுக்குள் இணைவு மட்டும் நடைபெறவில்லை. ஜனன நிகழ்வு நடைபெறாமல் போனதால் செய்வதறியாமல் திகைத்து நின்றார் கடவுள். இந்தப் பிரச்சினைக்கு தான் தீர்வு காண்பதாகக் கூறிய சாத்தாவு 3, ஒரு தோட்டத்தில் பூக்களைப் படைத்தான். பூக்களிலிருந்து வீசும் மணம் கீழுலகம் முழுக்க நறுமணமாய் சுழன்று சுழன்று வீசியது. அடுத்த சிலபல வருடங்களில் கீழுலகத்தில் ஜனனம் பெருமளவில் நிகழ ஆரம்பித்தது. இதன் பிறகு கீழுலகம், பூவுலகம் 4 என்று பெயர் பெற்று பூக்களின் பல்லாயிர திரவிய வாசனையாக மணம் பரப்பியது.
இப்படியாக சாத்தான் உருவாக்கிய பூ, தீராத மானுட வாழ்வியலில், காதலின் உருவகமாக மாறிய கதைப் பக்கத்தை சனாதனிகள் பின்னாளில் கிழித்து எரித்துவிட்ட காதையை, போர்ஹேஸின் “The Book of Sand”-ன் ஏதாவது ஒரு அதிர்ஷ்டகரமான புரட்டலில் காணக்கூடும்.
*****
ஏனெனில் மணல் என்பது ஒருவிதத்தில் காலத்திற்கு ஒப்பானதாகும். sandglass -ல் ஒவ்வொரு மணற் பருக்கையாக கீழ்நோக்கி விழும் காலத்துளியில் செங்குத்தாய் உயர்ந்திருக்கும் மலைகளும் மரங்களும், கட்டிடங்களும், வரலாற்றையும் அடித்துக்கொண்டு குண்டுகுழிகளை நிரவியடித்தபடி சுழல்கிறது மணல். அதன் முடிவற்ற சுழற்சியில் காதலும், கவிதையும் இணைந்து இணைந்து பல்வேறு மலர்களின் உருவகங்களாகச் சுழல்கின்றன.
அஸ்வத்தாமாவின் அம்பு, சாகாவரம் பெற்ற கவிதை வடிவமாக மாறும் கணங்களை பிரஸ்தாபிக்கும் இந்த தருணத்தில், ரோமானியப் பெண்கடவுள் டயானாவின் அம்பு குறித்த நினைவுகள் அலையோடுகின்றன.
டயானாவின் வில்லிலிருந்து பாய்ந்த அம்பால் உருவாகிய Diana’s Tree, ஒளி உமிழும் ஸ்படிகமாக, கூர்மையான விளிம்புகளுடன் பல்வேறுகிளைகளாக கிளைத்து உயருகின்றது. ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட மலர்களின் இதழ்களில் மகரந்தத்துகள்கள் மின்ன, ஆதி இனக்குழுவினரின் வேர்களாக அசைகின்ற சூலகங்களில், முடிவற்ற கவிதைக் கண்ணிகளின் நீட்சியில் மின்னும் முடிவிலியை நோக்கலாம்.
அம்முடிவிலியின் பாய்ச்சலில் அலையடிக்கும் அலைமேடுகள் பிரபஞ்சமெங்கும் ஓடித்திரிந்து கவிதைக் காட்சிகளை ஸ்படிகக் குமிழிகளாக நிழற்றுகின்றன.
இருண்மையின் சாட்சியமாக, நிழலின் நிழல் தாகிக்கிறது. கீறப்பட்ட நிலவின் நெருங்கிப் பழகிய மகிழ்ச்சிகரம் கொண்ட ஒரு மரணத்தில், அலெஹாந்த்ரா பிஸார்னிக் – ன் மரணத்தை நான் மரணிக்கிறேன். அம்புகள் என் உடலைத் துளைத்தெடுக்கின்றன, ஒவ்வொரு அம்பிற்கும் டயானாவின் மரக்கிளைகள் நீள்கின்றன. உடலெங்கும் ரத்தம் பீறிட சதையைத் துளைத்தெடுக்கும் குத்து; சரேலென வீசும் காற்றில் மலர் தனது இதழ்களை விரித்து நளினமாக அசையும் இசைவில் வலி மறைந்துபோக, காற்றின் சீரான ஒலிவேகம், மரத்தின் கிளைகளை உசுப்புகிறது. வில்லிலிருந்து அம்பு விடுபடும் போது அதிரும் வில் நாணின் அதிர்வுகள் மட்டுமே அங்கே இறுதியாக இருந்தது.
ஓயாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது அம்பு. நீண்டு கொண்டிருக்கிறது டயானாவின் மரக்கிளை. ஓயாது மலர்ந்து கொண்டிருக்கிறது மலர். தீராது எழுதிக் கொண்டிருக்கிறது கவிதை.
************
ஸ்பானிஷ் வாசகருக்கான குறிப்புகள் :
1. பின் நவீனத்துவப் பார்வை சொல்லும், பெருங்கதையாடலின் (மகாபாரதம்) பிரதிநிதியான அஸ்வத்தாமாவை, ஆதிக்கத்திற்கு எதிரான, போர்க்குணம் மிக்க இனக்குழுவான மாயன் கலாச்சாரத்தின் நாட்டுப்புறக் கதையாடலுக்குள் பொருத்துவது சற்றும் சரியல்ல என்பது ஒரு வாஸ்தவமான விமர்சனம். ஆனாலும் அஸ்வத்தாமா நாட்டுப்புறத் தன்மையும், magical தன்மையும் கொண்ட ஒரு Fantasy என்பதால் இங்கு பொருத்தப்படுகிறது.
2. ஆண்டாள் : கடவுள் ஸ்ரீகிருஷ்ணனை காதலனாக வரித்துக் கொண்டு காதல் கவிதைகளை இயற்றிய 7ஆம் நூற்றாண்டு தமிழ் பெண் கவி
3. மேலை நாட்டு ஐரோப்பிய பண்பாட்டியலில் வருகின்ற தீய குணங்களின் படிமமான சாத்தான் என்னும் உருவகம் தமிழ் பண்பாட்டில் சாத்தாவு, அரக்கன், பூதம் என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
4. Flower என்ற சொல் தமிழ் மொழியில் பூ (Poo) என்று அழைக்கப்படுகிறது. ஆகவே, அந்தப் பொருளர்த்தம் வருமாறு Pooulakam (Flower world) என்று இன்றளவிலும் அழைக்கப்படுகிறது.
தமிழ் ஸ்பானிஷ் வாசகருக்கான குறிப்புகள் :
1. அகேசியா: அகேசியா மலர்கள் மலரும் பருவத்தில் மலர்களின் மணத்தை அனுபவித்துக் கொண்டிருந்த தருணத்தில் நிகனோர் பர்ராவின் காதல் முறிவு ஏற்பட்டது. ஒவ்வொரு அகேசியா பருவத்திலும் பர்ராவுக்கு தன காதலின் நினைவு ஆட்கொள்ளும்.
2. போர்ஹேஸின் “The Book of Sand”கதையில் வரும் மணல் புத்தகம் என்னும் கற்பனை, நூலில் வரும் ஒரு அற்புதமான படிமம். அந்த நூலின், ஒரு பக்கத்தைப் புரட்டும்போது, அந்தப் பக்கத்தில் இருக்கும் காட்சிகளும் எழுத்துக்களும், மீண்டும் அதே பக்கத்தைப் புரட்டிப் பார்க்கும் போது வேறுவிதமான காட்சிகளும், எழுத்துக்களுமே அந்தப் பக்கத்தில் இருக்கும் மேஜிக்கல் தன்மை கொண்டது.
சமீபத்தில் வெளிவந்த, “இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை” என்ற என் குறுநாவலில் இந்த அற்புத நூல், எங்கள் இந்திய மறைபொருள் ஞானத்தின் சொத்து என்று கூறியுள்ளேன்.
3. லத்தீன் அமெரிக்க புகழ்பெற்ற எழுத்தாளரான Alejandra Pizarnik – ன் Diana’s Tree, என்னும் தொன்மம் கலந்த நீள் கவிதை, கவிதை உலகில் மிக முக்கியமான படிமம். டயானாவின் மரம் என்பதை தத்துவஞானியின் மரம் என்று அர்த்தம் கொள்ளலாம்.
டயானாவின் மரம் அல்லது தத்துவஞானியின் மரம் என்று அழைக்கப்படும் இந்தப் படிமம், தத்துவஞானியின் கல்லுக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது:
தத்துவஞானியின் கல் என்னும் பொருளர்த்தம் என்பது, பொதுச் சூழலில் புழக்கத்தில் இருக்கும் ஒரு நடைமுறையிலிருந்து கட்டமைவது. சுருக்கமாகச் சொன்னால், பழங்காலத்தில் ரஸவாதிகள் என்போர், செம்பு அல்லது இரும்பு போன்ற உலோகங்களுடன் பல்வேறு கலவைகளை சேர்த்து சூடாக்கும் பதப்படுத்தலில் விலைமதிப்பற்ற தங்கக்கற்களை உருவாக்குவார்கள். அதுபோல, பல்வேறு நடைமுறை யதார்த்த வாழ்வியல் கூறுகளிலிருந்து, மதிப்பு மிகுந்த தத்துவவியல் தரிசனங்களை உருவாக்கும் தன்மைகளை தத்துவஞானியின் கல் என்று குறிக்க்கப்படுகிறது.
**********
அகேசியா மலர்கள் மலர்ந்துவிட்டன பர்ரா, ஆழமான கருத்தியலை பதிவிட்டிருக்கிறீர்கள், மிகவும் சிறப்புமிக்க கட்டுரை …..