- கௌதம சித்தார்த்தன்
காலங்காலமாக, பொதுச் சமூக வெளியில், பல்வேறு சாதிகளின் பெயர்கள் வசைச் சொல் போன்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பெயர் உருவாகும்போதே, அவ்வாறான சாத்தியக் கூறுகளுடன் உருவாவதில்லை. காலப்போக்கில், உயர்சாதியினரின், கேலிகளும் கிண்டல்களும் கலந்து, அப்படி ஒரு தன்மையை அந்தப் பெயருக்கு ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், சில குறிப்பிட்ட சாதிகளை முன்வைத்து, பல்வேறுவிதமான வரலாற்றுப் புனைவுகளையும், படிமங்களையும் கட்டமைத்து, அந்தச் சாதிகளின் வேர்ச் சொற்களையும், பாரம்பரிய மரபுகளையும் திரித்து ஒரு கேவலமான பார்வை ஏற்படும்படியாக உருவாக்கிவிடுவார்கள்.
அதன் தாக்கம் புரியாமல், அதிலேயே உழன்று, பொதுச் சமூகத்தின் அருவெறுப்புகளை உள்வாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் கடைநிலை வாழ்வியல்தான் நாதியற்றவர்களின் சமூகம்.
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந் நான்கல்லது குடியும் இல்லை (மாங்குடிக்கிழார், புறநானூறு 335.7-8)
தமிழ்ச் சமூகம் சார்ந்த, வாழ்வியல், மொழியியல், போரியல், மெய்யியல் உள்ளிட்ட சமூகவியல் சார்ந்த வரலாற்று ஆவணமாகத் திகழும் சங்க இலக்கியங்களில் முதன்மை பெறும் இந்தச் சமூகங்கள், காலப்போக்கில் பல்வேறு சமூகங்களாக உடைந்தும் திரிந்தும், உயர்ச்சியும், தாழ்ச்சியுமாக கட்டமைக்கப்பட்டும் வளர்ச்சியடைந்து வந்திருப்பதை ஒரு நீண்ட ஆய்வுப் போக்கில் உணரலாம். சங்க காலத்தில் பிறப்பாலோ, தொழில் முறையாலோ, உயர்வு – தாழ்வு வசைத்தன்மை – இல்லாமலிருந்து வந்ததற்கான பாடல்கள், வரலாற்றுச் சாட்சியமாக இருக்கின்றன.
சங்க இலக்கியம், மட்பாண்டம் வனையும் குயவர்களை ‘வேட்கோ’ என்றழைத்துப் பெருமைப்படுத்துகிறது. ‘கலம் செய் கோவே கலம் செய் கோவே’ என்று மதிப்புடன் பாடிய புறப்பாடலை நாம் அறிவோம். அவர்களது பிள்ளைகள் புறநானூற்றுப் பாடலொன்றில் ‘வேட்கோச் சிறார்’ என்றே மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மேன்மையுடன் வைத்திருக்கும் சமூகப்பார்வை, தற்கால பொதுச் சமூக வெளியில், ஒரு சில சாதிகள் குறித்த அடையாளங்களை வசைச் சொல்லாக உருமாறியிருக்கும் விதத்தை மாற்றியமைக்க வேண்டிய கடப்பாடு மேன்மைக் குணம் மிக்க ஒவ்வொரு தமிழ்க் குடிமகனுக்கும் இருக்கிறது.
ஆனால் இந்த மாற்றம் என்பது, பொது வெளியில் அடுத்த நிமிடமே, ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகமே, சாதி மதங்களை தான் இதுவரை பார்த்து வந்த பார்வைகளிலிருந்து மாறிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்கவேண்டியதில்லை. அது ஒரு பெரும் போராட்டத்தின் வெகு நீண்ட பயணம். இந்த நீண்ட பயணத்தில் வென்றெடுத்த சமூகங்கள் சிலவற்றைக் குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்:
அரசாணைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று குறிக்கப் பெற்ற சமூகம் மருத்துவர். இந்த சமூகத்தை, வெகுஜனப் பொது வழக்கிலும், வெகுஜன சமூக நடைமுறையிலும் நாவிதர் என்று கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்த சொல்லாடலை, “மருத்துவர்” என்று இன்றைய வெகுஜன சமூக நடைமுறைகளில் பயன்படுத்தும் நிலைமை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை நாம் உணரலாம். அதேபோல, அரசாணைகளில் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று குறிக்கப் பெற்ற சமூகமான விஸ்வ கர்மா சமூகம், கடந்த காலங்களில், கம்மாளர், ஆசாரியார் என்று வெகுஜனப் பொது வழக்கில் பயன்படுத்தி வந்த சொல்லாடல், இன்றைக்கு “விஸ்வ கர்மா” என்று மாற்றம் பெற்று வெகுஜன சமூக நடைமுறைகளின் பயன்பாட்டில் இருப்பதையும் கணக்கில் கொள்ளலாம். ஒரு ஆய்வு உதாரணத்திற்காக, ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும், ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் எடுத்துக்கொண்டு சொன்னேன். இன்னும் பல்வேறு சமூகங்களைச் சொல்லலாம். இந்தப் பெயர் மாற்றங்கள், பொது வெளிக்குப் புழக்கத்திற்கு வருவதற்கு பல வருடங்கள் பிடிக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக, ஒளி ஒலி ஊடகங்களிலும், அச்சு மீடியாக்களிலும் தொடர்ந்து இந்தச் சொற்களை பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, இந்தச் சொல்லை அடையாளப்படுத்துவதற்கான அந்த சமூகம் சார்ந்த வரலாற்றுப் படிமங்களையும், அதன் வேர்களிலிருந்து உருவாகும் வேர்ச் சொல்லாக உருவாக்கம் பெறும்பொழுது, அந்தச் சொல் ஒதுக்கி வைக்க முடியாத எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் அமைந்துவிடும். உதாரணமாக, மருத்துவர் சமூகத்தினர், ஆதி காலங்களில், நாட்டுப்புற மக்களின் உடல்நலம், மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்களில் பெரிதும் செயல்பட்டிருந்திருக்கிறார்கள். இது குறித்த வரலாற்று ஆய்வுகளையும், ஆவணங்களையும், நாட்டுப்புற சொல்கதைகளையும் முன்வைத்து ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எழுதி வந்ததன் விளைவாக, அந்தச் சொல் பொதுச் சமூக வெளியில் அறிமுகமாகி பயன்பாட்டுக்கு வந்துள்ளதை உணரலாம்.
இந்த இடத்தில், அரசாணைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று குறிக்கப் பெற்ற வண்ணார் சமூகம் குறித்தும் சொல்ல வேண்டும். பொதுச் சமூக வழக்கில் ஏகாலி (தற்காலங்களில் இந்தச் சொல் அருகி வருகிறது) என்று சொல்லப்படும் வண்ணார் சமூகத்தின் பெயரை “வண்ணத்தார்” என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என்று சமூகவியல் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் சொல்கிறார். இந்தச் சமூகத்தினர், ஆதிகாலங்களில், ஆடைகளுக்கு வண்ணம் தீட்டுபவர்களாகதான் இருந்தார்கள் என்றும், காலம் செல்லச் செல்ல, ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்பவர்களாகவும், தங்களது வாழ்வாதாரத்தை மாற்றிக்கொண்டனர் என்றும் ஆதாரப்பூர்வமான ஆவணங்களை முன்வைத்து, கட்டுரைகள் எழுதினார். ஆனால், தொடர்ச்சியாக இந்தச் சொல்லை, சமூக ஆய்வாளர்களும், ஊடகங்களும், பயன்பாட்டில் எடுத்துக் கொள்ளாத தவறியதன் விளைவாக, வண்ணத்தார் என்கிற இந்தச் சொல் பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்த வகையில், இதன் தொடர்ச்சியாக பட்டியலினச் சமூகத்தின் “தலித்” என்ற சொல்லின் உருவாக்கத்தை அவதானிக்கலாம். கடந்த காலங்களில், (தற்போது அல்ல) பறையர் என்று பொதுச் சமூக வெளியில் அடையாளப்படுத்தப்பட்டு வந்த சொல்லை பெரும் எதிர்ப்புகளுடன் எதிர்த்து, ஆதி திராவிடர் என்னும் அடையாளத்தை முன்வைத்து வந்த அந்தச் சமூகம், நாளடைவில், அந்தச் சொல் குறித்த பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் படிமத்தை எதிர்த்து, வேறொரு சொல் வேண்டும் என்று அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும், எழுத்தாளர்களும், மனதளவிலும், செயல்பாட்டளவிலும் யோசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான்,
1880களின் பிற்பகுதியில், இந்திய சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மற்றும் தீண்டத்தகாதவர்கள் என்று உயர்சாதிகளால் கட்டமைக்கப்பட்டவர்களின் அடையாளமாக ‘தலித்’ என்ற மராத்திச் சொல், மகாத்மா ஜோதிபா புலேவால் பயன்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவின் மகத்தான சாதி எதிர்ப்புப் போராளியான புலேவின் இந்தச் சொல், 1980 கள் வாக்கில் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமானது. சிறுபத்திரிகைகள் மட்டுமே, மாற்று சிந்தனைகளை உருவாக்கமுடியும் என்கிற பார்வை இருந்து வந்த அன்றைய சூழலில் சுபமங்களா, நிறப்பிரிகை போன்ற இதழ்கள் தொடர்ச்சியாக இந்தச் சொல்லை முன்வைத்து கதை, கவிதை, கட்டுரை என வாதப்பிரதிவாதங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தன. எழுத்தாளர்களும் சமூகப் போராளிகளும் வெகுஜன மீடியாக்களில் இந்தச் சொல்லை கையாண்டு கொண்டே வந்தனர். இதுபோன்ற நீண்ட செயல்பாடுகளின் தொடர்ச்சியாக, தலித் என்னும் சொல், தாழ்த்தப்பட்ட அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் அடையாளச் சொல்லாக மாறி பொது வெளியில் பயன்பாட்டுக்கு வந்தது. இது ஒரு நீண்ட போராட்டத்தின் வெற்றி என்று கருத வேண்டும்.
ஆனால், தற்காலங்களில், இந்தச் சொல்லிலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நகரும் விதமாக, பட்டியலினச் சமூகத்தினர் என்றே தங்களை அழைத்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் பொதுவெளியில் இந்தச் சொல்லை கவனப்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர் என்பதுவும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.
அதே சமயம், பட்டியலினச் சமூகத்தின் இன்னொரு சமூகமான, கடந்த காலங்களில், (தற்போது அல்ல) சக்கிலியர், மாதாரி என்று பொதுச் சமூக வெளியில் அடையாளப்படுத்தப்பட்டு வந்த “அருந்ததியர்” சமூகத்தினர், தங்களை அருந்ததியர் என்ற அடையாளமாகவே முன்வைக்கின்றனர். மகாத்மா காந்தி இந்த சமூகங்களை முன்வைத்து உருவாக்கிய அரிஜனர் (ஹரியின் ஜனங்கள்) என்ற சொல்லாடலை முற்றாக நிராகரித்தனர் என்பது கடந்த கால வரலாறு.
கடந்த காலங்களில், (தற்போது அல்ல) பள்ளர் என்று பொதுச் சமூக வெளியில் அடையாளப்படுத்தப்பட்டு வந்த ” தேவேந்திரகுல வேளாளர்” சமூகத்தினர், சமீபகாலத்தில், தங்களது அடையாளங்களை மீட்டெடுக்கும் விதமாக இந்தச் இந்தச் சொல்லிலிருந்தும் மரபிலிருந்தும் மீளும் விதமாக தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டும், போராடிக்கொண்டும் வந்ததன் விளைவாக, அரசு ஆணையில், இந்தச் சொல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை இங்கு பதிவு செய்யலாம்.
இப்படியாக, தங்களது சமூகம் சார்ந்த ஒரு சொல், வேறு வகையில் மாறும்பொழுது, அதை எதிர்த்து களமாடி அந்தப் படிமத்தை உடைத்து புதிய சொற்களை உருவாக்கி வருகின்றன தமிழ்ச் சமூகங்கள்.
இங்கு, இன்றளவிலும் பல்வேறு வசைச் சொற்களால் பொதுச் சமூக வெளியில் அடையாளப்படுத்தப்பட்டு வரும் மூன்றாம் பாலினமான திருநங்கைகள் குறித்து நீண்ட ஆய்வுக்கோவையே எழுதலாம். அவர்களை அடையாளப்படுத்தப்படும் சொல், ஒவ்வொரு காலத்திலும் அலி, அரவாணி, என்றெல்லாம் மாறி தற்போது மிக அழகியல் ததும்பும் விதமாக “திருநங்கை” என்று பொதுச் சமூகப் பயன்பாட்டுக்கு வந்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.
இப்படியான பின்புலத்தில், கடந்த மாதத்தில், வெகுஜனப் பொது வெளியில் நரிக்குறவர் என்று அடையாளப்படுத்தப்படும் சமூகத்தைச் சார்ந்த அஸ்வினி என்னும் பெண்மணி குறித்த பல்வேறு நிகழ்வுகள், தமிழகம் முழுக்கவும் பெரும் அலையாகப் பரவியது. இந்த நிகழ்வுகள் குறித்து அச்சு ஊடகங்களும், காணொளி ஊடகங்களும், இணையம் சார்ந்த சமூக ஊடகங்களும் அந்தப்பெண்மணியை “நரிக்குறவர்” என்றே அடையாளப்படுத்தின. இப்படி எழுதியவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள், பெரும் சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், அச்சு, தொலைக்காட்சி மற்றும் இணையம் சார்ந்த ஊடக நண்பர்கள், முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள்.. இப்படிப் பலரும் எழுதினார்கள். இங்கு அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யவில்லை. பெருமையாகத்தான் சொல்கிறேன். ஏனெனில், இன்றுவரை ஒடுக்கப்பட்டுவரும் ஒரு சமுதாயத்தைப்பற்றி கவனப்படுத்தி எழுதுவது மிகவும் அருமையான பார்வை. ஆனால், அவர்களது, சமூகத்தின் அடையாளம் குறித்த விளிச் சொல் இங்கு மாற்றப்பட வேண்டும் என்பதை, அவர்கள் தங்களது சிந்தனையில் எடுத்துக் கொள்ளவில்லை.
பொதுபுத்தியின் பார்வையில், ஒரு வசைச் சொல் போன்றோ, ஒரு அவமானச் சொல் போன்றோ கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சொல் அடையாளம் குறித்த சமூக விழிப்புணர்வுப் பார்வை எவருக்குமே எழாமல் போனது 2000 வருடப் பாரம்பரியம் கொண்ட தமிழ் மொழியின் துரதிர்ஷ்டம்!
அந்த அடையாளம், பொதுச் சமூகத்தில், கேலிக்குரியதாக, ஒரு விதத்தில் வசைக்குரியதாக காலங்காலமாக இருந்து வருகிறது. உலகம் முழுக்க, தற்காலத்தில், மாறிவரும் இனவரைவியல் ஆய்வுகளில் (Ethnic Studies) பழைய சொற்கள், காலனிய காலத்தில் (Colonial period) உருவாக்கப்பட்டவை என்றும், அவைகளில் உறைந்திருக்கும் காலனிய வாதப் படிமங்களை முன்வைத்து வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தக்காலனிய வாதப் படிமங்களில் உருப்பெற்ற அடையாளச் சொற்களை, தற்கால, பின்காலனிய (Postcolonial) ஆய்வுகளின் மாற்றுப் பார்வைகளில் உருவாக்கம் கொள்ள வேண்டும் என்றும் பின் காலனிய சிந்தனையாளர்கள் பேசி வருகின்றனர்.
கடந்த காலங்களில், “ஆதிவாசி” என்ற சொல்லாடலை உபயோகப்படுத்துவதற்கே சமூக விழிப்புணர்வாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது, ஆனால், “நரிக்குறவர்” என்ற சொல்லுக்கு எந்தவிதமான கண்டனமோ, எதிர்ப்போ எப்பக்கத்திலிருந்தும் எழவில்லை. ஏனெனில், அவர் சார்ந்த அந்தச் சமூகம் மிக மிக மிகப் பரிதாபகரமான சூழலில் உள்ளது. பொருளாதார பின்னணி, அரசு வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரங்கள், அரசியல் பிரதிநிதித்துவம் என்று எந்தவிதமான அதிகார அமைப்புகளிலும் இவர்கள் இல்லாமல் உண்மையாகவே விளிம்பு நிலை மனிதர்களாக வசித்து வருகிறார்கள். (இவர்கள் தமிழக அரசாணைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று குறிக்கப் பெற்றவர்கள்!)
இந்த வரலாற்றுப் பூர்வமான காலகட்டத்தில்தான் இந்தச் சமூகத்திற்கு ஒரு மாற்றுப் பெயரை உருவாக்க வேண்டும் என்று விழைந்தேன். இப்படி ஒரு மாற்றுப் பெயர் உருவாக்குவதற்கு நீங்கள் யார்? என்று ஆதிக்க சமூகங்களிடமிருந்து ஒரு கேள்வி எழுந்தால்,
அதற்கான பதில் இதுதான்:
கடந்த காலங்களில் பொதுச் சமூகத்தில் புழக்கத்தில் இருந்த அருந்ததியர் சமூகத்தின் அடையாளச் சொல்லை மாற்ற வேண்டும் என்று அச் சமூகத்தில் இருந்த சிந்தனையாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் விரும்பினார்கள். அப்பொழுது அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தவரும் ஜஸ்டிஸ் பார்ட்டி என்னும் நீதிக்கட்சி ஆட்சியில் 10 ஆண்டுகள் சட்டமேலவை உறுப்பினராக செயல்பட்டவருமான, ராவ்சாஹேப் என்று அழைக்கப்பட்டவரான திரு. எல்.சி.குருசாமி அவர்கள், நீதிக்கட்சி மாநாட்டில் அருந்ததியர் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தி, தங்களது அடையாளமாக முன்வைக்கிறார். அவர் வெறுமனே, அதை ஒரு சொல்லாக முன்வைக்கவில்லை. அந்தச் சொல், அதற்குப் பின்னாலுள்ள அரசியல், தொன்மம், வாழ்வியல், இவைகளுக்குள் பொருந்திப்போகும் தங்களது சமூகம் சார்ந்த வரலாறு .. என்று மிக விரிவான வரலாற்று விளக்கங்களோடு, அந்தச் சொல்லை முன்வைக்கிறார்.
அந்த அடையாளம் இன்று வரை அச் சமூகத்தால் போற்றப்பட்டு வருகிறது. பொதுத்தளத்தில், மிகவும் கண்ணியத்தத்துடன் அங்கீகரிக்கும் ஒரு சொல்லாக மாறிக்கொண்டு வருகிறது. அரசாணையிலும் இந்தச் சொல் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. ஒரு 50 ஆண்டு கால தொடர் குரலுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று இதனைச் சொல்லலாம்.
அதே போல, தற்கால நவீன காலகட்டமான, 1980 கள் வாக்கில் “தலித்” என்னும் சொல் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமானது. சிந்தனையாளரும் எழுத்துப் படைப்பாளியுமான ரவிக்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர்) நிறப்பிரிகை பத்திரிகையில், இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தி தொடர்ச்சியாக எழுதியது, ராஜ் கௌதமன், பாமா, சிவகாமி IAS மற்றும் பல்வேறு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள்.. என்று ஒரு பெரும் குழுவினர் இந்தச் சொல்லை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சொல்லாக முன்வைத்து எழுதிக்கொண்டே இருந்தனர். இன்னும் நான் அறியாத, என் கவனத்திற்கு எட்டாத அறிஞர் பெருமக்கள் பெரும் எண்ணிக்கையில் இதற்காக செயல்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து, பொதுச் சமூகம் சார்ந்த எழுத்தாளர்களும் சமூகப் போராளிகளும் வெகுஜன ஊடகங்களில் இந்தச் சொல்லை கையாண்டு கொண்டே வந்தனர். இதுபோன்ற நீண்ட செயல்பாடுகளின் தொடர்ச்சியாக, தலித் என்னும் சொல், தமிழ்ச் சூழலில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்ட உணர்வுகள் கொண்ட அடையாளச் சொல்லாக மாறியது.. இது ஒரு நீண்ட போராட்டத்தின் வெற்றி என்று கருத வேண்டும்.
இப்படி, ஒவ்வொரு சமூகத்திற்கும், அவர்களது சமூகம் சார்ந்த அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றவர்களும், சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் குரல் கொடுப்பதற்கு இருக்கிறார்கள். ஆனால், பொதுச் சமூகத்தில் நரிக்குறவர் என்று அடையாளப்படுத்தப்படும் இந்த சமூகத்தினருக்கு, அவர்களது சமூகம் சார்ந்து அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றவர்களோ, சிந்தனையாளர்களோ, எழுத்தாளர்களோ யாரும் இல்லை. இவர்களைப்பற்றி ஆய்வு நூல்கள் எழுதுபவர்கள் கூட ‘நரிக்குறவர் இனவரைவியல்’ என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள்.
இவர்களுக்காக குரல் கொடுக்க எந்த நாதியுமில்லை!
இந்த நாதியற்ற மக்களை மேன்மைப்படுத்தும் விதத்தில் இந்தச் சமூகத்திற்கு, ஒரு பண்பாட்டு மானுடவியல் படைப்பாளி என்னும் விதத்தில் ஒரு பெயரை அடையாளப்படுத்த வேண்டும் என்று விழைகிறேன்.
உலகப் புகழ் பெற்ற மானுடவியல் அறிஞரான வெரியர் எல்வின், தான்கண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையை எழுதியுள்ள நூலில், இன்றைய நவீன நாகரிகச் சமுதாயம், பழங்குடி மக்களின் பண்பாடுகளை, எள்ளி நகையாடி, அழித்துவரும் போக்கை விரிவாக முன்வைக்கிறார். மேலும் பல்வேறு பழங்குடி சமூகங்களின் பண்பாட்டு அசைவியக்கத்தோடு அவர்களது வாழ்வியலைக் கொண்டு வந்து பொருத்தும் அழகியலை உருவாக்குகிறார்.
தென்னிந்திய சாதிகள் குறித்த மானுடவியல் ஆய்வாளரான எட்கார் தர்ஸ்டன் தனது ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ நூலில், நரிக்குறவர் சமூகத்தை குருவிக்காரர், வேட்டைக்காரர் என்று வகைப்படுத்துகிறார். ஏழு தொகுதிகள் கொண்ட இந்த நூல்வரிசை, தென்னிந்திய சாதிகள், மற்றும் பழங்குடி மக்கள் குறித்த மிக மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது.
மேலும், ஆய்வாளர் கரசூர் பத்மபாரதி எழுதிய ’நரிக்குறவர் இனவரைவியல்’ என்கிற நூலையும் இங்கு கவனம் கொள்ளலாம். சிவபெருமானை முழு முதற் கடவுளாக வணங்கினாலும் வழிபாட்டுச் சடங்குகளில் பெண் கடவுளர்களுக்கே முக்கிய இடமிருக்கிறது.
இதுபோன்ற பின்புலத்திலிருந்து ஒரு சொல்லை உருவாக்க விழைந்தபோது, இந்தச் சமூகம் சார்ந்த ஒரு பெரியவரை சந்தித்து உரையாடும் தருணம் வாய்த்தது. அவரது உரையாடலின்பொது, தனது சமூகம் சார்ந்த ஒரு வரலாற்றுக் கதையை எவ்விதமான பீடிகையுமின்றி போகிற போக்கில் சொன்னார்.
தங்களது முன்னோர்கள் ஆதிகாலத்தில், கொக்கு, குருவி போன்ற பறவைகளை வேட்டையாடி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆதிகாலத்தில் வில் அம்புகளை வைத்துத்தான் வேட்டையாடுவார்கள். அந்தக் காலத்தில், விவசாயக் குடியானவர்களின் காடு தோட்டங்களில் நரிகள் உள்ளே புகுந்து காய்கனிகள் கொண்ட வெள்ளாமைக் காட்டை நாசம் செய்வதும், வளர்ப்புக் கோழிகளைப் பிடித்துத் தின்பதுமாக அழிமாட்டம் செய்து கொண்டிருந்தன. குடியானவர்களுக்கு நரிகளைக் கொல்ல மனமில்லை. ஏனெனில், நரி செல்வத்தை கொண்டு வரும் விலங்கு என்பது போல, “நரியைக் கண்டா தொரையைக் கண்டா மாதிரி” என்ற பழமொழிகளும் படிமங்களும் அப்பொழுது உருவாகியிருந்தன. நரியைக் கொன்றால், அந்தப் பாவமாகப்பட்டது, தங்களது வாழ்வில் பெரும் வறுமையாக வந்து விடும் என்று நம்பிக்கை கொண்டிருந்த குடியானவர்கள், ஒரு உபாயம் செய்தனர். குருவிக்காரர்களை அழைத்து, நரிகளைக் கொன்றொழித்தால் உங்களுக்கு ஊதியமாக நிறை நெல்லும், அரைக் கழஞ்சும் தருகிறோம்” என்று வாக்கு கொடுத்தனர். நிறை நெல் என்பது தானியங்கள் அளக்கும் படி நிறைய நெல் தருவது. அரைக் கழஞ்சு என்பது, சிறு பொற்காசு!
அவர்களும், இரவு நேரத்தில் காடுகரைகளில், பதுங்கியிருந்து நரிகளைக் கொன்று, அவைகளைக் கொண்டு வந்து விவசாயிகளுக்குக் காட்டி, குறிப்பிட்ட ஊதியம் வாங்கியபடி வாழ்ந்துவந்தனர். கொன்ற நரிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, நரிகளின் கொம்புகளைக் கணக்கு காட்டி, ஊதியம் வாங்கிக் கொண்டனர்.
இப்படி இருந்தபோது ஒருநாள் வேளையில், கயிலாயத்தில் பள்ளி கொண்டிருந்த சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் ஒரு ஆசை தோன்றிற்று. இதுவரை தாங்கள் எடுத்திராத ஒரு புதிய உருவத்தை எடுத்து பூலோகத்திற்குப் போகவேண்டும் என்று. உடனே இருவரும், நரிகளாக உருவம் எடுத்து பூலோகத்திற்கு வந்தனர். காடு தோட்டங்களில் இருவரும் ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த வேட்டைக்காரர், இரண்டு நரிகளையும் நோட்டம் பார்த்தார். அதில், ஒரு நரி பாசிமணி மாலையை தனது கழுத்தில் போட்டிருந்ததைக் கொண்டு வியந்து போனார். எப்படியாவது இந்த நரிகளை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு, இவைகளை அலைக்கழிக்க வேண்டும் என்று முடிவு செய்து, காடுகரைகளிலெல்லாம் அலைக்கடித்தார். நரிகளும் மிகுந்த கொண்டாட்டத்துடன் காடுகரைகளெல்லாம் சுற்றியலைந்தன. சரியான தருணம் பார்த்து, பாசிமணி போட்டிருந்த நரியின் குதி கால் மீது அம்பு போட்டு விட்டார். ரத்த வெள்ளத்தில் விழுந்த நரி, பார்வதி தேவியாக சுய ரூபம் அடைந்தது. உடனே, அங்கு பாய்ந்து வந்த இன்னொரு நரி, சிவபெருமானாக சுயரூபம் பெற்று கடுங்கோபத்துடன் வெகுண்டெழுந்து அவரை சபிக்க ஆரம்பித்தார். “இந்த கணமே நீ பஸ்பமாகிவிடவேண்டும்”
நிலைமையை உணர்ந்த வேட்டைக்காரர், சிவபெருமானின் பாதங்களில் விழுந்து கெஞ்சினார். பார்வதி தேவியும் எழுந்து, “பாவம், அவரை மன்னித்து விடுங்கள்” என்று கோரினாள்.
“நான் கொடுத்த சாபம் கொடுத்ததுதான், வேண்டுமானால், சற்றே மாற்றி விடுகிறேன்..” என்று யோசித்தவர், “எங்களைக் காடு முழுக்க அலைய வைத்ததற்கு, நீயும் உன் சந்ததியினரும், இந்த உலகம் முழுக்க நாடோடியாக அலைந்து திரிந்து வாழ வேண்டும்..” என்று நிலைகொண்டார் எம்பெருமான்.
அருகிலிருந்த பார்வதி தேவியாகப்பட்டவள், வேட்டைக்காரரை நினைத்து ஒருகணம் சஞ்சலப்பட்டவள், சட்டென, தனது பாசிமணி மாலையைக் கழற்றி, அவரிடம் கொடுத்து, “வாழ்வின் ஜீவனோபாயத்திற்காக இதை வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள்…இந்தப் பாசிமணிமாலை உன் சந்ததிகளின் பெயரை உலகம் முழுக்க போற்றி புகழும்..” என்று சாபத்தை வரமாக அருளினாள் தேவி.
பிறகு இருவரும் மறைந்து போயினர்.
இந்த வரத்தினால்தான் நாங்கள் இப்படி நாடோடிகளாக அலைந்து கொண்டிருக்கிறோம்.. என்றார் அந்தப் பெரியவர்.
இறுதியாக அவர் சொன்ன வார்த்தைகள்தான் இந்த வரலாற்றின் உச்சம்!
“விவசாயக் குடும்பத்தினர் வீட்டில், ஒரு நல்ல காரியம் நடக்கும்போது, ‘நிறை நாழி நெல் வைத்து வணங்கும் வழக்கம்’ ஒன்று இன்றைக்கும் கிராமப்புறங்களில் இருக்கிறது. அந்த வணக்கம், வேளாண்மையை துஷ்ட மிருகங்களிடமிருந்து காப்பாற்றித் தந்த எங்களுக்கும் எங்கள் சந்ததிக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக நடத்தப்படும் ஒரு சடங்குதான் ..” என்று அவர் தெரிவித்த வார்த்தைகள், தமிழின் தொன்மையான பண்பாட்டு அசைவியக்கமாக என் கண்முன்னே அற்புதமாக விரிந்தது.
அந்தக் கணத்தில், அந்தச் சமூகத்தைப்பற்றி, மொழி ரீதியாக, இனரீதியாக என் மண்டையில் ஏறியிருந்த கசடுகள் நொடியில் மறைந்து அழிந்துபோக, எனக்குள் அலையோடித் திறந்தன அந்த வார்த்தைகள் : பாசிமணியர்!
இந்தச் சமூகத்தினுடைய தொன்மங்களின் வேர்களிலிருந்துலிருந்து உருவாக்கம் கொள்கிறது இந்த வேர்ச் சொல்! அவர்கள் சார்ந்த கலை, இலக்கியம், வரலாறு, சமூகம், குலக்குறிகள், வாழ்வியல் கூறுகள், பாரம்பரிய மரபுக்கூறுகள்.. என அனைத்தையும் ஒன்று திரட்டி, ஒரு வரலாற்று ஆய்வியல் பூர்வமான பார்வையில் இந்தக் கருத்துருவாக்கத்தை முன்வைத்திருக்கிறேன்.
ஆம், அவர்கள் சார்ந்த சமூக வரலாற்று ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, வெகுஜனப் பார்வை ரீதியாக, இந்தச்சொல், அந்த சமூகத்தை அடையாளப்படுத்தும் விதத்தில் எந்த விதமான முரண்பாடுகளுமின்றி கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
இனிவரும் தமிழி இதழ்களிலும், தொடர்ச்சியான என் சமூக ஊடகப் பதிவுகளிலும், படைப்பு எழுத்துக்களிலும் இந்த சொல்லைத்தான் பயன்படுத்துவேன். முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் எழுதும் நண்பர்களும், சமூகப் போராளிகளும், இந்தச் சொல்லை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி, அந்தச் சமூக மக்களுக்கு ஒரு கண்ணியத்தை வழங்க வேண்டும்.
அச்சுப் பத்திரிகை, இணையப் பத்திரிகை ஊடகங்களில் செயல்படும் பத்திரிக்கையாளர்கள், தொலைகாட்சி, இணையக் காட்சி, யூ டியூப் போன்ற காணொளி ஊடகங்களில் செயல்படும் பத்திரிக்கையாளர்கள், தொடர்ச்சியாக இந்தச் சொல்லை பயன்படுத்துவதன் மூலம், அந்தச் சமூக மக்களின் வாழ்வியல் மாற்றத்திற்கு நம்பிக்கையும் உத்வேகமும் ஏற்படச் செய்யவேண்டும்.
வாருங்கள், நாம் வாழும் சமூகத்தின் சாட்சியமாக இருக்கும் சக இனத்திற்கு ஒரு சொல்லை உருவாக்குவோம் : “பாசி மணியர்!”
***
(நவம்பர் 2021 ல் வெளிவந்த தமிழி அச்சு இதழில் வெளிவந்த கட்டுரை)