” பாலகர் ஏழ்வரும் பாழ் கிணற்றில் வீழ்ந்துவிட
அள்ளி முடித்த கூந்தலை அவிழ்த்துவிட்ட நல்லதங்காள்
மாடப்புறா போல் பாய்ந்து விழுந்தாள் தானுமதில்
அவளுடைய கூந்தலது அறுபது பாகமது
அறுபது பாக கூந்தல் அலையுது காவிரியில்..”
– தமிழின் மகத்தான இலக்கியமான “நல்லதங்காள் கதைப் பாடலிலிருந்து”
சமீபத்தில் ரஷ்ய மொழியில், “டான் நதியின் மேலே பறக்கிறது ஆலா!” என்ற தலைப்பில் “பத்தி” எழுத ஆரம்பித்திருக்கிறேன். முதல் பத்தியில் ரஷ்யமொழியின் உன்னதமான பெண் கவிஆளுமை மரினா ஸ்வெட்டேவாவின் “முத்தம்” குறித்தும், தமிழின் மகத்தான இலக்கியமான நல்லதங்காளின் முத்தம் குறித்தும் ஒரு காலச் சுழல்வை சுழட்டியடித்திருக்கிறேன். சர்வதேச துயர இலக்கியங்களின் அழகியல் அம்சங்களுக்கு சவால்விடும் எம் தமிழ் படைப்பு “நல்ல தங்காள்”.
பத்தி வெளிவந்ததும், தற்கால இளம் ரஷ்ய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான பிலிப் நிகோலாயேவ் ஒருகுறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் : “அன்புள்ள கௌதமா, உங்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள். நீங்கள் ரஷ்ய ஒப்பீட்டு இலக்கிய அறிஞரா? நீங்கள் பேராசிரியரா? உங்கள் இலக்கியப் பின்னணி என்ன? இந்தியாவில் நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?”
***
அன்புள்ள நிகோலாயேவ்,
என்னைப் பற்றி அறிய நினைக்கும் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!
சிறுவயதிலிருந்தே என்னை மிகவும் பலமாக பாதித்தவை ரஷ்ய இலக்கியங்கள். உலகளாவிய இலக்கியப் போக்குகளை பெரிதும் பாதித்துள்ள இது, புத்தம் புதிய இலக்கியக் கண்ணோட்டங்களையும், உலக அளவில் ‘அற்புதமான நாவல்களையும்’ உருவாக்கி உலக இலக்கியத்தின் போக்குகளையே தீர்மானித்த மொழி ரஷ்யன். உலகப் புகழ்பெற்ற கலைக்கோட்பாடுகளைப் புறம்தள்ளி, தனது யதார்த்தவாதம், சோசலிச யதார்த்தவாதக் கோட்பாடுகளை உலகம் முழுக்க கொண்டுபோய் கலை ரசிகர்களை பிரமிக்க வைத்த மொழி ரஷ்யன். இன்னும் பல்வேறு விஷயங்களை எழுதுவேன். புஷ்கின், குப்ரின், கோகோல், செக்கோவ், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, துர்கெனேவ், யெஸ்னின், ஷோலோகோவ், புல்காகோவ், மாயகோவ்ஸ்கி, அக்மடோவா, சோல்ஜெனிட்சின், பாஸ்டர்நாக், மண்டல்ஷ்டாம், பிராட்ஸ்கி மற்றும் நபோக்கவ்.. என்று பைத்தியம் பிடித்தவன் மாதிரி சொல்லிக்கொண்டே போவேன்..
நான் முழுநேர எழுத்தாளன். இந்தியாவின் சிறு மாநிலமான தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு சர்வதேச இலக்கியங்களை தக்க மொழியாக்க வல்லுநர்களைக் கொண்டு மொழிபெயர்த்து, நான் ஆசிரியராக இருக்கும் உன்னதம் இலக்கியப் பத்திரிக்கையில் வெளியிட்டு வருகிறேன். இதுவரை 40 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழிலும், போர்ஹேஸ், இடாலோ கால்வினோ, கார்லோஸ் புயண்டஸ், மிலோராட் பாவிச்.. என்று சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் சிறப்பிதழ்களாக வெளியிடுகிறேன். தற்போது “சர்வதேச கதைப் போக்குகள்” என்று ஒரு சிறப்பிதழ் வெளியிட்டுள்ளேன்.
தமிழில் நான் எழுதிய நூல்கள் கதைகள் கட்டுரைகள் என்று 15 நூல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும் எனது படைப்புகள் உலகின் பிரதான 8 மொழிகளில் (ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், ரோமானியன், சீன, போர்த்துகீசியம், பல்கேரியன்) நூல்களாக வெளிவந்துள்ளன. தற்போது எனது படைப்புகள் உலகின் பிரதான 15 மொழிகளில் வெளிவந்திருக்கின்றன.
தற்போது ரஷ்யன், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழிகளில் என்னுடைய Column வெளிவந்து கொண்டிருக்கிறேன்.
இங்கு என் தமிழ் மொழி சார்ந்து சற்றே விளக்க வேண்டியுள்ளது :
எங்கள் தமிழ் நாட்டின் நவீன இலக்கியங்கள் பற்றிப் பேசும்போது நிலவியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி மொழி பேசும் இந்திய நாட்டில் ஏறக்குறைய 10 மொழிகளுக்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களது மொழியை உயர்த்தி மற்ற மொழிகளை அலட்சியப்படுத்தியே இருக்கிறார்கள். எங்கள் தமிழ் மொழி உலகின் ஆதி மொழி என்றும், செம்மொழி என்றும், திராவிட மொழி என்ற பெருமை இருந்தாலும், உலக இலக்கிய அரங்குகளில் ஓரங்கட்டப்பட்டே வந்திருக்கிறது.
காலங்காலமாக இன்றுவரை, உலக இலக்கிய அரங்கில் இந்திய இலக்கியம் என்றால், வங்காள இலக்கியம் அல்லது இந்தி மொழி இலக்கியம் பற்றித்தான் கவனப்படுத்துவார்கள். தமிழ் மொழி என்றால் ஸ்ரீ லங்காவில் பேசப்படுகிற மொழி என்றே பலரும் எண்ணி வருகின்றனர். இந்திய நாட்டில் பேசப்படுகின்ற பல மொழிகளில் தமிழும் ஒரு முக்கியமான மொழி, அது உலகின் தொன்மையான பாரம்பரியம் மிக்க செம்மொழி என்பதை சர்வதேச ஊடகங்கள் பலரும் அறியாதிருக்கின்றனர்.
தமிழை கடைசிவரை வஞ்சித்தே வந்திருக்கிறது உலக இலக்கிய தளம்.
இந்த பெருமை கொண்ட தமிழ் மொழியை சர்வதேச இலக்கிய அரங்கிற்கு உயர்த்துவது எனது கனவு!
நீங்கள் ஒரு ஆய்வியல் அறிஞரா என்று கேட்டுள்ளீர்கள். நான் அறிஞர் அல்ல. நான் ஒரு “கவிஞன்” !
உலகின் மாபெரும் படைப்பாளியான மாக்சிம் கார்க்கியின் வார்த்தைகளில் சொல்வதானால், “இந்த பூமிப் பந்தையே புரட்டி விடக்கூடிய கவிஞன் !”
**********