• Thu. Sep 21st, 2023

கெண்டை சிலும்பும் கட்டுச்சேவல்: பொம்மக்காவின் கதை நிலம்

ByGouthama Siddarthan

Aug 17, 2022
  • அ. பிரபாகரன்

 

நவீன இலக்கிய வகைமையின் நேர்மையை அவதானிப்பாகக் கொண்டு தமிழின் புனைவெழுத்துக்கள் குறைந்த எண்ணிக்கையை மட்டுமே கொண்டவை. பொத்தாம் பொதுவாக அர்த்தமற்ற ஜோடனையின் பம்மாத்து மொழியில் நவீன மோஸ்தரில் இருட்டடிப்பு செய்யக்கூடிய வகைகளாகவே பெரும்பாலும் உள்ளது.

நம் வாழ்மரபின் கவிச்சை மொழியில் பொம்மக்கா முக்கியமான அவதாரமாக கருத வேண்டியிருக்கிறது படைப்பில் வரும் சில் நுண் கூறுகள் மிக முக்கியமான இடங்களாகும். இந்த நுண்காட்சி கூறுகளை பயன்படுத்தும் இடங்கள், படைப்பாளியின் எழுத்து லாவகத்தை புடம்போட்டு காட்டுகிறது. பொம்மக்கா இரு உலகங்களோடு தன்னை பிணைத்துக் கொண்டிருக்கிறாள். முதலாவது தன்னளவில் முன்வைத்து வாசகனுக்கு காட்டும் அவளின் உலகம். மற்றொன்று வாசகன் குதிரைவாலியினையும் சாமையினையும் கைகளினால் நீக்கி மண்வெடிப்பில் பொம்மக்காவை தேடும் அழகியல் உலகம்.

பொம்மக்கா சொல்லும் கருத்துமொழி எந்த வாத்தியாரும் சொல்லாதவை. குதிரைவாலிக் கருதுகள் தலைசுழித்தாடிக் கொண்டிருந்தன. ஏத்தல் இறைத்துக் கொண்டிருந்தாள் பொம்மக்கா. தொலை மேட்டிலிருந்து சரிவாக இறங்கும் வாரியில் கவலைமாடுகளை ஓட்டி, ஓட்டத்தின் போக்கில் டக்கென வடக்கயிற்றில் உட்காரும் பொம்மக்கா நம் வாசிப்பு மனங்களிலும் உட்கார்ந்து கொள்கிறாள். கவலை இறைக்கும் பொம்மக்கா. கதையாடல் நிகழ்த்தும் பொம்மக்கா. எங்கும் செல்லாமல் நிலத்து மேட்டிலே தனித்திருக்கும் பொம்மக்கா. இப்படியாய் மாடத்தில் விளக்கெரிய தவசத்தோடு தவசமாய் இருண்மைக்குள் தன்னை அமிழ்த்துக் கொண்டு நிரந்தர வாதையின் அடுக்குகளில் வாசிப்பு மனங்களினூடே குறியீடாக நிற்கிறாள்.

முத்தேழ் என் காலம் முடிந்தது நான் போக வேண்டும்.. என் முடியைக் கொடு என்கிற சாத்தாவின் குரல், அமானுஷ்யமாய் மயிர்கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. எட்டாங்கல் இத்தொகுப்பினுள் பல அடுக்குகளைக் கொண்ட கவிமொழியில் வந்துள்ளது. தலைமுறைகளுக்கு புராதன வாசத்தைச் சொல்லும் புதிய செய்தி அது. வாசித்து முடித்த பின்பும் நம் உள்ளங்கைகளில் கூழாங்கற்களின் நெகுநெகுப்பையும், குளுமையும் உணரும் கணமாக பரிணமித்து நம்மை பின் தொடர்கிறது.

அடைமழையினூடே மணம் வீசும் ஆட்டுப் புழுக்கைகள் விழுந்த ரெண்டாம் சாமத்தில் அவனின் விரகதாபம் மெல்ல புகைகிறது. அது நெட்டைக்கால் குச்சியை அலாக்காக செவிந்தியின் வீட்டிற்கு கொண்டுபோய் நிறுத்துகிறது. செவிந்திதான் இங்கு சாமியாக தெரிகிறாள். அவள் ஆதிக்கத்தின் மீது பொட்டு வைத்தவள். ஆண்மையின் மீது பொட்டு வைத்தவள். பொட்டுச் சாமியை சிருஷ்டித்த ஆதியின் வடிவமாக செவ்விந்தியை அவதானிக்கலாம். 64 பொட்டுசாமி கதை குறுநாவல் பிரதியாக வந்திருக்க வேண்டிய பல விவரணைகளின் மடிப்புகளைக் கொண்ட கதைவடிவமாகும். வாசிப்பின் கொண்டாட்டத்தில் இக்கதையும் நம்மோடு சேர்ந்து கொள்கிறது.

முனியப்பனின் கை ஆவேசத்தில் சுழன்று கொண்டிருந்தது. அத்துவானமாய்ச் சாய்ந்து கொண்டிருந்தன மரங்கள். இடையில் வராமல் போனதில் துளிர்ந்திருந்த தூறுகளைக் கால்களில் நசுக்கினான். ஒரு பௌர்ணமிக்குள் கானகத்தை அழித்துவிடலாமென்று மனசுக்குள் கணக்குப்போட்டுக் கொண்டே நாக்கை நமுண்டிக் கொண்டு அருவாளை வீசிக்கொண்டிருந்தான். தீங்கு நுழையக் கூடாதென கொம்புக்காட்டை ஒண்டியாகவே திருத்தம் செய்யும் முனியப்பன் கண்டமேனிக்கு கையைச் சுற்றாமல் வாகாகப்பார்த்து பதனமாய் கத்தி வீசி, இறுதியாய் தொலாக்கல் திண்டில் உட்கார்ந்தபடி ஒண்டி முனியப்பனான கதைநிகழ்வு அலாதியானது. இக்கதை தொன்ம வழக்குகளின் பிரக்ஞையில் வார்க்கப்பட்டுள்ளது.

ரங்குபாட்டி சொல்லும் அஞ்சாங்கரம் கதையும், பாட்டப்பனின் காற்றில் வழியும் கதையும் புதுகளத்தில் வாசக உள்ளத்தில் விதைப்பவைகள். பெருமாயி அவன் மடியில் சாய்ந்து கிடக்கிறாள். எதிர்வரும் காலம் குறித்த கண்ணிகளை அவிழ்க்கும் தீர்வு அர்ஜீனன் தபசு கூத்து பிடிமானமாகிறது. கொல்லையில் சுரட்டையின் கவண்கல் கருடப்பட்சியை குறிபார்க்கிறது. இங்கு படைப்பாளி கவண்கல்லை குறியீட்டாக்கியதில் படைப்பு தன்னளவில் அகலமும் ஆழமுமாகி வடிவ நேர்த்தி கொள்கிறது. பறக்கும் இறகுகள் மெல்ல அசைந்து அசைந்து நிலைகுலைந்த வண்ணம் கீழிறங்குகிறது. அகத்திணை காதலில் நடப்பு நிகழ்வின் ரூபங்களாகி இதனை நாம் ஒப்பிட்டு உருவகித்து கொள்ளலாம். புஜங்கள் முருக்கேற அடவின் சுருதி அதிர்கிறது. மண்ணில் வீழ்கிறது. காதலின் உயிர்லயம், மெல்ல வட்டமடிக்கிறது கருடபட்சியாய். பெருமாயி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள் இனி.

ஆதிக்கத் தினவுக்கெதிராக கலை வென்றெடுத்த ஐதிகக் குறியீடு பெருமாயி. சமூகப் பரப்பின் மண்வெளி முழுக்க பெருமாயி வாசம் கொள்கிறாள். இதில் சூக்கும நுட்பமென்பது தவசிக் கூத்தை சரளமான மொழிநடைக்குள் கடத்தி அதனை கலைப்படைப்பாக நிறுத்தியதில் மொழியாளுமையின் பங்கு மிக முக்கியமானது. வாசிப்பு தளத்தில் பெருமாயியை முக்காலங்களிலும் பொருத்தி நவீனத்தின் எந்தப்பக்கத்திலும் நிறுத்தி வாசிப்பின் அகவியல் தளத்தினை கட்டமைத்துக் கொள்ளலாம்.

கத்திபெட்டியில் அசையும் கொட்டாபுடியின் கதை நீட்சி ருசிகரமானது. அது அந்தரத்தில் வாழ்வது. கொட்டாபுடி சாமி கை தேர்ந்த மருத்துவன். மிக சிறந்த தொழில்நுட்பவாதி. ஞானம் அள்ளித்தரும் அட்சய பாத்திரம். பனைமரத்து பிள்ளைகளின் நுட்பமறிந்து பல தகவல்களை தலைமுறைக்கு அறிவித்துவிட்டுப்போன பேராசிரியனாகத்தான் அவனைப் பார்க்க வேண்டும். கொட்டாபுடி என்பது சாதாரணமானது அல்ல. மருத்துவர் கையில் உள்ள மருத்துவக் கருவிக்குச் சமமானது. அதில் பனம்பாளையைத் தட்டும் சூட்சுமம் என்பது மருத்துவ குணத்திற்கு ஒப்பானது. எந்த நீதியில் எத்தனை தட்டு தட்ட வேண்டும், அதன் மூலம் துளிர்க்கும் பதனி உடலின் என்ன விதமான வேலையைச் செய்யும் என்ன விதமான நோய்கள் வரும், குணமடையும் என்பதையெல்லாம் ஒரு தேர்ந்த மருத்துவனின் பார்வைகளோடு கொட்டாபுடி சாமியின் கதை நெட்டுக்குத்தாய் நிற்கும் கொண்டைத் தூரின் அழகு.

அறம் சார்ந்த உள்ளடக்க உத்தியில் கலையழகின் நேர்த்தி பிசகாமல், தனியாத தாகத்தின் உயிரோட்ட மொழியில் தமிழ் கதை சொல்லியின் மரபில் எழுத்து வேட்கை கொண்டு நிலத்தில் வேர்பாவும் கதை கௌதம சித்தார்த்தனின் முறுக்கேற்றும் லாகிரியாட்டத்தின் மதனம்தான் பொம்மக்காவின் கதை நிலம். தமிழ் புனைகதை பரப்பில் வாசகன் தேடிப்பிடித்துக் கொண்டாட வேண்டிய பிரதியாக ஜொலிக்கிறாள் பொம்மக்கா!

***

அ. பிரபாகரன், இளந்தலைமுறை எழுத்தாளர் மற்றும் விமர்சகர்.

**********

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page